Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கீகரித்தலின் அரசியல்

sudumanal

gaza-p.jpg?w=563

எல்லாப் பிரச்சினைகளும் 2022 ஒக்ரோபர் 7 இலிருந்துதான் தொடங்கியதான ஒரு தோற்றத்துடன்தான் இன்றைய பலஸ்தீனம் -இஸ்ரேல் இடையிலான பிரச்சினைகள் அணுகப்படுவது தற்செயலானதல்ல. திட்டமிட்ட செயல் அது.

பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரித்தல் என்பதே ஓர் வரலாற்றுக் கேலிதான் என்றபோதும், அதை பேசவேண்டியிருக்கிறதுதான் வரலாற்று அவலம். இஸ்ரேல் என்ற நாடு போலன்றி பலஸ்தீனம் என்ற நாடு 1948 வரை வரைபடத்தில் இருந்த ஓர் நாடு. அதை அங்கீகரிக்கிறோம் என சொல்ல வருமளவுக்கு அரசியலை தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்கள் யார். பலஸ்தீனத்தை காலனியாக்கி வைத்திருந்த பிரித்தானியர்கள்தான். 1947 இல் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதிகார நிழலில், சியோனிஸ்டுகளின் தொடர் முயற்சியில், இஸ்ரேல் என்ற நாடு முளைத்தெழும்பியது.

உலகத்திலேயே இன்றுவரை தனக்கான நிரந்தர எல்லையை வகுத்துக் கொள்ளாத ஒரேயொரு நாடு இஸ்ரேல்தான். அதை ஓர் அரசாக அங்கீகரித்த உலகம், ஏற்கனவே அரசாக இருந்த பலஸ்தீனத்தை அரசற்றவர்களாக ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. அந்தளவுக்கு இஸ்ரேலிய சியோனிச ஆட்சியும் அமெரிக்காவிலுள்ள சியோனிச லொபியும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக, அதேநேரம் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்ளையை தமக்கேற்ப தகவமைக்குமளவுக்கு செயற்பட்டு வந்தன. இந்த சியோனிச அரசு பலஸ்தீன இனவொதுக்கலையும் மண் ஆக்கிரமிப்பையும் குடியேற்றத்தையும் இனவழிப்பையும் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாகப் பேணி இன்று இனப்படுகொலை என்ற அளவுக்கு உயர்த்தி வெறியாட்டம் ஆடுகிறது.

வரலாறு இவ்வாறாக நகர்ந்துவர ஐரோப்பியர்களும் அமெரிக்காவும் அவர்தம் பச்சை எடுபிடிகளும் ஒக்ரோபர் 7 கமாஸின் தாக்குதலை பூதாகாரமாக்கி படம் காட்டினர். இஸ்ரேல் என்ற நாடு தோன்றி 1948 இல் இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கெதிராக அவர்கள் ஒருபோதுமே பேசியது கிடையாது. அந்த சியோனிசப் பயங்கரவாத செயற்பாட்டின்போது ஏழு இலட்சம் பலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டார்கள். 15’000 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களை 530 கிராமங்களிலிருந்து விரட்டியடித்து, அரக்கிப் பெற்ற நிலத்தில் இஸ்ரேல் அகலக் கால்வைத்தது. 78 வீதமான பலஸ்தீன நிலப்பரப்பை கைப்பற்றி அமைந்ததுதான் இன்றைய இஸ்ரேல் என்ற நாடு. மேற்குலகுக்கு இது பயங்கரவாதமாகத் தெரியவில்லை. அவர்களது காலனிய வரலாற்றுக்கு இது புதியதுமல்ல.

விரட்டப்பட்ட பலஸ்தீனர்களுக்கு தம் பிரதேசத்தின் மீதான உரிமை குறித்து பேசாத மேற்குலகினர் ஹமாஸின் ஒக்ரோபர் தாக்குதலின்போது “இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாக்கும் உரிமை இருக்கிறது” என ஒருதலைப்பட்சமாக தத்துவம் பேசினர். இவர்கள் யார். இவர்கள்தான் இதுவரை பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரிக்காமல் இருப்பவர்கள். இப்போ ஐரோப்பியத் தெருக்களில் காஸா படுகொலைக்கு எதிராகவும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக நடக்கும் பிரமாண்டமானதும் உயிர்ப்பானதுமான ஆர்ப்பாட்டங்கள் தமது அரசியல் இருப்பை ஆட்டிவிடும் என்ற அச்சத்தில் “பலஸ்தீனத்தை அஙகீகரிக்கப் போகிறோம்” என பிரான்சும் ஜேர்மனியும் பிரித்தானியாவும் கடைசியாக அவுஸ்திரேலியாவும் கனடாவும் சொல்லவந்திருப்பது முக்கிய செய்தியாக இடம்பிடித்திருக்கிறது.

15 நவம்பர் 1988 அன்றைய பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத் அவர்கள் பலஸ்தீனத்தை இறைமையுள்ள ஓர் அரசாக பிரகடனப்படுத்தினார். அதன் தலைநகரம் கிழக்கு ஜெரூசலம் எனவும் அறிவித்தார். அதை அல்ஜீரிய நாடு முதலில் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் 82 நாடுகள் அங்கீகரித்தன. அதாவது 1988 நவம்பரிலிருந்து டிசம்பருக்குள் 83 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. இதற்குள் இந்தியா, சீனா, ரசியா, துருக்கி, பாகிஸ்தான், உக்ரைன் போன்ற நாடுகளும் அடக்கம். தொடர்ந்து 2000 வது ஆண்டிற்குள் மேலும் 20 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. இதற்குள் தென்னாபிரிக்கா, பிலிப்பைன், றுவண்டா, கென்யா, எத்தியோப்பியா என்பனவும் அடக்கம். 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 2000 இன் பின் 2012 வரையில் மேலும் 30 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. அவை பெரும்பாலும் தென்னமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள் ஆகும். பிரேசில் ,வெனிசுவேலா, பெரு, ஆர்ஜன்ரீனா, சிலி போன்ற நாடுகளும் தாய்லாந்து, லெபனான், சிரியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் இதற்குள் அடங்குகின்றன. இத்தாலி இதுவரை கள்ள மௌனம் காக்கிற போதும்கூட, 2013 இல் ஐநாவில் அங்கம் வகிக்காத வத்திக்கான் பலஸ்தீனத்தை அங்கீகரித்தது. 2013 இலிருந்து இன்றுவரை மேலும் 10 நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன.

இவ்வாறாக உலகின் 193 நாடுகளில் 143 நாடுகளும் வத்திக்கனும் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்த நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளது. 2014 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்தது. 2012 இல் ஐநா இல் 138 நாடுகள் பலஸ்தீனம் ஓர் உறுப்பு நாடாக வர வாக்களித்திருந்தபோதும், இன்றுவரை தொடர்ச்சியாக ‘வீட்டோ’ அதிகாரத்தை வைத்து அதை அமெரிக்கா இல்லாமலாக்கியபடிதான் வந்திருக்கிறது. 2012 இலிருந்து இன்றுவரை பலஸ்தீனம் ‘பார்வையாளர்’ நாடாகவே ஐநா இல் குந்தியிருக்கிறது.

இதுவரை அங்கீகரிக்காத மிகுதி 50 நாடுகளில் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மட்டுமல்ல, பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மன் உட்பட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்குகின்றன. அப்படியிருக்க, பலஸ்தீன அரசை பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி நாடுகள் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் ஐநா வில் அங்கீகரிக்கப் போவதாக முன்னோட்டமிட்டதை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

ஐநா பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விட்டால் பலஸ்தீனம் ஓர் அரசாக மிகப் பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்படும் என்பது உறுதி. அது பாதுகாப்புச் சபைக்குப் போகும்போது அது அமெரிக்காவினால் வீட்டோ கொண்டு அடித்து வீழ்த்தப்படும் என்பதும் தெரிந்த ஒன்றுதான். இது மக்ரோனுக்கும் தெரியும், இப்போ இந்தா அங்கீகரிக்கிறோம் என குரல்விடும் மேற்குலக நாடுகளுக்கும் தெரியும். இங்குதான் அரசியல் இருப்பை காப்பாற்ற வெகுண்டெழும் மக்களை சமாதானப்படுத்த செய்யும் நாடகமா இது என சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. எது எப்படியோ இராஜதந்திர ரீதியில் இவர்களின் அறிவிப்பை சாதகப்படுத்திக் கொள்ளலாம், சந்தேகத்தோடு!. இந்தச் சந்தேகத்தை தீர்க்கவேண்டியது அவர்கள்தான். அவர்களது செயற்திறன்தான். அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை இதுவிடயத்தில் பயன்படுத்தாமலிருக்க செய்துகாட்டும் முயற்சிகள்தான் அந்த செயற்திறன் ஆகும். 1988 இல் தொடங்கிய பலஸ்தீன அரசுப் பிரகடனத்தை இன்றுவரை 143 நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வரையான அவர்களின் மௌனத்துக்கு காரணம்தான் என்ன. அதற்கான சுயவிளக்கம்தான் என்ன. சுயவிமர்சனம்தான் என்ன என்பதை அவர்கள் பேசட்டும். கேட்போம்.

இஸ்ரேல் என்ற அரசை ஏற்கனவே அங்கிகரித்ததால், “இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கிற உரிமை இருக்கிறது” என சொன்ன இவர்கள், இப்போதாவது பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரிக்கிறோம் என வரும்போது “பலஸ்தீனத்துக்கு தன்னை பாதுகாக்கிற உரிமை இருக்கிறது” என இதுவரை அறிவிக்க முடியாமல் இருப்பது ஏன்?. இங்குதான் அவர்கள் ஹமாஸிடம் வருகிறார்கள்.

“ஹமாஸ் ஆயுதத்தை கீழே வைத்துவிட வேண்டும். அவர்கள் அரசியலுக்குள் வரக்கூடாது” என்பன போன்ற நிபந்தனைகளை உருவாக்குகிறார்கள். இதற்குள் தெரிவது அவர்களின் சூழ்ச்சிதான். ஹமாஸ் அரசியல் அதிகாரம் பெறுவது பெறாதது என்பதெல்லாம் பலஸ்தீன மக்களின் தெரிவுக்கானவை. இவர்களது தெரிவுக்கானதல்ல. அதை உச்சரிக்க இவர்கள் யார். அது இஸ்ரேலின் குரல். அதை இவர்களும் ஒலிக்கிறார்கள். காஸாவிலும் மேற்குக் கரையிலும் முதலில் ஆயுதத்தை கீழே வைக்க வேண்டியது -தாக்கும் நிலையிலுள்ள- இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் சியோனிச குடியேற்றவாதிகளும்தான். பாதுகாப்பு நிலைக்குள் தள்ளப்பட்ட ஹமாஸ் அல்ல.

ஹமாஸ் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய அல்கைடா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போன்றதல்ல. சர்வதேச ரீதியில் பயங்கரவாதச் செயல் புரிந்த அமைப்புமல்ல. ஹமாசுடன் உடன்படுவதா இல்லையா என்ற விடயம் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்னால் எழும் கேள்வி அவர்களின் இருப்பை சாத்தியப்படுத்துவது எது என்பதே. அவர்கள்தான் இன்று நடைமுறையில் பலஸ்தீன அரசின் காஸா பகுதியை பிரதிநிதிப்படுத்தக் கூடிய, பாதுகாக்கும் உரிமையை செயற்படுத்தக்கூடிய சிறிய சக்தியாக இருக்கின்றனர். அவர்களிடம் வான்படை இல்லை. கடற்படை இல்லை. ஏன் இராணுவமும் இல்லை. வெறும் கெரில்லாக் குழு வடிவில் சுருங்கிப் போயிருப்பவர்கள் அவர்கள். அவர்களை வளர்ப்பது இஸ்ரேலிய அரச பயங்கரவாதம்தான்.

அப்படியிருக்க ஹமாஸை ஆயுத நீக்கம் செய்ய அல்லது அரசியல் நீக்கம் செய்யக் கோருவதானது, மக்கள் பக்கம் முகம் காட்டும்போது பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது போலவும், இஸ்ரேல் பக்கம் முகம் காட்டும்போது ஹமாஸை அங்கீகரிக்கவில்லை என்பதுபோலவும் நடத்தும் இரட்டை வேடம் ஆகும். ஹமாஸை அஙகீகரிக்கவில்லை என்பதன் மூலம் பலஸ்தீன அரசு உருவாவதை இல்லாமல் செய்து, அதற்கான பழியை ஹமாஸிடம் போடுவது சுலபமானது. இன்னொரு பக்கம் தமது மக்களை அவர்களது வீதிநிரம்பும் போராட்டங்களை காயடிக்கும் வேலையை இதன் மூலம் செய்யலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.

மேற்குலகம் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என நெத்தன்யாகுவின் வார்த்தைகளில் உச்சரிக்கிறார்கள். காஸா மக்கள் அல்லது முழு பலஸ்தீன மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என நமக்குத் தெரியாது. அது அவரவர் தெரிவாக, தவிர்க்க முடியாதவையாக அல்லது நியமங்களை வைத்து அளப்பவையாக அல்லது பிரச்சார உத்தி கொண்டவையாக இருக்கும். அரச பயங்கரவாதம் சட்டங்களால், ஆட்சியதிகார நிறுவனங்களால் இயல்பாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அரச பயங்கரவாதத்தையோ எதிர்ப் பயங்கரவாதத்தையோ இயல்பாக்கம் செய்வது ஆபத்தானது. அதேநேரம் அவை நிகழ்த்தப்படுதலின் மீதான ஆதரவு, எதிர்ப்பு அல்லது இரண்டுக்கும் இடையிலான மூன்றாவது நிலைப்பாடு என்பது அவரவர் சார்ந்த கண்ணோட்டத்தில் வேறுபடவே செய்கிறது. யூத இன புத்திஜீவியான நோர்மன் பின்கல்ஸ்ரைன் அவர்கள் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என அழைப்பதை ஏற்கவில்லை. அது குறித்து அவர் கூறுவது இதுதான்.

“2006 இல் காஸாவிலும் மேற்குக் கரையிலும் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மை வெற்றியை ஈட்டி அதிகாரத்துக்கு வந்தனர். இவ்வாறு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இனை நிராகரித்து இஸ்ரேல் ‘முற்றுகையை’ செயற்படுத்தியது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. காஸாவுக்குள் வரும் உணவுப் பொருட்களின் அளவையும் நீரின் அளவையும் மருந்தின் அளவையும் மற்றும் எல்லா அத்தியாவசிய பொருட்களையும் இஸ்ரேல்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. (இன்றும் அதேதான் நீடிக்கிறது)

காஸாவுக்குள் எவருமே உள்நுழைய முடியாது. அதேபோல் காஸாவிலிருந்து எவருமே வெளியே செல்ல முடியாது. இந்த 19 (2006-2025) வருடத்திலும் இளையோர்கள் இந்த 5×25 சதுர மைல் பரப்பளவுக்கு வெளியே தம் வாழ்வில் எதையும் கண்டதில்லை. முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் காஸாவை ஒரு “திறந்தவெளிச் சிறைச்சாலை” என வர்ணித்தார். இஸ்ரேலின் முன்னணி சமூகவியலாளர் Baruch Kimmerling ஹிப்ரூ மொழியில் (2003) எழுதிய “ஆரியல் ஷரோனின் பலஸ்தீனத்துக்கு எதிரான போர்” என்ற தனது நூலில் காஸாவை இதுவரை தோன்றியிராத மிகப் பெரும் “கொன்சன்றேசன் முகாம்” (கொ.மு) என வர்ணித்தார். அரைவாசிப் பேர் இந்த கொ.மு க்குள் பிறந்து குழந்தைகளாகி சிறுவர்களாகி இளையோர்களாகி வளர்ந்தவர்களாகினர். அவர்களது அனுபவங்கள் இந்த கொ.மு எல்லைக்குள்தான் இருந்தது.

இந்த கொ.மு இல் பிறந்த அதே மனிதன் ஒக்ரோபர்-7 இல் அந்த அடிமை நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றதை, அதற்காக அவர்கள் என்னவிதமான தந்திரோபாயத்தை வழிமுறையை உபயோகித்தார்கள் என்பதை யார்தான் விமர்சிக்க முடியும்?. அப்படியொரு கொ.மு இனுள் நானும் பிறந்து 20 வருட வாழ்வை அங்கு வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என எனக்குத் தெரியாது” என்றார்.

இந்த யதார்த்தத்தை மறுத்து மேற்குலகின் ஜனநாயக மதிப்பீடுகளும் அரசியல் சார்புகளும் நலன்களும் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என வரையறை செய்கின்றன.

சரி கனவான்களே. அப்படியேதான் இருக்கட்டும். ஓர் அரசாக அங்கீகரிக்கப் போவதாக நீங்கள் சொல்லும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் காஸா படுகொலைக்கு எதிராகவும்தானே உங்களது நாட்டு மக்கள் உணர்வுபூர்வமாக போராடுகிறார்கள். உங்கள் குரலுக்கு எதிராக அல்லவே. அவர்களை ஏன் கைதுசெய்ய வேண்டும். அடித்து நொருக்க வேண்டும். சட்டங்களை இயற்றி சிறை வாழ்வுக்குத் தள்ள வேண்டும். அவர்கள் அமைதியாகத்தானே போராடுகிறார்கள்.

நேட்டோ என்ற மிகப் பெரும் வன்முறை இயந்திரத்தை இயக்கி எத்தனை போர்களை செய்தீர்கள். மில்லியன் மக்களை கொன்றீர்கள். அரசுகளை வீழ்த்தினீர்கள். தலைவர்களை கொலை செய்தீர்கள். மில்லியன் குழந்தைகளை கொலை செய்தீர்கள். எல்லாமும் நெத்தன்யாகுவுக்கும் தெரியும். 2022 ஒக்ரோபரிலிருந்து இன்றுவரை கள்ள மௌனம் சாதித்துவிட்டு, இப்போ காஸா குழந்தைகளை கொல்வதை முன்னிறுத்திப் பேசும் உங்கள் அறத்தின் போலிமையை நெத்தன்யாகுவும் அறிவார். அதனால்தான் உங்கள் குரல் மீது அவர் உமிழ்ந்துவிட்டு நகர்ந்து போகிறார்.

பலஸ்தீனம், இஸ்ரேல் என்ற “இரு அரசு” (two state) தீர்வு என்பது ஒரு வகைப்பட்ட அரசியல் தீர்வு. அது சரியா, தவறா, சாத்தியமா என விவாதங்கள் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. சரியென்றே எடுத்துக் கொள்வோமே. அதை உறுதியாக்க அந்த மண்ணில் மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். தேக ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். சந்ததிகள் தப்பிப் பிழைக்க வேண்டும். அவர்கள் கடந்த 22 மாதங்களாக பசிக்கு எதிராக போராடுகிறார்கள். எலும்புக் கூடுகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அதற்கான உங்களது தீர்வு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதை செயற்படுத்த இஸ்ரேலின் மீது நீங்கள் செயற்படுத்தும் அழுத்தம் என்ன என்பதும் தெரியவில்லை. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை ஏதும் இல்லை. ஆயுத ஏற்றுமதித் தடை ஏதுமில்லை. ஒப்பந்த இடைநிறுத்தங்கள் ஏதுமில்லை. உக்ரைன் பிரச்சினையில் இரசியா மீது 27’000 பொருளாதாரத் தடைகளை விதித்த அந்த அளவுகோல் இங்கு ஏன் வளைந்து நெளிந்து கொண்டது?

ஐநாவின் அங்கீகாரத்தோடுதானா நீங்கள் நாடுகளின் இறைமையை மதிக்காமல் உட்புகுந்து போர் நடத்தி மக்களை கொன்றீர்கள். இஸ்ரேல் சர்வதேச மக்களின் குரலையும் கேளாமல், ஐநா வினது தீர்மானங்களையும் குரலையும் கேளாமல், ஓர் இனப்படுகொலையை கண்முன்னே நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று அதே அதிகாரத்தை எடுத்து இஸ்ரேலை புறந்தள்ளி, காஸாவுக்குள் புகுந்து உணவு தண்ணீர் மருத்துவம் என உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், அந்த மக்களுக்கு இஸ்ரேலிய கொலைப்படையிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்கவும் முடியாமலிருப்பதற்கான விளக்கம்தான் என்ன. சும்மா விமானத்திலிருந்து உணவுப் பொதியை ஓரிரு முறை வீசி படம் காட்டியதற்கு அப்பால் எதுவரை சென்றிருக்கிறீர்கள். உலக மக்களின் கண் முன்னால் இஸ்ரேல் நடத்தும் ஓர் பட்டினிப் படுகொலையை விடவும், இனப்படுகொலையை விடவும், 20’000 குழந்தைகளின் மரணத்தை விடவும் இஸ்ரேலின் ‘இறைமை’ உங்களுக்கு முக்கியமானதாகப் போய்விட்டது. உங்கடை ஜனநாயகம் மனித உரிமை அறம் எல்லாமும் புல்லரிக்க வைக்கிறது. போங்கள்! -

Ravindran Pa

https://sudumanal.com/2025/08/15/அங்கீகரித்தலின்-அரசியல்/#more-7337

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் பல இஸ்ரேலிய குடியேற்றங்களை புதிதாக உருவாக்குகிறார்கள் என கூறபடுகிறது, இதன் மூலம் அவர்களது தாயக கோட்பாட்டை சிதைக்க முற்படுகிறார்கள் இஸ்ரேலியர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேலின் நடவடிக்கைகளை பார்த்தால் அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் என்றுமே யூத இனத்தை கைவிட மாட்டார்கள்.

இன வரலாறுகளும் சந்ததி வரலாறுகளும் இனிவரும் காலங்களில் எடுபட மாட்டாது. நாளைய தேவை எதுவோ அதை மட்டும் செய்.

இதைத்தான் அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.