Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

விடுதலை 2

RS Infotainment

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?

 

படத்தின் கதைகளம்

 

விடுதலை முதல் பாகத்தில், மலைப் பகுதியில் மக்கள் வாழுமிடத்தில் சுரங்கம் அமைத்து வளங்களைச் சுரண்ட நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக புரட்சி வெடித்து மக்கள் படை ஒன்று உருவாகிறது. அதை தலைமை வகிக்கும் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது.

புரட்சி செய்யும் மக்கள் படைக்கு எதிராக அரசாங்கம் சிறப்பு போலீஸ் படையை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அதன் ஜீப் ஓட்டுநராக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார்.

முதல் பாகத்தில் குமரேசன் (சூரி) கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல், இரண்டாம் பாகம் முழுக்க பெருமாள் வாத்தியாரின் பின்கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.

``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன?" என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை" என்கிறது இந்து தமிழ் திசை விமர்சனம்.

விடுதலை 2

RS Infotainment

விடுதலை 2

முதல் பாகத்தில் புரட்சியாளர் `பெருமாள் வாத்தியார்' (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் மலையில் இருந்து குமரேசன்(சூரி) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை வேறு இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். வழி நெடுக பெருமாள் வாத்தியார் தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார். 

இந்த நிலையில் "அவரின் பின்கதை குமரேசனை எப்படி பாதிக்கிறது எனும் போக்கில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 வலுவான கதைகளத்தைக் கொண்டிருப்பதாக `இந்தியா டுடே' தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

``சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தத் திரைப்படம் கம்யூனிசத்திற்கான ஒரு கையேடு" என்றும், "கூற விரும்பும் கம்யூனிச கருத்தை எளிமையாக்கி, இன்றைய பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்” இந்தியா டுடே பாராட்டியுள்ளது.

`இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம்'

 

விடுதலை 2

RS Infotainment

"முதல் பாகத்தில், மலைக் கிராம மக்களின் வாழ்வியலையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராட்ட வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கூறுகிறது.

விடுதலை 2 திரைப்படம், "தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூரமான மரணங்கள் என இயக்கவாதிகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் இந்து தமிழ், "வெற்றிமாறன் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார்" என்றும் விவரிக்கிறது.

மேலும் விடுதலை 2 மூலம் சரியான கேள்விகளைக் கேட்டு, `யார் சரி எது சரி' என்று வெற்றிமாறன் மக்களைச் சிந்திக்க வைப்பதாக இந்தியா டுடே கூறுகிறது.
 

`பெருமாள் வாத்தியாரின் பின்கதை ஏற்படுத்திய தொய்வு'

 

வெற்றி மாறன்

RS Infotainment

"இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தனது பாணியில் வன்முறைக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தினமணி விமர்சித்துள்ளது.

"இரண்டாம் பாகத்தில் இருக்கும் வன்முறைக் காட்சிகளில் எந்தவிதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை ஆடையில்லாமல் சித்தரவதை செய்கின்றனர், பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டுவது என எதிலும் நமக்கு உணர்ச்சிகள் கடத்தப்படவில்லை. இது திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன" என்றும் தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

இந்து தமிழ் விமர்சனத்திலும், படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளில் அதிகமான ரத்தம் தெறிப்பதாகக் கூறுகிறது. இந்தியா டுடே தன் விமர்சனத்தில், ``பெருமாளின் பிளாஷ்பேக்கை விவரிக்கும்போது படம் தொய்வடைகிறது" எனக் கூறியுள்ளது.

"விடுதலை 2 அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதையாக இருக்காது" என்றும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
 

`போலித்தனம் இல்லாத காதல் காட்சிகள்'

 

விடுதலை 2

RS Infotainment

படத்தின் ஆரம்பத்தில் கென் கருணாஸ் வரும் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதாகக் கூறும் இந்தியா டுடே, விடுதலை 2 படத்தின் முக்கிய பலம் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய ஆழமான வசனங்கள்தான் என்கிறது.

படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசியுள்ள இந்து தமிழ், "இங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்கப் பேசியுள்ள இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாக" பாராட்டியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி அற்புதமான நடிப்புடன் படத்தைத் தாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சூரி, குமரேசனாக இரண்டாம் பாகத்தில் படத்துக்கு பலம் சேர்ப்பதாக எழுதியுள்ளது.

இந்து தமிழ் விமர்சனம் படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருப்பதாகப் புகழ்ந்துள்ளது.

"அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனம் இல்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு" என்றும் குறிப்பிடுகிறது.

திரைப்பட ட்ரெய்லரின்போது மஞ்சு வாரியாரின் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் "வெற்றிமாறன், திரைப்படத்தில் அதற்கு அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இனி தலைமுடியை வெட்டிக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.

 

 

ஒளிப்பதிவு சிக்கல்கள்

 

விடுதலை 2

RS Infotainment

விடுதலை 2 படத்தில் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கு சரியான முடிவை அளித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

``இது பாராட்டுக்குரிய முயற்சி. சில தொடர்ச்சியான ஓவர்லேப் வசனங்களின் சிக்கல்கள் இருந்த போதிலும், உரையாடல் சார்ந்த கதைக்களத்துடன், பல முற்போக்கான சித்தாந்தங்கள் மற்றும் கருத்துகளைக் காட்சிப்படுத்தியன் மூலம் கதை வலுப்பெறுகிறது" என இந்தியா டுடே கூறியுள்ளது.

இளையராஜாவின் பின்னணி இசையைப் பாராட்டியுள்ள பற்றி இந்து தமிழ், ``பின்னணி இசையில் இளையராஜா மிரட்டுகிறார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் காதல் காட்சிகளில் கிட்டாரில் மிருதுவாகவும், விஜய் சேதுபதியின் வன்முறைக் காட்சிகளில் ட்ராம்போனில் பதற்றத்துடனும் நம் செவிகளுக்குள் அவரது இசை புகுந்து கொள்கிறது" என்று பாராட்டியுள்ளது.

படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டிய இந்து தமிழ் விமர்சனம், ``ஒரு வசனம் முடிந்து மற்றொரு வசனம் வருவதற்குள் ஓவர்லேப் டயலாக்குகள் வந்துவிடுவதால், நிறைய வசனங்களை முழுமையாகக் கேட்க முடியவில்லை" என்று விமர்சித்துள்ளது.

படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது தேவையின்றி பொருத்தப்பட்ட இடைச்செருகல் போன்ற உணர்வை மட்டுமே கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

``காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளதாக" தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

``சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்பட்டு இருப்பதாகவும்" விமர்சித்துள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
 

 

https://www.bbc.com/tamil/articles/c3907kerl3go?at_campaign=ws_whatsapp

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனத்துக்கு நன்றி கிருபன் . .........!  

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுக்கப்பட்ட இனங்களின் போராட்டத்தையும் அரச பயங்கரவாதத்தினை அழகாக படம் பிடித்திருக்கிறார் வெற்றிமாறன்.   சிறந்த இயக்குனரில் ஒருவர் என்று மறுபடியும் நிரூபித்துருக்கிறார். வாத்தியாராக வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி. கிஷோர் கே.கேயாக வாழ்ந்திருக்கிறார். இளையராஜாவின் பின்னணி இசை அருமை. 

 

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் திங்கள் அகன்ற திரையில் பார்க்கவுள்ளேன்😀

நல்ல படங்களை திரையில் பார்த்தால்தான் மேலும் சிறந்த படங்களை எடுக்க வசூல் கிட்டும்.

-

விடுதலை 2 : விமர்சனம்!

viduthalai-part-2-movie-review-780x400-1

பிளாஷ்பேக் உத்தி பலன் தந்ததா?

நடிகர் சூரியைக் கதை நாயகனாக அறிமுகப்படுத்திய படம், வெற்றிமாறனின் ‘விடுதலை’. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரைத் தேடுவதற்காகக் காவல் துறையின் சிறப்பு முகாம் இயங்கி வந்ததையும், அதில் பணியாற்றியவர்களில் ஒருவர் அந்த தலைவரைக் கைது செய்ய முனைந்ததையும் சொன்னது. அப்படம் பேசிய அரசியலை விடப் பேசாததே அதிகம். அதுவே அப்படத்தின் சிறப்பாகவும் அமைந்தது. ‘விடுதலை’ படத்தின் பெருவெற்றியே அதன் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை விதைத்தது.

இரண்டாம் பாகத்தில் அந்த தலைவரின் வாழ்வனுபவங்களே பிரதானமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தன. இப்போது ‘விடுதலை 2’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்திருக்கிறதா? முதல் பாகம் தந்த திரையனுபவத்தை விட ஒருபடி மேலானதை ரசிகர்கள் பெறுகிறார்களா?

h7INcyyS-image-1024x576.jpg

தகவல்களின் அடிப்படையில்..!

தமிழர் படையைச் சேர்ந்த பெருமாளைக் (விஜய் சேதுபதி) கைது செய்த விவரம், காவல் துறை சிறப்பு முகாமைச் சேர்ந்த ஒருவரால் வெளியே கசிகிறது. அதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகை அலுவலகங்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது.

பெருமாளைக் கைது செய்த தகவலை மூன்று, நான்கு நாட்கள் கழித்து வெளியே சொல்லலாம் என்றெண்ணிய தலைமைச் செயலாளர் சுப்பிரமணியத்திற்கு (ராஜிவ் மேனன்) அத்தகவல் பேரிடியைத் தருகிறது.

அதேநேரத்தில், சிறப்பு முகாமில் பழங்குடியின கிராமத்துப் பெண்கள் என்னவானார்கள் என்பதை ஒரு பத்திரிகை நிருபர் (பாவெல் நவகீதன்) படம்பிடிக்கிறார். தான் வேலை பார்க்கும் தமிழ் செய்தி நிறுவனத்தின் செய்தியாசிரியருக்குத் தகவல் சொல்கிறார். அந்த தகவல் இதர பத்திரிகை அதிபர்கள் வழியாகச் சுப்பிரமணியத்தை வந்தடைகிறது.

இன்னொருபுறம், பெருமாளை போலீசார் பாதுகாப்பாக வன எல்லைப்பகுதி காவல் துறை அலுவலகத்திற்குக் காட்டுப்பாதை வழியாகச் செல்கின்றனர்.
செல்லும் வழியில், ‘வன்முறையே வேண்டாம்’ என்று அகிம்சாவாதியாக இருந்த தான் எவ்வாறு இப்படியொரு பாதைக்குத் திரும்பினேன் என்பதைத் தனது வாழ்பனுபவங்களில் இருந்து சொல்லி வருகிறார் பெருமாள். 

முகாம் அதிகாரி ராகவேந்திரருக்கு (சேத்தன்) அது எரிச்சலூட்டினாலும், உடன் வரும் கான்ஸ்டபிள்கள் அதனைக் கேட்டவாறே வருகின்றனர். அப்போது, பெருமாள் குறித்து தாங்கள் அறிந்தவற்றுக்கும் அவரது வாழ்வனுபவங்களுக்குமான வித்தியாசங்களை உணர்கின்றனர். 

பெருமாளின் பேச்சில் அவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாக கருப்பன் (கென் கருணாஸ்), மகாலட்சுமி (மஞ்சு வாரியார்), கே.கே. (கிஷோர்) உள்ளிட்ட பலரைக் குறிப்பிடுகிறார்.

அதற்கிடையே, வேறு வழியில்லாமல் பெருமாளைக் கைது செய்த தகவல் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அது அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படுகிறது.

இந்தச் சூழலில், பெருமாளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பாதையில் வரும் போலீசாரை சுற்றி வளைக்கின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘விடுதலை 2’வின் மீதி.

தகவல்களுக்கும் உண்மைக்குமான வித்தியாசம் என்ன? இந்தக் கேள்வியே இப்படம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது. ஆனால், ’அதனை விலாவாரியாகச் சொல்கிறேன் பேர்வழி’ என்று தகவல்களைத் திணித்தடைத்து, இறுதியாக அவற்றில் பலவற்றை நீக்கி ஒரு சுவாரஸ்யமான திரை வடிவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் வெளிப்பட்டிருக்கிறது.

Z4oxTtQw-image-1024x683.jpg

அபார உழைப்பு!

ஏற்கனவே உருவாக்கிய ஒரு திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவு செய்ததைத் தவறென்று சொல்ல முடியாது. இப்படத்தின் திருப்புமுனைக் காட்சிகள் பலவற்றை ‘விடுதலை’ முதல் பாகத்தின் இறுதியிலேயே காட்டியிருந்தார் வெற்றிமாறன்.

அதனுடன் பொருந்துகிற வகையில், பெருமாள் எனும் விஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தின் முன்கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். அதனால், படம் முழுக்கவே பிளாஷ்பேக்குகள் வந்து போகின்றன. அதற்கு நடுவே, திரைக்கதை நிகழும் காலம் நமக்குச் சொல்லப்படுகிறது.

பெருமாள் எனும் பாத்திரம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தது என்பதைக் காட்டும் அடையாளங்கள் திரையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்ற கேள்வி நம்முள் உடனடியாக எழுகிறது. ஏனென்றால், இப்படத்தின் திரைக்கதையே அதைச் சார்ந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது.

இது போன்று திரைக்கதையில் ஆங்காங்கே சில பிசிறுகள் எட்டிப் பார்க்கின்றன.
மிக முக்கியமாக, திரைக்கதையின் நடுவே ஒரு பாடல் வருகிறது. ‘மாண்டேஜ்’ ஆக வரும் அந்தப் பாடல் கால மாற்றம் பற்றிய சில கேள்விகளை எழுப்புகிறது. இறந்து போவதாகக் காட்டப்படுகிற சில பாத்திரங்கள் திரையில் வந்து போவது அதற்குக் காரணமாக இருக்கிறது. அதுவும் ஒரு பிளாஷ்பேக் தான் என்பது சட்டென நமக்குப் பிடிபடுவதில்லை.

இது போன்ற குழப்பத்தைச் சில காட்சிகளும் தருகின்றன. அவற்றைச் சரிப்படுத்தியிருக்கலாம்.

மற்றபடி, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களைத் தன் புனைவுக்குள் அடக்கிச் சுவாரஸ்யமான அரசியல் திரைப்படமொன்றைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன் என்பதில் ஐயமில்லை.

இந்த முயற்சியில் அவருக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் ராமர், சண்டைப்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.

சில இடங்களில் விஎஃப்எக்ஸ் குறிப்பிட்ட தரத்தில் அமையவில்லை. அதற்கு படத்தின் இறுதி ஷாட் ஒரு உதாரணம்.

இசையைப் பொறுத்தவரை, நம்மைக் கொஞ்சம் ஆச்சர்யபடுத்தாதவாறு ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இளையராஜா. திரையில் மௌனம் வருமிடங்கள் அவரது நுண்ணிப்பான அவதானிப்புக்குச் சான்று.

‘தினம் தினமும்’ உள்ளிட்ட பாடல்கள் சில நொடிகளே வந்து போயிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தைக் குறைக்கின்றன.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கிஷோர், ரம்யா, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாவெல் நவகீதன், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட் என்று பலர் வந்து போயிருக்கின்றனர்.

ஆனாலும் விஜய் சேதுபதியே திரையில் நிறைந்து நிற்கிறார். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, இது கொண்டாட்டத்திற்குரிய விஷயம்.

முதல் பாகத்தில் வந்த பவானிஸ்ரீ உள்ளிட்ட சிலருக்கு இப்படத்தில் வேலையே இல்லை. அவர் ஒரு ஷாட்டில் இடம்பெற்றிருக்கிறார்.

’நான் ஏன் தலை முடியை வெட்டியிருக்கேன்னு கேட்கவே இல்லையே’ என்ற மஞ்சு வாரியாரின் கேள்விக்கு, ‘உங்க முடி, நீங்க வெட்டியிருக்கீங்க’ என்று விஜய் சேதுபதி அளிக்கும் பதில் ரசிக்க வைக்கிறது. 

சமகால சமூகம், அரசியல் சார்ந்து அமைந்திருக்கிற சில வசனங்கள் சட்டென்று ரசிகர்களை ஈர்க்கும்விதமாக இருக்கின்றன.

PEW7BLP3-image-1024x576.jpg

அதேநேரத்தில், பொதுவுடைமை இயக்க தத்துவங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று பேசப்படுகிற வசனங்கள் காட்சியனுபவத்தின் ஆன்மாவைச் சிதைக்கின்றன.

இந்த இடத்தில் ‘மெட்ராஸ்’ படத்தின் இறுதி ஷாட் நினைவுக்கு வருகிறது. அது போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருந்தால், இப்படத்தின் நீளத்தைக் கணிசமாகச் சில நிமிடங்கள் குறைத்திருக்கலாம்.

முதல் அரை மணி நேரக் காட்சிகளில் ‘டப்பிங்’ நம்மை படுத்தி எடுக்கிறது. அபாரமான உழைப்பைக் கொட்டி உருவாக்கப்பட்ட இப்படத்தில் அது போன்ற சங்கடங்களை ரசிகர்கள் எதிர்கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம்.

’விடுதலை 2’ படத்தின் உள்ளடக்கம் நிச்சயம் பல விவாதங்களை உருவாக்கும். இதில் நிறைந்திருக்கும் குறைகளும் பிரதானமாக அதில் இடம்பிடிக்கும்.

அவற்றைத் தாண்டி, ‘கேம் கல்ச்சர்’ரில் சிக்கிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரில் சிலருக்கு ‘இப்படியும் ஒரு தலைமுறை இங்கு வாழ்ந்தது’ என்பதைச் சொன்ன வகையில் ‘விடுதலை 2’ முக்கியத்துவம் பெறுகிறது.

‘சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது உட்பட இன்றைய தலைமுறை அனுபவிக்கும் எத்தனையோ இளைப்பாறல்களுக்குப் பின்னால் பலரது போராட்டங்கள் இருப்பது தெரியுமா’ என்கிற தொனியில், படத்தின் ஓரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அந்தக் கேள்வியின் பின்னே இருக்கிற அரசியல் மிகப்பெரியது.

என்னைக் கேட்டால், அது போன்ற கேள்விகள் தான் இப்படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனை எங்கோ தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பிளாஷ்பேக் உத்தியைப் பயன்படுத்திய அளவுக்கு, கதை நிகழும் காலத்திற்கும் இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் அது நிகழ்ந்திருக்காதோ என்று தோன்றுகிறது.

நிறை, குறைகளைத் தாண்டி, திரையில் ரசிகர்கள் காணாத ஒரு அனுபவத்தை ‘விடுதலை 2’ தருகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சிறப்பானதொரு கமர்ஷியல் படமாக உள்ளது.

ஆனால், அது ‘விடுதலை முதல் பாகத்திற்கு’ ஈடாக அமையவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறியதாகவும் அது இல்லை.

ரசிகர்கள் ஒவ்வொருவரது பார்வைக்கேற்ப, இக்கருத்தில் மாறுபாடு நிச்சயம் இருக்கும். அதனைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். அதேநேரத்தில் தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் வெற்றியைச் சுவைப்பதற்கான விஷயங்களும் இப்படத்தில் நிறையவே இருக்கின்றன. அது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்..!

 

https://minnambalam.com/cinema/vetri-maran-vijay-sethupathi-viduthalai-2-movie-review/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நான் திங்கள் அகன்ற திரையில் பார்க்கவுள்ளேன்😀

நல்ல படங்களை திரையில் பார்த்தால்தான் மேலும் சிறந்த படங்களை எடுக்க வசூல் கிட்டும்.

வெற்றிமாறனின் திரைப்படங்களில் பொல்லாதவனை தவிர எல்லாப்பாடங்களையும் திரையரங்கில்தான் பார்த்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. 

நிலம், உழைப்பு, சாதியம், வர்க்க விடுதலை, ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது.    
வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார். 

சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை பேசிய முதல் தமிழ் திரைப்படமாக விடுதலை இருக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தங்கலாம். 

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் படம் இன்று திரையில் பார்த்தேன்.  ஒரு தலைவரை  விட சித்தாந்தம் முக்கியம் என்று சொல்லும் இடம் பிடித்திருந்தது. 

 

பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு ஒரு பொய்யை சொல்லிடலாம், மக்கள் அவரு மீண்டும் வருவாருனு நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான் அடுத்த தலைவர்களை தேட மாட்டாங்க சார், அதான் நல்லது..

 

விடுதலை-2 திரைப்பட விமர்சனம்

BookDay21/12/2024
விடுதலை-2 (Viduthalai 2) திரைப்பட விமர்சனம் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் வெளியான திரைப்படம் https://bookday.in/
 விடுதலை-2 திரைப்பட விமர்சனம்
அங்குமிங்குமாக சில காட்சிகள் என்றில்லாமல் நேரடியாகவே இடதுசாரி அரசியலை பேசுகிறது விடுதலை..

கைது செய்து கைவிலங்கிட்டு ஒரு இரவு முழுவதும் காட்டில் நடந்து கொண்டே வாத்தியாரும் போலீஸ் டீமூம் பேசும் அரசியல் அடர்த்தியானது, முக்கியமானது..

தப்பிச் செல்லும் போது காவலர்களை பார்த்து ‘நான் நிறைய கேள்விகளை எழுப்பிருக்கேன். பதிலை நீங்க தேடுங்க’ என விஜய் சேதுபதி பேசுவதாக வரும் காட்சி இயக்குநர் பார்வையாளர்களை நோக்கி பேசுவதை குறிக்கிறது..

விடுதலை-2 (Viduthalai 2) திரைப்பட விமர்சனம் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில்  வெளியான திரைப்படம் https://bookday.in/

கீழ்தஞ்சை மாவட்டங்களின் சாணிப்பால், சவுக்கடி அவலம் வயலில் தாய்ப்பாலை பீச்சும் பெண் தொழிலாளிகள் துயரம் ஆண்டைகளின் குரூரம் என அரைநூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்த கொடுமைகளும் ‘அடித்தால் திருப்பி அடி’ ‘டேய் னு கூப்பிட்டா என்னடான்னு கேளு’ எனும் செங்கொடியின் தீரமும் சமூக ‘விடுதலை’ (Viduthalai)யின் முக்கியத்தை உணர்த்துகிறது.. மக்களுக்காக நாம் ஆயுதம் தாங்கி போராடுவதோடு அவங்களை அரசியல் படுத்திட்டா மக்களே அவங்க போராட்டத்துல அவங்களுக்கான ஆயுதத்தை முடிவு பண்ணிருவாங்க..

ஆட்சில இருப்பவங்க ஒரு Narrative ஐ முடிவு பண்ணிட்டு அப்றம் அதை உண்மையாக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க.. நீங்க பாட்டுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை கொன்னுட்டு சஸ்பென்ஸ், டிரான்ஃபர் விசாரணை கமிஷன் னு போய்ட்டே இருப்பீங்க, மக்களுக்கு அரசியல்வாதியான நாங்கதான்யா பதில் சொல்லணும்..

விடுதலை-2 (Viduthalai 2) திரைப்பட விமர்சனம் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில்  வெளியான திரைப்படம் https://bookday.in/

பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு ஒரு பொய்யை சொல்லிடலாம், மக்கள் அவரு மீண்டும் வருவாருனு நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான் அடுத்த தலைவர்களை தேட மாட்டாங்க சார், அதான் நல்லது..

படத்தில் வெடிக்கும் துப்பாக்கி தோட்டாக்களோடு இணைந்து ஆங்காங்கே வெடிக்கிறது வெற்றி மாறனின் வசனங்களும்… ஆலைகளில் நிகழும் சுரண்டல் சங்கம் அமைக்காமல் தடுப்பது அரசு அதிகாரிகளின் தந்திரம் போலீஸ் கையாளும் உத்தி என ஒவ்வொன்றையும் தோலுரிக்கிற காட்சிகள்… அடையாள அரசியலின் தாக்கங்கள் ஆங்காங்கே வசனங்களில் தென்பட்டாலும் வர்க்க அரசியலை அழுத்தமாக முன்வைக்கிறது விடுதலை (Viduthalai Part 2)..

ஜனநாயக போராட்டங்களில் மக்களை அணிதிரட்டுவதும் வர்க்கப் பார்வையை விரிவு செய்வதும் முக்கியம் என்கிறது.. திரைப்படத்தை காணும் போது, நீண்ட உரையாடல் காட்சிகளை தவிர்த்திருக்கலாமோ என்று கூட சிலருக்கு தோன்றலாம். ஆனால் அந்த உரையாடல்களால் தான் விடுதலையின் அரசியலை பேசவும் உணர்த்தவும் முடியும்.

விடுதலை-2 (Viduthalai 2) திரைப்பட விமர்சனம் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில்  வெளியான திரைப்படம் https://bookday.in/

அரசியல் உள்ளடக்கம் கொண்ட திரைப்படத்தை வெகுஜன சினிமாவாக அளித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறனும் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் சூரி, ராஜீவ் மேனன், இளையராஜா எனும் அனைத்து கலைஞர்களும் மிகுந்த பாராக்குரியவர்கள்..

 

https://bookday.in/viduthalai-2-movie-review-by-r-badri/#google_vignette

முதல் நாளே அரங்கம் சென்று பார்க்க இருந்த திட்டம் போட்டு இருந்தோம், ஆனால் முடியவில்லை. இந்த வெள்ளி பார்க்க செல்வதாக உள்ளேன்.

என் குடும்பத்தில் வெற்றிமாறனின் ரசிகர் இருவர் உள்ளோம். ஒன்று நான், அடுத்தது என் மகள்.  நாம் இருவரும் இது வரைக்கும் அசுரனை மூன்று முறையும், விடுதலை பாகம் 1 இனை இரண்டு தரமும், ஆடுகளத்தை பலதடவையும் பார்த்துள்ளோம்.

கந்தப்பு மாதிரி, பொல்லாதவனை மட்டும் திரையரங்கம் சென்று பார்க்கவில்லை. மிச்ச எல்லாவற்றையும் அரங்கம் சென்றே பார்த்து இருக்கின்றேன்.

வெற்றிமாறனின்  படங்களில் மிகப் பிடித்தது, வட சென்னை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில படங்கள் பார்த்த பின்னர் பலநாட்கள் தொந்தரவு செய்யும். மகாநதி முன்னர் தொந்தரவு செய்தது. இப்போது விடுதலை..

படத்தின் அரசியல் புரியாது எனக்கு முன்னால் இருந்த சில தமிழக இளைஞர்கள் “தோழர்” என்று தங்களுக்குள் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை அதட்டி அமைதியாக்கவேண்டி வந்துவிட்டது. அவர்கள் என்னுடன் சண்டைக்கு வராமல் “சும்மா கலாய்க்கத்தான்” என்று  சொல்லி அமைதியாகிவிட்டார்கள். படத்தை நிம்மதியாகப் பார்க்கமுடிந்தது.

 

முகநூலில் வந்த பதிவு ஒன்று.. ஸ்பொயிலர் இல்லை..

——

நம் பாலுமகேந்திராவிடம் பயின்ற வெற்றிமாறன் இயக்கி வெளியாகியிருக்கும் விடுதலை 2 ஒரு செங்காவியம்! முதல் காட்சியிலேயே சுத்தியல் ஒன்று அரிவாளை அடித்து உருவாக்குகிறது! தெளித்திருக்கிறது அரசியல் - ரத்தமாக!! இருந்தாலும் அதையெல்லாம் நல்லதொரு கலைப்படைப்பாக காட்சிக்குக் காட்சி அனுபவித்து உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். கம்யூனிஸ தத்துவத்தை பெருமைப்படுத்தி தமிழில் இப்படியானதொரு அரசியல் படம் வந்ததே இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் செய்த தன்னலமற்ற தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயர்நிலைப்பட்டுப் பதியப்பட்டிக்கின்றன. இது படம் அல்ல பாடம். வெற்றிமாறனின் சினிமா அனுபவம் இந்தப்படத்தின்மூலம் துணிச்சலான அரசியலாக மாறியிருக்கிறது. 

அதுமட்டுமல்ல, இந்தியாவின் அதிகார அரசியல் மற்றும் காவல்துறை ஊழல்களை அப்பட்டமாகக் கிழித்திருக்கிறது படம். லெனின் படத்தையோ மார்க்ஸ் படத்தையோ காட்டிவிட்டு கம்யூனிஸம் என்று கதைவிடாமல், ஒரு படைப்பாக வசனங்களாலும், கதை மாந்தர்களாலும் ஒரு மாபெரும் புரட்சிகரத் தத்துவத்தை தமிழில் எளிமையாகப் பேச முயன்று தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்தியிருக்கிறது படம். அதிகாரம், துரோகம், வர்க்கம், சாதி, ஆண்டான் அடிமை முறை, மனித உரிமை மீறல்கள் ஒன்றுடன் ஒன்றும், வரலாற்றுடனும் கொண்டிருக்கும் தொடர்பு படம் முழுவதும் எதிரொலிக்கிறது.

ஆனால் விடுதலை1 கொண்டாடப்பட்டதுபோல விடுதலை 2 அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுமா என்பது சந்தேகமே. படம் சிறப்பாகவே இருந்தாலும் அது பேசும் அரசியல் எல்லாருக்கும் புரியாது. (குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் தனி) 

இந்திய அதிகாரம் எப்படி இயக்கப்படுகிறது என்பதை இயக்குனர் ராஜிவ்மேனன் ஏற்றிருக்கும் பாத்திரம் பச்சையாகச் சொல்லாமல் சொல்கிறது. ஆசான் கே.கே.யாக வரும்  கிஷோர், 'திருட்டுமுழி' சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன் மனதில் நிற்கிறார்கள். மஞ்சுவாரியரின் பாத்திரம் மட்டும் சற்று சினிமாத்தனமாக வந்திருந்தாலும், அதற்கும் பெருமளவு அழுத்தம் வெற்றிமாறனால் தரப்பட்டிருக்கிறது. பெண்கள் தலைமுடியை வெட்டி கிராப் செய்து கொள்வதற்கு சொல்லப்படும் காரணம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது - 'விடுதலை பெண்'களை! மஞ்சுவாரியரின் தோற்றம் தோழர் மணலூர் மணியம்மையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.  மணியம்மை பிராமணக்குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்தவர் என்பது நடந்த வரலாறு.

தமிழ்நாட்டில் நடந்த கொடுமையான பிரச்சினைக்குரிய வரலாற்றுச் சம்பவங்கள் சிலவற்றை இந்த அளவு துணிச்சலாக... வசனங்களில்... திரைக்கதையில்... பரபரப்பான காட்சி அமைப்புக்களில்.. இவ்வளவு அழுத்தமாக, ஆழமாக, தத்துவப் பார்வையுடன் வெற்றிமாறனைத் தவிர வேறு தமிழ் இயக்குனரால் தரமுடியுமா? சந்தேகம்தான். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் "We Do The Lie" என்பது வெளிப்படையாகத் தெரிவதுபோல எடுப்பார்... பா.ரஞ்சித் தாழ்ந்த ஜாதியினர் செய்யும் பிரச்சாரம்போல வெளிப்படையாக எடுப்பார். வெற்றிமாறனோ விசாரணை செய்கிறார். இனி ஆளை 'இயக்குனர்ஞானி' வெற்றிமாறன் என்றும் சொல்லலாம்.

படத்தின் எடிட்டிங் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது. இசைஞானியின் பின்னணி இசை ஒலிக்கும்போதும்சரி, ஒலிக்காமல் இருக்கும்போதும்சரி படம் மேலும் விறுவிறுப்பாகிறது. இளையராஜாவே எழுதி பாடிய "தினம்தினமும் ஒன் நினைப்பு"  முந்தைய அவரது பாடலான "வழிநெடுக காட்டு மல்லி" பாட்டின் பார்ட் 2 + கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியத்தை பாடவைத்திருக்கும் "மனசில மனசில.." பாட்டில் ஆகாயத்தில் புள்ளி வைத்திருக்கிறார் இளையராஜா.

"ஆயுதப் போராட்டம் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டுமா?", "போராளிகள் திருமணம் செய்யலாமா" என்று 1980களில் ஈழத்தமிழர்கள் கேட்ட கேள்விகளுக்குக்கூட இந்தப்படத்தில் சரியான விளக்கம் வருகிறது. "வன்முறை ஒரு மொழி இல்லை. ஆனால் எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்" என்கிறார் விஜய் சேதுபதி.

விடுதலை 1இல் சூரியை மையமாக வைத்து கதை ஓடியது. இதில் விஜய்சேதுபதி படத்தை முழுவதுமாகத் தாங்குகிறார்.  விடுதலை 1 தமிழ்நாடு விடுதலைப்படையுடன் தொடர்புற்றிருந்தது. விடுதலை 2ல் தமிழரசன், கலியபெருமாள் போன்ற ஆளுமைகள் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்த அரசியலின் தீர்க்கத்தை மக்கள் மத்தியிலும், சினிமா ஆர்வலர் மத்தியிலும் எளிமையாக, வலிமையாகக் கொண்டுபோகிறது விடுதலை 2.

படத்தில் வரும் வெற்றிமாறன் வசனங்கள் நம்மிடையே பல புரிதல்களையும் விவாதங்களையும் முன்வைக்கிறது. "தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது" என்று ஒரு வசனம் வருகிறது. படத்தை பார்க்கும்போது ஜே.வி.பி & ரோகணவிஜயவீரவின் நினைவும் வராமல் போகாது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக முள்ளிவாய்க்கால்வரை சென்று வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த சம்பவம்கூட நுட்பமாக படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கண்ணத் திறந்தபடியே கிடக்கும் சடலம், அதை தூக்கி எடுக்கும் காட்சி.. படத்தைப் பாருங்கள். புரியும்.

 

https://www.facebook.com/share/18PC8heMXU/?mibextid=wwXIfr

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.