Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த அயதுல்லா கொமேனி? அமெரிக்காவை மிரட்டிய இவர் இரானின் வரலாற்றில் ஏன் முக்கியமானவர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

 

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரெஹான் ஃபசல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் மதத் தலைவர் அயதுல்லா ருஹோல்லா மௌசவி கொமேனி 1989 ஜூன் 3 ஆம் தேதி காலமானார். கடந்த 80 ஆண்டுகளில் இயற்கையாக காலமான இரானின் முதல் தலைவர் இவர்தான்.

அவருக்கு முன் இருந்த இரானிய அரசுத் தலைவர்கள் நாடுகடத்தப்பட்ட அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது அல்லது ஆயுதமேந்திய கொலையாளிகளின் கைகளில் அவர்கள் இறந்தனர். கொமேனி இறந்தபோது, இரான் அரசு அவரை ஹஸ்ரத் முகமது மற்றும் இமாம்களுக்குப் பிறகு அற்புத சக்தி வாய்ந்த நபர் என்று அழைத்தது.

கொமேனி 1902 செப்டம்பர் 24 ஆம் தேதி இரானில் உள்ள கோமெய்ன் நகரில் பிறந்தார். மக்களுடன் பழகுவதை விரும்பாத கொமேனி தனது ஆறாவது வயதிலிருந்தே குர்ஆனைப் படிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் கும் நகரில் குடியேற முடிவு செய்தார்.

கொமேனி அயதுல்லா ஆன பிறகு அவர் இரானின் ஷா மற்றும் அமெரிக்காவுடனான அவரது உறவுகளை கண்டனம் செய்யத் தொடங்கினார், இதன் காரணமாக ஷா அவரை நாட்டைவிட்டு வெளியேற்றினார்.

 

அயதுல்லா அங்கிருந்து துருக்கி சென்றார். பின்னர் அங்கிருந்து முதலில் இராக் சென்று பின்னர் பிரான்ஸ் சென்றார்.

 

பிபிசியின் ஃபார்ஸி சேவையைக் கேட்ட நேயர்

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ரஸா ஷா பஹ்லவி

பிரான்ஸில் கொமேனியின் நாள் அதிகாலை 3 மணிக்கு அதாவது காலை தொழுகைக்கு வெகு முன்னதாகவே தொடங்கும். ஒரு நாள் முன்பு வந்த ஆவணங்களை படிக்க அவர் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஏழு மணிக்கு காலை உணவு சாப்பிடுவதற்கு முன், அவர் வெளிநாட்டு பத்திரிகை செய்திகளின் பாரசீக மொழிபெயர்ப்புகளைப் படிப்பார்.

வாக்கர் மொயீன் தனது 'கொமெய்னி: தி லைஃப் ஆஃப் அயத்துல்லா' என்ற புத்தகத்தில், "அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இரானில் இருந்து வரும் சமீபத்திய செய்திகள் மற்றும் அவரது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திப்பார். பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை தொழுகை செய்வார். உணவுக்குப் பிறகு பகலில் ஒரு மணி நேரம் தூங்குவார், மூன்று மணிக்குப் பிறகு, இரண்டு மணி நேரம் அரசியல் வேலை செய்வார். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் அருகில் இருக்கும் கிராமத்தில் நடைபயிற்சி செய்வார்,”என்று எழுதியுள்ளார்.

பிரான்ஸில் கொடுக்கப்பட்டிருந்த அரசுப் பாதுகாப்பு காரணமாக அவர் தனியாக வாக்கிங் செல்வது மிகவும் அரிதாக இருந்தது. அவரது நாள் ஒன்பது மணிக்கு முடியும். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதற்குப் பிறகு அவர் வெளிநாட்டு வானொலி நிலையங்கள் குறிப்பாக பிபிசியின் பாரசீக சேவையின் பதிவுகளைக் கேட்பார். அவர் பேரக்குழந்தைகளுடன் விளையாடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்.

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரானின் ஷா ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களின் பங்கு பற்றிய அவரது கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், கொமேனி எப்போதும் தனது மனைவி மற்றும் குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தார்.

அவரது மகள் ஒருமுறை இரானிய தொலைக்காட்சியில், "அவர் எங்கள் அம்மாவிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வருமாறு ஒருபோதும் சொன்னதில்லை" என்று கூறினார்.

1979 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரான் குழப்பத்தில் இருந்தது, அதன் பொருளாதாரம் சிதைந்து, எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையே ரத்தக்களறி சண்டைகள் நடந்தன. அந்த காலகட்டத்தில், இரானின் ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றியது கொமேனியின் பெரிய அரசியல் சாதனையாகும்.

இரானில் புரட்சி நடந்தபோது மேற்கு நாடுகளால் அதை நம்ப முடியவில்லை. அதுவரை மேலை நாடுகள் இரானை மிகவும் ஸ்திரமான நாடாகக் கருதின. ஆனால் ஷா அரியணையை விட்டு வெளியேறியதும், அயதுல்லா ஒரு மதத் தலைவரானதும் திடீரென்று நடந்த விஷயங்கள் அல்ல.

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இரானின் ஷா (இடது) மற்றும் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்

கஜானாவை எடுத்துச்செல்வதில் ஷா வெற்றிபெறவில்லை

ஷாவின் காலத்தில் இரான், மேற்கத்திய நாடுகளின் முகாமில் இருந்தது. அயதுல்லா அதை வெளிப்படையாக எதிர்த்தார். இந்த காரணத்திற்காக, அவர் 1962 இல் கைது செய்யப்பட்டார். இந்த கைது அவரை நாட்டின் ஹீரோவாக மாற்றியது.

அவர் முதலில் துருக்கி சென்றார். பின்னர் இராக் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்று வாழ்ந்தார். இங்கு தங்கியிருந்தபோது, ஷாவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று தனது ஆதரவாளர்களிடம் வலியுறுத்தி வந்தார்.

1979 ஆம் ஆண்டு வருவதற்குள் ஷாவின் புகழ் இரான் முழுவதும் குறையத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் கலவரங்கள் பரவியது மற்றும் தினசரி வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியது.

ஷா இரானை விட்டு வெளியேற முடிவு செய்தார். ஆனால் அவர் ஜனவரி 16 வரை தெஹ்ரானில் இருந்தார். அரச கருவூலத்தை முழுவதுமாக அல்லது ஒரு பகுதியையாவது தன்னுடன் எடுத்துச் செல்ல விரும்பியதால் ஷா இவ்வளவு காலம் அங்கு தங்கினார்.

முகமது ஹெகால் தனது 'தி ரிட்டர்ன் ஆஃப் தி அயதுல்லா' புத்தகத்தில், "தானும் தனது மனைவியும் முடிசூட்டு நாளில் அணிந்திருந்த நகைகளை தன்னுடன் எடுத்துச் செல்ல அவர் விரும்பினார். ராயல் கைட் குழுவிடம் அரச பெட்டகத்தை வலுக்கட்டாயமாக திறக்குமாறு கூறி பல முறை வங்கிக்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் வெறுங்கையுடன் திரும்பி வந்தனர்."என்று எழுதியுள்ளார்.

"அரச பெட்டகம் பாதுகாப்பு காரணங்களுக்காக தரையிலிருந்து 20 மீட்டர் கீழே கட்டப்பட்டது. பெட்டகத்தை திறக்கத் தெரிந்த வங்கி அதிகாரிகள் காணாமல் போனார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அரச கருவூலத்தைப் பாதுகாப்பாக வைக்க ஷா எடுத்த முன்னெச்சரிக்கைகள் அவருக்கு எதிராகச்சென்றன. எனவே தனது நகைகள் இல்லாமல் அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது.”

இந்த நகைகள் அந்த நேரத்தில் 500 பில்லியன் டாலர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பொக்கிஷம் இன்றும் இரானின் வங்கியில் பாதுகாப்பாக உள்ளது.

ஈரான், உலகம்

பல நாடுகள் ஷாவுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தன

ஷா இரானில் இருந்து வெளியேறும்போது அதை எகிப்துக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வதாக காட்டிக்கொண்டார். உண்மையில், அவர் முதலில் ஜோர்டானுக்கு செல்ல விரும்பினார். ஆனால் ஜோர்டான் மன்னர் அவரது கோரிக்கையை பணிவுடன் நிராகரித்தார்.

ஷாவின் பரிவாரம் முதலில் எகிப்தில் உள்ள அஸ்வான் ரிசார்ட்டை அடைந்தது. அங்கும் தன்னை அரசு தலைவராக அவர் காட்டிக் கொண்டார். அங்கு அவர் எகிப்து அதிபர் அன்வர் சதாத்துடன் மூன்று நாள் உச்சி மாநாட்டை நடத்தினார்.

அங்கு முன்னாள் அமெரிக்க அதிபர் கெரால்டு ஃபோர்டையும் சந்தித்தார். எகிப்தில் ஐந்து நாட்கள் கழித்த பிறகு, ஷா ஜனவரி 22 அன்று மொராக்கோவின் தலைநகரான மராகேஷுக்குப் புறப்பட்டார்.

ஐந்து நாட்கள் அங்கேயே இருந்துவிட்டு அமெரிக்காவுக்குப் போவதுதான் அவரது திட்டம். ஆனால் அமெரிக்காவுக்கான இரான் தூதர் அனுப்பிய செய்தி அவருக்கு வந்தது. ’அமெரிக்கா மனம் மாறிவிட்டது. இப்போது அவரை வரவேற்க அது தயாராக இல்லை’ என்பதே அந்த செய்தி.

மூன்று வாரங்களுக்குப் பிறகு, மொராக்கோவின் ஷா தனது ஏடிசியை இரானின் ஷாவிடம் அனுப்பினார். ”அவருக்கு தனது நாட்டில் புகலிடம் கொடுக்க உண்மையான விருப்பம் இருக்கிறது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.தான் விரும்பினால் கூட அவரை இங்கே தங்க அனுமதிக்க முடியாது’ என்ற செய்தி ஷாவிடம் சொல்லப்பட்டது. அவரது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் எகிப்து அவரை தனது நாட்டுக்கு வர அனுமதித்தது. 1980 ஜூலை 27 ஆம் தேதி ஷா புற்றுநோயால் இறந்தபோது, அவர் அரசு மரியாதையுடன் அங்கு அடக்கம் செய்யப்பட்டார்.

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொமேனி பாரிஸிலிருந்து தெஹ்ரானுக்கு பறந்தார்

மறுபுறம், 1979 பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு, பாரிஸ் விமான நிலையத்திலிருந்து தெஹ்ரானுக்கு போயிங் 747 சிறப்பு விமானம் 'தி மே ஃப்ளவர்' புறப்பட்டது. இரானின் ஷாவுக்கு எதிரான புரட்சியின் நாயகன் அயதுல்லா ரோஹில்லா கொமேனி அதில் பயணம் செய்தார். 16 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்த கொமேனி, தனது தாய்நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

விமானத்தில் இருந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 168. விமானம் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் எந்த பெண்ணும் குழந்தையும் விமானத்தில் ஏற்றப்படவில்லை. இந்த அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது அல்ல.

கான் காக்லின் தனது 'கொமெய்னி'ஸ் கோஸ்ட்' என்ற புத்தகத்தில், "இரான் விமானப்படையின் மூத்த தளபதி இரானுக்கு கொமேனியை கொண்டு வரும் விமானத்தை சுட்டு வீழ்த்த விரும்பினார். அனுமதியின்றி இரான் வான்பரப்புக்குள் வரும் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு எகிப்தில் சரணடைந்துள்ள ஷாவிடம் அவர் அனுமதி கோரினார். ஆனால் ஷா இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை,” என்று எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற எகிப்திய செய்தியாளர் முஹமது ஹைகால் தனது 'தி ரிட்டர்ன் ஆஃப் தி அயதுல்லா' என்ற புத்தகத்தில், "விமானத்தில் ஏறியவுடன், கொமேனி விமானத்தின் மேல் பகுதிக்குச் சென்றார். அவர் முதலில் கால்களை கழுவி தொழுகை செய்து சிறிது தயிர் சாப்பிட்டார். தரையில் ஒரு போர்வையை விரித்தார். இரண்டு ஏர் பிரான்ஸ் கம்பளி போர்வைகளை போர்த்திக்கொண்டு உறங்கச் சென்றார். இரண்டரை மணி நேரம் தூங்கி எழுந்தபிறகு பிரார்த்தனை செய்து காலை உணவாக ஆம்லெட் சாப்பிட்டார்." என்று எழுதியுள்ளார்.

விமானத்தின் பின்புறத்தில் அவரது ஆதரவாளர்களும், சுமார் 100 செய்தியாளர்களும் அமர்ந்திருந்தனர். விமானம் இரானிய வான்வெளிக்குள் நுழைந்ததும், ஏபிசி நியூஸ் செய்தியாளர் பீட்டர் ஜென்னிங்ஸ் கொமேனியிடம், "இரானுக்குத் திரும்புவதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?" என்று கேட்டார். அயதுல்லாவின் பதில் ' ஹிச்சி'. அதாவது ஒன்றுமில்லை என்பது இதன் பொருள்.அவரது பாரசீக மொழிபெயர்ப்பாளர் சாதேக் கோத்பசாதா ஆச்சரியத்துடன், 'ஹிச்சி?' கொமேனி, 'ஹிச் அஹ்ஸாஸி நத்ரம்' என்று வலியுறுத்தினார். அதாவது ’நான் எதையும் உணரவில்லை.’

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தெஹ்ரானுக்கு சென்ற விமானத்தில் அயதுல்லா கொமேனி.

கொமேனியின் விமானம் சுட்டு வீழ்த்தப்படலாம் என்ற அச்சம் இருந்தது

அதே விமானத்தில் பிபிசி செய்தியாளர் ஜான் சிம்ப்சனும் இருந்தார். பின்னர் அவர் தனது சுயசரிதையான 'News from Noman's Land' இல், "கொமேனியுடன் தெஹ்ரானுக்குச் சென்றது ஒரு திகிலூட்டும் அனுபவம். இரானிய விமானப்படை எங்கள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தும் என்று எங்களுடன் வந்த பயணிகள் உறுதியாக நம்பினர். விமான பயணத்தின் போது சிலநிமிடங்கள் கொமேனியிடம் பேசினேன். அவர் அதிகம் பேசாதவர். நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டால், அவர் விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே பார்ப்பார்."என்று எழுதியுள்ளார்.

கொமேனியின் விமானம் தரையிறங்குவதற்கு முன் தெஹ்ரானை மூன்று முறை சுற்றியது. இறுதியாக பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு கொமேனியின் விமானம் தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தின் கதவு திறந்ததும், கறுப்புத் தலைப்பாகை மற்றும் கணுக்கால் வரை பைஜாமா அணிந்த ஒரு மெல்லிய, வளைந்த இடுப்புகொண்ட முதியவர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த இரானிய காற்று தனது முகத்தை வருடுவதை உணர்ந்தார்.

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அயதுல்லா ருஹோல்லா மௌசவி கொமேனி

கொமேனியை வரவேற்க கூடிய கூட்டம்

அவரது ஒரு கையை ஏர் பிரான்ஸ் உதவியாளர் கைதாங்கலாக பிடித்துக்கொண்டார். கொமேனியை வரவேற்க இரானியர்கள் கூட்டம் அங்கு கூடியது. அவர் முதலில் நீலநிற மெர்சிடிஸ் காரில் அமர வைக்கப்பட்டார். ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. காரில் இருந்தவரை தான் செல்லும் பாதையில் இருக்கும் சாலைகளின் பெயர்களை அவர் கேட்டுக்கொண்டே வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு தெஹ்ரானை விட்டு அவர் வெளியேறியபோது இருந்த நகரத்திற்கும் இப்போதைய நகரத்திற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.

அதுவரை ஷாவின் காலத்து பிரதமர் ஷாபூர் பக்தியார் பதவி விலகவில்லை. அவரைப் புறக்கணித்த கொமேனி, மெஹ்தி பசர்கானை பிரதமராக நியமித்தார்.

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தெஹ்ரான் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும் கொமேனி.

"தனது கையில்தான் அதிகாரம் உள்ளது என்று காட்ட பக்தியார் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அதைக் கேட்ட கொமேனி, ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, அதில் ஃபார்ஸியில் எழுதினார்--'ஊரடங்கு உத்தரவை' பின்பற்ற வேண்டாம்' என்று எழுதினார்," என்று முகமது ஹெகால் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும் அந்தக் காகிதத் துண்டு காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜெனரல் கராப்கி புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி பசர்கானை அழைத்து, ’உங்கள் பிரதிநிதியை அனுப்புங்கள். நான் ராணுவத்தின் கட்டுப்பாட்டை அவரிடம் ஒப்படைக்கிறேன்’ என்றார்.

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெனரல் நசிரியை சுட்டுக்கொன்றார்

பிப்ரவரி 11 அன்று ஜெனரல் கராப்கி திடீரென்று ராணுவம் அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்கும் என்று அறிவித்தார். எல்லா ராணுவப் பிரிவுகளையும் படைமுகாமிற்குத் திரும்புமாறு கட்டளையிட்டார்.

அன்று முதல் தெருக்கள் புரட்சியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. பக்தியார் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்து தலைமறைவானார். அன்று முதல் பழைய ஆட்சியுடன் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளின் கைது நடவடிக்கை துவங்கியது.

"பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு நேரத்தில், ஷாவுக்கு நெருக்கமானவரும், பிரபல உளவுத்துறை நிறுவனமான சவாக்கின் தலைவருமான ஜெனரல் நசிரி முதலில் தாக்கப்பட்டார். பின்னர் அவர் ஜெனரல்கள் ரபி, நாஜி மற்றும் கொல்ரோதாத் ஆகியோருடன் சேர்த்து பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு ஒரு பள்ளியின் மொட்டைமாடியில் சுட்டுக்கொல்லப்பட்டார்," என்று டெஸ்மண்ட் ஹார்னி தனது 'தி ப்ரீஸ்ட் அண்ட் தி கிங்' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கொமேனி இந்த பள்ளியை தனது தலைமையகமாக ஆக்கியிருந்தார்.

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜெனரல் நசிரி

கொமெனி இந்த வழக்கை நடத்துவதற்கு சதேக் கல்காலியை நியமித்தார். ’இந்த மக்கள் சொல்வதைக் கேட்டு, அதன் பிறகு அவர்கள் அனைவரையும் நரகத்திற்கு அனுப்புங்கள்’ என்று கல்கலிக்கு அறிவுறுத்தினார்.

இரானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று தனது விருப்பத்தை அயதுல்லா கொமெய்னி பிரான்ஸில் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் இரானிய மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன், அங்கு அடிப்படைவாத இஸ்லாமிய அரசை அமைப்பதில்தான் அவரது முழு கவனமும் இருந்தது.

"இந்த ஜெனரல்களின் கண்கள் கட்டப்பட்டு அவர்கள் பள்ளியின் மொட்டைமாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் இறந்ததைக் கேள்விப்பட்ட கொமேனி உடல்களை பார்க்க குறுகலான படிக்கட்டுகளில் ஏறிச்சென்றார். ஒரு நிமிடம் அவர் அங்கேயே இருந்தார். அதன் பிறகு இந்த சடலங்கள் படம் பிடிக்கப்பட்டு

இரானிய தொலைக்காட்சியில் காட்டப்பட்டன." என்று கான் காக்லின் எழுதியுள்ளார்.

அயதுல்லா கொமேனியின் இஸ்லாமிய நீதி மரபு இப்போது இரான் மண்ணில் வேர்விடப்போகிறது என்ற செய்தியை இது உணர்த்தியது.

சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தெஹ்ரான் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், "கொமெனி இரானில் ஜனநாயகத்தை கொண்டு வருகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது நாம் ஒரு சர்வாதிகாரியின் இடத்தில் மற்றொரு சர்வாதிகாரியை கொண்டுவந்துள்ளோம் என்று உணர்கிறேன்,"என்று கருத்து தெரிவித்தார்.

சல்மான் ருஷ்டியை கொல்ல ஃபத்வா

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சல்மான் ருஷ்டி

1989 ஆம் ஆண்டில், 'சாட்டனிக் வெர்சஸ்' புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் புத்தகத்தின் வெளியீட்டில் தொடர்புடைய சல்மான் ருஷ்டிக்கு எதிராக கொமேனி மரண ஃபத்வாவை வெளியிட்டார். ருஷ்டியைக் கண்டவுடனே கொன்றுவிடுங்கள் என்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ருஷ்டியை கொலை செய்பவருக்கு 26 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஃபத்வா காரணமாக ருஷ்டி தனது வாழ்நாள் முழுவதையும் பலத்த பாதுகாப்புடன் கழிக்க வேண்டியுள்ளது.

1989 ஜூன் 3 ஆம் தேதி கொமேனி காலமானபோது, தெஹ்ரான் வானொலியின் தொகுப்பாளர் அழுதுகொண்டே அதை அறிவித்தார்.

நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. எல்லா விமான நிலையங்களும் மூடப்பட்டு இரானின் எல்லைகள் சீல் செய்யப்பட்டன.

இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

ஈரான், உலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சல்மான் ருஷ்டி

கொமேனி இவ்வுலகை விட்டுப் பிரிந்ததால் இரானில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று அப்போதைய இரான் அதிபர் ரஃப்சஞ்சானி, கருதினார்.

கொமேனியின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான இரானியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக குளிரூட்டப்பட்ட பெட்டியில் அவரது உடல்

வைக்கப்பட்டது. சுமார் இருபது லட்சம் பேர் கொமேனியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றால் மயக்கமடையாதபடி தெஹ்ரானின் தீயணைப்புப் படையினர் மக்கள் மீது தண்ணீரைப் பொழிய வேண்டியிருந்தது.

இறுதியில் கும்பலிடம் இருந்து காப்பாற்ற அவரது உடலை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் ஹெலிகாப்டர் தரையிறங்கியவுடன் கூட்டத்தினர் முன்னால் சென்று கொமேனியின் உடலை கைப்பற்றினர்.

நினைவுப் பரிசாக வைத்துக்கொள்வதற்காக மக்கள் அவரது உடலை மூடியிருந்த வெள்ளை துணியை கிழிக்க போட்டி போடத் தொடங்கினர்.

கொமெனியின் நல்லடக்க நிகழ்வின்போது சுமார் பத்தாயிரம் பேர் காயமடைந்ததாகவும், டஜன் கணக்கானவர்கள் உயிரிழக்க நேரிட்டதாகவும் இரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

https://www.bbc.com/tamil/articles/cjqz9dd498zo

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

"கொமெனி இரானில் ஜனநாயகத்தை கொண்டு வருகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது நாம் ஒரு சர்வாதிகாரியின் இடத்தில் மற்றொரு சர்வாதிகாரியை கொண்டுவந்துள்ளோம் என்று உணர்கிறேன்,"என்று கருத்து தெரிவித்தார்.

ஒரு மதவெறியன் ஜனநாயகத்தை கொண்டு வருவார் என்று நம்பிய முஸ்லிம் மத மாணவன் 🙆‍♂️
மதவெறியர்களிடம் அதிகாரம்  அதிகாரம் சென்றால் மேலும் மோசமானதையே செய்வார்கள் என்பதற்கு கொமேனி உதாரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயத்துல்லா கொமேனியின் கை ஓங்க முதற்காரணம் அமெரிக்கா ஈரானில் நடத்திய ஆடை அவிழ்ப்பு கலாச்சாரமும் தலைகால் தெரியாமல் மன்னர் ஷா போட்ட ஆட்டங்களும் தான்....
எதையும் அளவோடு வைத்திருந்தால் என்றும் நலமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.