Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் Bazballஐ முறியடிக்கும் வியூகம்

AVvXsEjtueiP16Gu2GTl7OZlatL9p9E4Rh1b5Nkt

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் பாணி 50 ஓவர் ஆட்டத்துக்கு உரியது. நான் மட்டையாட்டத்தைச் சொல்லவில்லை. வியூகத்தைச் சொல்கிறேன்.

தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது ஓவர் போட்டியை வெல்ல சிறந்த வழி இரண்டாவதாக மட்டையாடுவதுதான். ஸ்டோக்ஸும் அதனால்தான் பெரும்பாலும் முதலில் பந்துவீசவே விரும்புகிறார். ஆடுதளம் மிகத் தட்டையாக இருக்கும். ஆனாலும் அவருக்கு கவலையில்லை. ஏனென்றால் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்காக அவர் மெனெக்கெடப் போவதில்லை. இன்றைய மட்டையாளர்கள் எப்படி ஆடினாலும் ஒன்றரை - இரண்டு நாட்களுக்கு மேல் ஆடப் போவதில்லை. அதனால் ஸ்டோக்ஸ் அவர்களது ரன் ரேட்டை மட்டுமே கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களைக் கேட்கிறார். இப்போது நிகழ்ந்து வரும் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் (ஹெடிங்லி) இந்தியா முதலில் மட்டையாடி நானூற்று சொச்சம் ரன்களை அடித்தாலும் அவர்களது ரன்ரேட் 4தான்.

ஆனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆடியபோது 4.5 ரன்ரேட்டில் ஆடி அந்த ஸ்கோருக்கு நெருங்கி வந்தார்கள். அடுத்து இந்தியா மட்டையாடியபோது ஸ்டோக்ஸ் இந்தியாவின் ரன் ரேட்டைக் குறைக்கவே பிரயத்தனப்பட்டார், விக்கெட் எடுக்க அல்ல. குறைநீளத்தில், காலுக்கு வெளியே வைடாக வீசுவது, எதிர்மறையான களத்தடுப்பை அமைப்பது, மட்டையாளர்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பது என. இந்தியாவின் சராசரி ரன்ரேட் இரண்டாவது இன்னிங்ஸில் 3.5 ஆக இருந்தது. நான்காவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து 4.5 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி முன்னூற்று சொச்சம் இலக்கை சுலபத்தில் அடைந்தது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அண்மைக் காலங்களில் இங்கிலாந்தில் ஆடுதளமானது 5வது நாள்தான் மட்டையாட்டத்துக்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் எஸ்.ஜி பந்தும், ஹெவி ரோலரும் மட்டையாட்டத்தை லட்டு சாப்பிடுவதைப் போலாக்குகிறது. அதனால் ஸ்டோக்ஸின் இலக்கு கடைசி நாள் மட்டையாடுவதும் 90 ஓவர்களுக்குள் அடிக்கிற மாதிரியான இலக்கைப் பெறுவதும்தான். அதற்காகத்தான் அவர் எதிரணியின் ரன் ரேட்டைக் குறைக்க மட்டும் போராடுகிறார், விக்கெட்டுகளை எடுக்க அல்ல. ஏனென்றால் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 4.5 ரன் ரேட்டில் ஆடியிருந்தால் கடைசி நாள் இலக்கு 450ஐத் தாண்டி இருக்கும். ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்திருக்கும். முதல் 20 ஓவர்கள் பும்ரா நன்றாக வீசி ரன் ரேட்டை 6க்கு கொண்டு வந்தால் அது சேஸிங்கைச் சிக்கலாக்கும். இப்படி ஸ்டோக்ஸ் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்கும்விதமே வித்தியாசமானது. அவரிடம் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினாலும் எடுபடாது. முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைந்தால் மட்டுமே ஸ்டோக்ஸ் இந்த அணுகுமுறையைக் கைவிடுவார்.

ஸ்டோக்ஸை ("பேஸ்பாலை") முறியடிக்க முதலில் தட்டையான ஆடுதளத்தில் டாஸ் ஜெயித்தால் இங்கிலாந்தை மட்டையாட வைக்க வேண்டும். அவர்களுடைய ரன் ரேட்டைக் குறைத்து நமது பந்து வீச்சின் ஓவர் ரேட்டையும் குறைக்க வேண்டும். எதிர்மறையான உத்திகளைக் கையாள வேண்டும். அல்லது நாம் முதல் நாள் மட்டையாட நேர்ந்தாலும் ரன் அடிப்பதைவிட அதிக நேரம் மட்டையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது 2.5 நாட்களையாவது தின்று விட வேண்டும். எனில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு மட்டையாட அரை நாள்தான் கிடைக்கும். இது அவர்களைக் கடுமையாக வெறுப்பேற்றும் என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்து சிக்கிக் கொள்வார்கள். அதே போல அவர்களுடைய வேகவீச்சாளர்கள் காயம்பட வாய்ப்பு அதிகமாகும்.

பந்து வீசி ஜெயிக்கவே வாய்ப்பில்லாத ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை இங்கிலாந்து கியூரேட்டர்களும் பந்து தயாரிப்பாளர்களும் ஏற்படுத்தும்போது எதிர்மறை கிரிக்கெட்டின் வழியாக மட்டுமே அதைச் சமாளிக்க முடியும். இதையே இன்று கில் செய்ய முயன்றார். அதிகப் பந்துகளை ஆட முயன்றார். ஒரே பிரச்சினை ஜெய்ஸ்வாலும் பண்டும் இந்த வியூகத்துக்கு ஏற்ப ஆடாமல் அதிக ஷாட்களை ஆட முயன்றார்கள். ஜெய்ஸ்வால் 250 பந்துகளில் சதம் அடிக்க முயன்றிருக்க வேண்டும். எனில் அவரும் கில்லுமாக தலா 300 பந்துகளை ஆடியிருந்தால், இன்னும் சிலர் தலா 100 பந்துகளை எடுத்திருந்தால் ஒரே இன்னிங்ஸில் ஸ்டோக்ஸின் பேஸ்பால் வியூகத்தை நாசமாக்க முடியும் (ஆனால் அவர்கள் வேகமாக ஆடி ஆட்டமிழந்தார்கள்). முதல் இன்னிங்ஸில் எத்தனை ரன்கள் அடிக்கிறோம் என்பதல்ல எத்தனை நாட்கள் ஆடுகிறோம் என்பதை ஸ்டோஸுக்கு ஆப்படிக்க உதவும். இதை இரண்டு போட்டிகளில் செய்தால் இங்கிலாந்து வேறு வழியின்றி தன் ஆடுதளங்களை மாற்றும் நிலை வரும்.

இதைத்தான் அஷ்வினும் தன் யுடியூப் சேனலில் வலியுறுத்துகிறார். முதல் டெஸ்டில் இந்தியா இதைப் புரிந்துகொள்ளாமல் நான்காவது நாளே பந்துவீச விரும்பி கடைசி ஐந்து விக்கெட்டுகளை வேகமாக அடிக்கும் நோக்கில் தியாகம் செய்தது. ஐந்தாவது நாள் உணவு இடைவெளி வரை ஆடிவிட்டு இங்கிலாந்துக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஐம்பது ஓவர் கிரிக்கெட்டில் தட்டையான ஆடுதளத்தில் 350-400 என்று இலக்கை அதிகப்படுத்துவார்கள். அதாவது ரன் ரேட்டை உயர்த்துவார்கள். இங்கிலாந்தில் இதைச் செய்ய சிறந்த மார்க்கம் இங்கிலாந்துக்கு மட்டையாடக் கிடைக்கும் பந்துகளைக் குறைப்பதுதான். இது தடுப்பாட்டம் அல்ல, இங்கிலாந்தில் இதுதான் புத்திசாலித்தனமான ஆட்டம்.

இரண்டாவது டெஸ்டில் என்னைப் பொறுத்தவரையில் இந்தியா 450 அடிக்கிறதா என்பதல்ல நாளை மாலை வரையில் அல்லது நாளைக்கு அடுத்த நாள் காலை வரைக்கும் கில், ஜடேஜா, சுந்தரால் ஆட முடியுமா என்பதே இந்தியாவின் எழுச்சிக்கான அளவுகோல். நாளை மதியத்துடன் ஆல் அவுட் ஆனால், அவர்கள் அந்த ஸ்கோரை 100 ஓவர்களில் அடித்துவிட்டு நான்காவது நாள் மாலைக்குள் இந்தியாவை ஆல் அவுட் பண்ணப் பார்ப்பார்கள். இப்போட்டியில் 5வது நாள் இங்கிலாந்து தமக்கு அளிக்கப்படும் எந்த இலக்கையும் சுலபத்தில் விரட்டி அடைந்துவிடும். ரன்கள் அல்ல, நேரமே இப்போட்டியைத் தீர்மானிக்கும் காரணி.

ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/07/bazball.html

  • Replies 101
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nunavilan
    nunavilan

    மிக குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் தலைவராக கில் வந்தது நம்ப முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக்க அனுபவம் உள்ளவர்களையே பல நாட்டு குழுக்கள் உள்வாங்குகின்றன. இந்தியா ரி 20 போட்டிக்கு தெரிவு ச

  • vasee
    vasee

    இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் டூக் பந்து பாவிக்கின்றது இது குக்கபாரா பிங்க் பந்தினை விட அதிக விசம் கொண்டது, இந்தியணியிற்கு பந்தும் ஆடுகளமும் உயிர்ப்புடன் இருந்தால் தலைவலியாக இருக்கும் இந்த மாதிரியா

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை த‌மிழ‌க‌ வீர‌ர் அவ‌ரின் முத‌ல் டெஸ்ட் போட்டியில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி விட்டார்..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்மன் கில்லின் இரட்டை சதம் ஏன் இவ்வளவு சிறப்பானது?

சுப்மான் கில்! இரட்டை சதத்துடன் சாதனைகளை உடைத்து புதிய வரலாறு: இங்கிலாந்து திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மான் கில் டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை (269) சதத்தைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். 2வது டெஸ்டில் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், ஆட்டத்தின் போக்கு மாறவும் கில் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார்.

பிரிட்டன் மண்ணில் மிகப்பெரிய டெஸ்ட் தொடரை இளம் இந்திய அணி சந்திக்கிறது. கேப்டன் பொறுப்பில் 25 வயதான சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவாரா என்ற சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் கில் பதில் அளித்துவிட்டார்.

கேப்டனின் பாதுகாப்பான கரங்களுக்குள் இந்திய அணியின் கடிவாளம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கில் தனது இரட்டை சதத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.

அது மட்டுமல்ல முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்திய வீரர்கள் பலரின் சாதனையையும் முறியடித்து வரலாற்று சாதனைகளை கில் படைத்துள்ளார். குறிப்பாக சேனா நாடுகள் என்றழைக்கப்படும் தென் ஆப்ரிக்கா(S), இங்கிலாந்து (E), நியூசிலாந்து (N), ஆஸ்திரேலியா (A) ஆகிய நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கேப்டனாக கில் உருவெடுத்துள்ளார்.

இமாலய அளவில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Ind vs Eng, சுப்மான் கில், இந்திய அணி, இந்திய கிரிக்கெட், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 6-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா, கில் கூட்டணி 203 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்

கில்லின் சாதனைகள்

சுப்மன் கில் இந்த டெஸ்டில் 269 ரன்கள் சேர்த்ததன் மூலம், டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை பதிவு செய்து கோலியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். கோலி கேப்டனாக இருந்தபோது, 2019ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 254 ரன்கள் சேர்த்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் ஆசிய நாடுகளுக்கு வெளியே இந்திய கேப்டன் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் கில் அடித்த 269 ரன்களாகும். இதற்கு முன் சச்சின் சிட்னி மைதானத்தில் அடித்த 241 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது.

வெளிநாடுகளில் இந்திய பேட்டர்கள் அடித்த ஸ்கோர்களில் 3வது அதிகபட்சமாக கில் அடித்த 269 ரன்கள் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் முல்தானில் சேவாக் 309 ரன்களும், ராவல்பிண்டியில் திராவிட் 270 ரன்களும் சேர்த்திருந்தனர், மூன்றாவதாக கில் 269 ரன்கள் இடம் பிடித்துள்ளது.

Ind vs Eng, சுப்மான் கில், இந்திய அணி, இந்திய கிரிக்கெட், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிட்டன் மண்ணில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியில் இரு இந்தியர்கள் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தனர். 2002ல் ராகுல் திராவிட்டும், 1979ல் சுனில் கவாஸ்கரும் அடித்திருந்தனர். ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப்பின் சுப்மன் கில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்கள் அடித்த ஸ்கோர்களில் 7-வது அதிகபட்ச ஸ்கோரை சுப்மான் கில் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு பயணம் செய்து இதற்கு முன் இரு பேட்டர்கள் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தனர். அதில் 2003-ல் கிரேம் ஸ்மித் 277 ரன்களும், 1971-ல் அப்பாஸ் 271 ரன்களும் அடித்திருந்தனர். அந்த வகையில் 22 ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டு அணியைச் சேர்ந்த ஒரு பேட்டர் என்ற வகையில் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

உலகளவில் 7 பேட்டர்கள் கேப்டன் பொறுப்பேற்று முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளனர். விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், விராட் கோலி, ஜேக்கி மெக்ளூ, அலிஸ்டார் குக், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் வரிசையில் கில் இடம் பெற்றார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதத்தை இதுவரை 5 பேட்டர்கள் செய்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, கிறிஸ் கெயில், இப்போது சுப்மன் கில்.

Ind vs Eng, சுப்மான் கில், இந்திய அணி, இந்திய கிரிக்கெட், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கில்லின் ஆட்டத்தில் 93.28 சதவீதம் கட்டுப்பாட்டுடன் இருந்தது

சிம்மசொப்னம்

கடந்த இரு நாட்களாக பேட்டிங்கில் அசைக்க முடியாத வல்லமை மிகுந்தவராக கில் களத்தில் இருந்தார். கில்லை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஸ்டோக்ஸ் பலவிதமான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒரு சிறிய தவறைக் கூட கில் செய்யவில்லை.

கில்லின் ஆட்டத்தில் 93.28 சதவீதம் கட்டுப்பாட்டுடன் இருந்தது. கிரிக்இன்போ தகவலின்படி டெஸ்ட் போட்டியில் 2006க்குப் பின் இரு பேட்டர்கள் மட்டுமே அதிக கட்டுப்பாட்டுடன் இதுவரை பேட் செய்துள்ளனர்.

2006ல் இயான் பெல் இலங்கைக்கு எதிராக 96.45 சதவீத கட்டுப்பாட்டுடன் பேட் செய்து 119 ரன்களும், ஜேம் ஸ்மித் 94.60% சதவீதம் கட்டுப்பாடுடன் பேட் செய்து இலங்கைக்கு எதிராக 111 ரன்களும் சேர்த்தனர். அதற்கு பின் கில் இப்போது கட்டுப்பாட்டுடன் பேட் செய்துள்ளார்.

இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி முதல்நாளில் ஆட்டமிழந்து சென்ற பின் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தருடன் கூட்டணி சேர்ந்த கில் 376 ரன்களை அணிக்காக சேர்த்துக் கொடுத்துள்ளார்.

ஜடேஜாவுக்கு திட்டம்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருந்தது. ஜடேஜா (41), கில் (114) கூட்டணி 99 ரன்களுடன் ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆட்டம் தொடங்கி முதல் ரன்னை ஜடேஜா எடுத்தவுடன் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியது.

நிதானமாக ஆடிய சுப்மன் கில் 263 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். ஜடேஜாவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை விளாசி சதத்தை நோக்கி நகர்ந்தார்.

ஜடேஜாவுக்கு பவுன்ஸரில் சிக்கல் இருப்பதை உணர்ந்த கேப்டன் ஸ்டோக்ஸ், அதற்குரிய உத்தியை செயல்படுத்தினார். வோக்ஸை பந்துவீசச் செய்து, ஜடோஜாவின் பாடிலைனில் பவுன்ஸர் வீசச் செய்தார். திடீரென வந்த பவுன்ஸரை சமாளிக்க முடியாத ஜடேஜா விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் இறங்கிய சுந்தர் கில்லுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி் ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. சுப்மன் கில்லும் 348 பந்துகளில் 250 ரன்களை எட்டினார்.

வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தை நெருங்கியபோது, ரூட் பந்துவீச்சில் போல்டாகி 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Ind vs Eng, சுப்மான் கில், இந்திய அணி, இந்திய கிரிக்கெட், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கில்லுக்கு மரியாதை தந்த ரசிகர்கள்

கில்லும் 269 ரன்கள் சேர்த்தநிலையில் டங் பந்துவீச்சில் போப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் ஆட்டமிழந்து வெளியேறியபோது அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டினர்.

கில் ஆட்டமிழந்தபின் கடைசி வரிசை வீரர்கள் சிராஜ்(8), ஆகாஷ்(6) ஆகியோர் விரைவாக வெளியேற இந்திய அணி 151 ஓவர்களில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஷோயிப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், டங், வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

Ind vs Eng, சுப்மான் கில், இந்திய அணி, இந்திய கிரிக்கெட், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கில்லை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஸ்டோக்ஸ் பலவிதமான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒரு சிறிய தவறைக் கூட கில் செய்யவில்லை

அதிர்ச்சித் தொடக்கம்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை மாலை தேநீர் இடைவேளைக்குப்பின் தொடங்கிய நிலையில் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆகாஷ் தீப் வீசிய 3வது ஓவரிலேயே பென் டக்கெட் ரன் ஏதும் சேர்க்காமல் ஸ்லிப்பில் இருந்த கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆலி போப் முதல் பந்திலேயே பேட்டில் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் இருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்கில் வெளியேறினார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

கிராளி, ரூட் நிதானமாக ஆடி வந்தனர். சிராஜ் ஓவரில் தடுமாறிய கிராளி 19 ரன்னில் முதல் ஸ்லிப்பில் இருந்த கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறியது. 4வது விக்கெட்டுக்கு ஹேரி ப்ரூக், ரூட் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டு விளையாடி வருகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gdj937zy8o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலுவான நிலையில் இந்தியா! பும்ரா இல்லாமல் சாதித்துக் காட்டிய சிராஜ், ஆகாஷ்

Ind Vs Eng,விளையாட்டு செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், இந்திய கிரிக்கெட் அணி, ஜேமி ஸ்மித், ஹேரி ப்ரூக்,  முகமது சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிராஜ்

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரிம்மிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் இந்திய அணி 180 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக இருக்கிறது.

இந்திய அணித் தரப்பில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் சிங் இருவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து தரப்பில் ஹேரி ப்ரூக், ஸ்மித் இருவரும் வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை சரிவில் இருந்து மீட்டு கவுரமான நிலைக்கு இட்டுச் சென்றனர்.

ப்ரூக்-ஸ்மித் வரலாற்று பார்ட்னர்ஷிப்

இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. புதிய பந்தில் சிராஜின் பந்துவீச்சில் ஜோ ரூட் (22), ஸ்டோக்ஸ் (0) இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 150 ரன்களுக்குள் முடிந்துவிடும் என கணிக்கப்பட்டது.

ஆனால், 85 ரன்னாக இருந்த போது 6-வது விக்கெட்டுக்கு சேர்ந்த ஸ்மித், ஹேரி ப்ரூக் பார்ட்னர்ஷிப் அமைத்து 303 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து வரலாற்று சாதனை புரிந்தனர்.

24 வயதான இளம் பேட்டர் ஜேம் ஸ்மித் 184 (207 பந்துகள்) ரன்களுடன் 4 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேரி ப்ரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் வரலாற்றுப் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணிக்கு பெரிய உற்சாகத்தை அளித்தது. ஹேரி ப்ரூக் இந்திய அணிக்கு எதிரான தன்னுடைய முதல் சதத்தை அடித்த நிலையில், ஸ்மித் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார்.

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்தது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். டெஸ்ட் அரங்கில் 6-வது விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் குவித்த 9-வது ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர்.

Ind Vs Eng,விளையாட்டு செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், இந்திய கிரிக்கெட் அணி, ஜேமி ஸ்மித், ஹேரி ப்ரூக்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்னொரு கில்கிறிஸ்ட்

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்காமல் 184 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்து விக்கெட் கீப்பராக டெஸ்ட் அரங்கில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதற்கு முன் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 1997ல் நியூசிலாந்துக்கு எதிராக அடித்த 173 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. இதை ஸ்மித் முறியடித்தார். மேலும்,7வது பேட்டராகக் களமிறங்கி இந்திய அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ஸ்கோரையும் ஸ்மித் பதிவு செய்தார்.

24 வயதான ஸ்மித்தின் ஆட்டத்தைப் பார்த்த போது இங்கிலாந்து அணிக்கு 3 ஃபார்மெட்டுக்கும் கிடைத்துவிட்ட அற்புதமான விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்டுக்கு இணையாக ஒப்பிடலாம் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஸ்மித் 43 பந்துகளில் அரைசதத்தையும், 80 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்து டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த 3வது இங்கிலாந்து பேட்டராக மாறினார்.

பிரசித் கிருஷ்ணா ஓவரை விளாசிய ஸ்மித், ஷார்ட் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஜடேஜா, வாஷிங்டன் ஓவர்களையும் ஸ்மித் விட்டுவைக்கவில்லை. இருவரின் ஓவர்களிலும் தொடர்ச்சியாக இருமுறை இரு பவுண்டரிகளை ஸ்மித் விளாசினார்.

ஒருபுறம் ஸ்மித் இந்தியப் பந்துவீச்சை வெளுத்து, ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் ஹேரி ப்ரூக் மிகுந்த கட்டுக்கோப்புடன் ஷாட்களை ஆடி 73 பந்துகளில் அரைசதத்தையும், 137 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.

முதல் செஷனில் காலை தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் 160 ரன்கள் சேர்த்த நிலையில் மதிய உணவு இடைவேளையின்போது 47 ஓவர்களில் 249 ரன்களை வேகமாகச் சேர்த்தனர்.

மாலை தேநீர் இடைவேளையின் போது 355 ரன்களை சேர்த்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் சிறப்பாக ஒத்துழைத்து ஆடியதால், ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, சுந்தர், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரைப் பயன்படுத்தியும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

ஆடுகளமும் அதற்கு ஏற்றபடி தட்டையாக, எந்தவிதமான ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்காமல் இருந்தது, பந்தும் தேய்ந்துவிட்டதால், இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சி வீணானது.

மாலையில் புதிய பந்து எடுத்த பின்புதான் விக்கெட் வீழ்த்தும் முயற்சியில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வெற்றி கிடைத்தது. சிராஜ், ஆகாஷ் மீண்டும் அழைக்கப்பட்டதற்கு பலனும் கிடைத்தது. ஹேரி ப்ரூக் 158 ரன்னில் ஆகாஷ் பந்துவீச்சில் போல்டாகினார். 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்து இருவரின் பார்ட்னர்ஷிப் பிரிந்தது.

இந்த பார்ட்னர்ஷிப் பிரிந்த அடுத்த சில ஓவர்களில் இங்கிலாந்து அணியின் கடைசி வரிசை பேட்டர்கள் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

Ind Vs Eng,விளையாட்டு செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், இந்திய கிரிக்கெட் அணி, ஜேமி ஸ்மித், ஹேரி ப்ரூக்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஸ்மித் 43 பந்துகளில் அரைசதத்தையும், 80 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்

பும்ரா இல்லாமலும் சாதித்த சிராஜ், ஆகாஷ்

பும்ரா இல்லாத நிலையில் பந்துவீச்சில் சிராஜ், ஆகாஷ் தீப் என்ன செய்யப் போகிறார்களோ? எவ்வாறு இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தப்போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு இருவரும் சிறந்த பதிலை அளித்துள்ளனர்.

சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 3.58 எக்னாமியுடன் பந்துவீசினார். ஆகாஷ் தீப் 88 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து 4.40 எகானமியுடன் பந்துவீசினார். இருவரின் பந்துவீச்சும் ஓரளவுக்கு கட்டுக்கோப்புடனும், விக்கெட் வீழ்த்தும் நேர்த்தியுடனும் இருந்தது சிறப்பாகும்.

"நான் பொறுப்புகளையும், பணிச்சுமையையும் விரும்பக்கூடியவன்" என முகமது சிராஜ் போட்டிக்கு பின் ஜியோஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். பும்ராவுடனும், முகமது ஷமியுடனும் பந்துவீசிய சிராஜ் அவர்களிடம் இருந்து ஏராளமான அனுபவங்களை பெற்றுள்ளார்.

பும்ராவுடன் 23 டெஸ்ட்களில் ஆடிய சிராஜ் 33.82 சராசரி வைத்துள்ளார். பும்ரா இல்லாமல் 15 டெஸ்ட்களில் ஆடிய சிராஜ் 25.20 சராசரியாகக் குறைத்துள்ளார். ஷமியுடன் 9 டெஸ்ட் போட்டிகளில் சேர்ந்து பந்துவீசிய சிராஜ் 34.96 சராசரியும், பும்ரா, ஷமியுடன் இணைந்து 6 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசிய சிராஜ் 33.05 சராசரியும் வைத்துள்ளார்.

பும்ரா இல்லாமல், ஷமி இல்லாமல் சிராஜ் தலைமையில் பந்துவீச்சுஅமைந்தபோது, அவர் 12 போட்டிகளில் 22.27 சராசரி என அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

முகமது சிராஜ் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய "க்விக் பவுலர்", அவுட் ஸ்விங் நன்றாக வீசக்கூடியவர். இந்த வாய்ப்பு நேற்று சிராஜுக்கு கிடைத்தபோது அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. புதிய பந்து கிடைத்த போது 2வது நாள் மாலையில் ஒரு விக்கெட்டை சாய்த்த சிராஜ், நேற்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரூட், ஸ்டோக்ஸ் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றி தன்னுடைய பந்துவீச்சை நிரூபித்தார்.

அதேபோல ஆகாஷ் தீப் சிங்கும் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவராக இருக்கிறார். ப்ரூக்,ஸ்மித் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறியபோது, புதிய பந்து எடுத்தவுடன், ப்ரூக் விக்கெட்டை ஆகாஷ் சாய்த்தார். ஆகாஷ் தீப் வீசிய அந்த பந்து ஒரு பேட்டரால் விளையாட முடியாத அதிதுல்லியமான பந்தாகும்.

ப்ரூக் ப்ரண்ட் புட் எடுத்து வைக்க நினைக்கையில் திடீரென இன்ஸ்விங் ஆகி ஆப் ஸ்டெம்பை தட்டிச் சென்றது. இந்த விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்தது.

ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணி 387 சேர்த்திருந்தது. ஆனால் அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் விரைவாக சிராஜ், ஆகாஷ் வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Ind Vs Eng,விளையாட்டு செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், இந்திய கிரிக்கெட் அணி, ஜேமி ஸ்மித், ஹேரி ப்ரூக்,  முகமது சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்

பிரசித் கிருஷ்ணா பரிதாபம்

முதல் டெஸ்டிலும் படுமோசமாகப் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா, 2வது டெஸ்டிலும் அதே நிலையைத் தொடர்ந்தார். 2வது டெஸ்டில் 13 ஓவர்கள் வீசிய பிரசித் 73 ரன்களை வாரி வழங்கி ஓவருக்கு 5.53 ரன்ரேட்டில் மோசமாகப் பந்துவீசினார். டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு 5.50 ரன்கள் வழங்கிய இந்திய அளவில் 2வது மோசமான பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா இருக்கிறார்.

பிரசித் கிருஷ்ணா ஒரு ஓவரில் 3 பந்துகளை சரியான லைன் லென்த்தில் வீசிவிட்டு, அடுத்த 3 பந்துகளை தவறான லெனத்திலும், ஷார்ட் பிட்சாகவும், ஸ்லாட்டிலும் வீசும்போதும் நன்றாக வீசிய3 பந்துகள் வீணாகிறது.

வாஷிங்டன் சுந்தரும், ஜடேஜாவும் நேற்று இரு செஷன்களில் பந்துவீசியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இருவருமே ஓவருக்கு 4 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். அதனால் தான் இங்கிலாந்தின் இரு பேட்டர்கள் இணைந்து விரைவாக 300 ரன்கள் சேர்க்க முடிந்தது.

ஜெய்ஸ்வால்-ராகுல் வேகம்

முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் வேகமாக ஆட்டத்தைத் தொடங்கி, பவுண்டரிகளாக அடித்து ரன்களைச் சேர்த்தனர்.

டி20 ஆட்டத்தைப் போன்று பவுண்டரிகளாக விளாசியதால், 45 பந்துகளில் விரைவாக 50 ரன்களை இந்திய அணி எட்டியது. ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்திருந்த போது, டங் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து வந்த கருண் நாயர் (7), ராகுலுடன் (28) சேர்ந்து ஆடி வருகிறார்.

இந்தியா முன்னிலை

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 180 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக இருக்கிறது.

இன்றைய 4வது நாள் ஆட்டம், நாளைய கடைசி நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் இன்று மாலை தேநீர் இடைவேளை வரை இந்திய அணி பேட் செய்து பெரிய இலக்கு நிர்ணயித்து இங்கிலாந்திடம் வழங்கலாம். ஏனென்றால் கடந்த டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை இங்கிலாந்து பேட்டர்கள் அனாசயமாக அடைந்து வெற்றி பெற்றுவிட்டதால் இந்த டெஸ்டில் அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி குறைவான இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பு இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm20zgk7v3wo

  • கருத்துக்கள உறவுகள்

கில் விளாசி தள்ளியுளார். இனியொரு பத்து ஆண்டுகளை தன்வசப்படுத்துவாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதனைமேல் சாதனை படைத்த சுப்மன் கில், பிராட்மேனை முந்த வாய்ப்பு - வெற்றியை நோக்கி இந்தியா

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரிமிங்ஹாமில் நடந்து வரும் 2வதுடெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 608 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 427 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் கேப்டன் கில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். சாதனைமேல் சாதனை படைத்த கில், கிரிக்கெட் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் டான் பிராட்மேனின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இமாலய இலக்குடன் களம் புகுந்த இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் போராடி வருகிறது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணிக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன. ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கருண் நாயருக்கு 'செக்' வைத்த ஸ்டோக்ஸ்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிமிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களும் எடுத்தன.

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்களுடன் இருந்தது. கருண் நாயர்(7), ராகுல் 28) ரன்களுடன் 4வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கருண் நாயர் பவுன்ஸருக்கும், பேக்ஆஃப் லென்த் பந்துக்கும் சிரமப்படுகிறார், அதுபோன்ற பந்துகளை வீசும்போது ஷாட்களை ஆடவும், டிபென்ஸ் செய்யவும் திணறுகிறார் என்பதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிந்து கொண்டார்.

கருண் நாயருக்கு கட்டம் கட்டிய ஸ்டோக்ஸ், கார்ஸ், டங் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் பவுன்ஸர்களை கருண் நாயருக்கு வீசச் செய்தார். கருண் நாயருக்கு தொடர்ந்து பவுன்ஸர் நெருக்கடியை அளித்து ஒரு கட்டத்தில் கார்ஸ் பந்துவீ்ச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 26 ரன்னில் கருண் வெளியேறினார்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராகுல் கிளீன் போல்ட்

அடுத்து கேப்டன் கில் களமிறங்கி, ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்து 55 ரன்களில் டங்க் பந்துவீச்சில் கிளீஙன போல்டானார். டங்க் வீசிய இந்த பந்து அற்புதமானது, பேட்டர் விளையாட முடியாத அளவில் திடீரென இன் ஸ்விங்காகியதால், ராகுலால் சமாளிக்க முடியாமல் போல்டாகினார்.

அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, கில்லுடன் இணைந்தார். உணவு இடைவேளைக்கு செல்லும் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்ள் சேர்த்திருந்தது.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஷப் பந்த் அதிரடி

2வது செஷன் தொடங்கியதிலிருந்து ரிஷப் பந்த், கில் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். அதிலும் ரிஷப் பந்த் டி20 போட்டியைப் போன்று பேட் செய்யத் தொடங்கி, பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டு 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மான் கில் 57 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். டங்க் பந்துவீச்சில் விளாசிய கில் தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி அரைசதத்தை எட்டினார்.

ரிஷப் பந்த் பெரிய ஷாட்களை ஆடுவதைப் பார்த்த கேப்டன் ஸ்டோக்ஸ் சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு அதிக ஓவர்களை வழங்கினார். அவர் கணித்தபடியே, பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்ற ரிஷப் பந்த் லாங்ஆன் திசையில் டக்கெட்டிடம் கேட்ச் கொடுத்து 65 ரன்னில் (3 சிக்ஸர், 8பவுண்டரி) வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் கூட்டணி 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கில் இரண்டாவது சதம்

அடுத்து ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கில் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, மாலை தேநீர் இடைவேளைக்கு முன்பாக 129 பந்துகளில் சதத்தை எட்டினார். தேநீர் இடைவேளைக்குப்பின் வோக்ஸ் வீசிய பந்தில் கில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.

ஜடேஜாவும் அதிரடிக்கு மாறத் தொடங்கி, வேகமாக ரன்களை சேர்த்தார். பஷீர் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசி தனது ஸ்கோரை உயர்த்தி 94 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மான் கில்லின் அதிரடி ஆட்டத்தால் 156 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 129 பந்துகளில் சதம் அடித்த கில் அடுத்த 27 பந்துகளில் 50 ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். இந்திய அணி 400 ரன்களை எட்டிய நிலையில் கில் 161 ரன்களில் பஷீர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் கணக்கில் 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும்.

நிதிஷ் குமார் ரெட்டி இந்த இன்னிங்ஸிலும் ஒரு ரன்னில் ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னிலும்,ஜடேஜா 69 ரன்னில் இருந்த போது, அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்களை எட்டியது. அப்போது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல்முறையாக 1000 ரன்கள்

இந்த டெஸ்டில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1014 ரன்கள் சேர்த்து, உலகளவில் டெஸ்டில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு டெஸ்டில் ஆயிரம் ரன்களை எட்டுவதும், கடப்பதும் இந்திய அணிக்கு இது முதல்முறையாகும்.

உலகளவில் டெஸ்டில் 6வது முறையாக டெஸ்டில் ஒரு அணி 1000 ரன்களைக் கடந்தது. இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் 2004ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 916 ரன்கள் குவித்ததுதான் இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாக இருந்தது.

2வது இன்னிங்ஸில் இந்திய அணி மாபெரும் ஸ்கோரை எட்டுவதற்கு கேப்டன் சுப்மான் கில் தொடர்ந்து 2வது இன்னிங்ஸிலும் சதம் அடித்து 158 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது தவிர ரிஷப் பந்த்(65), ராகுல்(55) ஜடேஜா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவினர்.

ஆகாஷ் அசத்தல்

608 ரன் என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை முகமது சிராஜ் டக்அவுட் ஆக்கினார். மறுபுறம் அதிரடி காட்டிய பென் டக்கெட் 15 பந்துகளில் 25 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

இதனால், 30 ரன்களிலேயே இங்கிலாந்து ஆணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இக்கட்டான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி பெரிதும் நம்பியிருந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஏமாற்றினார். வெறும் 6 ரன்களில் அவரை ஆகாஷ்தீப் கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதிலும் பென் டக்கெட், ரூட்டை போல்டாக்கிய ஆகாஷ் தீப் வீசிய பந்து அற்புதத்திலும் அருமையான பந்துவீச்சாகும். ஒரு சாதாரன பேட்டரால் விளையாட முடியாத வகையில் வீசப்பட்ட ஆகச்சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுக்காவிட்டாலும் சரியான அளவில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மதில்மேல் பூனையாக இங்கிலாந்து

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை மதில்மேல் நிற்கும் பூனையாக இருக்கிறது. வெற்றிக்கு இன்னும் 536 ரன்கள் தேவைப்படும் நிலையில் அதை அடைவது என்பது கடினமான இலக்காக இருக்கும்.

இதில் களத்தில் இருக்கும் ஆலி போப், ஹேரி ப்ரூக்கைத் தவிர்த்து கேப்டன் ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவர் மட்டுமே பேட்டர்கள். இங்கிலாந்து அணி இன்னும் 2 விக்கெட்டுகளை இழந்தாலே தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டுவிடும்.

பாஸ்பால் உத்தியைக் கையாண்டு பல வெற்றிகளைப் பெற்றுவரும் இங்கிலாந்து அணி, கடந்த 3 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே அதுவும் கடைசி நாளில் மழை காரணமாக, டிரா செய்தது. பெரும்பாலும் அதிரடியாக சேஸ் செய்வது அல்லது விக்கெட்டுகளை இழந்து தோற்பது என்ற ரீதியில்தான் இங்கிலாந்து அணி விளையாடி வந்துள்ளது.

ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் வெற்றிக்காக முயல்வார்களா அல்லது டிரா செய்யும் நோக்கில் ஆட்டத்தை கொண்டு செல்லப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

கடைசி நாளில் ஆடுகளத்தில் பிளவுகள், வெடிப்புகள் அதிகமாகும். இதனால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சில் எதிர்பாராத பவுன்ஸர்கள், ஸ்விங்குகள் வெடிப்புகளில் பந்துபட்டவுடன் எகிறும் என்பதால், பேட்டர்கள் பேட் செய்வது கடினமாக இருக்கும், ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்துவதைவிட விக்கெட்டுகளை காப்பாற்றவே முயற்சிக்கலாம். இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கில் சாதனைமேல் சாதனை - பிராட்மேன் முந்துவாரா?

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றபின் சுப்மான் கில்லின் ஆட்டத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இங்கிலாந்து தொடருக்கு வருவதற்கு முன் கில்லின் டெஸ்ட் சராசரி 35 ரன்களாக இருந்தது. ஆனால், முதல் டெஸ்டில் அடித்த சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், 150 ரன்களுக்கு மேல் குவித்ததைத் தொடர்ந்து கில்லின் டெஸ்ட் சராசரி 42 ரன்களாக உயர்ந்துவிட்டது.

டெஸ்ட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற கவாஸ்கரின் 54 ஆண்டு கால சாதனையை கில் முறியடித்துள்ளார். 1971-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற டெஸ்டில் கவாஸ்கர் 344 ரன்களை குவித்திருந்தார். தற்போது இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 430 ரன்களை சேர்த்ததன் மூலம் கவாஸ்கர் சாதனையை கில் தகர்த்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் அதிக ரன்களைக் குவித்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். ஒரு டெஸ்டில் 430 ரன்களுடன் சுப்மான் கில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 456 ரன்களுடன் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் தொடர்ந்து இரு 150 ரன்களைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிராக 1980ம் ஆண்டில் ஒரு டெஸ்டில் இரு 150 ரன்களை அடித்திருந்தார்.

மேலும் ஒரு டெஸ்டில் இரட்டை மற்றும் சதம் அடித்த உலகளவில் 9 பேட்டர்களில் ஒருவராகவும், இந்திய அளவில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தார்போல் கில் இடம் பெற்றார்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அளவில் கேப்டன் பொறுப்பேற்று தொடர்ந்து இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தவர்களில் இதற்கு முன் சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் மட்டுமே இருந்த நிலையில் அந்தப் பட்டியலில் இப்போது கில்லும் இணைந்துவிட்டார். இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த வீரர்களில் ரிஷப் பந்த்துக்கு அடுத்தார்போல் கில்லும் இணைந்தார்.

முதல் இன்னிங்ஸில் கில், ஜடேஜா கூட்டணி 200 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து, 2வது இன்னிங்ஸலும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் ஒரு டெஸ்டில் இரட்டை சதம், சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒரே ஜோடி என்ற பெருமையை கில், ஜடேஜா பெற்றனர்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 4 சதம் பார்ட்னர்ஷிப்பை இந்தியா எட்டியுள்ளதில் அனைத்திலும் கில்லின் பங்களிப்பு இருக்கிறது. ஒரு டெஸ்டில் 4 சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களில் இந்திய அளவில் முதல் பேட்டராகவும், உலகளவில் 5வது பேட்டராகவும் கில் இருக்கிறார். இதற்கு முன் ஹனிப் முகமது, கிரஹாம் கூச், மார்க் டெய்லர், ஜோ ரூட் ஆகியோர் இதுபோன்று 4 சதங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியிருந்தனர்.

சுப்மான் கில் இங்கிலாந்து தொடரில் இரு டெஸ்ட்களிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 585 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் ஒரே தொடரில் 974 ரன்களைக் குவித்ததே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தொடரில் வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்களாக நீடிக்கிறது. இந்த தொடரில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியிருப்பதால் அதனை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் அடித்த 3வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் கில்லுக்கு 8-வது டெஸ்ட் சதமாகவும் அமைந்தது. 4வது நாள் ஆட்டத்தில் கில் சேர்த்த ரன்களில் பெரும்பகுதி இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் வந்தது.

148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்திடாத சாதனையை கில் படைத்துளளார். ஒரே டெஸ்டில் இரட்டை சதமும், 150 ரன்களும் சேர்த்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு சுப்மன் கில் சொந்தக்காரராகியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx20l0zj4g3o

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்து டெஸ்ட் தொடரை சமப்படுத்தியது இந்தியா; அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி

06 JUL, 2025 | 11:28 PM

image

(நெவில் அன்தனி)

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 336 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றிகொண்டது.

0607_india_s_biggest_win_away_from_home.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என இந்தியா சமப்படுத்தியுள்ளது.

அந்நிய மண்ணில் விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் ஓட்டங்கள் ரீதியில் இந்தியா ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் 318 ஓட்டங்களால் ஈட்டப்பட்ட வெற்றியே இதற்கு முன்னர் அந்நிய மண்ணில் ஓட்டங்கள் ரீதியாக இந்தியா ஈட்டிய மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.

0607_akash_deep.jpg

இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ் தீப் முதல் தடவையாக 10 விக்கெட் குவியலை டெஸ்ட் போட்டி ஒன்றில் பதிவுசெய்தார்.

சேத்தன் ஷர்மாவுக்குப் பின்னர் இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் பதவுசெய்த இரண்டாவது 10 விக்கெட் குவியல் இதுவாகும்.

இதே மைதானத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் சேத்தன் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிராக 188 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார்.

ஆகாஷ் தீப்   99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

மேலும் இந்திய அணியின் தலைவராக ஷுப்மான் கில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

இந்தியாவின் இந்த வெற்றியில் ஆகாஷின் 10 விக்கெட் குவியல்,  மொஹமத் சிராஜ் முதல் இன்னிங்ஸில் பதிவுசெய்த 6 விக்கெட் குவியல், ஷுப்மான் கில்  முதல் இன்னிங்ஸில் குவித்த இரட்டைச் சதம் (268) மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற சதம் (161), ரவிந்த்ர ஜடேஜா இரண்டு இன்னிங்ஸ்களிலும் பெற்ற அரைச் சதங்கள், யஷஸ்வி ஜய்ஸ்வால் முதல் இன்னிங்ஸிலும் கே.எல். ராகுல் மற்றும் ரிஷாப் பான்ட் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸிலும்   பெற்ற அரைச் சதங்கள் என்பன முக்கிய பங்காற்றின.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட நினைத்துப்பார்க்க முடியாது 608 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது.

போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது.

ஜெமி ஸ்மித் 88 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 587 (ஷுப்மான் கில் 269, ரவிந்த்ர ஜடேஜா 89, யஷஸ்வி ஜய்ஸ்வால் 87, வொஷிங்டன் சுந்தர் 42, ஷொயெப் பஷிர் 167 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 81 - 2 விக்., ஜொஷ் டங் (119 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 407 (ஜெமி ஸ்மித் 184 ஆ.இ., ஹெரி ப்றூக் 158, மொஹமத் சிராஜ் 70 - 6 விக்., ஆகாஷ் தீன் 88 - 4 விக்.)

இந்தியா 2ஆவது இன்: 426 - 6 விக். டிக்ளயார்ட் (ஷுப்மான் கில் 161, ரவிந்த்ர ஜடேஜா 69, ரிஷாப் பான்ட் 65, கே.எல். ராகுல் 55, ஜொஷ் டங் 93 - 2 விக்., ஷொயெப் பஷிர் 119 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: வெற்றி இலக்கு 608 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 271 (ஜெமி ஸ்மித்து 89, ப்றைடன் கார்ஸ் 38, பென் ஸ்டோக்ஸ் 33, பென் டக்கெட் 25, ஆகாஷ் தீப் 99 - 6 விக்.)

ஆட்டநாயகன்: ஷுப்மான் கில்.

https://www.virakesari.lk/article/219344

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து

இந்தியா , இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம்,PHOTO BY STU FORSTER/GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 6 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்று தொடரை சமன் செய்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்திருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷுப்மன் கில் சதமடிக்க (161 ரன்கள்) 427 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது இந்திய அணி.

25 நிமிடங்களில் திருப்புமுனை

ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக்

4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் இருந்தது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஏற்கெனவே ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களை தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் அலறவிட்ட நிலையில் அவர்களின் துல்லியமான லென்த்தில் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீ்ச்சு இன்று காலையும் தொடர்ந்தது.

ஆட்டம் தொடங்கிய 25 நிமிடங்களுக்குள் ஆகாஷ் தீப் இரு அருமையான பந்துகளால் இரு விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணியை நெருக்கடிக்குள் தள்ளினார்.

முதலாவதாக ஆட்டம் தொடங்கி 4வது ஓவரில் ஆலி போப்பிற்கு இன் கட்டரில் பந்துவீசி க்ளீன் போல்டாக்கினார் ஆகாஷ் தீப். ஏற்கெனவே திணறிக்கொண்டிருந்த போப் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

போப் ஆட்டமிழந்த அடுத்த 2 ஓவர்களில் ஹேரி ப்ரூக் விக்கெட்டுக்கு ஆகாஷ் குறிவைத்தார். பேட்டர் ஆடமுடியாத வகையில் இன்ஸ்விங்கில் பந்தை வீசி ஹேரி ப்ரூக்கை நிலைகுலையச் செய்து கால்காப்பில் வாங்கவைத்தார் ஆகாஷ்.

ப்ரூக் கால்காப்பில் வாங்கியதும் ஆகாஷ் அப்பீல் செய்தவுடனே நடுவர் மறுபேச்சு இன்றி கையை உயர்த்தி அவுட் வழங்கினார். டிஆர்எஸ் முறையீட்டுக்கு வாய்ப்பின்றி துல்லியமான எல்பிடபிள்யு என்பதால், ப்ரூக்கும் முறையீடு செய்யாமல் வெளியேறினார்.

இந்த இரு விக்கெட்டுகளும், இங்கிலந்து அணி சேஸிங் கனவிலிருந்து சற்று பின்னோக்கி தள்ளச் செய்தது. சேஸ் செய்துவிடலாம் என எண்ணி களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் பின்னடைவைச் சந்தித்தனர். 4வது நாள் முடிவில் 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, இன்று காலை ஆட்டம் தொடங்கி, 19 ரன்களைச் சேர்பதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஸ்டோக்ஸ், ஸ்மித் நங்கூரம்

கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம் ஸ்மித் இருவரும் 7வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பந்து தேய்ந்து, மென்மையாக மாறிவிட்டதால், எதிர்பார்த்த ஸ்விங்கும், வேகமும் கிடைக்காததால் பேட்டர்கள் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்ததால், ரன்களை இங்கிலாந்து பேட்டர்கள் வேகமாகச் சேர்த்தனர்.மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது.

ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்ய சுந்தர், ஜடேஜாவை மாறி, மாறி கேப்டன் கில் பயன்படுத்தினார். இதில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் இருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை கில் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பிவிடுவார் என்பதால் இவருக்கு குறிவைத்து கில் செயல்பட்டு பந்துவீச்சை உணவு இடைவேளைக்குப்பின் மாற்றினார்.

வாஷிங்டன் திருப்புமுனை

பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்

பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES

படக்குறிப்பு, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்

உணவு இடைவேளை முடிந்துவந்தபின், மீண்டும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் 33 ரன்கள் சேர்த்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டு ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு திரும்பியது. 7-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வோக்ஸ் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 பந்துகளில் அரைசதம் அடித்தபின் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.

பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுன்ஸராக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டபோது, அது சிராஜிடம் கேட்சானது. வோக்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்கமே ஆட்டம் மொத்தமும் இந்தியாவின் பக்கம் திரும்பியது.

இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித், கார்ஸ் களத்தில் இருந்தனர். ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஆகாஷ் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஆகாஷ் சற்று ஸ்லோவர் பந்தாக ஆப்சைடு விலக்கி வீசினார். இதை கணிக்காத ஸ்மித் தூக்கிஅடிக்கவே, பேக்வார்ட் ஸ்குயரில் நின்றிருந்த சுந்தரிடம் கேட்ச் கொடுத்து 88 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 8வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

ஆகாஷ் தீப் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையாக இருந்தார்.

ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித்

பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGE

படக்குறிப்பு, ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித்

சிராஜின் அற்புதமான கேட்ச்

இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. கார்ஸ், டங் இருவரும் களத்தில் இருந்தனர். பிரசித், ஜடேஜா மாறி, மாறி பந்துவீசியும் இருவரும் சளைக்காமல் ஆடினார்.

ஒரு கட்டத்தில்பேட்டர்களுக்கு நெருக்கடி தரும்வகையில் ஸ்லிப்பில், மிட்விக்கெட்டில் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தி ஜடேஜா பந்துவீசினார். ஜடேஜாவின் வியூகத்துக்கு பலன் கிடைத்து.

ஜடேஜாவீசிய பந்தை டங் தட்டிவிட, மிட்விக்கெட்டில் நின்றிருந்த சிராஜ், அற்புதமாக டைவ் செய்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது.

அடுத்ததாக பஷீர் களமிறங்கி, கார்ஸுடன் சேர்ந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்த ஆகாஷ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் பந்துவீச்சில் சற்று திணறிய கார்ஸ், திடீரென பெரிய ஷாட்டுக்கு முயன்று பந்தை தூக்கி அடித்தார். ஆனால் சிராஜ் பந்தை பிடிக்கும் முயற்சியில் தவறாக கணித்ததால் கேட்சை தவறவிட்டார்.

வெற்றிக்கான கேட்ச்

இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப்

ஜடேஜா அடுத்து பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா பந்துவீச்சில் பஷீர் கால்காப்பில் வாங்கிய பந்தை கேட்ச்பிடித்தபோது நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் டிஆர்எஸ் முறையீட்டில் பந்து பேட்டில் படவில்லை, கால்காப்பில் மட்டுமே பட்டது எனத் தெரியவந்ததால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.

அதன்பின்பும், ஜடேஜா, ஆகாஷ் இருவரும் மாறி மாறி பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக ஆகாஷ் தீப் வீசிய 64வது ஓவரில் அந்த வெற்றி விக்கெட் விழுந்தது. ஆகாஷ் வீசிய பந்தை கார்ஸ் தூக்கிஅடிக்க கேப்டன் கில் கேட்ச் பிடிக்கவே இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது.

வெற்றியின் நாயகர்கள்

இந்திய அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அரைசதம், ஷுப்மன் கில் இரட்டை சதம், ஜடேஜா அரைசதம், 2வது இன்னிங்ஸில் ராகுலின் அரைசதம், கில்லின் 2வது சதம், ரிஷப்பந்த் அரைசதம், ஜடேஜாவின் 2வது அரைசதம் என பேட்டிங்கில் முடிந்தவரை பங்களிப்பு செய்தனர்.

பந்துவீச்சில் பும்ரா இல்லாத நிலையில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது உண்மையில் பாராட்டுக்குரியது. முதல் இன்னிங்ஸில் சிராஜ் எடுத்த இங்கிலாந்து மண்ணில் முதல் 5 விக்கெட், ஆகாஷ் தீப்பின் 4 விக்கெட். 2வது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் எடுத்த முதல் 6 விக்கெட், சிராஜ், வாஷிங்டன் விக்கெட் ஆகியவை வெற்றிக்கு துணையாக இருந்தன.

39 ஆண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த சாதனை

இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, ஷுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட், இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிலும் ஆகாஷ் தீப் வெற்றிக்கான திருப்புமுனையை இரு இன்னிங்ஸிலும் வழங்கினார் என்பதை மறுக்க இயலாது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் பெற்றார்.

1986ம் ஆண்டு இதே பிர்மிங்ஹாம் மைதானத்தில் சேத்தன் சர்மா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்குப்பின் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார்.

அன்று காபா, இன்று பிர்மிங்ஹாம்

2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் முதல்முறையாக இந்திய அணி வரலாற்று பெற்றி பெற ஷுப்மன் கில், ரிஷப் பந்த், சிராஜ் ஆகிய 3 பேரும் முக்கிய காரணமாக இருந்தனர். இன்று எட்ஜ்பாஸ்டனில் புதிய சரித்திரத்தை எழுதவும் இந்த 3 வீரர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப்பின் முதல்முறை 6 விக்கெட், ஒட்டுமொத்த 10 விக்கெட் முக்கியமாக இருந்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 2வது போட்டியிலேயே அந்நிய மண்ணில் கில் வெற்றி தேடித்தந்துள்ளார். இதில் கேப்டன் கில்லின் பேட்டிங் பங்களிப்பு இரு டெஸ்ட் போட்டிகளிலும் மகத்தானது. முதல் போட்டியில் சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், சதம் என 430 ரன்கள் குவித்து முழுமையான உழைப்பை வழங்கினார்.

அதேபோல ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், 2வது இன்னிங்ஸில் விரைவாக அடித்த அரைசதம், சிராஜ் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மண்ணில் எடுத்த 6 விக்கெட், 2வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் என 7 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் சரித்திரம் படைக்க உதவினர்.

பிர்மிங்ஹாமில் புதிய வரலாறு

பிர்மிங்ஹாமில் இதுவரை 8 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் பிர்மிங்ஹாமில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது.

நூறாண்டுகளாக பிர்மிங்ஹாமில் கிரிக்கெட் விளையாடியும் முதல் வெற்றிக்காக தவம் கிடந்த நிலையில் நூறாண்டுகளுக்குப்பின் கிடைத்த முதல் வரலாற்று வெற்றி, கொண்டாடப்பட வேண்டிய வெற்றியாகும். இந்த நாள் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக அமைந்திருக்கிறது.

சீனியர்கள் இல்லாமல் சாதனை

இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது

இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இளம் வீரர்கள் வரலாற்று வெற்றி தேடித்தந்துள்ளனர்.

இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்குள் இருக்கும் இளம் வீரர்கள், 50 டெஸ்ட் போட்டியில்கூட ஆடாத அனுபவம் குறைந்தவர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் வென்றது உண்மையில் வரலாற்று வெற்றியாகும், கில் கேப்டன்ஷிப் ஏற்று கிடைக்கும் முதல் வெற்றியாகும்.

இங்கிலாந்துக்கு மரணஅடி

பாஸ் பால் உத்தியைக் கையாண்டு விளையாடியது முதல், இங்கிலாந்து அணி டிரா என்றாலே என்ன என்று கேள்வி கேட்கும் விதத்தில் ஆடியது. 23 டெஸ்ட்களில் 15 போட்டிகளை வென்றிருந்தது, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், பாஸ் பால் ஆட்டத்தை ஆடும் முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இளம் இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

டாஸ் வென்று முதல் டெஸ்டில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்த டெஸ்டிலும் 2வதுமுறையாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஸ்டோக்ஸின் முடிவு தவறானது, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பாது என்பதை இளம் இந்திய அணி நிரூபித்துள்ளது.

சமநிலையில் தொடர்

இதன் மூலம் சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி வரலாற்று சிறப்பு மிகுந்த லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3r9jyxxl99o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அக்காவுக்காக அர்ப்பணித்து விளையாடினேன்" - எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்குப் பின் ஆகாஷ் தீப் கூறியது என்ன?

ஆகாஷ் தீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

"நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்."

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, ஆகாஷ் தீப் இதைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ய உதவினார்.

இரண்டாவது டெஸ்டில் பந்து வீசும்போது, தனக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். அது அவரது மூத்த சகோதரியின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது.

போட்டிக்குப் பிறகு, ஜியோ-ஹாட்ஸ்டாருக்காக வர்ணனை செய்து கொண்டிருந்த புஜாராவிடம் ஆகாஷ் தீப் பேசினார்.

"உங்கள் கையில் பந்து இருக்கிறது. உங்கள் கையில் ஸ்டம்ப் இருக்கிறது. நீங்கள் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளீர்கள். வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்களா?" என்று ஆகாஷ் தீப்பிடம் புஜாரா கேட்டார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் தீப், "நான் யாரிடமும் சொல்லாத மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், என் அக்கா கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.

"அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள், ஏனென்றால் அவள் கடந்து செல்லும் மனநிலையைக் கருத்தில் கொண்டால், இந்த மகிழ்ச்சி அவளுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்."

"இந்தப் போட்டியை அவளுக்கு அர்ப்பணித்து விளையாடினேன். அவள் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

"என்னுடைய இந்த நிகழ்ச்சி உனக்காகத்தான் சகோதரி. நான் பந்தை கையில் வைத்திருக்கும் போதெல்லாம், உன் முகம் என் கண் முன்னே இருந்தது. உன் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்பினேன். நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம்" என்று ஆகாஷ் தீப் கூறினார்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்படவில்லை.

இருப்பினும், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக அவர் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சேர்க்கப்பட்டார். மேலும் ஆகாஷ் தீப் தனது தேர்வு சரியானது என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றையும் படைத்தார்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 187 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது பிரிட்டன் மண்ணில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறப்பாக பந்துவீச்சாகும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, ஆகாஷ் தீப் ஒரு சிறப்பு உத்தியை வகுத்திருந்தார்.

"இந்தியாவில் இதுபோன்ற விக்கெட்டுகளில் நாங்கள் நிறைய விளையாடியுள்ளோம். விக்கெட்டுக்கு என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கவில்லை என்பதை பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது எங்கள் கையில் இல்லை. நான் சரியான பகுதிகளில் பந்து வீச வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில், இங்கிலாந்தின் பிரபல பேட்ஸ்மேன் ஜோ ரூட்டுக்கு ஆகாஷ் தீப் பந்து வீசினார். அவருடைய ஒரு பந்து பெரிதும் பேசப்பட்டது.

"ஆரம்பத்தில் நான் ஜோ ரூட்டுக்கு நேராக பந்துகளை வீசினேன். ஆனால் அந்த பந்தில், நான் கார்னரிலிருந்து கொஞ்சம் கோணமாக பந்து வீசினேன். அந்த பந்தில் நான் நினைத்தது நடந்தது" என்று அவர் கூறினார்.

ஆகாஷ் தீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லார்ட்ஸ் டெஸ்ட் பற்றி ஆகாஷ் தீப் என்ன சொன்னார்?

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹாரி புரூக்கின் விக்கெட்டை ஆகாஷ் தீப் வீழ்த்தினார்.

"இரண்டாவது இன்னிங்ஸில் ஹாரி புரூக் தற்காப்புடன் விளையாடினார். அவர் விக்கெட்டை மறைத்து விளையாடினார். இரண்டு-மூன்று ஓவர்கள் எப்படி பந்து வீசுவது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. நல்ல பகுதியில் பந்தை கடுமையாக வீசுவதே எனது ஒரே இலக்கு" என்று ஆகாஷ் தீப் கூறினார்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் கிடைத்த வெற்றி, தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு பயனளிக்கும் என்று ஆகாஷ் தீப் நம்புகிறார்.

"இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அதை அனுபவிக்கிறோம். இந்த வெற்றியிலிருந்து எங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். எங்கள் பீல்டிங்கும் நன்றாக இருந்தது" என்று அவர் கூறினார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸில் தொடங்குகிறது.

லார்ட்ஸில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், எட்ஜ்பாஸ்டனில் செய்த அதே திட்டத்துடன் பந்து வீச முயற்சிப்பேன் என்று ஆகாஷ் தீப் கூறினார்.

"எனது பலத்திற்கு ஏற்ப பந்து வீசுவேன். ஒரு நாள் அது பலனைத் தரும் அல்லது பலன் அளிக்காமல் போகலாம். ஆனால் நான் அதையே கடைப்பிடிப்பேன்" என்று அவர் கூறினார்.

ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

பிகாரை சேர்ந்தவர்

ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.

அவர் பிகார் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தில் வசிப்பவர்.

இருப்பினும், ஆகாஷ் தீப் ரஞ்சி டிராபியில் பிகாருக்குப் பதிலாக மேற்கு வங்கத்திற்காக விளையாடியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு, ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை ரூ.8 கோடிக்கு வாங்கியது.

இதுவரை, ஆகாஷ் தீப் இந்தியாவுக்காக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz9k4g99j73o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லார்ட்ஸ் டெஸ்ட்: வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியில் வெல்லப்போவது யார்? - 4 ஆண்டுக்குப் பின் ஆர்ச்சரை களமிறக்கும் இங்கிலாந்து

இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, டெஸ்ட் தொடர், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய கேப்டன் ஷுப்மன் கில்

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட சச்சின்-ஆன்டர்ஸன் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்பார்கள்.

லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணி சோபிக்கவில்லை. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்து வீரர்கள் நல்ல முறையில் ரன்களைக் குவித்தனர்.

அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால், ராகுல், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதம், அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளனர்.

பந்துவீச்சில் கடந்த 2வது டெஸ்டில் ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர். முதல் டெஸ்டில் பீல்டிங்கில் செய்திருந்த தவறுகளை 2வது போட்டியில் திருத்தி, கேட்ச் வாய்ப்புகளை தவறவிடாமல் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டை விட 2வது போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.

குறிப்பாக 2வது டெஸ்டில் அதிகமான ரன்கள் வித்தியாசத்திலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் வெற்றி பெற்று புதிய வரலாற்றையும் இளம் இந்திய அணியினர் படைத்தனர். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளும் நடந்த ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு வெகுவாக ஒத்துழைக்கக்கூடியதாக இருந்தது.

ஆனால், நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆடுகளமாகும். மற்ற மைதானங்களை விட இந்த மைதானத்தில் ஆடுகளம் சற்று தாழ்வாக இருக்கும் என்பதால், பந்து பேட்டரை நோக்கி சீறிக்கொண்டு வரும். ஆதலால், பேட்டர்கள் இங்கு பொறுமை காத்து, நிதானமாக பேட் செய்வது அவசியமாகும்.

இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, டெஸ்ட் தொடர், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

இந்திய அணியில் கடந்த போட்டியில் களமிறங்காத வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார். அதேபோல இங்கிலாந்து அணியில் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசியாக ஆர்ச்சர் 2021ம் ஆண்டு ஆமதாபாத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்றார். அதன்பின் முழங்கால் காயம், முதுகுதண்டுவட சிகிச்சை ஆகியவற்றால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆர்ச்சர் நாளைதான் களமிறங்க இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்குள் ஆர்ச்சர் வருவது மிகப்பெரிய பலமாகும், பந்துவீச்சாளர் ஜோஸ் டங்கிற்குப் பதிலாக ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார், இதைத்தவிர பெரிதாக எந்த மாற்றத்தையும் இங்கிலாந்து அணி செய்யவில்லை.

இந்திய அணியிலும் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றத்தையும் இந்திய அணி தரப்பில் செய்யமாட்டார்கள் என்று தெரிகிறது.

ஆர்ச்சர் வருகையால் நம்பிக்கை

இங்கிலாந்து அணியில் 2வது டெஸ்டிலேயே ஆர்ச்சர் சேர்க்கப்பட்டாலும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை. 2வது போட்டியிலிருந்தே வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சரை தீவிரமாகக் கண்காணித்த பின், பயிற்சியாளர் மெக்கலம் 3வது டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் லெவனில் சேர்த்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தற்போதைய பந்துவீச்சாளர்கள் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். வோக்ஸ், ஸ்டோக்ஸ் தவிர ஜோஸ் டங், கார்ஸ், இருவருமே அனுபவம் குறைந்தவர்கள். ஜோஸ் டங் இரு போட்டிகளில் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியில் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக இருந்தாலும், ஓவருக்கு 4.5 ரன்ரேட் வழங்குவது பெரிய கவலையாக இருந்தது. கார்ஸ், வோர்ஸ் இருவரும் இரு போட்டிகளில் சேர்த்து சராசரியாக 70 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியுள்ளனர். ஆனால், பெரிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை.

வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சன் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர் 3வது மற்றும் 4வது டெஸ்டில் விளையாடமாட்டார். சர்ரே கவுண்டி அணிக்காக ஆட இருப்பதால் கடைசி டெஸ்டில் அட்கின்சன் வருவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதலால், இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் மட்டுமே மாற்றமாக இருக்கும்.

இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, டெஸ்ட் தொடர், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லார்ட்ஸ் மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்.

ஆர்ச்சரைப் பொருத்தவரை 2019 ஆஷஸ் தொடரிலிருந்து கடைசியாக 2021ம் ஆண்டுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்ட ஆர்ச்சரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர இங்கிலாந்து நிர்வாகம் மிகவும் மெனக்கெட்டது. அதனால்தான் அவருக்கு 2வது போட்டியில் போதுமான ஓய்வும், பயிற்சியும், கண்காணிப்பும் செய்து அணிக்குள் கொண்டு வருகிறார்கள்.

இவர் தவிர கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு மார்க்வுட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், கடைசி டெஸ்டில் மார்க்வுட், அட்கின்சன் அணிக்குள் வரலாம் என்று நம்பப்படுகிறது.

லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்.

கார்ஸ், வோக்ஸ், ஸ்டோக்ஸ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் கடந்த 2 போட்டிகளாக இந்திய பேட்டர்களுக்கு பந்துவீசி அவர்களின் பலம், பலவீனத்தை தெரிந்து கொண்டுள்ளனர். ஆதலால், லார்ட்ஸ் மைதானத்தில் இன்னும் எளிதாக இந்திய பேட்டர்களை அணுக முடியும். சுழற்பந்துவீச்சுக்கு பஷீர், அவருக்கு துணையாக 5வது பந்துவீச்சாளராக ஜோ ரூட் பந்துவீசுவார். மற்றவகையில் இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சை முழுமையாக நம்பி இருக்கிறது.

பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர்களில் பென் டக்கெட், ஸ்மித், ப்ரூக் ஆகியோர் கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளனர். கிராளி, ஆலி போப், ஜோ ரூட், கேப்டன் ஸ்டோக்ஸ் இதுவரை ஃபார்முக்கு வராமல் இருப்பது அந்த அணிக்கு பெரிய கவலையாகும். முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதற்கு டக்கெட்டின் பேட்டிங்கும், ப்ரூக், ஸ்மித்தின் சதமும் முக்கியக் காரணமாக அமைந்தது.

ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை, ஆனால், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார்கள், நல்ல வியூகங்களை வகுக்கிறார். ஜோ ரூட் அனுபவமான பேட்டராக நடுவரிசையில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாக இருந்தாலும், நிலைத்தன்மை அவரின் பேட்டிங்கில் இல்லை.

லாட்ஸ் மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ், டக்கெட், போப் ஆகிய 3 பேருமே கடந்த காலங்களில் சதம் அடித்திருப்பது பெரிய நம்பிக்கையை அளிக்கும். வோக்ஸ், ஸ்டோக்ஸ் இருவருமே லார்ட்ஸ் மைதானத்தில் 25 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பது பெரிய பலமாகும்.

அதிலும் 145 கி.மீ வேகத்துக்கு அதிகமாக பந்துவீசும் வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களை கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பும்ராவின் வருகை

2வது டெஸ்ட் போட்டியில் வென்ற அதே இந்திய அணிதான் சிறிய மாற்றத்துடன் 3வது போட்டியில் களமிறங்கும் எனத் தெரிகிறது. பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் மாற்றம் இருக்காது என கிரிக்இன்போ தளம் தெரிவித்துள்ளது. இந்திய அணியில் கருண் நாயரின் ஃபேட்டிங் ஃபார்ம்தான் கவலைக்குரியதாக இருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்டில் வாய்ப்புக் கிடைத்தும் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இருப்பினும் அவரை மாற்றாமல்தான் இந்திய அணி களமிறங்கும் எனத் தெரிகிறது.

பந்துவீச்சில் பும்ராவுக்குத் துணையாக சிராஜ், ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் 4வது பந்துவீச்சாளராக நிதிஷ் ரெட்டியும் இருப்பார். சுழற்பந்துவீச்சுக்கு ஜடேஜா, வாஷிங்டன் இருவர் இருக்கிறார்கள். 2வது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா இல்லாத இடத்தை நிறைவு செய்துவிட்டார். சிராஜும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 3 பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலமாகும்.

இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, டெஸ்ட் தொடர், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார்.

லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சாளர்கள் மோதுவதற்கான களமாக இருப்பதால், இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் திறனை உரசிப்பார்க்கும் போட்டியாக இருக்கும்.

இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேரன் காஃப் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "இந்திய அணியில் பும்ரா வருகைக்குப்பின், 3 வேகப்பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் திறமையுடன் இருப்பது அணிக்கு பெரிய பலமாக இருக்கும். லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தும் களமாக இருப்பது பார்க்க உற்சாகமாக இருக்கும். அதேசமயம், இந்திய பந்துவீச்சாளர்களோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து பந்துவீச்சு சற்று பின்னடைந்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

இந்திய அணி செய்ய வேண்டியது என்ன?

பேட்டிங்கைப் பொருத்தவரை ஜெய்ஸ்வால், ராகுல், சுப்மன் கில், ஜடேஜா, ரிஷப் பந்த் என டாப்ஆர்டர் பேட்டர்கள், நடுவரிசை பேட்டர்கள் அரைசதம், சதம், தொடர் சதம் அடித்து வலுவான ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கருண் நாயர் பேட்டிங் மட்டுமே கவலையளிப்பதாக உள்ளது. வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிவரை பேட்டர்கள் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலம்.

ஆனால், கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. பேட்டர்கள் பொறுமையாக, நிதானமாக செயல்பட்டால்தான் ரன்களை நோக்கி நகர முடியும் என்பதால், பேட்டர்களின் திறனை உரசிப்பார்க்கும் உரைகல்லாக இருக்கும்.

பேட்டர்களை தவறு செய்ய வைக்கும் வகையில் பந்தில் பவுன்ஸர், ஸ்விங், சீமிங் இருக்கும் என்பதால், பேட்டர்கள் ஏமாந்து வி்க்கெட்டை விடாமல் பேட் செய்வது அவசியமாகும்.

இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, டெஸ்ட் தொடர், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது.

லார்ட்ஸ் மைதானத்தைப் பொருத்தவரை முதலில் சோதனைக்குள்ளாவது டாப்ஆர்டர் பேட்டர்கள்தான். ஆதலால், ராகுல், ஜெய்ஸ்வால் மிகுந்த பொறுமையுடன் முறைப்படியான டெஸ்ட் போட்டியில் பேட் செய்வதைப் போல் பேட் செய்து முதல் செஷனைக் கடந்தால்தான் அடுத்துவரும் பேட்டர்களுக்கு நெருக்கடியில்லாமல் விளையாட முடியும்.

முதல் செஷனிலேயே விக்கெட்டை இழந்தால், அதன்பின் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆதலால், இந்த மைதானத்தில் முதல் செஷன் ஆட்டம் என்பது மிக மிக முக்கியமானதாகும்.

டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பதுதான் இங்கு சரியான முடிவாக இருக்கும். இங்கு டாஸ் வென்ற அணிதான் 55 சதவீத போட்டிகளில் வென்றுள்ளது.

முதல் செஷன் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த முதல் செஷன் வரை இந்திய பேட்டர்கள் விக்கெட்டை விடாமல் பொறுமையாக பேட் செய்விட்டால் நிலைத்துவிடலாம்.

ஆனால், முதல் செஷனில் புதிய பந்து, காற்றின் வேகம், ஆடுகளம் ஆகியவற்றால் மின்னல் வேகத்தில் பந்து பேட்டரை நோக்கி வரும் என்பதால் விக்கெட்டை காப்பாற்றி பேட்டர்கள் ஆடுவது அவசியமாகும்.

ஆடுகளம் எப்படி இருக்கும்?

கிரிக்கெட்டின் மெக்கா என வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் முதல் செஷன் என்பது 5 நாட்களுமே முக்கியமானதாக இருக்கும். ஆடுகளத்தில் புற்கள் இருக்குமாறு பராமரித்துவருவதால், இயல்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கமே இங்கு அதிகமிருக்கும் பேட்டர்கள் சற்று சிரமப்பட்டுதான் பேட் செய்ய வேண்டியதிருக்கும். சிறிய தவறு, தவறான ஷாட் ஆட முயன்றாலும் விக்கெட்ட இழக்க நேரிடும்.

இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, டெஸ்ட் தொடர், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லார்ட்ஸ் மைதானம் (ஃபைல் புகைப்படம்)

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 344 ரன்கள்தான் சேஸ் செய்யப்பட்டுள்ளது என்பதால் கடைசி நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருக்கும். முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 300 ரன்கள் சேர்ப்பதே கடினம்தான். ஓவருக்கு 2 முதல் 3 ரன்கள் தான் சேர்க்க முடியும் என்பதால் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்.

லார்ட்ஸில் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி உள்ளது?

இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 3 போட்டிகளில்தான் வென்றுள்ளது, 12 போட்டிகளில் தோல்வி அடைந்து, 4 போட்டிகளை டிரா செய்துள்ளது. 1932ம் ஆண்டிலிருந்து லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய இந்திய அணி 1986ம் ஆண்டுதான் முதல் வெற்றியை கபில் தேவ் தலைமையில் பெற்றது. அதன்பின் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2வது வெற்றிக்காக காத்திருந்து தோனி தலைமையில் ஒரு வெற்றியும் 2021ல் விராட் கோலி தலைமையில் ஒரு வெற்றியையும் இந்திய அணி பெற்றது.

இந்திய அணியில் இப்போது இருக்கும் வீரர்களில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக சதம் அடித்துள்ளார், ஜடேஜா அரைசதம் அடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் பும்ரா ஒரு போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இப்போது இருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு லார்ட்ஸ் மைதானம் என்பது புதுவிதமான அனுபவமாக இருக்கும்.

இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 59 போட்டிகளில் வென்றுள்ளது, 35 போட்டிகளில் தோல்வி அடைந்து 51 போட்டிகளை டிரா செய்திருக்கிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவாக இருக்கும். இந்த மைதானத்தில் ஒரு பந்துவீச்சாளர் விக்கெட் எடுத்தாலும், பேட்டர் அரைசதம், சதம் அடித்தாலும் அது அவருக்கு வாழ்நாளில் மிகப்பெரிய நினைவலையாக இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9vrxdlynlyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லார்ட்ஸ் டெஸ்டில் 'நங்கூரமிட்ட' ரூட் – இங்கிலாந்தின் பாஸ்பால் பாணிக்கு சவால் விடுத்த இந்தியா

ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார்

கட்டுரை தகவல்

  • எஸ். தினேஷ் குமார்

  • கிரிக்கெட் விமர்சகர்

  • 11 ஜூலை 2025, 02:04 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாஸ்பால் (Bazball) அணுகுமுறை காலாவதியாகிவிட்டது, இங்கிலாந்து அணி இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு அடிபணிந்துவிட்டது என சமூக ஊடகங்கள் முழுக்க எக்கச்சக்க பதிவுகளை பார்க்க முடிகிறது.

ஆனால், உண்மையில் நேற்று லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் பாணியில்தான் பேட்டிங் செய்தது.

"பாஸ்பால் என்பது வெறுமனே அதிரடியாக விளையாடுவது மட்டுமல்ல; தேவைப்படும் சமயத்தில் அணியின் நலனுக்காக அடக்கி வாசிப்பதும் பாஸ்பால் தான்" என்று ஒருமுறை இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது.

இந்தியா இங்கிலாந்துக்கு இடையே நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 3வது டெஸ்டில் டாஸ் வென்ற  இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சர்யம்தான்.

இங்கிலாந்தின் பாஸ்பால் பாணிக்கு சவால் விடுத்த இந்திய பவுலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வழக்கமாக லார்ட்ஸ் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்தமுறை புற்களை அதிகம் விடாமல், ஆடுகளத்தை தயார் செய்திருக்கிறார்கள்.

முதல் 10–15 ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடிவிட்டால், அதன்பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக களம் மாறும் என்பது இங்கிலாந்தின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால், ஆடுகளம் மெதுவாகவும் (Slow), இரட்டை வேகம் (Two paced) கொண்டதாகவும் இருந்தது. அதாவது ஒரு பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும். அடுத்த பந்து எதிர்பார்த்த அளவுக்கு பவுன்ஸ் ஆகாமல் தாழ்வாக செல்லும்.

இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார். ஹைலைட்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு ரூட்டின் நேற்றைய இன்னிங்ஸ் சுவாரஸ்யமாக இருக்காது. ஆடம்பரமான கவர் டிரைவ்களோ கண்ணைப் பறிக்கும் ஸ்கொயர் கட்டுகளோ இந்த இன்னிங்சில் எதிர்பார்க்க முடியாது.

ஆடுகளத்தின் மெதுவான தன்மையை புரிந்துகொண்டு பந்தை நன்றாக உள்வாங்கி தன் பலத்துக்கு ஏற்ப விளையாடி உழைத்து ரன் சேர்த்தார் ரூட்.

பவுண்டரிகள் கூட நேர்க்கோட்டில் விளையாடியும் தேர்ட் மேன், பைன் லெக் திசையில் தட்டிவிட்டு ரன்களை எடுத்தார். பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட், ஆரம்பத்தில் அவர் ஓவரை புத்திசாலித்தனமாக தவிர்த்தார். போப் உடனான அவருடைய பார்ட்னர்ஷிப், இந்த இன்னிங்சில் இங்கிலாந்துக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள், விளையாட்டு செய்திகள், லார்ட்ஸ் மைதானம், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து வீரர்கள் ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ்

கட்டுக்கோப்பான பந்துவீச்சு... ஆனாலும்!

போப் வழக்கம் போல பதற்றத்துடன் இன்னிங்ஸை தொடங்கினாலும், போகப் போக ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தன் ஆட்டத்தை தகவமைத்துக்கொண்டார்.

பும்ராவின் ஓவர்களை ரூட் எதிர்கொள்ள தயங்கிய போது, பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடி தனது சக வீரரின் நெருக்கடியை போக்கினார். இந்தியாவின் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அது கடந்த டெஸ்டை போல அபாயகரமானதாக தோற்றமளிக்கவில்லை.

அதற்கு ஆடுகளத்தின் மெதுவான வேகம் மட்டுமில்லாமல் லார்ட்ஸ் ஆடுகளத்தின் ஸ்லோப்பை (Slope) பயன்படுத்தி பந்துவீசுவதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறியதும் முக்கிய காரணம்.

லார்ட்ஸ் மைதானத்தில் pavilion end இல் இருந்து Nursery end நோக்கி பந்துவீசும் போது, அங்கு ஒரு சிறியதாக ஒரு சரிவு இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்தி வீசினால், பந்தை உள் நோக்கி கொண்டு சென்று பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், கடந்த டெஸ்டில் சாதித்த ஆகாஷ் தீப், அனுபவமின்மை காரணமாக ஸ்லோப்பை நேற்று சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள், விளையாட்டு செய்திகள், லார்ட்ஸ் மைதானம், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார்.

நிதிஷ் குமார் தந்த திருப்புமுனை

ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார்.

பாஸ்பால் யுகத்தில் மிகவும் மெதுவான முதல் செஷன் இதுவாகத்தான் இருக்க முடியும்.

பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் கைகள் கட்டப்பட்டிருந்த தொடக்க வீரர்களான டக்கெட்டும் கிராலியும் நிதிஷ் குமார் வந்தவுடன் ரன் குவிக்கும் ஆசையில் ஆட்டமிழந்தனர்.

முதன்மை வேக வீச்சாளர்கள் சரியான லெங்த் பிடிக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில், பேட்டிங் ஆல்ரவுண்டரனான நிதிஷ் குமார், தனது High arm பந்துவீச்சு ஆக்சனில் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

இந்த டெஸ்ட் தொடரில் பும்ராவை ஓரளவுக்கு இங்கிலாந்து நன்றாக விளையாடியதாகவே சொல்லலாம். 200 பந்துகளுக்கு மேல் விக்கெட் எடுக்காமல் பும்ரா பந்துவீசி வருகிறார் என ஒரு புள்ளிவிவரம் திரையில் காட்டப்பட்ட சமயத்தில், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

என்ன மாதிரியான ஒரு பந்து அது! ஆடுகளம் சுத்தமாக ஒத்துழைக்கவில்லை, இங்கிலாந்து அணி நங்கூரம் போல விளையாடியது. விக்கெட் எடுத்தால் மட்டும்தான் இந்தியாவுக்கு வாழ்வு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபாரமான nip backer மூலம் கொஞ்சமே கொஞ்சம் பந்தை நகர்த்தி புரூக்கின் ஸ்டம்புகளை தகர்த்தார்.

இங்கிலாந்து அணி, வலுவான நிலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் போப்பின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார்.

ரிஷப் பந்த் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய நிலையில் மாற்று வீரராக விக்கெட் கீப்பிங் செய்த ஜூரெல் அபாரமான கேட்ச் பிடித்தார்.

இந்த இன்னிங்சில் இந்தியாவுக்கு நிறை கேட்ச் வாய்ப்புகள் கைக்கு எட்டவில்லை. பீல்டர்கள் மீது தவறில்லை என்றாலும் இன்னும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் சில விக்கெட்களை எடுத்திருக்கலாம்.

எப்போது இந்தியாவின் கைக்கு ஆட்டம் மாறும்?

ரூட்டிடம் சென்று, "பாஸ்பால் விளையாடு இப்போது" என சிராஜ் சைகை செய்ததும், 'போரிங் கிரிக்கெட்' என இங்கிலாந்தின் தற்காப்பு ஆட்டத்தை கில் கிண்டல் அடித்ததும் ஆட்டத்துக்கு சுவாரஸ்யம் கூட்டின.

மூன்றாவது, நான்காவது நாள்களில் சுழற் வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கணிக்கப்படும் சூழலில், குல்தீப் யாதவ் இல்லாமல் களமிறங்கியது சரியான முடிவா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

99 ரன்களுடன் களத்தில் உள்ள ரூட்டை இன்று விரைவில் ஆட்டமிழக்க செய்து, எஞ்சியுள்ள விக்கெட்களை விரைவில் வீழ்த்தினால் மட்டும்தான் ஆட்டம் இந்தியாவின் கைக்கு வரும். முழு உடற்தகுதியுடன் இல்லாத ஸ்டோக்ஸ் இன்று எப்படி இன்னிங்ஸை தொடங்கப் போகிறார் என்பதும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என கூறலாம்.

பாஸ்பால் பேச்சுகளை எல்லாம் உதறிவிட்டு பார்த்தால், லார்ட்ஸ் டெஸ்டில் முதல் நாளில் 251–4 என்பது நல்ல ஸ்கோர் என்றே சொல்ல வேண்டும்.

நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நாளை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை குவித்தாக வேண்டும்.

ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பான பந்துவீச்சு, நேர்த்தியான பேட்டிங் என பக்கா டெஸ்ட் மேட்ச்சாக லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் மாறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg75e2p8ejmo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கபில்தேவை முந்திய பும்ரா: வழக்கமான பலவீனம் மீண்டும் வெளிப்பட்டதால் நெருக்கடியில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ஜோ ரூட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பும்ரா

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார். எஸ்

  • கிரிக்கெட் விமர்சகர்

  • 12 ஜூலை 2025, 03:47 GMT

பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணியினருக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று நடந்தது என்ன? இந்த போட்டியில் வெற்றியை நோக்கிச் செல்கிறதா இந்திய அணி! ஒரு அலசல்.

கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஜோப்ரா ஆர்ச்சர், தன்னுடைய மூன்றாவது பந்திலேயே அபாயகரமான பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எடுத்து லார்ட்ஸ் மைதானத்தையே அதிரவைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதை பார்ப்பதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஒன்றுமில்லை.

ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் போன பிரிட்டன் மண்ணில், ஆர்ச்சர் போன்ற முழுமையான வேகப்பந்து வீச்சாளரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவது கண்கொள்ளா காட்சி. மெதுவான வேகம் கொண்ட மைதானம் என்பதால் லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டமும் மந்தமாக தொடங்கி மந்தமாகவே முடிந்தது.

கீழ்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை எடுக்க முடியாமல் தடுமாறுவது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. நல்ல டெக்னிக் தெரிந்த பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைக்கத் தெரிந்த இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசிக்கட்ட விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தவிப்பது ஆச்சர்யம்தான்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ஜோ ரூட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சதம் அடித்த ஜோ ரூட்

கபில் தேவ் சாதனையை தகர்த்த பும்ரா

ஸ்டோக்ஸ், ரூட், வோக்ஸ் என மூன்று முக்கிய விக்கெட்களை பும்ரா கைப்பற்றிய பிறகு, ஒருகட்டத்தில் 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.

எட்டாவது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித்–கார்ஸ் இணைந்து 84 ரன்கள் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை உண்டாக்கினர். சிராஜ் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித் கொடுத்த சுலபமான கேட்ச்சை ராகுல் தவறிவிட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது எனலாம். 387 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை இங்கிலாந்து பதிவு செய்ததற்கு ராகுல் செய்த தவறவிட்ட வாய்ப்புதான் முக்கிய காரணம்.

முதல் நாளில் புரூக் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா, நேற்று ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ஜோ ரூட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பும்ரா பந்தில் ஜோ ரூட் கிளீன் போல்டான காட்சி

பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன. ஸ்டோக்ஸ் பவுண்டரி அடிப்பார் என்று தெரிந்தும் ஷார்ட் & வைடாக முந்தைய பந்தை வீசி செட் செய்த பும்ரா, அடுத்த பந்தை அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து உள்ளே கொண்டு வந்து இங்கிலாந்து கேப்டனின் ஆஃப் ஸ்டம்ப் தலையை பதம்பார்த்தார்.

அடுத்த ஓவரில் சதமடித்து பெரிய இன்னிங்ஸ் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த ரூட்டின் மிடில் ஸ்டம்ப்பை தகர்த்தார். அடுத்த பந்திலேயே வோக்ஸ் விக்கெட்டையும் காவு வாங்கினார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா lord's honours board இல் தன் பெயரை பதிவுசெய்தார்.

அயல் மண்ணில் அதிகமுறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகள் (Five wicket haul) கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்த கபில்தேவை(12) பும்ரா முந்தினார். பும்ரா இதுவரை 13 முறை வெளிநாட்டு மண்ணில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா போட்டுக் கொடுத்த அடித்தளத்தை பிற வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ஜோ ரூட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன

கருண் நாயர் - ராகுல் அமைத்துக் கொடுத்த நல்ல 'ஓப்பனிங்'

முதல் நாள் போலவே ஆகாஷ் தீப்பின் லைன் & லென்த் நேற்றும் சரியாக இல்லை. சிராஜ் ஒருபக்கம் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் அவருக்கு நேற்றும் அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். கடைசியாக ஜேமி ஸ்மித்–கார்ஸ் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியது ஆறுதலாக அமைந்தது.

இந்திய அணி இங்கிலாந்து இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 5 பந்துகளை பயன்படுத்தியது. Bazball யுகத்தில் Dukes பந்தின் தரம் குறித்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், புதிய பந்துக்காக அம்பயர்களிடம் கேப்டன் கில் போராடியது கவனம் பெற்றுள்ளது.

10 ஓவர்களில் பஞ்சு போல மாறிவிடும் Dukes பந்துகளில் Swing & Seam செய்து விக்கெட் வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. நாசர் ஹுசைன், ஹார்மிசன் போன்றவர்கள் அடிக்கடி பந்தை மாற்றும் இந்திய அணியின் அணுகுமுறையை விமர்சித்த நிலையில், இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட், Dukes பந்துகளின் தரம் குறித்து வெளிப்படையாக விமர்சித்திருப்பது பாராட்டுக்குரியது.

கருண் நாயர், தனது மறுவருகையில் நம்பிக்கை அளிக்கும்விதமாக விளையாடினாலும் பெரிய இன்னிங்ஸ் எதையும் பதிவுசெய்யவில்லை. ஆஃப் ஸ்டம்ப் லைனில் வெளியே செல்லும் பந்துகளுக்கு அவருக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் வெளிப்பட்டது.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ஜோ ரூட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ளும் கருண் நாயர்

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்த கருண், பிரமாதமான டைமிங்குடன் (Timing) விளையாடி தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினார். அலாதியான கால்பாடம் (Footwork) இல்லையென்ற போதும், எடையை முன்னும் பின்னும் இலகுவாக மடைமாற்றி சில அழகான டிரைவ்களை கவர், ஸ்கொயர் திசைகளில் அடித்தார்.

கர்நாடக மண்ணின் மைந்தர்களான ராகுல், கருண் இருவரின் நேர்த்தியான ஆட்டமும் அழகிய லார்ட்ஸ் மைதானத்தில் கண்களுக்கு விருந்தளித்தது. முதலிரு டெஸ்ட்களை போலவே நல்லபடியாக செட் ஆனபிறகு, விக்கெட்டை தாரைவார்த்தது அவருக்கு நிச்சயம் வருத்தம் ஏற்படுத்திருக்கும்.

சாதனை படைத்த ரூட்

கருண் நாயர் கேட்ச்சின் மூலம், டெஸ்டில் அதிக கேட்ச்கள் பிடித்தவர் (210) என்ற சாதனையை ரூட் படைத்தார். உலகின் தலைசிறந்த ஸ்லிப் பீல்டர்கள் அனைவரும் Ball sense கொண்டவர்களாக இருப்பார்கள்.

கேட்ச்சிங்கின் போது மட்டுமில்லாமல் அவர்களுடைய பேட்டிங்கிலும் அந்த ball sense எதிரொலிக்கும். மார்க் வாஹ், டிராவிட், ஜெயவர்த்தனே என நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியினர் தொடர்ச்சியாக ஸ்லிப் பிராந்தியத்தில் கேட்ச்களை கோட்டைவிடும் நிலையில், எப்படி ஸ்லிப்பில் செயல்பட வேண்டுமென ரூட் பாடமெடுத்தது போல அந்தக் கேட்ச் அமைந்தது. ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியுடன் திரும்பி வந்து, முக்கிய விக்கெட்டான கருண் நாயர் விக்கெட்டை எடுத்துள்ளது இங்கிலாந்துக்கு சாதகமான விஷயம்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ஜோ ரூட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காத வோக்ஸ், தன்னுடைய டிரேட் மார்க் wobble seam பந்தின் மூலம் கில் விக்கெட்டை கைப்பற்றி, கடைசி நேரத்தில் ஆட்டத்தை இங்கிலாந்தின் பக்கம் திருப்பியுள்ளார்.

உள்ளே வரும் பந்துகளுக்கு கவனத்தை குவித்த கில், பிட்ச் ஆகி எந்தப் பக்கம் செல்லும் என்று பந்துவீச்சாளருக்கு கூட தெரியாத, wobble seam பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் பேட்டிங் சராசரி அடிவாங்கியதில் wobble seam பாணி பந்துவீச்சுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இந்தியாவின் சிராஜ் இதே பாணியில் பந்துவீசியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததற்கு ஆடுகளத்தின் மெதுவான தன்மையும் ஒரு காரணம். மெதுவான வேகம் கொண்ட மைதானத்தில் வோக்ஸ் போல வேகத்தை குறைத்து வீசுவதும் பலனளிக்கும்.

இந்த தொடரின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ராகுல்தான். கில் அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியாக ராகுலின் பேட்டிங் உச்சத்தில் இருக்கிறது.

கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ராகுல் ரோஹித்துடன் சேர்ந்து பிரமாதமான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்ததை மறக்க முடியாது. 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசப்படும் பந்துகளையும் முன்னங்காலுக்கு சென்று ராகுல் நேர்த்தியாக தற்காப்பு ஆட்டம் விளையாடுகிறார்.

இந்திய அணி கில் விக்கெட்டை விரைவாக இழந்த நிலையில், இன்று பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உள்ளது.

முதல் நாளில் விரலில் காயமடைந்த பந்த், கடுமையான சிரமத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். இந்திய அணி 242 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ஜோ ரூட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும்.

விரலில் காயமடைந்துள்ள பந்த்துக்கு சவால் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அணி ஆர்ச்சரை கொண்டு வந்து தாக்குதல் பாணி ஆட்டம் ஆடாதது ஏன் என புரியவில்லை.

பந்துவீச்சில் 50-60 ரன்களை கூடுதலாக இந்தியா விட்டுக்கொடுத்த நிலையில், மூன்றாம் நாள் முழுவதும் பேட் செய்து ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. முதல் நாளில் இரு அணிகளுக்கும் சம பலத்தில் முடிந்த ஆட்டம், இரண்டாம் நாளில் இங்கிலாந்தின் கைகளுக்கு சென்றுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyexdpn0jvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கோலி'யாக மாறிய கில்: தனி நபர் சாதனைக்கு முன்னுரிமை தந்ததால் பெரும் விலை கொடுத்த இந்தியா

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள் ஆட்டம், லார்ட்ஸ் மைதானம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரிஷப் பந்த் ரன் அவுட்டான காட்சி

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார். எஸ்

  • பிபிசி தமிழுக்காக

  • 13 ஜூலை 2025, 02:17 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

லார்ட்ஸ் டெஸ்டில் இரு அணிகளும் மாறி மாறி உள்ளே வெளியே ஆட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு செசனில் இங்கிலாந்தின் கை ஓங்கினால் அடுத்த செசனில் இந்தியா முன்னுக்கு வருகிறது.

சம பலத்துக்கு சான்று கூறும்விதமாக இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக (387) முடிந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8 முறை இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக முடிந்துள்ளன.

8–ல் 1 முறை மட்டுமே கடைசியாக பேட்டிங் செய்த அணி வென்றிருக்கிறது என்பது இந்தியாவுக்கு பாதகமான ஓர் உபரி தகவல்!

அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் - பந்த்

நீரும் நெருப்பும் ஒன்றாக சேர்ந்து பேட்டிங் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கேஎல் ராகுல்–பந்த் இருவரின் பார்ட்னர்ஷிப். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் பந்த்தின் காயமடைந்த விரலை குறிவைத்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வியூகம் வகுத்தார்.

பந்த்திற்கு எதிராக வழக்கத்துக்கு மாறாக பீல்டர்களை வளையத்துக்குள் நிற்கவைத்து அவர் தாக்குதல் தொடுத்தார். ஆர்ச்சர் வீசிய நாளின் முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகள் விளாசினாலும், பிறகு சூழலை புரிந்துகொண்டு முதல் சில ஓவர்களுக்கு பந்த் பொறுமையை கடைபிடித்தார்.

ஆர்ச்சரின் பந்துவீச்சில் மிகச் சொற்பமான பந்துகளையே பந்த் எதிர்கொண்டார். காயமடைந்த சக வீரருக்காக ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுல் சந்திக்க துணிந்தார்.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள் ஆட்டம், லார்ட்ஸ் மைதானம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரிஷப் பந்த்

முதல் நாள் ஆட்டத்தில் பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட்டுக்கு போப் கை கொடுத்தது நினைவுக்கு வருகிறது. கார்ஸை கொண்டு பந்த் மீது பவுன்சர் தாக்குதல் நடத்தினார் ஸ்டோக்ஸ். அந்த பந்துகளை எதிர்கொள்ளும் போது பந்த் வலியால் அவதிப்பட்டதை பார்க்க முடிந்தது. ஆனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகம் ஒருகட்டத்தில் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை.

ஒருபக்கம் பந்த் தன் பாணியில் ஆவேசமாக பவுண்டரியும் சிக்ஸரும் பறக்கவிடும் போது, மறுபுறம் ராகுல் தன் கிளாஸ் என்னவென்பதை காட்டினார்.

இருவருடைய ஆட்டம் முழுவதும் நேரெதிரான டெக்னிக் கொண்டதாக இருந்தது. பந்த், வலியை பொருட்படுத்தாமல் முன்னும் பின்னும் நகர்ந்து பந்துவீச்சாளர்களின் லெங்த்தை குலைத்து ரன் குவித்தார்.

ராகுல் பந்தை நேரம் கொடுத்து உள்ளே வரவழைத்து கடைசி நொடியில் விளையாடி ரன் சேர்த்தார். புல் (pull) ஷாட் விளையாடும் முறையிலும் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. பந்த் தன் முழு பலத்தையும் கொடுத்து பவுன்சர் பந்துகளை பறக்கவிட்ட போது, ராகுல் எவ்வித சிரமமும் இன்றி மேலிருந்து கீழாக சாமர்த்தியமாக (Top to bottom) பந்தை புல் ஷாட் அடித்தார். இந்த தொடரில் டெக்னிக்கலாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ராகுல்தான் என்று சந்தேகமே இல்லாமல் சொல்ல முடியும்.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள் ஆட்டம், லார்ட்ஸ் மைதானம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கே.எல். ராகுல்

இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்த பென் ஸ்டோக்ஸ்

உணவு இடைவேளைக்கு சில பந்துகள் மட்டும் இருந்த நிலையில் 248 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டும் இழந்து இந்தியா வலுவான நிலையில் இருந்தது. அப்போது ராகுல் 98 ரன்களுடன் எதிர்முனையில் (Non striker end) இருந்தார்.

Lunch–க்கு முன்பாக ராகுலுக்கு சதமடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பஷீர் பந்தில் இல்லாத ரன்னுக்கு அவசரப்பட்டு ஓடி, ஸ்டோக்ஸ் கையால் ரன் அவுட்டானார் பந்த். சதத்தை எட்டுவது என்பது ஒரு வீரருக்கு முக்கியமான ஒன்றுதான். நீண்ட நேர உழைப்பின் ஊதியம் சதம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அணியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனி நபர் சாதனைக்கு அவர்கள் முன்னுரிமை அளித்ததால் இந்தியா பெரும் விலை கொடுக்க நேரிட்டது. மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நன்றாக செட் ஆகியிருந்த பந்த் - ராகுல் ஜோடி பிரிய நேரிட்டது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள் ஆட்டம், லார்ட்ஸ் மைதானம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரிஷப் பந்த் ரன் அவுட்டான காட்சி

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரூட் 99 ரன்களுடன் இருக்கும் போதும் 1 ரன்னுக்கு அவசரப்படவில்லை என்பது இரு அணியினரின் முன்னுரிமைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது.

ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம்.

இரைக்காக சிறுத்தை பதுங்குவதை போல காத்திருந்த அவர், பந்த் ஓடிய அடுத்த நொடியே விக்கெட் என்று மனதில் குறித்துக் கொண்டார் என்பது போல இருந்தது அவருடைய வேகமான த்ரோவும் அதன் பிறகான அவருடைய கொண்டாட்டமும். முழு உடற்தகுதியில் இருக்கிறாரா என்பது விவாதமான நிலையில், 100 பந்துகளுக்கு மேல் பேட்டிங்கின் போது எதிர்கொண்டு, முக்கியமான ரன் அவுட் ஒன்றை செய்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, கூடவே கேப்டன்சியும் செய்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்!

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள் ஆட்டம், லார்ட்ஸ் மைதானம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம்

கை கொடுத்த ஜடேஜா

சதமடித்து அடுத்த சில பந்துகளில் கவனத்தை தொலைத்து விக்கெட்டை ராகுல் பறிகொடுத்தார். கேஎல் ராகுலுக்கு நிகரான திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் இன்று கிரிக்கெட் உலகில் மிகவும் குறைவு. ஆனாலும் முக்கியமான கட்டத்தில் சோம்பலாக விளையாடி விக்கெட்டை இழக்கும் பலவீனம் இருப்பதால்தான் அவருடைய சராசரி 40–க்கும் குறைவாக இருக்கிறது. ஒரு உச்சபட்ச பேட்ஸ்மேன் சதத்தை எட்டிய பிறகு அவ்வளவு எளிதாக விக்கெட்டை பறிகொடுக்கமாட்டார்.

ராகுல் விக்கெட்டுக்கு பிறகு தடுமாறிய இந்திய அணியை ஜடேஜா–நிதிஷ் ரெட்டி இணை தூக்கி நிறுத்தியது. ஒரு டெஸ்ட் போட்டியின் தலையெழுத்தை மூன்றாம் நாள் ஆட்டம்தான் தீர்மானிக்கும் என்பார்கள்.

இருவரில் ஒருவர் விரைவில் ஆட்டம் இழந்திருந்தாலும் இந்தியாவுக்கு பின்னடைவாக முடிந்திருக்கும். ரன்னுக்கு அழைக்கும் போது இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாதது துலக்கமாக வெளிப்பட்டது.

2, 3 முறை ரன் அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பினார்கள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் அசத்திய நிதிஷ் ரெட்டி, சரியான கால்பாடம் (Footwork) இல்லாவிட்டாலும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து விளையாடினார். ஸ்டோக்ஸ் வீசிய ஒரு அட்டகாசமான பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள் ஆட்டம், லார்ட்ஸ் மைதானம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிதிஷ் ரெட்டி

ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம். ஆனால், ஏனோ இந்த டெஸ்டில் இந்தியா வென்றாலும் ஜடேஜாவின் பங்களிப்பை பற்றி யாரும் பேசப்போவதில்லை. ஸ்டோக்ஸ் எந்தளவுக்கு தன் அணிக்கு பங்களிக்கிறாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவுக்கு ஜடேஜா உதவுகிறார். ஆனால் அவர் பெயர் என்றும் தலைப்பு செய்தியாக மாறுவதில்லை.

ஜடேஜா–சுந்தர் பார்ட்னர்ஷிப்பின் போது, எல்லாருடைய கண்களும் சுந்தர் மீதுதான் இருந்தன. ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான டெக்னிக்கை கொண்டவர் சுந்தர். இந்திய அணி அவருக்கு இன்னும் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.

அதேநேரம், ஜடேஜாவின் பேட்டிங் சோடை போனது என்று சொல்லிவிட முடியாது. வேகப்பந்து வீச்சுக்கு பின்னால் செல்ல வேண்டும்; சுழற்பந்து வீச்சுக்கு முன்னால் நகர வேண்டும் என்பது பேட்டிங்கின் அடிப்படை என்பார்கள். அதை கனக்கச்சிதமாக நேற்று ஜடேஜா செய்ததை பார்க்க முடிந்தது. இப்படி சரியாக செய்வதிலேயே ஒரு மெக்கானிக்கல் தன்மை வந்து, அவருடைய பேட்டிங் வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்றுகூட சில சமயம் தோன்றுகிறது.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள் ஆட்டம், லார்ட்ஸ் மைதானம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம்

சுவாரசியம் இழந்த ஆட்டம்

கடைசிக் கட்டத்தில் சுந்தர் ஏன் அடித்தாடாமல் விட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒன்று ரிஸ்க் எடுத்து அடித்தாடி இருக்கலாம். இல்லை, tail ender–களை நம்பி ஸ்டிரைக் கொடுத்து கிடைக்கும் ஒன்றிரண்டு ரன்களை சேர்த்து அணி லீட் எடுக்க உதவியிருக்கலாம்.

கடைசி கட்டத்தில் தெளிவான திட்டத்துடன் அவர் விளையாடியது போல தெரியவில்லை. முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உயிரைக் கொடுத்து அதிவேகத்தில் பந்துவீசிய போதும் அதிர்ஷ்டம் கைகொடுக்காததால் ஆர்ச்சரால் நேற்றைய தினம் 1 விக்கெட்தான் எடுக்க முடிந்தது. இந்த இன்னிங்சில் ஒட்டுமொத்தத்தில் 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்திய அணியின் முதல் விக்கெட்டையும் (ஜெய்ஸ்வால்) கடைசி விக்கெட்டையும் (வாஷிங்டன் சுந்தர்) ஆர்ச்சர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்து வீச்சாளர் பஷீர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியதால் ரூட் சுழற்பந்து வீசவேண்டிய நிலை ஏற்பட்டது. காயம் இடது கையில் (Non bowling arm) என்பதால் நான்காவது இன்னிங்சில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம்.

நாளின் இறுதியில் இங்கிலாந்தை 2-3 ஓவர்கள் பேட்டிங் செய்ய வைத்துவிட வேண்டும் என்ற இந்தியாவின் வியூகம் பலிக்கவில்லை. பும்ராவின் முதல் ஓவரில் கிராலி தன்னுடைய முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி நேரத்தை இழுத்தடித்தார்.

பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராலி செயல்பட்டது போன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜாக் கிராலியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார்.

இந்த சேட்டைகள் எல்லாம் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான் என்ற போதும் இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்திய விதம், கோலியை நினைவூட்டியது. இந்திய அணியில் கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எதிரணியினரிடம் ஆக்ரோஷம் காட்டுவதில் விராட் கோலி பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள் ஆட்டம், லார்ட்ஸ் மைதானம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்தினார்.

மைதானத்தில் கில் - கிராலி மோதிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிராமா மூன்றாவது நாளின் இறுதியில் இந்த டெஸ்டுக்கு ஒரு விறுவிறுப்பை கொண்டுவந்துள்ளது.

இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் சமநிலை பெற்றிருப்பதால் இன்றைய நான்காவது நாள் ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சிறப்பாக செயல்படும் அணியின் கையே இந்த டெஸ்டில் ஓங்கும் என்று கூறலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39z3r31e3lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேப்டன்சியில் சறுக்கிய கில்: கடினமான களத்தில் கடைசி நாளில் இந்தியா 135 ரன் எடுக்க முடியுமா?

இந்தியா - இங்கிலாந்து, கில், லோகேஷ் ராகுல், பந்த், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் கில்

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார். எஸ்

    கிரிக்கெட் விமர்சகர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா - இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 13-ஆம் தேதி அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நான்காம் நாள் ஆட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

சம பலத்தில் உள்ள இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டி கொடுக்கும் பரபரப்பை அடித்துக்கொள்ள எதுவுமில்லை. அதற்கு இந்த டெஸ்ட் ஒரு உதாரணம். இரு அணிகளும் சம பலத்தில் 4 நாள்களாக மோதிக்கொள்ளும் ஆட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த டெஸ்ட் நிச்சயம் டிரா ஆகாது என்று நான்காம் நாள் தொடங்கியவுடன் தெரிந்துவிட்டது.

நிதானம் தேவை

இந்த தொடர் முழுக்க கடும் உழைப்பை கொடுத்தும் விக்கெட்டுகளை அள்ள முடியாமல் தவித்த சிராஜ் கொத்தாக மூன்று தலைகளை வீழ்த்தினார்.

ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் (Un–even bounce) இருந்ததால் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் எந்த வேகத்தில் (Tempo) ஆடுவது என தெரியாமல் குழம்பிப் போயினர். பும்ராவின் நல்ல லெங்க்த் பந்துகளும் தாறுமாறாக எகிறி ஜாக் கிராலியின் கைகளை பதம் பார்த்தன. நேற்று நேரத்தை கடத்துவதற்காக அடிபட்டது போல நடித்தவர், இன்று உண்மையிலேயே வலியில் தவிப்பதை பார்க்க இந்திய வீரர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும்.

பர்சன்டேஜ் கிரிக்கெட் விளையாடினால் தப்ப முடியாது என உணர்ந்துகொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், கன்னாபின்னாவென்று என்னென்னமோ முயற்சிகள் எடுத்து பரிதாபமாக நடையைக்கட்டினர்.

இந்தியா - இங்கிலாந்து, கில், லோகேஷ் ராகுல், பந்த், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜாக் கிராலி

சிராஜ் பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்து தொடக்க வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். பும்ராவின் நிழலில் இருப்பதாலேயே சிராஜுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை.

பஸ்பால் பாணியில் ஒரு ஷாட் அடித்தவுடன் சிராஜ் ஷார்ட் ஆஃப் த லெங்த்தில் வீசிய அடுத்த பந்தை சரியாக கணிக்காமல் விளையாடி டக்கெட் பெவிலியன் திரும்பினார்.

அப்போது இருவருக்குமிடையே உரசல் ஏற்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. டக்கெட்தான் சிராஜை நோக்கி முட்டும் விதமாக நடந்தார் என்பது பிறகு ரிப்ளேவில் தெரிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கடினமான வேலையை செய்வதால், சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். ஆனால், அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தி ஆற்றலையும் கவனத்தையும் இழந்துவிடக் கூடாது. பும்ராவிடம் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதலில் நிதானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியா - இங்கிலாந்து, கில், லோகேஷ் ராகுல், பந்த், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் சிராஜ்

பொறுப்பற்ற ப்ரூக்கின் ஆட்டம்

ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகள் சரியும் போது ரூட் மட்டும்தான் பொறுப்பை உணர்ந்து விளையாடினார். இத்தனை சொதப்பல்களுக்கும் பிறகும் கிராலிக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் தொடர் வாய்ப்புகள் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது. முதல் இன்னிங்ஸ் போலவே, இந்த முறையும் இந்திய பந்துவீச்சு படையின் இளம் கன்றான நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் பொறுப்பற்ற ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார் கிராலி.

நேற்றைய நாளின் முக்கியமான விக்கெட் என ஆலி போப்பின் விக்கெட்டை சொல்லலாம். ரூட், புரூக் போல அபாயகரமான பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் கடினமான சூழல்களில் நின்று விளையாடும் திறன்கொண்டவர் போப். ஏற்கெனவே ஒரு ரெவியூவை கோட்டைவிட்டதால் முதலில் தயக்கம் காட்டிய கில் சிராஜின் ஆக்ரோஷத்துக்கு மதிப்பளித்து டிஆர்எஸ் எடுத்தார்.

3 விக்கெட்டுகள் காலியான நிலையில் களம்புகுந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் புரூக், நெருப்பை நெருப்பால் அணைக்கும் விதமாக பாஸ்பால் (Bazball) பாணியை கையில் எடுத்தார். உடனடியாக கைமேல் பலன் கிடைத்தாலும், பொறுப்பும் சாமர்த்தியமும் இல்லாததால் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.

இந்தியா - இங்கிலாந்து, கில், லோகேஷ் ராகுல், பந்த், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பொறுப்பும் சாமர்த்தியமும் இல்லாததால் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார் ஹாரி ப்ரூக்

ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடுவதற்கும் கண்ணை மூடிக்கொண்டு சுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் தெரிந்துகொள்ள வேண்டும்.

இங்குதான் ரிஷப் பந்த் தனித்து நிற்கிறார். அவரும் ரிஸ்க்கான பேட்டிங்கை தான் கையில் எடுக்கிறார். ஆனால், அதிலும் நுட்பமாக சில தற்காப்பு திட்டங்களை புகுத்தி, ஆபத்தில்லாமல் ரன் சேர்க்கும் வித்தையை தெரிந்துவைத்துள்ளார். ஆனால் புரூக் உள்ளிட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் அந்த தெளிவில்லை. வர்ணனையில் சங்கக்காரா விமர்சித்தது போல, இது Bazball ஆட்டமல்ல அல்ல; பொறுப்பற்ற ஆட்டம்!

இந்தியாவின் பக்கம் ஆட்டத்தைத் திருப்பிய சுந்தர்

இந்த டெஸ்டில் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தி வந்த கில், நேற்று ஓரிடத்தில் சொதப்பினார். ரூட் களத்துக்கு வந்தவுடன், அவர் எதிர்கொள்ள விரும்பாத பும்ராவை உடனடியாக கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கிறேன் பேர்வழி என்று ரூட்டை செட்டிலாக வைத்துவிட்டார். இதுபோன்றதொரு கடினமான ஆடுகளத்தில் ரூட் எடுத்த 40 ரன்கள் முக்கியமானது.

சிராஜ் பந்தில் அம்பயர் பால் ரீஃபெலின் LBW முடிவுகள் சில இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த தொடர் முழுக்கவே DRS முடிவுகள் விவாதப் பொருளாக மாறிவருகின்றன. ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ரூட், ஜேமி ஸ்மித் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கையை ஓங்கச் செய்தார் சுந்தர்.

ரூட் தேவையில்லாமல் ஸ்வீப் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் சுந்தரின் அட்டகாசமான சுழலுக்கு ஸ்மித் இரையானார். வாஷிங்டன் சுந்தர் விரல்களுக்கு அதிக வலுகொடுத்து சுழற்றுவதால் பந்து காற்றில் அலைபாய்ந்தது (Drift). அப்போது லைனை சரியாக கணிக்க முடியாமல் ஸ்டம்புகளை ஸ்மித் பறிகொடுத்தார். கடைசிக்கட்ட விக்கெட்டுகளை பும்ராவும் சுந்தரும் வாரிச் சுருட்ட இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - இங்கிலாந்து, கில், லோகேஷ் ராகுல், பந்த், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கேப்டன் கில்லுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஏமாற்றம் அளித்த கில்

ஆடுகளம் தாறுமாறாக இருப்பதால், இந்திய தொடக்க வீரர்கள் பொறுப்பாக நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்று விளையாடி நடையைக்கட்டினர்.

வழக்கமாக ஷாட் பிட்ச் பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு விளையாடும் ஜெய்ஸ்வால், ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் இலக்கற்று சுற்றி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

ராகுல்– கருண் இணை, நம்பிக்கை அளிக்கும் விதமாக சிறிது நேரம் விளையாடியது. ஆனால் நன்றாக தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த கருண், கார்ஸ் வீசிய பந்து உள்ளே வருகிறதா வெளியே போகிறதா என்ற குழப்பத்தில் பேட்டை தூக்கி எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் இடம் கிடைத்தும் கருண் தொடர்ந்து வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டுக்கான மனஉறுதி அவருக்கு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்து உச்சக்கட்ட ஃபார்மில் உள்ள கில், எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்த விதம் அதிர்ச்சியை அளிக்கிறது. கோலியை களத்தில் போலச் செய்வது வேறு கோலி போல வெற்றிகரமாக இலக்கை விரட்டுவது வேறு என்பதை கில் உணர்ந்திருப்பார்.

இந்தியா - இங்கிலாந்து, கில், லோகேஷ் ராகுல், பந்த், லார்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கில் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்தார்.

கடைசி நாளில் இந்தியா 135 ரன் எடுக்க முடியுமா?

தொடக்கத்தில் இந்திய அணி பவுண்டரிகளாக ரன் குவித்த போதும், ஸ்டோக்ஸ் மனம் தளராமல் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்து விக்கெட்டுகள் எடுக்க பார்த்தார். ஒருகட்டத்தில் பிறரை நம்பி பிரயோஜனம் இல்லை என அவரே பந்தை கையிலெடுத்தார். நான்காம் நாளின் கடைசி ஓவரில் நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப்பை அவர் ஆட்டமிழக்க செய்த விதம் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கும்.

கார்ஸ் நேற்றைய நாளில் உறுதியுடன் பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது. ஆட்டம் கையை விட்டு போய்விட கூடாது என்று நல்ல லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி கில்லின் கால்காப்பை தாக்கி விக்கெட் எடுத்தார். ஆபத்பாந்தவன் ராகுலின் சலனமில்லாத பேட்டிங் மட்டும்தான் இந்திய அணிக்கு ஒரே ஆறுதல். வெற்றி இன்னும் 135 ரன்கள் தேவை என்கிற நிலையில், ராகுலையே இந்தியா மலை போல நம்பியிருக்கிறது.

கடைசி நாளில் ராகுல், பந்த் இருவரும் மூன்றாம் நாளில் கொடுத்தது போல, ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பும்.

ஆனால், அவ்வளவு எளிதாக ஸ்டோக்ஸ் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்பதை இந்திய அணியினர் உணர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டும். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்தின் கை சற்றே ஓங்கியிருந்தாலும், குறைவான இலக்கு என்பதால் இந்தியாவுக்கும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. இப்படியாக லார்ட்ஸ் டெஸ்ட் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crenpdg32leo

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பாரத் டீம்!

இங்லண்ட் வொண் பை 22 ரண்ஸ்!😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ENG 387 & 192

IND 387 & 170

England won by 22 runs

PLAYER OF THE MATCH
Ben Stokes

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராடிய ஜடேஜா: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டோக்ஸின் அஸ்திரங்கள் எவை?

லார்ட்ஸ் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார். எஸ்

  • கிரிக்கெட் விமர்சகர்

  • 4 நிமிடங்களுக்கு முன்னர்

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றான இதில் கடைசி நாளில் என்ன நடந்தது?

கடைசி நாளில் லார்ட்ஸ் மைதானத்தில் இலக்கை விரட்டுவது என்பது பேட்டர்களுக்கு எப்போதுமே கொடுங்கனவு. தொடரில் 2–1 என்று முன்னிலை பெறுவதற்கு இந்தியாவுக்கு 135 ரன்கள் தேவை, இங்கிலாந்துக்கு 6 விக்கெட்கள் தேவை என்கிற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

நேற்று ஓவரின் மீதமுள்ள இரண்டு பந்துகளை வீசி முடிந்த ஸ்டோக்ஸ், பிறகு வோக்ஸ் கையில் பந்தைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், யாரையும் நம்பத் தயாராக இல்லாத ஸ்டோக்ஸ், ஆர்ச்சருடன் சேர்ந்து ராகுல் – பந்த் இணைக்கு எதிராக மூர்க்கத்துடன் பந்துவீசினார். 4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், தன்னுடைய மிகச் சிறந்த பந்துவீச்சை இன்று வெளிக்காட்டினார்.

மணிக்கு 89.6 மைல் வேகத்தில் அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து ஆர்ச்சர் வீசிய பந்தில் பந்த் போல்டானார். உள்ளே வரும் என்று நம்பி பந்த் தவறான லைனில் விளையாடி பரிதாபமாக ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.

உண்மையில், அது ஒரு அட்டகாசமான லெங்ந்தில் வீசப்பட்ட பந்து. முன்னே வருவதற்கும் வழியில்லை; பின்னங்காலுக்கு நகர்ந்து ஆடுவதற்கும் வழியில்லை. இரண்டும் கெட்டான் லெங்ந்த் (Corridor of uncertainty) என்பார்களே அப்படி ஒரு லைன் அண்ட் லெங்த்.

பந்த் நடையை கட்டினாலும், கேஎல் ராகுல் இன்னும் இருக்கிறாரே என்கிற ஆசுவாசம் சில நிமிடங்களுக்கு கூட நீடிக்கவில்லை.

லார்ட்ஸ் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்தடுத்து விக்கெட்

இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் நம்பமுடியாத ஒரு பந்தை வீசி, ராகுலின் கால்காப்பை தாக்கி, LBW ஆக்கினார். கற்பனைக்கும் எட்டாத பந்து என்றே அதை சொல்ல வேண்டும். நான்காவது, ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பயணிக்க தொடங்கிய பந்து, கடைசி நொடியில் அசாதாரணமாக உள்ளே திரும்பும் என ராகுல் நிச்சயம் நம்பியிருக்கமாட்டார். முதல் இன்னிங்சை போலவே பந்த் முதலில் பெவிலியனுக்கு திரும்ப அவருக்கு துணையாக ராகுலும் பின்னே சென்றார்.

லார்ட்ஸ் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைகொடுத்த பும்ரா

கடந்த இன்னிங்சில் நன்றாக தற்காப்பு ஆடியதால், நிதிஷுக்கு முன்பாக சுந்தர் அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆனால், ஆர்ச்சர் தன் சொந்த பந்துவீச்சில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட்டாக மாற்றி சுந்தரை உடனே வெளியேற்றினார். .

இந்தநிலையில் ஜடேஜாவும் நிதிஷும் ஆர்ச்சர்–ஸ்டோக்ஸ் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு பர்சன்டேஜ் கிரிக்கெட் விளையாடினர்.

முதல் நாளில் ரன் ஓடமுடியாமல் சிரமப்பட்ட ஸ்டோக்ஸ், தொடர்ச்சியாக 1 மணி நேரத்துக்கு மேல் பந்துவீசி தன் உறுதியையும் கிரிக்கெட் மீதான காதலையும் வெளிப்படுத்தினார்.

ஜடேஜாவும் நிதிஷும் ஓவர் பின் ஓவராக தாக்குப்பிடித்து விளையாடியதை பொறுத்துக்கொள்ள முடியாத இங்கிலாந்து அணியினர், அவர்களை சூழ்ந்து கொண்டு வசைபாடத் தொடங்கினர்.

லார்ட்ஸ் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மதிய உணவு இடைவேளைக்கு 10 நிமிடங்களுக்கு குறைவாகவே இருந்தபோது, அதுவரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிதிஷ் ரெட்டி, வோக்ஸ் பந்தில் அவுட்சைட் எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இந்த தொடரில் உணவு இடைவேளைக்கு அரை மணி நேரம் முன்பாக இந்திய அணி இதுவரை 10 முறை விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய அணி எளிதில் இங்கிலாந்திடம் சரணடையும் என்றே கருதப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜடேஜாவுக்கு தோள் கொடுத்தார் பும்ரா. அவ்வப்போது கடைசிக்கட்ட பேட்டருக்கே உரித்தான சில ஷாட்களை முயற்சித்தாலும், முழு கவனத்தையும் கொடுத்து விளையாடினார். கில் உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், பும்ராவின் போராட்டம் சற்று ஆறுதலாக அமைந்தது. நேரம் செல்ல செல்ல ரன் சிறுக சிறுக சேர்ந்துகொண்டே வந்தது.

நீண்ட நேரமாக தடுப்பாட்டமாடிய ஜடேஜா, வோக்ஸ் பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்சர் விளாசி, ஆட்டத்துக்கு சுறுசுறுப்பை கொண்டுவந்தார்.

பும்ராவை எப்படியாவது விக்கெட் எடுத்துவிட ஸ்டோக்ஸ் தன்னால் முடிந்த அத்தனை பொறிகளையும் வைத்து பார்த்தார். பும்ரா அவசரப்படும் போதெல்லாம் அருகில் வந்து அறிவுரை சொல்லி ஜடேஜா வழிநடத்தினார். பும்ராவை தூக்குவதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்த ஸ்டோக்ஸ், பீல்டர்களை முழுவதுமாக பரப்பி வைத்து, ஜடேஜாவுக்கு எதிராக களத்தடுப்பை அமைத்தார். ஒன்று ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்டுக்கு செல்ல வேண்டும். இல்லை, ஒற்றை ரன் ஓடி பும்ராவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அது இங்கிலாந்துக்கு லாபம் என்பது ஸ்டோக்ஸ் கணக்கு.

லார்ட்ஸ் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசியில் விருந்து

53 பந்துகள் தாக்குப்பிடித்த பும்ரா, ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை ஒற்றைக் காலைத் தூக்கி pull ஷாட் அடிக்கப் போய் உள்வட்டத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவருடைய விக்கெட்டுடன் இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. தவறான ஷாட் விளையாடி பும்ரா பெவிலியன் திரும்பும் போது, ஜடேஜாவின் முகத்தில் ஆயிரம் சோக ரேகைகள்.

பந்து தேய்ந்து பஞ்சு போல மாறியிருந்ததால் பெரிய ஷாட் அடிக்க ஜடேஜா எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரே காரணம் பென் ஸ்டோக்ஸ்தான். களத்தில் வீரர்கள் சோர்ந்து போகும் போதெல்லாம் நம்பிக்கை வார்த்தைகள் கூறி, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பந்துவீச்சில் அவர் காட்டிய உத்வேகம், பிற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பரவியதை பார்க்க முடிந்தது.

நவீன கிரிக்கெட்டின் இரு உச்சபட்ச ஆல்ரவுண்டர்களான ஸ்டோக்ஸ், ஜடேஜா இருவரின் போராட்டம், பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஸ்டோக்ஸ் பந்தில் ஸ்லிப் தலைகளின் மேல் ஒரு பவுண்டரியை சீவிவிட்டு அரைசதத்தை எட்டினார் ஜடேஜா. 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது, ஆட்டம் முடிந்தது என நினைக்கும் போது, சிராஜ் தன் பங்குக்கு 30 பந்துகள் பிடித்து இங்கிலாந்து அணியினர் வயிற்றில் புளியை கரைத்தார்.

ஜடேஜாவும் சிராஜும் எதிர்கொண்ட ஒவ்வொரு பந்தும் ஒரு ஈவன்டாக மாறி, ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், கார்ஸ் போன்றவர்களின் பந்துவீச்சில் எல்லாம் அவுட்டாகாத சிராஜ், கடைசியில் முழு உடற்தகுதி இல்லாமல் பந்துவீசிய பஷீர் பந்தில் போல்ட் ஆனார்.

ஆட்டமிழந்த பிறகு சிராஜ் சோகமே உருவாக அமர்ந்திருந்ததும் அவருக்கு இங்கிலாந்து வீரர்கள் ஆறுதல் சொன்னதும் 2005 எட்ஜ்பாஸ்டன் டெஸ்டை நினைவூட்டியது.

தோல்வியின் விரக்தியில் இருந்த பிரெட் லீயை ஃபிளின்டாஃப் ஆற்றுப்படுத்தும் காட்சி மனதில் வந்துபோனது.

இந்தியா தோற்றாலும் இந்திய வீரர்கள் காட்டிய போராட்ட குணம், நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. ஆகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடியும் ஜடேஜா வெற்றியுடன் ஆட்டத்தை முடிக்க முடியாதது துரதிர்ஷ்டம்.

முதல் நாளில் இருந்தே சரிக்கு சமமாக சென்று கொண்டிருந்த டெஸ்ட், ஒரு பரபரப்பான முடிவுடன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது.

https://www.bbc.com/tamil/articles/c23g2penpg9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கில் - ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் இருந்த வித்தியாசம் ஆட்டத்தில் எவ்வாறு எதிரொலித்தது?

இந்தியா - இங்கிலாந்து, கில் - ஸ்டோக்ஸ், ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார். எஸ்

  • கிரிக்கெட் விமர்சகர்

  • 15 ஜூலை 2025, 05:22 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சமீபத்தில் இப்படி ஒரு பரபரப்பான டெஸ்ட் மேட்சை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த தொடரின் பாக்ஸ் ஆஃபிஸ் ஆட்டம் என்றால் அது லார்ட்ஸ் டெஸ்ட்தான் என அடித்து சொல்லலாம். வெற்றிக்காக இரு அணிகளும் எந்தவொரு எல்லைக்கும் செல்ல துணிந்தனர். ஸ்டோக்ஸ் ஆக்ரோசத்துடன் அணியை வழிநடத்தி, வீரர்களை 5 நாள் முழுக்க உத்வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். இரு அணியினரின் வசைபாடல்களும் தோளுரசல்களும் கடந்த கால ஆஸ்திரேலிய அணியை நினைவூட்டின.

இந்தியா இலக்கை நெருங்கி கொண்டிருந்த சமயத்தில், ஸ்லிப் திசையில் நின்றுகொண்டு இங்கிலாந்து வீரர்கள் உதித்த வார்த்தைகள் அனலைக் கிளப்பின. இந்த தொடர் இனி எந்த பாதையில் செல்ல போகிறது என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக அந்த வார்த்தை மோதல்கள் அமைந்தன.

கில் - ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் என்ன வித்தியாசம்?

இந்திய அணியின் கேப்டனும் ஆக்ரோசத்தை கையிலெடுத்தது என்பது உண்மைதான். ஆனால். அந்த ஆக்ரோசம் வெற்றுப் பேச்சாக இருந்ததே தவிர, வெற்றியை கொடுக்கவில்லை. இங்கிலாந்து தொடக்க பேட்டர் கிராலி நேரத்தை கடத்தும் விதமாக கையில் அடிபட்டது போல நடித்தது உண்மைதான். ஆனால், கேஎல் ராகுலே ஒத்துக்கொண்ட படி அது காலம்காலமாக கிரிக்கெட்டில் கைகொள்ளும் உத்திகளில் ஒன்றுதான். அதற்காக, கிராலியை முகத்துக்கு நேராக கில் கையை நீட்டி வசைபாடியதை இந்திய வர்ணனையாளர்களே ரசிக்கவில்லை.

அணி தத்தளித்து கொண்டிருக்கும் போது களத்துக்கு வந்த கில், சோம்பலுடன் பேட்டிங் செய்வது போல ஆடி ஆட்டமிழந்த விதம், ஒரு கேப்டனுக்கு அழகல்ல. நான்காம் இடத்தில் விளையாடி, அணியை வழிநடத்துவதாலே தான் கோலியாக மாறிவிட முடியாது என்பதை கில் உணர்ந்துகொண்டு, தனக்கென ஒரு பாணியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இது முழுக்கமுழுக்க பென் ஸ்டோக்ஸின் வெற்றி. ஒரே மூச்சில் 14 ஓவர்களை தொடர்ச்சியாக வீசியது, பந்துவீச்சு மாற்றங்களை உள்ளுணர்வின்படி செய்தது என ஒரு கேப்டனாக தன் 100 சதவீதத்தை களத்தில் கொடுத்தார். குறிப்பாக 4.5 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஆர்ச்சரை சூழலுக்கு ஏற்ப அரவணைத்தும் அதட்டியும் அவருடைய முழுத்திறனை வெளிக்கொணர்ந்த விதம் நம்பமுடியாததாக இருந்தது.

இந்தியா - இங்கிலாந்து, கில் - ஸ்டோக்ஸ், ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் தன் சக்திக்கு மீறி ஸ்டோக்ஸ் பங்களித்தார். இவ்வளவு அழுத்தத்தை தன் உடல் தாங்குமா, அடுத்த டெஸ்டில் விளையாட முடியுமா, தன் எதிர்காலம் என்னவாகும் என எதையும் யோசிக்காமல், கிரிக்கெட்டுக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். ஸ்டோக்ஸ் போன்ற சுயநலமில்லாத வீரர்கள் கிரிக்கெட்டில் மிகவும் அருகிவிட்டனர்.

இந்திய கேப்டன் கில் இந்த அம்சத்தில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டுவிட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் ரூட் வந்தவுடனே பும்ராவை கொண்டு தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும். ஆனால், பும்ராவின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு ஓய்வுகொடுத்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரூட், ஸ்டோக்ஸுடன் சேர்ந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். ரூட் மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து அணி 192 ரன்களை நிச்சயம் எட்டியிருக்காது.

'அடிப்படையான விஷயங்களில் செய்த தவறுகளே காரணம்'

இந்திய அணி இந்த டெஸ்டில் தோற்றதற்கு அடிப்படையான விஷயங்களில் செய்த தவறுகளே காரணம். பந்த் இல்லாத நிலையில் ஜுரெல் விக்கெட் கீப்பிங்கில் பைஸ் வகையில் எக்கச்சக்க ரன்களை கோட்டைவிட்டது பாதகமாக முடிந்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் ராகுல் சதமடிப்பதில் கவனத்தை குவித்து பந்த் ரன் அவுட்டானார்; சதமடித்து நன்றாக செட்டான பின்னர் ராகுல் ஆட்டமிழந்தார். இவை இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தன.

லார்ட்ஸ் மைதானத்தில் 193 ரன்கள் என்பது உண்மையில் எட்டக்கூடிய ஒன்றுதான். டாப் ஆர்டரில் இருவர் அரைசதம் அடித்திருந்தாலே, ஆட்டம் இந்தியாவின் கைகளுக்கு எளிதாக வந்திருக்கும். ஆனால், இந்திய பேட்டர்கள், ஸ்கோர் கார்டு மீதான பதற்றத்தில் தங்கள் இயல்புக்கு மாறாக விளையாடி நடையைக்கட்டினர்.

ஜெய்ஸ்வால் தன் கரியரில் விளையாடிய மிக மோசமான புல் ஷாட் இதுவாகத்தான் இருக்கமுடியும். வழக்கமாக அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பவுன்சர்களை ஒன்று ஸ்லிப் திசையில் சீவிவிடுவார், இல்லை அப்பர் கட் விளையாடுவார். ஆனால், நான்காம் நாளில் உடல் எங்கோ இருக்க பந்தை மடக்கி அடிக்க முயன்று டாப் எட்ஜாகி ஆட்டமிழந்ததை பார்த்தோம்.

இந்தியா - இங்கிலாந்து, கில் - ஸ்டோக்ஸ், ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

'இரண்டு புல் ஷாட்களால் ஆட்டம் பறிபோனது'

இந்த டெஸ்டை இந்தியா இழந்ததற்கு இரண்டு புல் ஷாட்கள் தான் காரணம் என சொல்லலாம். ஒன்று ஜெய்ஸ்வால் விளையாடியது; மற்றொன்று பும்ரா விளையாடியது. பும்ராவை நம்மால் குற்றம்சொல்ல முடியாது. சொல்லப்போனால் பும்ரா, சிராஜ் போன்ற டெயில் எண்டர்களிடம் எப்படி நேர் கோட்டில் விளையாட வேண்டும் என டாப் ஆர்டர் பேட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேசமயம், கில் தலைமையிலான இந்தியா, ஓர் இளம் அணிதான் என்பதை மறந்துவிட கூடாது. கோலி, ரோஹித், அஸ்வின் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், இந்தியா இங்கிலாந்திடம் தாக்குப்பிடிக்காது என்றே பொதுப்பார்வை இருந்தது. ஆனால், முதல் டெஸ்டில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீண்டுவந்து பர்மிங்காம் டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதை குறிப்பிட்டாக வேண்டும்.

அற்புதமாக பாட்னர்ஷிப் கட்டமைத்த ஜடேஜா

ஜடேஜா, இந்த தொடர் முழுக்க தன் பேட்டிங்கின் உச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடுமையாக உழைத்து ஆட்டமிழக்காமல் 61 ரன்களை குவித்து, கடைசி வரை இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியிருந்தால், ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்குதான் கிடைத்திருக்கும்.

ஜடேஜா சேர்த்த ரன்களை விட இன்னிங்சை அவர் கட்டமைத்த விதம் பிரமாதமாக இருந்தது. கடைசிக்கட்ட வீரர்களுடன் விளையாடுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். அவர்களை, ரொம்பவும் நம்பிவிடக் கூடாது. அதே சமயம், அவர்களை புறக்கணித்து விடவும் கூடாது. முதலில், அந்த டெயில் எண்டர் எப்படி விளையாடுகிறார் என்று சோதிப்பதற்காக, ஒன்றிரண்டு பந்துகளை கொடுத்துப் பார்க்க வேண்டும். அவர் எந்த பந்து வீச்சாளரை எளிதாக சந்திக்கிறார் என்று பார்த்து, அவருடைய ஓவரில் விளையாடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

இந்தியா - இங்கிலாந்து, கில் - ஸ்டோக்ஸ், ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முப்பது பந்துகளை நன்றாக எதிர்கொண்டு அவர் விளையாடிய பிறகு, அவருக்கு நிறைய பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவருடன், அவ்வப்போது ஆட்டத்தின் போக்கு பற்றி விவாதிக்க வேண்டும். அது, அவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தும். ஆனால், அதிகமாகப் பேசி, அவரைப் பதட்டத்தில் தள்ளிவிட்டு விடக்கூடாது.

ஓரளவுக்கு செட்டில் ஆனவுடன், அதீத தன்னம்பிக்கையில் பெரிய ஷாட்களை டெயில் எண்டர்கள் விளையாடத் தொடங்குவார். நேற்று பும்ரா செய்ததைப் போல. உடனடியாக, அவரை கடிந்து கொண்டு அவருடைய இயல்பான எழுச்சியை தடைபோடக் கூடாது. தொடர்ச்சியாக, அபாயகரமான ஷாட்களை விளையாடப் பார்த்தார் என்றால், அவருக்கு ஒரு சில ஓவர்கள் ஸ்ட்ரைக் கொடுக்க கூடாது. அவராகவே, நம் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வார்.

இந்த முறையில் தான் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் பார்ட்னர் ஷிப்பை ஜடேஜா கட்டமைத்தார். அடுத்த டெஸ்டில் இந்தியா வென்று தொடரை சமன் செய்வதற்கு ஜடேஜாவின் ஃபார்ம் ரொம்பவும் முக்கியம். இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணியில் ஜடேஜா கீழ் வரிசை பேட்டிங்கிற்கு ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளார்.

இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விஷயம்

குல்தீப் யாதவை சேர்க்காமல் விட்டது தொடங்கி நிறைய விமர்சனங்கள் கம்பீர் மீது வைக்கப்பட்டன. ஆனால், இப்போது பார்க்கும் போது சரியான அணியைத் தான் அணி நிர்வாகம் களமிறக்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தோல்வியை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இந்திய அணி கடைசிவரை போராடிய விதம் நம்பிக்கை அளிக்கிறது. ஜடேஜா, சுந்தர், நிதிஷ் என மூன்று ஆல்ரவுண்டர்களும் ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம்.

இந்த டெஸ்டில் நிகழ்ந்த தவறுகளை களைந்து அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால் இந்தியா நிச்சயம் அடுத்த டெஸ்டில் மீண்டு எழுந்துவிடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly2ppg1xwjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அணியில் முக்கிய மாற்றம்

இங்கிலாந்து அணியில் முக்கிய மாற்றம்

இந்திய அணியுடனான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 4ஆவது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

காயம் காரணமாக விலகிய சுழற்பந்துவீச்சாளர் ஷோயப் பஷீருக்குப் பதிலாக லியாம் டாசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 35 வயதான டாசன் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். உள்ளூர் முதல்தர போட்டிகளில் அசத்தியதால் இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி ஆடும் லெவனில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.

மேலும் இந்திய அணியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அணிக்கு திரும்பலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்

https://thinakkural.lk/article/319001

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அருமையாக போகிறது.

3ம் டெஸ்ட் தேவையில்லாமல் இங்கிலாந்தை சீண்டி இந்தியா வாங்கி கட்டி கொண்டது.

அதுவும் போலிங் போடும் போது சண்டித்தனம் காட்டிய சிராஜ் கடைசியில் துரதிஸ்டவசமாக அவுட் ஆகியமை - poetic justice 🤣.

2வது டெஸ்ட் ஆகிய பெர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்ட்டனில் நடந்த ஆட்டத்தை 4,5 ம் நாட்கள் போய் பார்த்தேன். என்ர லக்குக்கு இந்தியா வென்று விட்டார்கள். இந்திய ரசிகர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்து எனக்கு ஒரே காண்டு 🤣.

ஆனால் நாலாம் நாள் கில், பாண்ட் அடித்த அடியை காண கண்கோடி வேண்டும். அதேபோல் ஆகாஷ் டீப் 5 நாள் பந்து வீச்சும் -அகோரம்.

ஆனால் 5ம் நாள் மழை உதவியோடு ஒரு நல்ல பார்ட்னசிப் போட்டிருந்தாலே, 2ம் டெஸ்டில் இந்தியாவை வெல்லாமல் தடுத்திருக்க முடியும்.

பார்ப்போம் அடுத்த மான்செஸ்டர், இலண்டன் ஒவல் போட்டிகளுக்கும் டிக்கெட் எடுத்து வைத்துள்ளேன்.

எனது லக் வேலை செய்யாது என நம்புவோம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தொடர் அருமையாக போகிறது.

3ம் டெஸ்ட் தேவையில்லாமல் இங்கிலாந்தை சீண்டி இந்தியா வாங்கி கட்டி கொண்டது.

அதுவும் போலிங் போடும் போது சண்டித்தனம் காட்டிய சிராஜ் கடைசியில் துரதிஸ்டவசமாக அவுட் ஆகியமை - poetic justice 🤣.

2வது டெஸ்ட் ஆகிய பெர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்ட்டனில் நடந்த ஆட்டத்தை 4,5 ம் நாட்கள் போய் பார்த்தேன். என்ர லக்குக்கு இந்தியா வென்று விட்டார்கள். இந்திய ரசிகர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்து எனக்கு ஒரே காண்டு 🤣.

ஆனால் நாலாம் நாள் கில், பாண்ட் அடித்த அடியை காண கண்கோடி வேண்டும். அதேபோல் ஆகாஷ் டீப் 5 நாள் பந்து வீச்சும் -அகோரம்.

ஆனால் 5ம் நாள் மழை உதவியோடு ஒரு நல்ல பார்ட்னசிப் போட்டிருந்தாலே, 2ம் டெஸ்டில் இந்தியாவை வெல்லாமல் தடுத்திருக்க முடியும்.

பார்ப்போம் அடுத்த மான்செஸ்டர், இலண்டன் ஒவல் போட்டிகளுக்கும் டிக்கெட் எடுத்து வைத்துள்ளேன்.

எனது லக் வேலை செய்யாது என நம்புவோம்🤣.

இங்கிலாந்து கூட கட்டாந்தரை பிட்சில் இந்தியாவினை விளையாட வைக்கிறது? அவுஸ்ரேலியா இந்தியாவிற்கு வேக பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளமே வழமையாக கொடுப்பதுண்டு, ஆனால் சில வேளை அவர்கள் விரித்த வலையில் அவர்களே சிக்கி இந்தியாவிடம் அடி வாங்குவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

இங்கிலாந்து கூட கட்டாந்தரை பிட்சில் இந்தியாவினை விளையாட வைக்கிறது? அவுஸ்ரேலியா இந்தியாவிற்கு வேக பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளமே வழமையாக கொடுப்பதுண்டு, ஆனால் சில வேளை அவர்கள் விரித்த வலையில் அவர்களே சிக்கி இந்தியாவிடம் அடி வாங்குவதுண்டு.

இங்கிலாந்தின் வேகபந்து வீச்சாளருக்கு சமனாக அல்லது சற்று மேலாக பும்ரா, டீப், கிருஸ்ணா கூட்டு இருப்பதும், தற்போதைய வரட்சி காலநிலையும் காரணம் என நினைக்கிறேன்.

ஆனால் எட்பாஸ்டன் மைதானம் தயாரித்தவரின் தவறு என ஸ்டோக்ஸ் தனிப்பட்டு விமர்சித்தாராம்.

ஹெடிங்லி, லோர்ட்ஸ் இரெண்டும் இரு அணிகள், பேட்ஸ்மன், போலர்களுக்கு சமவாய்ப்பை வழங்கின.

மான்செஸ்டர் மழைக்கு புகழ் போன இடம். ஸ்பின்னும் கிடைக்கும். பார்க்கலாம்.

இங்கிலாந்து டவுசனை கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஜடேஜா மட்டும்தான்.

ஓவல் இந்தியாவுக்கு வாய்பாகவே (எட்ஜ்பாஸ்டன் போல) இருக்கும் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மான்செஸ்டர் டெஸ்டில் கருண் நாயர் இல்லையெனில் 3-ஆம் இடம் யாருக்கு?

கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் பேட்டிங் செய்தார்

கட்டுரை தகவல்

  • மனோஜ் சதுர்வேதி

  • மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் குறித்த பிரச்னை தீர்க்கப்படவில்லை.

இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள கருண் நாயர் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால், அவர் திறமையான ஆட்டத்தால் கவனம் ஈர்க்க தவறிவிட்டார்.

எனவே, மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது இந்திய அணிக்கு ஒரு கவலையாக மாறியுள்ளது.

கருண் நாயர் நன்றாக தொடங்கினாலும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற அவர் தவறவிடுவதுதான் பிரச்னையாக உள்ளது.

வேகமாக நகரும் பந்துகளை விளையாடுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் ஆட்டமிழந்துள்ளார். எளிதில் தீர்வு கிடைக்காத பிரச்னை இது.

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கருண் நாயர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்சரை கருண் நாயர் தடுக்கும்போது

வாய்ப்பை பயன்படுத்த தவறவிட்ட கருண் நாயர்

உள்நாட்டு கிரிக்கெட்டில் கருண் நாயர் நிறைய ரன்களை குவித்தார், அதனால் மூன்றாம் வரிசை வீரராக களமிறங்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

எந்தவொரு இன்னிங்ஸையும் வலுப்படுத்த இது மிகவும் முக்கியம். ஆனால், பெரிய இன்னிங்ஸை விளையாடுவதில் கருண் நாயர் தோல்வியடைந்தது, இந்தியாவின் ஆட்டத்தை பாதித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் கருண் நாயர் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் 21.83 எனும் சராசரியில் வெறும் 131 ரன்களையே பெற்றுள்ளார்.

இதில் லார்ட்ஸில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்ற 40 ரன்கள்தான் அவர் பெற்ற அதிகபட்ச ஸ்கோராகும்.

கருண் நாயர் நான்காவது டெஸ்டில் அதாவது மான்செஸ்டர் டெஸ்டில் விளையாடவில்லை என்றால், அவரது டெஸ்ட் வாழ்க்கை மீண்டும் முடிவுக்கு வரக்கூடும்.

உதவி பயிற்சியாளர் ரியான் டென்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உதவி பயிற்சியாளர் ரியான் டென்

உதவி பயிற்சியாளர் ரியான் என்ன நினைக்கிறார்?

இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோசெட், பெக்கென்ஹேமில் நடைபெற்ற பயிற்சியின்போது, இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் தெளிவாக தெரிவிக்கவில்லை.

அவர் கூறுகையில், "கருண் நாயர் நல்ல வேகத்துடன் செயல்படுகிறார். மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனிடமிருந்து எங்களுக்கு நிறைய ரன்கள் தேவை. நாங்கள் எதில் சிறப்பாக இருக்கிறோம் என்பதிலும் போட்டியில் தோல்வியடைந்ததற்கான தவறுகளை சரிசெய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்." என அவர் கூறினார்.

"ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் தனித்தனியாக பார்த்தால், அவர்கள் நன்றாகவே விளையாடியுள்ளனர். விக்கெட்டுகள் கொத்தாக விழுவதுதான் அணியின் பிரச்னை" என கூறினார் ரியான்

சில சந்தர்ப்பங்களில் கருண் நாயருடையது மட்டுமல்லாமல் அனைத்து பேட்ஸ்மேன்களுடைய ஆட்டமும் சரிவை கண்டதாக, அணி நிர்வாகம் நம்புகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி

ஃபரூக் இன்ஜினியர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முன்னாள் இந்திய டெஸ்ட் வீரர் ஃபரூக் இன்ஜினியர் கருண் நாயரின் ஆட்டத்தில் திருப்தி அடையவில்லை.

இந்திய முன்னாள் டெஸ்ட் ஆட்டக்காரர் ஃபரூக் இஞ்சினியரும் கருண் நாயரின் ஆட்டம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், "கருண் நாயர் முதல் 20-30 ரன்களை நன்றாக விளையாடுகிறார். கவர் டிரைவ் (cover drives) ஷாட்டுகளை நன்றாக அடிக்கிறார். ஆனால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனிடமிருந்து இது மட்டும் எதிர்பார்க்கப்படுவதில்லை. மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் நிறைய ரன்களை குவிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா இந்த தொடரை ஒளிபரப்பும் டிவி சேனலின் கமெண்ட்ரியில், "கருண் நாயரை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். அணி நிர்வாகம் கருண் நாயரை தக்கவைக்க விரும்பினால், இந்த தொடர் முடிந்ததும் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்." என கூறினார்

"அணி நிர்வாகம் வருங்கால திட்டங்களில் சாய் சுதர்ஷனை மனதில் வைத்திருந்தால், ஓல்ட் டிராஃபோர்டில் நடக்கும் போட்டியிலிருந்தே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சாய் சுதர்ஷன் வந்தவுடன் தனது விக்கெட்டை விட்டுக் கொடுக்க மாட்டார் என நமக்கு தெரியும். ஆனால், அவர் விளையாடுவது போதாது, அவர் இந்த நிலையில் விளையாடினால் 60-70 ஓவர்கள் பந்து வீசக் கற்றுக்கொள்ள வேண்டும்."

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவாங் காந்தி தான் 2016ம் ஆண்டில் முதன்முறையாக டெஸ்ட் அணியில் கருண் நாயரை தேர்ந்தெடுத்தார். இந்த சுற்றுப்பயணம் கருணுக்கு கொடூரமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்திய அணியிடம் உள்ள வாய்ப்புகள் என்ன?

சாய் சுதர்ஷன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கருண் நாயருக்குப் பதிலாக சாய் சுதர்ஷனுக்கு (பேட்டிங்) வாய்ப்பு கிடைக்கக்கூடும். (கோப்புப் படம்)

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இல்லை என்றால், இந்திய அணிக்கு முன் உள்ள மற்ற வாய்ப்புகள் என்ன? முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக விளையாடிய சாய் சுதர்ஷனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குவது முதல் வாய்ப்பு.

முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக விளையாடிய சாய் சுதர்ஷன், முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், இரண்டாவது இன்னிங்ஸ்லில் 30 ரன்களை எடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் தனது ஆட்ட பாணியால் கவனம் ஈர்த்தார்.

ஆனால் இரண்டாவது டெஸ்டில், ஆல்ரவுண்டரை களமிறக்கும் பொருட்டு சாய் சுதர்ஷன் களமிறக்கப்படவில்லை.

முதலாவது டெஸ்டில் சாய் மூன்றாவதாகவும் கருண் நாயர் ஆறாவதாகவும் களமிறக்கப்பட்டனர். இதன்மூலம், மூன்றாவது வரிசை வீரருக்கு சாய் சுதர்ஷன் தான் பயிற்சியாளரின் கண்களுக்கு முதல் தேர்வாக இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே, அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த்தின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் பேட்டிங் செய்தாலும், விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

துருவ் ஜுரெல் விக்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். தற்போது ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் இருந்தால், அவர் பேட்ஸ்மேனாக விளையாட வேண்டியிருக்கும், துருவ் ஜுரெல் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் ஜுரெல் தன்னுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கும் திறன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் உள்ளது. 2024-25ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இருந்து டெஸ்ட் அணியில் அவர் உள்ளார். ஆனால், இன்னும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்த தொடருக்கு முன்பு அவர் இந்தியாவுக்காக நன்றாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் அரைசதம் அடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 27 சதங்கள் அடித்தும் அவர் சாதனை படைத்துள்ளார்.

ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாத இந்திய அணி

ஷ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டார்.

கருண் நாயரை போன்றே ஷ்ரேயாஸும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை குவித்துள்ளார், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவருக்கு அதிக அனுபவம் உள்ளது.

அவர் ஃபார்மில் இருந்தபோதிலும் டெஸ்ட் அணியில் அவரைத் தேர்வு செய்யாதது, வீரர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஷ்ரேயாஸ் அணியில் இருந்திருந்தால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் குறித்த பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.

ஷ்ரேயாஸ் அணியில் இல்லாவிட்டாலும், தேவைப்பட்டால் அவர் அழைக்கப்படலாம்.

14 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. அவர், 35க்கும் அதிகமான சராசரியுடன் 811 ரன்கள் எடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராஃபியில் மிகவும் திறமையாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் அணிக்கு வந்தால் அது அணியை வலுப்படுத்தும் என்பது உறுதி.

ஆனால் தேர்வாளர்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், இப்போது அவர் மீது மேலும் கவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c86gxyyq287o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா, இங்கிலாந்து, மான்செஸ்டர் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்

கட்டுரை தகவல்

  • தினேஷ்குமார்

  • கிரிக்கெட் விமர்சகர்

  • 23 ஜூலை 2025, 01:38 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரின் நான்காவது டெஸ்ட், இன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் பெரும்பான்மை செசன்களில் ஆதிக்கம் செலுத்தியும், முக்கியமான தருணங்களை கோட்டைவிட்டதால் இந்திய அணி 2–1 என பின்தங்கியுள்ளது. சுமாரான அணியாக இருந்தபோதும், ஸ்டோக்ஸ், ரூட், ஆர்ச்சர் என மேட்ச் வின்னர்கள் தக்க சமயத்தில் தோள் கொடுப்பதால், இங்கிலாந்தின் கை தற்சமயம் ஓங்கியுள்ளது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், இந்தியாவுக்கு என்றைக்கும் சாதகமான ஒன்றாக இருந்ததில்லை. 1936 முதல் இதுவரை 9 டெஸ்ட்களில் இந்திய அணி, மான்செஸ்டரில் விளையாடியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை தொடவில்லை. டெஸ்ட் மட்டுமல்ல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல நினைவுகள் என்று எதுவுமில்லை. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா மண்ணைக் கவ்வியது இங்குதான்.

இந்தியா, இங்கிலாந்து, மான்செஸ்டர் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருகாலத்தில் தாறுமாறாக சீறிய ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மறுகட்டுமானத்துக்கு பிறகு தட்டையாக மாறிவிட்டது. ஆகவே, லார்ட்ஸ் டெஸ்ட் போலவே இந்த டெஸ்ட்டும் 'லோ ஸ்கோரிங் திரில்லர்' ஆக (Low scoring thriller) மாறுவதற்கு வாய்ப்பதிகம் உள்ளது. சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், 'சைனா மேன்' சுழலர் குல்தீப் யாதவ் லெவனில் இடம்பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், யார் இடத்தில் குல்தீப் விளையாடப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. காயத்தால் தொடரில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சேர்க்கலாம்.

ஒருவேளை, நிதிஷ் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டர் ஷார்துலை கொண்டுவர அணி நிர்வாகம் விரும்பினால், ஆஃப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்தான் குல்தீப்புக்கு வழிவிட்டாக வேண்டும். நீண்ட பேட்டிங் வரிசையை விரும்பும் இந்திய அணி நிர்வாகம், தற்காப்பு பேட்டிங்கில் வித்தரான சுந்தர் தலையில் கை வைக்குமா என்பது சந்தேகம்.

ஒன்று, இரண்டு, ஐந்தாம் நாள்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பும்ரா–சிராஜ், மூன்று சுழலர்கள் என இந்தியா களமிறங்கவும் வாய்ப்புள்ளது. 1956 மான்செஸ்டர் டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட இதே மைதானத்தில், இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் 19 விக்கெட்களை எடுத்து உலக சாதனை படைத்தார் என்பதை மறந்துவிட முடியாது.

இந்தியா, இங்கிலாந்து, மான்செஸ்டர் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஸ்க் எடுப்பதற்கான சமயம் இதுவல்ல என்று குல்தீப்பை எடுக்காமல், 3 வேகப்பந்து வீச்சாளர், 2 ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர்கள் (சுந்தர், ஜடேஜ்) என இந்தியா களமிறங்கவும் தயங்காது. காயத்தால் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் விலகியதாலும் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு எடுபடாததாலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கம்போஜ் களமிறங்கலாம்.

ஷான் பொல்லாக் பாணியில் 5–15 செமீ லெங்த்தில் தையலை (seam) பிடித்து பந்துவீசும் கம்போஜ், இங்கிலாந்து மண்ணுக்கு என்றே அளவெடுத்து செய்தது மாதிரியான ஒரு பவுலர். பேட்டிங் வரிசையில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் திணறும் கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பார்கள். ஸ்லிப் பிராந்தியத்தில் கருணுக்கு நிகரான ஒரு ஃபீல்டர் இப்போது அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக கூடுதல் பேட்ஸ்மேனாக சுதர்சனை அணியில் சேர்க்கவும் அணி நிர்வாகம் தயங்காது.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் காம்பினேஷன் எப்படி இருக்கப் போகிறது என்பது தெளிவில்லாத நிலையில், வழக்கம் போல ஆட்டத்துக்கு முன்பே லெவனை அறிவித்துவிட்டு இங்கிலாந்து களம் காண்கிறது. காயத்தால் ஆஃப் ஸ்பின்னர் பஷீர் விலகிய நிலையில், இடக்கை சுழல் ஆல்ரவுண்டர் லியாம் டாசனை இங்கிலாந்து உள்ளே கொண்டுவந்துள்ளது. ஆஷ்லி கைல்ஸ், பனேசர் பாணியில் தற்காப்பு இடக்கை சுழற்பந்து வீச்சில் கை தேர்ந்தவர் இவர். பல் பிடுங்கப்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சுக்கு, கேப்டன் ஸ்டோக்ஸ் ஒருவர்தான் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்.

4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், லார்ட்ஸில் தூள்பரத்தினாலும், பவுன்ஸ் அதிகமில்லாத ஓல்ட் டிராஃபோர்டில் அவருடைய பாட்சா பலிக்காது என்கிறார்கள் விமர்சகர்கள். அதுமட்டுமின்றி, ஆர்ச்சரின் பணிச்சுமையையும் கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச்சு இந்த தொடரில் சுத்தமாக எடுபடவில்லை. கடந்த டெஸ்டில் கார்ஸ் நம்பிக்கை அளித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இங்கிலாந்தின் பந்துவீச்சு படை பலவீனமானவே தெரிகிறது.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'சமர்த்து பையன்கள்' என வலம்வரும் இங்கிலாந்து அணியினர், கடந்த டெஸ்டில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சேசிங்கின் போது ஸ்லிப் பிராந்தியத்தில் நின்றுகொண்டு புரூக் உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியின் டெயில் எண்டர்களை கடுமையாக வசைபாடினர். கில் தலைமையிலான இந்திய அணியும் தன் பங்குக்கு களத்தில் சீற்றத்தை வெளிப்படுத்தியதை பார்த்தோம். ஆனால், கில்லின் ஆக்ரோஷம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்காததோடு அவருடைய பேட்டிங் ஃபார்மையும் பாழ்படுத்தியது. இந்தமுறை, கோலியை அப்படியே போலச் செய்ய முயலாமல், கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷத்தை கில் கையில் எடுப்பார் என நம்புவோம்.

இங்கிலாந்து பேட்டிங் வரிசையை பொருத்தமட்டில், கிராலி, போப் ஆகியோரின் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது. லீட்ஸ் டெஸ்டில் சதமடித்த போப், 3 டெஸ்டில் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 21.33 சராசரியில் ஒரு அரைசதத்துடன் 128 ரன்கள் மட்டுமே தொடக்க வீரர் கிராலி அடித்துள்ளார்.

புரூக் நிறைய ரன்கள் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு (Nip backer) இந்த தொடர் முழுக்க அவர் திணறுவதை பார்க்கலாம். அதிர்ஷ்டமும் அவருக்கு சிலமுறை கைகொடுத்ததை சொல்லியாக வேண்டும்.

முக்கியமான சமயங்களில் கேப்டன் ஸ்டோக்ஸ் அணியை தாங்கிப் பிடித்தாலும், ஜேமி ஸ்மித், பென் டக்கெட்டையே இங்கிலாந்து அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பியுள்ளது. பாஸ்பால் பாணியில் இருந்து வெளியே வந்து விளையாட முடியும் என நிரூபித்த இங்கிலாந்து, ஃபார்முக்கு திரும்பியுள்ள ஜோ ரூட்டை பெரிதும் நம்பியுள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறினால், ரூட்டின் விக்கெட் ஆட்டத்தை தீர்மானிக்கும் ஒன்றாக மாறும். ரூட்–பும்ரா இடையிலான ஆடுபுலி ஆட்டமும், குல்தீப் விளையாடும் பட்சத்தில் ரூட்–குல்தீப் இடையிலான உள்ளே வெளியே ஆட்டமும் ஒரு தனி நிகழ்வாக (Event) பரபரப்பை கூட்டும்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிதிஷ் குமார் ரெட்டி விலகியது, அணியின் சமநிலையை பாதித்தாலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை வலிமையாகவே உள்ளது. கேஎல் ராகுல், தனது கிரிக்கெட் வாழ்வின் ஆகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த டெஸ்டில் தவறான ஷாட் விளையாடி, விமர்சனத்துக்கு ஆளானாலும் ஜெய்ஸ்வாலும் முதலிரு டெஸ்ட்களில் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது. டிரைவ், கட் ஷாட் ஆடும்போது கவனத்தை குவித்து, சூழலுக்கு ஏற்ப வேகத்தை கூட்டியும் குறைத்தும் விளையாடினால், அவர் ஆட்டம் மீண்டும் மிளிரும்.

பிராட்மேன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில், கவனம் தொலைத்ததால் அழுத்தத்துக்கு ஆட்பட்டு கடந்த டெஸ்டில் சறுக்கினார். 2 சதங்களுடன் 425 ரன்கள் குவித்துள்ள பந்த், முழு உடற்தகுதியுடன் விக்கெட் கீப்பர்– பேட்ஸ்மேனாக களமிறங்குவதில் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது. ஒரு ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு முழு தகுதி கொண்டவர் என்றாலும், விக்கெட் கீப்பிங் பொறுப்பை பந்த் ஏற்காவிட்டால், அணியின் காம்பினேஷன் அடிவாங்கும்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த தொடரில் தனது கடைசி டெஸ்டில் விளையாடும் பும்ரா, ரூட், புரூக் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை குறிவைத்து நிச்சயம் வியூகம் வகுத்திருப்பார். இந்த டெஸ்டை இந்தியா வென்றால், மூன்று டெஸ்ட் மட்டும்தான் அவர் விளையாட வேண்டும் என்ற விதியை தளர்த்தி, கடைசி டெஸ்டில் பும்ராவை கம்பீர் விளையாட வைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிராஜ், ஆகாஷ் தீப் இல்லாத நிலையில் பவுன்ஸ் குறைவான ஆடுகளத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அவசியம்.

மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப்பை ரிஸ்க் எடுத்து இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தால், நிச்சயம் பலனுண்டு. 1993 இல், இதே ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்தான் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பந்தை வீசினார் என்பது வரலாறு.

இந்தியா, இங்கிலாந்து, மான்செஸ்டர் டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜடேஜா உள்பட கீழ் வரிசை பேட்ஸ்மேன்களும் நம்பிக்கையுடன் உள்ளதால், இந்தியாவின் பேட்டிங் படை வலுவாக உள்ளது. மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடியும், பின்தங்கியுள்ளதற்கு இந்திய அணியின் தைரிய குறைபாடும் ஒரு காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்கள் விழுந்தவுடன் ஜடேஜா, தாக்குதல் பாணி கிரிக்கெட்டை கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், விதியின் மீது பாரத்தை போட்டுவிட்டு சிராஜுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து குருவி போலச் சிறுக சிறுக ரன் சேர்த்தார்.

2019 ஆஷஸ் தொடரில் ஹெடிங்லி டெஸ்டில் இதே போன்றதொரு சூழலில், ஸ்டோக்ஸ் ரிஸ்க் எடுத்து விளையாடி விதியை மாற்றி எழுதி ஆட்டத்தை வென்றார். இந்திய அணி தேவையற்ற வாய்ச் சவடாலை தூக்கி கடாசிவிட்டு, பயமறியாமல் ஆட்டத்தை அணுகினால் இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdx51vx59p9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மான்செஸ்டர் டெஸ்டில் நிரூபித்த சாய் சுதர்சன் - தடுமாறும் இந்தியா மீண்டெழ என்ன வாய்ப்பு?

Ind Vs Eng, ஓல்ட் ட்ரஃபோர்ட் டெஸ்ட் போட்டி, இந்தியா கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கியச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சாய் சுதர்ஷன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார்.

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • கிரிக்கெட் விமர்சகர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 23) மான்செஸ்டரில் ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் எப்படி இருந்தது?

சமீப காலத்தில் இப்படி ஒரு அட்டகாசமான டெஸ்ட் தொடர் நடந்ததாக நினைவில்லை. ஆஷஸ் தொடருக்கு இணையான பரபரப்போடு ஒவ்வொரு டெஸ்டும் நகர்ந்துகொண்டிருக்கிறது.

முதல் மூன்று டெஸ்ட்களில் இருந்த விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும், நேற்று தொடங்கிய மான்செஸ்டர் டெஸ்டிலும் பார்க்க முடிகிறது.

இரண்டும் சம பலமுள்ள அணிகள் என்பதை ஒவ்வொரு செஷனும் நிரூபித்தன. ஸ்லோ ஓவர் ரேட், ஸ்லிப் திசையில் இருந்து பறக்கும் சீண்டல்கள், பந்த்தின் தலைசுற்ற வைக்கும் சிக்சர், சாதுர்யமான ஸ்டோக்ஸ் கேப்டன்சி என இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு தேவையான எல்லா மசாலாக்களும் நேற்றைய நாளில் இருந்தன.

அணியில் மாற்றத்தோடு களம் இறங்கிய இந்தியா

Ind Vs Eng, ஓல்ட் ட்ரஃபோர்ட் டெஸ்ட் போட்டி, இந்தியா கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கியச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் ரிஷப் பந்த்

வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்தான் டாஸ் வென்றார். ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் டாஸ் வென்று பவுலிங் எடுத்த அணி, இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை.

ஆனாலும், சென்டிமென்ட் பார்க்காமல் இங்கிலாந்து கேப்டன் ரிஸ்க் எடுத்து இந்தியாவை பேட் செய்ய பணித்தார். குல்தீப் வருவார், கருண் நாயர் தன் இடத்தை தக்கவைப்பார் என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பிய நிலையில், கருணை நீக்கி, சாய் சுதர்சனை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்ததுடன், பேட்டிங் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் இடத்தில் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷார்துலை ஆடவைத்தது இந்தியா.

இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 5 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் இந்தியா களமிறங்கியது. எதிர்பார்த்தது போலவே, ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டார்.

Ind Vs Eng, ஓல்ட் ட்ரஃபோர்ட் டெஸ்ட் போட்டி, இந்தியா கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கியச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்தான் டாஸ் வென்றார்

நிதானத்தை கடைபிடித்த இந்திய பேட்டர்கள்

ஓல்டு டிராஃபோர்ட் மைதானம் ஓரளவுக்கு தட்டையானது என்றாலும், தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி பிரமாதமாக பந்துவீசியது.

அனுபவ வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் தொடர்ச்சியாக எட்டு ஓவர்கள் கட்டுப்பாடுடன் வீசினார். கடந்த டெஸ்டின் நாயகன் ஆர்ச்சரின் பந்துவீச்சில் வழக்கமான வேகம் இல்லை. ஆனாலும் துல்லியம் குறையாமல் பந்துவீசினார். இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஆர்ச்சரை முடிந்தவரைக்கும் எதிர்கொள்ளாமல் ஜெய்ஸ்வால் தவிர்த்தார்.

முதல் செஷனில் ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுலே எதிர்கொண்டார். ராகுலின் பேட்டிங் இந்திய அணிக்கு ஒரு உத்தரவாதத்தை நம்பிக்கையை கொடுக்கும்படி இருந்தது. தன் எல்லைக்கு வரும் பந்துகளை தவிர, எந்த பந்தையும் அவர் சீண்டவில்லை.

அதேசமயம், ஹாஃப் வாலியாக (Half volley) கிடைத்த பந்துகளையும் அரைக்குழியாக கிடைத்த பந்துகளையும் தண்டிக்க அவர் தயங்கவில்லை.

நேற்றைக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லாரும் ராகுல் பாணியில் பேட் செய்ததை பார்க்க முடிந்தது. உள்ளே வரும் பந்துகளை தடுப்பது; வெளியே செல்லும் தவறான பந்துகளை தண்டிப்பது. இதுதான் இந்திய பேட்ஸ்மேன்களின் தாரக மந்திரம்.

லார்ட்ஸ் டெஸ்டில் தவறான ஷாட் விளையாடியதற்காக விமர்சிக்கப்பட்ட ஜெய்ஸ்வால், நேற்று தொடக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடினர்.

இன்னிங்ஸை கொஞ்சம் நிலைநிறுத்தியவுடன் தைரியமாக ரன் குவித்தார். நன்றாக செட்டில் ஆனபிறகு விக்கெட்டை இழப்பது என்பது இந்த தொடர் முழுக்கவே இந்திய அணிக்கு பிரச்னையாக இருந்து வருகிறது. அது நேற்றும் தொடர்ந்தது தான் துரதிர்ஷ்டம்.

Drinks இடைவேளைக்கு முன்னும் பின்னும் விக்கெட்டை இழக்காத இந்தியா, உணவு இடைவேளைக்கு பிறகு அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை இழந்தது. பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், பெரும் முதலைகளை எல்லாம் சமாளித்துவிட்டு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் மறுவருகை நிகழ்த்திய டாசன் பந்துவீச்சில் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

Ind Vs Eng, ஓல்ட் ட்ரஃபோர்ட் டெஸ்ட் போட்டி, இந்தியா கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முக்கியச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் மறுவருகை நிகழ்த்திய டாசன் பந்துவீச்சில் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார்

முதல் அரை சதத்தை பதிவு செய்த சாய் சுதர்சன்

ராகுல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்பு சுதாகரித்து கொண்டார். 20 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறிவிட்டார்.

கால்பக்கம் வீசப்படும் பந்துகளை எதிர்கொள்வதில் சாய் சுதர்சனுக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் துலக்கமாக வெளிப்பட்டது. அவருடைய தலை ஆஃப் சைடில் சாய்ந்து விடுவதே இந்த பிரச்னைக்கு அடிப்படை காரணம்.

முதல் டெஸ்டிலும் இதே முறையில் அவர் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், எப்படி ஒரு இன்னிங்ஸை கட்டமைப்பது என்ற வித்தையை தெரிந்துவைத்துள்ளார் அவர்.

ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார். டெக்னிக்கலாக சில பிரச்னைகள் இருந்தாலும் சுதர்சனின் மனத்திட்பம் (Temperament) நேற்றைய இன்னிங்ஸ் முழுக்க நேர்மறையாக இருந்தது.

சுதர்சனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை விளையாடுவதிலும் இருந்த சுணக்கம் வெளிப்பட்டது. கடைசியில் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

சுதர்சன் விளையாடும் போது, ஆட்டத்துக்கு முந்தைய நாள் அவர் யாருமற்ற மைதானத்தில், தன்னந்தனியாக நிழல் பயிற்சியில் (Shadow practice) ஈடுபட்டதை டிவியில் காட்டினார்கள்.

இந்தப் பயிற்சியின் பெயர், விசுவலைசேஷன் (Visualisation). விசுவலைசேஷன் என்பதை ஒரு வீரர் களத்தில் நிகழ்ப்போவதை மனதளவில் காட்சிப்படுத்தி, அதற்கு ஏற்ற வகையில் ஆகும் ஒருவித முன்தயாரிப்பு எனலாம்.

கிரிக்கெட்டில் முக்கியமான சூழல்கள் குறித்த ஆழமான அனுபவங்களை நேரடியாக அத்தகைய களத்தில் பங்குபெறாவிட்டாலும் கூட 'விசுவலைசேஷன்' மூலமாக ஒருவரால் பெற முடியும் என்கிறார்கள் ஸ்போர்ட்ஸ் சைக்காலாஜிஸ்ட்கள். சாய் சுதர்சன் மட்டுமல்ல நிறைய உச்ச நட்சத்திரங்கள் ஏதோவொரு வடிவத்தில் விசுவலைசேஷன் டெக்னிக்கை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இதுபோன்ற முன் தயாரிப்புகளும் நேர்மறையான சிந்தனையும்தான் சுதர்சனை தனித்துக் காட்டுகின்றன. டெக்னிக்கலாக கருண் நாயர் சுதர்சனை விட வலுவானவர் என்றபோதும், மனத்திட்பத்தில் (Temperement) அவர் பலவீனமாக இருப்பதாலேயே, சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்.

தடுமாறும் இந்தியா மீண்டெழ என்ன வாய்ப்பு?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தை தன்பக்கம் திருப்பிய இங்கிலாந்து அணி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில், ஆக்ரோசமாக இன்னிங்ஸை ஆரம்பித்தாலும், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பந்தை கவனிக்காமல் பேட்டை உயர்த்தி LBW முறையில் ஆட்டமிழந்தார்.

லார்ட்ஸ் டெஸ்டிலும் கவனத்தை இழந்து இப்படி ஒரு ஒன்றுமற்ற பந்துக்கு இரையனார் என்பதை பார்த்தோம். ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பிராட்மேனின் (974) முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில், தன் ஃபார்மை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறார்.

கடந்த டெஸ்டில் இதுபோன்றதொரு பந்தில்தான் (Nip backer) ராகுல் விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்றினார். கிரீஸை நன்றாக பயன்படுத்தி ஸ்டோக்ஸ் வீசும் இந்தப் பந்தை சரியாக கணித்து விளையாடுவது எளிதல்ல. ஆனால், கில் ஆட்டமிழந்தது அவர் கவனம் ஆட்டத்தில் இல்லை என்பது போலிருந்தது.

முதல் செஷனை இந்தியா கைப்பற்றிய நிலையில் உணவு, தேநீர் இடைவேளைக்கு நடுவில் 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி இரண்டாவது செசனை தன்வசப்படுத்தியது.

இன்னிங்ஸ் நல்ல வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், வோக்ஸ் பந்தில் ஒரு ஆபத்தான ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்பார்த்து, பந்தை நேராக காலில் வாங்கி அடிபட்டு களத்தை விட்டு சென்றார் பந்த்.

அவர் மட்டும் களத்தில் இருந்திருந்தால், இந்தியா ஆட்ட நேர முடிவில் இன்னும் வலுவான நிலையில் இருந்திருக்கும். காயத்தின் தன்மை மோசமாக இருக்கும் பட்சத்தில், இரண்டாம் நாள் பந்த் பேட்டிங் செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு.

இது இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த டெஸ்ட், தொடரின் போக்கையே மாற்றும் தன்மை கொண்டதாக இப்போது பந்த்தின் காயம் மாறியுள்ளது. ஆனாலும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு மைதானத்தில் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களத்தின் தன்மையை புரிந்துகொண்டு, மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். குறிப்பாக கில், சுதர்சன் என முக்கிய விக்கெட்களை, முக்கியமான கட்டத்தில் எடுத்துக்கொடுத்து ஆட்டத்தை ஸ்டோக்ஸ் சுவாரயப்படுத்தினார்.

நாளை புதிய பந்தில் இந்தியா சமாளித்து விளையாடி, மதிய உணவு இடைவேளை வரை தாண்டிவிட்டால், ஒரு வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். இந்தியாவின் கைக்கு வந்திருக்க வேண்டிய முதல் நாள் ஆட்டம், பந்த்துக்கு ஏற்பட்ட காயத்தால், எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. நாளை யார் கை ஓங்குமென பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqx25n8rlrlo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியாவை சரித்த ஸ்டோக்ஸ் வியூகம் – நல்ல வாய்ப்பை இந்தியா கைவிட்டதா?

இந்தியாவை சரித்த ஸ்டோக்ஸ் வியூகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எஸ்.தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில், இரண்டாம் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் விளையாடி, மீண்டு வந்துள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த நாள் என்று நேற்றைய நாளை சொல்லலாம்.

இந்தியாவின் திட்டங்கள் எல்லாம் பலனளிக்காமல் போக, இங்கிலாந்து அணி தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சீதோஷனை நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு நாளின் இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷார்துல் – வாஷிங்டன் சுந்தர் இணை, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளித்து விளையாடியது. இதே இணைதான், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்தது, இந்தியாவின் வெற்றி கைகொடுத்தது.

ஷார்துல் 41 ரன்கள் எடுத்து, இந்தியா ஒரு வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். கடினமான ஒரு களத்தில் சாமர்த்தியமாக விளையாடி, தன் தேர்வு மீதான விமர்சனங்களுக்கு ஷார்துல் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரதான பேட்ஸ்மேன்கள் எல்லாரும் தடுமாறும் போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் ஷார்துலின் தனிச்சிறப்பு. இந்த ஒரு திறமைக்காகவே, ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தபோதும், அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக நிற்கிறது.

ஜடேஜா, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, இரண்டாம் நாள் ஆட்டம், விளையாட்டுச் செய்திகள், பிபிசி தமிழ், ரவீந்திர ஜடேஜா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

காயத்தோடு களமிறங்கிய பந்த்

முதல் நாளை போலவே, நேற்றும் ஆர்ச்சர், கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் பெரும்பாலான ஓவர்களையும் விக்கெட்டுகளையும் பங்கிட்டுக் கொண்டனர். வோக்ஸ் ஒருமுனையில் கட்டுக்கோப்பாக வீசினாலும், விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

ஷார்துல் ஆட்டமிழந்ததும், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் வலியையும் பொறுத்துக்கொண்டு, பந்த் களமிறங்கினார். அவருடைய அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் மதிப்பளிக்கும் விதமாக, ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தினர்.

பந்த்தின் விடாமுயற்சி பாராட்டப்பட வேண்டியது என்றாலும், அது ஒருவிதத்தில் சுந்தரின் பேட்டிங் ரிதத்தை பாதித்துவிட்டது. பந்த்தை எதிர்முனையில் வைத்துக்கொண்டு ஒற்றை ரன் ஓடமுடியுமா என்ற சிந்தனையிலேயே, தனது இயல்பான ஆட்டத்தை மறந்து ஸ்டோக்ஸ் பந்தில் சுந்தர் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பந்த்தை பத்திரப்படுத்தி வைத்து, கம்போஜ், சிராஜ் போன்றவர்களை முன்னால் களமிறக்கி இருந்தால், சுந்தர் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

சுந்தர் ஆட்டமிழந்ததும், வேறு வழியின்று பந்த் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தார். ஆர்ச்சரின் பந்தில் அவர் அடித்த சிக்ஸர், மைதானத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தியது. கடந்த டெஸ்டை நினைவூட்டும் படியான ஒரு பந்தின் மூலம், பந்த் ஸ்டம்புகளை தகர்ந்தார் ஆர்ச்சர்.

பந்த் களத்தில் இருக்கும்போது, ஸ்டோக்ஸ் அவருடைய காலை குறிவைத்து யார்க்கர் பந்துகளாக வீசினார். இதுகுறித்து சமூக வலைதங்களில் விமர்சனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது.

உணர்வை எல்லாம் பார்த்தால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது. ஸ்டோக்ஸ் தன் அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடுவார். பந்த்துக்கு இந்திய அணியின் நலன் முக்கியம்; அவருக்கு இங்கிலாந்து அணியின் நலன் முக்கியம். அவ்வளவுதான்.

இந்த தொடரில் பந்த் தனது கடைசி இன்னிங்ஸை விளையாடிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. கடைசிக்கட்ட விக்கெட்டுகளை ஆர்ச்சர் துடைத்து எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்களும் ஆர்ச்சர் 3 விக்கெட்களும் கைப்பற்றினர். ஸ்டோக்ஸ், அதிக பந்துகள் வீசிய டெஸ்ட் தொடர் இதுதான். இதன்மூலம் இந்த தொடருக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, இரண்டாம் நாள் ஆட்டம், விளையாட்டுச் செய்திகள், பிபிசி தமிழ், பென் டக்கெட், கம்போஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கம்போஜ் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மூலம் சதத்தை நெருங்கி கொண்டிருந்த டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார்.

டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்துமா இந்தியா?

அத்தி பூத்தாற் போல, நேற்று பும்ராவும் தவறான லைனில் எந்தவொரு திட்டமும் இன்றி பந்துவீசினார். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் களமிறங்கிய கிராலி, தன் முதல் ரன்னை எடுக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். இதை சாதகமாக பயன்படுத்தி அவருடைய விக்கெட்டை எடுக்க இந்திய அணி முயற்சி செய்தது போலவே தெரியவில்லை.

மேலும் பும்ரா உடனடியா எதையாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியிலேயே பந்துவீசியது போல இருந்தது. சில ஓவர்கள் கட்டுப்பாடாக பந்துவீசி ரன் ரேட்டை முதலில் குறைத்து பிறகு விக்கெட்டுக்கு முயற்சிக்கலாம் என்ற திட்டமே இந்திய அணியிடம் இல்லை.

இந்திய அணி, ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் பந்துவீசிய லைன் அண்ட் லெங்த்தில் (The corridor of uncertainty) பந்துவீசியிருக்க வேண்டும். அதாவது பேட்ஸ்மேனால் முன்னுக்கு வந்தும் ஆடமுடியாது; பின்னுக்கு நகர்ந்தும் ஆடமுடியாது. அதுபோன்றதொரு இரண்டும் கெட்டான் லைன் அண்ட் லெங்த். ஆனால், இந்தியா ஒன்று கால்பக்கமாக வீசியது. இல்லை, எந்த இலக்குமற்று முழு நீளத்தில் ஹாஃப் வாலியாக வீசியது.

கால்பக்கத்தில் கிடைத்த பந்துகளை டக்கெட், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் திசையில் ஃபிளிக் செய்து ரன் குவித்தார். மறுபுறம் கிராலி, நின்ற இடத்தில் இருந்து, ஆபத்தற்ற முழு நீள பந்துகளை கவர் திசையிலும் மிட் ஆன்–மிட் ஆஃப் திசையிலும் டிரைவ் செய்து பவுண்டரி விளாசினார்.

இந்திய அணியின் பல் பிடுங்கிய பாம்பாக மாறிய பந்துவீச்சை பார்க்கும் போது, குல்தீப் யாதவை எடுத்திருக்கலாம் என தோன்றியது.

கடைசி கட்டத்தில் உபரியாக கிடைக்கும் 10–20 ரன்கள் முக்கியம்தான். ஆனால், விக்கெட் எடுக்கும் திறமையுள்ள ஒரு சுழற்பந்து வீச்சாளரை, தொடர்ச்சியாக பெஞ்ச்சில் உட்கார வைப்பது அநியாயம்.

'சைனா மேன்' என்றழைக்கப்படும் இடக்கை லெக் ஸ்பின் என்பது மிகவும் அரிதான ஒரு பந்துவீச்சு வகைமை. அரிது என்பதால், இந்த வகைமை பந்துவீச்சை பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாடி இருக்க மாட்டார்கள்.

இந்த அனுகூலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள ஏன் தயங்குகிறது என்று புரியவில்லை. இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதுமாக இங்கிலாந்து கையில் சென்றுகொண்டிருந்த நேரத்தில், ஜடேஜா கிராலியை ஓர் அழகான பந்தின் மூலம் பெவிலியனுக்கு அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து, அபாரமாக ஆடிக்கொண்டிருந்த டக்கெட்டும் 94 ரன்களில் நடையை கட்டினார். போப், ரூட் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் நிலையில், ஆட்டத்தில் இங்கிலாந்தின் கை ஓய்கியுள்ளது. இங்கிலாந்து அணி 133 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், நாளை விரைவில் டாப் ஆர்டர் விக்கெட்களை எடுக்க இந்திய வியூகம் வகுத்தாக வேண்டும். மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா மீண்டு வருமா என்று பார்ப்போம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq8z8ewpv83o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.