Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றாடி - அத்தியாயம் நான்கு

-----------------------------------------------
large.kaththaadi-3.jpg.10ea737e6cb01a97daf912d7c7385b99.jpg
 
தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா, மாமி, அண்ணா, அக்கா, அப்பாச்சி, அம்மாச்சி, இப்படி ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லி அழைப்பதே வழக்கம் என்றாகியிருந்தது. முறை தெரிந்த சொந்தக்காரர்களை அவர்களின் முறையை வைத்தே அழைத்துக் கொண்டார்கள். ஒரு சில அரச உத்தியோகத்தர்களைத் தவிர, வேறு எவரையும் ஒரு உறவுமுறையில் இல்லாமல் குறிப்பட்டதாகவோ அல்லது அழைத்ததாகவோ ஞாபகமில்லை. தனம் மாமி சொந்தத்தில் மாமி இல்லை. இதே ஒழுங்கையில் அவரும் குடியிருக்கின்றார். வீடு நிறைய ஆண் பிள்ளைகளை பெத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றார். அவர்களில் இருவரைத் தவிர மற்ற எல்லோருமே அவனை விட வயது கூடியவர்கள். பெண் பிள்ளை ஒன்று வேண்டும் என்றே, அடுத்து அடுத்து ஆண்பிள்ளைகளை சளைக்காமல் பெற்றதாக தனம் மாமி சொல்லியிருக்கின்றார். அவனின் வீட்டில் ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் மாறி மாறிப் பிறந்திருந்தார்கள். அவனின் வீட்டில் வேறு ஒரு கொள்கை வழியில் பெற்றிருக்கின்றார்கள் போல. 
 
'என்ன, மூத்தவன் படிப்பை நிற்பாட்டி விட்டானாம்.................' என்று ஆரம்பித்தார் தனம் மாமி. 
 
அவனின் அம்மா பரீட்சை அன்று கடுமையாக மழை பெய்ததால், அவன் பரீட்சைக்கு போகவில்லை, அதனால் படிப்பு நின்று போனது என்று ஒரு வெள்ளந்தியாக கதைக்கவில்லை. அம்மா அப்படிக் கதைக்கவேமாட்டார். அவர் பிடி கொடுக்கவேமாட்டார். ஒரு ஆணாக பிறந்திருந்தால், அவர் எப்படியோ ஒரு பெரியாளாக ஆகியிருப்பார். பெண்ணாகப் பிறந்தபடியால், ஓட்டைகளில்லாத கறுப்பு புல்லாங்குழல் போல இருக்கும் ஒன்றால் சர்வ காலமும் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கின்றார். அவனும் அதை ஊதிப் பார்த்திருக்கின்றான். ஒரு தடவை ஊதுவதற்கு பதிலாக, அடுப்புப் புகையை உள்ளே இழுத்துவிட்டான். இருமிக் கொண்டே ஊதுகுழலை கீழே போட்டு விட்டு, அதை திருப்பி எடுக்கும் போது, அதன் அடுத்த பக்கத்தில் பிடித்து தூக்கியும் விட்டான். எந்த வேலைக்கும் அனுபவம் மிகவும் முக்கியம்.
 
'படிப்பு என்ன படிப்பு, படிக்காதவர்கள் தான் இன்று உலகத்தை ஆளுகின்றார்கள்............' என்று தொடர்ந்தார் தனம் மாமி. ஏட்டுச் சுரைக்காயில் எங்கே கறி வைப்பார்கள், கழனிப் பானைக்குள் யார் கவிழ்ந்து விழுகின்றார்கள், இப்படி இன்னும் சில உதாரணங்கள் ஒரு மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டன. அவரின் பிள்ளைகள் எவருக்கும், இதுவரை, இந்தப் பழமொழிகளையும், முதுமொழிகளையும் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேவையும் வரவில்லை. நாலு மனிதர்களுடன் மட்டும் பழகுகின்றோம், அந்த நால்வரும் ஒன்றையே சொல்கின்றனர் என்றால் முழு உலகமே ஒத்த குரலில் அதையே சொல்வது போன்றே இருக்கும். இன்று இலங்கையின் பெரிய பணக்காரராக இருப்பவர், அவர் படிக்கவேயில்லை, கொழும்பில் தெருத்தெருவாக பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தாராம் என்று தனம் மாமி இலங்கையில் உள்ளவர்களிலேயே பெரிய சாட்சியாக ஒருவரை கொண்டு வந்து நிறுத்தினார்.
 
'பிறகு............... அவருக்கு என்ன லொத்தரே விழுந்தது...............' என்று அவனின் அம்மா ஆச்சரியம் காட்டினார். அம்மா கேட்பதைப் பார்த்தால், அந்தப் பணக்காரருக்கு லொத்தர் விழவில்லை என்பது அம்மாவிற்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது போன்றே அவனுக்கு தெரிந்தது. கடுமையாக உழைத்து, படிப்படியாக அவர் முன்னேறினார் என்று தனம் மாமி சொன்னார். தன்னுடைய மூத்த பிள்ளைகளும் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அதில் மூத்த அண்ணன் போன மாதம் இதே ஒழுங்கையில் இருக்கும் அக்கா ஒருவருக்கு கடிதம் கொடுத்து, அது பெரிய வாக்குவாதம் ஆகியது. அன்று இரவு அந்த அக்காவின் வீட்டிற்கு கல்லெறி கூட விழுந்தது. இரவு வெளியே வரப் பயந்து இருந்த அவர்கள், விடி விடியென ஆள் சேர்த்துக்கொண்டு அடிக்கப் போனார்கள். தனம் மாமி வீட்டில் என்ன நடந்தது என்றே தெரிந்திருக்கவில்லை. வேற யாரோ ஒரு கணக்குப் பண்ணி, அந்த அக்காவின் வீட்டிற்கு இரவு கல்லை எறிந்து விட்டுப் போயிருக்கின்றார்கள் போல. கொழும்பில் பேப்பர் பொறுக்கி, பின்னர் பெரும் பணக்காரராக ஆனவரும் முதலில் அவரின் சொந்த ஊரில் ஒரு கடிதப் பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பாரோ என்று அவன் நினைத்தான்.
 
அவனை அப்பொழுது தான் கண்ட தனம் மாமி, 'என்ன வேலைக்கு போகின்றாய்..................' என்றார். அவனின் அம்மா வயரிங் வேலைக்குப் போகின்றான் என்று சொன்ன அதே நேரத்தில், அவன் தான் தியேட்டரில் வேலை செய்வதாகச் சொன்னான். சில பின்னேரங்களிலும், இரவுகளிலும் அங்கே போய் தியேட்டரிலும் சும்மா நிற்கின்றவன் என்று அவனின் அம்மா, அப்படியே அவனை முறைத்துக் கொண்டே, சமாளித்தார். 'தியேட்டருக்கு எல்லாம் போகவே கூடாது, அங்கே தான் எல்லா கெட்ட பழக்கங்களையும் இந்தப் பிள்ளைகள் பழகுதுகள்...............' என்று சொல்லிக்கொண்டே மாமி நல்ல வசதியாக பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டார். மேடைப்பேச்சாளர் ஒருவர் தொண்டையைக் கணைத்து முழுவீச்சில் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பது போன்ற ஒரு நிலையில் மாமி இருந்தார். இன்று இரவு மாமி வீட்டிற்கு யாரும் கல்லால் எறிந்தால் பரவாயில்லை என்று எண்ணம் ஒரு மின்னல் போல தோன்றி மறைந்தது.
 
புகை, குடி, கூத்து என்று பல கெட்ட பழக்கங்கள் வரிசையாக அடுக்கப்பட்டன. எல்லாமே தியேட்டரிலேயே ஆரம்பிக்குது என்றார். ஆனால், காதல், கடிதம் என்ற சொற்கள் மட்டும் வரவேயில்லை. நல்லதோ, கெட்டதோ வெளியில் தான் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. எந்த மனிதனும் கொஞ்சமாக கண்ணை மூடி அவனுக்குள்ளே எவைகளையும் தேடுவதில்லை. 
 
(தொடரும்.........................) 
  • Replies 50
  • Views 2.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    காற்றாடி - அத்தியாயம் மூன்று -----------------------------------------------     இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வே

  • ரசோதரன்
    ரசோதரன்

    காற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------       சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தத

  • ரசோதரன்
    ரசோதரன்

    காற்றாடி - அத்தியாயம் நான்கு -----------------------------------------------   தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரசோதரன் said:

எந்த மனிதனும் கொஞ்சமாக கண்ணை மூடி அவனுக்குள்ளே எவைகளையும் தேடுவதில்லை. 

அண்ணை வேற லெவல் 🧐.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

எனக்கு ஆபிரிக்காவில் இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. கேள்விக்கும் விடைக்கும் தொடர்பே இருக்காது.

தொடருங்கள் ரசோதரன்…!

நீங்கள் அங்கு படித்தீர்களா, புங்கையூரான். இங்கு ஈழத்தமிழர் ஒருவர் மருத்துவராக இருக்கின்றார். அவர் Zambia இல் படித்ததாகச் சொன்னார். முன்னர் எங்கள் நாட்டிலிருந்து ஆசிரியர்களாக அங்கு சிலர் போயிருந்ததாகவும் ஞாபகம்.

8 minutes ago, villavan said:

அண்ணை வேற லெவல் 🧐.

தத்துவமும், கவிதையும் என்ற வகையில் எதையாவது எழுதுவது சுலபம் தானே, வில்லவன், ஆனால் வாசிப்பவர்களின் நிலை தான் சில நேரங்களில் அப்படி இப்படி ஆகிவிடுகின்றது போல....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நீங்கள் அங்கு படித்தீர்களா, புங்கையூரான். இங்கு ஈழத்தமிழர் ஒருவர் மருத்துவராக இருக்கின்றார். அவர் Zambia இல் படித்ததாகச் சொன்னார். முன்னர் எங்கள் நாட்டிலிருந்து ஆசிரியர்களாக அங்கு சிலர் போயிருந்ததாகவும் ஞாபகம்.

தத்துவமும், கவிதையும் என்ற வகையில் எதையாவது எழுதுவது சுலபம் தானே, வில்லவன், ஆனால் வாசிப்பவர்களின் நிலை தான் சில நேரங்களில் அப்படி இப்படி ஆகிவிடுகின்றது போல....................🤣.

எனது இளமைக் காலங்களில் ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில், சில வருடங்களைச் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்க்காகத் தொலைத்திருக்கிறேன், ரசோதரன்…!

பிறக்கும் போதே ஈழத்தமிழ் ஆண் மகனுக்கென சில கடமைகள், அவனை முந்திப் பிறந்து விடுகின்றன அல்லவா?

இப்போது நிலமை எவ்வாரோ தெரியாது!

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

 

தத்துவமும், கவிதையும் என்ற வகையில் எதையாவது எழுதுவது சுலபம் தானே, வில்லவன், ஆனால் வாசிப்பவர்களின் நிலை தான் சில நேரங்களில் அப்படி இப்படி ஆகிவிடுகின்றது போல....................🤣.

இதெல்லாம் கப்சா சார்...அனுபவம்தான் ..கதை ..கவிதையாக வரும் ...வந்துகொண்டேயிருக்கும்...இது அடிச்சட்டியில் இருந்தே வெளிக்கிடுகுது...நமக்கு கொண்டாட்டம்தானே ...வாசித்து எஞ் யாய் பண்ணுறம்...தொடர்க

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

தத்துவமும், கவிதையும் என்ற வகையில் எதையாவது எழுதுவது சுலபம் தானே, வில்லவன், ஆனால் வாசிப்பவர்களின் நிலை தான் சில நேரங்களில் அப்படி இப்படி ஆகிவிடுகின்றது போல

ஒரு விதத்தில் உண்மை தான். அர்த்தம் என்பது வாசிப்பவர் விளங்கிக் கொள்ளுறது தான், ஆனா, அதுக்குரிய சொற்களை எல்லாராலும் சொல்லேலாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

பிறக்கும் போதே ஈழத்தமிழ் ஆண் மகனுக்கென சில கடமைகள், அவனை முந்திப் பிறந்து விடுகின்றன அல்லவா?

பொறுப்பான பிள்ளையாக இருந்திருக்கின்றார் புங்கை அண்ணா.

என்னுடைய நான்கு நண்பர்களின் பெற்றோர்கள் நைஜீரியாவில் ஆசிரியர்கள், எஞ்சினியர்களாக வேலை செய்தவர்கள். நண்பர்களும் அங்குதான் பிறந்தவர்கள். அவர்களின் தந்தைமார்கள் எல்லோருமே வீட்டுப் பொறுப்பால் நைஜீரியாவுக்கு வேலைக்குப் போனவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொறுப்பான பிள்ளையாக இருந்திருக்கின்றார் புங்கை அண்ணா.

என்னுடைய நான்கு நண்பர்களின் பெற்றோர்கள் நைஜீரியாவில் ஆசிரியர்கள், எஞ்சினியர்களாக வேலை செய்தவர்கள். நண்பர்களும் அங்குதான் பிறந்தவர்கள். அவர்களின் தந்தைமார்கள் எல்லோருமே வீட்டுப் பொறுப்பால் நைஜீரியாவுக்கு வேலைக்குப் போனவர்கள்.

வீட்டுக்கு வீடு வாசற்படி தானே கிருபன்…!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2025 at 22:40, ரசோதரன் said:

சித்திரத்திற்கும், எனக்கும் இடையே இருக்கும் தூரம், இரண்டு நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே இருக்கும் தூர அளவை விட கொஞ்சம் அதிகம்.

 AI இடம் கேட்டு வாங்கியே இங்கே போடுகின்றேன்.................

அழகான படத்தை AI மூலம் உருவாக்கியிருக்கிறீர்கள். மழைத் துளிகள் உடலில் விழுந்து தெறிக்கும் அழகும் அதன் மேல் செலுத்தப்பட்ட ஒளியும் அருமை. சித்திரத்துக்கு அருகில்தான் அமர்ந்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

அழகான படத்தை AI மூலம் உருவாக்கியிருக்கிறீர்கள். மழைத் துளிகள் உடலில் விழுந்து தெறிக்கும் அழகும் அதன் மேல் செலுத்தப்பட்ட ஒளியும் அருமை. சித்திரத்துக்கு அருகில்தான் அமர்ந்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

🙏..............

எப்போதும் இங்கு நீங்களும், பல நட்புகளும் கொடுக்கும் உற்சாகமே என்னுடைய முயற்சிகளுக்கு முழுமுதற் காரணம்.

பல மாதங்களின் முன், நீங்கள் உங்களின் ஓவியங்களை எப்படி செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வரைகிறீர்கள் என்று கேட்டிருந்தேன். அதையே முயற்சி செய்து பார்க்கின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

இதெல்லாம் கப்சா சார்...அனுபவம்தான் ..கதை ..கவிதையாக வரும் ...வந்துகொண்டேயிருக்கும்...இது அடிச்சட்டியில் இருந்தே வெளிக்கிடுகுது...நமக்கு கொண்டாட்டம்தானே ...வாசித்து எஞ் யாய் பண்ணுறம்...தொடர்க

👍................

உண்மையே அல்வாயன், ஏதாவது ஒரு வகையான அனுபவம் இல்லாமல், அதைச் சார்ந்த புனைவுகளை எழுதுவது முடியாத காரியமே. அறிவியல் புனைவுகளை (Science Fiction), வரலாற்று சாகசங்களை எழுதுவதற்குக் கூட ஒரு துளி தேவை போல...............   

8 hours ago, villavan said:

ஒரு விதத்தில் உண்மை தான். அர்த்தம் என்பது வாசிப்பவர் விளங்கிக் கொள்ளுறது தான், ஆனா, அதுக்குரிய சொற்களை எல்லாராலும் சொல்லேலாது.

மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள், வில்லவன். சொற்களும், சொற்களைக் கோர்ப்பதும், அவற்றைச் சொல்லும் இடங்களும் சரியாக அமைந்தால், அது ஒரு நல்ல வாசிப்பாக அமைவதுடன் நினைவிலும் நின்றுவிடுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றாடி - அத்தியாயம் ஐந்து

--------------------------------------------
large.kaaththaadi-4.jpg.15afd35845407d12d7da95e782e1a08c.jpg
 
சிவா அண்ணாவும், முரளி அண்ணாவுமே அந்த அறையில் எப்போதும் இருப்பார்கள். இருவருக்கும் மட்டுமே அந்த அறையில் இருந்த இரண்டு திரைப்படக் கருவிகளையும் இயக்கத் தெரிந்திருந்தது. அவன் திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்த அறையின் கதவோரம் நின்று எட்டிப் பார்ப்பான். சிவா அண்ணா எதுவும் சொல்லமாட்டார். முரளி அண்ணா அவன் அங்கே வருவதை விரும்புவதில்லை. 'கீழே போடா.........' என்று சத்தம் போடுவார். அந்த அறையின் கதவோரத்திலேயே வெக்கை அடிக்கும். ஒரு அடி அளவு நீளமான கார்பன் குச்சிகள் திரப்படக் கருவிகளின் உள்ளே எரிந்து கொண்டிருக்கும். அங்கிருந்து வரும் ஒளியே திரையில் ஓடும் திரைப்படமாக விழுத்தப்படுகின்றது. அந்த வெக்கை தான் முரளி அண்ணாவை எரிச்சல் படுத்துகின்றது போல என்று நினைத்துக் கொள்வான்.
 
படங்கள் ஆயிரம் அடிகள் நீளமான ரீல்களாக வரும். அநேகமாக ஒரு தமிழ்ப் படம் என்றால்  14 ரீல்கள் இருக்கும். ஒவ்வொரு படமும் 14000 அடிகள் நீளமானது என்று சொல்லலாம். ஒவ்வொரு ரீலும் தனிதனியே ஒரு வட்டமான, தட்டையான தகரப் பெட்டிக்குள் இருக்கும். எல்லா வட்ட தகரப் பெட்டிகளும் ஒரு பெரிய வெள்ளி நிறத்திலான பெட்டிக்குள் இருக்கும். ஒரு ரீல் 11 நிமிடங்கள் வரை ஓடும். பெரிய படங்கள் என்றால் ரீல்களின் எண்ணிக்கை இன்னும் கூடும். ஆங்கிலப் படங்கள் போல சிறிய, 90 நிமிடங்களே ஓடும், படங்கள் என்றால், அதில் எட்டு அல்லது ஒன்பது  ரீல்களே இருக்கும். 
 
திரைப்படக் கருவிகளில் இரண்டு ரீல்களை ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தும் வசதி இருக்கின்றது. ஒரு ரீல் ஓடி முடிந்தவுடன், அதைக் கழட்டி விட்டு அடுத்த ரீலை எடுத்து மாட்டி விடவேண்டும். இப்படி மாறி மாறி செய்து கொண்டிருப்பதால், தடங்கல்கள் இல்லாமல் படம் ஓடும். இரண்டு திரைப்படக் கருவிகளையும் ஒரு காட்சிக்கு பயன்படுத்தமாட்டார்கள். இரண்டுக்கும் கார்பன் குச்சிகளை போடுவது தேவையில்லாத மேலதிக செலவு. கார்பன் குச்சிகளை கடைசிவரை எரிய விடமுடியாது. ஓரளவு எரிந்து முடிந்து கொண்டு வரும் போது, புதுக் குச்சிகளை போடவேண்டும். அவனிடம் வீட்டில் ஏராளமான எரிந்து மீதமான கார்பன் குச்சிகள் இருந்தன. காதலிக்கும் பெண் எறிந்து விட்டுப் போன பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்வது போல, அவன் சினிமா தியேட்டரிலிருந்து பொருட்களை சேகரித்து வைத்துக் கொண்டிருந்தான்.
 
ஓடிக் கொண்டிருக்கும் ரீல் இடையில் பொசுங்கி அல்லது எரிந்து போவது தான் பெரிய பிரச்சனை. ரீல் எரிவது திரையிலும் தெரியும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சத்தம் போடுவார்கள், கூவென்று கத்துவார்கள். பதட்டப்படாமல் எரிந்து கொண்டிருக்கும் ரீலை கழட்டி, எரிந்த பகுதிகளை வெட்டி எறிந்து விட்டு, இரண்டு பக்கங்களையும் மீண்டும் பொருத்தி, ஓடவிட வேண்டும். பொருத்துவதற்கு ஒரு பசை இருக்கின்றது. அப்படி வெட்டி எறியப்படும் ரீல் துண்டுகளையும் அவன் சேர்த்து வைத்திருந்தான். சில படங்களின் ரீல்கள் அடிக்கடி எரிந்துவிடும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளே கதிரைகளை உடைத்தும் இருக்கின்றார்கள். பெரிய வாய்ச்சண்டையாகவும் மாறிய நாட்களும் உண்டு. ஆனால் எவரும் எவருக்கும் இதுவரை அடித்ததேயில்லை. அது திரையில் கதாநாயகனும், வில்லன்களும் மட்டுமே செய்வது என்பதில் நல்ல ஒரு தெளிவு எல்லோரிடமும் இருந்தது.
 
அன்றோரு நாள் சிவா அண்ண வரவில்லை. அவரால் சில நாட்களுக்கு வர முடியாத ஒரு நிலையில் இருக்கின்றார் என்று சொன்னார்கள். சிவா அண்ணாவிற்கு ஏர்ப்பு வலி வந்து, அவரை மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார்கள். அவர் அருந்தப்பில் உயிர் தப்பியதாக சொல்லிக்கொண்டார்கள். எப்பவோ ஏதோ ஒரு பழைய ஆணியோ எதுவோ அவருக்கு காலில் குத்தி இருக்கின்றது. அவர் அதைக் கவனிக்காமல் விட்டிருந்ததாகவும் சொன்னார்கள். பின்னர் அவருக்கு முடியாமல் போகவே, உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தனர். அங்கிருந்து அவசரம் அவசரமாக மந்திகைக்கு அவர் அனுப்பப்பட்டார்.
 
அவனின் வீட்டில் இப்படி ஏதாவது நடந்தால், ஏதாவது குத்தினாலோ அல்லது வெட்டினாலோ, மரமஞ்சளை அவித்து குடிக்கக் கொடுப்பார்கள். சிவா அண்ணாவின் வீட்டில் கொடுக்கவில்லை போல. இல்லாவிட்டால் இந்த மரமஞ்சள் அவ்வளவாக வேலை செய்வதில்லையோ தெரியவில்லை. அவன் ஏர்ப்பு வலி என்று கேள்விப்பட்டிருந்தான், ஆனால் இதுதான் முதல் தடவையாக அந்த வலியால் ஒருவர் சாகும் வரை போனார் என்று தெரிந்து கொண்டது. கீழே குனிந்து காலைப் பார்த்தான். பாடசாலைக்கு போய் வரும் நாட்களில் செருப்பு போட்டிருந்தவன், ஆனால் இப்பொழுது போடுவதில்லை. இனிமேல் செருப்பு போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
 
சிவா அண்ணா இல்லாததால் முரளி அண்ணா அவனை உதவிக்கு வைத்திருக்க ஒத்துக்கொண்டார். முகாமையாளர் உரத்துக் கதைத்தபடியால் மட்டுமே முரளி அண்ணா சம்மதித்தார். 'சின்னப் பொடியன், அவன் அங்கே வேண்டாம்...................' என்று மட்டுமே முரளி அண்ணா மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னால் தனியாக சமாளிக்க முடியும் என்றும் அவர் சொன்னார். ஆனாலும் முகாமையாளர் விடவில்லை.  தியேட்டரில் கதிரைகள் உடைந்தால், அதற்கு முகாமையாளர் தான் முதலாளிக்கு பதில் சொல்லவேண்டும்.
 
முதல் பயிற்சியாக எரிந்து பொசுங்கிப் போன ரீல்களை எப்படி வெட்டி ஒட்டுவது என்று முரளி அண்ணா அவனுக்கு செய்து காட்டினார். மிக வேகமாகச் செய்ய வேண்டும் என்றார். பாடல் காட்சியாக இருந்தால் எவ்வளவையும் வெட்டி எறியலாம், சண்டைக் காட்சியாக இருந்தால் அளவாகத்தான் வெட்டி எறிய வேண்டும் என்று சில தொழில் ரகசியங்களையும் சொன்னார். வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தவனின் பார்வை அந்த அறையின் ஒரு மூலைக்கு போனது. அங்கே பல வெறும் போத்தல்கள் இருந்தன. 'அங்கே என்ன பார்க்கின்றாய்............. இங்கேயோ அல்லது வேறு எங்கேயுமோ இதை எதையாவது தொட்டாய் என்றால், உன்னை கொன்று போடுவேன்..........................' என்று அதட்டினார். பின்னர், 'படிப்பை விட்டிட்டு ஏண்டா இங்க வந்தாய்............' என்று மெதுவாக முணுமுணுத்தார். அவரின் குரலிலும், முகத்திலும் ஒரு மெல்லிய சோகம் தெரிந்தது.
 
(தொடரும்................................)
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

முதல் பயிற்சியாக எரிந்து பொசுங்கிப் போன ரீல்களை எப்படி வெட்டி ஒட்டுவது என்று முரளி அண்ணா அவனுக்கு செய்து காட்டினார். மிக வேகமாகச் செய்ய வேண்டும் என்றார். பாடல் காட்சியாக இருந்தால் எவ்வளவையும் வெட்டி எறியலாம், சண்டைக் காட்சியாக இருந்தால் அளவாகத்தான் வெட்டி எறிய வேண்டும் என்று சில தொழில் ரகசியங்களையும் சொன்னார். வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தவனின் பார்வை அந்த அறையின் ஒரு மூலைக்கு போனது. அங்கே பல வெறும் போத்தல்கள் இருந்தன. 'அங்கே என்ன பார்க்கின்றாய்............. இங்கேயோ அல்லது வேறு எங்கேயுமோ இதை எதையாவது தொட்டாய் என்றால், உன்னை கொன்று போடுவேன்..........................' என்று அதட்டினார். பின்னர், 'படிப்பை விட்டிட்டு ஏண்டா இங்க வந்தாய்............' என்று மெதுவாக முணுமுணுத்தார். அவரின் குரலிலும், முகத்திலும் ஒரு மெல்லிய சோகம் தெரிந்தது

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு மனிதன் ஒளிந்து கொண்டிருக்கின்றான் . ...!

அவன் பொதுவாகவே தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை ! 

அவன் வெளிப்படும் வேளைகளில் ,  உலகம் மனிதாபிமானத்தைத் தரிசிக்கின்றது . 

 

தொடருங்கள் . ..ரசோதரன் ...!

  • கருத்துக்கள உறவுகள்

எம் சமுகத்தில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. எங்கிருந்தாழும் அது மாறாது என்றே தோன்றுகிறது. 

வெயில் படத்திலும் இந்த தியேட்டர் சம்பந்தமான விடயம் விரிவாகக் காட்டப்படிருக்கும். நீங்கள் விவரிக்கும்போது எனக்கு அப்படக்காட்சிகள்தான் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த காபன் குச்சிக்கு சனம் அடிபட்டு புடுங்குப்படுகிறதை நானும் நெல்லியடி மகாத்மா தியேட்டரிலை பார்த்தனான்...அப்ப எனக்கு உந்த சூட்ட்சுமம் தெரியாது...அந்தகாலம் அப்பா அம்மாவின் காதலர் தினக்காலம்..எங்களை பெத்துப்போட்டமேயென்று...போடுதடியாய் கொண்டுபோறது...எங்களுக்கும் தியேட்டரிலை சரையில் சுத்திவிக்கிற கடலை   தின்னுற ஆசையில்போறது...போறகளையிலை நித்திரை ...இன்டர்வெல் நேரத்துக்கு..கடலை சாப்பிட ரெடியாகிவிடுவம்....

நன்று உங்கள்   கதைகள்...ஊர் நினைவை...அசைபோட வைக்குது..  தொடர்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு மனிதன் ஒளிந்து கொண்டிருக்கின்றான் . ...!

அவன் பொதுவாகவே தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை ! 

அவன் வெளிப்படும் வேளைகளில் ,  உலகம் மனிதாபிமானத்தைத் தரிசிக்கின்றது . 

அதுவே தான் புங்கையூரான்.

பொதுவாகவே ஒரு போட்டி பொறாமை என்ற எண்ணங்கள் ஏற்படாத இடங்களில் மனிதர்கள் நல்லவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகக் குறைந்தது அப்படியான இடங்களில் அவர்கள் விரோதிகளாக மாறுவதில்லை. அதுவே ஒரு போட்டி பொறாமை போன்றன இடையில் வந்து விட்டால், மெதுமெதுவாக அங்கே மனிதப் பண்புகள் சிதைந்து போக ஆரம்பிக்கின்றன. 

அக்கறையும், கருணையும் உள்ள மனிதர்கள் சிலருக்கு அவற்றை வெளிப்படுத்துவதில் சிக்கல்களும் இருக்கின்றன. இதில் வந்த முரளி அண்ணா போல...............  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, செம்பாட்டான் said:

வெயில் படத்திலும் இந்த தியேட்டர் சம்பந்தமான விடயம் விரிவாகக் காட்டப்படிருக்கும். நீங்கள் விவரிக்கும்போது எனக்கு அப்படக்காட்சிகள்தான் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. 

'வெயில்' எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. வசந்தபாலனின் படங்கள் வாழ்க்கைக்கு அருகில் இருக்கும். 'அங்காடித் தெரு' இன்னொன்று.

எனக்கு சிறுவயதில் ஒரு சினிமா தியேட்டருடன் ஓரளவிற்கு நல்ல தொடர்பு இருந்தது. இந்தக் கதையில் வந்து போகும் சில மனிதர்களின் சாயல்கள் நான் அங்கே கண்டவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

உந்த காபன் குச்சிக்கு சனம் அடிபட்டு புடுங்குப்படுகிறதை நானும் நெல்லியடி மகாத்மா தியேட்டரிலை பார்த்தனான்...அப்ப எனக்கு உந்த சூட்ட்சுமம் தெரியாது...அந்தகாலம் அப்பா அம்மாவின் காதலர் தினக்காலம்..எங்களை பெத்துப்போட்டமேயென்று...போடுதடியாய் கொண்டுபோறது...எங்களுக்கும் தியேட்டரிலை சரையில் சுத்திவிக்கிற கடலை   தின்னுற ஆசையில்போறது...போறகளையிலை நித்திரை ...இன்டர்வெல் நேரத்துக்கு..கடலை சாப்பிட ரெடியாகிவிடுவம்....

நன்று உங்கள்   கதைகள்...ஊர் நினைவை...அசைபோட வைக்குது..  தொடர்க

🤣........................

எரிந்து மிஞ்சிய கார்பன் குச்சிகள், துண்டு ரீல்கள், புத்தம் புது சினிமா போஸ்டர்கள் போன்றன பெரும் திரவியங்கள் அந்த நாட்களில். மிகச் சிலரிடம் மட்டுமே இவை இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

'வெயில்' எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. வசந்தபாலனின் படங்கள் வாழ்க்கைக்கு அருகில் இருக்கும். 'அங்காடித் தெரு' இன்னொன்று.

எனக்கு சிறுவயதில் ஒரு சினிமா தியேட்டருடன் ஓரளவிற்கு நல்ல தொடர்பு இருந்தது. இந்தக் கதையில் வந்து போகும் சில மனிதர்களின் சாயல்கள் நான் அங்கே கண்டவை.

ஓம் ஓம். வாசிக்கும் போதே புரிந்தது. அங்கு நின்ற அனுபவமில்லாமல் கற்பனையில் எழுத முடியாது. அதுவும் பாடல் காட்சிகளில் எவ்வளவு வெட்டி ஒட்டினாலும் ஒருத்தரும் ஒன்றும் சொல்லமாட்டினம் என்பது அனுபவத்தில்தான் வரும். நாங்களும் வீட்டில் படம் பார்க்கும்போது பாட்டுகளை ஓட விட்டுத்தானே பார்க்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றாடி - அத்தியாயம் ஆறு

--------------------------------------------

large.kaaththaadi-6.jpg

சிவா அண்ணா சுகமடைந்து மீண்டும் வேலைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் எடுத்தது. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் அவன் தியேட்டரில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் திரைப்பட கருவிகள் இருக்கும் அறையிலேயே இருந்தான். அவன் இப்பொழுது தியேட்டரை கூட்டுவதில்லை. காட்சிகள் ஆரம்பிக்கும் போது கலரி வகுப்பின் முன் போய் நிற்க வேண்டிய வேலையையும் அவன் இப்போது செய்வதில்லை. செல்வம் என்னும் ஒருவர் இந்த வேலைகளுக்காக புதிதாக வந்து சேர்ந்திருந்தார். செல்வம் அவனை விட சில வயதுகள் கூடியவர். அதிகமாக கதைக்கமாட்டார். அவரைப் பார்த்தால் தியேட்டரில் வேலை செய்பவர் போல தெரிவதில்லை. அந்த தியேட்டருக்கே அவர் தான் முதலாளி போன்று தான் அவரின் உருவமும், உடுப்புகளும், பாவனைகளும் இருந்தன.

சிவா அண்ணா வந்த பின்னரும் அவனை அந்த அறையிலே தங்களுக்கு உதவியாக அவர்கள் இருவரும் வைத்துக்கொண்டனர். சில வேளைகளில் அவனை  மட்டும் அங்கே அறையில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் வெளியே போய் ஒரு பத்து நிமிடங்கள் கழித்தும் வருவார்கள். அவர்கள் சிகரெட் புகைக்கவே  வெளியே போகின்றார்கள் என்று அவனுக்கு தெரியும். 

ஆங்கிலப்படம் ஒன்று தியேட்டருக்கு வந்திருந்தது. அது மாணவர்கள் பலரும் பார்க்க வேண்டிய படம் என்று பாடசாலைகளில், தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து என்று கூட்டம் கூட்டமாக மாணவர்கள் காட்சிகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவன் படித்த பாடசாலையில் இருந்தும் வந்திருந்தார்கள். அவனின் வகுப்பு மாணவர்களும் வந்திருந்தனர். அவன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. முதன் முதலாக அவன் மனதில் ஒரு தயக்கமும், வெட்கமும் வந்திருந்தது. அவனுடன் படித்த மாணவிகளும் வந்திருந்ததே அந்த தயக்கத்திற்கு காரணமாகக் கூட இருக்கலாம் என்றும் தோன்றியது.

ஒரு நாள் அன்று வரவேண்டி இருந்த படப்பெட்டி வரவில்லை. பல ரீல்களும் மிகவும் சேதமாகி விட்டது என்று அந்த தியேட்டர்காரர்கள் படப்பெட்டியை அனுப்பவில்லை. புதுப்படம் ஒன்று அடுத்த நாள் வருவதாக இருந்தது. இந்த விடயம் தெரியாமல் அவன் தியேட்டருக்கு போயிருந்தான். அங்கு செல்வமும், முகாமையாளரும் மட்டுமே இருந்தனர். வெளியில் ஒரு அறிவிப்பை போட்டு விட்டு, சிறிது நேரம் இருந்து விட்டு முகாமையாளர் வீட்டிற்கு போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டார். செல்வமும், அவனும் இன்னும் சிறிது நேரம் அங்கிருப்போம் என்று தியேட்டரின் முன் மண்டபத்தில் இருந்த படிகளில் அமர்ந்தார்கள்.

'இங்கேயே எப்போதும் இருந்து விடப்போகின்றாயா............' என்று அவனைப் பார்த்துக் கேட்டார் செல்வம்.

அவனுக்கு செல்வம் என்ன கேட்கின்றார் என்று புரியவில்லை. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தான்.

'இல்லை........... இது தான் நீ எப்பொதுமே செய்யப் போகும் தொழிலா...........' என்று கேட்டார் அவர்.

'எனக்கு இது மிகவும் பிடித்திருக்கின்றது................' என்றான் அவன்.

'எனக்கும் இது பிடித்திருக்கின்றது. ஆனால் இதில் கிடைக்கும் உழைப்பு ஒன்றுக்குமே காணாதே..............'

'அப்ப நீங்கள் வேறு ஏதாவது தொழிலும் செய்கின்றீர்களா........... நான் பகல் நேரங்களில் வயரிங் வேலைக்கும் போய்க் கொண்டிருக்கின்றேன்.'

'ம்ம்ம்............ அதுவும் ஒரு நிரந்தர வேலை என்றில்லை தானே...........'

அவன் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் நிச்சயம் பணத் தேவைக்காக இங்கே வரவில்லை என்பது முன்னரே தெரிந்திருந்தது. ஆனால் இப்பொழுது அவனை என்ன செய்யச் சொல்லுகின்றார் என்பது அவனுக்கு சுத்தமாகவே விளங்கவில்லை.

'நீ ஏன் கப்பலுக்கு போகக் கூடாது...........................'

கப்பலுக்கு போவது என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். கப்பலுக்கு போய் வருபவர்கள் ஊருக்கு வந்து நிற்கும் நாட்களில் ஒரு ராஜா போலவே நடமாடுவதை அவன் பார்த்திருக்கின்றான். அவனின் சொந்தத்தில் கூட ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். அவர் ஊர் வந்து நின்ற போது அவர்கள் வீட்டில் அவனுக்கு ஒரு சூயிங்கம் பாக்கெட் கொடுத்தார்கள். இன்னொரு சொந்தக்காரருக்கு ஒரு சட்டை கொடுத்தார்கள். அந்த சட்டையில் உட்புறம் முழுவதும் வெள்ளையாகவும், வெளியில் பளபளப்பாக இருந்ததையும் அவன் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றான். இப்படியான ஒரு சட்டையை பின்னர் எங்காவது வாங்க வேண்டும் என்றும் நினைத்திருந்தான்.

அப்படி போய் வருபவர்களின் குடும்பமும் ஒரு திடீர் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர். அவனும் ஒரு தடவை போய் வந்தால் என்னவென்று அவனுக்கு தோன்றியது.

'எல்லோரும் கப்பலுக்கு போகலாமா, செல்வம் அண்ணா..............'

'ஆ................. எல்லோரும் போகலாம். கட்டுக் காசு கொஞ்சம் கொடுக்க வேண்டும். அதைவிட சில விசயங்களும் இருக்குது. நீ நல்லா படிக்கக்கூடியவன் என்று சொல்கின்றனர்................'

'படித்தனான் தான் அண்ணா, ஆனால் தொடர முடியவில்லை...........' என்று பழியைத் தூக்கி விதியின் மேல் மெதுவாகப் போட்டான்.

'கொஞ்சம் படித்தாலே கப்பலில் ஆபிசராக, இஞ்சினியராக வரலாம்........... போக முன் படித்து சில சேர்டிபிக்கட்டுகளை எடுத்தால், அங்கு போய் கடகடவென்று முன்னுக்கு வந்துவிடலாம்....................'

செல்வம் அண்ணா தொடர்ந்தும் நிறைய தகவல்களைச் சொன்னார். தன்னுடைய சித்தப்பா ஒருவர் கப்பல் வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருப்பதாகச் சொன்னார். அவரின் சித்தப்பா மூலம் அவனுக்கு அவர் உதவி செய்வதாகச் சொன்னார். அவன் கொஞ்சம் திரிகோண கணிதம் படித்து வைத்தால் நல்லது என்றும் சொன்னார். அந்த ஒற்றை வசனம் அவனை தூக்கி அடித்தது. அவன் தன் கணிதப் பிரச்சனையை அவரிடம் இன்னும் சொல்லவேயில்லை. அவரே தொடர்ந்து ஊரில் இந்த அடிப்படைகளை ஒருவர் படிப்பிக்கின்றார் என்று சொல்லி, அவனை அங்கே போகச் சொன்னார்.

ரவி அண்ணா என்னும் அந்த ஆசிரியர் மிகவும் மெல்லிய குரலில் பாடத்தை ஆரம்பித்தார். பாடம் நடந்து கொண்டிருக்கும் இடம் அவனின் நண்பன் ஒருவனுடைய வீட்டின் பின்பக்கம் தனியாக இருக்கும் ஒரு அறை. அங்கு ஏற்கனவே பல மேசைகளும், வாங்கில்களும் போடப்பட்டிருந்தன. நண்பனின் அப்பா ஒரு ஆசிரியர். அவர் ஒரு காலத்தில் இங்கு பாடம் சொல்லிக் கொடுத்திருந்தார். இப்போது அவர் பாடசாலையை தவிர வேறு எங்கும் படிப்பிப்பதில்லை. 

பெரும்பாலும் கிரேக்க எழுத்துகளில் பாடம் போய்க் கொண்டிருந்தது.

(தொடரும்.........................)  

  • 3 weeks later...

எனது தந்தை திரையரங்கு ஒன்றில் முகாமையாளராக இருந்தவர். சிறு வயதில் அங்கு போவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எரிந்த காபன் குச்சுக்களையும் வெட்டி எறியப்படும் றீல் துண்டுகளையும் சேகரிப்பது வழக்கம். இரவில் டோச் ஒளியை றீல் துண்டுகளில் பாய்ச்சி அதன் விம்பங்களைப் பார்த்து இரசித்ததை ஞாபகப் படுத்தியுள்ளீர்கள்.

இது போன்ற பல சாதாரண சம்பவங்களைக் கடந்து வந்துள்ளோம். இவற்றைச் சுவையாக எழுத்துக்களால் கோர்த்து எழுதி, வாசிக்கும்போது விபரிக்க முடியாத இனிய உணர்வுகளைத் தரக் கூடியதாக இச் சம்பவங்களுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

எனது தந்தை திரையரங்கு ஒன்றில் முகாமையாளராக இருந்தவர். சிறு வயதில் அங்கு போவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எரிந்த காபன் குச்சுக்களையும் வெட்டி எறியப்படும் றீல் துண்டுகளையும் சேகரிப்பது வழக்கம். இரவில் டோச் ஒளியை றீல் துண்டுகளில் பாய்ச்சி அதன் விம்பங்களைப் பார்த்து இரசித்ததை ஞாபகப் படுத்தியுள்ளீர்கள்.

இது போன்ற பல சாதாரண சம்பவங்களைக் கடந்து வந்துள்ளோம். இவற்றைச் சுவையாக எழுத்துக்களால் கோர்த்து எழுதி, வாசிக்கும்போது விபரிக்க முடியாத இனிய உணர்வுகளைத் தரக் கூடியதாக இச் சம்பவங்களுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளீர்கள்.

மிக்க நன்றி இணையவன்................👍.

சில நேரங்களில் முழு வாழ்க்கையுமே எதுவுமே நடக்காத, மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றுகின்றது. பின்னர் சிறிது சிறிதாக பட்டியல் போட ஆரம்பித்தால், பலவற்றையும் கடந்து, அனுபவித்து வந்திருப்பதும் தெரிகின்றது...............

நீங்கள் சொல்லியிருப்பது ஆச்சரியத்தை கொடுத்தது. இதே அனுபவங்கள் உள்ள இன்னொருவரை ஏதோ ஒரு வகையில் நான் சந்திப்பேன் என்று நினைத்தே இருக்கவில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2025 at 22:29, ரசோதரன் said:

சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது.  உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும்

ரசோதரன் எழுதும் விதம் அந்தக் காட்சிகளை மனக்கண் முன்னே கொண்டுவந்து விடுகின்றது

சுய ஆக்கங்களை முழுவதுமாக வாசிக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை ஆனால் ரசோதரன் நிறையவே எழுதியுள்ளார்

எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் போல் உள்ளது

.தொடருங்கள் வாழ்த்துக்கள்

நல்லையா மாஸ்ரரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மரணித்துவிட்டார்

பல வருடங்களுக்கு முன்னர் அவருடைய மகன் ஒருவரைச் சந்தித்து உள்ளேன்

On 7/2/2025 at 22:48, கிருபன் said:

நல்லையா மாஸ்ரரிடம் தூயகணிதம், பிரயோக கணிதம்,

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரசோதரன் நீங்கள் சுவி எல்லாம் சினிமா படங்களுக்கே திரைக்கதை எழுதக் கூடியவர்கள்.

பெருமையாகவும் லேசான பொறாமையாகவும் இருக்கிறது.

பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

ரசோதரன் எழுதும் விதம் அந்தக் காட்சிகளை மனக்கண் முன்னே கொண்டுவந்து விடுகின்றது

.தொடருங்கள் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி வாத்தியார் அண்ணா......🙏.

வேலை நேரங்களில் இடையிடையே எதையாவது எழுதிக் கொண்டிருக்கின்றேன். இங்கு களத்தில் பலருக்கும் அது பிடித்து இருப்பது மிகச் சந்தோசம்........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.