Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்லீரல்: நீரிழிவின் நடுநாயகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்லீரல்: நீரிழிவின் நடுநாயகம்

"In Buckingham Palace, the butler is more powerful than the King"

"பக்கிங்ஹாம் அரண்மணையில், அரசரை விட பற்லருக்கு பவர் அதிகம்"

ஒரு உள்ளூர் பிரிட்டிஷ் சிலேடை.

இப்படிப் பட்ட ஒரு பற்லரைப் பற்றி இன்று பேசுவோம். நீரிழிவு தொடர்ந்து நிலைக்கவும், அதன் விளைவுகள் உடலைப் பாதித்து ஏனைய பக்க விளைவுகளைக் கொண்டு வரவும் அவசியமான கல்லீரல் பற்றிப் பேசுவது நீரிழிவைப் புரிந்து கொள்ள உதவும்.

கல்லீரலின் தொழில்கள் எவை?

கல்லீரலுக்கு எங்கள் உடலில் பெரிதும் சிறிதுமாக பல தொழில்கள் இருக்கின்றன. முக்கியமாக, கல்லீரல் உடலின் அனுசேபத்தோடு தொடர்பான அங்கம். இதனால் தான் அது நீரிழிவிலும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், கல்லீரலின் பல தொழில்கள் உடலுக்கு இன்றியமையாதவை. உடலினுள் உணவு மூலமும், மருந்து மாத்திரைகள் வழியாகவும் புகும் பொருட்களை உடைத்து, அவற்றுள் நச்சுத் தன்மை இருந்தால் அதனை அகற்றும் வேலையையும் கல்லீரல் செய்கிறது. மறு பக்கம், உடலுக்கு அவசியமான பல புரதங்களை கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. கல்லீரல் செயலிழந்தால், எங்கள் உடலில் இரத்தம் உறைய அவசியமான பல மூலக்கூறுகள் குறைய, இரத்தக் கசிவினால் நாம் பாதிக்கப் படுவோம். உடலினுள் மீள்சுழற்சிக்காக உடைக்கப் படும் புரதங்கள், ஏனைய பொருட்களை கல்லீரல் அகற்றா விட்டால், அவை உடலில் சேர்ந்து அதனாலும் நம் உடல் நலம் கெடும். சிறந்த உதாரணம், கல்லீரல் நோயினால் பிலிருபின் மீள்சுழற்சி பாதிக்கப் பட்டால், பிலிருபின் இரத்தத்தில் அதிகரித்து மஞ்சள் காமாலை ஏற்படும். இப்படி ஏராளமான உப தொழில்களை தன் வசம் வைத்திருக்கும் கல்லீரல், நீரிழிவிற்கு ஏன் முக்கியம்?

குழுக்கோசும் கல்லீரலும்

large.LiverDM-1.jpg.78317d3267cc01189f1031fe03d6712a.jpg

இரத்த குழுக்கோசை அதிகரிப்பதில் எங்கள் உணவு மூலம் உள்ளெடுக்கப் படும் மாச்சத்துகள் மட்டுமன்றி, கல்லீரலினால் உற்பத்தி செய்யப் படும் குழுக்கோசுக்கும் பங்கிருக்கிறது.  நாம் உணவருந்திய பின்னர் குழூக்கோஸ் இரத்தத்தில் அதிகரிக்கும். இதை எங்கள் கணையம் உணர்ந்து இன்சுலின் ஹோமோனைச் சுரக்கும். சுரக்கப் படும் இன்சுலின், உடலின் ஏனைய கலங்களினுள் இரத்த குழுக்கோஸ் நுழைவதை ஊக்குவிக்கும். ஆரோக்கியமான ஒருவரில், இந்த நடைமுறை மூலம், உடல் குழுக்கோசைப் பாவிக்க, இரத்த குழுக்கோஸ் சாதாரணமான நிலையில் இருக்கும். விரதமிருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவர் 12 மணிநேரங்களுக்கு மேலாக உணவருந்தாமல் இருக்கும் போது, இரத்தத்தில் குழுக்கோஸ் குறைவதை கணையம் உணரும். இதை உணரும் கணையம், இன்சுலின் சுரப்பைக் குறைத்துக் கொண்டு, குழூக்காகோன் எனப்படும் இன்சுலினுக்கு எதிரான செயல்பாடு கொண்ட வேறொரு ஹோமோனைச் சுரக்கும். இந்த குழூக்காகோன், கல்லீரலைத் தாக்கும் போது, கல்லீரல் இரண்டு வழிகளில் இரத்த குழுக்கோசை அதிகரிக்கும்:

1. கல்லீரல் புதிதாக குழுக்கோசை உற்பத்தி செய்து இரத்தத்தினுள் விடும்.

2. கல்லீரலில் சேமிக்கப் பட்டிருக்கும் கிளைகோஜன் எனப்படும் சேமிப்பை உடைத்து அதிலிருந்து குழுக்கோசை இரத்தத்தினுள் வெளிவிடும்.

இந்த வழிகளில், ஆரோக்கியமான ஒருவர் உணவு தவிர்ப்பில் 12 மணிநேரங்கள் ஈடுபட்டால், கல்லீரல் குழுக்கோசை உற்பத்தி செய்து இரத்தத்தில் கலக்கும். இப்போது, கணையம் குழுக்கோஸ் அதிகரிப்பதை உணர்ந்து இன்சுலினைச் சுரக்க, உடல் குழுக்கோசைப் பயன்படுத்த ஆரம்பிக்கும். எனவே, தான் ஆரோக்கியமான ஒருவரில், 12 மணிநேரங்கள் பட்டினி கிடந்த பின்னரும், இரத்த குழுக்கோஸ் 70 முதல் 100 mg/dL வரை இருக்கிறது.  இப்போது எல்லாம் சுபம் என்று உடல் உணரும்.

 நீரிழிவின் போது என்ன நடக்கிறது?

large.LiverDM-2.jpg.3d221912971bc14bbe4632aed78a6963.jpg

இன்சுலினுடைய தொழிற்பாடு நீரிழிவின் போது குறைகிறது - இது இன்சுலின் சுரப்புக் குறைவதாலோ அல்லது சுரக்கப் படும் இன்சுலினுக்கு உடல் துலங்கல் காட்டுவது குறைவதாலோ நிகழலாம்.

இந்த நிலையில், ஒரு நீரிழிவு நோயாளி உணவருந்துகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரது இரத்த குழுக்கோஸ் அதிகரிக்கும். ஆனால், இன்சுலின் செயல்பாட்டுக் குறைவால், கல்லீரல் உட்பட உடலின் அங்கங்கள் இரத்த குழுக்கோசை உள்வாங்கிப் பயன்படுத்த இயலாமல் போகும். சுருக்கமாக, இரத்தத்தில் குழுக்கோஸ் இருந்தாலும், உடலின் பெரும்பாலான அங்கங்களைப் பொறுத்த வரை நீரிழிவு நோயாளி “பட்டினி கிடக்கிறார்” என்பதாகத் தோன்றும். இதனால், கணையம் குளூக்காகோன் ஓமோன் சுரப்பை அதிகரிக்க, குழுக்காகோன் ஹோமோன் கல்லீரலைத் தாக்கும். 

இந்தப் “பட்டினியையும்” குழூக்காகோனையும் உணரும் எங்கள் பட்லரான கல்லீரல் இப்போது தன் வேலையைக் காட்ட ஆரம்பிப்பார். "பட்டினி" கிடக்கும் உடலுக்காக, கல்லீரல் குழுக்கோசை உற்பத்தி செய்து இரத்தத்தினுள் விடும். ஏற்கனவே உணவின் மூலம் கிடைத்த குழுக்கோசும் இரத்தத்தில் தேங்கிய நிலையில், கல்லீரலும் குழுக்கோசை இரத்தத்தினுள்  அனுப்ப, இரத்த குழுக்கோஸ் அளவு எகிறும். இதில் இருந்து, அதிகரித்த இரத்த குழுக்கோஸ், அதனால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்பு, குருதிக் கலன்களின் பாதிப்பு என்பன தொடரும்.

எனவே, உடலின் இரத்த குழுக்கோசை சமநிலைப்படுத்த முயலும் கல்லீரல், பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடும் வேலையைச் செய்வதால், நீரிழிவு இன்னும் மோசமாக வழி வகுத்து விடுகிறது. இதனால் தான், நீரிழிவு நோய்க்காளாகி விட்ட ஒருவரில், உணவு முறையும், உடற்பயிற்சிகளும் மட்டுமே நீரிழிவை இல்லாமலாக்கப் போதுமானவையாக இருப்பதில்லை.

மெற்fபோமின் பல வழிகளில் வேலை செய்தாலும், அதன் பிரதானமான ஒரு இலக்கு கல்லீரல். கல்லீரல் குழுக்கோசைப் புதிதாக உருவாக்கி இரத்தத்தினுள் கலக்காமல் மெற்fபோமின் தடுப்பதால் இரத்த குழுக்கோஸ் அதிகரிக்காமல் தடுக்கிறது. மெற்fபோமினோடு, உணவுச் சீராக்கம், உடற்பயிற்சி என்பவற்றை இணைத்தால், நீரிழிவில் அதிகரித்த இரத்த குழுக்கோஸினால் உருவாகக் கூடிய மோசமான பின்விளைவுகளைத் தடுக்கலாம்.  

-ஜஸ்ரின்

பட உதவி, நன்றியுடன்:  Rines et al., Targeting hepatic glucose metabolism in the treatment of type 2 diabetes. Nature Reviews Drug Discovery volume 15pages786–804 (2016)

ஜஸ்ரின், சில கேள்விகள்.

காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று சொல்வார்கள்.  40 நிமிடத்துக்கு மேற்பட்ட உடற்பயிற்சியில்தான் குளுக்கோஸின் இருப்புக் குறைவடைய உடலிலுள்ள கொழுப்பு சக்தியாகக் கரைக்கப்படும் என்று சொல்வார்கள். காலையில் உடலில் குளுக்கோசின் அளவு குறைவாக இருப்பதால் இரட்டிப்பு நன்மை என்று நினைக்கிறேன். 

நீரிழிவு நோய் இல்லாத ஒருவரின் உடலில் இரத்தத்தில் அல்லது தசைகளில் உள்ள குளுக்கோஸின் அளவை மதிப்பிட முடியுமா ?

குறிப்பிட்ட அளவு குளுக்கோஸ் கட்டாயம் உடலில் இருக்க வேண்டுமா ?

ஒரு மேலோட்டமான கணக்கின்படி ஒரு மணி நேர சாதாரண ஓட்டப் பயிற்சியின்போது 800 கி.கலோரிகள் அளவான சக்தி வெளியேற்றம்படும் என்று வைத்துக் கொண்டால் 4 கி.கலோரிகள் 1கிராம் சீனி என்ற அளவில் 200 கிராம் சீனி வெளியேற்றப்படுகின்றது. நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு இச் சடுதியான சீனி இழப்பு ஆபத்தில்லையா ?

தேவையை உணர்ந்த கல்லீரல் இந்த 200 கிராம் சீனியை உற்பத்தி செய்துவிட ஏற்கனவே இரத்தத்தில் இருந்த சீனியும் சேர்ந்து சிறுநீரகத்தைப் பாதித்தால் உடற்பயிற்சியால் ஆபத்தல்லவா ஏற்படும் ?

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இணையவன் said:

இணையவன், கேள்விகளுக்கு நன்றி. 

1. உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் எது என்பது இன்னும் ஆய்வில் இருக்கும் ஒரு விடயம். காலை நேர உடற்பயிற்சியினால் அதிக கொழுப்பு எரிக்கப் படும் என்பதை எலிகளில் செய்த ஆய்வில் கண்டறிந்தார்கள். ஆனால், மனிதர்களில் பெரிய எண்ணிக்கையில் இதே ஆய்வுகள் செய்யப் படவில்லை. ஒரு சிறு ஆய்வில், காலை உடற்பயிற்சியினால் பெண்களில் கொழுப்பு எரிக்கப் படுவது அதிகமாக இருந்தது, ஆண்களில் இது நிகழவில்லை. ஆனால், இந்த ஆய்வின் நம்பகத் தன்மை சிறியளவிலான எண்ணிக்கை காரணமாகக் குறைவு. 

எனவே, காலை உடற்பயிற்சியில் மேலதிக அனுகூலம் உண்டா என்பது  பற்றி நான் மேலும் தேடிப் பார்க்க வேண்டும். 

2. உடலில் ஒரு குறிப்பிட்டளவு குழுக்கோஸ் இருக்க வேண்டும். இரத்தத்தில் குழுக்கோஸ் மிகவும் குறைந்தால் hypoglycemic shock  வரும். இது அனேகமாக நீரிழிவுக்கு இன்சுலின் எடுத்துக் கொள்வோரில் சில சமயங்களில் வரலாம். 

3. தசையில் இருக்கும் குழுக்கோசை அளக்கலாம், ஆனால் biopsy  முறையில் தான் செய்ய முடியுமென நினைக்கிறேன். சாதாரணமாகச் செய்ய முடியாது. 

4.சாதாரணமாக எங்கள் உடலில் அதிகாலையில் இரத்த குழுக்கோசின்  அளவு அதிகமாக இருக்கும். இதை dawn phenomenon  என்பர். இதன் காரணங்கள் தெளிவாகத் தெரியாது, ஆனால் இது எங்கள் உடலின் கடிகாரத்தோடு (circadian clock) தொடர்பாக இருக்கலாம்.

5. நீரிழிவு உள்ளோர் மிதமான சில உடற்பயிற்சிகளைச் செய்யும் போது இரத்த குழுக்கோஸ் குறையும், ஆனால் நீங்கள் சொல்வது போன்ற நீண்ட தூர ஓட்டம் செய்யும் போது இரத்த குழுக்கோஸ் அதிகரிக்கும். இதற்கு கல்லீரல் வழியான குழுக்கோஸ் தான் காரணம். ஆனால், இவ்வாறு தற்காலிகமாக குழுக்கோஸ் அதிகரிப்பதால் வரும் தீமை பெரிதல்ல என்கிறார்கள். ஏனெனில், நீண்டகாலப் போக்கில் உடற்பயிற்சி இரத்த குழுக்கோசை உடல் பாவிப்பதை அதிகரிக்கும், இதனால் நிகர விளைவு (net effect) நன்மையாகவே இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

பித்தப்பை பற்றியும் அறிய ஆவல்

விரிவான பதில்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

On 24/6/2023 at 16:09, Justin said:

4.சாதாரணமாக எங்கள் உடலில் அதிகாலையில் இரத்த குழுக்கோசின்  அளவு அதிகமாக இருக்கும். இதை dawn phenomenon  என்பர். இதன் காரணங்கள் தெளிவாகத் தெரியாது, ஆனால் இது எங்கள் உடலின் கடிகாரத்தோடு (circadian clock) தொடர்பாக இருக்கலாம்.

இதுவரை காலையில் குளுக்கோசின் அளவு இரத்தத்தில் குறைவாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.

இந்னுமொரு கேள்வி.
எனக்குத் தெரிந்த ஒரு பிரெஞ்சுப் பெண் குழுவாக உணவின்றி நீண்டநேர நடைப்பயிற்சியை ஏற்பாடு செய்பவர். ஒரு வாரம் சாப்பிட மாட்டார்கள். காலையில் ஒரு கரண்டி ஒல்வ் எண்ணையும் தேசிக்காய்ச் சாறுடன் நீர் அல்லது வேறு பழ ஜூஸ் மட்டுமே உண்பார்கள். ஏனைய நேரங்களில் நீர் தவிர வேறெதுவும் சாப்பிடுவதில்லை. அத்துடன் மலை, காட்டுப் பகுதிகளில் தினமும் 3 - 5 மணி நேரம் நடப்பார்கள். இதன் மூலம் முக்கியமாக உடலில் கொழுப்பையும் அவசியமற்ற கலங்களை (புற்றுநோய்க் கலங்கள்) அழிக்கவும் முடியும் என்று கூறுகிறார். நான் 3 நாட்கள் நடைப்பயிற்சி செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு அப்பிள் பழம், தேசிக்காய்ச் சாறு மட்டும் சாப்பிட்டு முயற்சி செய்தேன். 3ஆம் நாள் மெல்லிய பசி இருந்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இல்லாமல் போனது.

உங்கள் கட்டுரையை வாசித்தபோது, குளுக்கோஸ் முற்றாக வழங்கப்படாமல் கல்லீரலின் செயற்பாடு பாதிக்கபடும் போலுள்ளது. இந்த 7 நாட்களும் கல்லீரலும் கணையமும் எவ்வாறு இயங்கும் ?

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்துக்கும் விரிவான விளக்கத்துக்கும் மிகவும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2023 at 07:09, Justin said:

சாதாரணமாக எங்கள் உடலில் அதிகாலையில் இரத்த குழுக்கோசின்  அளவு அதிகமாக இருக்கும். இதை dawn phenomenon  என்பர். இதன் காரணங்கள் தெளிவாகத் தெரியாது, ஆனால் இது எங்கள் உடலின் கடிகாரத்தோடு (circadian clock) தொடர்பாக இருக்கலாம்.

இரத்த சோதனைகளை காலையில்த் தானே சாப்பாட்டுக்கு எடுக்கிறார்கள்.

இதனால் குளுக்கோசின் அளவு கூடுதலாகவல்லவா காட்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2023 at 13:19, இணையவன் said:

விரிவான பதில்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

இதுவரை காலையில் குளுக்கோசின் அளவு இரத்தத்தில் குறைவாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.

இந்னுமொரு கேள்வி.
எனக்குத் தெரிந்த ஒரு பிரெஞ்சுப் பெண் குழுவாக உணவின்றி நீண்டநேர நடைப்பயிற்சியை ஏற்பாடு செய்பவர். ஒரு வாரம் சாப்பிட மாட்டார்கள். காலையில் ஒரு கரண்டி ஒல்வ் எண்ணையும் தேசிக்காய்ச் சாறுடன் நீர் அல்லது வேறு பழ ஜூஸ் மட்டுமே உண்பார்கள். ஏனைய நேரங்களில் நீர் தவிர வேறெதுவும் சாப்பிடுவதில்லை. அத்துடன் மலை, காட்டுப் பகுதிகளில் தினமும் 3 - 5 மணி நேரம் நடப்பார்கள். இதன் மூலம் முக்கியமாக உடலில் கொழுப்பையும் அவசியமற்ற கலங்களை (புற்றுநோய்க் கலங்கள்) அழிக்கவும் முடியும் என்று கூறுகிறார். நான் 3 நாட்கள் நடைப்பயிற்சி செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு அப்பிள் பழம், தேசிக்காய்ச் சாறு மட்டும் சாப்பிட்டு முயற்சி செய்தேன். 3ஆம் நாள் மெல்லிய பசி இருந்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இல்லாமல் போனது.

உங்கள் கட்டுரையை வாசித்தபோது, குளுக்கோஸ் முற்றாக வழங்கப்படாமல் கல்லீரலின் செயற்பாடு பாதிக்கபடும் போலுள்ளது. இந்த 7 நாட்களும் கல்லீரலும் கணையமும் எவ்வாறு இயங்கும் ?

நன்றி.

இந்த முறையில் கலோரிக் கட்டுப்பாடு செய்யப்படுவதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். நீர் விரதம் (water fast), அல்லது நீள் விரதம் (prolonged fast) என்றும் பெயர்கள் உண்டு. 5 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை நீர் மட்டும் அருந்தி இப்படி விரதமிருந்தோரை ஆராய்ந்து சில ஆய்வுகள் வந்திருக்கின்றன. இந்த ஆய்வுகளின் படி:

1. உடல் எடை, இரத்த குழூக்கோஸ் என்பன குறைந்தன. 85% ஆனோர் தமக்கிருந்த வலிகள், பிடிப்புகள், வாதங்கள் போன்ற உடல் உபாதைகள் குறைந்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள் (ஆனால், இது அவர்களது subjective மனப் பிரமையாகவும் இருக்கலாம், objective ஆன அளவீடுகளை ஆய்வாளர்கள் இவ்விடயங்கள் குறித்து எடுத்திருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்).

2. 7 நாட்கள் விரதமிருக்கும் போது, இரத்த குழுக்கோஸ் முதல் சில நாட்களுக்கு சாதாரணமாகப் பேணப்படும் - இதற்குக் கல்லீரல் குழுக்கோசை வெளிவிடுவது காரணமாக இருக்கும். இரத்த குழுக்கோஸைக் கண்டதும் கணையம் இன்சுலினைச் சுரக்க உடல் குழுக்கோசைப் பயன்படுத்திக் கொள்ளும்.

3. உடலில் கொழுப்பும் எரிக்கப் படும், இரத்த கீற்றோன்களும் அதிகரிக்கும். இது 12 மணி நேரத்தில் நிகழ ஆரம்பிக்கலாம், ஆனால் 5 நாட்களில் கீற்றோன்கள் உச்ச இரத்த நிலையை அடையலாம்.

குறிப்பாக: கீற்றோன்கள் மூளைக்கலங்களுக்கு பிடித்தமான சக்திப் பொருள் (குழுக்கோஸ்  இல்லாத போது!). அத்தோடு, மூளையின் கலங்களில் கீற்றோன்கள் தொழிற்படுவதன் காரணமாக நல்ல விளைவுகள் வரும், இது தான் பதட்டம், பசி இல்லாத தெளிவு வர பிரதான காரணம்.

4. இப்படி கல்லீரல் குழுக்கோசை உற்பத்தி செய்து வெளிவிடுவதற்கு, உடலின் புரதங்களை உடைத்து அமினொ அமிலங்களைப் பயன்படுத்தும். இதனால், தசை இழப்பும் நிகழும். எனவே, உடல் எடை கொழுப்புக் குறைவதால் மட்டுமன்றி, தசைகள் இழக்கப் படுவதாலும் குறைகிறது.

பெரும்பாலானோரில், நீள் விரதத்தை முடித்துக் கொள்ளும் போது, கல்லீரல், கணையம் என்பன நிரந்தரப் பாதிப்பில்லாமல் பழைய நிலைக்குத் திரும்பி விடும். ஆனால், இயற்கையாகவே உடலில் கல்சியம் குறைபாடுடையோர் கல்சியம் இழப்பினால் பாதிக்கப் பட வாய்ப்புண்டு.

  • 2 weeks later...

பதில்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்த நீர்விரத்தை நேரம் கிடைக்கும்போது நானும் செய்யலாம் என்றிருக்கிறேன்.

சென்ற வியாழன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த விரதத்தின்போது வயிற்றில் பல்வேறுபட்ட நல்ல பக்ரீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதாம்.

பிரெஞ்சு இணைப்பு : https://www.francetelevisions.fr/et-vous/notre-tele/a-ne-pas-manquer/microbiote-et-si-tout-partait-de-notre-ventre-18400

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2023 at 17:22, இணையவன் said:

பதில்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்த நீர்விரத்தை நேரம் கிடைக்கும்போது நானும் செய்யலாம் என்றிருக்கிறேன்.

சென்ற வியாழன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த விரதத்தின்போது வயிற்றில் பல்வேறுபட்ட நல்ல பக்ரீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதாம்.

பிரெஞ்சு இணைப்பு : https://www.francetelevisions.fr/et-vous/notre-tele/a-ne-pas-manquer/microbiote-et-si-tout-partait-de-notre-ventre-18400

இது சாத்தியமான ஒன்று தான். குடலில் இருக்கும் நுண்ணுயிர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நல்ல நார்த்தன்மை கொண்ட உணவுகள் (பழங்கள், மரக்கறிகள்) தினசரி எடுத்துக் கொள்ளலாம்.  இயன்ற வரை ஒரே மாதிரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளல், தூக்கம் விழிப்பு சக்கரத்தை ஒழுங்காக வைத்திருத்தல் என்பனவும் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.