Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

anura-kumara-dissanayake-700x375.jpg

ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்!

அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப் பேசுகின்றார். கனடாவிலும் அவர் அப்படித்தான் பேசினார். யாழ்ப்பாணத்திலும் அவர் அப்படித்தான் பேசினார். ஆனால் அவர் இதுவரை பேசிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. என்னவெனில், அவர் இனப்பிரச்சினையை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, எல்லாவற்றையும் மனிதாபிமானக் கண் கொண்டுதான் பார்க்கின்றார். மாறாக அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தியோடு, அரசியல் பரிமாணத்தோடு, அவற்றை விளங்கி வைத்திருக்கிறாரா என்று கேட்கத்தக்க விதத்தில்தான் இனப்பிரச்சினை தொடர்பான அவருடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

அவர் மொழிப் பிரச்சினை பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று பேசுகிறார்.மரபுரிமைச் சொத்துகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரு காலம் தன்னுடைய சிறு பிராயத்தில் தன்னுடைய கிராமத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன பேதம் இன்றி ஒன்றாக வாழ்ந்ததைக் கூறுகிறார். சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் ஒரு மக்கள் மயப்பட்ட விடயம் அல்ல என்றும் கூற வருகிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை அவர் இன்னமும் வெளிப்படையாக உறுதியாக ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவில்லை.ஆனால் அதைப் பரிசீலிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு ஜேவிபி வந்துவிட்டது. இவைதான் அவர் பேசியவற்றின் சாராம்சம்.

தமிழ் லிபரல் ஜனநாயகவாதிகளுக்கு அவை உற்சாகமூட்டக்கூடிய கருத்துக்கள்.இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு புதிய வெளிச்சம் தோன்றியிருப்பதாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், அனுராவிடம் ஆழமான சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

கேள்வி ஒன்று, இலங்கைத் தீவு பல்லினத்தன்மை மிக்கது என்பதனை ஜேவிபி ஏற்றுக்கொள்கின்றதா?

ஆயின்,இரண்டாவதாக,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஜேவிபி ஏற்று கொள்கின்றதா?

அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால், ஒரு தேசிய இனத்திற்குள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜேவிபி தயாரா?

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வு என்று பார்க்கும் பொழுது, தமிழ் மக்கள் இப்பொழுது கூட்டாட்சியைத் தான் கேட்கின்றார்கள். உலகம் முழுவதிலும் உயர்ந்த ஜனநாயகங்களில் கூட்டாட்சி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறைமையாகக் காணப்படுகின்றது. ஜேவிபி தமிழ் மக்களுக்கு ஒரு கூட்டாட்சி தீர்வைத் தரத் தயாரா?

இதைத் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதனை விடவும்,இலங்கை முழுவதுக்குமான ஒரு தீர்வு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சியானது அந்த அடிப்படையில், பல்லின; பல் சமய ; இரு மொழிப் பண்பைப் பேணும் விதத்தில் ஒரு தீர்வைதான் முன்வைக்க வேண்டும். உலகில் பல்லினத்தன்மை மிக்க நாடுகளில்; பழமொழி ;பல மதங்கள் ; பயிலப்படும் நாடுகளில் ; கூட்டாட்சி அதாவது சமஸ்டி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே சமஸ்ரித் தீர்வு எனப்படுவது தமிழ் மக்களுக்கு உரியது என்பதை விடவும், இலங்கைத் தீவை ஒரு தேசமாகக் கட்டி எழுப்புவதற்கானது என்பது தான் மிகச் சரியான விளக்கம்.

நாலாவது கேள்வி, 2009க்கு முன்பு ஆயுத மோதல்களின் போது ஜேவிபி போரை ஆதரித்தது. போரில் ஈடுபடும் படை வீரர்களை ஆதரித்தது. படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. அதுதொடர்பாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா?

ஐந்தாவது கேள்வி,இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. அதாவது தமிழ் மக்களின் தாயகத்தை சட்ட ரீதியாகப் பிரிக்க முற்பட்ட ஒரு கட்சி.அவ்வாறு தமிழ் மக்களின் தாயகத்தைச் சட்ட ரீதியாகப் பிரித்தமைக்காக தமிழ் மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ? இதை ஐநா தீர்மானங்களின் வார்த்தைகளில் கேட்டால், ஜேவிபியானது, இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறுமா? இறந்த காலத்தில் அது தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறுமா?

ஐந்தாவது கேள்வி, ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியின் போது அது இந்தியத் தமிழர்களை குறிப்பாக, மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் காட்டியது.இப்பொழுதும் ஜேவிபி அதே நிலைப்பாட்டோடுதான் காணப்படுகின்றதா? அது தொடர்பாக மலையக மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ?

மேற்கண்ட கேள்விகள் தமிழ் மக்களால் அனுரகுமரவிடம் பகிரங்கமாகக் கேட்கப்பட வேண்டியவை. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தால், தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான கூட்டுரிமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அனுரகுமார உதிரியாகப் பேசுகின்ற மொழிப் பிரச்சினை; வழிபாட்டுப் பிரச்சினை; காணிப்பிரச்சினை; கல்விப் பிரச்சினை…முதற்கொண்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் வரை அனைத்தும் அந்தக் கூட்டு உரிமைகளுக்குள் அடங்கும்.

தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு தீர்வைதான் கேட்கின்றார்கள். எனவே கோட்பாட்டு ரீதியாகவும் அரசறிவியல் அர்த்தத்திலும் ஜேவிபி முதலில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பதனைத் தெளிவாகக் கூற வேண்டும்.

இனப்பிரச்சனை ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்ல.முதலில் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினை எனப்படுவது, இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை பெரிய இனமாகிய பெரிய மதமாகிய சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தமைதான். அதனால் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அவர்கள் அழிக்க முற்பட்டார்கள். தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் மொழி, நிலம், பண்பாடு ,பொருளாதாரம் போன்ற அம்சங்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளை அழிப்பதுதான்.

எனவே இனப்பிரச்சினை தோன்றியது எங்கிருந்து என்றால், இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதில் இருந்துதான். அதற்குத் தீர்வும் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால்,இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதில் இருந்துதான்.

இதைத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து சொன்னால்,தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதான் அதைத் தொடங்கலாம். ஆனால் ஜேவிபி அவ்வாறான அரசறிவியல் ஆழத்துக்குள் இறங்கத் தயார் இல்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதன்மூலம், சமஸ்ரித் தீர்வு ஒன்றை ஏற்றுக் கொள்வதன்மூலம், தென்னிலங்கையில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயார் இல்லை.

அதேசமயம் தமிழ் வாக்குகள் அவர்களுக்குத் தேவை.அனுரகுமார கூறுகிறார், நான் வாக்கு வேட்டைக்கு வரவில்லை, நான் தீர்வைத் தருகிறேன் வாக்கைத் தாருங்கள் என்று வியாபாரம் செய்வதற்கு வரவில்லை… என்று கேட்க அது கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஜேவிபியின் தீர்வு என்ன என்பதனை வெளிப்படையாகச் சொல்வதில் இருந்து அவர் தப்ப முயற்சிக்கின்றார். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பல தசாப்தங்களுக்கு முன் இருந்த நல்லுறவை மீளக்கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகிறார். அந்த நல்லுறவு எங்கே பாதிப்படைந்தது? தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அழிக்க முற்பட்ட பொழுதுதானே? அந்த நல்லுறவை எங்கிருந்து கட்டி எழுப்பலாம்? தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதானே ?ஆனால் ஜேவிபி அதை வெளிப்படையாகச் சொல்ல தயாரில்லை.

இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு 13 பிளஸ் தீர்வு என்று வெளிப்படையாகக் கூறி வருகிறார். ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள்தான் தீர்வு என்கிறார். ஆனால் ஜேவிபி தீர்வை வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றது.

அதாவது, ஜேவிபி வெளிப்படையான, அரசியல் அடர்த்தி மிக்க, வார்த்தைகளுக்கு ஊடாக கதைப்பதைத் தவிர்த்து, மழுப்பலான, பொத்தாம் பொதுவான, சமூகநீதி மற்றும் மனித உரிமைகளின் பாற்பட்ட வார்த்தைகளுக்கு ஊடாகப் பேச விளைகின்றது. அந்த அமைப்பில் இருந்து விலகிய ஒருவர் எழுதிய நாட்குறிப்பில்…“மகிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகத் தெரியும் ஓர் இனவாதி. ஆனால் ஜேவிபியோ சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி” என்று கூறியிருப்பது தவறு என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஜேவிபி இக்கட்டுரையில் முன் வைக்கப்படும் பகிரங்க கேள்விகளுக்கு பதில் கூறுமா?

https://athavannews.com/2024/1376894

  • கருத்துக்கள உறவுகள்

ஜே வி பியும் ஒரு இனவாத கட் சி. அது தமிழ் மக்களின் வாக்குகளை பெற நாடகமாடுகிறது.  தமிழ் மக்களுக்கான தீர்வில் வெறும் மழுப்பலான பதில்களே இவற்றுக்கு சான்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

ஜே வி பியும் ஒரு இனவாத கட் சி. அது தமிழ் மக்களின் வாக்குகளை பெற நாடகமாடுகிறது.  தமிழ் மக்களுக்கான தீர்வில் வெறும் மழுப்பலான பதில்களே இவற்றுக்கு சான்று.

எல்லா சிங்கள கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இனவாதத்தை மையமாக வைத்துதான் இயங்குகின்றது. புதிதாக வருபவர் என்ன செய்கின்றார் என பார்க்கலாம்.
போரை நடத்திய இராணுவ தளபதிக்கே வாக்கு அளியுங்கள் என தமிழர் கட்சி சொன்னதை நாம் இலகுவாக மறந்து விடுகின்றோம். சிங்கள இளம்சமுதாயம் தமிழர் பிரச்சனைகளை உணர தலைப்பட்டுள்ளார்கள் என அறிய முடிகின்றது. எனவே பழமைவாத கட்சிகளை தூக்கியெறிந்து விட்டு தமிழ் மக்கள் புதியதை தேடி பரீட்சித்து பார்க்கலாம் என்பது என் கருத்து. 😊

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..!
இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தியிருப்பதாக ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாரத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தகவலை அவர் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (05.04.2024) நடந்த ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாசை
இது தெடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி மட்டுமல்ல அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதையும் ஜேவிபி அறியாதது அல்ல.
இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் மற்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்துக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க 13 தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் மற்றும் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார்.
அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்காத நிலையில் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது.
கூட்டு முயற்சி
இந்நிலையில், அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் மற்றும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜேவிபியினர் கூறுவது அதிபர் தேர்தலுக்கான தமிழ் வாக்கு வங்கியை இலக்குவைத்தே என்பது புலனாகின்றது.
இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க வடக்கு கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை.
அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு கடற்றொழிலாளர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.
மாறாக எடுத்தற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜேவிபி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இறக்குமதி
இந்திய பருப்பை உண்ண மாட்டோம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம் மற்றும் தீவுப் பிரதேசங்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றது என விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தவர்கள் இந்த ஜேவிபியினர்.
ஆனால் அதிபர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதிகாத்து வருகின்றனர்.
அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்த போதும் ஜேவிபி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி ஐபிசி தமிழ்)
  • கருத்துக்கள உறவுகள்
TORONTO இல் நடந்த NPP இன் கூட்டத்தில் தமிழ் தரப்பின் 3 கேள்விகளுக்குப்பின், அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம் பகுதி - I
நன்றி மனோரஞ்சன்...
எங்கள் நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியல். எங்கள் நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மக்களிடையே மோதல்கள் இருக்கவில்லை. நான் தம்புத்தேகமயைச் சேர்ந்தவன். எங்களுடைய புகையிரத நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தமிழர். நான் போன வைத்தியசாலையில் வைத்தியர் ஒரு தமிழர். எங்களுடைய தபால் கந்தோரில் தபால் அதிபராக இருந்தவர் தமிழர். என்னுடைய அப்பா ஒரு பொறியியல் துறை தொழிலாளி. அங்கிருந்த பொறியாளரும் தமிழர் திரு. கனகரட்ணம். நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாக வாழ்ந்தோம். எங்களிடையே அப்படி ஒரு மோதல் இருக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் திரு. கனகரட்ணம் அவர்களை ஒரு வெளி மனிதராக உணர முடியவில்லை. தமிழ் வைத்தியரிடம் செல்லுகின்ற பொழுது ஒரு தமிழ் வைத்தியரிடம் நான் மருந்து வாங்க வந்திருக்கிறேன் என்ற உணர்வு ஒரு காலமும் வந்ததில்லை. எங்களுடைய சமூகத்தில் இனவாதம் இருக்கவில்லை. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதிகமான திருமணங்கள் சம்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் அவர்களுடைய தைப் பொங்கல் விழாக்களுக்கு சென்றிருந்தோம். அவர்கள் எங்களின் வெசாக் பண்டிகைக்கு வந்தார்கள். அவ்வாறாக எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கலாச்சார தொடர்புகளும் கூட இருந்தது. ஆனால் எங்களுடைய நாட்டின் அரசியல்வாதிகள் எல்லாவிதத்திலும் தோல்வி கண்டவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிலும் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் எப்போதும் தமது வெற்றிக்கு, தமக்கான வாக்குகளை பெறுவத்ற்கு குறுக்கு வழியை நாடுவார்கள் என நான் முன்னரே சொல்லியிருந்தேன்.
நாங்கள் பிறந்த சமூக பின்னணியின் அடிப்படையில் எங்களுக்குள் ஒரு கலாச்சாரம் பண்பாடு என்பது எங்களுக்குள் இருக்கின்றது. நான் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறக்கின்ற பொழுது எனக்கு நல்லது கெட்டது என்பதைச் சொல்லித் தருவது அந்த ஆகமத்தில் உள்ள கதைகளும் விளக்கங்களுமே. இந்த ஆகமக் கதைகளில் இவ்வாறாக இருக்கின்றன மகனே என்று எனக்கு சிறுவயதில் அது சொல்லித் தரப்படுகிறது. எங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் வருகின்ற பொழுது அதில் தலை தலையிட்டு தீர்த்து வைப்பவர் எங்களுடைய பண்சலையில் இருக்கும் பௌத்த பிக்குவாக இருப்பார். எங்களுடைய கிராமத்தில் பெரும் பண்டிகையாக இருந்தது எங்கள் கிராமத்து பண்சலையில் நடக்கும் நிகழ்வுகள்தான். எங்களுடைய பாடசாலைகளில் பௌத்த தர்மத்தை எங்களுக்கு போதித்தவர் எங்களது கிராம பண்சலையின் பௌத்த பிக்கு ஆவார். அப்போது என்ன நடக்கிறது? எனக்குள் சிங்கள பௌத்த பண்பாடு ஒன்று என் ஆன்மாவோடு சேர்த்து வளர்கின்றது.
ஒரு இஸ்லாமியரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது அல் குர்ஆனில் இருந்து போதிக்கப்படுகிறது. அவர் பிறந்ததிலிருந்து, வாழ்ந்து, அவர் மறைந்து, அவரின் இறுதிச் சடங்கு வரை அவருடைய வாழ்க்கை முறை அவர்களுடைய அல் குரானில் இருக்கும் நபிகள் நாயகத்தினுடைய திருமறைக்கூடக போதிக்கப்படுகிறது. குறிப்பாக அதிலிருக்கும் ஆயிரத்து அறுநூற்று அறுபத்தி ஆறு உபதேசங்கள் ஊடாக... அப்படித்தானே? அதே நேரம் அவர்களுடைய பண்டிகையாக இருப்பது ராமசான் பண்டிகை. அவருடைய கலாச்சாரமும் அதை ஒட்டியே வளர்க்கப்படுகிறது. அதாவது ஒரு இசுலாமியராக. ஒரு முஸ்லீமாக வளர்க்கப்படுகிறார்.
ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவரை பாருங்கள். அவருக்கு வாழ்க்கையில் நல்லது கெட்டது போதிக்கப்படுவது ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கூடாக போதிக்கப்படுகிறது. அவர்கள் சிறு வயது முதல் ஆலயத்தில் பாடல்கள் பாட அழைக்கப்படுகிறார்கள். அவருடைய ஊரில் பெரும் திருவிழாவாக இருப்பது அவருடைய ஆலயத்தோடு சேர்ந்த பண்டிகைகள். அவர்களுக்குள் அத்தகைய ஒரு பண்பாடு வளர்க்கப்படுகிறது.
நாங்கள் தொழில் ரீதியாக பொறியாளராக, தொழிலாளர்களாக, வைத்தியர்களாக இருப்போம். பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுகிறோம். அது எங்களுடைய தொழில். ஆனால் எங்களுடைய ஆன்மாவோடு ஒட்டிய பண்பாடு நாங்கள் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தோடு சேர்ந்தே வளர்க்கப்படுகின்றது. அது எமக்குள் அப்படியே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? தங்களுடைய எல்லாப் பணிகளும் தோல்வி கண்டதன் பின்பு இந்த எங்கள் ஆன்ம பண்பாட்டை கிண்டி எடுத்து தூண்டி விடுவார்கள். 'வாருங்கள் பெரும் ஆபத்து நிகழப் போகின்றது... எங்களுடைய தேரவாத பௌத்ததிற்கு என்ன நடக்கப் போகுது என்று பாருங்கள்.... எங்களுடைய நாட்டுக்கு என்ன நடக்க போகுது என்று பாருங்கள். 2050 ஆண்டில் முஸ்லிம் மக்கள் எல்லாம் பெரும்பான்மை இனமாக மாறப் போகிறார்கள்’. இப்படியாக அந்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இந்த ஆன்ம பண்பாட்டு உணர்ச்சியை தூண்டிவிடுவார்கள். ஏன்?
(தொடரும்)
May be an image of 9 people
 
 
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.