Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிராமணியத்தை எதிர்த்துவிட்டோம்... ஆனால் சாதியை இல்லை - தமிழகத்தில் தலித்களின் நிலை குறித்து சசிகாந்த் செந்தில் கருத்து
10 ஜூலை 2024

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியை பூர்வீகமாக கொண்டவர் சசிகாந்த் செந்தில். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தன்னுடைய பணியை துவங்கிய அவர், 2019-ல் தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தார்.

"பன்முகத்தன்மை வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகள் சமரசம் செய்யப்படும் போது, அரசு அதிகாரியாக பணியை தொடர்வது நியாயமற்றது’’ என அப்போது அவர் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி நடத்திய பிரத்யேக நேர்காணலில் காங்கிரஸின் அரசியல், இந்தியா கூட்டணி, வெறுப்பு அரசியலுக்கு எதிரான கொள்கைப் போர், தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி குறித்து சசிகாந்த் செந்தில் விவரித்துள்ளார். அந்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் இங்கே!

 

மக்களை மதிக்கும் மனிதர் ராகுல்

பிராமணியத்தை எதிர்த்துவிட்டோம்... ஆனால் சாதியை இல்லை - தமிழகத்தில் தலித்களின் நிலை குறித்து சசிகாந்த் செந்தில் கருத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி : காங்கிரஸை வழிநடத்துவதற்கான முழுத் தகுதி ராகுல் காந்தியிடம் இருக்கிறதா?

பதில்: முதலில் ஒருவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். மக்களைப் பற்றிய உணர்வு இல்லாதவர்கள் எப்படி தலைமையேற்று நடக்க முடியும்? (ராகுல்) மக்களை மதிக்கும் மனிதர். தலைவர் என்பதைக் காட்டிலும் தோழர் எனலாம். ராகுல் `இந்தியா’ என்னும் சிந்தனையை புரிந்து கொண்டவர்.

இந்த நாடு எத்தகைய அடிப்படை தத்துவத்தில் உள்ளது. இந்த நாட்டை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்தவர். பாரத் ஜோடோ யாத்திரைக்காக 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்தார். இன்றைய கால கட்டத்தில் எந்த தலைவர்கள் இப்படி நடந்தார்கள் என்று கூறுங்கள்? காங்கிரஸின் முக்கியமான ஆயுதமே நடைதான். கிராமம் கிராமமாக சென்று மக்களோடு இருந்து பழகுவதுதான் காங்கிரஸ்.

காங்கிரஸ் என்னும் உள்ளுணர்வுடன், தலைமையேற்று நடத்துகூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது ராகுல் காந்தி மட்டும்தான்.

 

கேள்வி : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் ஆற்றிய முதல் உரையில் இந்துக்கள் குறித்து அவர் பேசியது விவாதப் பொருளானது. முதல் உரையில் இது குறித்துதான் பேசியிருக்க வேண்டுமா? முக்கிய மக்கள் பிரச்னைகள் இல்லையா?

பாஜகவை எதிர்க்கும் முக்கியமான கடமை பெண்களுக்கு உண்டு – காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்
படக்குறிப்பு,காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுடன் பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி நடத்திய நேர்காணல்

பதில்: நாட்டில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்துகின்றனர். அதில் அரசியல் ஆதாயம் காண்கிறார்கள். தேர்தலில் வெற்றியடைகிறார்கள். வெற்றி பெற்று நீங்கள் பதவிகளை பெறலாம். ஆனால் சமுதாயத்தின் இழை உடைகிறது.

என்னுடைய பக்கத்துவீட்டுக்காரர் என்னை எதிரியாக பார்க்கிறார். இந்த பொறி பற்ற வைக்கப்பட்டால் அதை யாராலும் நிறுத்த இயலாது. மணிப்பூர் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இவர்களே (பாஜக) கொளுத்திப்போட்டார்கள். அதை இவர்களால் நிறுத்த முடியாது.

அப்படி இருக்கும் போது எப்படி மனிதர்களின் உயிர்களையும், எதிர்காலத்தையும் மதிக்காமல் அவர்களால் அரசியல் செய்ய முடியும்?

அதற்கு அவர் எடுத்துக்காட்டாக கூறிய விஷயத்தை மடைமாற்றிவிட்டனர். அவர் இந்துக்கள் என்று கூறவில்லை. இந்து மதம் மட்டுமல்ல அனைத்து மதமும் அமைதியையும் அகிம்சையையும் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது.

எந்த ஒரு இந்துவும், கிருஸ்தவரும் பிரச்சனைக்கு போவதில்லை. பிரச்சனைக்கு போவது பாஜக மட்டும்தான். அப்படி கருத்தில் கொண்டால், அவர்கள் இந்த மதத்திற்கு உண்மையாக இருக்கின்றார்களா என்ற கேள்வியைத்தான் அவர் எழுப்பினார். அதை அப்படியே மடை மாற்றி இந்துக்களுக்கு எதிராக ராகுல் பேசினார் என்றனர்

அதற்கு அவர் பதிலும் கொடுத்தார். நீங்கள் (பாஜகவினர்) இந்துக்களுக்கு பிரதிநிதிகள் கிடையாது. இங்கு இருக்கும் நாங்களும் இந்துக்கள்தான். நாங்கள் இந்து மதமட்டுமல்ல, அனைத்து மதத்தையும் கொண்டாடும் நாட்டில் இருந்து வருகின்றோம். இதில் நீங்கள் (பாஜகவினர்) பிரித்து பேச வேண்டாம் என்று ராகுல் கூறினார். பாஜகவுக்கு தெரிந்த ஒரே அரசியல் அதுதான்.

குடியரசுத் தலைவரின் உரையை எடுத்து பாருங்கள். அதே பழைய பாட்டு தான்.. ராகம் தான். நான்கு வார்த்தைகள்தான், ’ஸ்டேன்டப் இந்தியா, சிட் அப் இந்தியா, ட்ரான்ஸ்ஃபார்ம், ரிஃபார்ம்’ என்று நகைச்சுவையாகிவிட்டது.

என்னதான் செய்யப்போகிறீர்கள் நீங்கள்? வெறுப்பை வளர்ப்பதை தாண்டி, பயத்தை உருவாக்குவதை தாண்டி, நீங்கள் (பாஜகவினர்) என்னதான் செய்யப் போகிறீர்கள்?

 

ராகுல் காந்தி செய்தது சரி தான்!

பிராமணியத்தை எதிர்த்துவிட்டோம்... ஆனால் சாதியை இல்லை - தமிழகத்தில் தலித்களின் நிலை குறித்து சசிகாந்த் செந்தில் கருத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராகுல் காந்தி

கேள்வி : ஒரு எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகர் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதம் போன்ற விவகாரங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் தந்து விவாதிக்க வேண்டுமா?

பதில்: பொதுவெளி விமர்சனம் என்பது நீங்கள் எதை காட்டுகிறீர்கள், கூறுகிறீர்கள் என்பதை பொறுத்துதான். நாடாளுமன்றம் அப்படி கிடையாது. அங்கே நிகழும் அனைத்தையும் பார்க்க வேண்டும்.

சன்சாத் டிவி என்று ஒன்று இருக்கிறது. எத்தனை முறை எதிர்க்கட்சியை காட்டுகிறது? எத்தனை முறை எதிர்கட்சியினரின் விவாதத்தை காட்டுகிறது? சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு அவைக்கு வந்த முதல்முறையே, பட்டியலில் இல்லாத விவகாரம் குறித்து அவர் (ஓம் பிர்லா) பேசினார்.

அவையில் அன்றைய நாளுக்கான நிரல் இருக்கும். என்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறித்த பட்டியல் இருக்கும். அதன்படியே அவையின் பணிகள் துவங்கும். ஆனால் அவர் (ஓம் பிர்லா) யாருக்கும் தெரியாமல், ’அவசரகாலம்’ குறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற போகிறோம் என்கிறார்.

எதிர்க்கட்சியினருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் இது குறித்து ஆளும் கட்சியினருக்கு தெரிந்திருக்கிறது. இவையெல்லாம், ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் நிகழ்வு.

உ.பி தேர்தல் முடிவுகளை யாருமே சரியாக கணிக்கவில்லை!

ராகுல் காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி : கர்நாடகா, ராஜஸ்தானில் தேர்தல் யுக்திகளை வகுக்கும் காங்கிரஸ் அணியின் தலைவராக இருந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றீர்கள். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. அந்த வாக்குகள் எங்கே கை நழுவிப் போனது என்று நினைக்கிறீர்கள்?

பதில்: பெரிய அளவில் போகவில்லை. கர்நாடகத்தை பொறுத்தவரை, சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களை ஒப்பிட்டு பார்க்க கூடாது. அங்கே இந்துத்துவத்தை மிக தீவிரமாக பரப்பியுள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் அதை பார்த்தோம்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இவ்வாறு இருக்காது என்பது எங்களின் கணிப்பும் கூட. பயத்தையும், மக்களை மக்களிடம் இருந்து பிரிக்கும் அரசியலையும் செய்ய, மக்கள் பயத்தினால் அவர்களுக்கு வாக்களித்தார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு ஒரு இடத்தில்தான் வெற்றி கிடைத்தது.

இம்முறை நாங்கள் 12 - 15 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் 9 இடங்களில் வெற்றி பெற்றோம். இது சாதாரண விஷயம் இல்லை. மதசார்பற்ற ஜனதா தளம் இடம் மாறியதும் இதற்கு காரணம். ஆனால் இதனை நான் பின்னடைவாக காணமாட்டேன்.

ராஜஸ்தானிலும் பெரிய அளவில் எங்களுக்கு பின்னடைவு கிடையாது. உ.பி முடிவுகளை யார் எதிர்பார்த்தது. நாங்கள் கூட சரியாக கணிக்கவில்லை. அப்படி இருக்கின்ற சூழலில், ஒடிஷாவைத் தவிர இந்தியா முழுவதும் மக்கள் பாஜகவைப் பற்றி புரிந்து கொண்டனர். மக்களை எவ்வளவு நாள்தான் ஏமாற்ற முடியும். எவ்வளவு நாள்தான் வெறுப்பை பரப்பிக் கொண்டே இருக்க முடியும்.

இந்த வெறுப்பு அரசியல், ஒரு மனநிலையில் இருந்து வருகிறது. அந்த மனநிலை நான் மேலே, நீ கீழே என்பதுதான். இந்து சமூகம்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறது.

இந்து சமூகத்தில் பெருவாரியாக இருக்கும் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த 50 ஆண்டுகளில், சமூக நீதியால், அரசியலமைப்பு சட்டத்தால் யார் முன்னேறியுள்ளார்களோ அவர்கள்தான் இதில் பாதிக்கப்பட கூடியவர்கள்.

 

நல்லதை பரப்புவதற்கும் கெட்டதை பரப்புவதற்கும் உள்ள வித்தியாசம்

கேள்வி : இரண்டு முறை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும், காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 99. நரேந்திர மோதி என்ற பிம்பத்தை உடைக்கமுடியவில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், அவர்களின் வெற்றியை சிறுமைப்படுத்தி, 90 இடங்களில் பெற்ற வெற்றியை பெரிய அளவில் கொண்டாடுகிறீர்களா?

பதில்: நாங்கள் யாரை எதிர்த்து போட்டியிட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகிறது. சம்பளம் கொடுக்க காசில்லை. எந்த ஊடகங்களிலும் எங்களை காட்டவில்லை. எங்களின் எந்த வார்த்தையும் வெளியே போகவில்லை. எங்களுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கிறது.

நல்லதை பரப்புவதற்கும், கெட்டதை பரப்புவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் கெட்டதையும் பயத்தையும் பீதியையும் பரப்ப நினைக்கின்றார்கள். அது எளிமையாக பரவும். அதை எதிர்த்து போராடும் போது நாங்கள் பலமடங்கு வேலை செய்ய வேண்டியது இருக்கிறது. இப்படி இந்தியா முழுவதும் பணியாற்றியதால்தான் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது.

பிராமணியத்தை எதிர்த்துவிட்டோம்... ஆனால் சாதியை இல்லை - தமிழகத்தில் தலித்களின் நிலை குறித்து சசிகாந்த் செந்தில் கருத்து
படக்குறிப்பு,சசிகாந்த் செந்தில் பேட்டி

கேள்வி : காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி கட்சி என்று நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்திருக்கிறார் பிரதமர் மோதி. சொந்த காலில் நிற்கும் அளவிற்கு பலமில்லை. கூட்டணி கட்சிகளின் பலத்தில்தான் காங்கிரஸினர் வென்றுள்ளனர். இல்லையென்றால் இந்த வெற்றியும் இல்லை என கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்தார். இன்னும் காங்கிரஸ், தன்னுடைய கூட்டணி கட்சிகளை நம்பித்தான் இருக்கிறதா? அல்லது கூட்டணிக்கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறதா?

பதில்: காங்கிரஸை பற்றி பிரதமர் இவ்வளவு பேச வேண்டிய அவசியம் என்ன? இன்று ஒரு கொள்கை போராட்டம் நடக்கிறது. பல கட்சிகள் மட்டுமின்றி, பல சமூக இயக்கங்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எங்களுடன் நிற்கின்றனர். அவர்கள் ஏன் நிற்க வேண்டும்? ஏன் என்றால் இது ஒரு கொள்கை போராட்டம். இந்த போராட்டத்தில் நீ எந்த கட்சி, நான் எந்த கட்சி என்பதெல்லாம் கிடையாது.

கேள்வி : கொள்கைப் போராட்டம் என்றாலும் கூட, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் நிலைப்பாடும், டெல்லியில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருக்கிறது. இந்த ஒற்றுமை என்பது தற்காலிகமானதா?

பதில்: இது தற்காலிகம் கிடையாது. இது ஒரு அரசியல் முதிர்ச்சி. நான் தமிழக காங்கிரஸில் இருக்கின்றேன். நான் அனைத்திந்திய காங்கிரஸின் அனைத்து முடிவுகளுடனும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன் என்றால் காங்கிரஸிலும் ஜனநாயகம் உண்டு. தமிழகத்திற்கு என்ன தேவையோ அதைத்தான் நாங்கள் செய்வோம். அது போல்தான் கூட்டணியினரும் அவர்கள் கட்சியில் அவர்களின் அரசியல் எதையோ அதை செய்யலாம். ஆனால் நாங்கள் யாரும் மக்களை மக்களிடம் இருந்து பிரிக்கும் அரசியலை செய்பவர்கள் இல்லை.

 
Play video, "நரேந்திர மோதி பிம்பத்தை ராகுல் காந்தியால் உடைக்க முடியவில்லையா?", கால அளவு 22,14
22:14p0j938xl.jpg.webp
காணொளிக் குறிப்பு,சசிகாந்த் செந்தில் எம்.பி நேர்காணலின் முதல் பாகம்

தீய சக்தியாக பார்க்கப்படும் பா.ஜ.க

கேள்வி : தமிழகத்தில் புதிய கட்சிகள் வந்த வண்ணம் உள்ளனர். விஜய்யின் புதிய கட்சி வந்துள்ளது. நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்த்தை பெற கூடிய அளவிற்கு வாக்குகளை மக்களவை தேர்தலில் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எந்த நிலையில் உள்ளது?

பதில்: காங்கிரஸின் சித்தாந்தம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் கூட சிறிய சிறிய கிராமங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கட்டமைப்பாக ஒரு சில பணிகளை நாங்கள் செய்துதான் ஆக வேண்டும். அதற்காக நாங்கள் பல இடங்களுக்கு செல்ல வேண்டும், மக்களுடன் இருக்க வேண்டும், வாழ்ந்து காட்ட வேண்டும். ஆனால் காங்கிரஸ் என்ற சித்தாந்தம் இந்த மண்ணை விட்டு மறையவே மறையாது. அது சமத்துவத்தை எதிர்த்து நிற்கும் நபர்களுடன் சண்டை போட நிற்கும்.

கட்சியில் நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். வெறுப்பை மிக எளிதாக பரப்பிவிடலாம். ஆனால் அன்பையும் அரவணைப்பையும் பரப்ப வேண்டும் என்றால் நாங்கள் 10 மடங்கு வேலை செய்ய வேண்டும். கட்சியை தூக்கி நிறுத்த, அந்த காலகட்டத்தில் இளைஞர்களும் நல்லுள்ளங்களும் ஒன்று சேர்வார்கள்.

கேள்வி : காங்கிரஸை தூக்கி நிறுத்த உங்களைப் போன்ற இளம் தலைவர்கள் எப்போது முன்வர முடியும்? எந்தெந்த நடவடிக்கைகள் காங்கிரஸை முன்னிலைக்கு கொண்டுவரும்?

பதில்: காங்கிரஸின் பேச்சே நடைதான். நாங்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மக்களுடன் வாழ வேண்டும். காமராஜர் ஆட்சி காலம் குறித்து இன்றும் பேசுகிறார்கள் என்றால் அவர் அப்படி ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டினார். அப்படி மக்களை அணுகும் போதுதான் மக்கள் காங்கிரஸை சரியாக பார்ப்பார்கள். மக்களும் அதனை எதிர்பார்க்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பு ஒரு 10 வருடத்திற்கு முன்பு இருந்ததா என்று கேட்டால், அது சந்தேகம்தான்.

இன்று தமிழகத்தில், பாஜகவை மிகப்பெரிய தீய சக்தியாக மக்கள் பார்க்கின்றனர். அக்கட்சியை எதிர்த்து நிற்கும் முதல் கட்சியாக காங்கிரஸ் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

 

கேள்வி : நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றீர்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இதே 10 இடங்களை கணக்கு வைத்து 60 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சியிடம் வலியுறுத்துவீர்களா?

பதில்: அது குறித்து இப்போது ஏதும் தெரிவிக்கும் எண்ணம் இல்லை. அந்த காலகட்டத்தில் அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

தமிழகத்தில் தலித்களின் நிலை எப்படி இருக்கிறது?

கேள்வி : தமிழகத்தில் தலித்களின் நிலை எப்படி இருக்கிறது?

பதில்: தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தலித்களின் நிலை சரியாக இல்லை. என்னுடைய புரிதலின் படி, நாம் பிராமணியத்தை எதிர்த்துவிட்டோம். ஆனால் சாதியை எதிர்க்கவில்லை. சாதியை நாம் இன்னும் தூக்கி சுமந்து கொண்டுதான் இருக்கின்றோம். சாதிய கட்டமைப்பின் முழு வலியையும் தாங்குவது தலித் சமூகம்தான். அவர்களுக்கு பெரிய அளவில் விமோட்சனம் கிடைத்துவிட்டதாக கூற முடியாது.

கேள்வி : சாதிய கட்டமைப்பை உடைபடும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கிறாரே, சாதிய கட்டமைப்பு என்பது மதில் சுவர் கிடையாது. ஒவ்வொரு கல்லாக உடைப்பதற்கு. அது ஒரு சித்தாந்தம். ஒரு நிமிடத்தில் அதை யோசித்தால் உடைத்துவிடலாம். தேர்தல் லாபங்களுக்காக பாஜக போன்ற கட்சிகள் எண்ணெய் ஊற்றி வளர்க்கும் வேலையை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். என்னைப் பொறுத்த வரையில் நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம். மெதுவாக பயணித்தாலும் அந்த பாதை சரியானதாகதான் இருக்கிறது.

 
Play video, "முஸ்லிம்கள்தான் புதிய தலித்துகள்- சசிகாந்த் செந்தில் பேட்டி", கால அளவு 12,57
12:57p0j98892.jpg.webp
காணொளிக் குறிப்பு,சசிகாந்த் செந்தில் எம்.பி நேர்காணலின் இரண்டாம் பாகம்

பாஜகவின் உண்மையான எதிரிகள்

கேள்வி : ஒருபுறம் சாதிய கட்டமைப்பு ஒழிய வேண்டும் என்கிறீர்கள் மற்றொரு புறம் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை உள்ளது. இதை எப்படி புரிந்து கொள்வது?

பதில்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்டவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகள் (Affirmative Actions) மூலமே சாதியை ஒழிக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகள் சரியான முறையில் அவர்களை சென்றடைகிறதா என்பதை அறியத்தான். பாஜக ஏன் அதனை எதிர்க்கிறது. இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பால் பயனடைபவர்கள் யார்? இந்துக்கள்தான்.

இந்து மக்களுக்கு பலன் தரும் விசயத்தை பாஜக ஏன் எதிர்க்கிறது? அவர்கள் சாதிய கட்டமைப்பை விரும்பும் நபர்கள் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கின்றனர்.

அவர்களுக்கு இஸ்லாமியர்கள் எதிரிகள் கிடையாது. தேர்தல் ஆதாயங்களுக்காக அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அவர்களின் (பாஜகவின்) உண்மையான எதிரிகள், நான்கு வர்ணங்களுக்குக்குள் வகைப்படாத அவர்னாக்கள்தான் (தலித்கள், பட்டியல் பழங்குடியினர்). அவர்கள் மேலே வந்துவிட்டார்கள் என்ற கோபம்தான்.

அவர்கள் நாம் எல்லாம் இந்துக்கள், அவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் என்று 80:20 என்ற ஃபார்முலாவை தேர்தலுக்காக, வாக்குகளுக்காக கண்டுபிடித்துள்ளனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்த 50 வருடங்களாக மக்களுக்கு சமத்துவத்தை கொடுத்த அரசியலமைப்புச்சட்டம் , இட ஒதுக்கீடு, சாதிக்கணக்கெடுப்பு என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதுதான் அவர்களின் வேலை.

அந்த வேலையை முன்னின்று செய்பவர் யார் என்றால் மற்றொரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்தான். இந்த வகுப்பை சேர்ந்தவர் (மோதி) இந்த வகுப்பினருக்கு நலன் தரும் சாதிவாரி கணக்கெடுப்பை ஏன் எதிர்க்க வேண்டும்? இந்த கேள்வியை கேட்டாலே மக்களுக்கு புரிந்துவிடும்.

இவர்கள் யாரும் இந்துக்களுக்கான ஆட்கள் கிடையாது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ். இவர்களின் எண்ணமே ஒரு சாதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்,அதன் மேலே நாம் உக்காந்திருக்க வேண்டும், அந்த கட்டமைப்பில் கீழே வரும் அனைத்து மக்களிடம் இருந்து படிப்பை எடுக்க வேண்டும் என்பதுதான்.

நீட்டை ஏன் கொண்டு வருகிறார்கள்? ஏன் படிப்பை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஏன் பல்கலைக்கழகங்களை கையில் எடுக்கிறார்கள்?

பிராமணியத்தை எதிர்த்துவிட்டோம்... ஆனால் சாதியை இல்லை - தமிழகத்தில் தலித்களின் நிலை குறித்து சசிகாந்த் செந்தில் கருத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி : இஸ்லாமியர்களை ஏன் புது தலித்துகள் என்று குறிப்பிடுகிறீர்கள்?

பதில்: சாதிய கட்டமைப்பில் முக்கியமான விசயங்கள் இருக்கின்றன. அதில் (மாற்று சாதியினருக்கு இடையேயான) திருமணங்களை, அன்பு பரிமாற்றத்தை நிறுத்த வேண்டும், சுத்தம் அசுத்தம் என்பவற்றை உருவாக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது. இவையெல்லாம்தான் சாதிய கட்டமைப்பை வலுவாக்குகின்றன.

முன்பெல்லாம் இஸ்லாமியர்களை வேறு மதத்தினர் என்று கூறிவிடுவார்கள். ஆனால் தற்போது அவர்களை அசுத்தம் என்று சித்தகரிக்கின்றனர். (இஸ்லாமியர்கள்) கோவிட்டை பரப்புகின்றனர், இங்கே வியாபாரம் செய்யக்கூடாது, இவர்களை தொடக்கூடாது என்று பரப்பி தற்போது சாதிய கட்டமைப்புக்குள் கொண்டு வருகின்றனர். இதனால்தான் இஸ்லாமியர்களை புது தலித்துகள் என்று குறிப்பிடுகிறேன்.

பெண்களுக்கும் இத்தகைய கட்டமைப்பு இருக்கிறது. சுத்தம் அசுத்தம் என்றும், எப்படி வாழ வேண்டும், அவர்களின் பண்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று சாதிய கட்டமைப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர். இன்று பாஜகவை எதிர்க்கும் முக்கிய கடமை பெண்களுக்கு இருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்த உடனே செய்து கொண்டிருக்கும் வேலை என்னவென்றால், 50 ஆண்டுகளாக பெண்கள் பெற்ற சுதந்திரத்தில் இருந்து பின்னோக்கி தள்ளுவதுதான். இவர்கள் (பாஜக) நம்மை பின்னோக்கி எடுத்துச் செல்லும் மன நிலை கொண்டவர்கள்.

கேள்வி : மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

பதில்: அது என்ன சட்டமென்று யாருக்குமே தெரியவில்லை. 150 எம்.பிக்களை அவையில் இருந்து வெளியேற்றிவிட்டு இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஜூலையில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறீர்களே, அதை மக்களுக்கு தெரியப்படுத்த முயற்சிகளை ஏற்படுத்தியிருக்கிறீர்களா என்றால் கிடையாது.

எதை கேட்பது, எதை விவாதிப்பது என்ற கொந்தளிப்பிலேயே இருக்கிறோம். மணிப்பூரைப் பற்றி பேசுவதா, நீட் குறித்து விவாதிப்பதா, இல்லை இந்த சட்டங்களைப் பற்றி கேள்விகள் கேட்பதா? இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

“”பிராமணியத்தை எதிர்த்துவிட்டோம், ஆனால் சாதியை எதிர்க்கவில்லை””

100% உண்மை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.