Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்தேயு 6 : 3

- சோம.அழகு

“கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்!

“யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் கயல்.

இது வாராவாரம் நடக்கும் கதைதான். வார நாட்களில் கயலின் வீட்டுப் பாடத்தைக் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுவாள் மலர். வார இறுதியில் சில சமயம் பிள்ளையின் ஆசைக்கு வளைந்து கொடுக்க வேண்டி வரும்.

“வேணாங்கண்ணு… படிக்குறதுனா படி; இல்லனா பக்கத்து வீட்டுக்குப் போய் விளையாடக் கூட செய். எதுக்குப் போட்டு அந்தக் கூட்டத்துல வந்து….?”

“ம்மா… ப்ளீஸ் மா…” - மறுதலிக்கவே முடியாத ஒரு முகத்தை எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? வேறு வழியில்லாமல் அந்த வெகு சில நாட்களில் இன்றும் ஒன்றாகிப் போனது.

மிகவும் பொறுப்பாக ஒரு சிறிய கூடையைத் தானாக எடுத்து வந்து, “ம்ம்.. எனக்கும்” என்று மலரிடம் நீட்டினாள்.

“சொன்னா கேட்க மாட்டா… இந்தா.... ஆனா கொஞ்சந்தான் தருவேன்” என்றபடி வெறும் நான்கைந்து பூச்சரங்களை மட்டுமே அக்குட்டிக் கூடையினுள் இட்டாள்.

அம்மாவைப் போலவே கூடையை இடுப்புப் பக்கத்தில் வைத்துப் பிடித்தவள் தன் வயதிற்கே உரிய களிப்புடன் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி துள்ளிக் குதித்தவாறே தன் குதிரைவால் இடமும் வலமும் ஆட குதூகலமாகச் சென்றாள். தன் மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தவாறே மென்புன்னகையுடன் உடன் நடந்து வந்தாள் மலர். அந்தத் தெருமுனையில் வறுத்த கடலைப் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த எழிலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். மூவரும் கோவில் தெருவை நோக்கி நடந்தார்கள். கோயிலுக்கு வருபவர்கள், அதைச் சுற்றி இருக்கும் ஏராளமான கடைகளுக்கு வருபவர்கள் என மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மிக அகலமானதும் நீண்டதுமான ரத வீதி அது. எனவே ஆளுக்கு ஒரு புறமாக விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.

“படிக்குற புள்ளைகள்லாம் என்னத்துக்கு என் கூட வாரீக?” என்று செல்லமாக அதட்டினாள் மலர்.

“சும்மா வா அக்கா” என்று சிரித்த எழில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிப்பவள்.

“அம்மா! இப்பிடி ஏதாவது வெளிய வந்தாதான் உண்டு. நாங்க பாட்டுக்கு எங்க சோலிய பாக்கப் போறோம். உனக்கு என்ன எடைஞ்சலாம்?” – தனது அணியில் எழில் வந்துவிட்ட தைரியத்தில் கயலின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தைக் கையில் திணித்துத் தானும் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டவாறே நடந்தாள் எழில். கடைவீதியை வேடிக்கை பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு கயலுக்கு. எல்லாவற்றையும் கண்கள் விரிய பார்ப்பளே தவிர ஒரு நாளும் அம்மாவிடம் எதையும் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கவே மாட்டாள்.

“நாங்கதான் படிக்கல. உங்களுக்கு இருக்குற ஒரே வேலை – படிக்குறது. அத மட்டும் பாக்குறதுதானே? அதுக்குத்தான கெடந்து இப்பிடி கஸ்டப்படுதோம் நாங்க” என்றள் மலர். வீட்டில் சில சமயம் பூ தொடுத்துக் கொண்டிருக்கும் போது கயல் படிப்பதை ஆசையாய்ப் பார்க்கையில் மலரின் கண்களே பூக்களாய் மாறிப் போகும்.

பத்தொன்பது வயதில் மணமாகி இருபது வயதிலேயே கயலுக்குத் தாயாகிவிட்டாள். நன்கு படிக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் கல்லூரியின் முதலாமாண்டோடு படிப்பைத் தூக்கிப் போட வேண்டிய குடும்பச் சூழல். இப்போது அவளது உலகம், உயிர், மூச்சுக்காற்று என எல்லாமே கயல்தான். ஆனாலும் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்திற்கு முற்றிலும் ஈடு கொடுக்கும் வகையில் அனைத்து உலக நடப்புகளையும் அறிந்து கொள்ள முயல்வாள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டும் மலரை விட்டுப் போகவே இல்லை.

கோயிலில் அம்மன் சன்னதிக்கென்று தனி நுழைவுவாயில் உண்டு. கயல் உடன் வரும் நாட்களில் மட்டும் உள்ளே செல்வாள். ஐயருக்காகக் காத்திருக்கவும் மாட்டாள். அர்ச்சனையும் செய்ய மாட்டாள். வேண்டிக்கொள்ளுதல் என்பதும் அவளுக்குத் தெரியாது. சாமி கும்பிடுதல் என்பது அவளைப் பொறுத்த வரை சில நொடிகள் அக்கற்சிலையைக் கூர்ந்து நோக்கியவாறு மனதினுள் கயல் படித்துப் பெரிய ஆளாக வருவாள் என தனக்குள் வைராக்கியமாக சொல்லிக் கொள்வது. சொல்லிக் கொள்வது என்பதையும் தாண்டி அம்மனிடம் கயலைப் பெரிய கெட்டிக்காரியாகக் கொண்டு வரப்போவதாகச் சூளுரைப்பது போல இருக்கும். அதன் வீரியம் எப்படி இருக்குமென்றால் அவளது மனதிற்குக் காலமே செவி சாய்த்து அதை நிகழ்த்தித் தரும் முயற்சியில் அர்ப்பணிப்போடு ஈடுபடத் துவங்கும் அளவிற்கு இருக்கும்.

பின்னர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த இசைத்தூணில் கொட்டப்பட்டிருக்கும் குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து கயலின் நெற்றியில் இருக்கும் சிறிய கருப்புப் பொட்டிற்கு மேல் மெலிதான கோடாக இடுவாள். சட்டென்று யாரும் நெட்டி முறிக்கும் அழகைப் பெற்றுவிடும் அம்முகம். உடனே கண்களை இறுக மூடி புருவங்களையும் மூக்கையும் சுருக்கிச் சுளித்தும் விரித்தும் இரண்டு மூன்று முறை வேண்டுமென்றே விளையாடுவாள் கயல். குங்குமம் லேசாக கண்களுக்குக் கீழேயும் மூக்கின் மேலேயும் மகரந்தத்தைப் போல் சிதறிப் படியும். அதைத் துடைத்து விட்டவாறே மலரிடம் இருந்து பரிசாகக் கிடைக்கும் ஒரு முத்தத்திற்குத்தான் இந்தக் குறும்பெல்லாம்.

“ரொம்ப தூரம் போய்டாதீங்க… நான் பாக்குற தூரத்துலயே இருங்க ரெண்டு பேரும்” – ரத வீதியை அடைந்ததும் இரண்டு பேரையும் பார்த்துச் சொன்னாள் மலர். சரியென்றவாறே கூட்டத்தினுள் பிரிந்து சென்றனர்.

கோயில் ஒலிப்பெருக்கியில் உரத்துப் பாடிக் கொண்டிருந்த எஸ்.பி.பி, ஒவ்வொரு கடை வாசலிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மக்கள், வாகன இரைச்சல்கள் ஆகியவற்றுடன் “பூவு… பூவு… மல்லிப் பூவு… அக்கா பூ வாங்கிக்கோங்க”, “கடல… கடல… வறுத்த கடல… அண்ணா ஒரு பொட்டலம் அஞ்சு ரூபாதான்… வாங்கிக்கோங்கண்ணா” ஆகியவையும் போட்டி போட்டன. அவ்வளவு கூட்டத்திலும் வேக வேகமாகத் தன் கண்களால் துழாவி அவ்வப்போது இருவரின் இருப்பையும் உறுதி செய்தவாறே பூ விற்றுக் கொண்டிருந்தாள் மலர்.

கயலை உடன் அழைத்து வரும் போதெல்லாம் ஒரு வித பதற்றத்திலேயேதான் பொழுது கழியும் மலருக்கு. “சீக்கிரம் பூக்கள் விற்றுத்தீர்ந்து விடாதா?” என்றிருக்கும். கண்ணை விட்டு கயல் ஒரு நொடி மறைந்து விட்டாலும் மீதமிருக்கும் மொத்தப் பூக்களையும் சட்டை செய்யாமல் கயலைத் தேடிக் கண்டடைந்து வீட்டிற்குக் கூட்டி வந்துவிடுவாள். கூடையில் இருக்கும் பூக்களையும் அவர்கள் வரும் நேரத்தையும் பார்த்து அக்கம்பக்கத்தினர், “ஏங் கயலு? அம்மைய விட்டுத் தள்ளிப் போனியோ?” என்று விளையாட்டாகக் கேட்டுச் சிரிக்கும் அளவிற்கு அத்தனை பேருக்கும் கயலின் மீதான மலரது பேரன்பு பரிச்சயம். “ஏஞ் சிரிக்க மாட்டீங்க? வச்சுருக்குறது ஒத்த புள்ள… அதைக் காணாம ஒரு நிமிசம் உசுரே போயிருது. இன்னைக்கு யாவாரத்துல கொட்டுனது போதும். இந்தப் பூவையெல்லாம் ஆளுக்கு ஒண்ணா எடுத்து வச்சுக்கிடுங்க” என்பாள்.

அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. விற்பனையும் நன்றாக நடந்தது மூவருக்கும். கிட்டத்தட்ட எல்லாமே விற்றுத் தீரப் போகும் சமயம்.

கயலைக் காணவில்லை.

லேசான பதற்றம் தொற்றிக் கொண்ட போதிலும் ‘வழக்கம் போல் எங்கேனும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாள்’ என மனம் ஆசுவாசப்படுத்த முயன்றது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவ்வீதியை இரண்டு முறை கால்களால் அளந்து அலசி விட்டாள். கண்கள் இருப்பு கொள்ளவில்லை. சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்ததில் இப்போது நிஜமாகவே பீதியடையத் தொடங்கினாள்.

“மலரக்கா… என்னாச்சு? ஏன் இப்பிடி அங்கயும் இங்கயுமா ஓடிகிட்டு இருக்க? உன்ன தேடிக் கண்டுபிடிக்குறதே பெரும்பாடா போச்சு. கயல எங்க?” – எழில்

“அவளதான் காணும்னு தேடிட்டு இருக்கேன்”

“பயப்படாத… இங்கதான் எங்கயாவது வாய் பார்த்துட்டு நிப்பா. அடுத்த தெருவுல போய் பாப்போமா?”

“இல்ல… கண்டிப்பா இந்த ரத வீதிய விட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு அவளுக்குத் தெரியும்” – பரபரத்தாள் மலர்.

“சரி. வா… தேடுவோம்” என்று எழிலும் மீண்டும் ஒரு முறை அத்தெரு முழுக்க சல்லடை இட்டுத் தேடினாள்.

யாரிடமேனும் விசாரிக்கத் துவங்கும் அளவிற்குச் சூழல் கையை மீறிச் சென்றுவிட்டதாக நம்பும் திராணி அற்றவளாக மாறிப் போயிருந்தாள் மலர். ஒவ்வொரு நொடியும் கொடூரமாகக் கழிந்தது. “வர வேண்டாம்னு சொன்னா எங்க கேக்குறா… கழுத” என்று கோபம் கோபமாக வந்தது மலருக்கு. நேரம் ஆக ஆக அழுகை வரும் போல் இருந்தது. இருவருக்கும் என்னென்னவெல்லாமோ தோன்றியது. ஆனால் வாய்விட்டுச் சொல்ல விரும்பாமல் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என மனதினுள் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

“கோயில் வாசல்ல ட்ராஃபிக் போலீஸ் நிப்பாரு. அவர்கிட்ட சொல்லிப் பார்ப்போமா?” என்று கேட்டாள் எழில்.

நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதை அவளது வார்த்தைகள் சட்டென வெளிச்சம் போட்டுக் காட்டியதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அதற்குப் பதில் கூறுவதற்குக் கூட பயந்து போனவளாக மருண்டு நின்றிருந்தாள் மலர். செய்வதறியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். கால்கள் நிலைகுத்தி நின்றன எனினும் கண்கள் ஓய்வொழிச்சல் இல்லாமல் கூட்டத்தினுள் ஊடுருவி அலைந்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்து விட்டது.

திடீரென ஒரு இரு சக்கர வாகனத்திற்கும் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தவருக்கும் நடுவில் தென்பட்ட இடைவெளியில் பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்று அவ்வீதியில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றின் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மஞ்சள் பூ போட்ட சிகப்புச் சட்டை… கயலேதான்!

“யக்கா… அங்க பாரு… கயலு!”

கூட்டத்தைப் பிளந்து கயலை நோக்கிப் பாய்ந்து சென்றாள் மலர். கையில் ஒரு ஜிகிர்தண்டா கோப்பையுடன் சிரித்தவாறே அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தாள் கயல்.

“என்ன கயலு? எத்தன தடவ சொல்லிருக்கேன்? நீ பாட்டுக்கு எங்கயாவது போகாதன்னு” – பதற்றம் தணியாத குரலில் படபடத்தாள்.

“இங்கதாம்மா இருந்தேன். இந்த அண்ணாதான் வாங்கித் தந்தாங்க. சூப்பரா இருக்குமா. இந்தா நீ ஒரு வாய் சாப்பிட்டுப் பாரேன்” – கோப்பையைத் தூக்கிக் காண்பித்தாள்.

மகள் கிடைத்துவிட்ட ஆறுதலில் அந்த இளைஞனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே நன்றி கூற வாய் எடுத்தாள். ஆனால் அவன் கைகளில் முளைத்திருந்த கண்கள் அவளைக் கொஞ்சம் உறுத்தின.

“என்ன தம்பி பண்றீங்க?”

“ஒண்ணும் இல்லையே” என்றவாறே தோள்களைக் குலுக்கினான்.

மலரது பார்வையில் கோபம் மெல்லமாக ஏறத் துவங்கியிருந்ததை அவளது நெரிந்த புருவங்கள் காட்டிக் கொடுத்தன. உடனே அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு, “அட! நெஜமாவே ஒண்ணும் இல்லீங்க. குழந்தை பூ வித்துட்டு இருந்தா. சும்மா பேசிட்டு இருந்தேன். ‘என்ன படிக்குற?’, ‘என்ன பாடம் பிடிக்கும்?’, ‘என்னவாகப் போற?’, ‘அம்மா என்ன பண்றாங்க?’… வழக்கமா கேக்குறதுதான். ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதான்”

“அதுக்கு எதுக்கு ஃபோன்ல படம் புடிக்கிறீங்க?”

“என்னோட வலைதளத்துல போடுறதுக்கு” – இப்படிச் சொல்லும் போது அலைபேசியை அணைத்துச் சட்டைப் பையினுள் வைத்து விட்டிருந்தான்.

“அதான் எதுக்குன்னு கேக்கேன்”

அவனிடம் சரியான பதில் இல்லை. அல்லது பளிச்சென உண்மையைப் போட்டு உடைக்க தைரியம் இல்லை.

“அது… வந்து… நெறைய பேரு பாப்பாங்க”

“பாத்து? ஆமா… நீங்க போடுற இந்த வீடியோவ எப்படி உண்மைன்னு நம்புவாங்க?”

“அதுலாம் நம்புற மாதிரி பண்ணிடலாம்” – விளையாட்டாகச் சிரித்தான்.

“எப்படி? பிண்ணனியில ஒரு சோக பாட்டு இல்லேனா உத்வேகத்த கெளப்புற மாதிரியான பாட்ட சேர்த்தா?” – அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த எழில் கொஞ்சம் காட்டமாகக் கேட்டாள்.

“ஏதோ இந்தக் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கணும் போல இருந்துச்சு. அதுக்குப் போய் இவ்வளவு….” என்று பம்மினான்.

இதற்குள் அந்தச் சிறு சலசலப்புக்கு ஏற்ற சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. அதில் ஒருவன் அந்த இளைஞனைப் பார்த்து, “டூட்! நீங்க… சமூக வலைதளத்துல… அந்த genz_idiots பக்கத்தோட…” என அடையாளம் கண்டு கொள்ள முனைய அவனுக்கு அது இன்னும் ஏந்தலாய் இருந்தது. அவனைப் பின் தொடரும் 2 மில்லியன் தலைகளும் அவனுக்காக அங்கு ஆஜர் ஆனதாகவே உணர்ந்தவன் தன் தொனியைச் சற்றே மாற்றினான்.

“நல்ல மனசோட உதவி பண்ண நெனச்சேன் பாருங்க. என்னைச் சொல்லணும். தெரியாம பண்ணிட்டேன். போதுமா? ஆள வுடுங்க. நல்லதுக்கே காலம் இல்ல” என்று எரிச்சலடைந்தான்.

“தம்பி! நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட வந்து உதவியும் கேட்கல. நீங்க உதவி பண்ணனும்னு நெனச்சதயும் நான் தப்புன்னு சொல்லல. அத படம் புடிச்சு ஒளிபரப்பணும்ங்கிற ஈன புத்தியைத்தான் தப்புன்னு சொல்றேன்” – மலர் நிதானமாக சொல்ல முயன்றாலும் அந்த ஒரு வார்த்தையில் கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது.

“ஈன புத்தியா? என்ன வாய்க்கு வந்தபடி பேசுற? Ungrateful bi**h”

“ஏய்! இந்த புடுங்கித்தனத்தலாம் வேற யார்கிட்டயாவது காட்டு…. எங்களுக்கும் பேசத் தெரியும்… You imbecile ba****d” – எழிலும் பதிலுக்கு எகிறினாள்.

சண்டை முற்றத் துவங்க, யாரோ ஒருவர் அதைத் தன் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்துவிட்ட அந்த இளைஞன் இணைய உலகில் தன் பிம்பம் கலைந்து விடுமோ என்று அஞ்சி, “ஹலோ! ஃபோன ஆஃப் பண்ணுங்க. யார கேட்டு ரெக்கார்டு பண்றீங்க? டெலீட் பண்ணுங்க. It’s an invasion of privacy” என்று குதித்தான்.

“ஹய்ய்ய்! உனக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளிச் சட்னியா? இல்லாதப்பட்டவங்கன்னா கேக்காம கொள்ளாம உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணுவியா? எங்க கூட பேசுறதயே ஏதோ தாராள மனசுக்காரன் மாதிரி எடுத்துப் போட்டுட்டு இருக்க?” என்று கடுகடுத்தாள் எழில்.

“நான் நல்லது பண்ணததான் வீடியோ எடுத்தேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு”

“நல்லது பண்ணனும்னு நெனைக்குறவன் சத்தங்காட்டாம செஞ்சுட்டுப் போவான். இப்பிடி பெரும பீத்தீட்டு இருக்க மாட்டான். ஒரு 20 ரூபாய்க்கு ஜிகிர்தண்டா வாங்கி குடுத்தது நீ கட்டை விரல் பிச்சை எடுக்கத்தானே? நீ நோகாம சம்பாதிக்குறதுக்கு நாங்கதான் கெடைச்சோமா?” – தான் நினைப்பதை எவ்வாறு வார்த்தைகளில் வடிப்பது எனத் தெரியாமல் தவித்து நின்ற மலருக்கும் சேர்த்து எழிலே பேசினாள்.

“What nonsense? இதைப் பாத்து இன்னும் நெறைய பேருக்கு உதவணும்னு தோணும் இல்லையா?”

“உதவி பண்ணனும்னு நினைக்குறதும் நீ பண்றதும் ஒன்னா? மனுசனா பொறந்த ஒவ்வொருத்தனும் தன்னால முடியும்னா கண்ணு முன்னால பசிச்சுக் கெடக்குறவனுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுக்கத்தான் செய்வான். நீதான் ஏதோ பெரிய சமூக சேவை செஞ்ச மாதிரி அனத்தீட்டு திரியுற” – அவ்வளவு பெரிய விஷயத்தை அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் எழில்.

வசமாக மாட்டிக் கொண்டதாக உணர்ந்தவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

“வா எழிலு… போலாம்” என்று அவ்விடத்தை விட்டுக் கிளம்ப முயன்ற மலரின் கைப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட எழில்,

“இருக்கா… அதான் பேச்சு இவ்ளோ தூரம் வந்துட்டுல்ல… இரு, கொறையையும் பேசீட்டு வந்துருதேன்” என்றவாறு அவனை நோக்கித் திரும்பினாள்.

“நீ மலரு அக்காட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் உன் வீடியோல சிலத பாத்தேன். போன வாரம் ஒரு வீடியோ போட்டுருக்கியே? அவரு பிச்சைக்காரரா? சொல்லு?” என்று அவனைப் பார்த்துக் கத்தியவள், கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள் – “நாலாவது தெருவுல இருக்க எங்க சித்தப்பா போன வாரம் மில்லு வேலை முடிஞ்சு களைப்பா இருக்குன்னு காட்சி மண்டபத்துல உட்கார்ந்து இருந்திருக்காங்க. இவன் ‘உங்கள ஆளையே மாத்துறோம்’னு சொல்லி சித்தப்பாவுக்கு முகச்சவரம் செய்து முடிவெட்டி குளிப்பாட்டி புதுத்துணி சாப்பாடுன்னு வாங்கி குடுத்து அனுப்பியிருக்கான். அவரும் ஏதோ ஷூட்டிங்னு நெனச்சுட்டு சிரிச்சுட்டே வந்துருக்கார். இப்போ பாத்தாதான் புரியுது”. மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “நேத்து கூட அந்த நாய்க்குட்டியையும் நீதான் வேணும்னு சாக்கடைக்குள்ள வீசிட்டு காப்பாத்துறாப்புல வீடியோ போட்டுருப்ப. இந்த லட்சணத்துல உன்ன நம்ப வேற செய்யணுமா?” என்றவள் ஒரு சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.

“நீ பண்றது பேரு என்ன தெரியுமா? Pandering. Emotional Prostitution. You are just feeding your bloody ego” என்று முகத்திற் அறைந்தாற் போல் வார்த்தைகளை வீசினாள் எழில். அவற்றின் வெப்பம் பொறுக்க முடியாமல், சுற்றி நிற்பவர்களின் அருவருப்பான பார்வை தன் மீது நெளிவதைச் சகிக்க முடியாமல் நழுவப் பார்த்தான்.

இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் “சரி, விடும்மா! புள்ளைக்கு அவன் வாங்கிக் குடுத்ததுக்கு நன்றி சொல்லிட்டு அத அத்தோட விட்டுட்டுக் கலைஞ்சு போங்க” என பெரியதனமாகக் கூறவும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது எழிலுக்கு.

“போன வருசம் அஞ்சு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு அத அம்பது தெருவுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுன மகாபிரபுதானே நீங்க? நியாயம் சொல்ல வர்ற மூஞ்சியெல்லாம் பாரேன்”

அதன் பிறகு ஒருவரும் வாயைத் திறக்கத் துணியவில்லை.

“வீடியோவ டெலீட் பண்ணு” என்று மட்டும் சொன்னாள் மலர்.

அந்த இடத்தை விட்டுக் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் அவசர அவசரமாக அலைபேசியைத் தட்டிக் கொண்டிருந்தான். சட்டென அவனிடம் இருந்து பிடுங்கி அந்தக் காணொளியை அழித்தாள் எழில். பின்னர் Recently deletedக்கும் சென்று அழித்துவிட்டுச் சொன்னாள், “இவ்வளவுக்கு அப்புறமும் இப்போ எடுத்தத மீட்டெடுத்து ஒளிபரப்புனேனா நீ மனுசனே இல்ல!”

அலைபேசியைத் திரும்பப் பெற்றவன் தனது இருசக்கர வாகனத்தில் சிட்டாகப் பறந்தே விட்டான்.

மூவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கடைத்தெருவின் அவ்வளவு சத்தமும் அவர்களது அமைதியில் அமிழ்ந்து போனது. ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை அவர்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கயலுக்கு என்ன நடந்தது என்று சுத்தமாகப் புரியவில்லை. அவர்களின் கோபத்திற்குத் தான்தான் காரணமோ என்று அவள் வயதிற்கே உரிய யோசனையில் கொஞ்சம் பயந்து கூட போயிருந்தாள்.

அவர்களின் மௌனத்தில் கல் எறியும் பொருட்டு அருகில் வேகமாக வந்து நின்றது அவர்கள் தெருவில் வசிக்கும் இஸ்மாயிலின் சைக்கிள். சைக்கிளில் இருந்து இறங்கி அவர்களுக்கு நடைத்துணையாக சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தவர் அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்த எண்ணி மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

“எழிலு… ஏன்டா அவ்வளவு கோவம் உனக்கு?”

“சும்மா இருங்க பெரியப்பா… அங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சா இப்படிப் பேச மாட்டீங்க” என்று மலர் பதிலுரைத்தாள்.

“லாரில இருந்து மூட்டை எறக்கிட்டு அங்கனதான்டா இருந்தேன். முதலாளி இருந்தனால வர முடில. அதான் கேக்கேன்… அவன் ஏதோ இந்தக் காலத்து வழக்கத்துக்கு ஏத்தாப்புல… எல்லாரும் எங்கன பாத்தாலும் ஃபோனும் கையுமாத்தான் திரியுதாங்க. இப்போல்லாம் இது சகஜம்தான?”

“என்ன பெரீப்பா நீங்களும்? அவன் செஞ்சது தப்பில்லையா? புள்ள ஏதோ பிச்சைக்கு நின்ன மாரியும் இவன் கொடை உள்ளத்தோட உதவுற மாரியும்… பெரிய வள்ளல்னு நெனப்பு. உணர்வுப்பூர்வமா உதவி பண்றவன், அவசர உதவி பண்றவன்… எல்லாவனுக்கும் அத ஆவணப்படுத்தியே ஆகணுமோ? அதெப்படி உதவி பண்ற இக்கட்டான நேரத்துலயும் வறட்டுத்தனமா பொறுமையா படம் பிடிக்க முடியுது? இது பேரு உதவிலாம் இல்ல. தன்னை எல்லோரிடமும் இரக்க குணமுள்ள நல்லவனாகக் காட்டிக் கொள்ள முனையும் அசட்டுத்தனம்” – எழில்

“என்னமோ உலகத்துல ஒருத்தர் விடாம இதத்தான் பாத்துட்டு இருக்கப் போற மாதிரி… விட்டுத் தள்ளு கழுதைய!” என்று அவர்களை அதை உதாசீனப்படுத்த வைக்கும் எண்ணத்தில் கூறினார் இஸ்மாயில்.

“உலகத்துல ஏதோ ஒரு மூலையில கூட அவளைப் ‘பாவம்’ன்னு யாரும் பரிதாபப் பார்வை பார்த்துடக் கூடாதுன்னுதானே இப்பிடி ஓடி ஓடி ஓடா தேயுறேன்?” வழக்கமற்ற குரலில் கூறினாள் மலர். இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்திருந்ததா உடையத் துவங்கியிருந்ததா எனத் திருத்தமாகக் கூற இயலவில்லை.

“இதுல இவ்ளோ உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?” - இஸ்மாயில்

“உணர்ச்சி வசப்படல பெரியப்பா. சரி - தப்பு பத்திதான் இங்க பேச்சே. இப்பவும் பெத்தவங்கள ‘அம்மா’, ‘அப்பா’ன்னுதானே கூப்பிடுறோம்? இரத்தல் இன்றைக்கும் பழிக்கக்கூடிய நாணக்கூடிய தொழிலாகத்தானே இருக்கு? சில விஷயங்கள் மாறாது; மாறவும் கூடாது. நாம ஒருத்தருக்கு உதவி பண்ணும் போது உதவி பெறுபவர் இரத்தல் தொழிலே செய்பவராயினும் அவர் கண்ணியத்தையும் தன்மானத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. நல்ல பெயர் எடுக்கணும்ங்கிறதுக்காக உலகின் கண்களில் ஒரு தனிமனிதரின் இயலாமையைச் சாதமாகப் பயன்படுத்தி அவரைக் கூனிக் குறுக வைக்கக் கூடாது. இதையெல்லாம் செய்யாமல் நல்ல பெயர் எடுத்து என்னத்துக்கு?” – தீர்க்கமாகப் பேசி முடித்தாள்.

எழில் பேசுவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தார் இஸ்மாயில். அவரது நரைத்துப் போன தாடிக்குள் இருந்து ஒரு புன்னகை, “யம்மாடி! எவ்ளோ வெவரமா பேசுதா?” என்ற ஆச்சரியத்துடன் வெளிப்பட்டது.

வழியில் இருந்த தேவாலயத்தை அவர்கள் கடந்து செல்கையில் மிகச் சரியாக மத்தேயு 6 : 3 வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.

  • கருத்துக்கள உறவுகள்

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தின் அவலங்களை அப்படியே கதையில் வடித்திருக்கிறீர்கள் . ........ ! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.