Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா

June 4, 2024
6 முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா

 

தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின. 

இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும். 

இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர். 

நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை. 

இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை. 

இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும். 

இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. 

முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது?

அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர். 

இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை. 

சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.

 

https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.