Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்ஸ் – இந்திய வம்சாவளி டாக்டர் உதவியால் சிக்கினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்ஸ் – இந்திய வம்சாவளி டாக்டர் உதவியால் சிக்கினார்

 

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

மருத்துவமனையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை தொடங்கினர்.

அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்ஸ் , சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

41.jpg

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரைப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அரசு தரப்பு வக்கீல் கூறும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு லூசி லெட்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கப்பட்ட போது லூசி லெட்பி, பணியில் இருந்ததை கவனித்த சக ஊழியர்கள் கவலைகளை தெரிவித்தனர் என வாதிட்டார்.

ஆனால் இதை லூசி லெட்பி மறுத்தார். அவரது தரப்பு வக்கீல் கூறும்போது, லூசி ஒரு அப்பாவி. குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

7 குழந்தைகளை கொன்ற நர்சு லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் உதவி உள்ளார். பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த ஆஸ்பத்திரியில் குழந்தை நல டாக்டராக ரவி ஜெயராம் என்பவர் பணியாற்றினார். இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம், நர்ஸ் லூசி லெட்பி மீது சந்தேகத்தை எழுப்பி எச்சரிக்கையை தெரிவித்தார்.

அதன்பின் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலரும் சந்தேகங்களை கூறினர். இதையடுத்து நர்ஸ் லூசி லெட்பி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இதுகுறித்து டாக்டர் ரவி ஜெயராம் கூறும் போது, 2015 ஆம் ஆண்டு மூன்று குழந்தைகள் இறந்த பிறகு முதலில் கவலைகளை எழுப்பினோம். மேலும் பல குழந்தைகள் இறந்ததால் நர்ஸ் லூசி லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

லூசி லெட்பி பற்றிய எச்சரிக்கைகளுக்கு காவல்துறை முன் கூட்டியே செவி சாய்த்து இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்போது 4 அல்லது 5 குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருக்கக் கூடும் என நான் உண்மையாக நம்புகிறேன்” என்றார்.

லூசி லெட்பி, இங்கிலாந்து நாட்டின் மிக குரூரமான தொடர் சிசு கொலையாளி என்ற பெயரை பெற்றுள்ளார்.

https://thinakkural.lk/article/269327

  • கருத்துக்கள உறவுகள்

லூசி லெட்பி: செவிலியரான இவர் ஒரே ஆண்டில் 7 குழந்தைகளை கொன்றது ஏன்? சிக்கியது எப்படி?

7 குழந்தைகளைக் கொன்ற செவிலியர்
 
படக்குறிப்பு,

செவிலியர் லூசி லெட்பி

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜூடித் மோரிட்ஸ், ஜொனாதன் காஃபி & மைக்கேல் புக்கானன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இங்கிலாந்தின் செஷயர் நகரில் உள்ள 'கவுன்டெஸ் ஆஃப் செஸ்டர்' மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏழு குழந்தைகளைக் கொன்றது மற்றும் ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்றது ஆகியவற்றில் லெட்பி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார்.

முதல் ஐந்து கொலைகள் அனைத்தும் ஜூன் மற்றும் அக்டோபர் 2015 க்கு இடையில் நடந்தன. இதற்கிடையே, தொடர்ந்து அவரைப் பற்றிய எச்சரிக்கைகள் எழுந்த போதிலும், 2016 ஜுன் வரை இந்த கொலைகள் தொடர்ந்தன.

பிபிசி பனோரமா மற்றும் பிபிசி நியூஸ் குழுவினர், லெட்பியால் எப்படி இவ்வளவு குழந்தைகளை கொலை செய்ய அல்லது காயப்படுத்த முடிந்தது என்று விசாரித்து வருகின்றனர்.

இந்த குழுவின் முன்னணி அதிகாரியிடம் நாங்கள் பேசினோம். அவர் முதலில் லெட்பி பற்றிய கவலைகளை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசுகையில், மருத்துவமனை ஆவணங்களையும் ஆய்வு செய்ததாகவும், இந்த விசாரணை, மருத்துவமனையின் தோல்விகளை அம்பலப்படுத்துகிறது என்பது மட்டுமல்லாமல், இந்த உயிரிழப்புகளை மருத்துவமனை எப்படிக் கையாண்டது என்பது குறித்த தீவிர கேள்விகளை எழுப்புகிறது என்றும் கூறினார்.

கடைசி இரண்டு கொலைகளுக்குப் பிறகு ஜூன் 2016 இல் லெட்பியை பணியில் இருந்து நீக்குமாறு கோரியதாகக் கூறும் டாக்டர் பிரேரே, அதையும் மருத்துவமனை நிர்வாகம் முதலில் மறுத்தது என்கிறார்.

செவிலியர் எப்படி பிடிபட்டார்?
 
படக்குறிப்பு,

குழந்தைகள் நலப்பிரிவின் முன்னணி மருத்துவரான டாக்டர் பிரேரே, அக்டோபர் 2015 இல் லெட்பியைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பினார்.

பிபிசி விசாரணையில் மேலும் தெரியவந்த தகவல்கள்

லெட்பியின் மீது புகார் தெரிவித்தவர்களை அவரிடம் மன்னிப்பு கேட்கும் படி மருத்துவமனையின் உயர் மேலாளர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மீது புகார்கள் அல்லது குற்றச்சாட்டுகளை எழுப்புவதை உடனே நிறுத்துமாறும் அறிவுறுத்தினார்.

மருத்துவமனையின் இரண்டு பணியாளர்கள் லெட்பி குழந்தைகளைக் கொல்வதாக சந்தேகப்பட்ட போதிலும், லெட்பியுடன் பேசி மத்தியஸ்தம் செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இறுதியாக அவர் மீதான புகார்களைத் தொடர்ந்து பணிமாற்றம் செய்யப்பட்டபோது, ஆபத்து மற்றும் நோயாளி பாதுகாப்பு அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார். அங்கு அவர் குழந்தைகள் பிரிவில் இருந்த முக்கிய ஆவணங்களைப் பெறும் வசதிகளையும் பெற்றிருந்தார். மேலும், அவரை விசாரிக்கவேண்டிய இடத்தில் இருந்த மருத்துவமனையின் உயர் அதிகாரிகளுடன் மிக நெருக்கமாகவும் இருந்தார்.

குழந்தைகளின் உயிரிழப்புக்கள் சரியான முறையில் பதிவாகவில்லை. இதன் பொருள் என்னவென்றால், உண்மையில் எத்தனை குழந்தைகள் உயிரிழந்த என்ற விவரங்களை இங்கிலாந்து அரசின் மருத்துவத் துறையினர் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தற்போது லூசி லெட்பிக்குப் பின்னர் அவருடைய பதவிக்கு நியமிக்கப்பட்ட புதிய மேலாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஏழு கொலைக் குற்றச்சாட்டுகளுடன், மருத்துவமனையில் லெட்பி பணியில் இருந்த போது மேலும் ஆறு குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் லெட்பி இருந்தார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

லூசி லெட்பி லிவர்பூல் மகளிர் மருத்துவமனையில் பணிபுரியும் போதும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
7 குழந்தைகளைக் கொன்ற செவிலியர்

ஜூன் 2015 க்கு முன்பு, செஸ்டர் மருத்துவமனையின் கவுன்டெஸ் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உயிரிழந்தன. ஆனால் 2015ஆம் ஆண்டு கோடை காலத்தில் அசாதாரணமான உயிரிழப்பு ஒன்று நடந்தது.

அந்த மாதத்தில் மட்டும் இரண்டு வார இடைவெளியில் மூன்று குழந்தைகள் உயிரிழந்தன. இந்த உயிரிழப்புகள் எதிர்பாராதவை. குழந்தைகள் பிரிவின் முன்னணி மருத்துவ அதிகாரியான டாக்டர் ஸ்டீபன் பிரேரே, யூனிட் மேலாளர் எரியன் பவல் மற்றும் மருத்துவமனையின் நர்சிங் இயக்குநர் அலிசன் கெல்லி ஆகியோருடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

"நாங்கள் முடிந்தவரை முழுமையான தகவல்களுடன் அந்த சந்திப்பில் பங்கேற்றோம்," என்று டாக்டர் பிரேரே கூறுகிறார். மூன்று உயிரிழப்புகளும் லூசி லெட்பி பணியில் இருந்த போது தான் ஏற்பட்டதாக ஒரு விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

மூன்று மரணங்களுக்கும் "பொதுவான காரணம் எதுவும் இல்லை" என்று தோன்றினாலும், டாக்டர் பிரேரே உட்பட யாரும் அந்த உயிரிழப்புகள் குறித்து எந்த சந்தேகத்தையும் வெளிப்படுத்தவில்லை.

ஆனால் அக்டோபர் 2015 இல், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அப்போது மேலும் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. லூசி லெட்பி தான் அப்போதும் பணியில் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, லூசி லெட்பி தான் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்திருக்க வேண்டும் என டாக்டர் பிரேரே சந்தேகப்பட்டார். இதனால், அவர் மீண்டும் குழந்தைகள் பிரிவின் மேலாளர் எரியன் பவலைத் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் டாக்டர் பிரேரேவின் கவலைகளைப் புரிந்துகொள்ளவில்லை.

7 குழந்தைகளைக் கொன்ற செவிலியர்

அக்டோபர் 2015ல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், லூசி லெட்பிக்கும், குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கும் இடையிலான தொடர்பை "துரதிர்ஷ்டவசமானது" என்று விவரித்தார். மேலும், "உயிரிழப்புக்கான ஒவ்வொரு காரணமும் வேறுபட்டது," என்றும், இந்த மரணங்களுடன் லூசி லெட்பியின் தொடர்பு ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உயிரிழப்புகள் குறித்து மருத்துவமனையின் மூத்த அதிகாரிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கிடையே, அதே மாதத்தில் - அக்டோபர் 2015 இல் - லூசி லெட்பி பற்றிய தனது கவலைகள் செவிலியர் பிரிவு இயக்குனர் அலிசன் கெல்லியிடம் தெரிவிக்கப்பட்டதாக டாக்டர் பிரேரே கூறுகிறார். ஆனால் அது பற்றி அவரிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

டாக்டர் பிரேரேயின் சக பணியாளர்களும் லூசி லெட்பியைப் பற்றி கவலைப்பட்டனர் என்பதோடல்லாமல் சந்தேகங்களையும் எழுப்பினர். குழந்தைகளின் உயிரிழப்புகள் முற்றிலும் எதிர்பாராத மரணங்கள் அல்ல என்றும் அவர்கள் உறுதியாக நம்பினர். மற்ற குழந்தைகள் ஆபத்தான பாதிப்புகளுடன் இருந்ததால், அவர்களுக்கு அவசரகால உயிர் காக்கும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் லூசி லெட்பி பணியில் தான் இருந்தார்.

பிப்ரவரி 2016 இல், மற்றொரு மருத்துவப் பணியாளரான டாக்டர் ரவி ஜெயராம், பேபி கே என்று அழைக்கப்பட்ட மற்றொரு குழந்தை மூச்சு விட முடியாமல் தவித்து இறுதி மூச்சில் தவித்ததை லூசி லெட்பி நின்று பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதாகத் தெரிவிக்கிறார்.

இதற்கிடையே, டாக்டர் பிரேரே, அலிசன் கெல்லி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் இயன் ஹார்வி ஆகியோரைத் தொடர்புகொண்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துமாறு கோரினார். மார்ச் மாத தொடக்கத்தில், அவர் ஐரியன் பாவெலுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், "லூசியைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

செவிலியர் எப்படி பிடிபட்டார்?

இதற்கிடையே, அடுத்தடுத்து மூன்று மாதங்கள் கடந்து சென்றன. இந்த காலகட்டத்தில் மேலும் இரண்டு குழந்தைகள் கிட்டத்தட்ட இறந்துவிட்டன. அதற்கு முன் - அந்த ஆண்டு மே மாதம் - டாக்டர் பிரேரி ஏற்கெனவே கேட்டுக்கொண்டிருந்தபடி, மருத்துவமனையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பில் பங்கேற்றார். "அந்த கூட்டத்தில் எனது கவலைகள் குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், அந்த சந்திப்பு கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் அவருடைய சந்தேகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது. ஹார்வி, கெல்லி ஆகியோரிடம் லூசி லெட்பி பற்றிய தனது கவலைகளை விளக்கியபோது அவர்கள் எந்தவித ஆர்வமும் இல்லாமல் அதைக் கேட்டுக்கொண்டிருந்ததாக டாக்டர் பிரேரி கூறினார். இதையடுத்து லூசி லெட்பி தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டார்.

ஜூன் 2016ன் தொடக்கத்தில், மற்றொரு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர், மாத இறுதியில், குறைப்பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் 24 மணி நேரத்திற்குள் எதிர்பாராத விதமாக உயிரிழந்தன. அப்போதும், லூசி லெட்பி பணியில் இருந்தார்.

அந்த குழந்தைள் உயிரிழந்த போது, டாக்டர் பிரேரே கடும் அதிர்ச்சியடைந்தார். அப்போது நடைபெற்ற ஒரு ஊழியர்களுக்கான கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

அந்த கூட்டத்தில் சிலர் லூசி லெட்பியை சந்தேகத்துடன் பார்த்த போதிலும், அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதற்கு அடுத்த நாள் பணிக்கு வருவது பற்றியே பேசினார். அதில் அவர் மிகுந்த நம்பிக்கையுடனும் இருந்தார்.

ஒன்றாகப் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது டாக்டர் பிரேரி மற்றும் அவரது சக பணியாளர்களுக்கு, அவர்களுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. அன்று மாலை, பொறுப்பில் இருந்த நிர்வாகி கரேன் ரீஸை அழைத்து, லூசி லெட்பியை பணியில் இருந்து நீக்குமாறு கோரியதாக டாக்டர் பிரேரே கூறினார். ஆனால், அவரது குற்றச்சாட்டை லெட்பி ஏற்கவில்லை.

ஏழு குழந்தை நல மருத்துவர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்த முடிவை எடுக்கிறாரா என்று தனக்கு சவால் விட்டதாக டாக்டர் ப்ரேரி கூறுகிறார் - மேலும் அடுத்த நாள் மற்ற குழந்தைகளுக்கு நடக்கக்கூடிய எதற்கும் அவள் பொறுப்பேற்கலாமா என்று கேட்டார். திருமதி ரீஸ் "ஆம்" என்று பதிலளித்ததாக அவர் கூறுகிறார்.

அடுத்த நாள், பேபி க்யூ என அறியப்பட்ட மற்றொரு குழந்தை, லெட்பி பணியில் இருந்தபோது, கிட்டத்தட்ட இறந்து விட்டது. ஆனால், லெட்பி தொடர்ந்து மேலும் மூன்று நாட்கள் அதே பிரிவில் பணி புரிந்தார். இறுதியாக அவர் குழந்தைகள் பிரிவில் இருந்து நீக்கப்பட்டார் - அதாவது முதல் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்னால்.

அவர் அங்கிருந்து நீக்கப்பட்ட பின்னர் சந்தேகத்திற்கிடமான குழந்தை மரணங்கள் சரிந்தன.

செவிலியர் எப்படி பிடிபட்டார்?

இருப்பினும் லெட்பி அப்போதும் இடைநீக்கம் செய்யப்படவில்லை.

மாறாக, அவர் மருத்துவமனையின் அவசர ஆபத்து மற்றும் நோயாளி பாதுகாப்பு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தொடர்பான முக்கியமான ஆவணங்களை அங்கு அவர் எளிதாக அணுகியதாக நம்பப்படுகிறது. அவரை விசாரிப்பதே வேலையாக இருந்த மருத்துவமனையின் சில மூத்த அதிகாரிகளையும் அவர் அணுகியிருந்தார்.

29 ஜூன் 2016 அன்று, மருத்துவமனை பணியாளர்களில் ஒருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்: "நம்மை நாமே வெளியாட்களின் விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டுமா?" என அந்த மின்னஞ்சலில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், "வெளி ஏஜென்சிகளிடமிருந்து எங்களுக்கு உதவி தேவை என்று நான் நம்புகிறேன்," என்று அவர் எழுதினார். "மேலும் நம் அனைவரையும் விசாரிக்கக் கூடிய ஒரே நிறுவனம், காவல்துறை என்று நான் நம்புகிறேன்," என்றும் குறிப்பிட்டிருந்தார்.

செவிலியர் எப்படி பிடிபட்டார்?

ஆனால் மருத்துவமனையின் உயரதிகாரிகள் வேறுவிதமாக நினைத்தனர். அந்த மின்னஞ்சலுக்கு பதில் அளித்தபோது, "நடவடிக்கை எடுக்கப்படுகிறது," என்று மருத்துவ இயக்குனர் இயன் ஹார்வி கூறியிருந்தார். "எல்லா மின்னஞ்சல்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றன."

இரண்டு நாட்களுக்குப் பிறகு, மருத்துவமனைப் பணியாளர்கள் மூத்த நிர்வாகிகளுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் சட்ட சேவைகளின் தலைவர் ஸ்டீபன் கிராஸ், காவல்துறையை அழைப்பது மருத்துவமனைக்கு பேரழிவாக இருக்கும் என்றும், பிறந்த குழந்தைகள் பிரிவை ஒரு குற்றம் நிகழும் இடமாக மாற்றும் என்றும் எச்சரித்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

போலிஸாரிடம் செல்வதற்குப் பதிலாக, குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவக் கல்லூரியின் (RCPCH) விசாரணை மூலம் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் என்ன நடந்தது என்பது குறித்து அளவிட முடியும் என ஆலோசனை வழங்கினார்.

செவிலியர் எப்படி பிடிபட்டார்?

செப்டம்பர் 2016 இன் தொடக்கத்தில், ராயல் கல்லூரியின் ஒரு குழு அந்த மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவ அதிகாரிகளைச் சந்தித்து விசாரணையைத் தொடங்கியது.

நவம்பர் 2016 இல் RCPCH தனது விசாரணையை நிறைவு செய்து பரிந்துரைகளை அளித்தது. அந்த பரிந்துரை இப்படியிருந்தது: "பிறந்த குழந்தைகள் எதிர்பாராமல் உயிரிழந்தது குறித்து ஒவ்வொரு இறப்பு பற்றியும் முழுமையான வெளிப்புற சுயாதீனமான மதிப்பாய்வு தேவை."

அக்டோபர் 2016 இல், இயன் ஹார்வி, லண்டனில் உள்ள குறைமாத குழந்தை நிபுணரான டாக்டர் ஜேன் ஹாவ்டனையும் தொடர்பு கொண்டு, குழந்தைகள் பிரிவில் ஏன் அந்தக் குழந்தைகள் உயிரிழந்தன என்பது குறித்து மதிப்பாய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இதன் அடிப்படையில் கிடைத்த முடிவு மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. டாக்டர் ஹாவ்டனின் கூற்றுப்படி, அவரது அறிக்கை, மருத்துவர்கள் ஒன்றிணைந்து ஆலோசிப்பதன் மூலமும், அதில் கிடைக்கும் முடிவுகளைத் தெரிவிக்கும் நோக்கத்துடனும் இருந்தது, மேலும், உயிரிழந்த குழந்தைகளின் உடற்கூறு ஆய்வுகளைப் பெற்றோ, அல்லது நீதிமன்றத்திலோ உறுதிசெய்யப்படும் தேவைகள் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இது மருத்துவப் பணியாளர்கள் விரும்பிய முழுமையான மதிப்பாய்வு அல்ல - அல்லது RCPCH பரிந்துரைத்த முழுமையான வெளிப்புற சுயாதீன மதிப்பாய்வும் அல்ல. ஆனால் டாக்டர் ஹாவ்டனின் குறைந்தபட்ச வழக்கு-குறிப்பு அறிக்கை கூட நான்கு குழந்தை இறப்புகளை தடயவியல் விசாரணைக்கு பரிந்துரைத்தது. இருப்பினும் அது நடக்கவில்லை.

 
செவிலியர் எப்படி பிடிபட்டார்?

பட மூலாதாரம்,CHESTER STANDARD

 
படக்குறிப்பு,

போலீஸை அழைப்பதற்குப் பதிலாக, இயன் ஹார்வி ராயல் காலேஜ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் குழந்தைப் பிறப்பு பிரிவை விசாரணை செய்யக் கோரலாம் எனக்கருத்து தெரிவித்தார்.

2017 இன் முற்பகுதி: இன்னும் போலீஸ் விசாரணை நடக்கவில்லை

ஜனவரி 2017 இன் தொடக்கத்தில், மருத்துவமனையின் நிர்வாகக் குழு கூடியபோது, குழந்தைகளின் உயிரிழப்பு குறித்த இரண்டு மதிப்பாய்வுகளை ஹார்வி சமர்பித்தார். சில குழந்தைகளின் உயிரிழப்புகளைப் பற்றி மேலும் விசாரணை செய்ய இருவரும் பரிந்துரைத்தனர். ஆனால், இன்னும் அந்த செய்தி நிர்வாகக் குழு உறுப்பினர்களைச் சென்றடையவில்லை.

அந்தக் கூட்டம் குறித்த பதிவுகளில், குழந்தைகள் நலப்பிரிவின் பிரச்னைகள், அதில் நிர்வாகம் தலையிட்ட வேகம், மேற்கொண்ட விசாரணைகள் குறித்து அந்த மதிப்பாய்வுகள் கூறியதாக ஹார்வி தெரிவித்ததாகக் கூறிப்பிடப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்குப் பிறகு, 2017 ஜனவரியில் குழந்தைகள் பிரிவைச் சேர்ந்த 7 பணியாளர்கள், ஹார்வி மற்றும் அப்பிரிவின் தலைமை நிர்வாகி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது.

டாக்டர் பிரேரேவின் கூற்றுப்படி, குழந்தைகள் நலப்பிரிவின் தலைமை நிர்வாகி லெட்பி மற்றும் அவரது தந்தையுடன் நெருக்கமாக அதிக நேரம் செலவிட்டதாகவும், லெட்பியின் தந்தையிடம், அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை எனக் கூறியதாகவும் தெரியவருகிறது.

மேலும், லெட்பி மீது குற்றம் சுமத்தியவர்கள் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், பணியாளர்கள் வரம்பு மீறிச் செயல்படக் கூடாது என்றும் மீறினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கண்டிப்பதாக உத்தரவு பிறப்பித்ததாகவும் டாக்டர் பிரேரே கூறுகிறார்.

செவிலியர் எப்படி பிடிபட்டார்?

மேலும் பேசிய டாக்டர் பிரேரே, "குழந்தைகளின் உயிரிழப்புகள் குறித்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்கக்கூடாது என்றும், 'அந்த விவகாரம் முடித்துவைக்கப்பட்டது என்ற நீங்கள் நினைத்தால் அது தான் சரி' என்றும் தெரிவித்தனர்" என்று கூறுகிறார்.

மார்ச் 2017ல் இரண்டு மருத்துவப் பணியாளர்கள் லெட்பியுடன் சமரசம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டதாகவும், ஒரு மருத்துவர் லெட்பியுடன் அமர்ந்து அவருடைய சமாதானத்தைக் கேட்ட போதிலும் டாக்டர் பிரேரே அவ்வாறு செய்யவில்லை என்றும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் மருத்துவப் பணியாளர்கள் பின்வாங்கவில்லை. லெட்பியிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின், குழந்தைகள் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் படி மருத்துவமனை நிர்வாகம் போலீசாரிடம் கேட்டுக்கொண்டது. மருத்துவமனை நிர்வாகம் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க மருத்துவப் பணியாளர்களின் வலியுறுத்தலே காரணமாக அமைந்தது.

இறுதியாக டாக்டர் பிரேரேவும், அவருடைய சக மருத்துவரும் செஷயர் காவலர்களுடன் அமர்ந்து அவர்களுக்குத் தெரிந்த விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது காவல் துறையினர் நடந்த விவரங்களைக் கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.

அதற்கடுத்த நாள், செஷயர் காவல் நிலையம் குழந்தைகளின் சந்தேக உயிரிழப்பு தொடர்பான குற்றவியல் விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணைக்கு ஆபரேசன் ஹம்மிங்பேர்ட் எனப் பெயர் சூட்டப்பட்டது.

அப்போதும் லெட்பி கைது செய்யப்படவில்லை. அந்த மருத்துவமனையில் தான் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். இருப்பினும் காவல் துறையினரின் விசாரணை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் பிரேரே காவல் துறைக்கு விசாரணையில் பெரிதும் உதவினார்.

ஒரு நாள் மாலையில் மருத்துவமனையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்கள் சிலவற்றைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, அவரது பிரிவில் ஒரு குழந்தைக்கு ரத்த சோதனை நடத்தப்பட்டது குறித்த விவரங்களைக் கண்டார். அதில், குழந்தையின் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான இன்சுலின் இருந்தது பதிவாகியிருந்ததையும் அவர் கண்டுபிடித்தார்.

அப்போது ஒரு முக்கியமான ரத்தப் பரிசோதனை குறித்த விவரங்கள் காணாமல் போயிருந்தன.

உடலில் இன்சுலின் உற்பத்தி ஆகும் போது, அதற்கு உதவியாக சி-பெப்டைட் என்ற ஒரு வேதிப்பொருளும் உற்பத்தியாகிறது. டாக்டர் பிரேரே ஆய்வு செய்த அந்த ரத்த பரிசோதனையில் இந்த சி-பெட்டேட்டின் அளவு பூஜ்ஜியமாக இருந்தது. அது தான் குழந்தையின் ரத்தத்தில் இருந்த இன்சுலின் உடலில் தாமாகச் சுரந்தது அல்ல என்பதையும், வெளியில் இருந்து குழந்தையின் உடலுக்குள் இன்சுலின் ஏற்றப்பட்டிருந்தது என்பதையும் காட்டிக்கொடுத்தது.

"அது என்னை மிகவும் கொதிப்படையச் செய்தது," என்கிறார் டாக்டர் பிரேரே. "குழந்தையின் உடலுக்குள் அதீத அளவுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டு, அது விஷமாக மாறியிருந்தது தெளிவாகப் புரிந்தது."

 
செவிலியர் எப்படி பிடிபட்டார்?
 
படக்குறிப்பு,

லெட்பியின் கைதுக்குப் பிறகு மருத்துவ இயக்குநரான டாக்டர் சூசன் கில்பி, மருத்துவமனையின் மருத்துவமனை ஆவணங்கள் மூலம் பல்வேறு உண்மைகள் தெரியவந்ததாகக் கூறினார்.

சில மாதங்கள் கழித்து, இறுதியாக லெட்பி ஒரு வழியாகக் கைது செய்யப்பட்டார். அதே நேரம் மருத்துவமனையிலிருந்தும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், குழந்தை உயிரிழப்பு குறித்து டாக்டர் பிரேரே சந்தேகம் கிளப்பிய பின் மூன்று ஆண்டுகள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

லெட்பி கைது செய்யப்பட்டபின் ஒரு மாதம் கழித்து அங்கே பணியைத் தொடங்கிய புதிய மருத்துவ இயக்குநரும் துணைத் தலைமை நிர்வாகியுமான டாக்டர் சூசன் கில்பிக்கு, பல உண்மைகள் தெரியவந்ததால் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

தனக்கு முன்பாகப் பணியாற்றிய ஹார்வி, குழந்தைகள் பிரிவின் பணியாளர்களுக்கு எதிராக பொது மருத்துவ கவுன்சில், மருத்துவரின் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்ததாக அவர் கூறினாலும், ஹார்வி இதை மறுக்கிறார்.

இருப்பினும், அந்த அலுவலகத்தில் இருந்த ஏராளமான ஆவணங்களில் ஏதோ ஒரு இடத்தில் பிரச்சினை இருந்ததைக் கண்டுபிடித்தார். நியோனேட்ஸ் என்ற பெயருடன் இருந்த ஆவணங்களில், 2015-ம் ஆண்டு மருத்துவமனையின் நிர்வாகக்குழு ஒன்று முதல் மூன்று குழந்தைகளின் இறப்பு குறித்து மருத்துவமனைக்கு வெளியில் உள்ள அமைப்புகள் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டதையும் அவர் கண்டுபிடித்தார். ஆனால், அது எப்போதுமே நடக்கவில்லை.

மேலும், குழந்தைகளின் உயிரிழப்புகள் குறித்து உண்மையான விவரங்களைப் பதிவு செய்யவும் மருத்துவமனை நிர்வாகம் தவறியிருந்தது. அதனால் அதிக உயிரிழப்புகள் குறித்து தேசிய மருத்துவ கவுன்சிலுக்குத் தகவல் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. 2016-ம் ஆண்டு வரை அந்த மருத்துவமனையில் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்த தகவல் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவுக்குத் தெரியவில்லை என்பதும் தெரியவந்தது.

மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையின் உதவியை நாடவில்லை என்பதற்கு அந்த மருத்துவமனையின் நலன்களைக் காப்பதில் காட்டப்பட்ட அக்கறை தான் காரணம் என்றும் டாக்டர் கில்பி கூறுகிறார். "மருத்துவமனையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தனர்."

2018ம் ஆண்டிறுதியில், டோனி சேம்பர்ஸ் பதவி விலகிய பின்னர் டாக்டர் கில்பி தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டு, அவர் 2022ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். அதன் பின் அவரை எந்த வித முகாந்திரமும் இல்லாமல் மருத்துவமனை அறக்கட்டளை பணிநீக்கம் செய்ததாக வழக்கு தொடுத்துள்ளார்.

 
செவிலியர் எப்படி பிடிபட்டார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

செஷ்டர் மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவில் இறப்பு விகிதம் இப்போது குறைந்துள்ளது.

லெட்பி கைது செய்யப்பட்டவரை, மருத்துவமனை நிர்வாகிகள் பல விஷயங்களை ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவர்களாகவே பிரச்னைகள் குறித்த முடிவுகளை எட்டியதாகவும் டாகடர் பிரேரே சொல்கிறார்.

"பணியாளர்களின் கருத்துகளை மருத்துவமனை நிர்வாகம் மதிக்கவில்லை. ஜனவரி 2017 முதல் பணியாளர்களை மிரட்டும் தொனியில் நிர்வாகம் செயல்பட்டுள்ளது. சில நேரங்களில் பணியாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்," என்று அவர் பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தார். "பாதுகாப்பான கலாச்சாரம் மற்றும் பணியாளர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய இடத்தில், நான் பணிபுரியும் மருத்துவமனை எதிர்மறையாகச் செயல்பட்டது என்ற எண்ணம் என்னைப் பாதித்தது."

ஜுன் 2015 மற்றும் ஜுன் 2016ம் ஆண்டுகளுக்கு இடையே 7 கொலைகளைச் செய்ததாகவும், 15 கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் லெட்பியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 7 கொலைகளிலும், 7 கொலை முயற்சிகளிலும் அவர் குற்றவாளி என்றும் நிரூபிக்கப்பட்டது.

கே மற்றும் க்யூ ஆகிய குழந்தைகளின் மரணங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலும், 6 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளிலும் ஒரு தீர்மானத்தை எட்ட ஜுரியால் முடியவில்லை.

7 குழந்தைகளைக் கொன்ற செவிலியர்

ஒரு அறிக்கையில், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டோனி சேம்பர்ஸ் இப்படிக் கூறினார்: "எனது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் இந்த மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் அந்தக் குழந்தைகளின் குடும்பங்களுடன் உள்ளன. இந்தக் கடினமான நேரத்தில், இது போன்ற கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அனைத்து குடும்பங்களிடமும் நான் உண்மையிலேயே வருத்தம் தெரிவிக்கிறேன்."

"குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் இழைக்கப்பட்ட குற்றங்கள் பயங்கரமானவை என்பது மட்டுமல்ல, வெளிச்சத்திற்கு வந்த செய்திகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். தலைமை நிர்வாகி என்ற முறையில், குழந்தைகள் பிரிவின் பாதுகாப்புடன், நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வில் எனது முழு கவனமும் இருந்தது. நான் திறந்த மனதுடையவராகவும் அனைவரின் கவலைகளையும் உள்ளடக்கியவராகவும் இருந்தேன்."

"இனிமேல் நடக்கவிருக்கும் எந்தவொரு விசாரணைக்கும் நான் முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஒத்துழைப்பேன்” என்று அவர் மேலும் கூறினார்.

இயன் ஹார்வி ஒரு அறிக்கையில் இப்படிக் கூறினார்: "இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் அந்தக் குழந்தைகளின் குடும்பத்தினருடன் உள்ளன. கற்பனை செய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்த அவர்களின் அனைத்து துன்பங்களுக்கும் நான் வருந்துகிறேன்."

 
7 குழந்தைகளைக் கொன்ற செவிலியர்

"மருத்துவ இயக்குனராக, குழந்தைகள் நலப் பிரிவை பாதுகாப்பாக வைத்திருக்கவும், எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கவும் நான் உறுதியாக இருந்தேன். மதிப்பாய்வுகள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் மட்டுமே அவர்களின் குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதை பெற்றோர்களிடம் கூற முடியும். விசாரணை நல்லமுறையில் நடக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த விசாரணைக்கு என்னால் முடிந்த வழிகளில் அதற்கு உதவுவேன்."

செஸ்டர் மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலர் இப்போது புதிய நிர்வாகத்தின் கீழ் உள்ளார். மேலும் குழந்தைகள் நலப்பிரிவு இதுபோன்ற செயற்கையாக நோய் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகளை கவனிக்கும் நிலை ஏற்படாது.

மருத்துவமனையின் தற்போதைய மருத்துவ இயக்குனர் டாக்டர் நைகல் ஸ்கான், லெட்பியின் குற்றங்களால் தமது முழு நம்பிக்கையும் தகர்க்கப்பட்டதாகவும், அவற்றால் "ஆழ்ந்த வருத்தமும் திகைப்பும்" அடைந்ததாகக் கூறினார்.

லெட்பி அங்கு பணியாற்றியதற்குப் பின்னர் மருத்துவமனையில் "குறிப்பிடத்தக்க மாற்றங்கள்" செய்யப்பட்டுள்ளதாகவும், "எங்கள் சேவைகளை அணுகும் ஒவ்வொரு நபருக்கும் அவர் பெறும் சிகிச்சையில் அவர் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்று உறுதியளிக்க விரும்புவதாகவும்" அவர் கூறினார்.

லெட்பி மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவை விட்டு வெளியேறியதிலிருந்து இன்றுவரை, ஏழு ஆண்டுகளில் ஒரே ஒரு குழந்தை மட்டுமே உயிரிழந்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c03vzp1dv1zo

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பு வந்திருக்கிறது. இடைநிறுத்தப்படாத ஆயுள் தண்டனை.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளியாக சட்டத்தின் முன் நர்ஸம்மா தண்டிக்கப்பட்டு விட்டார்.

ஆனால்.. இந்தக் குற்றம் 1 இல் இருந்து 7 வரை தொடர சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை பற்றியும் அதற்கு உடந்தையாக இருந்த செயற்பாடுகள்.. நபர்கள் பற்றியும் ஏன் நடவடிக்கை இல்லை..??!

முதல் குழந்தையின் இறப்புக்கான உண்மைக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலே.. மிச்சம் 6ஐ தடுத்திருக்க முடியும். இறப்பின் பின் கோரனர் என்ன அடிப்படையில்.. இறப்பை பதிவு செய்தார்... என்று புரியவில்லை.

ஒருவேளை இந்த நர்ஸம்மா உண்மையான குற்றவாளியாக இருந்தாலும்.. அவர் தொடர் குற்றம் செய்ய ஏதுவான சூழலை அமைத்துக் கொடுத்த நபர்கள்.. நடைமுறைகள்.. செயற்பாடுகள்.. கொள்கைகள் எல்லாமே சீர்செய்யப்படனும். 

அண்மையில்.. டி என் ஏ பரிசோதனையின் பின்.. நீண்ட காலமாக சிறையில் இருந்த ஒரு குற்றவாளி நிரபராதின்னு விடுவிக்கப்பட்டு உண்மையான குற்றவாளி பல ஆண்டுகளின் பின் கைதாகி உள்ளார். இந்த நிலை உருவாகாமல் இருந்தால் சரி. வரவர பிரித்தானியாவின் சில நீதிச்செயற்பாடுகள்.. பொலிஸாரின் அவசரத்தில் அமையும்.. அரைகுறை சோடிப்பு ஆதாரங்களை மையப்படுத்தி அமைந்து விடுகிறதோ என்ற கேள்விகளும் தொக்கு நிற்கின்றன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.