Jump to content

தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும்

spacer.png

— கருணாகரன் —

சிங்களத் தரப்பிலிருந்து இந்தத் தடவை இனவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தற்பரப்புரைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் இனவாதத்தைத் துறந்து விட்டார்கள், கடந்து விட்டார்கள் என்றில்லை. அதற்கான சூழல் இல்லை என்பதே முக்கியமான காரணமாகும். 

அரசியல் வரலாறு என்பதே அப்படித்தான். எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை. எல்லாம் கனிந்துதான் நிகழ்வது என்றுமில்லை. சூழ்நிலைகளே பல சந்தர்ப்பங்களிலும் மாற்றங்களை நிகழ்த்துவன. அப்படியானதொரு நிர்ப்பந்தச் சூழல் சிங்களத்தரப்புக்கு இப்பொழுது உருவாகியுள்ளது. 

ஏனென்றால் வழமையை விட இந்தத் தேர்தற் களமானது வித்தியாசமான – பலமுனைப் போட்டிக்குரியதாகி விட்டது. அதனால் தனியே சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்ற யதார்த்தத்தை பிரதான போட்டியாளர்கள் உட்பட எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது. 

இதனால் வெற்றியைப் பெறுவதாக இருந்தால் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்றே தீர வேண்டும். அப்படித் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெறுவதாக இருந்தால் இனவாதத்தை – சிங்கள பௌத்தத் தீவிரவாதத்தை முன்னிறுத்த முடியாது. மட்டுமல்ல, முடிந்த அளவுக்குத் தமிழ் பேசும் மக்களிடம் இறங்கிச் செல்ல வேண்டும். தமிழ்பேசும் சமூகத்தினருடன் எப்படியாவது சில சமரசங்களைச் செய்ய வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இது தனியே ஜனாதிபதித் தேர்தலுக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதையொட்டியதாக நிகழப்போகும் ஆட்சிக்கும் பொருந்தும். 

இதனால்தான் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசநாயக்க ஆகிய மூவரும் இனவாதத்தை அடக்கி வாசிக்கிறார்கள். வடக்குக் கிழக்கில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். சஜித் இன்னும் நான்கு படிகள் கீழிறங்கி வந்து தமிழ்பேசும் தரப்புகளோடு அரசியற் கூட்டையே உருவாக்கியிருக்கிறார். 

இது ஒரு மாற்றம் என்பதைப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும்  வேண்டும். கூடவே  இது தமிழ்பேசும் தரப்பினருக்குச் சாத்தியமான ஒரு நிலை என்பதை விளங்குவதும் நல்லது. 

இனவாதத்தைப் பேசாமல் தென்பகுதி வாக்காளரிடம் (சிங்கள மக்களிடம்) வாக்கைச் சேகரிக்க வேண்டிய நிலை பிரதான போட்டியாளர்களுக்கு ஏற்படுவதென்பது சாதாரணமானதல்ல. சிங்கள மக்களுக்கும் இது புதிதாகவே இருக்கும். மட்டுமல்ல, பிரதான போட்டியாளர்கள் அனைவரும் தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என ஒரு முகமாகச் சொல்வதும்  – ஏற்றுக் கொண்டிருப்பதும் நிகழ்ந்திருக்கிறது. இதுவும் சிங்கள மக்களிடம் ஒரு அடிப்படைப் புரிதலை, புதிய போக்கின் தேவையை உணர்த்தும்.

இதனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள புதிய அரசாங்கமும் ஆட்சியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை மேற்கொள்வதற்கு ஒரு அடித்தளம் ஏற்பட்டுள்ளது எனலாம். 

என்பதால் தமிழ்த்தரப்பு இதை, இந்தச் சூழலைப் பொறுப்புடனும் விவேகத்தோடும் கையாள வேண்டும். எந்த நிலையிலும் எதிர்நிலை எடுத்து இதைப் பாழாக்கக் கூடாது. 

ஆனால், கெடுகுடி சொற்கேளாது என்ற மாதிரி, தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தி, நிலைமையைப் பாதமாக்குவதற்கே தீவிரத் தமிழ்த்தேசியத் தரப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. சிங்களத் தரப்பு இனவாதத்தைக் கைவிட்டாலும் அதை நாம் கைவிட மாட்டோம் என்ற கணக்கில் துயரத்தை – வில்லங்கத்தை விலை கொடுத்துத் தோளில் தூக்கிச் சுமப்பதற்குப் பாடாய்படுகிறது. இந்தத் தரப்பின் தவறான முடிவுக்கு முழுத் தமிழ்ச்சமூகமும் (சிலவேளை தமிழ்பேசும் மக்கள் அனைவரும்) விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

என்பதால்தான் தமிழ்ப்பொது வேட்பாளரை நாம் தீவிரமாக மறுக்க வேண்டியுள்ளது. அதாவது ஒட்டு மொத்தத் தமிழ்ச்சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தமிழ்ப்பொது வேட்பாளரை நிராகரிக்க வேண்டும். இதொரு வரலாற்றுக் கடமையாகும். 

ஆனால், இதை அவர்கள் (தீவிரத் தேசியவாதிகள்) மறுத்து, நியாயத்தை உரைப்போரையும் சரிகளை வலியுறுத்துவோரையும் துரோகிகளாகச் சித்திரிக்கவே முற்படுவர். அல்லது பிற சக்திகளின் கைக்கூலிகள், இனத்தின் சகுனிகள் என்றெல்லாம் வியாக்கியானப்படுத்துவர். அப்படி இவர்கள் சொல்லும்போது நாம் சரியாகவும் நியாயமாகவும் சிந்திக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளலாம். ஏனென்றால், உண்மையும் நியாயமும் சரியும் இவர்களுக்கு எதிரானதாகவும் துரோகத்தனமானதாகவுமே தோன்றும். பிழையாகச் சிந்திப்பவர்களால் சரிகளை ஒருபோதுமே விளங்கிக் கொள்ள முடியாது. மட்டுமல்ல, சரிகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் “கடவுள் என்பது துரோகியாக இருத்தல்” தான். 

பழம் நழுவிப் பாலில் விழுந்தாலும் அந்தப் பழம் சரியில்லாதது, சந்தேகத்திடமானது என்றே சொல்வார்கள். ஆனால், இப்பொழுது தமிழ்ச்சமூகத்துக்கு வாய்ப்பான சூழல் (பழம்) கனிந்துள்ளது. 

இதை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் தற்போதைய சூழல் எப்படியுள்ளது? எவ்வாறு தமிழ் பேசும் சமூகங்களுக்கிசைவாகக் கனிந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

வழமையாக இரண்டு பிரதான வேட்பாளருக்கிடையில்தான் போட்டி நடப்பதுண்டு. இதற்காக ஒவ்வொருவரும் உச்சமாக இனவாதத்தை முன்னிறுத்துவர். அல்லது ஒருவர் தீவிர நிலையில் இனவாதத்தைப் பேசிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைக்க, மற்றவர் சற்றுக் கீழிறங்கித் தமிழ்பேசும் மக்களின் வாக்குகளையும் சேர்த்துக் கொள்ள முயற்சிப்பார். கடந்த கால் நூற்றாண்டுகால அரசியல் ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது. இந்த  அடிப்படையில்தான் வெற்றி – தோல்விகளும் அமைந்தன. 2010 இல் பெரும்பான்மைச் சிங்கள வாக்குகளால் மகிந்த ராஜபக்ஸ வெற்றியைப் பெற்றார். 2015 இல் தமிழ்பேசும் மக்களின் ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்தார். 2020 இல் தனிச் சிங்கள மக்களின் ஆதரவோடு கோட்டபாய ராஜபக்ஸ வெற்றியீட்டினார். 

இப்போதைய தேர்தற்களம் இதிலிருந்து மாற்றமடைந்து, இந்த நிலையை – இந்த யதார்த்ததை – மறுதலித்துள்ளது. இது நான்குமுனைப் பிரதான வேட்பாளர்களைக் கொண்டதாக உருவாகியுள்ளது. சிங்கள அரசியற் தரப்பில் ஏற்பட்டிருக்கும் முரண்களும் பிளவுமே இதற்குக் காரணமாகும். இது சிங்களத் தரப்பில் தவிர்க்க முடியாதவொரு பலவீனத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பலவீனமான தருணத்தைப் பலமாக்குவதற்கு தமிழ் பேசும் சமூகங்கள் முன்வர வேண்டும். 

சிங்களத் தரப்பில் இந்த மாதிரிப் பலமுனைப் போட்டியாளர்கள் (அது எந்தத் தேர்தலாக இருந்தாலும்) களமிறங்கும்போதெல்லாம் தமிழ்பேசும் தரப்பினருடைய பலத்தைப் பெருக்கலாம். அதைப் பேரபலமாக்கலாம். சமநேரத்தில் இனவாதத்தை முன்னிறுத்தும் சிங்கள அரசியற் போக்கிலும் மாற்றம் நிகழும் என்பதை இது காட்டுகிறது. 

ஆகவே தமிழ்பேசும் சமூகத்தினருக்கு இதொரு வாய்ப்பான சூழலாகும். இதுபோன்ற வாய்ப்பான சூழல் எப்போதும் அமையாது. அப்படி அமையும்போது அதைக் கெட்டித்தனமாகப் பற்றிப் பிடித்துச் செய்யக் கூடிய காரியங்களைச் செய்து விட வேண்டும். அதுவே புத்திசாலித்தனமான அரசியற் செயற்பாடாகும். 

ஒடுக்கப்படும் மக்கள் எப்போதும் உச்ச விழிப்பிலிருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களுக்கு அபூர்வமாகவே இந்த மாதிரி வாய்ப்பான சந்தர்ப்பங்கள் அமையும். அதிலும் சிறுபான்மையினராகவும் ஒடுக்குப்படும் மக்களாகவும் இருக்கும் சமூகத்தினருக்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகும். அல்லது மிகக் கடினமான – உறுதியான போராட்டங்களின் மூலம் தமக்கான வாய்ப்புச் சூழலை உருவாக்க வேண்டியிருக்கும். அப்படி உருவாக்கக் கூடிய நிலையும் தலைமைகளும் தமிழ் மக்களிடம் இன்றில்லை. ஓரளவுக்கு இதைப் புரிந்து கொள்ளும் தலைமைகளை மக்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் இனங்கண்டு வளர்த்துக் கொள்வதுமில்லை.

எனவே அபூர்வமாகக் கிடைக்கின்ற வாய்ப்புகளை அலட்சியமாகவும் பொறுப்பற்றும் விடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அலட்சியாகக் கைவிடக் கூடாது. அல்லது தவறான விளக்கத்தின் அடிப்படையில் பிழையான முடிவுகளை எடுத்துப் பாழாக்கக் கூடாது. அப்படிப் பாழாக்கினால் அது மேலும் பெரும் பின்னடைவுகளையும் பேரிழப்பையுமே தரும். அதாவது மீண்டுமொரு முள்ளிவாய்க்காலை ஒத்த “கஞ்சிப் பாட்டு” ப்பாடும் வாழ்க்கையையே பரிசளிக்கும்.

தமிழ்க் கூட்டு மனநிலையானது எப்போதும் தாழ்வுணர்ச்சிக்குட்பட்டே உள்ளது. தன்னிலும்  தன்னுடைய  திறன்களிலும் நம்பிக்கையற்ற தன்மையோடிருக்கிறது. தன்னைத் தவிர்ந்த ஏனைய சமூகத்தினர் எப்போதும் தன்னை வீழ்த்த முற்படுகின்றனர், எதிர்க்கின்றனர் என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால்  பிற சமூகங்களை எப்போதும் எதிர்நிலையில் தள்ளி வைத்தே பார்க்க விளைகிறது. இதைப்பற்றி எழும் அச்ச உணர்வினால் உச்ச எதிர்ப்பு நிலையை எடுக்கிறது. அப்படி எடுக்கப்படும் உச்ச எதிர்ப்பு நிலை மேலும் இடைவெளிகளையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அனுபவ ரீதியாகத் தெரிந்து கொண்டாலும் அதிலிருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. 

இதற்காக அது தன்னையும் சூழலையும் மாற்றங்களையும் திறந்த மனதோடு புரிந்து கொள்ள முற்பட்டாலே இந்தத் தாழ்வுணர்ச்சியிலிருந்து விட முடியும். அதற்கான பணிகளை – ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது, தமிழ்ச் சமூகத்திற்குள்ளிருக்கும் புத்திஜீவிகளும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் சிந்திக்கக் கூடியோருமாகும். 

துரதிருஸ்டமான நிலை என்னவென்றால் தமிழ்ப் புத்திஜீவிகள் புதிய வழிகளையும் மாற்றத்துக்கான திசைகளையும் காட்டுவதற்குப் பதிலாக சூழலில் என்ன நிலைமை உள்ளதோ அதற்குப் பின்னால் போய் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அல்லது அந்தச் சூழலோடு சேர்ந்து இழுபடுகிறார்கள். கட்சிகளின் தலைவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் மாற்றத்துக்கான வழிகளைக் காண்பதற்கும் காட்டுவதற்கும் பதிலாக அவர்களும் சேர்ந்து கும்மியடிக்கிறார்கள். 

இதற்கொரு எளிய உதாரணம், தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பாக மாற்றுக் கருத்துள்ள ஒரு தலைவர் சித்தார்த்தனாகும். தமிழ்ப் பொதுவேட்பாளரைப் பற்றிய கதை தொடங்கியபோதிருந்து  தனக்கு நெருக்கமான அனைவரிடத்திலும் “இதொரு வெங்காய வேலை” என்ற கணக்கில் பேசிக் கொண்டிருந்தவர் சித்தார்த்தன். ஆனால், இப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளருக்காகத் தெருவிலிறங்கி நோட்டீஸ் கொடுக்கிறார். இது எவ்வளவு முரணும் பலவீனமான நிலையுமாகும்? சித்தார்த்தனைப்போலவே, பல்கலைக்கழக சமூகத்தினர், பேராசிரியர்கள், ஊடகங்களில் ஒரு தொகுதியானவை, மதபீடங்கள் எல்லாத் தரப்பும் கூடிக் கும்மியடிக்கின்றன. 

இந்தத் தவறுக்கு வடக்கே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். வடக்கிலுள்ள ஊடகங்கள், அரசியல் தலைமைகள், தமிழ்ச்சிவில் சமூகத்தினர் என்ற லேபிள்களை தம்மீது ஒட்டிக் கொண்டோர், தமிழ்த்தேசியப் பத்தியாளர்கள் என அனைவரும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும். வடக்கிலிருந்து எடுக்கப்பட்ட தவறான முடிவுக்கு கிழக்கையும் விலை கொடுக்க வைப்பதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர். 

கிழக்கின் அரசியற் சூழல், அங்கே தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அது எதிர்கொள்கின்ற பல்வேறு சவால்கள், அங்குள்ள யதார்த்த நிலை என எதைப்பற்றிய புரிதலும் இல்லாமல் அங்கே மேலும் நெருக்கடியை உருவாக்கும் விதமாகவே வடக்குச் செயற்படுகிறது. கடந்த காலத்திலும் வடக்கு அப்படித்தான் செயற்பட்டிருக்கிறது. 

கிழக்கின் துயரங்களை வடக்குப் பகிர்ந்த வரலாற்றுத் தருணம் இரண்டு தடவை மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. ஒன்று 1978 இல் வீசிய சூறாவளி அர்த்தத்தின்போது. அடுத்தது. 2002 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்ததின்போது. மற்றக் காலம் முழுவதும் அது கிழக்கைப் பயன்படுத்தவே விளைந்திருக்கிறது. குறிப்பாக அரசியல் ரீதியாக. இப்படிச் சொல்வதை மறுதலித்து, இதொரு பிரதேசவாதம் என்ற அடிப்படையில் சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கலாம். அவர்கள் கிழக்கிற்கு வந்து நிலைமைகளைப் பார்க்க வேண்டும். கிழக்கில் சமூக வேலை செய்ய வேண்டும். அவர்களை வாகரையிலும் படுவான்கரையிலும் சந்திக்கத் தயார். 

முடிவாக, காலம் கனியாகிக் கைகளில் விளைந்திருக்கும் இந்த ஜனாதிபதித் தேர்தலையும் அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலையும் புத்திபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வோம். வெற்றியை எமக்காக்கிக் கொள்வோம். ஆம், வெற்றி என்பது தேர்தலில் போட்டியிடுவோருக்கு அல்ல. தேர்தலைக் கையாள்வோருக்கும் வாக்களிக்கும் மக்களுக்குமாக மாற்றப்பட வேண்டும். 

 

https://arangamnews.com/?p=11243

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.