Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

October 6, 2025

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

— வீரகத்தி தனபாலசிங்கம் —

இந்தியாவில் கோவில் திருவிழாக்கள், மத ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் சன நெரிசலும் உயிரிழப்புகளும் ஒன்றும் புதியவையல்ல. அவை பெரும்பாலும் அடிக்கடி நிகழ்கின்ற அனர்த்தங்கள் என்று கூறலாம். விளையாட்டுப்போட்டிகள், சில திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் கூட நெரிசலில் மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். 

ஆனால், அரசியல் பொதுக்கூட்டங்களில் மிகவும் அரிதாகவே நெரிசல் மரணங்கள் ஏற்பட்டதாகவும் தமிழ்நாட்டில்  கரூரில் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகரின்  தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் செப்டெம்பர் 27 சனிக்கிழமை இரவு பெண்கள், குழந்தைகள், உட்பட 41 பேர் பலியான சம்பவமே  அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையில் மக்கள்  மரணமடைந்த முதல் சம்பவம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலத்தின்  முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த சினிமா நடிகர் என்று வரலாறு படைத்த எம்.ஜி. இராமச்சந்திரனுக்காக மக்கள் மணிக்கணக்காக அல்ல, நாட்கணக்காக இரவுபகலாக காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது கடந்தவாரம் விஜயின் கூட்டத்தில் இடம்பெற்றதைப் போன்ற எந்தவொரு அனர்த்தமும் ஏற்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்திய ஊடகங்கள் எம்.ஜி.ஆரின் கட்சி அமைப்புரீதியாக வலிமையாக இருந்ததும்  கிராமங்கள் வரையில் அரசியல் அனுபவமுடைய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இருந்ததுமே அதற்கு காரணம் என்று கூறியிருக்கின்றன.

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அவரது சினிமாச் செல்வாக்கில் மாத்திரம் நம்பிக்கை வைத்து தொடங்கப்பட்ட கட்சி என்றும் அவருக்கு எந்த அரசியல் சிந்தனையோ அல்லது கோட்பாடோ கிடையாது என்றும் மற்றைய அரசியல் கட்சிகள் செய்துவந்த விமர்சனத்தை கரூர் சம்பவம்  நிரூபித்திருக்கிறது என்றும் ஊடகங்கள் மாத்திரமல்ல, பல  அரசியல் அவதானிகளும் கூறுகிறார்கள்.   பெருமளவில் மக்கள் கலந்துகொள்ளும்  அரசியல் கூட்டங்களை பாதுகாப்பான முறையில் ஒழுங்குபடுத்தக்கூடிய  அனுபவமும் ஆற்றலும்   விஜயின் கட்சியினரிடம்  இல்லாததையும் தனது இரசிகர்களை கட்டுப்பாடான கட்சித் தொண்டர்களாக மாற்றுவதில் அவர் அக்கறை காண்பிக்காததையுமே மக்கள் பலியானதற்கு பிரதான காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின்  மகாநாடுகளிலும் விஜயின் பிரசாரக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றுவந்தது மற்றைய கட்சிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரைப் பார்ப்பதற்காக திரளும் மக்கள் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே அரசியல்வாதிகள் கூறிவந்தார்கள். 

கூட்டணி அமைப்பதற்கு  சில மாதங்களுக்கு முன்னர்  விஜய் விடுத்த அழைப்பை எந்த அரசியல் கட்சியுமே பொருட்படுத்தவில்லை. அதனால், அவர் தனது பிரசாரக் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்களை அணிதிரட்டி  தனது செல்வாக்கை நிரூபிப்பதில் தீவிர கவனத்தைச் செலுத்தினார் என்று தெரிகிறது. ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் வரை பிரசாரக் கூட்ட  அரங்குகளுக்கு  வருவதை தாமதிக்கும் ஒரு யுக்தியை அவர் கடைப்பிடித்தார் என்பது வெளிப்படையானது. 

அனர்த்தத்தில் முடிந்துபோன கரூர் கூட்டத்துக்கு முன்னதாக அவரின் சில  பிரசாரக் கூட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாதளவு மக்கள் திரண்டதால் சனநெரிசல் ஏற்பட்டு குழப்பநிலை ஏற்பட்டதற்கு பின்னரும் கூட அத்தகைய   ஆபத்தான  நிலைவரம் மீண்டும் தோன்றுவதை தடுப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உகந்த  முன்னேற்பாடுகளைச்  செய்வதில் கவனம் செலுத்தவில்லை  என்றும் குற்றச்சாட்டப்படுகிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக,  கரூரில் அனர்த்தம் நிகழ்ந்த மறுகணமே விஜய் தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி தனது தனிப்பட்ட விமானத்தில் சென்னைக்கு திருப்பி விட்டார். இறந்தவர்களின் குடும்பத்தவர்களைச் சந்தித்து அவரோ அல்லது அவரது கட்சி முக்கியஸ்தர்களோ ஆறுதல் கூறவில்லை என்பது மாத்திரமல்ல காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிடவுமில்லை. 

நான்கு மணித்தியாலங்களுக்கு பிறகு சமூக ஊடகத்தில் தனது  அனுதாபத்தை தெரிவித்த விஜயின் செயல் அவர் இன்னமும் ஒரு சினிமா நடிகராக இருக்கிறாரே தவிர மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட அரசியல்  தலைவராக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது அமைச்சர்கள் மற்றைய  கட்சிகளின் தலைவர்கள் உடனடியாகவே வைத்தியசாலைகளுக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்ட அதேவேளை, விஜய் தனது பிரசாரங்களை  இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தாரே தவிர, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்த பிறகு 20 இலட்சம் ரூபா இழப்பீட்டு அறிவிப்பு விஜயிடமிருந்து வந்தது.

கரூரில் அவரைப் பார்ப்பதற்காக பகல் பூராவும் உணவோ தண்ணீரோ இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த மக்களுக்கு நேர்ந்த அனர்த்ததுக்கு பின்னர் விஜய் நடந்து கொண்ட முறை அவரது அரசியல் தலைமைத்துவ  ஆற்றல்  எதிர்நோக்கிய முதல் பரீட்சையிலேயே அவர் தோல்வி கண்டுவிட்டார் என்பதை நிரூபித்திருக்கிறது.  தன்னில்  தவறு இருப்பதாக அவர் இன்னமும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை. மக்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. தன்னைப்  பார்க்க வந்த மக்கள் வீதிகளில் மயங்கி வீழ்ந்து  கொண்டிருந்த வேளையில் சினிமா படப்பிடிப்பு ஒன்றை இடையில் நிறுத்திவிட்டு வீடு திரும்புபவர் போல அவர் நடந்துகொண்டது  பாரதூரமான நிலைவரங்களை கையாளுவதிலும்  முதிர்ச்சியான தீர்மானங்களை எடுப்பதிலும்  அவரின் அனுபவமின்மையை வெளிக்காட்டியது.

விவேகமும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால், தான்  நடந்துகொண்ட விதத்துக்கு முற்றிலும் மாறாகவே விஜய் நிச்சயமாக நடந்து கொண்டிருப்பார். அனர்த்தம் நிகழ்ந்த இடத்தில் குழப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும்  தனது கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து விஜய் முயற்சி செய்திருக்க வேண்டும்.

சம்பவத்துக்கு பிறகு புத்திசாலிகளாக பேசுவது சுலபம். அரசியல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்  மக்கள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தற்போது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அறிவுரை கூறிவருகிறார்கள். 

கரூரில் இடம்பெற்றதைப் போன்று  பொது நிகழ்வுகளில் சனநெரிசல் ஏற்படாதிருப்பதை  உறுதிசெய்வதற்கு  விதிமுறைகளை வகுக்க அரசியல் கட்சிகளுடனும் பொது அமைப்புக்களுடனும் கலந்தாலோசனை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் முதலமைச்சர் ஸ்ராலின் கரூர் அனர்த்தம் குறித்து விசாரண செய்வதற்கு ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட தனிநபர் ஆணையம் ஒன்றை நியமித்திருக்கிறார். அந்த ஆணையம் கையளிக்கும் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். 

ஏற்கெனவே ஐந்து மாவட்டங்களில் தனது கட்சி பிரசாரக் கூட்டங்களை நடத்தியபோது நிகழாத அசம்பாவிதங்கள் கரூரில் மாத்திரம் எவ்வாறு நேர்ந்தது என்று   கேள்வி எழுப்பியிருக்கும் விஜய், சதி ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்பது போன்று சந்தேகத்தைக் கிளப்புகிறார். விஜயின் கட்சி தங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமையாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஏனைய கட்சிகளும் கரூர் அனர்த்தத்தை தங்களால் இயன்ற அளவுக்கு பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  தனக்கு ஏற்பட்டிருக்கும்  நெருக்கடியை  விஜய்  எவ்வாறு கையாளப்  போகிறார் என்பதிலும் அவரது அரசியல் எதிரிகள் அனர்த்தத்தை எவ்வாறு தங்களது அரசியல் அனுகூலத்துக்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதிலுமே  அவரின் எதிர்கால வாய்ப்புக்கள் தங்கியிருக்கின்றன.

குழப்பகரமான அரசியல் நிலைப்பாடு:

நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளுவதில் விஜயின் அனுபவமின்மையும் பொறுப்புணர்வின்மையும் ஒருபுறமிருக்க, அவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாட்களில் (2024 பெப்ரவரி) இருந்து தனது அரசியல் கொள்கையை பொறுத்தவரையிலும் கூட குழப்பகரமான கருத்துக்களையே கூறிவருகிறார். 

மத்தியில் பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது அரசியல் எதிரிகள் என்று கூறிய அவர், தனது கோட்பாட்டு வழிகாட்டிகளில் ஒருவராக பெரியார் ஈ.வெ. இராமசாமியை குறிப்பிட்டார். அம்பேத்காரின் கொள்கைகளையும் புகழ்ந்து பேசும் விஜய் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால நேசக்கட்சியான காங்கிரஸிடமிருந்து தூரவிலகியிருந்தாலும், காமராஜரின் இலட்சியங்களை பின்பற்றுவதாக உறுதியளித்தார்.

2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் மகாநாட்டு அரங்கை  முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாத்துரையினதும்  எம்.ஜி.ஆரினதும் பிரமாண்டமான ‘கட் அவுட்கள்’ அலங்கரித்தன. திராவிட கட்சிகள் பாதைமாறிப் போய்விட்டதால் தமிழ்நாட்டுக்கு புதியதொரு பாதையை காட்டப்போவதாக அவர் கூறுகிறார்.

 காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அண்ணாத்துரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் கருணாநிதி  தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து எம்ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் உதாரணங்களாக சுட்டிக்காட்டும் விஜய்,  அதேபோன்று 2026 சட்டசபை தேர்தலிலும் வரலாறு திரும்பப் போகிறது என்று பேசுகிறார்.

நீண்டகால அரசியல் போராட்டங்கள் மற்றும்  அனுபவங்களுக்கு பிறகு முதலமைச்சர்களாக பதவிக்குவந்து அண்ணாத்துரையும் எம்.ஜி. ஆரும் படைத்த சாதனையை  தன்னாலும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்று  ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்த விஜய் கூறுவது மிகவும் நகைப்புக்கிடமானதாக இருக்கிறது. வெறுமனே அரசியல் சுலோகங்கள் வரலாற்றைத் திருப்பி எழுதுவதில்லை. தனது  கட்சியிடம் தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலோ அல்லது மாற்றுத்திட்டமோ இல்லாமல் இன்னும் ஏழு மாதங்களில் முதலமைச்சராக வருவதற்கு அவர் கனவு காண்கிறார். 

 தமிழ்நாட்டு மக்கள் சினிமா நட்சத்திரங்கள் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பக்தியின் விளைவாக மாநில அரசியலில் ஆழமாக வேரூன்றிவிட்ட ஆரோக்கியமற்ற  ஒரு கலாசாரத்தையும் கரூர் அனர்த்தம் மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரத்திலும் கல்வி மற்றும் சமூகநீதியிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டிருப்பதாக பெருமை பேசுகின்ற ஒரு மாநிலத்தில் சினிமா கவர்ச்சி தொடர்ந்தும் அரசியலைத் தீர்மானிக்கின்ற போக்கு துரதிராஷ்டவசமானது. எவரும் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் மாத்திரமே  திரைப்படங்களில் மக்களைப் பாதுகாப்பவர்களாகவும் நீதிக்காக உயிரைக் கொடுத்துப் போராடுபவர்களாகவும் வேடங்களில் நடிப்பவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கும் முதலமைச்சராக வருவதற்கும் தங்களுக்கு உரிமையும் அருகதையும் இருப்பதாக நினைக்கிறார்கள்.

https://arangamnews.com/?p=12369

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரூர் கூட்ட நெரிசலில் 41 மரணங்களுக்கு யார் பொறுப்பு?

வழக்கறிஞர் எம். எல். இரவி

55555-1.jpg

கரூரில் நடந்துள்ள பெருந் துயரத்தில் விஜய்க்கு எதிரான கருத்துருவாக்கங்கள் ஆளும் கட்சியாலும், அவர்கள் ஆதரவாளர்களாலும் தீவிரமாக பரப்பப்படுகின்றன. இந்த சம்பவத்தில் விடை தெரியாத மர்மங்கள் உள்ளன. உண்மைகள் வெளிவர தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத விசாரணை அமைப்பின் தேவையை விவரிக்கிறார் வழக்கறிஞர் எம்.எல்.ரவி.

த.வெ.க தலைவர் விஜய் திமுகவை கடுமையாக சாடி வரும் நிலையில் – இருதரப்புக்கும் ஒருவருக்கொருவர் பகைமை முற்றியுள்ள அரசியல் சூழலில் – விஜய் பேசும் கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை – குற்றம் சாட்டப்படும்  திமுக அரசின் காவல் துறையே எப்படி விசாரிக்க முடியும்…? என்பது ஒரு புறமிருக்க,  விஜய் தரப்பிலும் பல குறைபாடுகள் இருக்கிறது. அவரை ஆதரிக்கும் நோக்கிலும் நாம் இந்த சம்பவத்தை பார்க்கவில்லை. அதே சமயம் இந்த சம்பவத்தில் மறைக்கப்பட்ட பல விஷயங்களை வெளிக் கொணர வேண்டியுள்ளது.

த.வெ.க கட்சி தலைவர் விஜய் செப்டம்பர்- 27, அன்று கரூர் மாவட்டத்தில், அரசியல் பரப்புரை கூட்டம் நடத்த காவல் துறை முந்தின நாள் இரவு வரை இழுத்தடித்து,  21 கட்டளைகளுடன், மதியம் 3 மணியிலிருந்து 10 மணி வரை கூட்டம் நடத்த வேலுசாமிபுரத்தில் அனுமதித்தது.

அதன் அடிப்படையில்  விஜய் பகல்  12 மணிக்கு வருவதாக X தளத்தில் பதிவிட்டிருந்தாலும், காலதாமதமாக இரவு 7 மணிவாக்கில் அவர் உரையாற்ற வந்தார்.

பத்தாயிரம் பேர் வருவார் என்று சொல்லிய நிலையில், முப்பதாயிரம் பேர் கூடியது, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டது. காலை 11 மணியிலிருந்து கூடிய கூட்டம்  உணவு, குடிநீரின்றி  தவித்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய நிலை..ஆகிய காரணங்களால் இந்த பெருந்துயரம் நடந்துள்ளது என காவல்துறை தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அறிய நாங்கள் ஒரு வழக்கறிஞர் குழுவாக நேரடியாக கரூர் களத்திற்கே சென்று மக்களிடம் பேசினோம். அங்கே மக்கள் பல வலுவான கேள்விகளை எழுப்பினர்.

மக்கள் எழுப்பிய சந்தேகங்கள்

77777.jpg

விஜய்யின் வீதிக்  கூட்டங்கள் ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் நடந்துள்ள வகையில், அவரது கூட்டத்திற்கு கட்டுக்கடங்கா கூட்டம் வருவதை காவல்துறை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறியதும், குறுகலான சாலை வழங்கப்பட்டதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தின் இடையில் வலிந்து ஆம்புலன்ஸ் வாகனம் செலுத்தப்பட்டு, அது  கூட்ட நெரிசலில் புகுந்த வகையில்  9 குழந்தைகள் 13 ஆண்கள் 18 பெண்கள் என்று மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் பெற்றனர்.

விஜய் கூட்டம் நடந்த இடத்தை சுற்றிலும் இரு சக்கர வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்ததில், அந்த வாகனங்களில் விழுந்தும், அந்த வாகனங்கள் மக்கள் மீது விழுந்தும் பலர் படுகாயமுற்றனர். கூட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை அனுமதித்துள்ளது காவலர்களின் அலட்சியத்தை காட்டுகிறது.

vijay-karur-stampede-jpg.jpg

சம்பவ இடத்தில் 500 காவலர்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டதாக சொல்வதை அங்குள்ள மக்கள் மறுக்கிறார்கள்.  மிகக் குறைவான  காவலர்களே களத்தில் இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். காட்சிப் பதிவுகளும் இதையே சொல்கின்றன.

சம்பவ இடத்தில் சில உயர்தர தனியார் மருத்துவமனைகள் இருக்கும் போது சுவாசிக்க முடியாமல் உயிருக்கு போராடுபவர்களை உடனே முதலுதவி தர அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல், தூர இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனைவரையுமே தூக்கி செல்ல யார் கட்டளையிட்டார்கள்?

இது போன்ற எண்ணற்ற கேள்விகள், சந்தேகங்கள் உள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட அமைப்பே விசாரணை செய்ய முடியாது

இதையொட்டி கரூர் டவுன் காவல் நிலையம் ஆய்வாளர் அவர்கள் தன்னிச்சையாக,  முதல் தகவல் அறிக்கை (FIR), பதிவு செய்துள்ளார். அவர் செய்த தவறை அவரே விசாரிப்பாரா?

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் நிர்வாகத்தை முடுக்கி விட்டும், இரவு 10.30 மணி அளவில் அவசரமாக தலைமை செயலகம் சென்று இதை விசாரிக்க முன்னால் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை, தனி நபர் ஆணையமாக, நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவர்களுடைய சடலங்கள் இரவோடு இரவாக உடற் கூறாய்வு செய்து அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா?

nationalherald_2025-09-29_eo9bec3s_Tamil

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நான்  லஞ்சம், ஊழல், காவல்துறை அத்துமீறல்கள் போன்ற பல்வேறு அநீதிகளை எதிர்த்து கட்சி பாகுபாடின்றி நீதி மன்றத்தை நாடி வழக்கு தொடுத்துள்ளவன் என்ற  நிலையில், இந்த கரூர் மரணங்கள் குறித்து, ஊடகங்கள்,  வலைதளங்களில் பல்வேறு விதமான செய்திகள் நிலவி வருவதால்,  உண்மைத் தன்மையுடன் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும்  என்பதால், முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை விசாரிப்பது சரியல்ல, சிபிஐ விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது வழங்கப்படும் விதமும் வெளிப்படையாக காணத் தக்கதாக வேண்டும்”  (Justice must not only be done but must also be seen to be done) என்னும்  தத்துவத்தின் அடிப்படையில், கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்ததும், அனுமதி வழங்கியதும் காவல்துறை. எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்கிய பின் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறை.  அவ்வாறு இருக்க இந்த மரணங்கள் ஏற்பட காவல் துறையின் குறைபாடுகளும் ஒரு காரணம்.

அனுமதி வாங்கிய இடம் நேரான ஒரு சாலை, இது போன்ற சூழலில் மக்கள் சிதறி ஓட வாய்ப்பில்லை (ஜாலின்வாலா பாக் நினைவுக்கு வருகிறது)  என்பதாலும்,  காவல் துறையின் குறைபாடுகளை, அவர்களே விசாரிப்பது சரியல்ல.

rreww.jpg

கரூர் நெரிசல் பலியை விசாரிக்கவுள்ள சிறப்பு விசாரணை குழு தலைவர் அஸ்ரா கர்க், ஐ.ஜி

அவ்வாறு இருக்க காவல்துறையே வழக்கு பதிவு செய்து காவல்துறையே தன் மீதான விசாரணையை நடத்த முடியுமா, முடியாது. மேலும், த.வெ.க கட்சி  விஜய், ஆளும் திமுக கட்சியை கடுமையாக சாடி வருவதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதேனும் சூழ்ச்சிகளால் தவறுகள் நடந்துள்ளதா?,  என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் மூடபடாமல் கால்வாய் இருந்துள்ளது, அதில் விழுந்தும் நிறைய பேர் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு காவல்துறை விசாரித்தால் நேர்மையும் உண்மையும்  வெளிப்படுமா?  என்கின்ற ஒரு கேள்விக் குறி மக்கள் மனதில் இருக்கிறது.  ஆகவே தான், நான் தேசிய மக்கள் சக்தி இயக்கம் சார்பில், சிபி ஐ விசாரணை தேவை என்று ( WP (MD) No 27563/2025) வழக்கு தொடர்ந்தேன்..

இதில் இரண்டு நிதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச்  விசாரணையில்,  காவல்துறை  இன்னும் விசாரணையை முடுக்கி விடவில்லை அதற்குள் அவர்கள் மீது சந்தேகப்பட்டு நீங்கள் வேறு விசாரணை குழுவுக்கு மாற்ற வேண்டுமென்றால், எவ்வாறு சரியாக இருக்கும், அதனால் நாங்கள் இந்த வழக்கை ஏற்க வில்லை நிராகரிக்கிறோம் என்று டிஸ்மிஸ் செய்தனர்.

அவசர கதியில் அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூடு தொடர்பாக  நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில்  17 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை கோரியும் இது வரை இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான செலவு 5.6 கோடி ரூபாயாகும். ஆனால், பயனற்றுப் போனது. அது போல தற்போதைய அறிக்கையும் இந்த அரசால் கிடப்பில் போடப்படாது என்பதற்கு உத்திரவாதமில்லை.

dinamani_2025-09-28_xgstbhzu_Aruna-jegad

மேலும், அருணா ஜெகதீசன் ஒரு மாதத்திற்கு முன்பு தான் குண்டர் தடுப்பு சட்டம், தென் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க மீண்டும் அவருக்கே இன்னொரு பதவியா?,  தனி நபர் ஆணையம்,  அதுவும் அவசர கதியாக இரவு 10.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அவருக்கான அலுவலகம் எங்கு உள்ளது?, தொலைபேசி எண்கள் என்ன? உதவியாளர்கள் தரப்பட்டார்களா? என்று எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவசரகதியாக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முன்னாள் நீதிபதிகள்  பலர் இருக்க, இவரை மட்டுமே அரசு மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுப்பது ஏன்?

இதுபோக மதுரை கிளை  உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் காவல்துறை இன்னும் விசாரணை முடுக்கிவிடவில்லை என்று குறிப்பிடுகிறது.

நீதிபதியின் வரம்பு மீறிய பேச்சு;

559124026_838385475193550_34990459473588

அதே சமயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி செந்தில்குமார் அவர்கள் வேறு ஒரு வழக்கை விசாரிக்கும் போது, த.வெ.க கட்சியை மிகவும்  கடுமையாகச் சாடி, காவல் துறை விசாரணையை மெத்தனமாக, சரியாக நடத்தவில்லை. அதனால் சிறப்பு விசாரணை குழு அமைக்கபடுவதாக உத்திரவு பிறப்பிக்கிறார். அந்தக் விசாரணைக் குழுவின் உறுப்பினர் பெயர்களை அறிவித்து உடனடியாக விசாரணையை மாற்றவும் உத்தரவிடுகிறர்.  நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ள ஒரு சார்பான கருத்துக்கள் விசாரணையின் போக்கை பாதிக்கும் என்ற கவலையும் ஏற்படுகிறது.

மேலும் தனி நீதிபதி செந்தில்குமார் அவர்களுடைய தாயார் ஒரு முன்னாள் திமுக எம்.எல்.ஏ என்றும் மேலும் அவரது மகள் திருமணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட வீடியோ பல்வேறு ஊடகங்களிலும் வலை தளங்களிலும் செய்தி பரவி வருகிறது. இது மேலும் மக்களுக்கு உண்மை தன்மையும் நீதித் துறையின் மாண்பையும் கேள்விக் குறியாக்கி உள்ளது. இது போன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞரிடம், அதிகாரிகளின் பெயர் பட்டியலை பெற்று அதிலிருந்து தான் நீதிபதிகள் விசாரணை குழுவை தேர்தெடுப்பது வழக்கம். ஆனால், இங்கு நீதிபதி உடனடியாக பெயர்களை அறிவித்துள்ளது அவர் யாரோ எழுதிக் கொடுத்து அதை வாசிப்பது போல் உள்ளது.

பெருந்திரளான பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு அறிஞர்கள் த.வெ.க மீது குற்றம் சாட்டி கையெழுத்திட்ட கடிதம் வெளியிட்டுள்ளது மேலும் திமுக அரசின் மீது சந்தேகத்தை வலுவடைய செய்கிறது.

இவ்வாறான சூழலில், தமிழக அரசின் நடவடிக்கையை பார்க்கையில் நேர்மையும்,  உண்மையுமான விசாரணை நடைபெறுமா? என்னும் சந்தேகம் வலுவடைகிறது.

அதனால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்தாலே நீதி வழங்கப்படுவதை காண முடியும் என வலியுறுத்தி நான் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளேன்.

கட்டுரையாளர்; எம். எல். இரவி

மூத்த வழக்கறிஞர்

தலைவர், தேசிய மக்கள் சக்தி இயக்கம்

https://aramonline.in/22944/karur-deaths-wnat-cpi-investigation/

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

47 minutes ago, கிருபன் said:

த.வெ.க கட்சி தலைவர் விஜய் செப்டம்பர்- 27, அன்று கரூர் மாவட்டத்தில், அரசியல் பரப்புரை கூட்டம் நடத்த காவல் துறை முந்தின நாள் இரவு வரை இழுத்தடித்து,  21 கட்டளைகளுடன், மதியம் 3 மணியிலிருந்து 10 மணி வரை கூட்டம் நடத்த வேலுசாமிபுரத்தில் அனுமதித்தது.

அதன் அடிப்படையில்  விஜய் பகல்  12 மணிக்கு வருவதாக X தளத்தில் பதிவிட்டிருந்தாலும், காலதாமதமாக இரவு 7 மணிவாக்கில் அவர் உரையாற்ற வந்தார்.

இதன் அடிப்படையில் விஜய் தனது நேர ஒழுங்கமைப்பில் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகின்றது

விஜயிடம் எந்தவிதமான ஒழுங்கமைப்புக்களும் இருக்காது என்பது உளவுத்துறைக்குத் தெரிந்தும் வேண்டுமென்றே பாராபட்சமாக இருந்ததா?

அவர் வரும் வரை மக்கள் கூட்டத்தை நெருக்கமான கூட்டமாக மாறுவதை காவல்துறை அவதானித்து தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா ?

விஜயின் அரசியலை அவரால் தான் தீர்மானிக்க முடியும்

அவரின் ஆதரவை எந்த விலை கொடுத்தாவது நாங்கள் வாங்கி விட வேண்டும் என பல கட்சிகளும் போடும் போட்டி அவருடைய வாக்கு வங்கியை அறை கூவுகின்றது எதுவுமே

எளிதில் அனுமானிக்க முடியாது

விஜய் + இந்திரா காங்கிரஸ் + எடப்பாடி என்ற கூட்டணி மட்டும் இன்னும் வெளியே தெரியவில்லை

வந்தால் எப்படி இருக்கும் என்பதே எனது கேள்வி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் முதிர்ச்சியின் இலக்கணமாகும் முதல்வர் ஸ்டாலினும், திராவிட எதிர்ப்பாளர்களின் சதி லீலைகளும்!

6 Oct 2025, 8:08 AM

Chief Minister Stalin and his political maturity

ராஜன் குறை 

கரூரில் நிகழ்ந்த பெரும் துயரச் சம்பவத்தை, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை மிகச் சிறப்பாக, பொறுப்புடன் கையாண்டுள்ளார் தமிழ்நாட்டு முதல்வர். அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன என்று அனைவருக்கும் இலக்கணம் வகுக்கும் விதமாக அவர் செயல்பாடு அமைந்துள்ளது. செய்தி அறிந்ததும் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரை, அருகமை மாவட்ட அமைச்சரை நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை, சிகிச்சைகளை மேற்பார்வையிடச் சொன்னார். சுகாதாரத் துறை அமைச்சரையும் விரையச் சொன்னார். நிலைமையின் தீவிரம் தெரிந்ததும் தானே நள்ளிரவில் விரைந்து சென்றார். அஞ்சலி செலுத்தினார்; ஆறுதல் கூறினார். 

Chief Minister Stalin and his political maturity

விபத்திற்குக் காரணமான தவெக தலைவர் நடிகர் விஜய், அவரைக் காண வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க முயலாமல், விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தபோது, முதல்வர் கரூர் செல்ல விமானம் ஏறினார். முதல்வர் ஒரு வார்த்தை கூட மக்கள் கூடக் காரணமான, விபத்திற்குப் பிறகு களத்தில் நிற்காத தமிழக வெற்றிக் கழகம், அதன் தலைவர் விஜய் குறித்து எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. உடனடியாக மேனாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தார். அதன் அறிக்கை கிடைத்த பிறகு தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார். 

திராவிட இயக்க எதிரிகள் உடனே சதிக் கோட்பாடுகளைப் புனைந்தனர். சற்றுக் கூட கூச்சமே இல்லாமல் தி.மு.க கலவரத்தைத் தூண்டியது என்றனர். காவல்துறை வேண்டுமென்றே கூட்டம் நடந்த இடத்தைக் கொடுத்தது, விபத்தைத் தடுக்கவில்லை என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கூறினர். ஆனால் முதல்வர் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. பதிலுக்கு பிறரைக் குற்றம் சாட்டவில்லை. மாறாக எந்த தலைவரும் மக்கள் இப்படி பாதிக்கப்படுவதை விரும்ப மாட்டார் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் தலைவர்களையும் மரியாதைப் படுத்தினார். 

சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் பதட்டம் உருவாகக் கூடாது என்ற வகையில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா அவர்களும் செய்தியாளர் சந்திப்பில் பல விவரங்களை, காணொளிகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விஜய் கடுமையாக விமர்சித்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து யதார்த்தமாக நடந்தவற்றை விளக்கினார். விஜய் தன்னைப் பற்றி பேசும் முன்பே கூட்ட த்தில் பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததை காணொலிகள் மூலம் விளக்கினார். கூட்ட த்தில் நெரிபட்ட தொண்டர்களே விஜய் மற்றும் அவருடன் இருந்தவர்கள் கவனத்தைக் கவர செருப்புகளை வீசியதை விளக்கினார். அவருக்கு எந்த பதட்டமும், குழப்பமும் இல்லை. உணர்ச்சி வசப்படவில்லை. மிகுந்த பொறுப்புடன் பேசினார். 

இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிச்சயம் பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்பதால் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும், நிர்மல் குமார் மீதும் முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரிய வழக்குகள், பொதுநல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கவில்லை ஆதலால் அவர்கள் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களாக முன்வந்து வழக்கிற்கு ஒத்துழைக்கவில்லை.  

Chief Minister Stalin and his political maturity TVK Vijay

நடிகர் விஜய் சென்னையில் கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இரண்டு தினங்கள் கழித்து சில நிமிடங்கள் பேசி ஒரு காணொளி மட்டும் வெளியிட்டார். அதில் அவர் சமூக நாகரீகம் கருதி ஒரு மன்னிப்பு கூடக் கேட்கவில்லை. தனக்குள்ள பொறுப்பை ஏற்கவில்லை. முதல்வரை விளித்து பழிவாங்க வேண்டுமென்றால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக சவால் விடுத்தார். 

இத்தனை உயிரிழப்பிற்கு அவர் நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்பதால் அவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்; அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று பலர் கூறினர். கைது செய்யாததற்காக முதல்வரைக் கண்டித்தனர். ஆனாலும் முதல்வர் அத்தகைய நடவடிக்கைகளில் இறங்கவில்லை. ஆணையத்தின் அறிக்கை விஜய் பொறுப்பாளி என்று கூறினால் பிறகு வழக்குத் தொடர்ந்தால் போதும் என்ற நிலையில் அவரைக் கைது செய்து பிறகு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை; அதனால் இந்த துயர நிகழ்வு அரசியல் மயமாவது தேவையில்லை என்று அமைதி காத்தார். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டாமல், மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் தடுப்பதே முக்கியம் என்று அறிவித்து தன் தலைமையின் மாண்பினை, அரசியல் முரண்களுக்கு அப்பாற்பட்ட தன் பதவியின் கெளரவத்தை வெளிப்படுத்திக் காட்டினார். 

தமிழக வெற்றிக் கழகமும், நடிகர் விஜயும் இந்த சிக்கலை எளிதில் கடந்திருக்க முடியும். இந்த நிகழ்விற்காக வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு, காவல்துறை ஒத்துழைப்புடன் பாதிக்கப் பட்டவர்களை சென்று பார்த்திருந்தால், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியிருந்தால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தால் அவர்கள் இப்படி முடங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் நோக்கமே எப்ப டியாவது அரசின் மீதும், ஆளும் கட்சி மீதும் பழி சுமத்த வேண்டும் என்பதாகவே இருந்ததால் அவர்களால் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள முடியவில்லை. நீதி மன்றத்திலும், பொது மன்றத்திலும் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்து அம்பலப்பட்டு நிற்க நேர்ந்திருக்கிறது. 

தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள், நேரலையில் தொலைகாட்சி சேனல்கள் ஒளிபரப்பிய காட்சிகள் யாவும் விபத்து எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ளும் விதமாகத்தான் உள்ளன. ஆம்புலன்ஸ் சதி, மின்சார துண்டிப்பு சதி, தடியடி, செருப்பு வீச்சு சதி என அனைத்துக் கற்பிதங்களையும் காணொளிக் காட்சிகள் பொய்யாக்குகின்றன. விஜய் தாமதமாக வந்தது, தன் வாகனத்திற்குப் பின்னால் ஒரு மக்கள் திரளைத் திரட்டி தன்னை சந்திக்கக் காத்திருந்தவர்களுடன் கலக்க விட்டு நெரிசலை ஏற்படுத்தியது ஆகியவையே இந்த விபத்து நிகழ முக்கியக் காரணங்கள் என்பதைக் காணொளிகளைப் பார்த்து அறிய முடிகிறது. இதை ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவித்துக் கடப்பதுதான் நேர்மை என்பதைவிட அதுவே சுலபமானதும் கூட. ஆனால் அதற்குப் பதிலாக அரசை, ஆளும் கட்சியை குறை கூறி தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைப்பது சிறுபிள்ளைத்தனம். 

Chief Minister Stalin and his political maturity

பாரதீய ஜனதா கட்சியின் தொடரும் சதி லீலைகள் 

முதல்வர் ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சி இப்போதுதான் வெளிப்பட்டது என்பதல்ல. தி.மு.க 2016 தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலேயே சட்டமன்றப் பெரும்பான்மையை தவற விட்டது. அடுத்த ஆண்டே ஜெயலலிதா அவர்கள் மறைந்தபோது ஸ்டாலின் கட்சித்தாவல்களை ஊக்குவித்து ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை. என்றைக்கு இருந்தாலும் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுதான் ஆட்சியமைப்பேன் எனத் தெளிவுடன் இருந்தார். 

ஜெயலலிதா நோயுற்றபோதே முதல்வர் பொறுப்பை வகித்து வந்த, அவர் மறைந்தவுடன் முறையாகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வமும் சரி, பின்னர் அவர்கள் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த சசிகலா அம்மையாரும் சரி, பாரதீய ஜனதா கட்சியுடன் ஒத்துழைக்கத் தயாராகத்தான் இருந்தனர். அரை நூற்றாண்டு வரலாற்றில், தி.மு.க மாநில அடையாளத்தில், அதன் சுயாட்சியில் மையம் கொண்டும், அ.இ.அ.தி.மு.க அகில இந்திய அடையாளத்தை அதிகம் அனுசரித்தும், ஒன்றியத்துடன் ஒத்துழைப்பதாகவும் விளங்கி வந்துள்ளதை கவனமாக ஆராய்ந்து அறியலாம். இப்படியெல்லாம் இருந்தும் அ.இ.அ.தி.மு.க கட்சியைப் பிளக்க முனைந்தது பாஜக.   

ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் துவங்கும்படி நான்தான் கூறினேன் என்று பகிரங்கமாகவே அறிவித்தார் பாஜக-வின் முக்கிய ஆலோசகர் குருமூர்த்தி. ஒன்றியத்தில் ஆட்சி செய்த பாஜகவும் ஒத்துழைத்தது. சசிகலா பதவியேற்பதைத் தாமதப்படுத்தியது. ஆனால் தினகரனும், சசிகலாவும் கூவாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாத்து ஒ.பி.எஸ் கலகத்தை முறியடித்தனர். உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கிடந்த தீர்ப்பு அந்த நேரம் வெளியாக, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சிறை சென்றார் சசிகலா. 

அடுத்த காட்சி ஆர்.கே.நகர் தேர்தல். அதில் டி.டி.வி.தினகரன் போட்டியிட, வெற்றிபெற்றால் அவர் முதல்வராகும் வாய்ப்பு தெரிந்தது. அதை பாஜக விரும்பவில்லை என்பதால் தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டது. அப்படியும் அவர் வென்றுவிட அவர் ஆதரவாளர்களான 18 ச.ம.உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, அவர்கள் தடாலடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஓ.பி.எஸ்ஸின் 11 ச.ம.உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமியுடன் இணைத்து, தினகரனை வெளியேற்றி புதிய ஏற்பாட்டைச் செய்தது பாஜக. இதையும் ஓ.பன்னீர்செல்வமே பகிரங்கமாகக் கூறினார். பிரதமர் கூறித்தான் நான் இணைந்தேன் என்றார். 

இதில் முக்கியமானது என்னவென்றால் இத்தனை குழப்பத்திலும், ஒரு பிரிவு அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை ஈர்த்துத் தான் ஆட்சியமைக்கலாம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் முயலவேயில்லை. அமைதி காத்தார். கலைஞர் மறைந்து அவர் தலைமைப் பொறுப்பேற்றதும், பாஜக-வை எதிர்த்து திராவிட சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதுதான் தன் அரசியல் என்று அறிவித்தார். இன்று வரை அந்தக் கொள்கையில் திடமாக இருக்கிறார். 

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று முழுங்கினால் யாரை எதிர்த்து போராடும் என்று கேட்ட ஆளுனருக்கு, அருமையான பதிலைக் கொடுத்துள்ளார். எதையெல்லாம் எதிர்த்து போராடும் என்ற பட்டியலில் கல்வியில் மூட நம்பிக்கைகளை புகுத்தி நூறாண்டுகள் பின்னே செல்ல சதி செய்யும் பாஜக-வை எதிர்த்து போராடும் என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளார். 

Rajan-5-1024x802.jpg

மதவாத, பிற்போக்குவாத அரசியல் எதிர்ப்பு என்ற அடிப்படையில் அவர் உருவாக்கிய கூட்டணி இரண்டு மக்களவை தேர்தல்களிலும், ஒரு சட்டமன்ற தேர்தலிலும், உள்ளூராட்சி தேர்தல்களிலும் பெருவெற்றி பெற்றுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிக் கட்டிக்காத்த திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியின் தன்னுணர்வை தன் தலைமையில் பன்மடங்கு வளப்படுத்தி, திராவிட மாடல் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற ஒரு கருத்தியலை நிலைநிறுத்தியுள்ளார்.   

எதிர்முனையில் அ.இ.அ.தி.மு.க-வை எவ்வளவு பிளந்தாலும் தாங்கள் அதன் இட த்தைப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த பாஜக இப்போது நடிகர் விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க விரும்புகிறது. கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்து கண்ணீரின் ஈரம் காயும் முன்னரே, விஜய் தேசிய ஜன நாயக க் கூட்டணிக்கு வரவேண்டும், அவருக்கு வேறு வழியில்லை என்று பாஜக ஊடகப் புலிகள் முழங்கத் துவங்கிவிட்டனர். அது மட்டும் நடந்துவிட்டால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்ற கற்பனை அவர்களை பரவசப்படுத்துகிறது. 

உடனே தேசியத் தலைமையும் முன்னாள் நடிகர் ஹேமாமாலினி தலைமையில் அனுராக் தாகூர் என்ற டில்லி கலவர புகழ் அமைச்சரை உள்ளடக்கி உண்மையைப் புனைந்து கூற கரூருக்கு அனுப்பியது. அவர்கள் என்ன முயன்றும் பெரிதாக எதுவும் கதைகட்ட முடியவில்லை. ஆனாலும் பாஜக பேச்சாளர்கள், முன்னாள் நடிகை குஷ்பு போன்றவர்கள், தொடர்ந்து ஏதேனும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை, சதிக்கோட்பாடுகளைப் பேசி வருகிறார்கள். 

தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை மிகவும் வினோதமாக இருக்கிறது. ஒருபுறம் பிளவு வேலைகள், சூழ்ச்சிகள் எதையும் செய்யாமல் தன் கொள்கைப் பற்றின் அடிப்படையில் கூட்டணி அமைத்து, திறன் மிக்க நல்லாட்சியால் மக்கள் மதிப்பைப் பெற்று நேர்வழியில் அரசியல் செய்யும் முதல்வர் ஸ்டாலின். 

மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தன் விருப்பம் போலச் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்படும் ஆளுனர், தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை செய்து முடக்கப்பார்க்கும் ஒன்றிய அரசு, எப்படியாவது புதிய தேசிய கல்விக்கொள்கையை திணிக்க நினைக்கும், மும்மொழிக் கொள்கையை புகுத்தத் துடிக்கும் அரசியல் மேலாதிக்க வெறி என்று இயங்கும் பாஜக. 

இத்தனை செய்தும் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாமல் அ,இ.அ.தி.மு.க-வை வெட்டி, ஒட்டி, வளைத்து விளையாடியது போதாமல், இப்போது புதிதாக அந்த ஒட்டுவேலையில் நடிகர் விஜயை இணைக்கப் பார்க்கிறது பாஜக. இதில் என்ன வேடிக்கை என்றால் இப்படி பலபடி வளைத்ததில் அவர்கள் கட்சியிலேயே பலவித குழப்பங்கள், குழுக்கள். அண்ணாமலை கட்சியை பெரிதாக வளர்த்துவிட்டார், பெரும் ஆளுமை மிக்க தலைவர் என்று வரலாறு காணாத பிம்பத்தை உருவாக்கியவர்கள், திடீரென அவரை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக்கி விட்டார்கள். இப்போது ஸ்டியரிங்க் யார் கையில், பிரேக் யார் கையில் என்று தெரியாமல் வண்டி தடுமாறுகிறது. 

பாஜக நிலையும் சிக்கல்தான். அவர்கள் கொள்கையான இந்துத்துவம் பேசி ஒருபோதும் திராவிட கருத்தியலை வெல்ல முடியாது என்பதால், இதுபோல வளைத்தல், உடைத்தல், ஒட்டல் என திருகு வேலைகளைத்தான் செய்ய முடிகிறது. யார் டில்லிக்கு போகிறார்கள், யார் டில்லியிலிருந்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே குடியிருக்க வேண்டியிருக்கிறது. 

அ.இ.அ.தி.மு.க அணிகள் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம். டி.டி.வி.தினகரன்; பாஜக அணிகள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை என ஆறேழு பேர் தவிர இப்போது புதிதாக த.வெ.க விஜய் என பாஜக பொம்மலாட்டம் களை கட்டுகிறது. எதிரணியில் சுயமரியாதைப் பதாகையின் கீழ் அணிவகுத்து நிற்கிறது கொள்கைக் கூட்டணி. இப்படியொரு சமனற்ற தேர்தல் களம் சமீப காலங்களில் உருவானதே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனாலும் ஊடகங்கள் காட்சி மயக்கங்களை உருவாக்கத்தான் செய்யும்.   

கட்டுரையாளர் குறிப்பு:  

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.

https://minnambalam.com/chief-minister-stalin-and-his-political-maturity/#google_vignette

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமாக்காரர்களை கடவுளாக பார்க்கும் கூட்டம் இருக்கும் வரைக்கும் மாற்று கட்சியினர் அனைவருக்கும் வெற்றி வேட்டைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய்யை வைத்து ஸ்டாலின் நிகழ்த்தும் அரசியல் விளையாட்டு!

-சாவித்திரி கண்ணன்

1364531.jpg

கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்களேன்..!

விஜய்க்கு ஏன் இவ்வளவு ‘அட்டென்சன்’ தர்றீங்க..!

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைம்பாங்க.

அதைப் போல விஜய் சும்மா இருந்தாலும், மீது நாளும் பொழுதும் ஆளாளுக்கு பாய்ந்து, பாய்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து தாக்கித் தள்ளுகிறார்கள்…!

நடந்துவிட்டது ஒரு அசம்பாவிதம்!

அதில் இருந்து  தற்போது மீண்டாரா விஜய் …? என்பதே தெரியவில்லை. அநியாயத்துக்கு அரண்டு கிடக்கிறார். மூன்றாவது நாள் ஒரு வீடியோ போட்டதோட சரி. அதுக்கு பிறகு பேச்சு, மூச்சே இல்லை.

ஆனால், நாள் தோறும் என்று சொல்வதைவிட நாளும், பொழுதும் விஜய் தான் இங்கு பேசுபடு பொருளாக உள்ளார். இதற்கு உபயம் அதிகாரத்தில் இருப்பவர்களே..! அவங்க ஐ.டி விங்க் ஒரு பக்கம் ரெக்கை கட்டிப் பறக்குது. முக்கிய மெயின்ஸ்டீர்ம் மீடியாக்கள் கூட விஜய்யை வறுத்தெடுக்கின்றன. இது பத்தாது என்று எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அறுவுஜீவிகள் என அனுமார் வாள் நீளத்தை விட அதிகமான அளவில் கூட்டறிக்கை வெளியிட்டு விஜய்யை வெளுத்து வாங்குகிறார்கள்!

போதாக்குறைக்கு போலீஸ்துறை அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரிகள் வேறு விலாவாரியாக பேட்டி தந்து விஜய் மீது தான் தவறுள்ளது என ‘எஸ்டாபிளீஸ்மெண்ட்’ செய்கிறார்கள்.

திமுக கூட்டணிக் கட்சிகளோ.., தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி உறவை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக விஜய்யை விளாசித் தள்ளுகிறார்கள்.

இதுல திருமாவளவன் தான் ஸ்டாலினே வியக்கிறா மாதிரி பேசி அதிகமாக ஸ்கோர் பண்ணிட்டாருன்னு சொல்லலாம். ஒரு வகையில் ஸ்டாலினின் மனசாட்சியாக அவர் தன் விசுவாசத்தை காட்ட நினைத்தாரோ என்னவோ..?

இதுல நான் முற்றிலும் எதிபாக்காதவர் ஐயா வீரமணி. அவர் வயதுக்கும், அனுபவத்திற்கும் அவர் விஜய்யைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், ஏதோ ஒரு பெரிய எதிரியிடம் மோதுவதைப் போல உணர்ச்சிவசப்பட்டு பேசறார். பெரியாரைப் பற்றி சீமான் பேசிய போது கூட இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருப்பாரா? தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல  நீதிபதியே நிதானமின்றி இவ்வளவு நீட்டி முழக்கி விஜய்யை தாக்குகிறார். அவர் வகிக்கும் மிக உயர்ந்த பொறுப்புக்கு முன் விஜய் ஒன்னுமே இல்லை. வழக்கில் விசாரணையை நடத்தி சொல்லும் தீர்ப்பின் வாசகத்தில் நீதியை நிலை நாட்டி நீதிபதி பிரகாசிக்க வேண்டுமேயன்றி, வரம்பு மீறி கருத்துக்கள், அபிப்ராயங்களை அள்ளி வீசுவது அவரது மாண்புக்கு அழகல்ல.

விஜய்க்கு இளைய தலைமுறையின் மிகப் பெரிய ஆதரவு வட்டம் இருந்தாலும், இது வரைக்குமான விஜய் அரசியலை நான் அனுமானித்த வகையில் அவர் பொது வாழ்க்கைக்கான மனிதராக உருவாகலை. ஒரு தேர்தலுக்கு பிறகு, விஜய் அரசியலில் தொடர்வாரா? என்பதும் என்னை போன்றோருக்கு சந்தேகமாகவே உள்ளது.

அவர் ஒரு நிழல் ஹீரோ மட்டும் தானேயன்றி, நிஜ ஹீரோவல்ல. உண்மையில் நிஜ ஹீரோவாக இருந்திருந்தால், நடந்த அசம்பாவித சூழலை நன்கு கையாண்டு தன்னை நிரூபித்து இருப்பார்.

என்னை பொருத்த வரை விஜய் விசயத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போவது ஆட்சியாளர்களுக்கு நல்லது. அவரை அதிகமாக பேசுபடு பொருளாக்கி, பெரிய ஆளாக சித்தரித்து வளர்த்து விடாதீர்கள்..! நீங்கள் செய்வதனைத்தும் அவருக்கு அனுதாப அலையை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது.

நிகழ்வு நடந்த அன்று இரவே ஒரு  நபர் ஆணையத்தை அறிவித்து நீதிபதி அருணா ஜெகதீசனும் களத்தில் இறங்கிவிட்டார். அடுத்ததாக ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவையும் களத்தில் இறக்கி விட்டீர்கள். உங்களிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. உண்மைகள் வெளி வரும் வரை ஏன் பொறுமை காட்ட முடியவில்லை…?

IG-asra-garg-karur-stampede-2.jpg

கரூரில் நிகழ்வு நடந்த இடத்தில் ஆய்வு செய்யும் அஸ்ரா கர்க் ஐ.ஜி

எதையும் பேசவும் துணிவின்றி  மிக பலவீனமாக இருக்கும் ஒருவரை தொடர்ந்து கேரக்டர் அசாசினேஷன் செய்கிறீர்கள். அந்தக் கட்சியின் முதல் நிலைத் தலைவர்களே தலைமறைவாகி அஞ்சி அரசியல் நடத்தும் அவல நிலையில் தொடர்ந்து கடுமையான ஏவுகணைகள் வீசப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்வது..? தொடர்ந்து ஒரு தரப்பை விரட்டி, விரட்டி அடித்தால், அவர்களுக்கும் வேறு வழியின்றி துணிவு பெற்று கடும் எதிர் அரசியல் செய்யும் நிலைக்கு தயாராகிவிடுவார்கள்!

இது வேலியில் போகிற ஓணானை எடுத்து சட்டைக்குள் போட்ட கதையாகிவிடும்.

இப்படித்தான் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் என்ற ஒரு கடிதத்தை ஜெயலலிதா எழுதி பத்திரிக்கைகளுக்கு தந்தார். அதை மோப்பம் பிடித்து நடராஜன் அந்த கடிதத்தை வழியிலேயே கொண்டு சென்றவரிடமிருந்து கைப்பற்றி ரகசியமாக ஒளித்து வைத்தார். இதை உளவுத் துறை மூலம் கேள்விப்பட்ட கலைஞர் காவல்துறையை அனுப்பி, அதை நடராஜன் வீட்டில் கைப்பற்றி ஊடகங்களில் வெளிப்படுத்தினார். விளைவு, எதிர்பாராத வகையில் மீண்டும் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டது.

அதைப் போலத் தான் விஜய் விவகாரத்தில் பதற்றப்பட்டு தன்னை சுற்றிலும் உள்ளவர்களை ‘அலர்ட்’ செய்து, ‘ஓவர் ரியாக்‌ஷன்’ செய்ய வைக்கிறார், ஸ்டாலின். தான் எதுவும் பேசாமல் கமுக்கமாக இருந்து கொண்டு, இப்படி சுற்றிலும் உள்ளவர்களை வைத்து விளையாடும் அரசியல் விளையாட்டைத் தான், தொடக்கம் முதல் முதலமைச்சர் ஸ்டாலின், தன் அதிகார ஹோதாவில் நிகழ்த்திக் கொண்டுள்ளார்.

நிகழ்வதை அதன் போக்கில் இயல்பாக அணுகாமல், வலிந்து விஜய்யை பலவீனப்படுத்தும் ‘நேரசனை செட்’ செய்து கொண்டே இருந்தால்.., அது இயற்கையின் விதிப்படி  எதிர்வினையாற்றிவிடும்.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/22967/stalin-politics-about-vijay/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.