Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

      சாதி கெட்ட 'சாதி'

                      - சுப.சோமசுந்தரம்


           தலைப்பில் முதலில் வரும் சாதி, ஒழுக்கம் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்; பின்னர் வரும் 'சாதி', ஜாதி எனும் பிரிவினையின் தமிழ் வடிவம்.
          ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில், மும்பையில் கணித மாணாக்கர்க்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வில் பங்கேற்ற பின் ஞாயிறன்று (16 ஜூன் 2024) ஊர் திரும்பியதும் நேற்று (17 ஜூன்) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களுடன் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது கணித உலகின் நட்பு வட்டம் "Back in the saddle" என்று நினைக்க வைப்பதும், இந்தப் பக்கம் வரும்போது தோழர்கள் அதே உணர்வைத் தருவதும் (இல்லாத) இறைவன் எனக்கு அளிக்கும் வரம் போலும் ! நண்பர்கள் மற்றும் தோழர்கள் துணையால் "Back to the pavilion" எனும் நிலையே இல்லாமல் போனது வாழ்வின் பேரானந்தம். நிற்க.
         அது ஒரு கண்டனக் கூட்டம். எதற்காக ?
           ஒரு தலைவனும் தலைவியும் சுமார் ஆறு வருடங்கள் காதலித்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டுத் தமிழ் நிலத்தின் நடைமுறைதானே ! தொல்காப்பியன் கூற்றுப்படி, இடையில் தமிழ்ச் சமூகத்தில் புகுந்த பொய்யும் வழுவும் பெற்றோரையும் உற்றோரையும் திருமணத்தை  அங்கீகரித்து மணமுறையினை வகுப்பவர்களாக மாற்றியது.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
             - தொல்காப்பியம், பொருளதிகாரம், பாடல் 145.
(ஐயர் - மூத்தோர் - பெற்றோர், உற்றோர்;
யாத்தனர் - இயற்றினர், அமைத்தனர்;
கரணம் - மணமுறைகள்)

          தொல்காப்பியன் காலத்திலேயே பொய்யும் வழுவும் உள்ளே புகுந்து விட்டது என்பது தெரிகிறது. வருணாசிரமம் எனும் அபத்தமெல்லாம் அந்த 'வழு'வில் அடக்கம்ணே ! சரி, கதையை விட்ட இடத்தில் தொடருவோம். மணமகள் 'இல்லத்துப் பிள்ளைமார்' என்று சற்று உயர்ந்த ரகமாம் (அவாளின் வர்ணாசிரமப் பகுப்பின்படி எல்லாம் சூத்திர இழவுதான்). மணமகன் அருந்ததியர் எனும் குறைந்த ரகமாம். இரத்த வகைகள், இழவெடுத்த சாதி வகைப்படியே அமையும் என்று எவனோ அறிவியல் பூர்வமாக நிறுவி நோபல் பரிசு வாங்கியிருப்பான் போல !
         பெண் வீட்டார் சம்மதிக்க மாட்டார் எனத் தெரிந்து இக்காதல் இணையர் CPI(M) கட்சியின் நெல்லைக் கிளையில் தஞ்சம் புகுந்தனர். இரு மனமொத்த அத்திருமணத்தைப் பதிவு செய்ய கட்சித் தோழர்கள் ஆவன செய்தனர். வெகுண்டெழுந்த பெண் வீட்டார் அடியாட்கள் துணையுடன் CPI(M) கட்சி அலுவலகத்தை அடைந்து நாற்காலிகளையும் கண்ணாடிக் கதவுகளையும் அடித்து உடைத்தனர். அதனைத் தடுத்த பெண் வழக்கறிஞரும் தோழருமான பழனி அவர்களும், அலுவலகத் தோழர் சிலரும் தாக்கப்பட்டனர். காவலர் இருவர் கண்முன்னேயே இத்தாக்குதல் நடைபெற்றது. ஏற்கெனவே தோழர்கள் காவல் நிலையத்திற்குக் கொடுத்த தகவலால் அங்கு வந்த காவலர்களே அவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். கூடவே பெண் வீட்டார்க்கும் தகவல் கொடுத்தவர்கள் யாராக இருக்கும் ? அதன் பின் ரவுடிகளுக்குத் தகவல் தந்தோர் யார் ? முன்னெச்சரிக்கையாக காதலர் இருவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதால், அவர்களைக் கட்சி அலுவலகத்தில் எதிர்பார்த்து வந்தோர் அடைந்த ஏமாற்றத்தின் விளைவு தாக்குதலாக வெளிப்பட்டதோ ! தோழர் பழனியுடன் தொலைபேசியில் பேசிய ஒருவர் (தம்மை அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலராய்/அதிகாரியாய் அறிமுகம் செய்து கொண்டவர்), ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டாம் என்றும், அக்காதலர் பாதுகாப்புக் கருதித் தங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்குமாறு கூறியதாகவும் கேள்வியுறுகிறோம். அவ்வாறு ஒப்படைக்கப் பட்டிருந்தால் கட்டப் பஞ்சாயத்தின் மூலம் அப்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அருந்ததியரான அம்மணமகன் நிலை என்னவாகி இருக்கும் ? தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆவணக் கொலைகளின் டைரிக் குறிப்புகள் தெளிவாக உள்ளனவே ! காதல் ஜோடி காவல் நிலையம் செல்லாமல் கம்யூனிஸ்டுகளிடம் தஞ்சம் அடைந்தது சரியான முடிவு என்று தெரிகிறதே ! பெற்றோர் வந்து பேசினால் பொறுப்புணர்ச்சியுடன் இரு சாராரிடமும் பக்குவமாகப் பேச வல்லவர்தாமே நம்  தோழர்கள் ! அவ்வாறிருக்க எடுத்த எடுப்பில் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அவசியம் என்ன ? மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பதிவானவை.
           அலுவலகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே CPI(M) ன் நெல்லைக் கிளையின் சார்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீராம், "சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இனி எங்கள் அலுவலகம் திறந்தே இருக்கும்" என்று அறிவித்ததும், நேற்று நடந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அதையே மாநிலம் முழுமைக்கும் வழிமொழிந்ததும் சமூக நன்மைக்கான நமது போர்க்குணம். போராளிகள் அப்படித்தானே இயங்க முடியும் !
           பொதுவுடைமைக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் சமூக நீதிக்கானவை. ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல் அறத்தை நிலைநாட்டும் கடமை ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அடியாட்களில் சிலர் ஏற்கெனவே கொலைக்குற்றம் முதலிய வழக்குகளில் சிக்கியவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். அத்தகையோர் மீது 'குண்டாஸ்' சட்டம் பாய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே சாதியப் பிற்போக்குவாதிகளுக்கான எச்சரிக்கையாய் அமையும்.
             நாங்குநேரி சாதிவெறித் தாக்குதலைத் தொடர்ந்து மாணாக்கரிடையே சாதிவெறி எனும் கொடுமை களைய முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த ஆலோசனைக் குழு தற்செயலாகத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த நேரமிது. வரும் தலைமுறையாவது சாதியற்ற சமூகம் எனும் விடியலை நோக்கி முன்னேற அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாதி அடையாளம் நமக்கான அவமானம் என்று சமூகம் உணர வேண்டும். மார்க்ஸும் அம்பேத்கரும் பெரியாரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும். 
"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்"  என்று நாவுக்கரசர் எழுப்பும் வினா கோயில்களில் கூட ஒலிக்க வேண்டும்.

https://www.facebook.com/share/p/TCRhdvoaKxBZZmfz/?mibextid=oFDknk

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

அலுவலகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே CPI(M) ன் நெல்லைக் கிளையின் சார்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீராம், "சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இனி எங்கள் அலுவலகம் திறந்தே இருக்கும்" என்று அறிவித்ததும், நேற்று நடந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அதையே மாநிலம் முழுமைக்கும் வழிமொழிந்ததும் சமூக நன்மைக்கான நமது போர்க்குணம். போராளிகள் அப்படித்தானே இயங்க முடியும் !

🙏..........

கையறு நிலையில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே எங்களிற்காக போராட வருவார்கள் என்பது தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிஜம். சமூக நீதியும், தேசியமும், ஒருமைப்பாடும் பேசும் மற்றவர்கள் வாக்குகளின் கணக்கைப் பார்த்தே என்ன நடவடிக்கை என்று தீர்மானிக்கின்றனர்.... 

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் | ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.