Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயிலர் Review: ரஜினி - நெல்சன் கூட்டணியில் அதகளமும் ‘அமைதி’யும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1089300.jpg  
 

’அண்ணாத்த’ - ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி - நெல்சன் இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர்’, ரஜினி - நெல்சன் இருவருக்கும் கம்பேக் ஆக அமைந்ததா என்று பார்க்கலாம்.

சிட்டியில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோயில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதனைத் தடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜுன் (வசந்த் ரவி). சிலை கடத்தல் கும்பலின் தலைவனான (விநாயகன்) எதற்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருக்கும் அர்ஜுனை கடத்திக் கொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுனின் தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான முத்துவேல் பாண்டியன் (ரஜினி), தன் மகனுக்காக பழிவாங்கப் புறப்படுகிறார். பல கொலைகள், தேடுதல், சண்டைகளைக் கடந்து விநாயகனை அடையும் ரஜினியை வேறு ஒரு நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவரிடம் தனக்கு தேவையான ஒரு வேலையை செய்ய சொல்கிறார் விநாயகன். அந்த வேலையை ரஜினி செய்து முடித்தாரா, இறுதியில் என்ன ஆனது என்பதே ‘ஜெயிலர்’ படத்தின் திரைக்கதை.

படம் தொடங்கியதுமே சிலை திருடும் கும்பல், கொடூர வில்லன், அவரைப் பிடிக்க தீவிரம் காட்டும் போலீஸ் அதிகாரி என பரபரக்கிறது திரைக்கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் சாதுவான குடும்பத் தலைவராக அறிமுகம் ரஜினி கவர்கிறார். எந்தவித பஞ்ச் டயலாக்கோ, ஓபனிங் பாடலோ இல்லாமல் மகனுக்கும் பேரனுக்கும் ஷூ பாலிஷ் போடும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். மகன் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க ஒவ்வொருவராக தேடிக் கொல்லும் காட்சிகள் தரமான ‘சம்பவங்கள்’.

சாதுவான முத்துவாக இருக்கும் ரஜினி, ’டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாற்றம் அடையும்போது அரங்கம் ஆர்ப்பரிக்கிறது. இங்கு தொடங்கும் ரஜினியின் ராஜ்ஜியம் படத்தின் கிளைமாக்ஸ் வரை எங்கும் தொய்வடையவில்லை. ஐந்து தசாப்தங்களாக ரஜினி தக்கவைத்திருக்கும் அந்த கரிஷ்மா அசாதாரணமானது. எந்தப் படங்களிலும் இல்லாத வகையில் பல இடங்களின் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் நடித்துள்ளார். குறிப்பாக, யோகிபாபு உடனான காட்சிகளில் ரஜினியை வைத்து அவர் அடிக்கும் கவுன்ட்டர்களை மற்ற பெரிய நடிகர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது கூட சந்தேகமே.

படத்தின் முதல் பாதி முழுவதுமே இயக்குநர் நெல்சன் அதகளம் செய்திருக்கிறார். யோகிபாபுவும் ரஜினியும் சேர்ந்து வரும் காட்சிகளில் தியேட்டர் முழுவதும் சிரிப்பலை. படம் முழுக்க வரும் டார்க் காமடி காட்சிகள் நன்றாக கைகொடுத்திருக்கிறது. படத்தின் இடைவேளைக் காட்சி ‘திரை தீப்பிடிக்கும்’ ரகம். ரஜினியின் உடல்மொழியில் ஏற்படும் மாற்றமும், அதுவரை அலட்சியமாக டீல் செய்து கொண்டிருக்கும் குடும்பம் கொடுக்கும் ரியாக்‌ஷனும் கூஸ்பம்ப்ஸ்-க்கு உத்தரவாதம். ஒரு ரஜினி ரசிகனுக்கு என்ன தேவையோ அவை அனைத்தும் முதல் பாதியில் நிறைவாக உள்ளன.

சமீபகாலமாக ஓரிரு படங்கள் தவிர்த்து தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என்பதே. காரணம், முதல் பாதியே கிட்டத்தட்ட ஒரு முழு படம் போல எழுதப்பட்டு விடுகிறது. இடைவேளைக்கு முந்தைய காட்சி ஒரு க்ளைமாக்ஸ் போல அமைக்கப்படுவதால் அதற்கு பின்னால் வரும் காட்சிகளின் வீரியம் குறைந்து விடும் சாத்தியக்கூறுகள் அதிகம். இதில் ‘ஜெயிலர்’ படமும் தப்பவில்லை.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் எழுதப்பட்ட ‘வீக்’ ஆன திரைக்கதையால் காணாமல் போய்விடுகின்றன. கூடவே முதல் பாதியில் காமெடிக்கு உதவிய யோகிபாபுவும் காணாமல் போய்விடுகிறார். அதுவரை பழிவாங்கும் கதையாக போய்க் கொண்டிருக்கும் கதை, திடீரென ‘ஹெய்ஸ்ட்’ பாணிக்கு மாறுவது சுவாரஸ்யம் தரவில்லை. அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. முதல் பாதியில் அதகளமாக ஆர்ப்பரிக்க வைத்த காட்சியமைப்புகள், இரண்டாம் பாதியில், பார்க்கும் நம்மை அமைதியாக்கி விடுகின்றன.

முதல் பாதியில் பெரிதாக தெரியாத லாஜிக் குறைகள், திரைக்கதையின் பலவீனத்தால் இரண்டாம் பாதியில் அப்பட்டமாக தெரிகின்றன. உதாரணமாக, ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் கொல்லப்படுவது என்பது சாதாரண விஷயமா? ஆனால், படத்தில் குடும்பத்தினருக்கு தகவல் சொல்வதோடு போலீஸாரின் பணி முடிந்துவிடுகிறது. அதன் பிறகு ரஜினி இஷ்டத்துக்கு ஆட்களை போட்டுத் தள்ளுகிறார. தலையை ஒரே வீச்சில் துண்டிக்கிறார், தொண்டையில் கத்தியை இறக்குகிறார், ஸ்னைப்பர் மூலம் சுட்டுத் தள்ளுகிறார். ஆனால் படத்தில் அதையெல்லாம் போலீஸ் கண்டுகொள்வதே இல்லை.

15 ஆண்டுகளுக்கு முன்பு திகார் சிறையில் ஜெயிலர் ஆக ரஜினி இருந்ததாக காட்டுகிறார்கள். அதற்காக அவருக்கு இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ரவுடி எல்லாம் உதவுவதாக காட்சிகள் வைத்திருப்பது நெருடல். எனினும், அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியும், அதில் ‘டீ-ஏஜிங்’ தொழில்நுட்பம் மூலம் ரஜினியை ‘சிவாஜி’ பட தோற்றத்தில் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே உதவியுள்ளதே தவிர கதைக்கு கிஞ்சித்தும் உதவவில்லை. க்ளைமாக்ஸில் ஆளுக்கு ஒரு ஸ்லோமோஷன் காட்சிகளைத் தவிர, 'காவாலா’ பாடலுக்காக மட்டுமே தமன்னா பயன்படுத்தப்பட்டுள்ளார். சுனில், தமன்னா வரும் காட்சிகள் போரிங் ரகம். அந்தக் காட்சிகளை நீக்கியிருந்தாலே இரண்டாம் பாதி சிறப்பாக வந்திருக்க சாத்தியங்கள் உள்ளன.

ரஜினிக்கு அடுத்து படத்தில் கவனம் ஈர்ப்பவர் வில்லனாக வரும் விநாயகன். ஆசிட் நிரம்பிய தொட்டிகளை ஆட்களை கொல்லும்போதும், ரஜினியின் கட்டளைக்கு இணங்கி ரம்யா கிருஷ்ணனிடம் பிச்சை எடுக்கும் காட்சிகளில் பவ்யம் காட்டியும் அப்ளாஸ் பெறுகிறார். ரம்யா கிருஷ்ணன், மிர்னா ஆகியோருக்கான காட்சிகள் குறைவு. ரஜினியின் பேரனாக வரும் மாஸ்டர் ரித்விக் சிறப்பாக நடித்துள்ளார். வசந்த் ரவி முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாமல் வந்து செல்கிறார். மற்ற நெல்சன் படங்களில் நகைச்சுவை காட்சிகளில் பலம் சேர்க்கும் ரெடின் கிங்ஸ்லி இதில் அடக்கி வாசித்திருக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியில் குறை சொல்ல எதுவும் இல்லை. அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ட்ரெண்டிங். படத்தில் பாடல்களைத் தாண்டி பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

முன்பே குறிப்பிட்டதைப் போல முதல் பாதியில் சிறப்பான காட்சியமைப்புடன், மினி க்ளைமாக்ஸ் போன்ற ஒரு இடைவேளை கொடுத்த ‘ஹைப்’-பால் இரண்டாம் பாதியின் வீரியம் குறைந்துவிடுகிறது. முதல் பாதியின் விறுவிறுப்புக்கு ஏற்ப இரண்டாம் பாதியை சீராக்கி, தேவைற்ற காட்சிகளை கத்தரித்திருந்தால் ரஜினி - நெல்சன் இருவருக்குமே ஒரு நிறைவான ‘கம்பேக்’ ஆக இருந்திருக்கும். ஆனாலும், இருவருக்குமே மிக முக்கியமான கம்பேக்தான் இந்த ‘ஜெயிலர்’.

ஜெயிலர் Review: ரஜினி - நெல்சன் கூட்டணியில் அதகளமும் ‘அமைதி’யும்! | Jailer Movie Review - hindutamil.in

 
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயிலர் – விமர்சனம்!

monishaAug 10, 2023 21:49PM
 
Rajinikanth Jailer Movie Review

ஒரு இளைய தலைமுறை இயக்குனர் உடன் மூத்த நடிகர் இணைகிறார் எனும்போது, ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு உருவாகும். பாரதிராஜா – சிவாஜி கூட்டணி ‘முதல் மரியாதை’யில் இணைந்தது போல, பா.ரஞ்சித் உடன் ‘கபாலி’யில் ரஜினி கைகோர்த்தது போல, சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் கமல் ‘விக்ரம்’ படத்தில் சேர்ந்து பணியாற்றியது போன்றவை அத்தகைய கவனிப்பை உருவாக்கின.

அந்த வரிசையில் இன்னொன்றாக அமைந்தது நெல்சன் – ரஜினியின் ‘ஜெயிலர்’ பட அறிவிப்பு. அவ்வப்போது அப்டேட்களால் சமூகவலைதளங்களை அதிரவைத்த இந்தப் படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. எப்படிப்பட்ட அனுபவத்தை இது ரசிகர்களுக்குத் தருகிறது?

ஒரு தந்தையின் கோபம்

அறுபதைத் தாண்டிய முத்துவேல் (ரஜினிகாந்த்). மனைவி (ரம்யா கிருஷ்ணன்), மகன் அர்ஜுன் (வசந்த் ரவி), மருமகள் (மிர்ணா), பேரன் ரித்து (ரித்விக்) ஆகியோர் மட்டுமே தனது உலகம் என்று இருந்து வருகிறார். ஒருநாள், முத்துவேலின் மகன் அர்ஜுன் காணாமல் போகிறார். சிலை கடத்தல் கும்பல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதுதான், அதற்குக் காரணம் என்று தெரிய வருகிறது.

அந்த கும்பல் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்றும் அரசல்புரசலாகத் தகவல்கள் கிடைக்கின்றன. அது, ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து முத்துவேல் குடும்பத்தை உருக்குலைக்கிறது.

Rajinikanth Jailer Movie Review

மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் பெருங்கோபம் கொள்கிறார் முத்துவேல். அதற்குக் காரணமானவர்களைத் தேடிச் செல்கிறார்.

அப்போது, சிலைக்கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் வர்மன் (விநாயகன்) கும்பலோடு அவர் மோதுகிறார். அதன் தொடர்ச்சியாக, முத்துவேலின் மனைவி, மருமகள், பேரன் உயிருக்கு ஆபத்து உண்டாகிறது. அதிலிருந்து தப்பிக்க முத்துவேல் என்ன செய்தார்? அந்த கும்பலோடு மோதினாரா இல்லையா என்று சொல்கிறது ‘ஜெயிலர்’.

இந்தக் கதையில், வில்லன் கும்பலில் சிலர் முத்துவேலைக் கண்டதும் பயப்படுகின்றனர். அதற்குக் காரணம், அவர் ஜெயிலர் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதே..! முத்துவேலின் குடும்பத்தைச் சுற்றி நகர்ந்திருக்க வேண்டிய இந்தக் கதை, வெறுமனே அவரது வீர, தீர சாகசங்களுக்குள் முடங்கிப் போகிறது. ஜெயிலர் படத்தின் பெரும் பலவீனமே அதுதான்!

இது ரஜினி ராஜ்ஜியம்

‘பேட்ட’ படம் தந்த கார்த்திக் சுப்புராஜ் போல, முழுக்க முழுக்க ரஜினி ரசிகர் என்ற நோக்குடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன். அவர் வடிவமைத்த ஹீரோயிச பில்டப் ஷாட்களுக்கு ஏற்ப, அபாரமாக பின்னணி இசை தந்திருக்கிறார் அனிருத். அது போதாதென்று ‘ஹுக்கும்’, ’ஜுஜுபி’, பாடல்களும் பின்னணியில் ஒலிக்கின்றன. ‘காவாலா’ நம்மைக் காட்சி ரீதியாகவும் சுண்டியிழுக்கிறது.

ரஜினியை எப்படியெல்லாம் அழகுறத் திரையில் காட்டலாம் என்று சிந்தித்துச் செயலாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். கூடவே, நெல்சனின் கதை சொல்லும் பாணிக்குள் வெவ்வேறுபட்ட லொக்கேஷன்களை அடக்கும் முயற்சியையும் செய்திருக்கிறார்.

நிர்மலின் படத்தொகுப்பு வெகு இறுக்கமாக பிரேம்களை நறுக்கியுள்ளது. கிரண் மேற்கொண்டிருக்கும் கலை வடிவமைப்பு, ’படம் முழுக்க ரியல் லோகேஷன் தானோ’ என்ற எண்ண மாயையை உருவாக்குகிறது.

ரசிகர்கள் மகிழும் வகையில், ’ஜெயிலர்’ முழுக்க ரஜினியே நிறைந்திருக்கிறார். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, இது ரஜினி ராஜ்ஜியம். அவரது மனைவியாக வரும் ரம்யா கிருஷ்ணனுக்குப் பெரிதாக வேலையில்லை. இடைவேளையில் சிறிதளவு பயப்படுவதோடு, அவர் தன் பெர்பார்மன்ஸை மூட்டை கட்டி விடுகிறார். மிர்ணாவின் நிலைமையும் அதுவே. ஓரளவு பரவாயில்லை என்பது போல, இரண்டொரு காட்சிகளில் முகம் காட்டியிருக்கிறார் யூடியூப் பிரபலம் ரித்விக்.

Rajinikanth Jailer Movie Review

ரஜினியின் மகனாக வரும் வசந்த் ரவிக்குக் கதையில் முக்கியத்துவம் அதிகம் என்றாலும், அதற்கேற்ற காட்சிகள் இல்லை. யோகிபாபுவை விட, சைக்காலஜிஸ்டாக வரும் விடிவி கணேஷ் நம்மைச் சிரிக்க வைக்கிறார். பின்பாதியில் தெலுங்கு நடிகர் சுனில், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சமாய் வாய் விட்டுச் சிரிக்க வைக்கின்றன.

வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயகன், வெகு அலட்சியமாக அப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். அதேநேரத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் ஆரம்ப, இறுதிக் காட்சிகள் அற்புதமாகத் திரையில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் போதாதென்று ஆடுகளம் கிஷோர், மாகரந்த் தேஷ்பாண்டே, ஜாபர் சாதிக், கராத்தே கார்த்தி, மாரிமுத்து உட்படப் பெரும் பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

இயக்குனரின் பார்வை

இந்தக் கதைக்கான திரைக்கதையை எந்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதில் ரொம்பவே குழம்பியிருக்கிறார் இயக்குனர் நெல்சன். மிக முக்கியமாக, ரஜினியின் முத்துவேல் பாத்திரத்தை எப்படிக் காட்ட வேண்டும் என்பதிலும் தடுமாறியிருக்கிறார். ஏன் அந்த பாத்திரம் பயத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்குத் திரைக்கதையில் எந்த விளக்கமும் இல்லை. கேங்ஸ்டர்கள் அவரோடு இணக்கம் பாராட்டுவதற்குக் காரணம் பயமா அல்லது வேறேதேனும் பின்னணியா என்பதும் சொல்லப்படவில்லை. ஆனால், ‘நோ லாஜிக் ஒன்லி மேஜிக்’ என்று ஆக்‌ஷன் ‘பொறி’ பறப்பதில் மெனக்கெட்டிருக்கிறார் நெல்சன்.

மேலோட்டமாகப் பார்த்தால், ’விக்ரம்’ படம் போன்றே இதன் போக்கும் அமைந்திருக்கும். ஆனால், தன் மகனுக்காகவோ, குடும்பத்திற்காகவோ ரஜினி பதைபதைக்கும் காட்சிகள் இதில் இல்லாதது பெருங்குறை. பிளாஷ்பேக் காட்சிகளில், ‘ஊர்க்காவலன்’ படத்திற்கு முன்பிருந்த ஹேர்ஸ்டைலில் ரஜினி தோன்றியிருப்பது சிறப்பு. ஆனால், அந்தக் காட்சி மிகச்சில நிமிடங்களே இடம்பெற்றுள்ளது.

Rajinikanth Jailer Movie Review

இந்த படத்தில் ஆங்காங்கே வந்துபோகும் வன்முறைக் காட்சிகள் நம்மை பயமுறுத்துகின்றன. அதற்குச் சில ரசிகர்கள் தரும் வரவேற்பு, அந்த பயத்தை இன்னும் அதிகமாக்குகிறது. நிச்சயமாக, குடும்பத்தோடு வந்து ரஜினி படம் பார்க்க வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு அது இடையூறாகத்தான் அமையும். ஒருவேளை அது வரவேற்பைப் பெறுவது நம் சமூகத்திற்குச் சாபக்கேடாக அமையும்.

நெல்சனின் முந்தைய படங்கள் மூன்றையும் முதல் காட்சி பார்த்த ஒவ்வொருவருக்கும், ‘இது பெரிய வெற்றியைப் பெறுமா’ என்ற கேள்வி நிச்சயம் எழுந்திருக்கும். ‘ஜெயிலர்’ படத்தில் அதற்கு வேலையில்லை. அதேநேரத்தில், ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வரும் அளவுக்கு இதில் சிலாகிக்கும் அம்சங்களும் பெரிதாக இல்லை. அதனை மனதில் கொண்டு, திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். மற்றபடி, ஒரு சூப்பர்ஸ்டார் படத்தை இன்னும் சில ஸ்டார்களின் கௌரவ தலைகாட்டலுடன் ரசிக்க வேண்டுமென்பவர்களுக்கான ஒரு ஆக்‌ஷன் சித்திரம் இது என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், ஜெயிலர் திரைப்படம் ரஜினி தந்த ஆக்‌ஷன் பட்டாசு. அதில் ‘ஹீரோயிசம்’ தவிர வேறெதற்கும் இடமில்லை.

உதய் பாடகலிங்கம்

 

 

https://minnambalam.com/cinema/rajinikanth-jailer-movie-review-best-climax-minnambalam-cinema-news/

Theatre இல் பார்க்கும் எண்ணம் இல்லை. OTT  யில் வரும், வந்த பின் பார்க்கலாம் என இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

Theatre இல் பார்க்கும் எண்ணம் இல்லை

அதுவும் நல்லதுதான். ஒரு விமர்சனம் இப்படி இருந்தது, “வழக்கமாக தியேட்டரில் இந்த மாதிரியான படத்தைப் பார்ப்பவர்கள் இருக்கையிலேயே தூங்கிப் போவார்கள். படம் முடிந்தபின் அவர்களை தண்ணி அடித்துத்தான் எழுப்ப வேண்டும். இந்தப் படத்தைப் பார்ப்பவன் கோமாவுக்குப் போய்விடுவான். பிறகு எப்படி எழுப்புவது?”

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியை எனியும் கீரோவாகப் பார்க்க முடியாது. கிழவராகக் காட்டிற படம் வந்தால் ஒழிய.. படம் பிளாப்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.