Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும்

பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும்

— கருணாகரன் —

“தமிழரின் வாக்குகள், தமிழ்த்தரப்புகளுக்கே அளிக்கப்பட வேண்டும்.  மாறாகத் தென்னிலங்கைத் தரப்புகளுக்கு அளிக்கக் கூடாது‘ என்று திருவாய் மலர்ந்திருளியிருக்கின்றனர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இப்படியொரு அறிவிப்பை விடக் கூடுமென்றால் நாங்கள் மட்டுமென்ன குறைந்தவர்களா, என்று கிளம்பிய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (மட்டக்களப்பு) கலைத்துறை  மாணவர்கள், இதே தொனியில் இன்னொரு அறிவிப்பை விட்டுள்ளனர். 

இந்த அறிவிப்போடு இரண்டு தரப்பினரும் தங்களுடைய தேசியக் கடமையையும் இனப் பொறுப்பையும் நிறைவேற்றிக் கொண்டனர். இனி இன்னொரு தேர்தலோ அல்லது வேறொரு நிகழ்ச்சியோ வரும்போது ஊடக நிலையத்துக்கு வந்து இன்னொரு அறிக்கையை விட்டு வரலாற்றுச் சாதனையை நிறைவேற்றிக் கொள்வார்கள். வரலாற்றுச் சாதனைக்கு இதை விட வேறு என்ன செய்ய வேண்டும்?

இது இந்த மாணவர்களின் அரசியல் சாதனையென்றால், இந்த ஊடக அறிக்கை ஏதோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்ற எண்ணத்தில் – நம்பிக்கையில் – இதை வலு கவனமாகக் காவிக் கொண்டு வந்து, தங்களுடைய ஊடகங்களிலும் இணையப்பக்கங்களிலும் நிரப்பிக் கொண்டனர் ஊடகவியலாளர்கள். 

இதொன்றும் புதிய சங்கதியே இல்லை. வழமையாகத் தேர்தலின்போது நடக்கின்ற திருவிளையாடல்தான். முன்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இப்பொழுது அப்படிச் சொல்ல முடியாது. கூட்டமைப்புக் காணாமற்போய் விட்டது. பதிலாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பத்துப் பன்னிரண்டு மஞ்சள் –  சிவப்புக் கட்சிகளும் குழுக்களும் களத்தில் நிற்கின்றன. இப்படிப் பத்துப் பன்னிரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றால் அதில் எதைத் தேர்வு செய்வது? எந்தத் தரப்புக்கு ஆதரவளிப்பது? என்று முடிவெடுக்க முடியாது. 

அதனால் “தமிழரின் வாக்குகள், தமிழ்த்தரப்புகளுக்கே அளிக்கப்பட வேண்டும்.  மாறாகத் தென்னிலங்கைத் தரப்புகளுக்கு அளிக்கக் கூடாது‘ என்று மிகச் சாதுரியமாக,  ஒரு அறிவிப்பை விடுத்திருக்கின்றனர், இந்த மாணவர் தலைவர்கள். 

இப்படிப் பொத்தாம் பொதுவாக அறிவிப்பைச் செய்தால் யாரோடும் – எந்தத் தரப்போடும் நேரடியாகப் பகைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை இனப்பற்றோடும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டோடும் தாம் உள்ளதாகவும் காட்டிக் கொள்ளலாம். அப்பப்பா, எவ்வளவு சாதுரியமான செயலிது? எப்படித் திறமையான ராசதந்திரம்? 

உண்மையில் இது மிகத் தவறான – ஏற்றுக் கொள்ளவே முடியாத – செயலாகும். 

ஏனென்றால், கடந்த 15 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பாடற்ற – அறிக்கை விடுநர்களாகவே உள்ளனர். (‘இதை விட வேறு எப்படித்தான் அவர்களால் செயற்பட முடியும்? ஏனென்றால், இந்த மாணவர்களின் வியப்புக்குரிய தலைவர்களாக இருப்போரும் அறிக்கைப் புலிகளாகத்தானே உள்ளனர்! எனவே தலைவர்கள் எப்படியோ அப்படியே மாணவர்களும்‘ என்கிறார் நண்பர் ஒருவர்.) அப்படி விடப்படுகின்ற அறிக்கைகள் கூட யதார்த்தம், நடைமுறை, சமூக நிலவரம், அரசியற் சூழல் என எதைப்பற்றிய புரிதலுமற்றனவாகவே இருக்கின்றன. 

நீண்டதொரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி, அதில்  வெற்றியடைய முடியாமற்போன – பாதிப்புகளோடும் இழப்புகளோடுமிருக்கும் ஒரு சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அரசியல் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக  மாணவர்களின் பங்கு பெரியது. பொறுப்புமிக்கது. 

அதன்படி போராடிய மக்களை ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளில் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். அவர்களுடைய துயரங்களை ஆற்றுப்படுத்தியிருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பணிகளில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். அவர்களுடைய பிரதேசங்களை மீள்நிலைப்படுத்தும் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்குத் தாராளமாக உதவியிருக்க வேண்டும். பொதுவாகச் சமூக, பொருளாதார, பண்பாட்டு மீள்நிலைக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளித்திருக்க வேண்டும். ஆக, இவற்றுக்காகக்  களப்பணிகளை ஆற்றியிருப்பது அவசியமாகும். 

பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருக்கும்போது மட்டுமல்ல, பட்டம்பெற்று வெளியேறிய பிறகும் கூட இதைத் தொடர்ந்திருக்க முடியும். 

மட்டுமல்ல, ‘உளவியல் ரீதியாக உங்களோடு நிற்கிறோம்‘ என ஆதரவு நிலையைக் காண்பித்திருக்கலாம். போரிலே பாதிக்கப்பட்டோரில் மிகக்கூடிய தாக்கத்துக்குள்ளாகியோர் உளப்பாதிப்புக்கு (Trauma) உள்ளானோரே. ஆகவே இவர்களை ஆற்றுப்படுத்தும் பணியில் நிச்சயமாக இந்த மாணவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். தங்களுடைய கல்வித்துறையின் மூலமாக சமூக, பொருளாதார, பண்பாட்டு, மருத்துவ, அரசியல் ஆய்வுகளைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாலே அது பெரியதொரு வரலாற்றுப் பணியாக இருந்திருக்கும். அதில் பெற்ற புள்ளி விவரங்கள், உண்மையான நிலவரங்களை உள்ளடக்கிய தகவல்கள் – தரவுகளின் மூலமாகத் தமிழ்ச் சமூகத்தைப் புதிய தளமொன்றுக்கு நகர்த்தியிருக்க முடியும். கூடவே இவற்றின் மூலம் சர்வதேச ரீதியாக அரசியலிலும் மனித உரிமைகள், மனிதாபிமானப் பணிகளிலும் பெரும் செல்வாக்கையும் பேராதரவையும் பெற்றிருக்க முடியும். 

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அதில் எந்த மாணவர் ஒன்றியத்தினரும் கரிசனை கொள்ளவில்லை. ஆகச் செய்ததெல்லாம் நினைவு கூரல்களில் பங்கெடுத்ததும் தேர்தல்களுக்கு அறிக்கை விடுத்ததும்தான். அதாவது நோகாமல் போராட்டப் பங்களிப்பைச் செய்வதாகக் காண்பித்ததேயாகும். 

பட்டம்பெற்று வெளியேறிய பிறகு, ‘மாணவர் ஒன்றியமும் கத்தரிக்காயும்’ என்று அந்த லேபிளைத் தூக்கியெறிந்து விட்டு, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்து அரசசார்பு அரசியல்வாதிகளின் காலடியில் நின்ற – நிற்கின்ற வரலாறே மாணவர்கள் தலைவர்களுடையது. சிலர் இப்பொழுது தாங்களும் வேட்பாளர்களாக அரசியலில் குதித்துள்ளனர். 

ஆனால், தெற்கிலே, சிங்களத்தரப்பின் நிலைமை வேறு. அவர்கள் அங்கே மாணவப் பருவத்தைப் புரட்சிகர சமூக உருவாக்கத்துக்காகவே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். மக்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராகப் போராடுகிறார்கள். முக்கியமாக அறிவுபூர்வமாகச் செயற்படுகிறார்கள். இதற்கொரு பெரிய பாரம்பரியமே அவர்களுக்குண்டு. அங்கே மாணவர்களுடைய சிற்றுண்டிச் சாலைக்கோ விடுதிக்கோ சென்றால் தெரியும், அவர்களுடைய உள நிலையையும் போராட்டத் தன்மையையும் சமூக அக்கறையையும். அதனுடைய ஒரு வெளிப்பாடே அரகலய. அதன் தொடர்ச்சியே தற்போது நடந்து கொண்டிருக்கும் மாற்றத்துக்கான அரசியல் (Politics of change or systemchange).

இப்பொழுது மட்டுமல்ல, தெற்கின் (சிங்கள) மாணவர்களுடைய பாரம்பரியம் என்பது எப்போதும் புரட்சிகரமானதாக – யதார்த்தத்தை நோக்கியதாகவே இருந்திருக்கிறது. என்பதால்தான் அவர்கள் தொடர்ந்தும் அரசியல் மாற்றங்களை நிகழ்த்தி வந்திருக்கிறார்கள். அல்லது அதற்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அந்த மாற்றங்கள் முழுமையடையாதிருக்கலாம். ஆனால், ஒரே கட்சியோ, ஒரே தலைமையோ தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை.  அதற்கு அவர்கள் அனுமதித்ததும் இல்லை. 

இங்கே எழுபது, எண்பது ஆண்டுகளாக ஒன்றுக்கும் உதவாத கட்சிகள்தானிருக்கின்றன. அவை சிதைந்தாலும் பழைய குப்பைகள், ஓட்டை ஒடிசல்கள் என்ற நிலையை எட்டினாலும் தமிழர்களுக்கு அவை தூண்டாமணி விளக்குகள் என்பதேயாகும். மாற்றத்தையோ புதிதையோ எளிதில் ஏற்காத, அங்கீகரிக்காத, நம்பத் தயாரில்லாத ஒரு சமூகாகவே இருக்கிறது. மக்கள் அப்படியிருந்தால் பரவாயில்லை. மாணவர்கள், இளைய தலைமுறையினர், எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய அறிவியற் தரப்பினர் அப்படி வாழாதிருக்க முடியுமா? 

மாணவர்கள்தான் பெரும்போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்களே புதிய வழிகளைக் காணும் திறனுடையோர். என்பதால் அவர்கள் போராட்டக்களத்தில் முன்னணியினராக எப்போதும் இருக்கின்றனர். 

உலகெங்கும் இப்படித்தான் நடந்திருக்கிறது. பாதிப்புகளிலிருந்து மீட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி அந்த மக்களை வழிநடத்துவதில் மாணவர்களே முன்னின்றனர், முன்னிற்கின்றனர். 

சமகாலத்தில் களத்தில் நிற்கும் அரசியற் கட்சிகளின் வினைத்திறனற்ற தன்மைகளையும் தலைமைகளின் ஆற்றற்குறைபாட்டையும் கண்டு அவற்றைச் சீராக்க வேண்டிய பொறுப்பும் மாணவர்களுக்கே உண்டு. அதற்குக்  குறித்த தலைமைகளும் கட்சிகளும் செவி கொடுக்கவில்லை என்றால், அவற்றை நிராகரிப்புச் செய்ய வேண்டியது மாணவர்களுக்கு – மாணவர் அமைப்புகளுக்குரிய பணியாகும் – பொறுப்பாகும். செவி கொடுத்தால், அவற்றைத் தம்முடன் இணைத்து வேலை செய்ய முடியும். முடியாதென்று அடம்பிடித்தால் அதை – அவற்றை சமூக விலக்கம் செய்ய வேணும். 

2009 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வரலாற்றுக் கடமைகளிலிருந்து தவறியது. அது சறுக்கிச் சறுக்கி இன்றைய சிதறிய நிலைக்கு வந்திருக்கிறது. இறுதியில் அணிகள், குழுக்கள் எனச் சிதறிய நண்டுக்குஞ்சுகள் போலாகி விட்டது.

ஆனால், இந்தப் பதினைந்து ஆண்டு காலத்திலும் மாணவர் அமைப்பு என்ன சொன்னது? உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். ஒன்றுபட்டு நின்று தமிழ்ப்பலத்தை உணர்த்த வேண்டும் என்றுதானே! அதற்காக மக்களெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என அல்லவா!

அப்படி ஒற்றுமைக்காக மக்களைத் திரளச் செய்த மாணவர் அமைப்பு, கூட்டமைப்பை உடையாமல், சிதறாமல் பாதுகாத்ததா? உடைந்தும் பிரிந்தும் சிதறிச் சென்ற கட்சிகளையும் தலைமைகளையும் அழைத்துப் பேசி, முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு முயற்சித்ததா? மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு, தமது நலனையே முதன்மைப்படுத்திய கட்சிகளைக் கண்டித்ததா? அவற்றை ஒதுக்கியதா? அவற்றை மக்களிடம் இனங்காட்டியதா? எதுவும் செய்யப்படவில்லையே! 

அப்படியென்றால், மாணவர் ஒன்றியத்திற்கு என்ன தகுதி இருக்கிறது, இன்னும் அரசியல் தலையீடுகளைச் செய்வதற்கு? தேர்தல் குறித்துப் பேசுவதற்கு? மக்களுக்கு ஆணையிடுவதற்கு? 

முதலில் சிதறிக் கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு முயற்சித்திருக்க வேண்டும். அதற்குச் சம்மதிக்காத கட்சிகளையும் தலைவர்களையும் இனங்காட்டி மக்களிடமிருந்து விலக்க வேண்டும். அதை இப்போதே  செய்யலாம். செய்ய வேண்டும். அதுவும் ஒரு மக்கள் பணி, வரலாற்றுப் பணிதான். 

இந்தத் தேர்தலின்போதே அரசியற் கட்சிகளை அழைத்துப் பேசி அவற்றுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தலாம். அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒரு இணக்கத்தை எட்ட முடியும். அந்த இணக்கத்தின்படி பிராந்திய ரீதியாக எந்தத் தரப்பை முன்னிலைப்படுத்துவது? யாருக்கு வாய்ப்பளிப்பது? எனத் தீர்மானிக்க முடியும். அப்படிச்  செய்தாலாவது பரவாயில்லை. 

அதையெல்லாம் விட்டு விட்டுப் பொத்தாம் பொதுவாக, தமிழர்களெல்லாம் தமிழ்த் தரப்புகளுக்கே வாக்களிக்க வேண்டும். சிங்களக் கட்சிகளையோ தென்பகுதித் தரப்புகளையோ ஆதரிக்கக் கூடாது என்று சொல்வது தவறு. இன்றைய நிலையில் தமிழ்க் கட்சிகளை விடவும் தென்பகுதித் தரப்புகள் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துள்ளன. அவை இனவாதத்தைச் சொல்வதிலிருந்து விலகியுள்ளன. ஒப்பீட்டளவில் மாற்றத்தை நோக்கிப் பயணிக்க ஆர்வமாக உள்ளன. பல சமூகத்தினருக்குமான இடத்தை அளித்து, பல்லினத் தன்மையைப் பேண முற்படுகின்றன. 

ஆனால், தமிழ்க்கட்சிகள் பிற இனங்களை விலக்குவதும் பின சமூகங்களிலிருந்து விலகியிருப்பதும் மட்டுமல்ல, தமக்குள்ளும் பிரிவுகளையும் பிளவுகளையுமே கொண்டுள்ளன. மிகப் பின்தங்கிய சிந்தனைப் போக்கைக் கொண்டுள்ளன. 

இது விடுதலைக்காகப் போராடும் இனத்தின் அரசியல் விடுதலைக்கும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கும் பொருத்தமா? நியாயமா? சரியாக இருக்குமா? நிச்சயமாகப் பொருந்தாது. 

உண்மையில் இந்த மாணவர் அமைப்புகள் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளையும் அணிகளையும் குழுக்களையும் இந்தத் தேர்தலின்போது ஒருங்கிணைத்திருக்க வேண்டும். அந்தக்கடப்பாடு, கடந்த காலத்தில் கூட்டமைப்புக்கு (தமிழ்த்தேசியத்துக்கு) ஆதரவளித்ததன் மூலம் மாணவர் அமைப்பினருக்குண்டு. அதைச் சொல்லி அணிகளையும் கட்சிகளையும் வற்புறுத்தியிருக்க வேண்டும். இப்பொழுது கூட அதைச் செய்யலாம். அது முடியவில்லை என்றால், மக்கள் பணியைச் சரியாகச் செய்யக் கூடிய, மக்களோடுள்ள, மக்கள் மீது மெய்யான கரிசனையைக்  கொண்ட சக்திகளை இனங்கண்டு ஆதரிக்க வேண்டும். அந்த ஆதரவு பரிபூரணமாக – மக்கள் நலனின் அடிப்படையில் இருக்க வேண்டும். இதற்கான பொறுப்புக் கூறலைச் செய்ய வைப்பது அவசியமாகும். 

ஏனென்றால், இதே காலப்பகுதியில் அல்லது இதற்கு முன்பிருந்து தென்பகுதிப் பல்கலைக்கழகங்களின் (சிங்கள) மாணவர்கள் மேற்கொள்கின்ற அரசியற் செய்பாடுகள் முழு இலங்கைத் தீவையும் மறுமலர்ச்சிக்குள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு எங்களுடைய மாணவர்கள் தயாராக வேண்டும். அல்லது மாற்றுப் பண்பாட்டின் அடிப்படையில் மாற்றுச் சக்திகளைக் கட்டியெழுப்ப வேண்டும். 

இதொன்றும் புதியதல்ல. செய்ய முடியாததும் அல்ல. முக்கியமாக, வரலாற்றுக் கடமையைச் செய்யும்போது ஏற்படும் பொறுப்பை ஏற்று மன்னிப்புக் கேட்பது மாண்பு. அதொரு வளர்ச்சியான செயற்பாடாகும். 

கடந்த சில நாட்களின் முன், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திச் செயற்பட்ட நிலாந்தன் (பொதுச்சபைப் பிரதிநிதி) பகிரங்க வெளியில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதொரு முக்கியமான முன்னுதாரணச் செயற்பாடாகும். அறிவென்பது, துணிவு. மன்னிப்புக் கேட்பது மாண்பிலும் மாண்பு. 

தாம் பொதுவெளியில் முன்வைத்த கருத்துகள் செயல் வடிவம் பெறுவதற்கான சூழல் கனிய முன் சில முதிரா நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவாகப் பேசியுள்ளார். இத்தகைய தகுதி யாரிடம் உண்டு? மாணவர் அமைப்புகள் இதை மனதிற் கொள்ள வேண்டும். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1970 களில் கிழக்கிலே ஏற்பட்ட சூறாவளிச் சேதங்களை மீள் நிலைப்படுத்தியதும் 1980 களில் தேசிய விடுதலைப்போராட்டத்தில் பங்களித்ததும் நினைவில் எழுகின்றன. 

 

https://arangamnews.com/?p=11378

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.