Jump to content

தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம்

கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் :   8 மில்லியன் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சர்யம்
படக்குறிப்பு,ராஜு கவுண்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், செரிலன் மோலன்
  • பதவி, பிபிசி நியூஸ், மும்பை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டுபிடித்த ஏழை தொழிலாளியின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது.

ராஜு கவுண்ட் என்னும் தொழிலாளி சுரங்கத்தில் கண்டெடுத்த 19.22 காரட் வைரம், அரசாங்க ஏலத்தில் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தின் பன்னா நகரில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து வருவதாக ராஜு கவுண்ட் கூறுகிறார்.

வைரத்துக்கு பேர் போன பன்னா நகரத்தில், விலைமதிப்பற்ற வைரக் கல்லை கண்டெடுப்பதற்காக அங்கிருக்கும் மக்கள் ஆழமற்ற சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குறைந்த விலையில் குத்தகைக்கு எடுக்கிறார்கள்.

 

மலிவு விலைக்கு வைர சுரங்கங்களை குத்தகைக்கு விடும் அரசாங்கம்

மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி), பன்னாவில் இயந்திரங்களின் மூலம் வைரச் சுரங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வைரங்களை தேடும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் கூட்டுறவு குழுக்களுக்கு ஆழமற்ற சுரங்கங்களை இது குத்தகைக்கு விடுகின்றது. அவர்கள் தங்களிடம் இருக்கும் அடிப்படை கருவிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் வைரத்தை தேடி வருகின்றனர்.

சுரகங்களில் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு வைரக்கல்லும் அரசாங்க வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும், பின்னர் அரசாங்கம் அந்த கல்லை மதிப்பிடுகிறது.

"இந்த சுரங்கங்கள் 200-250 ரூபாய்க்கு [குறிப்பிட்ட காலத்திற்கு] கூட குத்தகைக்கு விடப்படும்" என்று மாநில அரசின் வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில், பண்டேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, பன்னாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார். இருப்பினும், இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்காது. அரிதாகதான் நிகழும்.

கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் :   8 மில்லியன் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சர்யம்
படக்குறிப்பு,கண்டெடுக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு 8 மில்லியன் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏழைத் தொழிலாளியின் கைகளில் மின்னிய வைரக்கல்

பலர் சிறிய வைர கற்களைக் கண்டுபிடித்திருந்தாலும், ராஜு கவுண்ட் தோண்டி எடுத்திருப்பது பெரிய வைரக்கல். எனவே இது மிகப்பெரிய நிகழ்வு என்று சிங் கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்னாவிற்கு அருகிலுள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி கிராமத்தில் உள்ள சுரங்கத்தை தனது தந்தை குத்தகைக்கு எடுத்ததாக கவுண்ட் பிபிசியிடம் கூறினார்.

மழைக்காலத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலைகள் கிடைக்காத போது அவரது குடும்பம் சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

"நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், வேறு எந்த வருமானமும் இல்லை, எனவே நாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்து வருகிறோம் " என்று அவர் கூறினார்.

இதற்கு முன்பு மக்களுக்கு வைரம் கிடைத்த கதைகளைக் கேட்ட அவர், தனக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியதாக கூறுகிறார்.

புதன்கிழமை காலை, விலைமதிப்பற்ற வைர கல்லை தேடும் தனது அன்றாட பணியைச் செய்ய அவர் சுரங்கப் பகுதிக்குச் சென்றார்.

 

''உறவினர்களுக்கும் பகிர்ந்தளிக்க போகிறேன்''

கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் :   8 மில்லியன் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சர்யம்
படக்குறிப்பு,கவுண்ட் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்கள்

"இது கடினமான வேலை. நாங்கள் ஒரு குழி தோண்டி, மண் மற்றும் பாறை துண்டுகளை வெளியே எடுத்து, அவற்றை ஒரு சல்லடையில் இட்டு, கழுவுவோம். பின்னர் வைரங்களைத் தேட ஆயிரக்கணக்கான காய்ந்த, சிறிய கற்களை கவனமாக சல்லடை செய்வோம்" என்று அவர் விவரித்தார்.

அன்று மதியம், அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. இத்தனை நாள் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளுக்கு ஈடாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது.

"நான் தோண்டி எடுத்த கற்களை சல்லடை செய்து பார்த்தேன், கண்ணாடித் துண்டை போன்று மின்னும் ஒரு கல்லை கவனித்தேன். அதை என் கண்களுக்கு அருகில் வைத்துப் பார்த்தேன், ஒரு மெல்லிய பளபளப்பைக் கண்டேன், என் கைகளில் இருப்பது ஒரு வைரம் என்பதை உணர்ந்தேன்" என்று அவர் விளக்கினார்.

கவுண்ட் பின்னர் தன் கடின உழைப்பால் கண்டுபிடித்து எடுத்த வைர கல்லை அரசாங்க வைர அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு அது எடைப் போடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் அடுத்த ஏலத்தில் இந்த வைரம் விற்கப்படும் என்றும், அரசாங்கத்தின் ராயல்டி மற்றும் வரிகள் கழிக்கப்பட்ட பிறகு கவுண்ட் தனது பங்கைப் பெறுவார் என்றும் சிங் கூறினார்.

கவுண்ட் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது குடும்பத்திற்கு ஒரு நல்ல வீட்டைக் கட்டவும், தனது குழந்தைகளை படிக்க வைக்க முடியும் என்றும் நம்புகிறார். அதற்கு முன்பு, அவர் தனது 500,000 ரூபாய் கடனை அடைக்க விரும்புகிறார்.

தனக்கு வைரம் கிடைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றெல்லாம் நான் பயப்படவில்லை, காரணம் என்னுடன் வசிக்கும் 19 உறவினர்களிடையே இந்த பணத்தை பிரித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார் கவுண்ட்.

இப்போதைக்கு, தனக்கு பணம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து திருப்தியாக இருக்கிறார்.

"நாளை, நான் வைரத்தை தேட மீண்டும் சுரங்கத்திற்கு செல்கிறேன்," என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

  • Like 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.