தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங் இலக்கணங்களை மாற்றி எழுதும் 'கேரி' - இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும்
பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
பிரதீப் கிருஷ்ணா
பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
"அலெக்ஸ் கேரி அபூர்வமானவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்டம்புகளுக்கு நெருக்கமாக நின்று சிறப்பாக செயல்பட்டார். பந்து அவர் கையில் எப்படியோ ஒட்டிக்கொள்கிறது. கொஞ்சம் கூட பயமேயில்லை"
பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பின் போது அந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இப்படிக் கூறியிருந்தார். காரணம், நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், தன்னுடைய பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் அலெக்ஸ் கேரி. அதனால், ஸ்மித் போல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
அதனால் கடந்த சில நாள்களாகவே, ஸ்டம்புக்கு அருகே நின்று வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை அவர் பிடிக்கும் வீடியோக்கள் பெருமளவு பகிரப்பட்டுவருகின்றன. அவரது இந்த கீப்பிங் அணுகுமுறை பற்றி கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
பேட்டிங்கிலும் அசத்தி, மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆட்ட நாயகன் விருதே வாங்கியிருந்தாலும், அவருடைய கீப்பிங் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கிறது.
பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது தான் கீப்பர்கள் ஸ்டம்புக்குப் பின்னாலேயே நிற்பார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பின்னே சற்று தள்ளியே நிற்பார்கள். அவ்வப்போது மட்டுமே மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் ஸ்பின்னர்களுக்கு நிற்பதுபோல் வந்து நிற்பார்கள். அது அரிதாகவே நடக்கும் ஒரு விஷயம்.
ஆனால், அந்த பிரிஸ்பேன் ஆட்டத்தில் அதை அடிக்கடி செய்தார் கேரி. அதுவும் மைக்கேல் நெஸர், ஸ்காட் போலாண்ட் போன்றவர்கள் பந்துவீசும்போது, மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேலாக வந்த பந்துகளுக்கு அப்படி நின்றார். அந்த வேகத்தில் வரும் பந்துகளை மிகவும் பக்கத்தில் நின்றுகொண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், கேரி அதை எளிதாகச் செய்வதுபோல் தெரிந்தது. லெக் சைட் செல்லும் பந்துகளைக் கூட சிறப்பாகப் பிடித்துக் கொண்டிருந்தார் அவர்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கேட்சையும் அவர் சிறப்பாகப் பிடித்தார். நெஸர் பந்துவீச்சில் ஸ்டோக்ஸுக்கு எட்ஜாக, எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதை எளிதாகப் பிடித்தார் கேரி. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெருமளவு பாராட்டப்பட்டது.
பிரிஸ்பேனோடு நிற்காமல், தெற்கு ஆஸ்திரேலியாவில் (அடிலெய்ட் ஓவல் மைதானம்) நடந்த மூன்றாவது ஆஷஸ் போட்டியிலும் அந்த அணுகுமுறையைத் தொடர்ந்தார் அவர். போலாண்ட் பந்துவீசியபோது ஸ்டம்புக்கு அருகிலேயே நின்றிருந்த அவர், வில் ஜேக்ஸ் உடைய கேட்ச்சை டைவ் அடித்துப் பிடித்தார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் நெஸர் பந்துவீச்சில், ஸ்டோக்ஸை கேட்ச் பிடித்தார் கேரி
"தைரியமான செயல்பாடு"
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வீரரும் விக்கெட் கீப்பருமான பாபா இந்திரஜித், "ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு செயல்பாட்டை கேரி கொடுத்தார்" என்று கூறினார்.
"இந்தியா போன்ற ஆடுகளங்களில் இதுபோல் வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று கீப்பிங் செய்வது சற்றே எளிதாக இருக்கும். ஆனால், வேகமும், பௌன்ஸும் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அப்படிச் செய்வது சாதாரண விஷயம் இல்லை. அங்கு கூடுதல் பௌன்ஸ் இருக்கும். அவர் அதை அசாதாரணமாகச் செய்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது, அவர் முதல் முறையாக அப்படிச் செய்வதுபோல் தெரியவில்லை" என்று கூறினார்.
டிரிபிள் எம் ரேடியோவில் அதுபற்றிப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், "இதைவிட சிறந்த, இதைவிட தைரியமான விக்கெட் கீப்பிங் செயல்பாட்டைப் பார்க்க முடியாது" என்று கூறினார். இயான் ஹீலி, அலீஸா ஹீலி என ஆஸ்திரேலியாவின் முன்னாள், இந்நாள் கீப்பர்கள் பலரும் கேரியின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டினார்கள்.
அனைத்து கீப்பர்களும் இப்படி அதைப் புகழ்வதற்குக் காரணம், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஸ்டம்புகளுக்கு அருகே நின்றார் என்பது மட்டுமல்ல. பிரிஸ்பேன் போன்ற ஒரு ஆடுகளத்தில், பகலிரவு போட்டி ஒன்றில் அவர் அப்படியொரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் அவருக்கு அதிக பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.
இந்திரஜித் சொல்வதுபோல் கூடுதல் பௌன்ஸ் கொண்ட ஒரு ஆடுகளத்தில் கேரி அப்படி செயல்பட்டிருக்கிறார். பகலிரவு போட்டியில், செயற்கை விளக்குகளுக்கு நடுவே அப்படி செயல்படுவது கூடுதல் சவால். அதிக ஆபத்தும் கூட. இருந்தாலும், அவர் அந்த இடத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டதால்தான் அதை 'தைரியமான செயல்பாடு' என்றிருக்கிறார் ஹாடின்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அடிலெய்டில் வில் ஜேக்ஸின் கேட்ச்சை டைவ் அடித்துப் பிடிக்கும் அலெக்ஸ் கேரி
ஸ்டம்புக்கு அருகே நிற்பதன் காரணம் என்ன? அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கீப்பர்கள் பின்னால் நிற்பார்கள் என்பதால், அது நன்றாக நகர்வதற்கான சுதந்திரத்தை பேட்டர்களுக்கு தரும். ஸ்விங்கை சமாளிக்க, பெரிய ஷாட் அடிக்க, சில சமயம் பௌலர்களைக் குழப்பவும் கிரீசுக்கு வெளியே பேட்டர்கள் நகர்வார்கள். பேட்டர்களின் இந்த நகர்வுகளைத் தடுக்கவே சில சமயம் மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் கீப்பர்கள் முன்னால் வருவார்கள்.
இங்கிலாந்து பேட்டர்கள் அவர்களின் 'பாஸ்பால்' (Bazball) அணுகுமுறையின் காரணமாக அதீதமாக நகர்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பந்திலுமே ரன் அடிக்கப் பார்ப்பதால், தொடர்ந்து அவர்கள் நகர்வதைக் காணமுடியும். அவர்களின் அந்த 'அட்டாக்கிங்' அணுகுமுறையை கட்டுப்படுத்த, கேரி கீப்பிங்கில் 'அட்டாக்' செய்தார். அவர் ஸ்டம்புக்கு அருகே நின்றது, இங்கிலாந்து பேட்டர்களின் நகர்வுக்குப் பெருமளவு முட்டுக்கட்டை போட்டது.
"வேகப்பந்துவீச்சுக்கு கீப்பர்கள் 'upto the stumps' (ஸ்டம்புகளுக்கு அருகே) வந்து நிற்பது பொதுவாகவே பேட்டர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஸ்பால் உத்தி காரணமாக இங்கிலாந்து பேட்டர்கள் ஸ்கூப், பேடில் போன்ற ஷாட்கள் ஆட தொடர்ச்சியாக நகர்வார்கள். ஆனால், கேரி இப்படி முன்னாள் வந்து நிற்பது அவர்களின் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும்" என்று கூறினார் இந்திரஜித்.
மேலும் பேசிய அவர், "இது ஷாட்கள் ஆடுவதில் மட்டுமல்ல, பந்துகளை விடுவதற்குமே யோசிக்கவைக்கும். நீங்கள் பந்தை 'well left' (ஆடாமல் விடுவது) செய்யும்போது உங்கள் கால்கள் சற்று மேலே எழும்ப வாய்ப்புள்ளது. அப்போது கீப்பர் ஸ்டம்ப் அருகே நின்றால், அங்கு ஸ்டம்பிங் ஆகும் வாய்ப்பும் உள்ளது. இதுவும் பேட்டர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்" என்றும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், கேரி ஒரே ஓவரில் தன் இடத்தை அடிக்கடி மாற்றுகிறார். ஒரு பந்து ஸ்டம்புக்கு அருகே இருப்பவர், அடுத்த பந்தே பின்னால் சென்று நிற்கிறார். இப்படிச் செய்வது, பந்தில் லென்த் குறித்து பேட்டர்கள் மனதில் கேள்விகள் எழுப்பலாம் என்கிறார் இந்திரஜித்.
அதேசமயம், இது வேகப் பந்துவீச்சாளர்களுக்குமே ஒருசில சவால்களைக் கொடுக்கும். கீப்பர்கள் முன்னே நிற்கும்போது 'ஷார்ட் லென்த்' பந்துகள் வீசமுடியாது. பந்து கொஞ்சம் லெக் திசையில் வெளியே சென்றால் பவுண்டரி ஆவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும். அதனால், அவர்களுக்கு இயல்பாகவே சில கட்டுப்பாடுகள் ஏற்பட்டுவிடும்.
இதன் காரணமாக கீப்பர்கள் முன்னால் வந்து நிற்க சில சமயங்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லும் இந்திரஜித், ஆஸ்திரேலிய பௌலர்கள் ஒருமித்த கருத்தோடு இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும்போது கீப்பர்கள் ஸ்டம்புக்கு அருகே வந்து நிற்பது, பேட்டர்களின் நகர்வை பாதிக்கும் என்கிறார் பாபா இந்திரஜித்
இதை கேரி எப்படி சாத்தியப்படுத்துகிறார்?
பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் இந்த கீப்பிங் அணுகுமுறைக்குத் தான் சிறப்பான பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்கிறார் அலெக்ஸ் கேரி.
"வேகப் பந்துவீச்சுக்கு எதிராக நான் ஸ்டம்புகளுக்கு அருகே நின்று பயிற்சி செய்வதில்லை. சில சமயங்களில் அது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டின் அடிப்படைகள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்தவேண்டும் அவ்வளவே - அது நாதன் லயானின் பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று நிறைய கீப்பிங் செய்திருப்பது" என்று சொல்லும் கேரி, "நான் இருக்கும் பொசிஷன்களை நம்புகிறேன். பின்னர் என் உள்ளுணர்வு, பந்தைப் பிடிப்பதற்கு ஏற்ற சரியான இடத்துக்கு என்னைக் கொண்டுசெல்லும் என்று நம்புகிறேன்" என்றும் கூறினார்.
சிறப்பான பயிற்சிகள் எதுவும் செய்வதில்லை என்று சொல்லும் அவர், வலது கை பேட்டர்களுக்கு எதிராக ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள்கிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்டர்களுக்கு வீசும்போது, அவர் நேராக நிற்பதில்லை. ஸ்டம்பில் இருந்து இரண்டு அடி பின்னால் நின்று, தன் இடது காலை ஆஃப் ஸ்டம்புக்கு நேராக வைத்திருக்கும் அவர், வலது காலை சற்று பின்னே வைத்துக்கொள்கிறார். பந்தைப் பிடிப்பதற்கு ஏதுவாக வலது பக்கம் இடுப்பை நகர்த்த அது உதவுவதாகக் கூறுகிறார் அவர்.
அவரது இந்த அணுகுமுறை பற்றி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளரான ஆர்த்தி சங்கரன் பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது, "கீப்பர்கள் பந்தைப் பிடிக்கும்போது கைகள் இலகுவாக (soft hands) இருக்கவேண்டும். 'Hard hands' ஆக இருக்கக்கூடாது. அப்போதுதான் பந்து கிளவுஸில் தங்கும். கைக்கும் அடிபடாது. அதற்காகத்தான் பொதுவாக பந்தைப் பிடித்து கையை சற்றுப் பின்னே கொண்டுசெல்வார்கள். வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அப்படி கைகளை இலகுவாக வைத்துப் பிடிக்க உடலை நன்கு நகர்த்தவேண்டும். அது கடினமான விஷயம். அதனால், தன் வலதுபக்க இடுப்பை நன்கு நகர்த்துவதற்காக கேரி அப்படி நிற்கிறார்" என்று அவர் கூறினார்.
வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நிற்பதற்கு பயிற்சி எடுப்பதில்லை என்று சொல்லும் கேரி, எதேச்சையாக இந்த முறையைக் கண்டறிந்திருக்கக் கூடும் என்று சொல்லும் ஆர்த்தி சங்கரன், அவர் இடது கை பேட்டர்களுக்கு அப்படி நிற்பதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். "ஒருவேளை அவரது இடதுபக்க இடுப்பு எளிதாக நகர்வதாகவும், வலதுபுறம் நகராமலும் இருக்கலாம். அதனால், அவர் வலது காலைப் பின்னால் வைத்து, அந்தப் பக்கம் நகர்வதை எளிமையாக்க நினைத்திருக்கலாம்" என்றார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இப்படி ஸ்டம்புக்கு அருகே வந்து கீப்பிங் செய்வதற்காக தான் தனியாக பயிற்சி எடுப்பதில்லை என்கிறார் கேரி
தோனி - கேரி இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும்
கேரியின் இந்த அணுகுமுறை ஒருவகையில் தோனிக்கு நேர்மாறாக இருக்கிறது என்றும், இன்னொரு வகையில் தோனியின் மனநிலையோடு ஒத்துப்போகிறது என்றும் ஆர்த்தி சங்கரன் கூறுகிறார்.
தோனியின் சிறப்பம்சங்களில் ஒன்று அவரது மின்னல்வேக ஸ்டம்பிங். அவர் அதை வேகமாகச் செய்வதற்கான காரணம் - பெரும்பாலான கீப்பர்கள் போல், பந்தைப் பிடித்தவுடன் அதன் தாக்கத்தைக் குறைக்க தோனி தன் கையை பின்னால் எடுத்துச் செல்லமாட்டார். கைகளை உறுதியாக வைத்திருப்பார் (Firm Hands). அதனால், கையை பின்னால் எடுத்துச்சென்று மீண்டும் ஸ்டம்ப் நோக்கி கொண்டுவருவதற்கான நேரம் அவருக்கு மிச்சமாகும். இதுதான் அவருடைய அதிவேக ஸ்டம்பிங்குகளின் ரகசியம். இது வழக்கமான கீப்பிங் இலக்கணத்துக்கு எதிரானது என்றாலும், அதுதான் அவரது பலமாக இருக்கிறது.
இந்த இடத்தில்தான் தோனியிடமிருந்து கேரி வித்தியாசப்படுகிறார் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "கேரி பந்தைப் soft hands-ஓட பிடிக்கப் பார்க்கிறார். அதற்காக நகரத் தயாராக இருக்கிறார். அதனால், அவர் ஸ்டம்பிங் விஷயத்தில் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்று கூறினார் அவர். இருவரும் வெவ்வேறு விதமான பௌலர்களுக்கு அப்படி நிற்கிறார்கள் என்றாலும், அவர்கள் பிரதானப்படுத்தும் விஷயம் மாறுபடுகிறது என்கிறார் அவர்.
அதேசமயம், "தன்னுடைய உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை உணர்ந்து, அதை தன்னுடைய ஆட்டம் மேம்படுவதற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு கேரி ஒரு நல்ல உதாரணம். இந்த எண்ணம் தான் அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது" என்று சொல்கிறார் ஆர்த்தி. தோனி தன்னுடைய 'firm hands'-ஐ பயன்படுத்துவதுபோல், கேரி தன் வலதுபக்க இடுப்பைப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பந்தைப் பிடிக்கும் விஷயத்தில் தோனிக்கும், அலெக்ஸ் கேரிக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆனால், இருவருமே கீப்பிங் இலக்கணத்திலிருந்து சற்று மாறுபடவே செய்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே!
பிரிஸ்பேன் ஆஷஸ் (2025) டெஸ்ட் போட்டியிலிருந்து கேரியின் இந்த கீப்பிங் பரவலாகப் பேசப்படுவருகிறது. ஆனால், இதேபோன்ற செயல்பாட்டை அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார். 2022 டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதேபோல் இரண்டு கேட்சுகளைப் பிடித்தார் அவர்.
மைக்கேல் நெஸர் பந்துவீச்சில் ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப்பிங் செய்த அவர், ராஸ்டன் சேஸ் மற்றும் ஜாஷுவா டா சில்வா ஆகியோரின் கேட்சுகளைப் பிடித்தார். அந்த இரண்டு பந்துகளுமே மணிக்கு சுமார் 130 கிமீ வேகத்தில் வீசப்பட்டிருந்தன.
அந்தப் போட்டி முடிந்த பிறகு பேசிய கேரி, "முதல் இன்னிங்ஸில் பந்தின் நகர்வைத் தடுக்க ராஸ்டன் சேஸ் தொடர்ந்து கிரீஸிலிருந்து வெளியே சென்று ஆடினார். அதனால், முன்னாள் வந்து நிற்கும் திட்டத்தை அப்போதே சொன்னேன். ஆனால், முதல் இன்னிங்ஸில் அதை செயல்படுத்த முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அதற்குப் பலன் கிடைத்தது" என்று கூறினார்.
பட மூலாதாரம்,Getty Images
இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் 177 கேட்ச், 19 ஸ்டம்பிங் என 196 எதிரணி பேட்டர்களை அவர் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இது ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த கீப்பர்களாகக் கருதப்படும் ராட் மார்ஷ், இயான் ஹீலி, ஆடம் கில்கிறிஸ்ட், பிராட் ஹாடின் ஆகியோரை விடவும் அதிகம்.
அதனால் தான் இன்று சிறந்த கீப்பர்கள் பற்றிய விவாதத்தில் கேரியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பின் எஸ்இஎன் ரேடியோவுக்குப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ஹீலி, "அவர் தான் தற்போதைக்கு உலகின் சிறந்த கீப்பர் என்று நினைக்கிறேன். அதுவும், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே..." என்று கூறியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cx237lyzp0jo
By
ஏராளன் ·