Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

09 AUG, 2025 | 03:32 PM

image

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெறுவதுடன், துரிதகதியில் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 07.08.2025 இரவு இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போன நிலையில் தேடப்பட்டுவந்த முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  முத்துஐயன்கட்டு இடதுகரை, ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்னும் குடும்பஸ்தர் முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இன்று சனிக்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த 07.08.2025 வியாழக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் உள்ளடங்கலாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த ஐவர், முத்துஐயன்கட்டுக் குளத்திற்கு அண்மைய பகுதியில் அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் குறித்த பகுதிக்குச் சென்றபோது, ஒரு இளைஞனை இராணுவத்தினர் மிகக் கொடூரமாகத் தாக்கிக்கொண்டிருந்ததாக நேரில் பார்வையிட்ட ஊர்மக்கள் தெரிவிக்கின்னர்.

இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட  இளைஞனை ஊர்மக்கள் காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் இராணுவத்தினர் தாக்கமுற்பட்டுள்ளதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து ஊர் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற பலத்த முரண்பாட்டினையடுத்து, இராணுவத்தினர் இளைஞனை ஊர்மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு இராணுவத்தினரால் தாக்கப்பட்ட குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல்போயிருந்த நபரை ஊர்மக்கள் இணைந்து முத்துஐயன்கட்டுக்குளத்தில் தேடியதுடன், கடந்த 08.08.2025அன்று முத்துஐயன்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இத்தகைய சூழலிலேயே இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போயிருந்தநபர் 09.08.2025 இன்று காலை முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக இனங்காணப்பட்டிருந்தார்.

குறிப்பாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முத்துஐயன்கட்டுப் பகுதியிலுள்ள இராணுவத்தினர் குறைந்தவிலையில் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்கிவந்ததாகவும், இவ்வாறு இராணுவத்தால் இளைஞர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்த பின்னணியிலேயே இராணுவத்தால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த கொலைச்சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழலில் சடலம் இனங்காணப்பட்ட  குறித்த இடம் குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு, சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் த.பிரதீபன் வருகைதந்திருந்தார்.

இந்நிலையில் நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிசாரால் தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இராணுவத்தின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து நீதிபதியிடம் முறையிட்டிருந்தார். அதேவேளை மக்களாலும் இதன்போது நீதிபதியிடம் முறையீடுகள் செய்யப்பட்டன.

மக்களின் முறைப்பாடுகளை பொலீசாரிடம் வாக்குமூலமாகப் பதிவுசெய்யுமாறு நீதிபதியால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக மக்களிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது போலிசாரிடம் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1000461791.jpg

1000461807.jpg

1000461789.jpg

1000461793.jpg

1000461779.jpg

https://www.virakesari.lk/article/222166

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை

முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை

முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (9) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் 7 இளைஞர்கள் சென்றதாகவும், அவர்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளதுடன் தப்பியோடிய ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன் அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டேன். 

இது தொடர்பில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியிருந்தேன். பொலிஸார் இது தொடர்பில் நீதியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். 

அத்தோடு, எமது உயர்மட்ட அமைச்சர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். 

ஆகவே, இச் சம்பவம் தொடர்பில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத் தன்மையினை வெளிபபடுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

-வவுனியா தீபன்-

https://adaderanatamil.lk/news/cme3z7wt802bqqp4k1h7g2pps

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன் : சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது : மூவருக்கு விளக்கமறியல்!

09 AUG, 2025 | 08:08 PM

image

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (8) முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போன நிலையில் இன்று காலை (09) குறித்த குடும்பஸ்தர் குளத்திலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்ட நிலையில், சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதில், முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (07) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஐவர் சென்றுள்ளனர்.

இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், இன்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு சென்ற இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

காணாமல்போன குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி நேற்று வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த காணாமல்போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1000461775.jpg

1000461785.jpg

1000461787.jpg

1000461773.jpg

https://www.virakesari.lk/article/222183

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரே பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியுள்ளனர், இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை- கஜேந்திரகுமார்

Published By: RAJEEBAN

09 AUG, 2025 | 06:36 PM

image

இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

எங்களிற்கு கிடைத்த தகவலின் படி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலை. அவ்வாறே எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர் முகாமிற்கு சென்ற பிறகு அவரை கொலை செய்துதான் குளத்தில் போட்டிருக்கின்றார்கள் என அங்கிருக்ககூடியவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வடக்குகிழக்கில் குறிப்பாக முல்லைத்தீவில், ஒன்றிற்கு இரண்டு என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் காணப்படுகின்றனர்.

ஒரு இராணுவசிப்பாய் இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அங்கு கொலை நடந்தால் கூட இராணுவத்திற்கு தெரியாமல் நடக்க முடியாத நிலைதான் அங்கு காணப்படுகின்றது.

அதுதான் அங்கு காணப்படுகின்ற யதார்த்தம், ஆகவே இந்த நிலையிலே, ஒரு இனப்படுகொலையையே செய்திருக்கின்ற ஒரு இராணுவம் 16 வருடங்களாக அந்த இனப்படுகொலை தொடர்பாக எந்த வித பொறுப்புக்கூறலும் நடக்காமலிருக்க, அந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட நபர்களே பக்கத்து பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியியுள்ளனர்.

பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில வீதியில் நடந்து செல்கின்றார்கள். பிள்ளைகளை கடத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில் வந்து நிற்கின்றார்கள்.

அவர்கள் பாடசாலைக்கு செல்கின்றார்கள், சிவில் பாதுகாப்பு படையினர் என தெரிவித்துவிட்டு  முன்பள்ளிகளில் படிப்பிக்கின்றார்கள்.

ஆகவே அவர்கள் செய்த நேரடிகுற்றங்களிற்கு பொறுப்புக்கூற வைக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்  என்பது ஒன்று.

ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்;துகொண்டுள்ள நிலையிலே தொடர்ந்தும் தண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் அந்த மக்கள் மத்தியில் இருப்பது என்பது, அந்த மக்களை இன்னும் இன்னும் மிக மோசமான ஒரு மனஉளைச்சலிற்கு, அவர்களின் மனதை உடைக்கின்ற ஒரு செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இராணுவத்தினர் முழுமையாக பொறுப்புக்கூறவைக்கின்ற வரைக்கும், இராணுவத்தில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட முழுப்பேரும் அதிலிருந்து முழுமையாக அகற்றப்படும் வரையிலாவது அந்த இராணுவம் வடக்குகிழக்கிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைப்பதற்கு காரணம் எங்களிற்கு ஏதோ விசர் என்பதற்காக  இல்லை. அவர்கள் அங்கிருக்க கூடாது , அந்த மக்களிற்கு அவர்கள் அங்கிருப்பதே ஒரு ஆபத்து.

இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை.

https://www.virakesari.lk/article/222181

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தையன்கட்டு சம்பவம்; அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? - சாணக்கியன் கேள்வி

10 AUG, 2025 | 10:01 AM

image

(நா.தனுஜா)

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது.

முத்தையன்கட்டு சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சாணக்கியன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,  

படையினரால் அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் முத்தையன்கட்டு ஏரியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வசிப்பவர்கள் வழங்கிய தகவல்களின்படி, சிதைவுற்ற உலோகப்பொருட்களை எடுத்துச்செல்வதற்காக நான்கு இளைஞர்கள் முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பிய நால்வரில் ஒருவர் காணாமல்போனதாகவும் அறியமுடிகிறது.

அவ்வாறு காணாமல்போன இளைஞரின் சடலம் பின்னர் முத்தையன்கட்டு ஏரியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதிலும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது. 

இச்சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222201

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு!

adminAugust 11, 2025

Mullai-death1.jpg?fit=840%2C420&ssl=1

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07ஆம் திகதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த 32வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் (09.08.25) முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் காவற்துறையினரால் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது.

யாழ் போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாமல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளது.

https://globaltamilnews.net/2025/219108/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரின் அடக்குமுறை முத்து ஐயன்கட்டு குளத்தடி சம்பவம் ஊடாக வெளிப்பட்டுள்ளது - கோமகன் சுட்டிக்காட்டு

10 AUG, 2025 | 05:25 PM

image

முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை மூலம் மீண்டும் இராணுவத்தினரின் அராஜகம் வெளிபட்டிருப்பதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயல்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்ப்பாணம் - அராலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யுத்த காலத்தில் எவ்வாறு இராணுவ மயமாக்கப்பட்டிருந்ததோ அதே இராணுவ மயமாக்கல் தொடர்ச்சியாக தாயக பிரதேசங்களில் நிலவுகிறது. 

தென்பகுதியில் இவ்வாறான இராணுவ எண்ணிக்கையோ அல்லது இராணுவ செயல்பாடுகளோ காணப்படுவதில்லை. ஆனால் எமது பிரதேசங்களிலேயே இது காணப்படுகின்றது.

எனவே உடனடியாக இந்த இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும். தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவத்தினரை தென்பகுதிகளுக்கு அனுப்பினால் தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவ மயமாக்கலை குறைக்கலாம்.

மீண்டும் இராணுவத்தினருடைய அடக்குமுறையானது முத்து ஐயன்கட்டு குளத்தடியில் மேற்கொள்ளப்பட்ட குடும்பஸ்தரின் படுகொலை மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது. எனவே இராணுவத்தினரின் இவ்வாறான அராஜகங்கள் உடனடியாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222262

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தையன்கட்டில் இராணுவ முகாமிற்கு சென்ற இளம் குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம்; பொலிஸார் விஷேட அதிரடி படையினர் விஷேட பாதுகாப்பு

11 AUG, 2025 | 04:51 PM

image

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் சடலம் இன்றையதினம் திங்கட்கிழமை (11) அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து கடந்த 07 திகதி இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டட்டு ஐவர் முகாமிற்கு சென்றநிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இறந்தவவரின் சடலம் இன்றையதினம் 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இது சம்பவம் குறித்து  கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1000466401.jpg

1000466401.jpg

1000466407.jpg

1000466412.jpg

1000466410.jpg

1000466415.jpg

1000467142.jpg

1000466399.jpg

1000467138.jpg

https://www.virakesari.lk/article/222322

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தையன்கட்டு குளத்தில் இளைஞர் சடலம் – பொருட்களை திருட வந்தவர்களை விரட்டியதில் ஏற்பட்டது என பொலிஸ் விளக்கம்

Published By: VISHNU

12 AUG, 2025 | 01:59 AM

image

(எம்.வை.எம்.சியாம்)

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அத்துடன் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடுவதற்கு முற்பட்டவர்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இன்றி விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன் கட்டு இடதுகரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் எனும் இளைஞர் காணாமல் போயிருந்தார். தொடர்ச்சியாக அப்பிரதேச மக்களால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த 9ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் முத்தையன்கட்டு குளத்துக்கு அண்மித்து அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமுக்கு சென்றிருந்த தருணத்தில் இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த பின்னணியில் இந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும் எனவும் இராணுவத்தினரே குறித்த இளைஞரின் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில்   பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சம்பவத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் ஒட்டுச் சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப்படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு அண்மைய நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி இரவு குறித்த முகாமையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதற்காக முகாமின் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஐந்து பேரை வெளியேற்றுவதற்காக முகாமில் இருந்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போது தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் முத்தையன்கட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்  பொறுப்பின் கீழ' விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 5 பேரும் முகாம் வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களை விரட்டியடிக்க முற்பட்ட போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து குறித்த முகாமில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பொருட்களை திருடுவதற்கு சந்தேக நபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இரு இராணுவ சிப்பாய்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சந்தேகநபர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இருக்காது. விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் தராதரம் பாராமல் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/222361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுச்சுட்டான் இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் ஆராய இரு விசேட பொலிஸ் குழுக்கள் - பொலிஸ் பேச்சாளர்

17 AUG, 2025 | 07:41 PM

image

(எம்.மனோசித்ரா)

ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் இரு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (17) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலையத்தின் இரு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இதுவரையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் கொள்ளையிடுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டு காயப்படுத்திய குற்றச்சாட்டில் மற்றைய சிப்பாய் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இம்மூவரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முகாமுக்குள் உட்பிரவேசிக்க முயன்ற சிவில் பிரஜைகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/222753

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவ முகாமில் தமிழ் இளைஞர் அடித்துக் கொலையா? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால்

இலங்கை ஹர்த்தால்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலானது, யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெற்றியளித்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான இராணுவத்தினரை நிலைநிறுத்துவதற்கு எதிராகவும், முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவத்திற்கு எதிராகவும் இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 9ம் தேதி சடலமாக மீட்கப்பட்ட அந்த இளைஞர் ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

ஹர்த்தால் வெற்றி அடைந்ததா?

யாழ்ப்பாணம் நகரம் திங்கட்கிழமை முழுமையாக வழமை போன்று இயங்கி வந்ததை, அங்கு சென்ற பிபிசி குழுவினால் அவதானிக்க முடிந்தது. எனினும், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் ஓரளவு இயல்பு வாழ்க்கை முற்பகல் வேளையில் பாதிக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

அதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், அந்த ஹர்த்தால் நடவடிக்கை முழுமையாக வெற்றியளித்துள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொது போக்குவரத்துக்கள் வழமை போன்று இயங்கியதுடன், பள்ளிகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டமையும் வழமை போன்று இயங்கியதை அவதானிக்க முடிந்தது.

தமிழ் இளைஞனின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு - முத்தையன்கட்டுக் குளத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று கடந்த 09ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள ராணுவ முகாமொன்றிற்குள் ராணுவத்தினால் வரவழைக்கப்பட்டதாக கூறப்படும் ஐந்து நபர்களில் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.

ராணுவ முகாமில் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற இரும்பு பொருட்களை பெற்றுத் தருவதாக ராணுவ அதிகாரிகள் கூறியே, இந்த இளைஞர்கள் சென்றுள்ளதாக போலீஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், ராணுவ முகாமிற்கு இந்த ஐந்து இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்படும் ஐந்து இளைஞர்களில் நால்வர் தப்பித்துள்ளதாகவும், ஒருவரின் சடலமே இரண்டு தினங்களுக்கு பின்னர் இவ்வாறு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

சம்பவத்தில் 32 வயதான ஒரு குழந்தையின் தந்தையான எ.கபில்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்திருந்தார்.

மூன்று ராணுவ சிப்பாய்கள் கைது

முல்லைத்தீவு குளமொன்றிலிருந்து தமிழ் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று இராணுவ சிப்பாய்கள் ஒட்டுச்சுட்டான் போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று ராணுவ சிப்பாய்களையும் எதிர்வரும் 19ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் ஒட்டுச்சுட்டான் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.

ராணுவத்தின் பதில்

ராணுவத்தின் முகாமிற்குள் இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில் சிலர் பிரவேசித்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை நடத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் அவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு சட்டவிரோதமாக ராணுவ முகாமிற்குள் பிரவேசித்த ஒருவரை தமது தரப்பினர் பிடித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ராணுவத்தினால் அந்த சந்தர்ப்பத்தில் பிடிக்கப்பட்ட சந்தேக நபர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர், ஏற்கனவே ராணுவ முகாமிற்குள் பிரவேசித்து திருட்டு சம்பவமொன்றில் ஈடுபட்டமை குறித்த வழக்கொன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்றதாக சொல்லப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பின்னர் எமக்கு அறிய கிடைத்தது. அது தொடர்பில் எமக்கு சரியாக கூற முடியாது. ஏனென்றால், அவர்கள் தப்பிச் சென்றவர்கள். அந்த நபர் முகாமிற்குள் வந்தாரா என்பது தொடர்பில் கூட நாம் அறிந்திருக்கவில்லை. ராணுவம் சோதனை செய்யும் போது தப்பிச் சென்றுள்ளதாக தப்பி சென்றவர்கள் போலீஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர். அதில் ஒருவரே குளத்திற்குள் குதித்து இறந்துள்ளார். அதற்கான பொறுப்பை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறித்த இளைஞர்கள் இரவு 11.30 மணிக்கு ராணுவ முகாமின் பின்புறத்தின் ஊடாக ராணுவ முகாமிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

''ராணுவ முகாமிற்கு வருகைத் தருமாறு கூறி, பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வருகைத் தர சொல்லப்படுமாக இருந்தாலும், இரவு 11.30க்கு திருட்டுத்தனமாக பின்புறத்தில் வருகைத் தருமாறு நாங்கள் சொல்ல மாட்டோம் அல்லவா?. அப்படி வருகைத் தருமாறு கூறப்படுமாக இருந்தால், நாங்கள் பகல் வேளையில் முன் வழியாக பொறுப்பான அதிகாரி ஒருவர் அழைத்து வந்திருப்பார். இரவு 11.30க்கு வருகைத் தருமாறு நாங்கள் சொல்ல மாட்டோம்.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை ஹர்த்தால்

பட மூலாதாரம், VARUNA GAMAGE

படக்குறிப்பு, ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே

மூன்று ராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன?

ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்தமை குறித்த சம்பவம் தொடர்பில் இந்த மூன்று சிப்பாய்களும் கைது செய்யப்படவில்லை என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை திருடுவதற்கு உதவி வழங்கியமை தொடர்பில் இருவர் போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து தப்பிச் சென்றவர்களின் வழக்கிய வாக்குமூலத்திற்கு அமைய, ராணுவ சிப்பாய் ஒருவர் தம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மற்றைய ராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதைத் தவிர்த்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் எந்தவொரு சிப்பாயும் கைது செய்யப்படவில்லை என ராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

ராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து, பொருட்களை திருட முயற்சித்த சம்பவமே இந்த இடத்தில் நேர்ந்துள்ளதாகவும், அதை விடுத்து, தமது தரப்பினர் யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகின்றார்.

வடக்கு, கிழக்கில் ஏன் ராணுவ முகாம்கள் அதிகம்?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009ம் ஆண்டு ராணுவம் வசம் 8 சதவீத நிலப் பரப்பு காணப்பட்டதாகவும், இன்றைய தினத்தில் 0.38 சதவீத நிலப்பரப்பே காணப்படுவதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவிக்கின்றார்.

ஏனைய அனைத்து நிலப்பரப்புகளையும் ராணுவம் விடுவித்து, பொதுமக்களுக்கு கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

காணி உரிமையாளர்களிடம் காணி தொடர்பான சட்ட ஆவணங்கள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களினாலேயே தற்போது எஞ்சியுள்ள காணிகளை விடுவிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

ராணுவம் உண்மையிலேயே பெருமளவான காணிகளை விடுவித்துள்ளதா?

போர் முடிவடைந்த தருணத்தில் 8 சதவீதமாக காணப்பட்ட பொதுமக்களின் காணிகள் பெருமளவு விடுவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறும் கருத்தை, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்று பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''அவர் முற்று முழுதான விடயம் தெரியாதவராக இருக்க வேண்டும். 2003ம் ஆண்டிலிருந்து இது சம்மந்தமான வழக்குகளை நான் செய்துக்கொண்டிருக்கின்றேன். 22 வருடங்கள் செய்துக் கொண்டிருக்கின்றேன். இப்போதும் பலாலி நிலப்பகுதியை சூழவுள்ள காணிகள் தொடர்பாக 2176 வழக்குகளை நான் மட்டும் கையாண்டுக்கொண்டிருக்கின்றேன். எல்லாம் உறுதிப் பத்திரங்கள் இருக்கின்ற வழக்குகள். அத்தனைக்கும் உறுதிப் பத்திரங்கள் இருக்கின்றன. அவர் சொல்கின்ற நிலப் பரப்பு சதவீதமானது, மற்றைய மாகாணங்களை ஒப்பிட்டு சொல்கிறாரா? மற்றைய மாகாணங்களில் ராணுவ பிரசன்னம் எத்தனை சதவீதம் இருக்கின்றது என்று சொன்னாரா? இல்லை. அதைத் தானே பார்க்க வேண்டும். இது ஒரு நாடு. எல்லோரும் சமம் என்று எல்லாம் சொன்னால், எல்லா பிரதேசங்களிலும் சமமான வீதத்திலேயே ராணுவ பிரசன்னம் இருக்க வேண்டும். இது அப்படி இல்லையே. வடக்கு கிழக்கில் மிகப் பெரிய அளவில் ராணுவ பிரசன்னம் இருக்கின்றது. மக்களின் குடியிருப்புக்களுக்கும் மக்களின் வாழ்க்கைக்குள் இணைந்த வகையில் ராணுவம் பிரசன்னம் இருக்கின்றது. ராணுவ மயமாக்கல் என்பது அது தான். அது எந்த காலத்திலும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.'' என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

ஏனைய மாகாணங்களில் ராணுவ இருப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து, பிபிசி தமிழ் ராணுவ ஊடகப் பேச்சாளரிடம் வினவியது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு காரணமாக ராணுவ முகாம்களில் எண்ணிக்கை மற்றும் ராணுவ அதிகாரிகளின் தகவல்கள் குறித்த விடயங்களை வெளியிட முடியாது என அவர் பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg35n2yng1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு : கைதான 4 இராணுவ வீரர்களுக்கும் விளக்கமறியல்

20 AUG, 2025 | 02:04 PM

image

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்படட இளைஞனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி  முன்னிலையில் குறித்த 4 இராணுவ வீரர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில் இருவரை சாட்சிகள் அடையாளம் காட்டியுள்ளனர்.  

முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் இராணுவத்தினர் சிலர் இளைஞர்களை அழைத்துள்ளதாகவும் பின்னர் அங்கு சில இராணுவத்தினர் அந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கிருந்து இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காணாமல்போன நிலையில், பின்னர் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் 32 வயதுடைய எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்பவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சார்ஜன்ட் உள்ளிட்ட 4 இராணுவத்தினரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222935

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.