Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?

Jan 24, 2025
Screenshot-2025-01-24-131541.jpg

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 24) தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தநிலையில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் “சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வழக்கின் விசாரணை தற்போது முடிந்துவிட்டது. முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில் குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா பொய்யான தகவலை பரப்பியுள்ளார். அதன்பிறகு குடிநீர் தொட்டியில் ஏறிய முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று அறிக்கையாக தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த அறிக்கையை பிரமாண மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் வழக்கின் விசாரணையை மீண்டும் இன்று மதியத்திற்கு ஒத்திவைத்தார்.

 

https://minnambalam.com/tamil-nadu/cb-cid-charge-sheet-three-persons-in-vengaivayal-case/

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில் குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா பொய்யான தகவலை பரப்பியுள்ளார். அதன்பிறகு குடிநீர் தொட்டியில் ஏறிய முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று அறிக்கையாக தாக்கல் செய்தார்.

 

 

இதற்குப் பின்னர் மின்னம்பலம் இன்னொரு செய்தியை மேலதிக விபரங்களுடன் வெளியிட்டிருக்கின்றனர்:

https://minnambalam.com/political-news/vengaivayal-chargesheet-cbcid-shocking-information/

கீழடியும், வேங்கைவயலும் அருகருகே இருக்கும் இடங்கள்...............

இந்த சம்பவத்தால், இந்தப் பிரதேசம் எங்களின் தொன்மை என்று பெருமைப்படுவதா அல்லது இது என்ன கொடுமை என்று கூனிக்குறுகுவதா என்ற வினா கேட்கப்பட்டிருந்தது. இது பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட சாதியக் கொடுமை என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது. ஆனால்  இறுதியில் பட்டியலினத்தவர்களே இதைச் செய்தார்கள் என்று முடிவு விசாரணையில் வந்திருக்கின்றது................😌.  

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்த்தப்பட்ட மக்கள்,  வறுமையில் உள்ளவர்கள், பால்ப் புதுமையினர், சிறுபான்மையினர் என்றாலே அவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றும் அவர்கள் பாவம் என்றும், அதேநேரம் பெரும்பான்மை மக்கள், சாதிய அடுக்கில் மேல் இருப்பவர்கள் எல்லோரும் கெட்ட மனிதர்கள் என்றும் ஒரு பொதுப் புத்தி இங்கே பதிக்கப்பட்டு விட்டது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

இதற்குப் பின்னர் மின்னம்பலம் இன்னொரு செய்தியை மேலதிக விபரங்களுடன் வெளியிட்டிருக்கின்றனர்:

https://minnambalam.com/political-news/vengaivayal-chargesheet-cbcid-shocking-information/

 

 

வேங்கைவயல்… ஒரு வழியாய் அவிழ்ந்த முடிச்சு! அந்த மூவரில் ஒருவர் போலீஸ்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

Jan 24, 2025
VENGAI-VAYAL-TANK.jpg

தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வேங்கைவயல் வழக்கில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று  (ஜனவரி 24) தெரிவித்துள்ளது.

கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் முடுகாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்த, மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் என பலரும் கண்டனக் குரல்களை தெரிவித்தார்கள். இந்திய அளவிலும் இது பேசுபொருளானது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படது.  சிபிசிஐடி  எஸ்.பி. .சண்முக பிரியா மேற்பார்வையில் திருச்சி டி.எஸ்,பி. பால்பாண்டி தலைமையிலான டீம் இதை விசாரித்து வந்தது. பிறகு தஞ்சாவூர் டி.எஸ்,பி. கல்பனா தத் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

0uHGBLOd-cbcid.jpg

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. புதுக்கோட்டைக்கே வந்து கள விசாரணை செய்த ஆணைய தலைவர் சத்தியநாராயணன்,

“வேங்கையலில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது 2022  டிச.26-ம் தேதி தெரியவந்தது. ஆனால், அதற்கு முன் எப்போது அது கலக்கப்பட்டது என தெரியவில்லை. அதற்கு முன்பு டிசம்பர் 22 ஆம் தேதி குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

judge-sathyanaryanan-1024x409.jpg

இந்த வழக்கின் மீதான விசாரணை ஆமை வேகத்தில் நகர்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்தான்… இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று  (ஜனவரி 24) விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வழக்கின் விசாரணை தற்போது முடிந்துவிட்டது. முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”  என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

வேங்கைவயல் வழக்கே மிகவும் சென்சிடிவ் ஆன வழக்கு என்பதால், இந்த குற்றப்பத்திரிகையில் என்னென்ன தகவல்கள் இருக்கின்றன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றப்பத்திரிகை என்பது புகார் தாரருக்கும், எதிரிக்கும் மட்டுமே வழங்கப்படும் ஆவணமாகும்.

இந்நிலையில் வேங்கை வயல்  விவகாரத்தில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் பற்றியும் விசாரணை பற்றியும் சிபிசிஐடி வட்டாரத்தில் மிகத் தீவிரமாக விசாரித்தோம். அதில் மேலும்  அதிர்ச்சி தரத்தக்க முக்கிய  தகவல்கள் கிடைத்துள்ளன,

“ஜனவரி 20 ஆம் தேதி புதுக்கோட்டை  நீதிமன்றத்தில் முரளி ராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மூவரும் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கணக்கானோரிடம் வருடக் கணக்கில் விசாரணை நடத்திய பிறகு பல்வேறு பலத்த வடிகட்டல்களுக்குப் பிறகு இந்த மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இன்னொரு அதிரவைக்கும் முக்கிய செய்தி என்னவென்றால், இந்த மூவரில் முரளி ராஜா தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர் என்பதுதான்.  முரளிராஜா 2013 பேட்ச்  முதல் நிலை காவலராக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த வழக்கு  பல கொலை வழக்குகளை விட சென்சிடிவ் ஆன வழக்காக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் சமுதாய ரீதியான பதற்றங்களும் கலந்திருக்கின்றன. அதனால் சட்ட ரீதியாகவும் சரி, விசாரணை ரீதியாகவும் சரி மிகுந்த நிதானத்தோடும் கவனத்தோடும் விசாரிக்க வேண்டியிருந்தது.

vengai-vayal.webp

2022 டிசம்பர் 26 ஆம் தேதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்ததாக அறியப்பட்டது. ஆனால் அது எப்போது, யாரால் கலக்கப்பட்டது என்பதுதான் பெரும் கேள்வியாக இருந்தது. இதற்கு நேரடி சாட்சி கிடையாது, சிசிடிவி ஃபுட்டேஜ் கிடையாது. விஞ்ஞான ரீதியாக சோதனைகள் தேவைப்பட்டன.

இதையெல்லாம் தாண்டி சிபிசிஐடி போலீஸார் இந்த விவகாரத்தை வெகு கவனமாக கையாண்டனர்.  ஏனென்றால் அந்த கிராமத்தில் பட்டியல் சமுதாய மக்கள் ஒரு பக்கமும், முத்தரையர்-முக்குலத்து சமுதாய மக்கள் இன்னொரு பக்கமும் வசித்து வருகிறார்கள்.  குடிநீர் தொட்டி பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில்  பட்டியல் சமுதாய மக்கள் எத்தனை பேர், மற்ற சமுதாய மக்கள் எத்தனை பேர் என்று  சிபிசிஐடி போலீசார் கணக்கெடுத்தனர்.  குடிநீர் தொட்டி  அருகேயோ மேலேயோ மற்ற சமுதாயத்தினர் இதுவரை வந்திருக்கிறார்களா என்று விசாரித்தனர்.

மொத்தம் 250 பேருக்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், இந்த 250 பேரிடம் விசாரித்ததில்  48 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த 48  பேர்களில் இறுதியாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் மீண்டும் விசாரணை நடந்தது.  இப்படி படிப்படியாக பல வடிகட்டல்கள் செய்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் இறுதியாகத்தான் முரளிராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது கடுமையான சந்தேக வளையம் விழுந்தது. அவர்களிடம் விசாரித்தபோதுதான் நடந்தது தெரியவந்தது.

வேங்கைவயலில் ஒரு பிறந்தநாள் பார்ட்டி  நடந்திருக்கிறது. இதற்கான மது விருந்து குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில்தான் நடந்திருக்கிறது.  அதில் சுமார் 15 பேர் வரை பங்கேற்றனர். வேங்கைவயலில் குடிநீர் தொட்டி மீது ஏறி  மேல் பகுதியில் அமர்ந்து மது அருந்தும் பழக்கம் அப்பகுதி இளைஞர்களிடையே இருந்துள்ளது. இரவு நீண்ட நேரம் மது அருந்தினாலும் யாரும் கேட்கமாட்டார்கள். அப்படியே மேலேயே தூங்கிவிடலாம் என்பதால் குடிநீர் தொட்டியின் மேல் பகுதியை மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

அப்படித்தான் முரளிராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர்  இரவு குடிநீர் தொட்டியின் மீது ஏறி பிறந்தநாள் மது விருந்து கொண்டாடியிருக்கிறார்கள். அதில் இரவே சிலர் கீழே இறங்கிவிட்டார்கள். சிலர் இரவு முழுதும் மேலேதான் இருந்திருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர் செய்த வேலைதான் குடிநீர் தொட்டியிலே மலம் கழித்தது. பழிவாங்குவதற்காக இதை போதையில் செய்திருக்கிறார்கள்.

சிபிசிஐடி போலீசாரிடம் முதல் நிலை காவலர் முரளிராஜா அளித்த வாக்குமூலத்தில்,

‘இந்த டேங்க் ஆபரேட்டராக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சண்முகம் வேலை பார்த்து வந்தார். ஆனால் முத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா, எங்கள் ஆளான சண்முகத்தை வேலையில் இருந்து தூக்கிவிட்டார். அதற்கு பழிவாங்கும் வகையில்தான் இதை செய்தோம்’ என்று கூறியிருக்கிறார்.

26 ஆம் தேதி காலை போதை தெளிந்ததும்  முரளி ராஜா ஊருக்குள் சென்று, ‘யாரும் பைப் தண்ணி புடிக்காதீங்க. அதுல ஒரே நாத்தமா அடிக்குது’ என சொல்லியிருக்கிறார். பிறகு முரளிராஜாவும் அவர்களது நண்பர்களும் மேலே ஏறி பார்த்து, ‘குடிநீரில் மலம் கிடக்கிறது’ என்று கூறினார்கள்.

cpim-meet-mks-1024x576.jpg

விசாரணையில் கிடைத்த தகவல் அப்போதே ஊர் மக்கள் மூலம் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் மூலமும் சிபிஎம் தலைமைக்கு சென்றது. உடனே சிபிஎம் குழுவினர் முதல்வரை சந்தித்து,  ‘வேங்கை வயல் விசாரணை பாதிக்கப்பட்ட பட்டியல் சமுதாய மக்களை நோக்கியே செல்கிறது’ என்று புகார் கூறினார்கள்.

அப்போதே சிபிசிஐடி மேலிடத்துக்கு இந்தத் தகவல் அனுப்பப்பட்டு, விசாரணையை நிதானமாக முன்னெடுக்கும்படி சொல்லப்பட்டது. அதனால்தான் சற்று தாமதித்தோம். தவிர உண்மை இதுதான்” என்கிறார்கள்.

திமுகவின் கூட்டணிக் கட்சிகளான சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை இந்த குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளன. சிபிஐ விசாரணை வேண்டுமென்று சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது வேங்கை வயல். நடந்த குற்றத்துக்கு ஒரே சாட்சியாக பேரிகார்டுகளுடன் நின்றுகொண்டிருக்கிறது அந்த குடிநீர் தொட்டி.

 

https://minnambalam.com/political-news/vengaivayal-chargesheet-cbcid-shocking-information/

வேங்கைவயல் விவகாரம்… திருமா முதல் ரஞ்சித் வரை… அரசுக்கு வைக்கும் ஒரே கோரிக்கை!

Jan 25, 2025
VyVliP3Z-FotoJet-2-4.jpg

கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 25) விசாரணைக்கு வந்தபோது, வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்தநிலையில், வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக எதையோ மூடி மறைக்க காலம் கடந்த அவசர குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாக தாக்கல் செய்துள்ளது ஸ்டாலின் அரசு.

சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விடும் என்று ஆளும் ஸ்டாலின் அரசிற்கு ஏற்பட்ட அச்சத்தில் உருவாக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையா? இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது. 

வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காகவும்-உரிமைகளுக்காகவும் இறுதி வரை அதிமுக துணை நின்று போராடும்

1174006-1-1024x576.jpg

விசிக தலைவர் திருமாவளவன்

வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

காவல்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சார்பில் பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. 

இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். 

வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. 

சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. 

தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. 

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். 

அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. 

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

WhatsApp-Image-2025-01-25-at-6.16.26-AM.

இயக்குனர் பா.ரஞ்சித்

வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. 

அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 

சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.

வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை. 

இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. 

உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. 

உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/political-news/thiruma-ranjith-urge-tamilnadu-government-to-change-vengaivayal-case-in-cbi/

  • கருத்துக்கள உறவுகள்

'பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?' - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு

"பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?" - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு
படக்குறிப்பு,வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது(கோப்புப் படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துவிட்டதாக வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், வேங்கைவயல் மக்களும் பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இதை ஏற்கவில்லை.

அதே ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில், நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த சி.பி.சி.ஐ.டி, இதுதொடர்பான நிலை அறிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தின் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி வெளியான பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க. ஆகியவை சி.பி.சி.ஐ.டி. சொல்வதை ஏற்க முடியாது என்றும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரியுள்ளன. வேங்கைவயல் மக்களும் இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கின் பின்னணி என்ன?

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதியில் இருந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தது, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அங்கு வந்து ஆய்வு நடத்தினர்.

இந்த விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் சர்சையான நிலையில், காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியது. குடிநீர்த் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

 

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதை சி.பி.சி.ஐ.டியின் துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான 35 பேர் கொண்ட குழு விசாரிக்கத் தொடங்கியது. இந்தக் குழு பலரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொண்டது.

இதற்கு நடுவில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. 2023 செப்டம்பர் மாதத்தில் அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த பால்பாண்டி மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி. கல்பனா தத் நியமிக்கப்பட்டார். மொத்தமாக 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளும் ஐந்து பேரிடம் குரல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன. இருந்தபோதும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இதற்கு நடுவில் இந்த விவகாரத்தை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி 2023ஆம் ஆண்டில் வழக்கறிஞர்கள் கே. ராஜ்குமார், மார்க்ஸ் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

3 பேர் மீது வழக்குப் பதிவு

"பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?" - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு
படக்குறிப்பு,(கோப்புப் படம்)

இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமையன்று நீதிபதிகள் கே.ஆர். ஸ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே. ரவீந்திரன், இந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது சி.பி.சி.ஐ.டி. நிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், வேங்கைவயலைச் சேர்ந்த ஜே. முரளிராஜா (33), பி. சுதர்சன் (21), கே. முத்துகிருஷ்ணன் (23) ஆகியோர் மீது 277, 427, 201, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள எஸ்.சி./எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 20ஆம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் ஜி.எஸ். மணி காவல் துறை தெரிவித்துள்ள தகவல்கள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் சாதி குறிப்பிடப்படாததையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றமாக இதைக் காட்டாமல், உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவரின் கணவருக்கும் இந்த மூன்று பேருக்கும் இடையிலான பகையால் இந்த விவகாரம் நடந்ததைப் போலக் காட்ட காவல்துறை முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, குற்றவியல் நடவடிக்கைகளில் உயர்நீதிமன்றம் ஒவ்வொரு கட்டத்திலும் தலையிட முடியாது என்றும், மனுதாரர் விரும்பினால், நிலை அறிக்கைக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, விரிவான மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென வழக்கறிஞர் மணி கோரினார். அதையடுத்து, வழக்கு மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டியின் நிலை அறிக்கையில் உள்ள தகவல்கள் என்ன?

"பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?" - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு
படக்குறிப்பு,இந்த வழக்கு ஜனவரி 14ஆம் தேதி சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது (கோப்புப் படம்)

பஞ்சாயத்துத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா என்பவருக்கும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்துக்கும் இடையிலான மோதலே, இந்தச் சம்பவத்திற்கு இட்டுச் சென்றதாக சி.பி.சி.ஐ.டியின் நிலை அறிக்கை குறிப்பிடுகிறது.

"வேங்கைவயலைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தன்னுடைய 6 வயது மகள் காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டதாக டிசம்பர் 24ஆம் தேதி புகார் அளித்தார். அந்த ஊரில் மேலும் நான்கு பேரும் இதேபோல பாதிக்கப்பட்டனர்.

டிசம்பர் 26ஆம் தேதி தங்களுக்கு வரும் தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாகச் சிலர் கூறினர். இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தண்ணீர் தொட்டியின் மீது ஏறிப் பார்த்தனர். அதில் மனிதக் கழிவுகள் இருந்ததைப் பார்த்த அவர்கள், அதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர்," என்று அந்த நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 26ஆம் தேதி கனகராஜ் அளித்த புகாரின் பேரில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 14ஆம் தேதி சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் பின்வரும் தகவல்கள் தெரியவந்ததாக நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"வேங்கைவயலை உள்ளடக்கிய முத்துக்காடு பஞ்சாயத்தின் தலைவரான எம். பத்மா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் ஆபரேட்டரான சண்முகத்தை வேலையிலிருந்து நீக்கினார். சண்முகத்திற்கு வேங்கைவயல்காரர்களின் ஆதரவு இருந்தது.

பத்மாவின் கணவரான முத்தையாவிடம், சண்முகத்தை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும்படி வேங்கைவயல்காரர்கள் கோரியும் அந்த வேண்டுகோள் எடுபடவில்லை. அதுதவிர, தங்கள் ஊரின் குடிநீர்த் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாதது குறித்தும் வேங்கைவயல்காரர்களுக்கு அதிருப்தி இருந்தது."

"பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?" - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு
படக்குறிப்பு,வேங்கைவயலில் மலம் கலக்கட்ட குடிநீர்த் தொட்டி (கோப்புப் படம்)

மேலும், "கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் முத்தையாவுக்கும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் தந்தையான ஜீவானந்தத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முத்தையாவை பழிவாங்குவதற்காக குடிநீர்த் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரில் துர்நாற்றம் வருவதாகக் கூறிய முரளிராஜா, டிசம்பர் 26ஆம் தேதி முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோரோடு குடிநீர் தொட்டியின் மீது ஏறினார். இவர்கள் மூவரும் சேர்ந்து இந்தக் குற்றத்தைச் செய்தனர்," என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு, "இந்த வழக்கிற்கென உருவாக்கப்பட்ட புலனாய்வுக் குழு 397 சாட்சியங்களை விசாரித்தது. 196 பேரின் மொபைல் போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன், முத்தையா ஆகியோரின் போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த போன்களில் பல படங்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்டு, ஆராய்ந்ததில் இந்த மூவரும் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இறையூர் ஐயனார் கோவிலுக்குள் வேங்கைவயல் மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் இறையூரில் உள்ள தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது. இந்த இரு விவகாரங்கள் தொடர்பாகவும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது" என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐடி. தாக்கல் செய்த நிலை அறிக்கை கூறுகிறது.

அரசியல் கட்சிகள் கண்டனம்

"பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?" - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு
படக்குறிப்பு,இப்போது வேங்கைவயலுக்குள் வெளியாட்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது (கோப்புப் படம்)

மாநிலத்தையே அதிரவைத்த இந்த விவகாரத்தில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் என்று தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களே குற்றம் சாட்டப்பட்டிருப்பதற்கு வேங்கைவயல் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், "பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "சி.பி.சி.ஐ.டி. சமர்ப்பித்திருக்கும் நிலை அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது" எனவும் கூறியிருக்கிறார்.

அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

"சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் ஒருவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகத் தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்குக் காரணம் என்பது சரியல்ல" எனத் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

வேங்கைவயல் மக்கள் கடும் எதிர்ப்பு

"பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?" - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு
படக்குறிப்பு,வேங்கைவயலைச் சேர்ந்த முருகன் (கோப்புப் படம்)

சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த இந்த நிலை அறிக்கையை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள் வேங்கைவயல் மக்கள்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய வேங்கைவயலைச் சேர்ந்த முருகன், "இது மிக மிக மோசமான நடவடிக்கை. இதை எதிர்த்து உண்ணாவிரதத்தைத் துவங்கியிருக்கிறோம். தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். பல்வேறு அரசியல் கட்சிகளோடு இணைந்து போராடப் போகிறோம். நீதிமன்றத்தையும் நாடுவோம்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். "எப்படி பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக இருக்க முடியும்? சில அரசியல் தலைவர்கள் ஊர்த் தலைவரின் கணவரான முத்தையாவுக்குச் சாதகமாக இருக்கிறார்கள். அதனால்தான் காவல்துறையும் இப்படி நடந்து கொள்கிறது.

நாங்களே மலத்தை அள்ளிப்போட்டு, நாங்களே அந்தத் தண்ணீர் குடிப்போமா? இதுதவிர, நிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, கிராமசபைக் கூட்டத்தில் சண்டை போட்டது முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் அல்ல, சதாசிவம் என்பவரும் ரத்தினசாமி என்பவரும்தான். முரளிராஜாவை குற்றவாளியாக்க ஜீவானந்தம் பெயரை இழுக்கிறார்கள்" என்கிறார் முருகன்.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சண்டை போட்டதாக முருகன் குறிப்பிடும் சதாசிவத்திடம் கேட்டபோது, "அன்றைய கிராமசபைக் கூட்டத்திற்கு 12.15 மணியளவில் நான் போனேன். அதற்கு முன்பே அங்கே ஜீவானந்தம் வந்திருந்தார். ஆனால், அவர் எதுவுமே பேசவில்லை. அந்தக் கூட்டத்தில், வேங்கைவயல் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுக்கப்பட்டதாக நோட்டீஸ் அடித்து எல்லோருக்கும் கொடுத்தார்கள்."

"பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?" - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு
படக்குறிப்பு,வேங்கைவயலைச் சேர்ந்த சதாசிவம் (கோப்புப் படம்)

"நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். எங்களுக்கு எப்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் கொடுத்தீர்கள், அதற்கான ஆவணத்தைக் காட்டுங்கள் என்று கேட்டேன். கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தார். அவரிடமும் போய், 'இதற்கான ஆதாரம் எங்கே என்று காட்டுங்கள். நீங்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறீர்களா?' எனக் கேட்டேன். அவர் எதுவும் பேசவில்லை. பிறகு எழுத்தர் வைத்திருந்த தீர்மான நோட்டைப் பிடுங்கினேன். உடனே தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்து கூட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்" என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசியவர், "அப்போதும் ஜீவானந்தம் பேசாமல்தான் இருந்தார். நான்தான் அவரிடம் போய், நீ கூட்டத்திற்கு எனக்கு முன்பே வந்துவிட்டாயே, இதைக் கேட்காமல் உட்கார்ந்திருக்கிறாயே எனக் கேட்டேன். அதற்குள் மங்களத்து முருகையன், மொசக்குட்டி அஞ்சப்பன் ஆகிய இருவரும் தலைவரை காரில் அழைத்துச் சென்றுவிட்டார்கள். இதையெல்லாம் சிபிசிஐடியிடம் வாக்குமூலமாகக் கொடுத்தேன். இருந்தாலும் சிபிசிஐடி நாங்கள் சொன்னதைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் இதுபோன்ற ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது" என்கிறார் சதாசிவம்.

இப்போது நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், முத்தையா தரப்பினரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முரளிராஜா, ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இப்போது வேங்கைவயலுக்குள் வெளி ஆட்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று போராட்டம் நடத்தவிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று விசாரணையின் அறிக்கை வந்தவுடனேயே திருமாவும், ரஞ்சித்தும் இதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தது.

அவர்களே அவர்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலப்பார்களா என்ற கேள்விக்கு, அவர்கள் செய்திருக்கக்கூடும் என்பதற்கும் சாத்தியம் இருக்கின்றது. அவர்கள் தான் செய்தார்கள் என்று உறுதியாக நான் சொல்ல வரவில்லை. டிஎன்ஏ சோதனை, அலைபேசி உரையாடல்கள், அதன் உண்மைத் தன்மை என்று எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வசதி இன்று எந்த ஆளும் தரப்பிடமும் இருக்கின்றது.

சில தலைவர்கள், சீமான், ராமதாஸ், அன்புமணி, போன்றவர்கள் இந்த விடயத்தில் பட்டும் படாமலுமேயே இருப்பார்கள். ஏனென்றால் இது பட்டியல் சமூக மக்கள் சம்பந்தமானது.................😌.

திமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு இது நல்ல ஒரு வாய்ப்பு.............. திமுகவை குற்றம் சொல்வதற்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

பாமக உள்ளே விசிக கம்மினியூஸ்ட்டுகள்வெளியே கூட்டிக்கழிச்சுப்பார்த்தால் கணக்கு சரியாகவரும்.இந்த விடயத்தில் இதுவரை விசிக  மெளனம் சாதித்ததது இதற்குத்தானா?நாளைகக்கே 6 சீற்றுக்கு திருமா உடன்படுவார் என்று கருதலாம். திமுக சரியாக காய்களை நகர்த்துகிறது. வேங்கை வயல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த மாதிரியும் இருக்கும் செல்வாக்கில்லாத கம்னியூஸ்ட்டுக்களையும் விசிகவையும் கழட்டி விட்ட மாதிரியும் இருக்கும்.  இவர்கள் பாமக கூட்டணியில் இணைய மடியாது விஸஜயோடு இணையலாம்.

பெரியார் மண்ணு!வெங்காய பண்னு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கை வயல் : சிபிஐ வேண்டாம்; ஆனால்… விஜய்யின் புது கோரிக்கை!

Jan 26, 2025
vengai vayal vijay

வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. 

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தான் குற்றசெயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தர்களையே குற்றவாளிகள் என கூறியுள்ளதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். 

vegaom-1024x768.jpg

சிபிஐ விசாரணை கால தாமதத்தை ஏற்படுத்தும்!

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 26) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.

வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.

வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/political-news/vijay-request-on-vengaivayal-case/

 

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கைவயல் விவகாரம் | அரசின் குற்றப்பத்திரிகைக்கு சீமான், விஜய் கண்டனம்! 

வேங்கைவயல் விவகாரத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

seeman and vijay  condemnation on vengaivayal issue

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு தரப்பில் சமீபத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

அதில் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன், முரளி ராஜா ஆகிய 3 பேர்தான் இந்த செயலை செய்தது என்றும் முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கவே இதுபோல் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இச்சம்பவத்தில் வேறு யாருக்கோ தொடர்பிருக்கும் நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேரை குற்றம்சாட்டுவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

seeman and vijay  condemnation on vengaivayal issue

சீமான் கண்டனம்!

இதுகுறித்து சீமான், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியினைச் சுமத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதே மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தமிழகக் காவல்துறையின் போக்கு ஏற்கவே முடியாத கொடும் அநீதியாகும். சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என வாய்கிழியப் பேசும் திமுக அரசின் சமூக நீதி இதுதானா? பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் எல்லா மக்களுக்குமான திராவிட மாடல் ஆட்சியா?‌ பேரவலம்! அநீதிக்குத் துணைபோகும் திமுக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

ஆதித்தமிழ் குடிமக்கள் வசிக்கும் பகுதியில் நடந்தேறிய சாதிய வன்மம் கொண்ட இக்குற்றச்செயலினை முற்றிலுமாக மடைமாற்றி, தனிநபர் நோக்கம் கொண்ட மோதல்போல சித்தரித்து, அப்பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய தம்பிகள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். ஏற்கனவே, குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதில் உடல்நலக்கேடும், மன அழுத்தத் தாக்குதல்களுக்கும் ஆளான வேங்கைவயல் மக்களுக்கு மேலும் அநீதி இழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது வெட்கக்கேடானது.

 

முரளிராஜா எனும் ஊர்க்காவல் படையினைச் சேர்ந்த தம்பி, நீரின் தன்மை சீரழிந்தது குறித்து ஆராய்கையில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டதனைக் கண்டறிந்து புகார் அளித்தவராவார். மனிதக்கழிவு கலந்த நீரினை உட்கொண்டு பாதிக்கப்பட்ட அவரையே இறுதியில் குற்றவாளியாக மாநிலப்புலனாய்வுத்துறை வழக்கில் சேர்த்திருப்பது விசாரணையின் அடிப்படையையே கேள்விக்குறியாக்குகிறது. மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி, மிகுந்த முதன்மைத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கக்கூடிய இவ்வழக்கிலேயே புகார் அளித்த மக்கள் மீது காவல்துறை குற்றம் சுமத்தி இருக்கிறதென்றால், இனி எந்த வன்கொடுமைக்கு புகார் அளிக்க உழைக்கும் மக்கள் முன்வருவார்கள்? வேங்கைவயலில் நிலவும் சாதியச் சிக்கலினை மூடி மறைத்து, தனிநபர் பழிவாங்கல் போக்கலினால் இக்கொடுமை நடந்திருப்பதாக முடிவெழுதுவதுதான் பெரியார் வழியிலான ஆட்சியா பெருமக்களே? இதுதான் நீங்கள் கட்டிக் காக்கும் சமூக நீதியா? இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அம்மக்களுக்கான நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் ஸ்டாலின் முன்வராததுதான் விளிம்பு நிலை மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையா?

சாதியத்தோடு இக்குற்றம் நடந்தேறி இருப்பது உறுதியாகத் தெரிய வந்திருக்கும் நிலையில், அதனைத் தனிநபர் விரோதத்தினால் விளைந்தது என திசைதிருப்ப முற்படுவது உண்மையானக் குற்றவாளிகளைத் தப்பவிடும் கொடுஞ்செயலாகும். இது குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவைக் கலந்ததற்கு நிகரான வன்கொடுமையாகும். வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் அலைபேசி உரையாடல்களும், புகைப்படங்களும் வெளியே கசிய விட்டிருப்பது வெளிப்படையான மோசடித்தனமாகும். பாதிக்கப்பட்ட மக்களைக் குற்றப்படுத்த இந்த இழிவான செயலில் ஈடுபடுகிறதா காவல்துறையும், அதிகார வர்க்கமும் எனும் ஐயம் எழுகிறது. வெளியே விடப்பட்ட ஒலிநாடாவை வைத்து வழக்கின் கோணத்தையே மாற்றி முடிவெழுத முற்படுவது மிக மோசமான அதிகார முறைகேடாகும்.

seeman and vijay  condemnation on vengaivayal issue

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் நிலையில், ஒடுக்கப்பட்ட ஆதிக்குடி மக்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இதனைத் தடுத்து, அடித்தட்டு மக்களைக் காக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி சுமத்துவது வரும் காலங்களில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும் என்பது உறுதியாகும். ஆகவே, முதல்வர் ஐயா ஸ்டாலின் இவ்வழக்கில் சிறப்புக் கவனமெடுத்து, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை இவ்வழக்கிலிருந்து விடுவிப்பதோடு, மறுவிசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

https://www.puthiyathalaimurai.com/tamilnadu/seeman-and-vijay-condemnation-on-vengaivayal-chargesheet-by-govt

 

  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை இம்முறை தமிழ்நாடு பொலிசுக்கு வழங்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.