Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிராபியென் ப்ளாக்

10 Min Read

கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும்.

Published:Today at 9 AMUpdated:Today at 9 AM

கல்லீரல்

கல்லீரல்

னித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, பொருத்தி மறுவாழ்வு பெற முடியும். இவ்வளவு சிறப்புகளை உடைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் கல்லீரல் சிகிச்சை மருத்துவர் விவேக்.

விலா எலும்பின் வலதுபுறத்தில் 1.2 முதல் 1.5 கிலோவரையிலான எடையுடன் கல்லீரல் அமைந்திருக்கும். இதில் 50 சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும். மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிற்று வீக்கம், ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். 50 சதவிகிதத்துக்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தானே சரிசெய்துகொள்ள கல்லீரல் போராடும்.

மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

கல்லீரலின் வேலை என்ன?

டலில் 500 வகையான வேலைகளை இது செய்கிறது. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்துதான் சுரக்கின்றன. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துகளைச் சேகரித்துவைக்கும் தன்மை கல்லீரலுக்கு உண்டு.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

சில நேரங்களில் உணவுகளைத் தவிர்க்கும்போதும் உண்ணாவிரதம், நோன்பு இருக்கும்போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை, சேமித்துவைத்திருக்கும் சத்துகளிலிருந்து அளித்து ஈடுசெய்யும். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்வதால் கல்லீரலை, `பெரிய தொழிற்சாலை’ என்றே குறிப்பிடலாம்.

கல்லீரலை பாதிக்கும் நோய்கள்

ம் நாட்டில் 100 சதவிகித கல்லீரல் நோயாளிகளில் 75 சதவிகிதம் பேருக்கு மது குடிப்பதால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. `ஹெபடைட்டிஸ்’ வைரஸ்களால்

(Hepatitis A,B,C,D,E) கல்லீரல் அழற்சிநோய்’ (Hepatitis), கல்லீரல் கொழுப்புநோய்’

(Fatty Liver Disease), கல்லீரல் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தாமிரத்தை வெளியேற்ற முடியாதநிலையான `வில்சன் நோய்’ (Wilson’s Disease), இரும்புச்சத்து அதிகமாகச் சேரும் ‘அயர்ன் மெட்டபாலிஸம்’ (Iron Metabolism) எனக் கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் இருக்கின்றன.

காசநோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டாலும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. சில வகை விஷங்களும் கல்லீரலைக் கடுமையாக பாதிக்கும்.

கல்லீரல் அழற்சி நோய்

பொதுவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு, `கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் பரவும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

அதேபோல ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும்.

ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்

ந்த இரண்டு வைரஸ்களும் அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுவழியாகப் பரவக்கூடியவை. மஞ்சள்காமாலை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும். இந்த வைரஸ் தாக்குதலால் `கல்லீரல் செயலிழப்பு’ (Acute Liver Failure) அரிதாகவே ஏற்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் ஈ-க்கு தடுப்பூசி கிடையாது.

ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ்

ஹெபடைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.

சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப் போடுவது, ஒரே ஊசியைக்கொண்டு பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.

பாதிக்கப்பட்ட தாயிடமிருந்தும் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு வைரஸ்களும் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றவே முடியாது. கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூல காரணமாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ்கள் இருக்கின்றன.

இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இந்த இரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி கிடையாது.

கல்லீரல் சுருக்கம் (Cirrhosis)

ல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும்.

இந்த வீக்கம் அதிகரிக்கும்போது கல்லீரலிலிருக்கும் செல்கள் செயலிழந்துவிடும். அந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டு கல்லீரலை இழுக்க ஆரம்பிக்கும். இதனால் அது சுருங்கத் தொடங்கும். இதுதான் கல்லீரல் சுருக்கநோய். கல்லீரல் சுருக்கத்துக்கு முந்தையநிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த நிலையில் உடல் சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். `ஃபைப்ரோ ஸ்கேன்’ மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். கல்லீரலில் சுருக்கம் தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

கல்லீரல் கொழுப்புநோய்

ல்லீரலின் உள்ளே கொழுப்பு அதிகமாகப் படிவதால் ஏற்படுவது கல்லீரல் கொழுப்புநோய். ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.

போதிய உடற்பயிற்சி இல்லாததால், சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறி கல்லீரலுக்குள் சேரும். கொழுப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அதில் வீக்கம் ஏற்படும். இது `நாஷ்’ (Nonalcoholic Steatohepatitis - NASH) என்று அழைக்கப்படுகிறது.

ந்தியர்கள் பெரும்பாலும் அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்ட உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இந்த உணவுகளிலிருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி கல்லீரலில் படியும். கல்லீரலைப் பரிசோதித்து, அதில் வீக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், கல்லீரலிலுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் பாதிப்புகள் சரியாக வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும்.

கல்லீரல் புற்றுநோய்

ந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும்

15 நோய்களின் பட்டியலில் கல்லீரல் புற்றுநோய் 8-வது இடத்தில் இருக்கிறது. கல்லீரலில் ஏதாவது ஒரு மூலையில் புற்றுநோய் தோன்றும். இதைத் தொடக்கநிலையிலேயே கண்டறிவது மிகவும் கடினம். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் நோய் முற்றியநிலையில்தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஏற்கெனவே கல்லீரலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்க 70 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

குறிப்பாக, கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேனும் செய்ய வேண்டியது அவசியம். அதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும்.

வில்சன் நோய்

னிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளும் உலோகங்களும் மிகவும் அவசியம். ஆனால், இவை தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். உலோகங்களின் அளவு அதிகரிக்கும்போதும் வெவ்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பே `வில்சன் நோய்.’ முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன். அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது.

நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மூலம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்’ (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும்.

இந்தப் புரதம் சரியான அளவு சுரக்காவிட்டால் கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் தாமிரம் ஆங்காங்கே தங்கிவிடும். கல்லீரலில் தாமிரம் அதிகமாகச் சேரும்போது மஞ்சள்காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்கோத்தல், கால்வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ல்லீரல் செயலிழப்பு 10, 15 வயதிலேயே ஏற்பட்டால் அதற்கு வில்சன் நோய்தான் மூல காரணமாக இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம் உருவாவதற்கு முன்னரே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

பிரச்னை தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாற்றிப் பொருத்தப்படும் புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்’ சரியாகச் சுரந்து, தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும்.

அயர்ன் மெட்டபாலிஸம்

சிலருக்குப் பிறக்கும்போதே மரபணு பிரச்னைகளால் இதயம், கணையம், கல்லீரல், மூட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர ஆரம்பித்துவிடும். இதைத்தான் `அயர்ன் மெட்டபாலிஸம்’ என்கிறோம். அதனால் இதயம், கணையம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய் ஆகியவை ஏற்படும். சருமம் கறுத்துப்போதல், கால் மற்றும் வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

இவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புச்சத்து அதிகமாகச் சேர்வதைத் தடுக்க `டிஃபெராக்ஸமைன்’ (Deferoxamine) என்ற மருந்து பரிந்துரைக்கப்படும். இந்தப் பிரச்னையால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்டகால இடைவெளிகளில் குறிப்பிட்ட அளவு ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.

கல்லீரல் மாற்று சிகிச்சை

எப்போது அவசியம்?

பிரச்னைக்கான அறிகுறிகள் வெளியே தெரிந்தாலே 50 சதவிகிதத்துக்கும் மேல் கல்லீரல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இத்தனை சதவிகிதம் பாதிப்புக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

ரத்த வாந்தி, வயிற்றில் நீர்க்கோத்தல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் பிரச்னையால் சிறுநீரகம் பாதிப்படைவது (Hepatorenal Syndrome) மற்றும் நுரையீரல் பாதிப்பு (Pulmonary Syndrome) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

`மெல்டு ஸ்கோர்’

ரு நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையைக்கொண்டு கல்லீரல் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். அது `மெல்டு ஸ்கோர்’ (Meld Score - Model for End Stage Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் வரம்பு 6 - 40வரை இருக்கும். அதில் நோயாளியின் மதிப்பெண் 15-ஐத் தாண்டிவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றி விகிதம் 90 சதவிகிதமாக இருக்கிறது.

மூளைச்சாவு அடைந்த நபரிடம் தானம் பெற்று அல்லது உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

உயிருடன் இருப்பவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்து, ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே கல்லீரலை தானம் பெற முடியும். தானம் அளிப்பவர்களிடமிருந்து 65 சதவிகிதம் கல்லீரல் பெறப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்படும். கல்லீரல் தானம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மூன்று வாரங்களிலேயே கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும்.

மஞ்சள்காமாலை

ஞ்சள்காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், பித்தக்குழாயில் புற்றுநோய், கணையத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் அடைத்துக்கொள்வோருக்கும், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கும், காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம்.

மதுப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், விஷம் உட்கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படலாம். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மஞ்சள்காமாலை பாதிப்பு உறுதிசெய்யப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு!

த்த செல்கள் உடைவதால், பிறந்த குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு போட்டோதெரபி’ (Phototherapy) எனப்படும் ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் பாதிப்பு சரியாகவில்லையென்றால் பைலரி அட்ரீசியா’ (Biliary Atresia) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடலில் கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேற ஒரு குழாய் உண்டு.

அதை, `பித்தக்குழாய்’ என்போம். அந்தக் குழாய் குடலில் சென்று இணையும். சில குழந்தைகளுக்கு கல்லீரலின் உள்ளே இருக்கும் பித்தக்குழாய் சரியாக வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், வெளியே இருக்கும் பித்தக்குழாய் வளர்ச்சியடையாமல் காணப்படும். இதனால் கல்லீரலுக்குள்ளேயே பித்தம் தங்கிவிடும்.

ல்லீரலிலிருந்து குடலுக்குப் பித்தம் வெளியேற்றப்படாது என்பதால், குழந்தையின் மலம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், ‘ஹைடா ஸ்கேன்’ (HIDA Scan) செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு குழந்தை பிறந்து 100 நாள்களுக்குள் கல்லீரலுக்கு வெளியே இருக்கும் பித்தக்குழாயை குடலுடன் இணைக்கும் `கசாய்’ (KASAI) என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்து 100 நாள்கள் தாண்டிவிட்டன அல்லது கசாய் சிகிச்சை பலனளிக்கவில்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு.

மதுப்பழக்கமும் கல்லீரலும்!

யல்பாகவே கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை உண்டு. அதனால் மது அருந்தும்போது அதை மருந்தாகக் கருத்தில்கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்திவிடும். அளவுக்கு மீறிக் குடிக்கும்போது கல்லீரலிலுள்ள செல்கள் அழிந்துபோகும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த நிலையை `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Alcoholic Liver Disease) என்கிறோம். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரல் கொழுப்புநோயைப்போலவே `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தால் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். அப்போது அழிந்துபோன செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்கி கல்லீரல் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பைக் கல்லீரலுக்கு வழங்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஒரு துளிகூட மது அருந்தாமல் தவிர்த்தால், ஆரோக்கியமான கல்லீரலைத் திரும்பப் பெறலாம்.

சோஷியல் டிரிங்கிங்

மேற்கத்திய நாடுகளில் வார இறுதி நாள்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் (சோஷியல் டிரிங்கிங்) உண்டு. மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிலும் பரவி, அதேபோல மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைவிட இந்தியர்கள் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் இந்தியர்களிடையே கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நகரத்திலுள்ள பெண்களையும் மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும்.

தவிர்க்க வேண்டியவை

கார்போஹைட்ரேட் நிறைந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, மைதா போன்ற உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற பதார்த்தங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது வேறு பாதிப்புகளுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவற்றைச் சாப்பிட வேண்டும்.

இரவில் தாமதமாகச் சாப்பிடுவது கல்லீரலை பாதிக்குமா?

கல்லீரல் கொழுப்புநோய் வருவதற்கான முக்கியக் காரணமே இரவில் தாமதமாகச் சாப்பிடுவதுதான். ‘காலையில் அரசனைப்போலவும், இரவில் பிச்சைக்காரனைப்போலவும் சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இரவில் எளிதாகச் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு வருமா?

கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகையோர் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களாகவோ, உடற்பயிற்சி செய்யாதவர்களாகவோ இருந்தால் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் கொழுப்புநோய் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவையே கல்லீரலைப் பாதுகாக்கும் வழிகள்.

கீழாநெல்லி வேர்

மஞ்சள்காமாலையை குணப்படுத்துமா?

`மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி வேர் மருந்து’ என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

ஆனாலும் கீழாநெல்லி வேர் என்பது ஆதரவு மருந்தாகத்தான் (Supportive Medicine) வழங்கப்படுகிறது என்பதால் அதைச் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கீழாநெல்லி மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய மருந்துகளில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால், அவை கல்லீரலை பாதிக்கும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள்!

புரொக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்: இவற்றை குரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று குறிப்பிடுவார்கள். இவற்றில் குளூக்கோசினோலேட்’ (Glucosinolate), சல்ஃபர் (Sulfur) போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன.

இவை கொழுப்பைக் குறைப்பதுடன், கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, நொதிகளை அதிகம் சுரக்கவைக்கும்.

முட்கள் நிறைந்த பேரிக்காய்: முட்கள் நிறைந்த பேரிக்காய் கல்லீரலை பலப்படுத்தி நோய்கள் வராமல் காக்கும். இதில் ‘பெக்டின்’ (Pectin) எனும் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. தீங்கு விளைவிக்கும்

`எல்.டி.எல்’ (LDL Cholesterol) எனும் கெட்ட கொழுப்பையும், மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும்.

அவகேடோ: அவகேடோவில் `குளூட்டதியோன்’

(Glutathione) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும்.

திராட்சை: சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் கல்லீரலைப் பாதுகாக்கக்கூடியவை. இவற்றிலுள்ள `ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol) எனும் வேதிப்பொருள் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைத் தடுக்கும். நிறைய விதைகளுள்ள திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது.

நார்த்தம்பழம்: நார்த்தம்பழத்தில் `நாரின்ஜெனின்’

(Naringenin) எனும் வேதிப் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. கல்லீரலின் உள்ளே படியும் கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கவும் இது உதவும்.

பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய்: கல்லீரலைப் பாதுகாப்பதில் பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ‘மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம்

(Monounsaturated Fatty Acid) அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இவற்றிலுள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்.

பூண்டு: வெள்ளைப்பூண்டில் அலிசின்’ (Allicin) எனும் வேதிப் பொருள் உள்ளது. செலினியம்’ (Selenium) தாதுவும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடல் எடையைக் குறைக்கும். கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கி, நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும்.

மீன்: மீன்களில் `ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ (Omega 3 Fatty Acid) அதிகம் உள்ளது. இது உடலில் எங்கே நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அவற்றை வெளியேற்ற உதவும். கல்லீரல் வீக்கம், அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். மீனை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

காபி: காபியிலுள்ள கஃபைன்’ (Cafeine), பாராஸான்தைன்’

(Paraxanthine) எனப்படும் வேதிப்பொருளையும், காவியோல்’ (Kahweol), கேஃப்ஸ்டோல்’ (Cafestol) அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இவை மூன்றும் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘ஹெபடைட்டிஸ் டி’ வைரஸ்!

ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் டி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு, டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்று வைரஸ். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும்.

ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இணை, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸைத் தடுக்கலாம்.

- கிராபியென் ப்ளாக்உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

Liver Protection: What to Eat & What to Avoid – A Simple Guide | கல்லீரல் காப்போம் : உண்ண வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை - எளிமையான கையேடு - Vikatan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு பிரபலங்கள் மரணிக்கும் போது அது குறித்த கட்டுரைகள்,விவாதங்கள்,அறிவுறுத்தல்கள் வருவது அதிகமாக விட்டது.

இதை நான் ஏனைய மக்களுக்கான விழிப்புணர்வாகவே பார்க்கின்றேன்.

எனது சொந்த அனுபவத்தின் படி இன்னாருக்கு இது சாப்பிட்டுத்தான் இந்த வருத்தம் வந்தது என எங்கும் அறுதியாக கூறமுடியாது.மது அருந்துவதால் தான் இந்த வருத்தம் வந்தது எனவும் சொல்ல முடியாது.ஏனென்றால் தினசரி மது அருந்துபவர்களும் நோய் நொடியின்றி வாழ்கின்றார்கள். தினசரி 30 சிகரெட் பிடிப்பவர்களும் நோய் நொடியின்றி வாழ்கின்றார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்பவர்களும் நோயில்லாமல் வைத்தியரிடம் செல்லாமல் வாழ்கின்ற்ர்கள்.

நோய்களுக்கான முதல் காரணம் அவரவர் உடல்வாகு.அடுத்தது எதிர்ப்பு சக்தி.இன்னொன்று பரம்பரையை காவிக்கொண்டு வரும் உயிரணுக்கள்.

எனக்கு ஈரல் பிரச்சனை சிறு வயதிலிருந்தே இருக்கின்றது. ஆராய்ச்சி செய்ததில் என் குடும்பத்தினர் அனைவருக்கும் அதே பிரச்சனை உண்டு.அதற்காக தலையை கொண்டுபோய் எங்கேயாவது அடிக்க முடியுமா என்ன?😂

E-1592059233.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உடலுக்காக வாழ்வது

கணையம், கல்லீரல் குறித்தெல்லாம் விவாதம் ஓடுவதால் சொல்கிறேன்: வாயைக் கட்டுப்படுத்துவதும், உடலுக்காகத் தேடித்தேடிச் சாப்பிடுவதும், அதை வலுப்படுத்த உழைப்பதும் ஒரு தனி வேலை. அதற்கு குறுக்குவழியெல்லாம் இல்லை.

நல்ல உணவுகளை உண்பதை நம் கலாச்சாரம், சந்தைப் பண்பாடு, சமூகமாக்கல் நடத்தைகள் அனுமதிப்பதில்லை. அதாவது இது குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரச்சினை. லத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை வலுத்து மக்களின் உடல் ஆரோக்கியம் சீர்கெட்டுப் பாதாளத்தில் கிடக்கிறது.

ஆனால் பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் நவீன துரித உணவு நுகர்வுக் கலாச்சார சுனாமிக்குள் வந்துவிட்ட மக்களைத் தவிர பிறர் சமச்சீரான உணவையே எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் நாம் அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

நாம் காலனிய வரலாற்றுக்குள் போனாலே பஞ்சத்திலும் பல்வேறு நோய்த்தொற்றிலும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்த சம்பங்களே கிடைக்கின்றன. அதற்குப் பின்னால் போனாலும் மக்கள் அதிகமாக காய்கறிகளும், புரதமும் எடுத்துக்கொண்டு வாழ்ந்த காலம் ஒன்று உள்ளதா, அது எப்போது எனத் தெரியவில்லை.

ஆனால் சிந்து சமவெளி நாகரிகச் சான்றுகள் தொடங்கி, வேதகால, சங்க கால, ஆயுர்வேத, பௌத்தப் பிரதிகளைப் பார்க்கையில் மக்கள் சீதோஷ்ணத்துக்கும் தாம் வாழும் மண்ணுக்கும் ஏற்ற சமச்சீரான உணவுகளை உண்டு வந்தார்கள் எனத் தெரிகிறது.

நமக்கு சனியன் பிடித்ததே பரங்கிகள் வந்தபோதுதான். அவர்கள் 200 ஆண்டுகள் ஆட்சியில் நம் செல்வத்தை மட்டும் சுரண்டவில்லை, நம் உணவுப் பழக்கத்தையும் மாற்றினார்கள். பணப்பயிர்களை அதிகமாக விளைவிக்க வைத்தார்கள், அதனால் உள்ளூர் பயிர்கள் அழிந்தன.

வங்காளப் பஞ்சமே அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கான அரிசியை ஏற்றுமதி செய்ததால் ஏற்பட்டதுதானே. ஆனால் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் காலனியவாதிகளாக இருந்ததால் அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாசாரம் அழியவில்லை. ஜப்பானும் பெருமளவு காலனியத்துக்கு உட்படவில்லை.

நாம் ஏற்கனவே சோற்றையும் கோதுமையையும் தாம் சார்ந்திருந்தோம், பஞ்சங்கள் காரணமாக நம் மரபணுக்களும் மாறிப்போய் மாவுச்சத்து கொஞ்சம் மிகுந்தால் எடை அதிகமாகும் நிலை ஏற்பட்டது.

ஐரோப்பியர்களுடன் ஒப்பிடுகையில் நம் உடலில் தசைகள் குறைவு என்பது ஒரு காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும் (தசைகள் குறைவான உடலுக்கு குறைவான ஆற்றலும், குறைவான சத்துணவும் போதும்.)

நமக்கு நிகழ்ந்த மற்றொரு துரதிஷ்டம் 'பசுமைப் புரட்சி' - அது நம் சிறுதானியங்களையும் உள்ளூர் அரிசி வகைகளையும் அழித்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த பன்மையையும் ஒழித்து முழுமையாக மாவுச்சத்து உணவுக்கு அடிமையாக்கியது. அதை முதலாம் கட்ட மறைமுகக் காலனியவாதம் என்று சொல்லலாம். தாராளமயமாக்கல், உலகமயமாக்கலால் சந்தையில் வந்து குவிந்த இனிப்பும் எண்ணெய்யும் மிகுந்த துரித உணவுகளை இரண்டாம் கட்ட மறைமுக காலனியவாதம் எனக் கூறலாம்.

இந்தச் சூழலில் நாம் ஒழுங்காக உணவை எடுத்துக்கொள்ள தாராளமய சந்தைக்கு, மாவுச்சத்தை குறைந்த செலவில் சுவையாக உணவளிக்கும் உணவுக் கடைகளின் மலிவான மார்க்கத்துக்கு, சுவையை அழுத்தத்தில் இருந்து தப்பிக்கும் போதையாகப் பாவிக்கும் பொதுமக்கள் பண்பாட்டுக்கு, பலவிதமான மூடநம்பிக்கைகளுக்கு (பாக்கெட்டில் கிடைப்பன, இனிப்பானவை நல்ல உணவுகள், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நிறைய சர்க்கரை சாப்பிடலாம், ஆரோக்கியமானவர்கள் குண்டாக இருப்பார்கள், நோய் வருவதைத் தவிர்க்க முடியாது) எதிராகப் போராட வேண்டும். ஒரு பண்டிகையோ, திருவிழாவோ, கொண்டாட்டமோ, சந்திப்போ இம்மாதிரி சத்தற்ற மோசமான உணவுகளை உண்ணாமல் சமூகமாக்கல் பண்ண முடியாது.

முடிந்த அளவுக்கு தினசரி உணவுகளைச் சமச்சீராக வைத்துக்கொண்டு நண்பர்களுடன் உணவருந்தி சமூகமாக்கல் பண்ண பெரிதாக முயற்சி எடுக்க வேண்டும். காய்கறிகளும் புரதச்சத்து உணவுகளும் விலை அதிகம். நீங்கள் வீட்டில் சமைக்காதவர் என்றால் குப்பையைத் தான் தின்ன முடியும். நான் வீட்டில் உணவு சமைக்காத நாட்களில் என் கல்லூரி வளாகத்தில் முட்டையைத் தவிர வேறொன்றையும் தின்ன முடியாது. அதுவும் அம்முட்டையையும் ஒரே ஒரு கடையில்தான் வைத்திருப்பார்கள். கீட்டோ உணவு எடுத்துக்கொள்வோரு எதிராக 18,000 பேர்கள் இணைந்து நிற்பதாக எனக்கு அப்போது தோன்றும். ஏன் எனக்கு உள்ள கவலை இத்தனை ஆயிரம் பேர்களுக்கு இல்லை என ஆச்சரியம் ஏற்படும்.

நல்ல உணவு உண்டால் பல்வேறு நோய்கள், வலிகள், மனச்சோர்வு, அழுத்தம் ஏற்படாமல், பிறக்கப் போகும் குழந்தைக்கு மனநல வளர்ச்சியின்மை நோய் ஏற்படாமல் தவிர்க்கலாமே, அதற்காகச் செய்தாலே எவ்வளவு ஆற்றலும் பணமும் மீதமாகும் என யோசிப்பேன். ஆனால் யாருக்கும் அவகாசமோ ஆற்றலோ இல்லை. ஒரு சமூகமாகவே நாம் இன்னும் காலனிய பிரஜை மனநிலையில் இருந்து மீளவில்லை. நம் பண்பாடும் அரசியலும் கூட அதைத் தாண்டி வரவில்லை. நமது பொருளாதார வளர்ச்சி கூட நம் மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அடிப்படை உரிமை எனக் கருதும் நிலைக்குத் தள்ளவில்லை. பஞ்சம் வந்துவிடுமோ எனும் அச்சம் நம் மனதுக்குள், அரசின் மூளைக்குள் எங்கோ பதுங்கி இருக்கிறது.

குடித்து அழிவதை விட நம் மக்கள் மோசமாக உண்டு அழிவதே இன்றுப் பரவலாக உள்ளது.

இதையெல்லாம் சொல்ல எனக்கு ஒரு தகுதி உள்ளது - நான் 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளி. எனக்கு இதுவரையில் கண், சிறுநீரகம், தீராப் பசி, ஆற்றலின்மை, ஆறாத காயத்தால் உடல் உறுப்பு துண்டிப்பு என எப்பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளக எனக்கு சளி கூட வருவதில்லை.

என்னைச் சுற்றி நீரிழிவே இல்லாத, பார்க்க பார்க்க ஒல்லியாக உள்ளவர்களுக்கு வரும் நோய்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாக உள்ளது. அவர்கள் இவ்வியாதிகளைத் தம் விதியென்று ஏற்றுக் கொள்வதைப் பார்த்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் அவர்களுக்கும் ஒரே முக்கிய வித்தியாசம் தான் - நான் வாயைச் சுலபமாகக் கட்டுப்படுத்துகிறேன், வாரத்திற்கு மூன்று நாட்களாவது விரதம் இருக்கிறேன், நல்ல உணவுகளைத் தேடித்தேடி உண்கிறேன். இளவயதிலேயே நீரிழிவு வந்ததால்தான் நான் சுயமுயற்சியில் இதையெல்லாம் பரிசோதனைச் செய்து பார்த்துக் கற்றுக்கொண்டேன். நீரிழிவு அதனால் ஒரு வரமாக அமைந்துவிட்டது.

எனக்கு 40-50 வயதுக்கு மேல் நீரிழிவு வந்திருந்தால் அதற்குப் பழகுவது கடினமாக இருந்திருக்கும் - என் உடல் நிலையும் அதற்கு முன் மோசமாக வீழ்ந்திருக்கும். எனக்கு என் நோயின் நிலையை, அறிவியலைப் புரிந்துகொள்ளவே பத்தாண்டுகளுக்குமேல் பிடித்தது. ஆனால் புரிந்துகொண்ட பின்னர் நான் உணவுதான் மருந்து எனக் கண்டுபிடித்தேன். நீரிழிவு நோய் அல்ல, அது ஒரு அறிகுறி எனப் புரிந்துகொண்டேன். மருத்துவர்களல் நம்மைக் காப்பாற்ற முடியாது (அவர்கள் மருந்து கம்பனிகளின் மறைமுக முகவர்கள் என்பதால்) எனத் தெரிந்துகொண்டேன்.

உடல் என்பது நான் அல்ல, பல கோடி அணுக்களின், குடல் நுண்ணுயிர்களின் கூட்டமைவு. உடல் என்பது ஒரு ஒப்பந்தம். ஒவ்வொரு அணுவும் எனக்காகப் பணியாற்றும்போது நான் அவற்றுக்காகவும் வேலை செய்வேன். இவ்வுடல் அவ்விதத்தில் ஒரு சிறு வனமும்தான். ஒவ்வொரு உயிரும் அங்கு முக்கிய பங்காற்றும். சூழலை நாம் கெடுத்தால் அந்த உயிரினங்கள் அழிந்து சமநிலைக் குலைந்து வனமே அழிவதைப் போலத்தான் நமக்கு நோய்கள் வந்து உடல் அழிகிறது. உடல் அழிவதானது அணுக்களும் நுண்ணுயிர்களும் கடுமையான் அழுத்தத்துக்கு உள்ளாகி துன்புற்று தம்மை அழிப்பதாகும். அவற்றுக்காக உழைக்கவும் முயற்சி செய்யவும் நான் போராடுவதே இவ்வாழ்க்கை. சமூகத்துக்காகவும் பிறருக்காகவும் இலக்கியத்துக்காகவும் தியாகம் செய்வது இரண்டாம் பட்சமே. ஏனென்றால் அவர்களும் எனக்காக வாழவில்லை. - தம்மை உருவாக்கியுள்ள எண்ணற்ற அணுக்களுக்காகவும் நுண்ணுயிர்களுக்காகவுமே வாழ்கிறார்கள். நாம் இரண்டு கால்கள் முளைத்த பல நூறு கோடி குட்டி வனங்கள். நமக்கு வெளியே உள்ள பல்வேறு உயிரினங்களும் கூட அப்படியே வாழ்கின்றன.

கணையமும் கல்லீரலும் கூட நமக்கு அந்நியமான தனி உயிர்களே. அவை நமக்காகப் பணியாற்றுவதும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலே - அவற்றை நாம் துன்புறுத்தினால் நீயும் வேண்டாம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம் என அவை தற்கொலை பண்ணிக்கொள்ளும் (apoptosis). நாம் ஒரு உடலுடன் பிறந்திருக்கிறோம், உடல் நமக்கான கருவி என்று நினைப்பது ஒரு அபத்தம் - நாம் எண்ணற்ற உயிர்களின் ஒருங்கிணைப்பாளர்கள், பேரணி நிர்வாகிகள், தொழிற்சாலை மேலாளர்கள் என்று சொல்லலாம். உணவுக்காக அவை நம்மைச் சார்ந்துள்ளன. சரியாக உணவளிக்காவிடில் அவை தர்கொலை பண்ணவோ அழிந்து வீணாகவோ கூடும். நாம் நமக்காக, நம் இன்பத்துக்காக வாழவில்லை - நம் பிரக்ஞையும் இன்பங்களும் கூட நுண்ணுயிர்களும் அணுக்களும் சேர்ந்து ஏற்படுத்தும் தோற்றங்களே. 'நாம்' ஒன்றுமே இல்லை, மனித நிலை, மனித உயிர் என ஒன்றுமில்லை. அணுக்களும் நுண்ணுயிர்களுமே நம் கடவுள் என ஏற்றுக்கொண்டாலே பல பிரச்சினைகள் சரியாகிவிடும்.

Posted 17 hours ago by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/09/blog-post_20.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.