Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிக்கப்படும் மேய்ச்சல் தரை – நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறிக்கப்படும் மேய்ச்சல் தரை – நிலாந்தன்.

August 27, 2023
 
Mayilaththamadu.jpg?fit=900%2C600&ssl=1

அண்மைக் காலங்களில் இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் நிலப்பறிப்பு மற்றும் சிங்களபௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளில், முன்னணியில் பௌத்த பிக்குகள் காணப்படுகிறார்கள். அப்படியொரு சம்பவம் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் இடம்பெற்றது. அங்கே மயிலத்தமடு மாதவனையில் காணப்படும் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிக்க முற்படும் சிங்கள விவசாயிகளுக்குத் தலைமை தாங்கிய ஒரு தேரர் அங்கு நிலைமைகளை அவதானிக்கச் சென்ற பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவை நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் முற்றுகையிட்டு வைத்திருக்கிறார்.

மயிலத்தனை மாதவனை மேய்ச்சல் தரை எனப்படுவது மட்டக்களப்பின் எல்லையில் மதுறு ஓயாவின் கிளையாகிய மாந்தரி ஆற்றை எல்லையாகக் கொண்ட ஒரு செழிப்பான மேச்சல் நிலம் ஆகும். இங்கே கிட்டத்தட்ட 25,000 ஹெக்டேர் மேச்சல் தரை உண்டு. தமிழ்மக்கள் அதில் பத்தாயிரம் ஹெக்டேரைத்தான் கேட்கிறார்கள். அந்த மேய்ச்சல் தரையை நம்பி சுமார் 996 குடும்பங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டில் 1977இலிருந்து அந்த மேய்ச்சல் தரையை தமிழ்ப் பண்ணையாளர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  எனினும் போர்க்காலங்களில் அது கைவிடப்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு மாவட்டத்தின் அரச அதிபர் அந்த மேய்ச்சல் தரையை தமிழ் பண்ணையாளர்களுக்கு வழங்கியுள்ளார். 2012ஆம் ஆண்டிலிருந்து சிங்கள விவசாயிகள் அந்த மேய்ச்சல் தரையை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். எனினும், தமிழ்ப் பண்ணையாளர்கள் வழக்குகளைத் தொடுத்து அதன் மூலம் அந்த ஆக்கிரமிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்த கூடியதாக இருந்திருக்கிறது.

குறிப்பாக ஒஸ்ரின் பெர்னாண்டோ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் அவர் தமிழ்ப் பண்ணையாளர்களை ஒப்பிட்டுளவில் பாதுகாத்திருக்கிறார். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் அங்கே ஆக்கிரமிப்பு ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கோத்தாவின் மூளை என்று கருதப்பட்ட சிந்தனைக் குழாமாகிய “வியத்மக” அமைப்பைச் சேர்ந்த அனுராதா யகம்பத் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதாக்க பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். எனினும் பண்ணையாளர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் துணையோடு வழக்குகளைத் தொடுத்து வழக்குகளில் தமக்குச் சாதகமான ஆணைகளையும் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு 2022 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சிங்கள விவசாயிகள் தொடர்ச்சியாக அவமதித்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்பொழுது நிலவும் வறட்சியும் கால்நடைகளைப் பாதிக்கின்றது.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முன்பு தலைமை தாங்கிய ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளின் விளைவாகப் பின்வாங்கி விட்டார். இப்பொழுது அங்கு நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு பெண் தலைமை தாங்கி வருவதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். நடுத்தர வயதைக் கொண்ட அப்பெண் அம்பாறை, தெகிவத்த கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், புதையல் தோண்டுவதற்கும், காட்டை அழிப்பதற்கும் தேவையான கனரக வாகன வளங்களோடு அவர் காணப்படுவதாகவும் தமிழ்ப் பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். சுற்றிவர மின்சார வேலி அமைக்கப்பட்ட பாதுகாப்பான தற்காலிகக் கொட்டிலில் அவர் அங்கே ஏறக்குறைய நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார். அவருக்குப் பலமான ஆளணிகள் உண்டு. அரச உயர் மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு அதிகம். கைபேசி அழைப்பின்மூலம் அவர் அரசு அதிகாரிகளை கையாளக்கூடியவராக காணப்படுவதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள் .அந்தப் பெண் முன்பு ஆளுநராக இருந்த அனுராதாவுக்கு நெருக்கமானவர் என்றும் தமிழ் பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். கடந்த வாரம் பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகளை முற்றுகையிட்டவர்கள் மத்தியில் அப்பெண்ணின் மகன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள விவசாயிகள் ஏழைகள் அல்ல. அவர்களிடம் முச்சக்கர வண்டி, ராக்டர், காடுகளை அழிக்கத் தேவையான கனரக வாகனங்கள் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் உண்டு. அவர்களிடம் துப்பாக்கிகளும் உண்டு. தவிர படையினரின் ஆதரவும் மகாவலி அதிகார சபையின் பக்கபலமும் உண்டு. இதுவரையிலும் 2000க்கும் குறையாத மேச்சல்நிலம் அவர்களால் எரித்தழிக்கப்பட்டிருக்கிறது. காட்டையழித்து அதில் அவர்கள் சோளம், கௌபி போன்ற தானியங்களைப் பயிர்செய்கிறார்கள். தமிழ்ப் பண்ணையாளர்களின் மாடுகள் உள்நாட்டு இனங்களைச் சேர்ந்தவை. அவை உள்நாட்டுத் தானியங்களை விரும்பி உண்ணும். மேச்சல் தரைக்குள் பயிர் செய்தால் என்ன நடக்கும்? மாடுகள் அந்தப் பயிர்களை மேயாமல் உண்ணாவிரதமா இருக்கும்?

இவ்வாறு தமது மேச்சல் தரையை ஆக்கிரமித்திருக்கும் பயிர்களை மாடுகள் மேயும் பொழுது அல்லது மாடுகள் காடுகளுக்குள் செல்லும் பொழுது சிங்கள விவசாயிகள் மாடுகளை சுருக்கு வைத்துப் பிடிக்கிறார்கள், அல்லது கொல்கிறார்கள் என்று பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். இதுவரையிலும் சுமார் 5000 மாடுகள் அவ்வாறு கொல்லப்பட்டு விட்டன. மேலும் மாடுகளைப் பிடித்து வைத்துக்கொண்டு தமிழ்ப் பண்ணையாளர்களிடம் பல லட்சம் பணத்தை தண்டமாக அறவிடுகிறார்கள்.

ஒருபுறம் மேய்ச்சல் தரை சுருங்கிக் கொண்டு வருகிறது. இன்னொரு புறம் கால்நடைகள் கொல்லப்படுகின்றன, அல்லது காணாமல் போகின்றன. இப்பொழுது வறட்சியும் வாட்டுகின்றது. இவற்றின் விளைவாக அந்த மேய்ச்சல் தரையை நம்பி வாழும் குடும்பங்கள் நிச்சயமற்ற ஓர் எதிர்காலத்தை நோக்கிச் செல்கின்றன.

கிழக்கில் ஒரு லீட்டர் பால் கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருநூற்று இருபது ரூபாய். கிழக்கில், குறிப்பாக மயிலத்தனை மாதவனை மேய்ச்சல் தரையில் கிடைக்கும் மாட்டு எருவை மலையகத்தைச் சேர்ந்த விவசாயிகள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அந்த மாட்டெரு வியாபாரத்தை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனால் சிங்கள வியாபாரிகள் மாட்டெருவை அறா விலைக்குக் கொள்முதல் செய்வதாக பண்ணையாளர்கள் முறைப்பாடு செய்கிறார்கள். அந்த மேய்ச்சல் தரை சுருங்கிக் கொண்டே போனால் அது கிழக்கின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இதுதொடர்பில் கிழக்கில் உள்ள அரசுக்கு விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறப்பது குறைவு.

கிழக்கில் உள்ள அரசுக்கு விசுவாசமான அரசியல்வாதிகள் வடக்கை விரோதியாகப் பார்க்கின்றார்கள். ஆனால் தமது மேய்ச்சல் தரைகளை ஆக்கிரமிக்கும் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு விசுவாசமாகவும் பணிவாகவும் காணப்படுகிறார்கள்.

மட்டக்களப்பில் இப்பொழுது ஏழுக்கும் குறையாத கால்நடைப் பண்ணையாளர் சங்கங்கள் உண்டு. இச்சங்கங்களில் மொத்தம் ஆறு லட்சத்திற்கும் குறையாத கால்நடைகள் உண்டு. மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் மட்டும் இரண்டு லட்சத்திலிருந்து நாலு லட்சம் வரையான மாடுகள் உண்டு. ஆனால் இவற்றில் 90 ஆயிரம் மாடுகளுக்குத்தான் காதுப்பட்டி அணிவிக்கப்பட்ட பதிவு உண்டு. காதுப்பட்டி உள்ள மாடுகளுக்குத்தான் அரச திணைக்களங்களில் பதிவு இருக்கும். பதிவு செய்யப்பட்ட கால்நடைகளின் எணிக்கைக்கு ஏற்ப மேய்ச்சல் தரை ஒதுக்கப்படும். இந்தவிடயத்தில் தமிழ்ப் பண்ணையாளர்கள் மாடுகளுக்கு உரிய பதிவுகளை மேற்கொள்ளத் தவறி விட்டார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மேச்சல் தரையை ஆக்கிரமிப்பது என்பது கிழக்கின் பொருளாதாரத்தை அழிக்கும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல. அதற்குமப்பால் அதற்கு ஒரு பரந்தகன்ற, நீண்டகால நோக்கிலான நிகழ்ச்சி நிரல் ஒன்று உண்டு. அது பல தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்மக்களின் மரபு வழித் தாயகம் என்ற கருத்துருவத்தை சிதைப்பதன்மூலம் தமிழ்மக்களின் தேசிய இருப்பை அழிப்பதே அந்த நிகழ்ச்சி நிரல்.

முதலில் அது திட்டமிட்ட குடியேற்றங்களில் இருந்து தொடங்கியது. அதன் விளைவாக இப்பொழுது திருகோணமலை பெருமளவுக்கு சிங்கள பௌத்தமயப்பட்டு விட்டது. கிழக்கில், அம்பாறையின் நிலைமையும் அப்படித்தான். இரண்டாவதாக, கிழக்கில் தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை ஊக்குவிப்பது. அதில் அவர்கள் கணிசமான அளவுக்கு முன்னேறி விட்டார்கள். மூன்றாவதாக, வடக்குக் கிழக்கை சட்டரீதியாகவும்; நிர்வாக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பிரிப்பது.

நாலாவதாக ,அவ்வாறு வடக்குக் கிழக்கைப் பிரித்து கிழக்கைத் தனிமைப்படுத்தி, அங்கே தமிழ்மக்கள் ஒப்பீட்டுளவில் செறிவாகக் காணப்படும் மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திச் சிதைத்து விடுவது.

இவ்வாறு வடக்குக் கிழக்கைப் பிரித்து தமிழ்மக்களின் தாயக ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வேலைத் திட்டத்திற்கு உதவி செய்யும் அரசுக்கு விசுவாசமான கிழக்குமைய அரசியல்வாதிகள் தமது மேய்ச்சல் தரைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக துலக்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்த ஒரு பின்னணியில், தமிழ்த் தேசிய நிலைபாட்டைக் கொண்ட அரசியல்வாதிகள் அந்த விடயத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். ஆனாலும் அவர்கள் பலமாக இல்லை என்பதைத்தான் அண்மைக்கால நிலைமைகள் உணர்த்துகின்றன.

குறிப்பாக செந்தில் தொண்டமான் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் பண்ணையாளர்கள் மத்தியில் ஏதோ சிறிய அளவிற்கு நம்பிக்கை தோன்றியிருக்கிறது. அண்மையில் செந்தில் தொண்டைமான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பின்போது மேய்ச்சல் தரை விடயம் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது என்பதனால் அதில் தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் ஒரு செந்தில் தொண்டமான மட்டும் வைத்து இந்த விவகாரத்தை மதிப்பிட முடியாது.

கடந்த மாதம் நடந்த மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் செந்தில் தொண்டமான் மேய்ச்சல் தரை விவகாரமும் உட்பட மூன்று விடையங்களில் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கமைய மாவட்ட அரச அதிபர் மூன்று விடையங்களில் சட்டத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாவலடி என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தைப் பிடித்து வைத்திருந்த முஸ்லிம்களை போலீசார் அகற்றியிருக்கிறார்கள். அது தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கும் இடையிலான முறுகலை அதிகப்படுத்தியுள்ளது. அதேசமயம் அரச அதிபர் குறிப்பிட்டிருக்கும் மூன்று விடயங்களில் ஒன்றாகக் காணப்படும் மேய்ச்சல் தரை விடயத்தில் இட்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, இக்காலப் பகுதியில்தான் பிக்குவின் தலைமையிலான சிங்கள விவசாயிகள் பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சுற்றி வளைத்திருக்கிறார்கள்.

அதாவது ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழ் மக்களுக்கு ஆதரவாக முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கைதான் ஒப்பேற்றப்பட்டிருக்கிறது. சிங்கள நிலப்பறிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அவர் இன்றுவரை வெற்றி பெறவில்லை. செந்தில் தொண்டமான நியமித்த அதே அரசாங்கத்துக்குள்தான் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகப் பேசும் நசீர் முகமட் காணப்படுகிறார். அதே அரசாங்கத்துக்குள்தான் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டும் பிள்ளையானும் வியாளேந்திரனும் காணப்படுகிறார்கள். இதில் ரணில் யாருக்கு உண்மையாக இருக்கிறார்?

சிங்கள பௌத்த நிலப்பறிப்பாளர்கள் மேய்ச்சல் தரை விடயத்தில் செந்தில் தொண்டமான எவ்வளவு காலத்துக்கு சகித்துக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனெனில் மேய்ச்சல் தரை விவகாரம் எனப்படுவது இக்கட்டுரையில் முன்பு கூறப்பட்டது போல தமிழ் மக்களின் மரபு வழித் தாயகத்தைச் சிதைக்கும் பரந்தகன்ற நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதிதான். அதை ஒரு தமிழ் ஆளுநர் எந்தளவுக்கு மாற்றியமைக்கலாம்?

 

https://globaltamilnews.net/2023/194510/

 

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு காணப்படாது ஆனால் இழுத்தடிக்கப்படலாம் 

  • கருத்துக்கள உறவுகள்+

இக்கட்டுரை மூலம் பல உள்ளக விடையங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.