Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நைஜரின் ஒளிரும் யுரேனியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நைஜரின் ஒளிரும் யுரேனியம்

niger-vectorstock.jpg?w=887 1

நைஜர் (Niger) என்ற நாடு நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மாலி, புர்கீனோ பாஸோ, லிபியா, பெனின் நாடுகளுடன் எல்லையைக் கொண்டது. 27 மில்லியன் சனத்தொகை உள்ள நாடு நைஜர். யுரேனியம், தங்கம், பிளாற்னம் போன்ற இயற்கை வளங்களைக் கொண்ட நாடு அது. ஆனால் அதை அவர்கள் அனுபவித்ததில்லை. வறுமையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

யுரேனியத்தில் இயங்கும் பிரான்ஸின் அணுஉலைகள் பிரான்சுக்கான மின்சாரத்தை மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. பிரான்சுக்கான தேவையின் மூன்றிலொரு பகுதி மின்சாரத்தை நைஜர் யுரேனியம் வழங்குகிறது. பிரான்ஸ் முழுவதும் மின்சாரம் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க, நைஜரில் 20 வீதமளவுக்குக்கூட மின்சாரம் பூத்ததில்லை. யுரேனியத்தை அகழ்ந்து கொண்டுவரும் பிரான்சின் ஈபிள் கோபுரம் இரவில் வால்நட்சத்திரமாக ஒளிர்ந்திருக்க, யுரேனியத்தை புதையலாக வைத்திருக்கும் நைஜர் நிலம் இரவில் சிறிய ஒளிக்கீற்றால் மட்டும் கீறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நைஜரின் Arlit என்ற நகரில் இந்த புதையல்களைத் தோண்டும் பகாசுரக் கம்பனி ORANO (முன்னைய AREVA) ஆகும். உலகின் யுரேனிய அகழ்வில் ஈடுபடும் கம்பனிகளில் இதுவே முதலிடத்தில் உள்ளது. இந்தப் பகாசுர கம்பனியின் 80 வீதமான பங்கு பிரான்ஸ் நாட்டுக்கு உரியது. இந்தப் பங்கில் பிரான்ஸ் அரசின் பங்கு அதிகமானது. அது 54 வீதத்துக்கு மேற்பட்டதாகும். இந்தக் கம்பனி அணு உற்பத்திக்கான யூரேனியம், மற்றும் தங்கம், பிளாற்னம் என்பவற்றின் கையாளல், களவாடல் சம்பந்தப்பட்டு இயங்கிறது. அது யூரேனிய அகழ்வு, சுத்திகரிப்பு என்ற லேபலில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நிலத்தடி வளங்களை கொள்ளையிடுகிற வேலையில் சம்பந்தப்பட்டிருக்கிறது. 

மின்சாரத்துக்குத் தேவையான யுரேனியத்தைவிட பலமடங்கு யுரேனியத்தை நைஜரிலிருந்து மட்டுமல்ல, கஜகஸ்தான்,ரசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுமிருந்தும் இறங்குமதி செய்து மேற்குலக நாடுகள் சேமிப்பில் வைத்திருக்கின்றன. அவை மின்சாரம், மருத்துவம் என்பவற்றுக்கு மட்டுமல்ல, அணுவாயுத தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. நைஜரில் தற்போதைய இராணுப்புரட்சி நடந்தபோது ஐரோப்பிய ஒன்றியம் அது தம்மை உடனடியாகப் பாதிக்காது எனவும் தம்மிடம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான சேமிப்பு உள்ளதாகவும் அறிவித்தது. பிரான்சுக்கு மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தேவையின் 25 வீத யுரேனியத்தை நைஜர் மட்டும் வழங்குகிறது. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ பிரான்சுக்கோ ஒரு நீண்டகால தேவையை பூர்த்திசெய்ய நைஜரை இழக்க முடியாது என்பது மட்டும் உண்மை. பிரான்சின் நலன் பாதிக்கப்பட்டால் படைநடவடிக்கையில் இறங்க நேரிடும் என மக்ரோன் எச்சரித்ததை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம்.

பிரான்ஸில் முன்னர் இருந்த யுரேனிய அகழ்வு சுரங்கங்களில் கடைசி 230 சுரங்கங்களையும் -சுற்றுச்சூழலைக் கருத்திற் கொண்டு- 2001 இல் மூடியபின், யுரேனியத்தை கசகஸ்தான், ரசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பிரான்ஸ் இறக்குமதி செய்யத் தொடங்கியது. ஆனால் நைஜர் இலிருந்து பிரான்ஸ் கம்பனி ORANO தாமே யுரேனியத்தை அகழ்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. உலகவங்கியால் மிக மோசமாக மாசுபட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டவற்றில் நைஜர் உம் ஒன்று. உலகவங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஒருமுறை இதுபற்றி கூறியபோது, “நைஜரை மாசுபடுத்துவதானது பிரான்ஸை மாசுபடுத்துவதைவிட மலிவானது” என்றார்.

இந்தக் கம்பனி அகழ்ந்து தள்ளும் நைஜர் நாட்டின் Arlit என்ற இடம் யுரேனியக் கதிர்வீச்சும், அதன் மாசும் சூழ்ந்த பேய்கள் உறங்கும் நகரமாக இருக்கிறது. ஆம், அங்கு அந்த ஏழை மக்கள் வாழவிடப்பட்டிருக்கிறார்கள். 120 ஹெக்ரர் நிலப்பரப்பில் திட்டுத்திட்டாக 35 மீற்றர் உயரம்வரையான 20 மில்லியன் தொன் ரொக்சிக் (toxic) கழிவுகள் Arlit நகரை மாசுபடர்ந்த நகரமாக ஆக்கியுள்ளது. இக் கழிவு கதிர்வீச்சுத் தன்மையுடையவை. காற்றும் நீரும் மாசுபட்டிருக்கின்றன. இதனால் ஏற்படும் மரணங்களும் நோய்களும் அதிகரித்த வீதத்தில் செல்கிறது. புற்றுநோய், இதயநோய், தோல்வியாதிகள், மைக்கிரேன் (ஒற்றைத் தலைவலி), மூட்டுவலி என இன்னோரன்ன நோய்கள் அவர்களை தாக்குகின்றன. Arlit இல் 120 வீடுகளில் வாழ்பவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் 16 வீதமானோரின் உடலில் மோசமான கதிர்வீச்சுத் தாக்கங்கள் காணப்பட்டிருக்கின்றன. Arlit இல் இரண்டு இலட்சம் பேர் இருக்கின்றனர். நாட்டின் மற்றைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்த சுரங்கங்களுக்கு அருகாமையில் வசிக்கும் இவர்களின் இறப்பு வீதம் இரண்டு மடங்காக உள்ளது. இதுதான் பிரான்ஸின் அணு உலைகளில் ஒரு பகுதியை இயக்கும் Arlit நகரத்தின் நிலை.

CRIIRAD என்ற பிரான்ஸிய பரிசோதனைக்கூடத்தின் அணுவியல் பொறியியலாளரான Bruno Chaeyron என்பவர் கூறுகிறபோது, “ORANO மக்களுக்குப் பொய் சொல்கிறது. நீர்நிலைகளை தாம் பரிசோதித்தபோது எந்த கதிர்வீச்சு மாசுபடல் பிரச்சினையும் காணப்படவில்லை என சொல்கிறார்கள். ஆனால் அதே நீர்நிலைகளை நாம் பரிசோதித்தபோது அது மிக ஆபத்தான மட்டத்தில் காணப்படுகிறது” என்கிறார்.

பிரான்ஸ், பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மின்சாரத் தேவையின் கணிசமான பகுதியை நைஜரின் சுரங்கங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த நாடுகளின் அணு உலைகளில் பெரும் பகுதியை இயக்குவதற்கான விலையை நைஜர் மக்கள்தான் கொடுக்கிறார்களே யொழிய, பிரான்ஸ் அல்ல!. இந்த கதிர்வீச்சு மாசுபடலை முடிவுக்குக் கொண்டுவர பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகள் முன்வருமா என்ற கேள்விகளுக்கு விடையிருக்கவா போகிறது. ஐநாவின் மனித அபிவிருத்தி சுட்டியின்படி 193 நாடுகளில் 187 வது இடத்தில் நைஜர் இருக்கிறது. Arlit இல் யுரேனியத்தை அகழும் ORANO கம்பனியின் வரவுசெலவுத் திட்டத்தைவிட (budget), நைஜர் என்ற அந்த நாட்டின் வரவுசெலவுத் திட்டம் என்பது மிகமிகச் சிறியது என்பது எவளவு கொடுமையானது.

arlit-004-africanarguments.org_.jpg?w=10 2

சுரண்டலுக்கு அளவேயில்லையா. 1960 இல் பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தபின், நைஜரை நவகாலனிய முறைமையில் சுரண்டும் பிரான்ஸின் -அதாவது மேற்கின்- ஜனநாயக முகம் இதுதான். இந்தச் சுரண்டலுக்காக ஆபிரிக்க நாடுகளில் தமது பொம்மை அரசுகளை தொடர்ச்சியாக உருவாக்கி பேணி வருகின்றன. இப்போ அரச கட்டிலிலிருந்து சதிப்புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்ட Mohamed Bazoum அவர்களும் பிரான்ஸின் செல்லப் பிள்ளைதான். (இவர் 2021 இல் ‘ஜனநாயக’ தேர்தல் முறைமை மூலம் ஆட்சிக்கு வந்த தலைவர் ஆவர்).

நைஜரின் பிரச்சினை இது மட்டுமல்ல. அதன் மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஜிகாத், பொக்கோ ஹராம், மற்றும் அல்கைடா அமைப்புகள் செயற்படுகின்றன. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் பிரான்சின் 1500 வரையான படைகளையும் அமெரிக்காவின் 800 படைகளையும் கொண்ட அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றும் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீடுகளும் இராணுப் பங்களிப்பும் உள்ளன. இந்த தலையீட்டை தக்கவைப்பதற்காகவே இந்த பயங்கரவாத அமைப்புகளை மேற்குலகம் பாலூட்டி வளர்த்துவிட்டதாக ஒரு விமர்சனம் உண்டு. இன்னொருபுறம் வறுமை அந்த நாட்டை சபித்திருக்கிறது.

இது எல்லாவற்றுக்குமான விடையை இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு தந்துவிடுமா என்பது கேள்விக்குறியே. ஜனநாயகக் கட்டமைப்பை நோக்கிய ஒரு தொடர் செயல்முறைமைகள் வளர்த்தெடுக்கப்படாமல், அடிக்கிற காற்றில் பறக்கிற கொடியாக நாட்டின் இராணுவங்கள் மக்களின் மீட்பர்களாக செயற்படுவது கதாநாயகத்தனத்தையும் சுயலாபத்தையும் தாண்டியதாக இருக்க வாய்ப்பு இல்லை. அவை மக்களின் மேற்குலகம் மீதான வெறுப்பை மூலதனமாகக் கொண்டதேயன்றி, மக்கள் விழிப்புணர்வு பெற்று பொங்கியெழுந்த போராட்டம் அல்ல. 

பிரான்சுக்கான யுரேனியம் ஏற்றுமதியை நிறுத்துவதாக நைஜர் இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்ததாக வந்த செய்தி பொய் என Reuter போன்ற ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன, தமது செயற்பாடுகளில் எந்த இடையூறும் இல்லை என ORANO அறிவித்திருக்கிறது. “நைஜரிலிருந்து பிரான்சுக்கு யுரேனிய ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்படுமானாலும், எமக்கு உடனடியாக எந்த பாதிப்பும் வராது” என ஐரோப்பிய அணுசக்தி அமைப்பு EUROTOM தெரிவித்துள்ளது. 

இராணுவ ஆட்சியாளர்களை நிர்ப்பந்தத்தின் மூலமோ அல்லது தமது சதிவலைக்குள் வீழ்த்தி அவர்களை விலைக்கு வாங்கவோ அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பின்நிற்காது. அதனடிப்படையில் இந்த புதிய இராணுவ ஆட்சியும் அமெரிக்காவின் பொம்மையாக மாறக்கூடிய சாத்தியத்தை மறுக்கமுடியாது என சில அரசியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இல்லையேல் நைஜர் இன்னொரு லிபியாவாக மேற்குலகால் மாற்றப்படும் என்றே தெரிகிறது.

ஆபிரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் எண்ணற்ற பொம்மை ஆட்சியாளர்களை ஆட்சிக்கவிழ்ப்பு மூலமோ, சுத்துமாத்து ஜனநாயக முகமூடி அணிவித்தோ அமெரிக்கா உருவாக்கிய தொடர் நிகழ்வுகளின் பாதை -அதே மேற்குலகை எதிர்க்கும் முறைமையாக- இப்போதைய மேற்கு ஆபிரிக்க நாடுகளின் ஆட்சிக் கவிழ்ப்புகளின் முன்னுதாரணமாக இருக்கின்றது. இதனிடையே 15 ஆபிரிக்க நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட பொருளாதாரக் கூட்டமைப்பு ECOWAS உம் ஆபிரிக்க ஒன்றியமும் (AU) இந்த இராணுவ ஆட்சிமாற்றத்தை ஏற்கவில்லை. “மீண்டும் அரசியல்சாசனத்தின் அடிப்படையிலான அரசை கொண்டுவர வேண்டும்; இராணுவம் முகாம்களுக்கு திரும்ப வேண்டும்” என அறிவித்திருக்கின்றன. ஒரு ஜனநாயகவழிப் பாதையில் சரிகளோடும் தவறுகளோடும் பயணிக்கும் முறைமையை இவ்வாறான ஆட்சிக் கவிழ்ப்புகள் இடையூறு செய்வதாக அவை கருதுவதாகத் தெரிகிறது. 

புர்கீனோ பாஸோ, அல்ஜீரியா, மாலி போன்ற சில அண்டை நாடுகள் நைஜர் இராணுவ ஆட்சியாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த ஆதரவை இராணுவ ரீதியிலும் வழங்கத் தயார் என அறிவித்துள்ளன. இதேநேரம் ரசிய கூலிப்படையான வாக்னர் குழு இந்த ஆட்சிக் கவிழ்ப்பை சுதந்திரப் போராட்டம் என கூறுகிறது. நைஜர் ஆட்சியாளர்கள் வாக்னர் படையின் ஆதரவை கேட்டிருக்கின்றனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் ரசியா இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.

niger-demo-aa.com_.tr_.jpg?w=864 3

கடந்தகால இராணுப் புரட்சிகள் போலன்றி தற்போதைய மேற்கு ஆபிரிக்க இராணுப் புரட்சிகளை மக்கள் பலமாக ஆதரிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. வேகமாக மாறிவரும் உலகில் இளைய சமுதாயம் ஆபிரிக்காவில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் மந்த நிலைமைகளை விரக்தியுடன் நோக்குவதாகவும், ஊழல் படிந்த தேர்தல் முறைமை இழுத்தடிப்புகளைவிட மிக வேகமான மாற்றத்தை விரும்புவதாகவும், அதை இராணுவ ஆட்சிமாற்றங்களினூடாகக் காண்பதாகவும் அரசியல் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. மேற்கு ஆபிரிக்காவில் நடைபெறும் அடுத்தடுத்த ஆட்சிக் கவிழ்ப்புகளை ஒரு ஜனநாயக ஸ்பரிசத்துக்கான அலையின் வெளிப்பாடாக அந்த மக்கள் பார்க்கிறார்கள். மேற்குலகின் வரலாறு பூரான -அடிமைத்தனம், நிறவாதம், பொருளாதாரச் சுரண்டல், ஏமாற்று, இழிவு போன்ற- பௌதீக மற்றும் கருத்தியல் ஒடுக்குமுறைகளின் அடித்தளமான வெள்ளை மேலாதிக்கத்தின் சூழ்ச்சிகளை அறிந்திருப்பவர்களாகவும் அதற்கெதிரான உணர்வுகளை கொண்டவர்களாகவும் இளம் சமுதாயம் காலமாற்றத்தோடு தம்மை அடையாளப்படுத்தத் தொடங்கியுமிருக்கிறது.

இன்று மாறிவரும் உலக அரசியலின் ஒரு விளைவாக, ஒற்றை உலக ஒழுங்கு கேள்விக்குள்ளாவதன் விளைவாக, சீனாவின் ஆபிரிக்கக் கண்ட முதலீடுகள் மற்றும் அந்த நாடுகளில் போக்குவரத்துக் கட்டமைப்புகளின் அபிவிருத்தி, BRICS இன் வளர்ச்சி போன்றன ஆபிரிக்கக் கண்ட நாடுகளில் மேற்குலகின் மீதான வெறுப்பை ஆபிரிக்க மக்களும் சில அரசுகளும் கட்சிகளும் துணிந்து வெளிக்காட்ட களம் அமைத்திருக்கின்றன. அது ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு இன்றி இயங்க வைக்கப்பட்ட நைஜர் போன்ற நாடுகளில் குழப்பமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இராணுவப் புரட்சிகளையும், வெற்றுக் கோசங்களையும் உருவாக்கியிருக்கின்றன. ஆனால் யதார்த்தத்தில் அவை இலகுவாக நசுக்கப்படக்கூடியதாகவே வரலாறு காட்டிச் சென்றிருக்கிறது.

அந்த இயலாமையின் ஒரு நம்பிக்கை தரும் குறியீடாக இந்த மக்கள் ரசியக் கொடியை ஊர்வலங்களில் உயர்த்திக் காட்டியுள்ளனர். போருக்குள்ளும் பொருளாதாரத் தடைகளுக்குள்ளும் அகப்பட்டிருக்கும் ரசியா -விரும்பினால்கூட- இவர்களை உடனடியாக வறுமையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்க முடியாது என்பதே யதார்த்தம். ஆனாலும் தம்மீதான மேற்குலகின் சுரண்டல் பற்றிய விழிப்புணர்வும் அதை வெளிப்படுத்தும் ஒரு களமும், (BRICS அமைப்பு, சீனா, ரசியா போன்ற) ஆதாரசக்திகளும் கிடைத்திருப்பதாக மக்கள் கருதுவது ஒரு நேரம்சமாக உள்ளது. வீதிக்குவந்து இறைஞ்சும் இந்த மக்களின் கனவுகளை BRICS தத்தெடுக்குமா என்பதை பொறுத்து அந்த நேரம்சம் வீச்சுப் பெற வாய்ப்பு உண்டு. இல்லையேல் மேற்குலக பிசாசுகள் அந்தக் கனவுகளை மீண்டும் தின்று செரித்துவிடும்.
 

https://sudumanal.com/2023/08/05/நைஜரின்-ஒளிரும்-யுரேனியம/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Enough is Enough !

niger-spiegel.de_.webp?w=996

image : Spiegel.de

நீஜரில் யுரேனியம், தங்கம் போன்ற கனிம வளங்களை அகழும் பிரான்ஸ் கம்பனியைத் தடைசெய்த நீஜர் அரசு தாமே உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது. யுரேனியத்துக்கான ஏற்றுமதி விலையை உலக சந்தையின் பெறுமதி “200 யூரோ/கிலோ” க்கு உயர்த்தியுள்ளது. இது கனடாவின் யுரேனிய ஏற்றுமதிப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்ட விலை நிர்ணயம் ஆகும்.

கிலோ ஒன்றுக்கு 0.80 யூரோ (அதாவது 80 சதம்) விலைக்கு பிரான்ஸ் கடந்த பல ஆண்டுகாலமாக யுரேனியத்தை நீஜரிலிருந்து இறக்குமதி செய்தது. இத் தகவலை The New Africa Channei, Spectacle என்பன உட்பட பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அநியாயத்தை நீஜரில் அகழ்வை மேற்கொள்ளும் பிரான்ஸ் கம்பனியும் பிரான்ஸின் பொம்மை அரசுகளும் சேர்ந்து செய்து கொண்டிருந்தது.பிரான்ஸில் ஒரு சிறு பாண் துண்டை வாங்க 80 சதம் போதாது. இவ்வாறான மிகப் பெரும் சுரண்டலைச் செய்து தமது வளமிக்க நாட்டை கருவறுத்ததாக இராணுவ ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுசக்தி அமைப்பு Euratom க்கான யுரேனியத் தேவையினை பூர்த்திசெய்யும் நாடுகளில் நீஜர் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என சொல்லப்படுகிறது. 2022 இல் நீஜர் 2975 தொன் யுரேனியத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. அது Euratom க்கான தேவையின் 25.4 வீதத்தை பூர்த்திசெய்கிறது. கசகஸ்தான் முதலாவது ஏற்றுமதி நாடாகவும் கனடா மூன்றாவது ஏற்றுமதி நாடாகவும் உள்ளது. இம் மூன்று நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய அணுசக்திக்கான யுரேனியத்தின் 74 வீதத்தை பூர்த்தி செய்கின்றன.

உலக அணுசக்தி அமைப்பின் (WNA) 2021 தகவல்படி யுரேனிய உலக உற்பத்தியில் நீஜர் 4 முதல் 5 வீதத்தை பூர்த்தி செய்கிறது. அதன் அளவு 311,100 தொன் ஆகும். இதன்படி நீஜர் உலகளவில் யுரேனிய வழங்கலில் 7வது இடத்தில் உள்ளது. கசகஸ்தான் 13 வீதத்தினையும் கனடா 10 வீதத்தினையும் நமீபியா 8 வீதத்தினையும் அவுஸ்திரேலியா 28 வீதத்தினையும் ரசியா 8 வீதத்தினையும் தென் ஆபிரிக்கா 5 வீதத்தினையும் பூர்த்தி செய்கின்றன. 2021 இல் மொத்தம் 6,078,500 தொன் யுரேனியம் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்டது.

பிரான்ஸிலுள்ள 56 அணுசக்தி செயலிகளை இயக்கும் 18 அணுமின் உற்பத்தி நிலையங்களுக்கு ஆண்டொன்றுக்கு 8000 தொன் யுரேனியம் தேவைப்படுகிறது. நீஜர் பிரான்ஸின் காலனியாக இருந்தபோது, 1957 இல் பிரெஞ்சு காலனியவாதிகள் நீஜரிலுள்ள ‘அசெலிக்’ எனும் இடத்தில் செப்பு கனிமவளத்தைத் தேடி அகழ்ந்தபோது முதன்முதலாக யுரேனியத்தை கண்டடைந்தனர். அதிலிருந்து யுரேனிய அகழ்வை பிரான்ஸ் கம்பனியான Areva (Orano) தம்வசம் வைத்து செல்வத்தை பெருக்கிக்கொண்டது.

மேற்கு ஆபிரிக்க மக்களின் தாய்மொழிகளை தடைசெய்து பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக அவர்களை மாற்றி பண்பாட்டை வல்லுறவு செய்த பிரான்ஸ் அந்த நிலத்தையும் வல்லுறவு செய்து வளங்களை சுவைத்தது. 1960 இல் காலனியத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிரான்ஸ் அதன்பின் தமது சுரண்டலை பின்காலனிய முறையில் தொடர்ந்தது. சாகேல் பிரதேச (மேற்கு ஆபிரிக்க) நாடுகளில் மேற்குலகின் அடிவருடிகளின் -குறிப்பாக பிரான்ஸின்- பொம்மை ஆட்சியாளர்களின் அரசுகள் தொடர்ந்தன. அவர்கள் மேற்குலகம் தமது நாட்டை கருவறுக்க அனுமதித்து தமது வங்கிக் கணக்குகளை செழுமைப்படுத்தினார்கள். அவர்களின் கள்ளப் பணம் சுவிஸ் வங்கியில் வைப்பில் இடப்பட்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

இதற்கு எதிர்நிலை கொண்டவையாக தற்போதைய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் விளங்குகின்றன. இந்த இராணுவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளும் மக்களின் விழிப்புணர்வும் இப்போதைக்கு சாதகமான ஒத்திசைவான திசையில் செல்கின்றன. நீஜர் அரசானது பிரான்ஸ் தூதுவராலய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. அதேபோல் பயங்கரவாத ஒழிப்பு என்ற பதாகையின் கீழ் நீஜரில் தங்கியிருக்கும் பிரான்ஸின் 1500 இராணுவத்தினரையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டது. அவர்கள் செவிமடுக்கத் தயாராக இல்லை.

இராணுவத் தளத்தின் முன்னால் இலட்சக்கணக்கான நீஜர் மக்கள் கூடி குரலெழுப்பியும் பலனில்லை. தூதரக அதிகாரிகளோ நீஜரின் ஆட்சியாளர்கள் தம்மை சந்திக்கக் கேட்டிருந்தபோது புறக்கணித்திருந்தார்கள். அதன்பின்னர் அவர்களை வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. பலன் எதுவும் இல்லாததால் தூதரகத்துக்கான நீர்வழங்கல், மின்வழங்கல் இரண்டையும் அரசு நிறுத்தியிருந்தது. அவர்களது விசாவை காலாவதியாக்கியது. பலனில்லை. இப்போ தூதரகத்துள் உணவுப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதற்கு தடைவிதித்துள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்கும் மேற்கத்தைய நாடுகளின் சனநாயக பெறுமதி இதுதான்.

பிரான்ஸ் தனது இறுதிப் பிடியை இலகுவில் விட்டுவிடுவதிலுள்ள பொருளாதார ஆபத்தை கணக்கில் எடுத்து செயற்படுகிறது. “இந்த அரசு ஜனநாயக ரீதியில் செல்லுபடியாகாத அரசு. அதற்கு நாம் கட்டுப்படுவதாயில்லை” என ஒரு காரணத்தை மக்ரோன் முன்வைக்கிறார். பிரான்ஸ் மீதான எந்தவொரு தாக்குதலையும், அதேபோல் தமது நலனுக்கு எதிரான எதையுமே பிரான்ஸ் சகித்துக்கொள்ளாது என மக்ரோன் தெரிவித்துள்ளார். தனது நாட்டின் வளங்களை பல ஆண்டுகளாக கொள்ளையடிக்கும் பிரான்ஸை நீஜர் தொடர்ந்து சகித்துக்கொண்டிருக்க வேண்டும் என பிரான்ஸ் இன் பின்காலனிய சிந்தனைக் கட்டமைப்பானது மறைமுகமாகச் சொல்கிறதா என மக்ரோனின் பிரகடனம் யோசிக்க வைக்கிறது.

இப்படியொரு பொறியை உருவாக்கி தமது இராணுவத் தலையீட்டையோ அல்லது ECOWAS பொருளாதார கூட்டமைப்பினூடக இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு தமக்கு சார்பான Mohamed Bazoum அவர்களின் ஆட்சியை மீளக் கொண்டுவருவதற்கோ அல்லது தமக்கு சார்பான புதிய மாற்று இராணுவக் கவிழ்ப்புச் சதியை அரங்கேற்றவோ பிரான்ஸ் காத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது மேற்குலக சார்பான ECOWAS நாடுகளை பாவித்து நீஜருக்குள் ஒரு சகோதரப் போரை உருவாக்க படாதபாடு படுகிறது.

அந்த அமைப்பின் தற்போதைய தலைமைப் பதவியில் நைஜீரியா அதிபர் Bola Tinubu அவர்கள் இருக்கிறார். அந்த அமைப்பு போர் முரசு கொட்டி ஒரு வார கால அவகாசமும் கொடுத்திருந்தது. அது காலாவதியாகி, மீண்டும் அவகாசித்து, மீண்டும் காலாவதியாகி… என அச்சுறுத்தல் முன்னும் பின்னுமாக ஓடியோடி குரைத்தது. ஆனால் நைஜீரியாவின் செனட் சபை உறுப்பினர்கள் எல்லோருமே இந்த முடிவை எதிர்த்தார்கள். நைஜீரியா போருக்குப் போவதை விட்டு “எமது நாட்டுக்குள் இருக்கும் பொக்கோ கராம் பயங்கரவாதிகளை ஒழிக்கிற வேலையை செய்யட்டும்” என்று அறைகூவினார்கள். அதனால் போர்முரசு தற்காலிகமாக ஒலிக்காதிருக்கிறது. பைடன் Bola Tinubu அவர்களை விரைவில் சந்திக்க இருக்கிறார். எனவே போர்முரசு மீண்டும் எழாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஒருபுறம் மேற்குலக நெருக்குதல் இன்னொருபுறம் செனட்சபை கூட்டு எதிர்ப்பு என இரண்டுக்கும் நடுவில் நைஜீரிய தலைவர் ஆட்சிக் கட்டிலை தொட்டுப் பார்த்தபடி நிற்கிறார்.

ECOWAS போலவே ஆபிரிக்க கூட்டமைப்பும் (AU) மேற்குலகின் குரலையே ஒலிக்கின்றன. அதாவது “சனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட Bazoum அவர்களை இராணுவ ஆட்சியாளர் மீண்டும் கதிரையில் அமர்த்திவிட்டு விலகிவிட வேண்டும்” என்பதே அது. அதேநேரம் சமாதான வழியில் இது சாத்தியப்படுத்தப் படாவிட்டால் “ECOWAS நாட்டு இராணுவ நடவடிக்கையை நாம் ஆதரிப்போம். ஆனால் ஆபிரிக்க கண்டத்துக்கு வெளியிலுள்ள நாடுகளின் இராணுவத் தலையீட்டை நாம் ஆதரிக்க மாட்டோம்” என தமது ‘ஆனால் நிலைப்பாட்டை’ முன்வைத்துள்ளது.

ஒரு பதினைந்து நாடுகளைக் கொண்ட ECOWAS கூட்டமைப்பிடமிருந்து நடவடிக்கைகளை எதிபார்க்கிறது, 55 நாடுகளைக் கொண்ட ஆபிரிக்கக் கூட்டமைப்பு!. இதுவே ஆபிரிக்க கூட்டமைப்பின் பலத்தை அல்லது ஆளுமையை தோலுரிக்கிறது. இந்த பலவீனமான நிலை ஜி-20 இல் 21வது அங்கத்தவராக ஆபிரிக்க கூட்டமைப்பை மேற்குலகு எதிர்ப்பின்றி உள்வாங்க ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்திய துணைக் காரணிகளில் ஒன்று எனலாம்.

ஒரு கிலோ யுரேனியத்தை 80 சதத்துக்கு பிரான்சுக்கு வாரிக்கொடுத்தவர் Bazoum அவர்கள் என்கிறது, நீஜரின் தற்போதைய அரசு. அவரின் அரசுக்குப் பெயர் ஜனநாயக அரசு. சொந்த மக்களின் நலனை அடைவு வைத்து பணக்காரர் ஆகுபவரது அரசு ஒரு ஜனநாயக அரசு. சில வருடங்களுக்கு முன் தேர்தலில் வெற்றிபெற்று சனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர் என்ற ஒற்றைக் காரணத்தை வைத்து ஜனநாயகம் பேசுபவர்கள் இன்று ஒரு தேர்தலை சந்தித்து அவர் மீண்டும் வரட்டும் என பேச முன்வருவார்களா என்ன. அல்லது இன்றைய இராணுவ ஆட்சியாளர்கள் இன்று ஒரு தேர்தலை வைத்து தம்மை நிரூபிக்கட்டும் என அறைகூவல் விடுக்க முடியுமா என்ன. கிழிஞ்சிடும்!

இராணுவ ஆட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளியது இவர்கள் எல்லோரும் முன்வைக்கும் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்தவர்களின் சோரம்போதல்தான். நாட்டை ஒட்டச் சுரண்டி பின்காலனியத்தைப் பேண உதவியதுதான்.

மேற்குலகு ECOWAS மூலமான சகோதரப் போரை நடத்த எத்தனிக்கிறது. முடியாதபோது இதே இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறைமையை அது முயற்சிக்க வாய்ப்பு உண்டு. இதில் அவர்கள் தேர்ந்தவர்கள் என்பது வரலாறு. யுரேனிய ருசி கண்ட பூனை நீஜரை சுற்றிச்சுற்றியே வரும். அவளவு இலகுவில் அது விலகா!

Enough is Enough ! இதுவே இன்றை நீஜர் மக்களின் குரல்.
 

 

https://sudumanal.com/2023/09/13/enough-is-enough/

  • கருத்துக்கள உறவுகள்

"80 சத யுரேனியமா😮?" என்று வாய் பிளந்து தேடிப்பார்த்ததில் கீழே இருக்கும் fபோர்ப்ஸ் கட்டுரை கிடைத்தது.  சுடுமணல் ரீம் சமூக வலைத்தளங்களில் இருந்து சுட்டுப் பொங்கிய "அவியலைப்" பற்றி இப்படி சொல்லியிருக்கிறார்கள்:

"..some accounts on social media are now circulating the claim that Niger has lifted prices from €0.80 per kilogram to €200. So far, there is no evidence for this beyond themselves quoting each other. The claim seems to trace back to a small digital outlet in Nigeria. Embarrassingly, the website has been confused as being from Niger itself"

"கிலோ எண்பது சத யுரேனியத்தை 200 யூரோவாக உயர்த்தியதாக ஒரு ஆதாரமும், ஒரேயொரு நைஜீரிய இணையத் தளம் தவிர்ந்த வேறு இடங்களில், இல்லை"

"...Niger never sold €0.80 a kilogram, and there are no primary sources talking about a new price being set at €200. As in other countries, the ore was being sold near global market prices, which at the time of writing hover around $56 per pound (around €114 per kilogram)."

முன்னைய நைஜர் அரசு  80 சத யுரேனியம் விற்றதாகவும் ஆதாரங்கள் இல்லை. உலக சந்தையில் யுரேனிய விலை கிலோ 114 யூரோ - இதை நைஜர் அரசினால் மாற்றவும் முடியாது. ஏனெனில் இன்னும் நைஜரில் யுரேனியம் அகழ்வதும், விற்பதும் ஒரு பிரெஞ்சுக் கம்பனி தான். அரசுக்கு இந்த பிசினசில் ஒரு சிறிய பங்கு மட்டும் இருக்கிறது.

https://www.forbes.com/sites/eliasferrerbreda/2023/09/12/more-rumours-what-is-really-happening-with-nigers-uranium/?sh=203bd15e2f86

ஆனால், இந்த யுரேனிய அகழ்வுக் கம்பனிகளை அரசு மயப்படுத்த, அல்லது ரஷ்யாவின் கூலிப்படைகளுக்கு உரிமம் மாற்றிவிட புதிய நைஜர் ஆட்சியாளர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. இதைத் தடுக்க பிரான்ஸ் வெளியேறாமல் தங்கி நிற்கிறது. பிரான்ஸ் தூதர் மீது ஏதாவது தாக்குதல் நடந்தால், இராணுவ நடவடிக்கைக்கு மேற்கிற்கு ஒரு காரணம் கிடைக்கும்.

பி.கு: "சுட்டுப் போடும்" சுடும் மணல் ரீமுக்கு - Niger என்பது "நைஜர்" என உச்சரிக்கப் படுகிறது, "நீஜர்" என்றல்ல😂!

 

என் Team மில் நைஜர் நாட்டைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஒருவர் இருக்கின்றார். GDP தரப்படுத்தலில் 136 ஆவது இடத்தையும், ஊழல் நாடுகளின் தரவரிசையில் 123 ஆவது தரத்திலும் (மோசமான தரம்) உள்ள நாடொன்றில் இருந்து, நன்கு கல்வி கற்று, சுய முயற்சியில் முன்னேறி, எம்முடன் இணைந்து வேலை செய்கின்றார்.

பிரான்ஸ் அரசு எந்தளவுக்கு தம்மைச் சுரண்டுகின்றது என்பதை புள்ளிவிபரங்களுடன் எமக்கு விளக்குவார். அடிப்படையில் மேற்குலகு மீது கடும் சினமும், பழிவாங்கும் உணர்வும்  கொண்டவராக அவரை புரிந்து வைத்துள்ளேன். இதற்கு முதல் இருந்த அரசு  பிரான்ஸ்சின் பொம்மை அரசு என்றும், மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்றும், இராணுவ புரட்சியின் மூலம் வந்தவர்களும் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்றும் சொல்கின்றார்.

அதே நேரத்தில் தன் நாடு, ரஷ்யா பக்கம் சாய்வதே இப்போதைக்கு செய்யக் கூடிய நல்ல விடயம் என்பார். 

ஆபிரிக்க நாடுகளில் வாழ்கின்ற ஒரு படித்த இஸ்லாமியருக்கு கூட, மேற்குலகு மீது ஏன் இவ்வளவு கோபம் என்பதை அவரது விளக்கங்களினூடாக புரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

என் Team மில் நைஜர் நாட்டைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஒருவர் இருக்கின்றார். GDP தரப்படுத்தலில் 136 ஆவது இடத்தையும், ஊழல் நாடுகளின் தரவரிசையில் 123 ஆவது தரத்திலும் (மோசமான தரம்) உள்ள நாடொன்றில் இருந்து, நன்கு கல்வி கற்று, சுய முயற்சியில் முன்னேறி, எம்முடன் இணைந்து வேலை செய்கின்றார்.

பிரான்ஸ் அரசு எந்தளவுக்கு தம்மைச் சுரண்டுகின்றது என்பதை புள்ளிவிபரங்களுடன் எமக்கு விளக்குவார். அடிப்படையில் மேற்குலகு மீது கடும் சினமும், பழிவாங்கும் உணர்வும்  கொண்டவராக அவரை புரிந்து வைத்துள்ளேன். இதற்கு முதல் இருந்த அரசு  பிரான்ஸ்சின் பொம்மை அரசு என்றும், மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்றும், இராணுவ புரட்சியின் மூலம் வந்தவர்களும் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்றும் சொல்கின்றார்.

அதே நேரத்தில் தன் நாடு, ரஷ்யா பக்கம் சாய்வதே இப்போதைக்கு செய்யக் கூடிய நல்ல விடயம் என்பார். 

ஆபிரிக்க நாடுகளில் வாழ்கின்ற ஒரு படித்த இஸ்லாமியருக்கு கூட, மேற்குலகு மீது ஏன் இவ்வளவு கோபம் என்பதை அவரது விளக்கங்களினூடாக புரிந்து கொள்ளலாம்.

எனக்கும் இது போன்ற சில அனுபவங்கள் உண்டு

ஆனால் எனது கேள்வி எல்லாம் அவர்களிடம் ஆட்சியை கொடுத்தபோதும் அல்லது அவர்களாகவே ஆட்சியை எடுத்துக் கொண்டபோதும் அவர்களை மேற்கை விட அதிகம் சுரண்டி கொழுத்தது தான் வரலாறு. இதில் மேற்குலக பரவாயில்லை என்று ஆச்சு இன்று?

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்ககாரர் என்ன எங்கள் ஆட்களுக்கே ஆபிரிக்காவின் வறுமைக்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு மேற்குலகநாடுகள் ஆபிரிக்க நாடுகளை சுரண்டி அவர்களை ஏழைகளாக வைத்திருக்கிறார்கள் என்ற பதிலை பதியவைத்துள்ளோம். விசுகு அய்யா இப்படி உண்மையான கேள்விகள் கேட்டு பதிவு செய்யபட்ட பதிலை அவியலை குழப்பிவிடுவார் போல் இருக்கிறது.

6 hours ago, விசுகு said:

ஆனால் எனது கேள்வி எல்லாம் அவர்களிடம் ஆட்சியை கொடுத்தபோதும் அல்லது அவர்களாகவே ஆட்சியை எடுத்துக் கொண்டபோதும் அவர்களை மேற்கை விட அதிகம் சுரண்டி கொழுத்தது தான் வரலாறு.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆபிரிக்க காலனிகளில் பல அநியாயங்கள் செய்தார்கள் - இதனோடு ஒப்பிடும் போது தென்னாசியாவில் ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சி "ரோசாப் படுக்கை" என்று சொல்லலாம் - வரலாற்று உண்மை இது.

ஆனால், 1960 களில் பெரும்பாலான நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர், அவர்களாகவே உள்ளூர் வளங்களை யார் மேலாண்மை செய்வது என்று அடிபட்டு, ஒழுங்கான ஆட்சிகளே இந்த நாடுகளில் இல்லாமல் போனது. இதற்கு உள்ளூர் காரணங்களே பிரதானம் எனக் கருதுகிறேன்.

மேலே, நிழலியின் நண்பர் சொன்னது போல, ரஷ்யாவிடம் போவதா , சீனாவிடம் போவதா என்பதை முடிவு செய்யும் உரிமை நைஜர் மக்களுக்கு உண்டு. ஆனால், ஒரு பொம்மலாட்டியிடம் இருந்து இன்னொரு பொம்மலாட்டியிடம் போகிறார்கள் என்பதைத் தவிர வித்தியாசமாக ஒன்றும் நடக்கப் போவதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.