Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட‌ தமிழர்களின் ஒப்பற்ற தளபதி : டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்க்குடா நாட்டில் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை இந்திய இராணுவம் ஆரம்பித்தது. இந்திய இராணுவத்திற்கெதிரான சண்டைக்கு தளபதி பசீலன் தலைமையிலான புலிகளின் அணியொன்று அவசர அவசரமாக யாழ்க்குடாநாட்டில் இறக்கப்பட்டது. இச்சண்டைகளில் தளபதி பசீலனுக்கு உதவித்தளபதியாக பால்ராஜ் களமாடினார். இச்சண்டைகளில் ஒன்றின்போதே முன்னேறிவந்த இந்திய இராணுவத் தாங்கியொன்றின் மீது சர்வசாதாரணமாக ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அதனைச் செயலிழக்கச் செய்தார் பால்ராஜ். கோப்பாய்ப் பகுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக புலிகளின் நிலைகள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்த இராணுவத் தாங்கிமீது பால்ராஜ் அவர்கள் மிகுந்த துணிவுடன் முன்னால்ச் சென்று அதனைத் தாக்கி அழித்தது அவரது வீரத்தை வெகுவாகப் பறைசாற்றியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு அடுத்த நிலை இராணுவத் தலைவரும், பிரபாகரனின் பிரதான தளபதியுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இயற்பெயர் கந்தையா பாலசேகரன் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் கொண்டிருந்த ஆகச்சிறந்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இராணுவத் திட்டமிடல்களில் அவருக்கிருந்த அசாத்திய புலமையும், சண்டைகளை முன்னின்று வழிநடத்தும் வல்லமையும் அவருக்கே தனித்துவமானவை. 1965 ஆம் ஆண்டு பிறந்த தளபதி பார்ராஜ் அவர்கள் 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி, இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இருதய நோயினால் இயற்கை எய்தினார். அவரது அறுபதாவது பிறந்த தினம் இவ்வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி கொண்டாடப்படும். தளபதி பால்ராஜ் தொடர்பாக முன்னர் வந்த கட்டுரைகளை அடிப்படையாக வைத்து, புலிகளின் ஒப்பற்ற வீரனான அவரது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இராணுவ வட்டாரங்களில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் வைத்து தளபதி பார்லார்ஜ் பாக்கப்படுகிறார். தலைவரைப் போலவே தடுப்புச் சமர்களிலும், வலிந்த தாக்குதல்ச் சம‌ர்களிலும் மிகவும் கைதேர்ந்தவராக அவர் வலம்வந்தார். தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமைகள் அவரது எதிரிகளான இலங்கை இராணுவத்தினராலும் வெகுவாகப் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவ‌ரை  பால்ராஜ் அவர்கள் மிகச்சிறந்த இராணுவத் திட்டமிடலாளன் என்பதோடு, மிகவும் திறமையான‌ வீரன் என்றும் கருதப்படுகிறார். திட்டமிடல் மற்றும் அதனைத் திறம்படச் செயற்படுத்துதல் என்பவற்றில்  பால்ராஜ் அவர்களைத் தலைவரைக் காட்டிலும் உயர்வான தானத்தில் இலங்கை இராணுவம் வைத்திருந்தது என்றும் கருதப்படுகிறது.

தளபதி பால்ராஜுடன் இலங்கை இராணுவம் நடத்திய சண்டைகளின் ஒன்றின்போது போர்முனையிலிருந்து இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அனுப்பப்பட்ட செய்திப் பரிவர்த்தனையினை புலிகளால் கேட்க முடிந்திருந்தது. அதன்படி போர்முனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இராணுவ அதிகாரிகள் களத்தில் தளபதி பால்ராஜ் இருக்கிறார் என்று தலைமையிடத்திற்கு அறியத் தந்தார்கள். அதற்கு தலைமையகத்திடமிருந்தது வந்த பதில் இவ்வாறு இருந்தது, "மிகுந்த க‌வனமாக இருங்கள். பிரபாகரனைக் காட்டிலும் பால்ராஜ் மிகவும் ஆபத்தானவர்" என்று கூறியது. பின்னாட்களில் இச்செய்தி குறித்து தலைவர் பிரபாகரன் அறிந்துகொண்டபோது மிகவும் மகிழ்ந்துபோனார். பால்ராஜுடன் இதுகுறித்து வேடிக்கையாகப் பேசிய தலைவர், " அவர்கள் உன்னைத்தான் முதலாவது எதிரியாகப் பார்க்கிறார்கள் போலத் தெரிகிறது, ஆகையால் நான் இனி அஞ்சத் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார். 

இதுபோன்ற , பெரிதும் வெளியே தெரிந்திராத சம்பவம் ஒன்று 2003 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.நோர்வே மத்தியஸ்த்தத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான முயற்சிகள் நடந்துகொண்டிருந்த காலம். இருதய நோயினால் மிகுந்த அவஸ்த்தைக்குள்ளாகியிருந்த தளபதி பால்ராஜிற்கு உடன‌டியான மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிற்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது.

கட்டுநாயக்கா

 அந்நேரத்தில் நாட்டின் சனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இருந்தார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணியாற்றி வந்தார். நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்கள் அவ்வேளை  நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால் பால்ராஜை கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லும் அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த தளபதி பால்ராஜ் தனது இரு மெய்ப்பாதுகாவலர்களோடும், நோர்வேயின் அதிகாரிகளோடும் கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்குப் பயணமானார்.  அவருக்கான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து சில வாரகாலத்தின் பின்னர் அவர் மீளவும் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார்.

நாடுதிரும்பும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை தளபதி பால்ராஜ் வந்தடைந்த போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டிணன்ட் கேணல், மேஜர் தர அதிகாரிகள் உட்பட இன்னும் பதினைந்து இராணுவத்தினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இராணுவத்தினர் இவ்வாறு பால்ராஜைச் சூழ்ந்துகொண்டது அவரைத் தாக்குவதற்காகத்தான் என்று எண்ணிய நோர்வே அதிகாரிகள் அச்சத்தினுள் உறைந்துபோயினர். ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது.   

வடக்கில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த இராணுவ அதிகாரிகள், தளபதி பால்ராஜ் புரிந்த சாகசங்களை, வியத்தகு செயல்களை நன்கு அறிந்தே இருந்தனர். ஆகவே அவர்மீது மிகுந்த மரியாதையும், கெளரவமும் அவர்களுக்கு இருந்தது. அவரை மிகச்சிறந்த போர்வீரனாக அவர்கள் கண்டுணர்ந்திருந்தனர். ஆகவே தான் பால்ராஜ் அங்கு வருகிறார் என்று அவர்கள் அறிந்த்துகொண்டபோது, களத்தில் தமக்குச் சிம்மசொப்பணமாக விளங்கிய மிகச்சிறந்த வீரனை நேரடியாகக் கண்டுவிடும் ஆர்வத்தில் அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவ்வதிகாரிகளில்ச் சிலர் பால்ராஜுடன்  கைகுலுக்கிக் கொண்டதுடன், மகிழ்ச்சியாகவும் உரையாடினர். அதன்பின்னர் பால்ராஜ் பத்திரமாக இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றி ஏறி வன்னிக்குப் புறப்பட்டுச் சென்றார். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடப்போகிறது என்று அஞ்சிய நோர்வே அதிகாரிக‌ள் இதனால் ஆறுதல் அடைந்தனர்.

https://youtu.be/iO8uYq9Fo4U?si=KZnRj8CS1FdFEPkS

தொடரும்............

Edited by ரஞ்சித்

Web series போன்ற ஒன்றில் தொடராக எடுக்கப்பட வேண்டியது பால்ராஜ் எனும் காவிய நாயகனின் போராட்ட வாழ்க்கை.

சொல்வதற்கும், வியப்பதற்கும், உருகுவதற்கும், போற்றுவதற்கும் என சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றது அவர் வாழ்வில்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

Web series போன்ற ஒன்றில் தொடராக எடுக்கப்பட வேண்டியது பால்ராஜ் எனும் காவிய நாயகனின் போராட்ட வாழ்க்கை.

சொல்வதற்கும், வியப்பதற்கும், உருகுவதற்கும், போற்றுவதற்கும் என சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றது அவர் வாழ்வில்.

வைக்கோவின் அர‌சிய‌ல் மீது என‌க்கு முர‌ன் இருக்கு

ஆனால் அவ‌ர் பால்ராஜ் அண்ணா ப‌ற்றி சொன்ன‌து உண்மையில் வேத‌னையாய் இருந்த‌து

தான் ஈழ‌த்துக்கு 1989க‌ளில் வ‌ந்த‌ போது த‌ன‌து பாதுகாவ‌ல‌ர் பால்ராஜ் அண்ணா என்று சொல்லி இருந்தார்................த‌ன்னை ப‌த்திர‌மாய் த‌மிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் போது இந்திய‌ இராணுவ‌ம் ஒரே செல் தாக்குத‌லாம் , ஒரு க‌ட்ட‌த்தில் த‌ன்னை கீழ‌ ப‌டுக்க‌ விட்டு பால்ராஜ் அண்ணா த‌ன‌க்கு மேல‌ ப‌டுத்தவ‌ராம் த‌ன‌க்கு காய‌ங்க‌ள் ப‌ட்டு விட‌க் கூடாது என்று.............செல் அடி ஓய்ந்த‌ பிற‌க்கு இர‌ண்டு பேரும் பாதுகாப்பான‌ இட‌த்தில் இருந்து உடுப்பு மாத்தும் போது , பால்ராஜ் அண்ணாவின் உட‌ம்பில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் காய‌ங்க‌ளாம்......................எல்லாம் எதிரியின் குண்டுக‌ள் ப‌ட்ட‌ இட‌மாம்..............

ஆனையிற‌வு நாய‌க‌ன் பால்ராஜ் அண்ணா.................எதிரின்ட‌ கையால் சாகாம‌ ப‌டுத்த‌ ப‌டுக்கையில் உயிர் பிரிந்த‌து...............மாலை ம‌ரியாதையோட‌ உட‌லை அட‌க்க‌ம் செய்த‌து ம‌ன‌துக்கு ஆறுத‌ல்

ஆன‌ந்த‌ புர‌த்தில் வீர‌ச்சாவு அடைந்த‌ த‌ள‌ப‌திக‌ளின் உட‌ல்க‌ளை எடுக்க‌ கூட‌ முடிய‌ வில்லை அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் பால்ராஜ் அண்ணா தான் வ‌ழி காட்டியா இருந்த‌வ‌ர்.................

வார‌ கிழ‌மையோட‌ 17வ‌து ஆண்டு எம்மை விட்டு பிரிந்து................

வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏🙏🙏........................

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி பால்ராஜ் அவர்கள் தனது ஆரம்ப விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினராக இருந்து பின்னர் தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது .

வீர வணக்கங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய்

கந்தையா பாலசேகரன் எனும் இயறற்பெயரைக் கொண்ட தளபதி பால்ராஜ், 1965 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமமான கொக்குத்தொடுவாயில் பிறந்தார். நான்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் கொண்ட அந்தக் குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக அவர் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயிலும் பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் உயர்தரக் கல்வியையும் அவர் பயின்றார். குடும்பத்தில் கல்வியில் சிறந்தவராக விளங்கிய பாலசேகரன் அவர்கள், சாதாரணதர பரீட்சையில் அதிவிசேட சித்திகளைப் பெற்றிருந்தார். அவர் கல்வியில் காட்டிய திறமையினால் பல்கலைக்கழகம் புகுவார் என்று அவரது பெற்றோரான கந்தையாவும் தாயாரான கண்ணகியும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் பாலசேகரன் தமிழ் போராளி அமைப்பு ஒன்றில் இணைந்துகொண்டார்.

1984 ஆம் ஆண்டிலேயே புலிகளுடன் பாலசேகரன் இணைந்துகொண்டார். புலிகளின் ஒன்பதாவது அணியில் இடம்பெற்ற அவர் தமிழ்நாட்டில் இராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். புலிகள் இயக்கத்தில் அவர் இணைந்துகொண்டதன் பின்னர் அவருக்கு பால்ராஜ் என்று பெயர் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தனது ஆயுதப் பயிற்சியை நிறைவுசெய்த பால்ராஜ் நாடு திரும்பினார். புலிகளின் வன்னி நடவடிக்கைகளுக்கு அக்காலத்தில் பொறுப்பாகவிருந்த கோபாலசாமி மகேந்திரராஜா எனும் இயற்பெயரைக் கொண்ட மாத்தையாவினால் புலிகள் இயக்கத்திற்குள் உள்வாங்கப்பட்ட பால்ராஜ், மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைக்கப்பட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் நடவடிக்கைகளில் புலிகளால் ஈடுபடுத்தப்பட்டார்.

பால்ராஜ் அவர்களது முதலாவது குறிப்பிடத்தக்க தாக்குதல் முயற்சி 1986 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சி இராணுவ முகாமைச் சுற்றிவளைக்க மாத்தையாவினால் எடுக்கப்பட்ட முயற்சியானது தோல்வியடைந்தபோதிலும், தனக்கு வழங்கப்பட்ட பணியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றும் தாக்குதலை பால்ராஜ் சிறப்பாகவே செய்துமுடித்தார்.

1987 ஆம் ஆண்டு மாத்தையா தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக பதவியேற்று யாழ்க்குடாவிற்குச் சென்றார். அங்கிருந்துகொண்டு வன்னியின அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான பொறுப்பினை அவர் பார்த்து வந்தார் . அதேவேளை வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான தளபதிகளாக ஜெயம், சுசீலன் மற்றும் பசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பசீலனின் துணைத்தளபதியாக பொறுப்பெடுத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். இக்காலப்பகுதியில் பசீலனினாலும், பால்ராஜினாலும் மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.அதன்பின்னர் பால்ராஜ் அவர்கள் மணலாறுப் பிரதேசத்திற்கு நன்கு பரீட்சயமானவர் என்கிற அடிப்படையில் அப்பகுதியிலேயே களம் அமைத்துச் செயற்பட்டு வரலானார்.

தொடரும்............

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாத்தியார் said:

தளபதி பால்ராஜ் அவர்கள் தனது ஆரம்ப விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினராக இருந்து பின்னர் தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது .

இதை அறிந்துளேன்.

இங்கு எங்காவது சொல்லியிருக்கிறேனோ தெரியாது.

அதில், அவரை, தற்செயலாக நதந்த சம்பவத்தில், உடனடியாக சமயோசிதமாக சிந்தித்து சிறிய தாக்குதல் திட்டத்தை சொன்னதில் புலிகள் அவரை உடனடியாக வரவேற்றதாக.

இதன் விபரங்களை நான் அறியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம்

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினூடாக இந்திய அமைதிப்படைப் படை எனும் பெயரில் பெருமளவு இந்திய இராணுவத்தினர் இலங்கையின் வடக்குக் கிழக்கிற்குள் வந்திறங்கியபோது அதுவரை இருந்த போர்ச்சூழலில் சற்றுத் தொய்வு ஏற்பட்டது. ஆனால் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த சமாதான நடவடிக்கைகள் ஐப்பசி மாதமளவில் முற்றாகத் தோல்வியடையவே இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான முழுமையான போர் ஆரம்பமானது.

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக இந்திய இராணுவம் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்தது. தளபதிகள் பசீலன் மற்றும் பால்ராஜ் தலைமையிலான புலிகளின் அணியொன்று இந்திய இராணுவத்துடனான சண்டைகளுக்காக புலிகளால் யாழ்க்குடநாட்டிற்கு அனுப்பப்பட்டது. இவ்வாறான சமர்களில் ஒன்றான கோப்பாய்ச் சமரில், தமது நிலைகளை நோக்கி முன்னேறிவந்த இந்திய இராணுவத்தின் தாங்கியொன்றின்மீது தான் வைத்திருந்த ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அழித்தார் பால்ராஜ். பால்ராஜின் துணிகரமான இச்செயல் போராளிகளிடையே மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது.

புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்குமிடையிலான போர் வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாயிற்று. தலைவர் பிரபாகரனும், உதவித்தலைவர் மாத்தையாவும் வன்னிக்கு தமது நிலைகளை மாற்றிக்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக அடர்ந்த காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் தலைவர் பிரபாகரன் தனது முகாமை அமைத்துக்கொண்டார். தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் லெப்டிணன்ட் கேணல் நவமே பொறுப்பாகவிருந்தார். இக்காலத்தில் தளபதி நவத்தின் உதவித்தளபதியாக பால்ராஜ் செயற்படத் தொடங்கினார்.

இக்காலத்திலேயே தலைவர் பிரபாகரனுடன் பால்ராஜ் அவர்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் உருவாகத் தொடங்கின. தளபதி பால்ராஜின் தன்னடக்கமும், அசாத்தியமான போரிடும் ஆற்றலும் தலைவர் பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தன.

1988 ஆம் ஆண்டு நித்திகைக்குளத்தில் தங்கியிருந்த தலைவரைக் கைப்பற்ற இந்திய இராணுவம் முன்னெடுத்த பாரிய இராணுவ நடவடிக்கையான ஒப்பரேஷன் செக்மேட்டிற்கெதிராக, தளபதி பால்ராஜ் அவர்கள் நடத்திய நேரடியான எதிர்ச்சமர் இந்திய இராணுவத்தின் நடவடிக்கையினை முற்றாகத் தோல்வியடையச் செய்திருந்தது. இச்சமரின்போது இந்திய இராணுவத்தின் கூர்க்கா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவத்தினருக்கெதிரான சண்டைகளில் சுமார் மூன்று தடவைகள் பால்ராஜ் அவர்கள் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறியதையடுத்து தலைவர் பிரபாகரன் தனது கட்டளையகத்தை மீளவும் யாழ்க்குடா நட்டிற்கே மாற்றிக்கொண்டார். அக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பினுள் சில கொள்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து இயக்கத்தில் இணைந்துகொள்ளும் போராளிகள் அப்பிரதேசத்தில் உருவாகும் தலைமைப் பொறுப்புகளுக்கு தம்மை ஈடுபடுத்தலாம் என்பதே அது.

தொடரும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் இராணுவத் தளபதி

புலிகளின் புதிய கொள்கைகளுக்கு அமைவாக, வன்னி மண்ணின் மைந்தனான தளபதி பால்ராஜ் அவர்கள் அந்நிலத்தின் இராணுவத் தளபதியாக 1990 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இக்கலத்திலேயே பால்ராஜ் அவர்கள் தனது இராணுவ வல்லமையினையும், திட்டமிடலின் புத்தி சாதுரியத்தையும் சிறப்பாக வெளிக்காட்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஏ - 9 நெடுஞ்சாலை அல்லது யாழ் - கண்டி வீதியின் வவுனியா முதல் ஆனையிறவு வரையான பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அக்காலத்தில் இருந்து வந்தது. இவ்வீதியின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளில் இராணுவம் தனது படைமுகாம்களை அமைத்திருந்தது.

தளபதி பால்ராஜ் தலைமையிலான புலிகளின் அணி கொக்காவில் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் மீது வலிந்த தாக்குதல்களை நடத்தி அவற்றைக் கைப்பற்றிக்கொண்டது. பின்னர் கிளிநொச்சி இராணுவம் முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. ஆனால் புலிகளினால் கிளிநொச்சி முகாமை அப்போது முழுமையாகக் கைப்பற்ற முடியாது போய்விட்டபோதும், சிலநாட்களின் பின்னர் இராணுவமே அம்முகாமைக் கைவிட்டு விட்டு, பரந்தன் பகுதியில் தன‌து நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டது.

இத்தாக்குதல்களினால் புலிகள் அடைந்த வெற்றி அவர்களின் ஆயுதக் கைய்யிருப்பினை அதிகப்படுத்தியது. இச்சமர்களினூடாக தளபதி பால்ராஜ் அவர்கள் மிகச் சிறந்த தளபதியாக உருவெடுத்ததுடன் தனது அணிகளில் பணியாற்றிவந்த போராளிகளுக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையினையும் ஊட்டி, சண்டைகள் கடுமையாகும்பொழுதிலும் துணிகரமாகச் சமராடி, சமரை வெற்றிகொள்ளும் மனோபலத்தையும் அவர்களுக்கு ஊட்டி வந்தார்.

தொடரும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரை கடல் ஆகாயம்

தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமையும், புத்திசாதுரியமும் வெளிப்பட்டிருந்த இன்னொரு முக்கிய தாக்குதல் நடவடிக்கைதான் 1991 ஆம் ஆண்டு புலிகள் ஆனையிறவு தடைமுகாம் மீது நடத்திய முற்றுகைச் சமர். "தரை - கடல் - ஆகாயம்" என்று புலிகளால் பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான இம்முற்றுகைச் சமருக்கு மாத்தையா தலைமை தாங்கினார்.

தளபதி பால்ராஜிற்கும், தீபன் அடங்கலான அவரது போராளிகளுக்கும் வழங்கப்பட்ட பணி குறிஞ்சாத்தீவுப் பகுதியூடாக ஆனையிறவு முகாமின் கப்பரன்களை அழித்து உள்ளே நுழைவது. தனக்கு வழங்கப்பட்ட பணியைக் கச்சிதமாக நிறைவேற்றிய தளபதி பால்ராஜின் அணி, நீர்ப்படுக்கையூடாக முன்னேறி, அப்பகுதியில் இருந்த இராணுவ முகாமினை அழித்து, பிரதான முகாமின் பகுதிகளின் ஒன்றான விருந்தினர் மாளிகையினைக் கைப்பற்றி நிலையெடுத்துக்கொண்டதுடன், இம்முற்றுகைச் சமர் முடிவடையும் வரையில் அப்பகுதியில் இருந்து இராணுவம் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வந்தனர். இச்சமர் புலிகளுக்கு எதிர்பார்த்த வெற்றியினை வழங்காத நிலை ஏற்பட்டபோது இப்பகுதியில் இருந்து பின்வாங்கிய பால்ராஜின் அணி விருந்தினர் மாளிகையினைத் தகர்த்துவிட்டே வெளியேறியிருந்தது. புலிகள் எதிர்பார்த்த வெற்றியான முகாமின் முற்றான அழிப்பு என்பது நடைபெறாது போனதனால் இச்சமர் அவர்களுக்கு தோல்வியாகப் பார்க்கப்பட்டது. புலிகள், 673 போராளிகளை இச்சமரில் இழந்தபோதிலும், தளபதி பால்ராஜின் அணி தனக்கு வழங்கப்பட்ட பணியினை மிகவும் வெற்றிகரமாகவே செய்திருந்தது.

தொடரும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியின் தளபதி

1991 ஆம் ஆண்டிலேயே புலிகள் தமது முதலாவது மரபுவழிப் படையணியினை நிறுவினார்கள். தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தோழனும், தலைவர் அதிகளவு நம்பிக்கை கொண்டிருந்தவருமான சீலன் எனப்படும் சாள்ஸ் அன்டனியின் பெயரிலேயே இப்படையணி உருவாக்கப்பட்டது. சீலன் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஆடி 15 ஆம் திகதி மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பொன்றில் வீரமரணம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. சாள்ஸ் அன்டையின் பெயரில் உருவாக்கப்பட்ட தனது முதலாவது மரபுவழிப் படையணிக்குத் தலைமை தாங்க தளபதி பால்ராஜையே தலைவர் தெரிவுசெய்தார். இப்படையணியின் தளபதியாக 1993 ஆம் ஆண்டுவரை தளபதி பால்ராஜ் பணியாற்றி வந்தார்.

இராணுவ நடவடிக்கைகள், வலிந்த தாக்குதல்கள் என்பவற்றுக்கு அப்பால் பாதுகாப்பு வியூகங்களை அமைப்பதிலும் பால்ராஜ் அவர்கள் சிறந்து விளங்கினார். இராணுவத்தினர் காலத்திற்குக் காலம் முன்னெடுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தோற்கடித்தல், தாக்குதல்கள் நடப்பதைத் தடுத்தல், தாக்குதல்களின் நோக்கத்தை அழித்தல் ஆகிய விடயங்களுக்கு பால்ராஜே பொறுப்பாகவிருந்தார்.

இவ்வாறான இராணுவத்தினரின் வலிந்த நடவடிக்கைகளுக்கெதிராக தளபதி பால்ராஜ் முன்னெடுத்த தடுப்புத் தாக்குதல்களுக்கு உதாரணமாக வவுனியாவில் இருந்து இராணுவத்தினரால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட வன்னி விக்கிரம நடவடிக்கை, மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் நடவடிக்கை, யாழ்க்குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல் நடவடிக்கை,கிளாலி - புலோப்பழை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட யாழ் தேவி நடவடிக்கை மற்றும் ஆனையிறவை மீளக் கைப்பற்ற முன்னெடுக்கப்பட்ட அக்கினி கீற்று (கீல) நடவடிக்கை போன்ற‌வற்றிற்கெதிராக அவர் நடத்திய எதிர்ச்சமர்களைக் குறிப்பிட முடியும்.

1993 ஆம் ஆண்டு யாழ்க்குடாநாட்டின் தென்பகுதியில் இராணுவத்தினர் முன்னெடுத்த ஒப்பரேஷன் யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிராக தளபதி பால்ராஜும், அவரது உதவித்தளபதி தீபனும் களமிறங்கினார்கள். புலோப்பழையில் இடம்பெற்ற கடுமையான சண்டையில் பால்ராஜ் காயங்களுக்கு உள்ளானார். புலிகளின் நிலைகளை நோக்கி நகர்ந்த T- 55 ரக தாங்கியொன்றின்மீது ஆர் பி ஜி உந்துகணையினால் அவர் தாக்குதல் நடத்தியபோது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயமே அவர் நடக்கும்போது ஒருபக்கத்திற்குச் சரிந்து நடப்பதற்கான காரணம் ஆகியது. அத்துடன் நீண்டதூரம் நடக்கும்போது காலில் ஏற்பட்டிருந்த காயம் அவருக்கு கடுமையான வலியினையும் ஏற்படுத்தியது.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பொழுது புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றினைச் செய்து பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார். ஆனால் யுத்த நிறுத்தம் 1995 ஆம் ஆண்டு சித்திரையில் முறிவடைய மீளவும் போர் ஆரம்பித்தது. யாழ்க்குடா நாட்டின் வலிகாமம் பகுதியில் முன்னேறிப் பாய்தல் எனும் பெயரில் வலிந்த தாக்குதல் ஒன்றினை சந்திரிக்காவின் அரசாங்கம் ஆரம்பித்தது. இத்தாக்குதலுக்கு எதிராக புலிகள் புலிப்பாய்ச்சல் எனும் பெயரில் கடுமையான எதிர்த்தாக்குதல் ஒன்றினை முன்னெடுத்தனர். புலிகளின் எதிர்த்தாக்குதலையடுத்து இராணுவத்தின் தமது வலிந்த தாக்குதலைக் கைவிட்டனர். இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலை முறியடிப்பதில் தளபதி பால்ராஜ் மிக முக்கியமான பங்கினை ஆற்றியிருந்தார். ஆனாலும் சில காலத்தின்பின்னர் இராணுவத்தினர் ஒப்பரேசன் சூரியக் கதிர் நடவடிக்கையினை முன்னெடுத்து யாழ்க்குடாநாட்டினைக் கைப்பற்றியபோது, 1996 ஆம் ஆண்டளவில் புலிகள் வன்னிக்கு தமது தளங்களை மாற்றிக்கொண்டனர்.

தொடரும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவி இராணுவத் தளபதியான பால்ராஜ்

தளபதி பால்ராஜிற்கு உன்னதமான இராணுவ மரியாதையினை தலைவர் 1996 ஆம் ஆண்டில் வழங்கி கெளரவித்தார். பால்ராஜை இயக்கத்தின் உதவி இராணுவத் தளபதி எனும் நிலைக்கு தலைவர் உயர்த்தினார். தலைவர் பிரபாகரனே இயக்கத்தின் பிரதான இராணுவத் தளபதி என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் புலிகள் இராணுவ அதிகாரக் கட்டமைப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டார். புலிகளின் இரண்டாவது இராணுவத் தளபதி தனது போரியல் ஆற்றலினை தொடர்ந்துவந்த சமர்க்களங்களில் நிரூபித்துக் காட்டத் தொடங்கினார்.

1996 ஆம் ஆண்டு ஆடி மாதம் 18 ஆம் திகதி ஒயாத அலைகள் - ஒன்று எனும் பாரிய அழித்தொழிப்புச் சமரை தளபதி பால்ராஜே ஒருங்கிணைத்து நடத்தினார். பல கட்டுமாண‌ங்களைக் கொண்டதும் மிகுந்த பாதுகாப்பானதுமான‌ முகாம் என்று கருதப்பட்ட பாரிய முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது பால்ராஜும் போராளிகளும் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் பலியானார்கள்.

ஆனால், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையான ஒப்பரேஷன் ஜயசிக்குரு (வெற்றி நிச்சயம்) நடவடிக்கைக்கு எதிராக தளபதி பால்ராஜினால் அதிகளவு பங்களிப்பைச் செய்ய முடியவில்லை. 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையின்போது இராணுவத்தினர் ஓமந்தை மற்றும் நெடுங்கேணி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். புளியங்குளம் பகுதி இராணுவத்தினரின் வசம் வீழும்வரை தளபதி பால்ராஜே ஜயசிக்குரு நடவடிக்கைக்கெதிரான எதிர்த்தாக்குதல்களை ஒருங்கிணைத்து வந்தார். இதன்பின்னர் புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணாவுடன் இணைந்து எதிர்த்தாகுதல்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தளபதி கேணல் தீபன் பொறுப்பெடுத்தார்.

1998 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் கிளிநொச்சி படைமுகாம் மீது புலிகள் ஓயாத அலைகள் - 2 எனும் பெயரில் தாக்கியழிக்கும் சமரினை ஆரம்பித்தார்கள். இத்தாக்குதல்களில் ஏற்பட்ட கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் முகாமினைக் கைவிட்ட இராணுவம் பின்வாங்கி ஆனையிறவு நோக்கிச் சென்றது. இத்தாக்குதலுக்கு தளபதி பால்ராஜே பொறுப்பாக இருந்ததுடன், இராணுவத்தினருக்கெதிராக உளவியல்த் தந்திரங்களையும் கைக்கொண்டார். இலங்கையின் 50 ஆவது சுதந்திர நாளன்றே இத்தாக்குதலை புலிகள் ஆரம்பித்திருந்தனர்.

இதன் பின்னர் ஓயாத அலைகள் - மூன்று எனும் வலிந்த தாக்குதல் நடவடிக்கையினை புலிகள் முன்னெடுத்தனர். 1999 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் நன்கு திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களில் ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் உட்பட்ட பல இராணுவ முகாம்களை சில நாட்களில் புலிகள் கைப்பற்றினர். 18 மாத காலமாக ஜயசிக்குரு நடவடிக்கையூடாக சிறுகச் சிறுக இராணுவத்தினர் கைப்பற்றியிருந்த பெரும்பாலான பிரதேசங்களை வெறும் 9 நாட்களிலேயே புலிகளிடம் இழந்தனர்.

தொடரும்............

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

Brigadier-Balraj-reserved-hero-750x400.j

பிரிகேடியர் பால்ராஜ் எனும் முதுபெரும் தளபதி பற்றித் தெரிய கீழே படியுங்கள். படிக்கும் போதே சிலிர்த்துப் போவீர்கள்💪🏻🐅

குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..!

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.

குடாரப்பு தரையிறக்கச் சமர் ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது. சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம். தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும். மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர் புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.

வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள். அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது.

அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.

தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர். முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான். சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.

#பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு
26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள். குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து. ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.

#தாக்குதலின் பின்னணி
குடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள். குடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர். கண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர். தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர். இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர். காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.
ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Rj Prasath Santhulaki

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவு படைத்தளம்

ஓயாத அலைகள் எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இப்படைநடவடிக்கைகள் யாழ்க்குடாநாட்டின் உட்பகுதிவரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இப்படை நடவடிக்கைகளின் உச்சவெற்றியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு படைத்தளம் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டதைக் கூறமுடியும்.

எழுதுமட்டுவாள் - இயக்கச்சி பகுதிகளுக்கும் ஆனையிறவு பெரும்படைத்தளத்திற்கும் இடையிலான வழங்கற்பாதையினை தடுத்து, ஆனையிறவினை முற்றுகைக்குள் கொண்டுவந்து, உள்ளிருந்த ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பலவீனப்படுத்தி, ஈற்றில் அவர்களை தோற்கடிப்பதே இப்படைநடவடிக்கையின் மிக முக்கிய நோக்கமாகும். தம்மால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட ஆனையிறவை வெளித்தொடர்புகள் அனைத்திலுமிருந்து முற்றாக அறுத்தெடுத்து, அதனைத் தனிமைப்படுத்தி அகற்றுவதென்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

அனால் புலிகளால் முன்னெடுக்கப்படும் எந்தவிதமான முற்றுகையினையும் எதிர்கொள்ளும் நோக்குடன் படையினர், ஆனையிறவு படைத்தளத்தினை செவ்வக வடிவில் நீட்டித்து, வடமாராட்சி கிழக்குக் கரையோரம் வழியே தாளையடி - மருதங்கேணி பகுதிகள் வரை விஸ்த்தரித்து, பின்னர் கிழக்குக் கரையோரத்தினூடாக யாழ்க்குடாநாடு நோக்கி, கண்டிவீதி வழியே புதுக்காட்டுச் சந்திவரை விஸ்த்தரித்து, பலப்படுத்தப்பட்ட நீண்ட பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றினை உருவாக்கியிருந்தார்கள்.

இப்பகுதியே வத்திராயன் பெட்டி (Vaththirayan Box) என்று அழைக்கப்பட்டு வந்ததுடன் இப்பாரிய செவ்வகப் பகுதிக்குள் வத்திராயன், புல்லா வெளி, சோரன்பற்று, மாசார் உள்ளிட்ட பல பகுதிகள் அடக்கப்பட்டிருந்தன. மேலும் யாழ்க்குடாநாட்டின் உட்பகுதியினுள் ஆரம்பமாகும் எழுதுமட்டுவாளில் இருந்தும், வடமாராட்சிக் கிழக்கின் தாளையடியில் இருந்தும் ஆனையிறவு படைத்தளத்திற்கான தடையற்ற‌ வழங்கல்களை இதன்மூலம் படையினர் உறுதிப்படுத்தி வந்திருந்தனர்.

பால்ராஜ் அவர்களுக்கு மகுடம் சூட்டிய நடவடிக்கை

எவராலும் ஊடறுத்து, உட்புகமுடியாத கோட்டையென்று கருதப்பட்ட ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடறுத்து எவ்வாறு பால்ராஜ் அவர்கள் இந்த வெற்றியை ஈட்டினார் என்பது நவீன இராணுவ வரலாற்றில் ஒரு பெரும் அதிசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதுவே அவரின் அனைத்து நடவடிக்கைகளினதும் மகுடமாகவும் கருதப்படுகிறது.

2000 ஆம் ஆண்டு பங்குனி 26 ஆம் திகதி, வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து யாழ்க்குடாநாட்டின் கரையோரப் பகுதிக்குள் சுமார் 1200 தரைப்படைப் போராளிகளைக் கன‌கச்சிதமான நடவடிக்கை ஒன்றின் மூலம் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை பாதுகாப்பாக தரையிறக்கினார்.

தளபதி பால்ராஜின் தலைமையில் இப்போராளிகள் குடாரப்பு மற்றும் மாமுனை ஆகிய கரையோரப் பகுதிகளில் தரையிறங்கி, கண்டல்த் தாவரங்களும், சதுப்பு நிலங்களும் கொண்ட ஏரிப்பகுதிக்கூடாக மிகவும் இரகசியமான முறையில் உட்பகுதி நோக்கி முன்னேறத் தொடங்கினர். இம்முன்னேற்ற நடவடிக்கையின்போது சோரன்பற்று, மாசார் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிலைகளைத் தாக்கியழித்த புலிகள், ஏ 9 பாதையின் புதுக்காட்டுச் சந்திவரை முன்னேறி அதனைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

அதன்பின்னர் தளபதி பால்ராஜ் தலைமையில் செயற்பட்ட புலிகள்,பளைப்பகுதிக்கு அண்மையில் அமைந்திருந்த இத்தாவில் பகுதியில் தமது நிலைகளை அமைத்துப் பலப்படுத்திக்கொண்டனர். இங்கிருந்தே ஆனையிறவு, இயக்கச்சிக்கான வழங்கல்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர் இப்பகுதியில் பல‌நாட்களாக பாலராஜின் தலைமையில் விவேகமும் துணிவும் கொண்ட போராளிகளுக்கும் பெரும் படைப்பலம் கொண்டு இப்பகுதியைக் கைப்பற்ற முனைந்த இராணுவத்தினருக்கும் இடையே மிகக்கடுமையான சண்டைகள் இடம்பெற்றன. ஆனால், இச்சண்டையில் புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்கிற அனைத்து எதிர்வுகூறல்களையும் உடைத்தெறிந்த புலிகள், இராணுவம் தம்மீது வீசிய அனைத்து வலிந்த தாக்குதல்களையும் சளைக்காது முகெம்கொடுத்து வெற்றியீட்டினர். இச்சண்டைகளில் களங்கள் அடுத்தடுத்து கைமாறப்பட்டிருப்பினும், தன்னை அப்பகுதியில் இருந்து எப்படியாவது அகற்றிவிடும் நோக்கில் தன் மீது இராணுவத்தின் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட அத்தனை தாக்குதல்களையும் அவர் தீரத்துடன் எதிர்கொண்டு, சமராடித் தோற்கடித்தார்.

24 நாட்களாகக் கடுமையாக நடைபெற்ற சண்டைகளின் விளைவாக இராணுவம் ஆனையிறவைத் தக்கவைக்கும் தனது முயற்சியைக் கைவிட்டது. அதன்படி சித்திரை 19 ஆம் திகதி ஆனையிறவு படைத்தளத்தினைக் கைவிட்ட இராணுவம், யாழ்க்குடா நாடு நோக்கிப் பின்வாங்கியது. சித்திரை 22 ஆம் திகதி புலிகள் ஆனையிறவுப் படைத்தளத்தில் தமது கொடியினை உத்தியோகபூர்வாமாக ஏற்றிவைத்தனர். இராணுவ வல்லுனர்களால் போற்றப்படும் பால்ராஜ் அவர்களின் இந்த அதிசயிக்கவைக்கும் வெற்றி, இராணுவக் கையேடுகளில் ஏற்றப்பட்டு, பகுதி பகுதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, கற்பிக்கப்பட்டும் வருகிறது. பால்ராஜ் அவர்களின் இந்த வெற்றியானது புலிகளின் படையணிகள், விமானப்படையொன்றின் உதவியின்றி, எதிரியின் கோட்டைக்குள் ஆளமாக ஊடுருவி நிலைகொண்டு, அங்கிருந்து வலிந்த தாக்குதல்களிலும், தடுப்புத் தாக்குதல்களிலும் சரளமாக ஈடுபட்டு, தம்மைக் காட்டிலும் ஆட்பலத்திலும், ஆயுதப் பலத்திலும் பன்மடங்கு பலமான எதிரியை வெற்றிகொள்ளும் வல்லமையினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. மட்டுப்படுத்தப்பட்ட போர்களை (Limited Wars) எவ்வாறு மேற்கொள்வது எனும் கோட்பாட்டில் பால்ராஜின் இந்த வெற்றியானது முன்னுதாரணமான மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

23 நீண்ட வருடங்களுக்குப் பின்னர் எனது தாய்நாட்டினைத் தரிசிக்கும் முயற்சியினை 2013 ஆம் ஆண்டு நான் மேற்கொண்டபோது இத்தாவில் பகுதிக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று விரும்பினேன். ஏ9 நெடுஞ்சாலையின் இத்தாவில்ப் பகுதியில் எமது வாகனத்தை நிறுத்தி இறங்கிக்கொண்டேன். ஆனால் வீதியிலிருந்து உட்பகுதி நோக்கிச் செல்லமுடியாதபடி கண்ணிவெடி அபாய எச்சரிக்கைகள் காணப்பட்டன. அப்பகுதியெங்கும் பரவிக்கிடக்கும் கண்ணிவெடிகள் இதுவரையில் அகற்றப்படாமையினால் இப்பகுதிக்குள் மக்கள் உட்பிரவேசிப்பது தடுக்கப்பட்டிருந்தது.

தொடரும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீச்சுவாலை நடவடிக்கை

உலக இராணுவ வல்லுனர்களால் அதிசயித்துப் பார்க்கப்படும் ஆனையிறவு படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டு சரியாக ஒருவடத்தின்பின்னர் தளபதி பால்ராஜ் அவர்களின் தடுப்புச் சமர் வல்லமையின் உச்சத்தினை எம்மால்க் காணமுடிந்தது. 2001 ஆம் ஆண்டு சித்திரை 24 ஆம் திகதி ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தால் பாரிய முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்கெதிராக பால்ராஜ் அவர்கள் நடத்திய தீர்க்கமான எதிர்ச்சமரே இச்சண்டையாகும். ஆனையிறவைக் கைப்பற்றும் கனவுடன் இராணுவ முன்னரங்கப் பகுதிகளான கிளாலி - எழுதுமட்டுவாள் - நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் ஆனையிறவு நோக்கி முன்னேறத் தொடங்கினர். ஆனால் முன்னேறிய இராணுவத்தினர் மீது கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்திய புலிகள் இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர்.

அதிசயிக்கும் ஆனையிறவு வெற்றி மற்றும் தீச்சுவாலை நடவடிக்கையினைத் தோற்கடித்ததன் மூலம் ஆனையிறவைத் தக்கவைத்துக்கொள்வதில் அவர் ஈட்டிய தீர்க்கமான வெற்றி ஆகியவற்றின் மூலம் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவரான பால்ராஜ் அவர்களின் புகழ் மேலும் பரவத் தொடங்கியது. இதன்மூலம் தளபதி பால்ராஜ் அவர்கள் தமிழ் மக்களிடையே அசாதாரண வீரனாகப் போற்றப்படத் தொடங்கினார்.

மோசமாகிச் சென்ற அவரது உடல்நிலை

எப்படியிருந்தபோதும் பால்ராஜின் உடல்நிலை சிறிது சிறிதாக மோசமடையத் தொடங்கியிருந்தது. பலவருடங்களாக இருதய நோயினால் அவஸ்த்தைப்பட்டுவந்திருந்த பால்ராஜ் அவர்கள் இறுதிப்பகுதியில் அந்நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு மேலதிகமாக சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயினாலும் அவர் அவஸ்த்தைப்பட்டு வந்தார். புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த 2003 பகுதியில் அவர் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் மருத்துவ சிகிச்சைக்கான சிங்கப்பூரிற்குச் சென்றார். அங்கு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அங்கிருந்து அவர் நாடு திரும்பும்போதே சில இலங்கை இராணுவ அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் சூழ்ந்துகொண்டது நடந்திருந்தது. நட்புரீதியில் அமைந்திருந்த இந்த நிகழ்வு குறித்த சில விடயங்களை நான் இக்கட்டுரையின் முற்பகுதியில் பகிர்ந்திருந்தேன்.

மோசமாகி சென்றுகொண்டிருந்த உடல்நிலையினையடுத்து பால்ராஜ் அவர்கள் மந்தகதியிலான வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக்கொண்டார். புலிகளின் இராணுவக் கல்லூரியில் கற்றுவந்த அதிகாரிகளுக்கு விரிவுரைகளை வழங்குவதிலும், அவர்களைப் பயிற்றுவிப்பதிலும் அவர் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். இளம் அதிகாரிகளுக்கு இராணுவ உத்திகள், திட்ட‌மிடல்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல்கள் போன்றவற்றைக் கற்பிப்பதிலேயே அவரது கவனம் இருந்தது. இதைவிடவும் புலிகளின் கொமாண்டோ வீரர்களுக்கும், விசேட படையினருக்கும் அவர் பயிற்சிகளை வழங்கி வந்தார். புலிகளின் பல பயிற்சிமுகாம்களுக்குப் பயணித்த பால்ராஜ் அவர்கள் அவ்வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும், நடைமுறைச் செயற்பாட்டு வித்தகராகவும் பணியாற்றி வந்தார். தளபதி பால்ராஜ் அவர்களிடம் கற்றுக்கொள்வதைப் போராளிகள் பெரும் பாக்கியமாகவே கருதிவந்தனர்.

பின்னாட்களில் உடல்நிலை மிகவும் மோசமாகிச் சென்றபோது பால்ராஜ் அவர்கள் சிறிது சிறிதாக தனது நாட்களின் பெரும்பகுதியை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலேயே கழிக்கத் தொடங்கினார். ஆனால் முன்னரங்கக் களத்தில் அவரது சேவைக்கு எப்போதுமே தேவை இருந்துகொண்டுதான் இருந்தது. மணலாறுப் பகுதியில் புதிதாகக் களமிறக்கப்பட்ட இராணுவத்தினரின் 59 ஆவது படையணி புலிகளுக்குப் பெரும் பிரச்சினையாக அப்போது மாறியிருந்தது. தமிழர் தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படும் மணலாற்றில் இராணுவத்தினரைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது புலிகளுக்கு மிகவும் அவசியமாகக் கருதப்பட்டது.

ஆகவே மீண்டும் ஒருமுறை பால்ராஜிடமே இதற்கான பொறுப்பினைத் தலைவர் கொடுத்தார். தனது மோசமான உடல்நிலைக்கு மத்தியிலும் மணலாற்றின் முன்னரங்கில் பல மணி நேரங்களை பால்ராஜ் செலவிட்டார். இது அவரது உடல்நிலையில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. ஆனாலும் முன்னரங்க நிலைகளை ஆராய்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக அடிக்கடி வைத்தியசாலையில் இருந்து முன்னரங்கப் பகுதிகளுக்குச் சென்றுவரலானார். பின்னாட்களில் பால்ராஜின் வேலைப்பழுவினைக் குறைப்பதற்கு உதவியாக புலிகளின் மூத்த தளபதிகளான சொர்ணம் மற்றும் பாணு போன்றவர்கள் மணலாற்றிற்கு அனுப்பப்பட்டார்கள்.

வைகாசி 2006 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு வெளிப்படையாகப் பேசிய தளபதி பால்ராஜ் அவர்கள் புலிகள் இயக்கம் இறுதிப்போரினை வென்றே தீரும் என்று கூறியிருந்தார். "நான்காவது ஈழப்போரே இறுதிப்போராகும். மிகக்கடுமையாக இருக்கப்போகும் இப்போரே எம்மக்களின் நீண்டகாலக் கனவான தாயக விடுதலையினையும், சுதந்திரத்தையும் வென்று தரும். நாம் வெற்றிபெறப்போகும் நிலையிலேயே இருக்கிறோம் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எமது மக்கள் எம்முடன் இருக்கிறார்கள். எமது தலைவர் வெற்றி நோக்கி எம்மை வழிநடத்திச் செல்வார்" என்று அவர் உறுதிபடக் கூறியிருந்தார்.

தொடரும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாரடைப்பு

ஆனாலும் பால்ராஜ் எதிர்வுகூறியதன்படி நிகழ்வுகள் நடந்தேறவில்லை. அவர் எதிர்வுகூறி சரியாக மூன்று வருடங்களின் பின்னர், வைகாசி 2009 இல் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள். இப்போரின் இறுதிக் கட்டங்கள் தளபதி பால்ராஜின் மாவட்டமான முல்லைத்தீவிலேயே இடம்பெற்றிருந்தன. ஆனால் அன்று அவர் உயிருடன் இருக்கவில்லை. போர் முடிவடைவதற்கு ஒருவருடத்திற்கு முன்னர் அவர் இயற்கை எய்தியிருந்தார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒன்றில் இருதய நோய்க்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவேளை 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மாரடைப்பினால் அவர் இயற்கை எய்தினார். புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வியினைத் தன் கண்களால் எதிர்கொள்ளும் அவலம் அவருக்கு இருக்கவில்லை. அவரது மறைவின் பின்னர் தலைவரினால் அவருக்கு பிரிகேடியர் எனும் நிலை வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருந்தது.

முற்றும்

நன்றி டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.