Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது.

இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன.

இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'.

Bison Review; பைசன் விமர்சனம்

Bison Review; பைசன் விமர்சனம்

தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொடுத்து, 'அசல்' கபடி வீரராகச் சடுகுடு ஆடியிருக்கிறார் துருவ். வெவ்வேறு பருவங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வித்தியாசங்கள், கன்றிலிருந்து முட்டி மோதும் காளையின் பரிணாமம்!

இப்படி ஒரே மூச்சில் விடாமல் பாடி, அனைத்து ரைடிலும் பாயிண்ட் அடித்தாலும், வட்டார வழக்கில் மட்டும் அந்த 'பாடுதல்' சற்று தடுமாறுகிறது.

நீரை இழக்காமல் இருக்க முட்களைத் தாங்கும் கள்ளி போல, தன் பிள்ளைக்காக வாழ்வை வடிவமைத்த உன்னத தந்தையாக, வறண்ட நிலத்தில் வேரூன்றி நிற்கிறார் பசுபதி.

சாமியாடி நிற்கும் இடத்தில் முற்கள் முன்னே என்றால், பிள்ளைக்காகக் கெஞ்சும் இடத்தில் அந்தக் கள்ளியில் ஒரு பூவும் பூத்துவிடுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே பழிவாங்கும் சதுரங்க யுத்தத்தை நடத்துபவர்களாக வரும் அமீரும், லாலும், கறுப்பு, வெள்ளை இல்லாத சாம்பல் நிற ராஜாக்கள்.

Bison Review; பைசன் விமர்சனம்

Bison Review; பைசன் விமர்சனம்

ஒவ்வொரு பிரேமிலும் போட்டிப்போட்டு இவர்கள் செய்யும் சைகைகள், முகபாவனைகள் சமூகப் பதற்றத்தின் பிரதிபலிப்பு. காதலின் தவிப்பை வெளிப்படுத்தும் அனுபமா பரமேஸ்வரன், தம்பியின் வெற்றியைக் காணத் துடிக்கும் ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

சாதி ஒழிப்பின் முகமாக, யதார்த்தமான உடல்மொழியும், வட்டார வழக்கில் தெளிவும் கொண்டு, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் ‘அருவி’ மதன்.

தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச, மற்ற இடங்களில் தேர்ந்த காட்சிக் கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வு எனக் கேமரா கண்களில் கதை சொல்லியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசுன்.கே.

குறிப்பாக, கபடி போட்டியின் பரபரப்பு வெளிவரும் இடங்களில் எல்லாம், இவரது செல்லுலாய்டு நம்மையும் அந்த நீள்சதுரமான கட்டத்துக்குள் கட்டிப்போடுகிறது. இதை எந்த அளவிலும் சிதைக்காமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சக்தி திரு.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீ கொளுத்தி’ பாடல் அனல் பறக்க, ‘சீனிக்கல்லு’ பாடல் கரையவைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றாற்போல இருந்தாலும், இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம்.

Bison Review; பைசன் விமர்சனம்

Bison Review; பைசன் விமர்சனம்

கபடி ஆடுகளம், சுவரோவியம், பழைய டேப்ரெக்கார்டர், டிவி என 90களின் முற்பகுதியில் நடக்கும் கதையின் தேவையைப் புரிந்து, கலை இயக்குநர் குமார் கங்கப்பன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

சமநிலையற்ற சமூகத்தில், ஒரு லட்சிய நோக்கம் கொண்ட இளைஞனுக்குப் போடப்பட்ட வேலி என்ன, அதைக் கடப்பவனின் அக, புறப் பிரச்னைகள் என்னென்ன என்பதை ஆழமாகத் திரைக்களம் அமைத்து ஆட்டம் கட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

பின்கதைக்கான பதிலை முன்கூட்டியே இந்திய அணியில் கிட்டான் இருப்பதாகச் சொன்னாலும், அந்தப் பயணம் எத்தகையது என்பதை யதார்த்தமான திரைமொழியில் சொல்லியிருப்பது சிறப்பு. 

சிறு ஆடு பிரச்னையைக் கூட குருதி கேட்க வைக்கும் கிராமத்துச் செந்நிலம் என்கிற காட்சியமைப்புகள் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. எப்படியாவது தன் பிள்ளையைக் காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டும் என்கிற தந்தையின் நியாய உணர்வு நம்மையும் கலங்கவைக்கிறது. அதே சமயம், காதல் காட்சிகளை மேலோட்டமாகக் கடந்து செல்வதால், அவர்களின் பிரிவின் வலி ஆழமாகக் கடத்தப்படவில்லை.

‘எதற்காகக் கத்தி எடுத்தோம் என்பதையே மறந்துட்டானுங்க’ என்று அமீர் பேசும் இடம் சிந்திக்க வைக்கும் கேள்வியை எழுப்பினால், ‘சோத்ததான திங்குற’ என பி.டி. வாத்தியார் பேசுவது சாதியத்துக்கு எதிரான பிரம்படி. ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது அம்மக்கள் மட்டுமே சிந்திக்க வேண்டியது அல்ல, எதிரில் இருப்பவர் கையிலும் அது இருக்கிறது. அதை உணர்ந்து, மையநீரோட்ட அரசியல் பேசிய விதம் அட்டகாசம்.‘இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் சாதாரண போட்டிதான்’ என்ற வசனம் மூலம் தேசியவாதத்தை வைத்து நடக்கும் வெறுப்பரசியலையும் நடுக்கோட்டுக்கு அந்தப் பக்கமே வைத்திருக்கிறார் எழுத்தாளர் மாரி செல்வராஜ். இவை பிரசார நெடியாக இல்லாமல், கதையின் போக்கிலேயே அமைக்கப்பட்ட விதம் சிறப்பு. ‘உடைதலும் எழுதலும்’ என்கிற பார்முலாவை இரண்டாம் பாதியில் ஓர் எல்லைக்கு மேல் மீண்டும் மீண்டும் செய்யாமல், சற்றே குறைத்திருக்கலாம். அதனால் நீண்ட நேரத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு வருகிறது.

நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் என ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான விறுவிறுப்பைக் கொடுக்கும் இந்த 'பைசன்', கொம்பிருந்தும் யாரையும் முட்டாமல் நாலு கால் பாய்ச்சலாகச் சமத்துவ வெற்றிக் கோட்டைத் தாண்டி ஓடுகிறான். 

பைசன் விமர்சனம்; துரூவ் விக்ரம், அனுபமா, பசுபதி, அமீர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் எப்படி இருக்கு? | Bison Review; How is Bison directed by Mari Selvaraj starring Dhruv Vikram, Anupama and Ameer?

  • கருத்துக்கள உறவுகள்

"Bison is the film that scared my mother and wife" - Mari Selvaraj Interview | Dhruv Vikram

Directed by Mari Selvaraj, the film stars Dhruv Vikram, Anupama Parameswaran, Ameer, Rajisha Vijayan and Lal. The film is based on the life of Kabaddi player Manathi Ganesan. What did Mari Selvaraj have to say about it?

This is a Collective Newsroom release for BBC

#MariSelvaraj #Bison #Kabaddi

  • கருத்துக்கள உறவுகள்

திரையரங்கில் பார்த்தேன். மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

‘பைசன்’ படம் பேசுவது என்ன? மாரி செல்வராஜ் முன்வைத்த நிஜங்கள் என்ன? – இயக்குநர் வசந்த பாலன் ‘நெகிழ்வு’ பதிவு

21 Oct 2025, 2:17 PM

Bison Vasantha Balan

தமிழ்ச் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பைசன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் வசந்த பாலன் விரிவான விமர்சனத்தை தமது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

B2.jpg

பைசன் திரைப்படம் குறித்த இயக்குநர் வசந்த பாலனின் பார்வை:

பைசன் / தெக்கத்தி மண்ணின் வாசனை வீசும் கபடி விளையாட்டை அந்த மக்களின் வாழ்வியலுடன், அந்த நிலத்தின் அரசியலுடன் சேர்த்து உணர்ச்சிக் கொந்தளிப்புடன் காளமாடனுக்கு படையல் வைப்பது போல நம்முன் படையல் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

B4-768x1024.jpg

அரசியல் ஒரு சாக்கடை என்று நீங்கள் சொல்லலாம்,,அரசியலுக்குள் நான் இல்லை,,,அரசியல் எனக்கு பிடிக்காது,,,,அரசியல் எனக்கு தெரியாது என்று நீங்கள் எந்த வார்த்தையையும் உச்சரிக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையை அரசியல் தான் தீர்மானிக்கிறது, உங்கள் படிப்பை அரசியல் தான் தீர்மானிக்கிறது, உங்கள் தேர்வுகளை அரசியல் தான் தீர்மானிக்கிறது உங்களது
புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அரசியல் தான் தீர்மானிக்கிறது.

அப்படி தெக்கத்திய அரசியல் மற்றும் ஜாதிப்பிரச்சினைகளுக்கு (இங்கு அரசியலே ஜாதி மதங்களால் ஆனது தானே) நடுவே மாட்டிக் கொண்ட கிட்டான் என்கிற கதாபாத்திரம் எப்படி அலைக் கழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யம் குறையாத நான் லீனியர் திரைக் கதையமைப்பில் அற்புதமாக மாரி விவரிக்கிறார்.

B1-808x1024.jpg

அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட திரைக்கதை. வழக்கமாக ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படங்கள் விளையாட்டு குழுவின் அரசியல்,
அதற்குள் உள்ள சதிகள், விளையாட்டின் விதிமுறைகள், பயிற்சியாளர் சொல்லி தருகிற விதிகள், மாற்றுவிதிகள், குறுக்கு வழிகள்,விளையாட்டு வீரனின் குடும்பம் மற்றும் அவனின் மனக்குழப்பங்கள் தடுமாற்றங்கள் இவைகளைத் தான்
நாம் பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒருவன் வெற்றியை சுவைக்க விடாமல் அரசியல் எப்படி பாதிக்கிறது என்பதை ரஞ்சித் சென்னை நகர பின்னணியில் வரலாற்று நிகழ்வுகளுடன் சொல்லியிருந்தார்.

அதே போன்று தெக்கத்திய மண்ணின் ஆன்மாவோடு அங்கு நிலவும்
சாதிப் பிரச்சினைகள், சண்டைகள், கொந்தளிப்புகள் எப்படி சாக்கடைக்கும் கீழே வாழ விதிக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வை துண்டாடுகிறது என்பதை அத்தனை அழுத்தமாக கொந்தளிப்புடன் கண்ணீருடன் நம் முன் வைக்கிறார் மாரி.

ஏன் இந்த ஊர விட்டு ஓடனும்?

இனிமே என்னால ஓடமுடியாது

ஏன் என்னை இந்த ஊருல இருக்கிற கபடி டீம்ல சேத்துக்கமாட்டேனு சொல்றாங்க?

உன் காலத்துல உங்கப்பா காலத்துல உங்க தாத்தா காலத்துக்கு முன்னாடி இருக்கிற பிரச்சினை என்னை ஏன் விளையாட விடாமல் தடுக்கிறது? காதலிக்க விடாமல் தடுக்கிறது என்று துருவ் கேட்கும் போது

ஏன்னா அதான்டா நம்ம விதி என்று பசுபதி சொல்லிவிட்டு அழும் போது சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பசுபதிக்கு இந்த திரைப் படத்திலாவது கிடைக்க வேண்டுமென மனம் அடித்து கொள்கிறது.

B9-682x1024.jpg

சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் அத்தனை வித்யாகர்வத்தோடு கம்பீரமாக ஒரு வாத்தியாராக நடித்திருந்த பசுபதி இந்த திரைப்படத்தில் கையாலாகாத சம்சாரியாக கூனி குறுகி தன் கோவக்கார பையனை ஒரு கோழிக்குஞ்சு போல கைக்குள்ளே வைத்து பொத்தி பாதுகாக்கிற கதாபாத்திரத்தில் கதறுகிறார் சண்டை போடுகிறார் முதுமை காரணமாக சண்டை போட முடியாமல் விழுந்து கிடக்கிறார் அழுகிறார் கொந்தளிக்கிறார் வெறி கொண்டு சாமியாடுகிறார்.

ஒரு துளியில் கூட பசுபதி என்ற நடிகன் தெரிந்து விடாமல் தோற்று போன சம்சாரியாக திரையில் தெரிகிறார்.

இத்தனை ஆண்டுகளாக மழைக்கு காத்திருக்கும் பூமி போல அழகான கதாபாத்திரங்களுக்காக காத்திருந்து காத்திருந்து நடிக்கிறார்.

அது பெரிய ஆன்ம பலம். வாழ்த்துகள் பசுபதி சார்.

ஒரு கெடாவை பஸ்ஸில் அழைத்துப்போக முடியாத அளவிற்கு சாதி நெருக்கடிகள் தென்தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது என்பதை அந்த கெடாவின் ரத்தத்தோடு அந்த காட்சி விரியும் போது பரியேறும் ருமாளில் வருகிற கருப்பி நினைவுக்கு வந்து விட்டாள்.

மாரியின் படங்களில் வருகிற விலங்குகள் கதையின் ஆன்மாவாகவே இருக்கின்றன. எனக்கு தெரிந்து வேறு எந்த சினிமாவிலும் விலங்குகளை அழகியல் படிமமாக
அரசியல் படிமமாக வைத்து கொண்டு காத்திரமாக கதை சொன்ன வேறு இயக்குநர் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.

பரியேறும் பெருமாளில் நாய், கர்ணனில் குதிரை, மாமன்னனில் பன்றி இப்போது காளமாடன். மூன்றே காட்சிகளில் எத்தனை அழகான கவித்துவமான காதல் கதையை நம் முன் வைக்கிறார். மஞ்சனத்தி வாசத்தை காதலில் கலந்து உதிரும் சருகுகளாக
பறக்கவிடுகிறார்.

B5-1-881x1024.jpg

துருவ் படம் நெடுக பேசும் வசனம் ஒரு பக்கம் அளவு கூட இருக்காது ஆனாலும் கபடி களத்தில் அவர் கபடி விளையாடுகிற காளமாடன் உடல் மொழியும் படம் நெடுக காணும் கிராமத்து மண் சாலைகளிலும் சென்னை வீதிகளிலும் ஜப்பான் விளையாட்டு அரங்கிலும் அவர் ஓடிக்கொண்டேயிருக்கும் போது வெளிப்படுத்தும் உடல் மொழி
ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையற்றவனின் உடல் மொழி. அவனை பாடச்சொன்னால் இந்த ஜனம் கேட்டு தீராத பாடலை ஆண்டுக்கணக்காக பாடித் தீர்ப்பான்.. அப்படியிருக்கிறது துருவின் உடல் மொழி.

அந்த மொழி நம்முடன் பேசியவண்ணம் இருக்கிறது. வழக்கமாக தமிழ் கதாநாயகர்கள் நக்கல் நையாண்டிகளில் கலகலவென்று பேசி ரசிகர்களை கவர்வார்கள் இதில் தன் உடல் மொழியால் திரை முழுக்க நிறைந்திருக்கிறார் துருவ்.

நம் வீடுகளில் வளர்ந்து நிற்கிற நிஜ ஊமை மாடனாக ஒரு பையன் இருப்பான். அவனை துருவ் நினைவு படுத்துகிறார். நான் என் இளமைப்பருவத்தில் இப்படித்தான் இருந்தேன்.. என் மகனும் இப்போது அப்படி தான் இருக்கிறான்.. தன் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தத்தெரியாத ஒரு ஊமைக்கொட்டான் என்று செல்வார்கள்.. அப்படி ஒரு பையன் தன் கனவை நோக்கி செல்லும் போது நம் வீட்டு பையன் ஜெயிக்கவேண்டுமென்ற ஆசையில் துருவ் கபடியில் வெல்லும் போது திரையில் விசில் பறக்கிறது.

B7-1024x422.jpg

விளையாட்டின் இறுதி தருணங்களில் பசுபதி கண்களை பொத்திக் கொள்வதைப்போல விளையாட்டின் இறுதி தருணத்தை காணமுடியாமல் ஐய்யோ நம்ம புள்ளை ஜெயிக்கனுமே என்று நாமளும் கண்களை பொத்திக்கொள்கிறோம்.

துருவ் வெல்லும் போது பசுபதி போல நாமும் நம் கண்களை நனைக்கிறோம்.வெல்வது யாருக்கும் எளிதல்ல ஐநூறு மைல்களுக்கு அப்பால் உள்ள குக்கிராமத்தில் இருந்து வெளியேறி வந்து வெல்வது சாதாரண வெற்றியல்ல.. அதனாலே நகரத்தின்
மாபெரும் திரையரங்கில் படம் பார்த்த அத்தனை வெற்றியாளர்களின் கண்களிலும் கண்ணீர் பூக்கிறது.

பரிமேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்,வாழை,பைசன் என மாரி செல்வராஜின் வலிகள் சொல்லி அடங்காமல், சொல்லில் உறையாமல்,சொல்லி ஆறாமல், அழுது ஆற்றாமல், எத்தனை ஒப்பாரிகளுக்கு பின்பும் இன்னும் இன்னும் ஆங்காரமாக,
துளி கங்கு அணையாமல், சாம்பல் இந்த பெருநிலமெங்கும் கதைகளாக பாடல்களாக திரை வண்ணங்களாக பறந்து பரவிய வண்ணம் இருக்கிறது.

ஒரு எழுத்தாளன் ஒரு கவிஞன் திரைக்குள் இயக்குநராக நுழைந்தால் என்ன நடக்குமோ, என்ன அதிசயங்கள் நடக்குமோ, அது இந்த ஐந்து திரைப்படங்களில் நடந்திருக்கிறது.

B6.jpg

நகரத்தின்,வெற்றியின் எந்த சொகுசும் மாரியின் ரத்தத்தில் கலக்கவில்லை என்பதற்கு இந்த படங்களே சாட்சி. எத்தனை புறக்கணிப்புகளை சந்தித்த ஆத்மாவாக இருந்தால் இடையறாது தன்
ஒப்பாரிகளை சொல்லியவண்ணம் இருக்கும். இது மாரி செல்வராஜ் என்கிற தனி மனிதனின் வலியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியின் பெயரால் புறக்கணிப்புகளை,வலிகளை அனுபவித்த தலைமுறையின் பாடல். அந்த தலைமுறைகளின் ஆற்றாத கண்ணீர் தான் மாரியின் திரைப்படங்கள். தொடர்ந்து ஐந்து படங்களாக கமர்சியல் சினிமா என்கிற பசியோடு அலைகிற
சிங்கத்திடம் சிக்காமல் திரை அழகியலுடன் திரைப்படம் எடுத்து வெற்றி பெறுவது என்பது உண்மையில் சாதாரண சாகசம் அல்ல. பெரிய சாகசம்.!

எதிர்மறை எண்ணங்களும் கருத்துகளும் குவியும் சமூக வலைதளங்கள் அதில் கொட்டப்படும் லட்சக்கணக்கான விமர்சனங்கள் இன்ஸ்டாவில் வாழும் gen z இளைஞர்களின் காலத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது என்பது அரிதிலும் அரிதான விசயம்.

தன் நெஞ்சை கோடாரியால் ரெண்டாகப் பிளந்து நிற்கிற உண்மையான கலைஞனாகவே மாரியை நான் பார்க்கிறேன். அவர் படங்களில் ஒப்பனைகள் இல்லை. அலங்காரங்கள் இல்லை. நிலப்பரப்பில் இருந்து பெண்கள் வரை யாரும் கவர்ச்சியாக இல்லை. அதிரடி சண்டைக்காட்சிகள் இல்லை. எதை நீங்கள் அருவறுக்கிறீர்களோ அதை அழகாக்கி உங்கள் முன் காட்சி
பிம்பங்களாக படைக்கிறார்.

சாதிகளால் கட்டப்பட்ட அந்த ஏழாம் உலகம் நமக்கு நம் சமூகத்தின் நிஜங்களைப் புரிய வைக்கிறது. நம்மை புதுப்பிக்க
மாற்றிக்கொள்ள அவரின் திரைப்படங்கள் உதவுகின்றன. வெறும் மெலோடிராமா வகை இயக்குநர் என்று என்னை சுருக்க முடியாது ஆக்சன் படங்கள் எடுக்கக்கூடிய இயக்குநரும் தான் என்பதை மாரி இந்த படத்தில் வரும் இரண்டு கொலை முயற்சிகளைப் பார்க்கும் போது நமக்கு குலை நடுங்குகிறது.

வாழ்த்துகள் மாரி

தெக்கத்திய மண்ணின் ஆத்மா உங்கள் ஆத்மாவோடு இரண்டற கலந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் பெருஞ்செல்வம் நீங்கள்!

https://minnambalam.com/what-does-the-film-bison-convey-the-realities-mari-selvaraj-highlights-emotional-note-by-director-vasanthabalan/

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது அணி இயக்குநர்

AVvXsEiX6A82bt8aHaA9C1ZYp2ETt69jEtoTNBmI

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கும் - கடந்த பத்தாண்டுகளில் அது நரேட்டிவ் செட் பண்ணுவதாக இருக்கிறது. அரசியலில் இதைத் துவங்கி வைத்தது பாஜக. பகிங்கரமான குற்றச்சாட்டுகள், கதையாடல்கள், எதிரிடைகளை உருவாக்கி மக்களிடையே வெறுப்பை விதைத்து அந்தப் பரபரப்பையும் பதற்றத்தையும் கொண்டு தம்மைப் பெரியோராகக் காட்டுவது, அதே சமயம் தம்மைப் பாதிக்கப்பட்டோராகவும் முன்னிறுத்துவது. ஊடகங்களைத் தம் வசப்படுத்தி தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள், குற்றவாளிகள் என்றோ ஒடுக்குபவர்கள், கொடுமைக்காரர்கள் என்றோ, இரண்டுமேதாம் எனவோ சித்தரிப்பது, இதைக் குறித்து அஞ்சி அவர்கள் வாயை மூடும் சூழலை ஏற்படுத்துவது. இதை ஜெர்மனியில் ஹிட்லரும் ரஷ்யாவில் ஸ்டாலினும் முன்பே பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் நம் நாட்டில் தேசியம், கட்சிக் கட்டுப்பாடு, சித்தாந்த விசுவாசம் ஆகியவற்றை மீறி மூளைச்சலவையாக மட்டுமே இது இருக்கிறது. அவ்வாறு மூளைச்சலவை செய்து சாதி, மதம் உள்ளிட்ட எதிரிடைகளைக் கொண்டு என்னதான் பாசிசத்தை வளர்த்தாலும் ஒட்டுமொத்தமாக அதே சமூக நீதி மக்களாட்சியைத்தான் இவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதொரு சுவாரஸ்யம். சினிமாவில் இத்தகைய நரேட்டிவ் செட்டிங் (அதாவது பிரித்தாளும் எதிர்மைக் கதையாடல்கள்) மூன்றாவது அணித் தோற்றத்திற்கான சூழல் வலுப்பெறும்போதே தோன்றுகிறது.

தலித் சினிமாவின் துவக்கத்தில் அது நரேட்டிவ் செட்டிங்காக இல்லையென்றாலும் மெல்லமெல்ல அது அந்த இடத்திற்கே செல்கிறது. மூன்றாவது அணிக் கட்சியினரே தலித் சினிமாவின் இரண்டாவது கட்டத்தில் சில படங்களுக்கு நிதியாளர்களாகவும் இருந்திருக்கக் கூடுமோ எனும் ஐயம் பின்னர் நடந்த சில குற்றச் சம்பவங்களைப் பார்க்கையில் ஏற்படுகிறது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு எதிரான நரேட்டிவ்வை செட் பண்ணுவது இங்கு எடுக்கப்பட்ட சில தலித் படங்களின் நோக்கமாக மாறுகிறது. நரேட்டிவ் செட் செய்வது அடிப்படையில் பண்பாட்டுப் பணி அல்ல, அது படைப்பாளர்களின் நோக்கம் அல்ல, அது நேரடி அரசியலின் பிரச்சார இலக்கு மட்டுமே. அது முழுக்கமுழுக்க தேர்தல் அரசியலில் மட்டுமே செல்லுபடியாகிற செயல்பாடு. அதனாலே தமிழிலோ பிற மொழிகளிலோ தலித் இலக்கியம் மத்திய சாதிகளின் மனசாட்சியை நோக்கிப் பேசுகிற, தமது நிலையை முன்வைக்கிற தன்கதைகளாக மலர்ந்தன. சாதியின் நுட்பங்களை, அது சமூகத்தில் செயல்படுகிற வினோதமான வடிவங்களைச் சித்தரித்தன.

தலித் இலக்கியத்தின் நோக்கம் மையப் பண்பாட்டு பெருங்கதையாடல் எதிர்ப்பின் வழியிலான சமூக மாற்றமாகவும் இருந்தது. அதாவது மக்களின் மனத்தில் அன்பின் வழியில் மாற்றத்தை உண்டு பண்ணுவது. மக்களைத் திரட்டி தேர்தல் பிரச்சாரம் வழியாக அதிகாரம் பெறுவதாக இருந்ததில்லை - அது தலித் கட்சிகளின் இலக்கு மட்டுமே. தமிழில் தலித் சினிமா ஒரு கட்டத்தில் கட்சி அரசியல் நரேட்டிவ் செட்டிங் நோக்கிப் போனது ஆச்சரியமானது. ஒருவேளை அரசியல் அதிகாரம், முலதனத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவது, நிதியாளர்களின் தேவைகள் இதைச் சாத்தியமாக்கி இருக்கலாம்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ரஞ்சித்தை விட்டுவிட்டு மாரி செல்வராஜை எடுத்துக்கொண்டது மேலும் சுவாரஸ்யமானது - ஆனால் மாரி வரலாற்று நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றுவதை ஒழித்து வேறெதையும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பாகச் செய்யத் தயாராக இல்லை. அவர் செட் செய்கிற நரேட்டிவ் தலித் சமூகத்தினர் தேர்தல் அரசியலில் தனித்திரளாக வேண்டும் என்பதை இதுவரையிலான படங்களைக் கவனித்தால் தெளிவாகப் புரியும். அவருக்குப் பின்னுள்ள சாதித் திரளை பாஜக கவரும் முயற்சியை ஆரம்பித்ததாலே அவர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சியை திமுக தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை அப்பட்டமானது. மாரி இச்சூழலை ஒரு பக்கம் பயன்படுத்திக்கொண்டு தன் படத்துக்கு பரபரப்புகாகவும் தன் மூன்றாவது அணி வெறுப்பு அரசியல் நரேட்டிவ்களை செட் செய்வதற்காகவும் அங்கங்கே மற்றமையையும் சுய-மற்றமையையும் விதைக்கும்வண்ணம் தன் படங்களின் கதையமைப்பை வைக்கிறார். அதாவது கூட்டணியில் சேரும் மூன்றாவது அணியினரைப் போலவே ரெண்டு பக்கமும் நெருப்பு அணையாதபடி பார்த்துக்கொள்கிறார்.

அவரது 'கர்ணன்', 'மாமன்னன்' போன்ற படங்களில் திமுக அதிமுகவைச் சாடவும் அதிமுக தாம் பாராட்டப்பட்டிருப்பதாகச் சொல்லவும் போதுமான குழப்பத்தை இடைவெளியாக அவர் விட்டுவைத்திருப்பார். இரண்டு பக்கமும் கொந்தளிக்க மாரி "டேய் நீ போய் பருத்தி மூட்டையை குடோன்ல வை" என தன் ஆதரவாலர்கள், எதிர்ப்பாளர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல, அதிமுக-திமுக எனப் பந்தை அடித்துக்கொண்டே இருக்கும் அவர் (பா. ரஞ்சித்தைப் போல) பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்குள் வரவே மாட்டார். அந்தக் கதவைத் திறந்தே வைத்திருப்பது தன் மதிப்பை அதிகரிக்கும் என அவருக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. அயோத்திதாசர், அம்பேத்கர், இங்கு அதையொட்டித் தோன்றிய தமிழ்த் தேசியம், ஆதி-திராவிடம், பூர்வ பௌத்தம் எனப் போய் இந்துத்துவாவை வைதீக ஒடுக்குமுறையாளர்களின், திருடர்களின் சித்தாந்தம் என்று சொன்னால் பின்னர் தான் அதிமுக, திமுக முகாம்களுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடும் என்பதால் அவர் பாஜகவை ஒரு வெற்றிடமாகவே பாவிக்கிறார்.

அவரது திறமையான சினிமா மொழியும் உணர்ச்சிகரமான முன்வைப்பும், தன் கதைகள் தன்னனுபவக் கதையாடல்கள் என்று எளிமைப்படுத்தும் போக்கும் இந்த அரசியல் நோக்கத்தை சுலபத்தில் யாரும் கவனிக்க முடியாதபடி பண்ணுகிறது.

சினிமா நடைமுறை அரசியலுக்கு நெருக்கமாக வந்தால் நடக்கிற ஒன்றுதான் இப்போது மாரி செல்வராஜ் விசயத்தில் நடக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர்களை செட் பண்ணி கேள்வி கேட்க வைப்பது, அதற்கு இப்போ நிறைய வேலை கிடக்கு எனப் பதில் சொல்வது, மூன்று பேர்களை அனுப்பி தன் படத்துக்கு எதிராக முழங்க வைத்து அதற்கு விளக்கமும் மறுப்பும் சொல்வதற்கும், ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, மறைமுகச் சேதியைக் கட்சிக்காரர்களுக்கு அனுப்ப ஊடகச் சந்திப்பை நடத்துவது என அவர் செய்வதையெல்லாம் பார்க்க ஜாலியாக இருக்கிறது. இச்சந்திப்பில் நாக்கிப் பிரகி தான் ரொம்பக் கஷ்டப்பட்டு நரேட்டிவ்வை செட் பண்ண முயன்று வருவதாகவும், அதை முப்பது பேர் இணையத்தில் அமர்ந்து விமர்சிப்பதகாவும் சொல்லி சட்டென அதைத் திருத்தி கஷ்டப்பட்டு ஏற்கனவே இருந்த நரேட்டிவை உடைக்க முயற்சி பண்ணுவதாகச் சொல்வதைப் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நாக்கு குழறும்போது உண்மை முந்திக்கொண்டு விடும் என பிராயிட் சொன்னார் (அடக்கப்பட்ட காமத்தின் பொருளில்). இதற்கு முன் அடிக்கடி நாக்கு குழறுபவராக நம் அண்ணாமலைதான் இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது.

எனக்கு மாரியின் படங்களை விட இந்த அரசியல் குசும்பு தான் பிடித்திருக்கிறது. இப்படி ஊரையே ஏமாற்றி ஓடவிட தனித்திறமை வேண்டும்.

Posted by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

காளமாடன் (பைசன்)

இளங்கோ

***

கலை என்பது எப்போதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான். கலை என்பதன் அடிப்படை நோக்கமே படைப்பும்/படைத்தல் சார்ந்ததும் மட்டுமே. அதன் நிமித்தம் கிடைக்கும் இன்ன்பிற விடயங்களான புகழ்,பணம், செல்வாக்கு என்பவை, படைத்தலின் மகிழ்ச்சிக்கு அப்பால் கிடைக்கின்றவை என்று வேண்டுமெனில் சொல்லலாம். எனவே ஓர் உண்மையான படைப்பாளிக்கு படைப்பின் நிமித்தம் கிடைக்கும் நிறைவே முக்கியமே தவிர, அதன் நிமித்தம் கிடைக்கும் இவ்வாறான by products அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்

இப்போது இங்கு முதல் காட்சியாக பார்த்து வந்த காளமாடன் (பைசன்) அவ்வளவு மனம் நிறைந்திருக்கின்றது. வழமையான விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. அவ்வாறான எல்லைக்கோடுகளை 'ஆழப்புழா ஜிம்கானா' போன்ற சில மலையாளப் படங்கள் உடைக்ககூடும், ஆனால் டங்கலோ, இறுதிச்சுற்றோ, சர்ப்பட்டா பரம்பரையோ, ஏன் காளமாடனோ உடைத்தல் என்பது சற்றுக் கடினமானதுதான்; அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

ஆனால் அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று மிகச் சிறப்பாக மாரி செல்வராஜ் 'காளமாடனை' நமக்கு அளித்திருக்கின்றார். அதிலும் ஓடுக்கப்பட்ட சாதி/ஆதிக்க சாதிகளை அதன் சிக்கல்கள்/வன்மங்கள்/சண்டைகள் என்று காட்டியிருந்தாலும், அனைவருக்கும் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பது, துவிதநிலையில் நாயக X எதிர்நாயக விம்பங்களை நவீனத்துவ நிலையில் நின்று கட்டியமைக்காததும் முக்கியமானது.

எனக்கு இரத்தம் பிடிப்பதில்லை. அதற்கு என் சிறுவயதில் போரின் நிமித்தம் எறிகணை வீழ்ந்து இரத்தம் தோயத்தோய வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததைப் பார்த்ததில் இருந்து, எங்கும் இரத்ததைப் பார்க்கப் பிடிப்பதில்லை. திரைகளில் என்றால் இந்த விடயத்தில் கண்ணை மூடிவிடும் சுதந்திரத்தை எப்போதும் அனுபவிப்பவன். இதிலும் வன்முறை இரத்தசகதியில் கடுமையாகக் காட்டப்படுகின்றது. ஆனால் சட்டென்று இப்படி சாதித்தலைவர்களின் (அல்லது ரெளடிகள் என விளிக்கப்பட்ட) பல கதைகளை/செய்திகளை முகப்பில் தாங்கிவந்த ஜூனியர் விகடன்களை என் பதின்மங்களில் வாசித்த/பார்த்த ஞாபகம் வருகின்றது.

மாரி பத்திரிகைச் செய்திகளில் இருந்து கடந்தகால யதார்த்தத்தை மட்டுமில்லை, அசலான மனிதர்களின் சாயல்களுள்ள பாத்திரங்களையும் காளமாடனில் கொண்டு வருவது அருமையானது. அதுபோலவே இந்தச் சாதிச்சகதிகளுக்குள் விரும்பாமாலே சிக்கிகொள்ளும் ஒருவனது (அப்பாவி என்று சொல்வது அல்லது காட்சிப்படுத்துவது கூட பிறருக்கு ஏற்ற அரசியலைச் சொல்வதுதானல்லவா?) வாழ்வில் நாமும் ஒரு அங்கமாகின்றோம். அவனைப் போல நாங்களும் அவன் ஊர் என்கின்ற சாதிநோய் பிடித்த நிலப்பரப்பிலிருந்து தப்பிப்போக வழிகள் திறக்காதா என ஏங்குகின்றோம்.

இதில் தகப்பனாக வரும் பசுபதிதான் எல்லாப் பாத்திரங்களையும் விட ஓரடி முன்னே நிற்கின்றார். ஏனெனில் அந்தப் பாத்திரமே கடந்தகாலத்தின் எல்லா அவமானங்களை அறிந்தும், அதேவேளை நிகழ்காலத்தில் மகனைக் காப்பாற்றி பத்திரமாக வேறொரு கரைசேர்க்க விரும்பும் இந்தத் தலைமுறையின் ஒருவராகவும் இரண்டு காலங்களிலும் காலூன்றி நிற்பவராக இருக்கின்றார்.

துருவ்வை படத்தின் நீண்டநேரம் வரை விக்ரமின் இளம் பிரதியொன்றைப் பார்க்கின்றேனா என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதைத்தாண்டி அவர் உடல்மொழியில் தன்னை அந்தப் பாத்திரத்தில் கரைக்கும்போது, அவர் அந்தத் திருநெல்வேலியின் அசல் பாத்திரங்களில் ஒரு பாத்திரமாகக் கரைந்துவிடுகின்றார். ஒரு நடிகர் தன்னை இயக்குநனருக்குக் கொடுக்கும்போது எப்படி உருமாறமுடியும் என்பதற்கு இப்படத்தில் துருவ்வும், மாரியின் மற்றப்படமான 'மாமன்னனில்' வடிவேலும் நல்ல உதாரணங்கள்.

என்னைப் போன்று ஊர்களில் இருந்து வந்தவர்க்கு ஒரு துறையில் பிரகாசிப்பது என்பது எவ்வளவு கடினமென்று தெரியும். அதுவும் படிக்கும் பாடசாலையில் இருந்து பல்வேறு மட்டங்களில் நம்மை கீழிறக்க நம் கண்ணுக்குத் தெரியாத கரங்களோடு போராடிக் கொள்ள வேண்டும். அதுவும் ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டால், அவன் தன் திறமையைக் காட்ட மட்டுமல்ல, தன்னையொரு சக உயிரியாகப் பிறருக்கு நிரூபிக்கவும் தன் காலம் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்பதற்கு காளமாடன் நம்முன் சாட்சியாக இருக்கின்றது.

கலை என்ன செய்யும்? நாம் வாழாத வாழ்வைக்கூட அதன் ஒரு பகுதியாக நம்மைக் கரைத்து அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கும். நமது போலிப் பெருமிதங்களையும், சாதி ஆணவங்களையும் இது உங்களின் அடையாளங்களல்ல, கசடான அழுக்குகள் என்று ஒவ்வொருவரையும் 'தலையில் சுத்தியலால் அடித்து' உணரவைக்கும். அதை இந்தக் காளமாடன் செய்திருக்கின்றான்.

நமது ஈழப்போராட்டம் முடிவடைந்தபின் நமக்கான நீதியைக் கோருவதற்கு நாம் மற்றவர்கள் குற்றவுணர்வை அடைகின்ற மாதிரியான படைப்புக்களைக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன். எங்கள் வீரக்கதைகளைச் சொல்லி கடந்தகாலத்தில் நிலைத்து நிற்பதால் நமக்கு மட்டுமில்லை, அநியாயமாக இறந்துபோனவர்க்கும் நாம் அநீதி செய்தவர்களாகின்றோம். மேலும் நமது படைப்புக்கள் நம்மை ஒடுக்கிய இனத்தோடு மட்டுமில்லை, நாம் ஒடுக்கிய இனத்தோடும், ஏன் நமக்கிடையிலும் கூட உரையாடல்களைச் செய்வதாக இருக்க வேண்டும்.

மாரி இந்த காளமாடனில் -அவரின் முன்னைய திரைப்படங்களைப் போல- ஏன் அதைவிட இன்னும் மேலாக- ஆதிக்க சாதிகளிடையே ஓர் உரையாடலை - உணர்ச்சிவசப்படாது செய்ய வந்திருக்கின்றார். இந்திய/தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கில் அதைப் போல பாவனை செய்கின்ற நம் ஈழத்து/புலம்பெயர் சினிமாக்காரர்கள் ஆகக்குறைந்தது மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து, எப்படி முரண்பாடுகளை நேர்மறையான கலைகளாக முன்வைப்பது என்கின்ற திசைகளைக் கற்றுக்கொள்ளலாம்.

மாரி ஒரு நேர்காணலில், 'வாழை'யில் நடந்த ஒரு கதையை அப்படியோ சொல்லியிருக்கின்றேன். அதில் உரையாடல்களைச் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கே பார்வையாளர்களுக்கு ஒரு பெரும் மெளனத்தையே விட்டுச் சென்றேன். ஆனால் காளமாடன் பல்வேறு உரையாடல்களை -அது நேரோ எதிரோ- உருவாக்குவதையே விரும்புகின்றேன் என்று கூறியிருப்பார்.

மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, எந்தக் காட்சியிலும் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து இன்னொரு தரப்பை உணர்ச்சியூட்டக்கூடிய அசலான கதையை பொதுவெளியில் பார்வையாளருக்கு முன்னே வைப்பதற்கு வீரம் அல்ல, ஒருவர் தன் கலையை அந்தளவுக்கு நம்பினால்தான் இவ்வாறு அச்சமின்றி ஓர் படைப்பை உருவாக்க முடியும். அந்தவகையில் மாரி பாராட்டுக்குரியவர்.

இப்போது முன்பு போல அல்லாது மிகக் குறைவாக வருடத்துக்கு இரண்டோ/மூன்றோ தமிழ்த் திரைப்படங்களைத்தான் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் கடைசியாக வந்த மாரியின் 'மாமன்னன்', 'வாழை', இப்போது 'காளமாடன்' எல்லாவற்றையும் தவறவிடாது திரையங்கில் பார்த்தது மட்டுமின்றி முதல் காட்சியாக இவற்றைப் பார்த்திருக்கின்றேன் என்பதும் மாரி மீது என்னைப் போன்ற பார்வையாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காது இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்?

********

https://www.facebook.com/share/p/178yu7Yigi/?mibextid=wwXIfr

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முட்டி மோதாமலேயே வென்றான் காளமாடன்!

Ko.Ragupathi

திரையில் நீலச் சுவாலை

லை இலக்கியப் படைப்புகளையும் திரைப்படங்களையும் ‘கற்பனை’ எனக் கூறினாலும் அவற்றுக்குள் சமூகத்தின் எதார்த்தங்களும் இருக்கின்றன. இந்த அடிப்படையைக்கூட அறியாமல் ‘உன்குழலில்’ (YouTube) திரைப்படங்களை ‘மதிப்பிடு’கின்றனர். தனக்கு மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட ஒருவர் ‘பைச’னை வரவேற்றதால் அப்படத்தைச் சந்தேகத்துடன் பார்க்கச் சென்றதாக ‘உன்குழலர்’ ஒருவர் கூறியுள்ளார். ஜாதியக் கட்டமைப்பையும் தென்மாவட்டங்களின் ஜாதிய மோதல்களின் பின்னணியை மட்டுமன்றி, கபடியின் விதிகளைக்கூட அறியாதோர்தான் ‘பைச’னை ‘மதிப்பிட்டுள்ளனர்’. ‘விளையாட்டு வடிவம்’ (sports formula) திரைப்படத்துக்கு வெற்றியைத் தருமென்ற நம்பிக்கையில் ‘பைசன்’ உருவாக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். திரைப்படங்கள் அரசியல் பொருளாதார ஆதாயத்துக்கான கலைத் தொழிலாக இருப்பதை மறுக்க இயலாதுதான். ஆனால் அதேசமயம், ‘சார்பட்டா பரம்பரை’ (2021), ‘ப்ளூ ஸ்டார்’ (2024), ‘லப்பர் பந்து’ (2024), ‘பைசன்’ (2025) போன்ற சமகால திரைப்படங்களை வெறும் வணிகச் செயலாகவும் குறுக்க இயலாது. ஜாதிய முரண்கள் விளையாட்டுகளிலும் விளையாடுவதை அத்திரைப்படங்கள் உரையாடுகின்றன. அவை வணிகச் செயலாக இருந்தாலும்கூட நமக்குச் சிக்கல் இல்லை. ஆர்ய ப்ராமண, ஜாதிதிராவிட இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி பெரும் முதலாளிகளாக மாறுகிறபோது ஆதிதிராவிட இயக்குநர்களும் அவ்வாறு மாறுவதில் எந்தத் தவறும் இருக்க இயலாது. தலித் இயக்குநர்கள் அவர்களின் சமூகத்தைப் படமாக்கிப் பணமாக்குகிறார்கள் எனக் குற்றம் சுமத்துவதே தலித் வெறுப்பு மனநிலைதான். பொதுவாகத் திரைப்படங்களின் ரசனைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் எதிர்பார்ப்பு இருக்கும்; தலித் இயக்குநர்களின் திரைப்படங்கள்தான் ‘ஜாதி அரசியலுடன்கூடிய’ ரசனைக்காக எதிர்பார்க்கப்படுகின்றன; அவை சலசலப்பையும் விவாதத்தையும் உருவாக்குகின்றன.

அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி வீரியமாக எழுந்த தலித் இலக்கியங்களும் பனுவல்களும் விளைவித்த விவாதம் முனை மழுங்கிய இக்காலத்தில் அது திரைத்துறையில் சுடர்விட்டு எரிகிறது. இதைப் பற்ற வைத்தது இயக்குநர் பா.இரஞ்சித்தும், அவருடைய நீலம் நிறுவனமும் என்ற கூற்று மிகை மதிப்பீடு அல்ல. ‘நான் யார்’ எனத் தன் அடையாளத்தை வெளிப்படுத்தியதும், ‘இதைப் பேசுவது எதற்காக’ எனத் தன் அம்பேத்கரிய அரசியலைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் அறிவித்ததும் ஜாதிய சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. நீலம் அறிமுகம் செய்த மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ வழி ஜாதி உரையாடலைத் தொடங்கினார். தன்னுடைய மக்களின் வலியை, வேதனையைத் தொடர்ந்து திரைப்படமாக்குவேன் என அப்பட்டமாக அறிவிக்கிறார். அவர் பிறந்த சமூகத்துக்குள் ஒரு பிரிவினர் தலித் என்ற சொல்லையும், ஒடுக்கப்பட்டோர் என்ற சமகால எதார்த்த நிலையையும் மறுக்கின்றனர். தாங்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் என்ற ‘அரசாண்டப் பரம்பரை’யினர் உரிமையைக் கோருகின்றனர். இவற்றின் தொடர்ச்சியாக அரசின் ‘பட்டியல் வகைமை’யிலிருந்தே வெளியேற வேண்டுமென்ற இயக்கத்தையும் முன்னெடுக்கின்றனர். இந்த நிலைப்பாடுகளுக்கு முரணாக மாரி செல்வராஜ் தானும் தன் சமூகத்தினரும் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகிற அவலத்தைப் பேசுகிறார். ஒடுக்கப்படுகிற மக்களின் எந்தச் சிக்கல்களையும் எந்த வடிவங்களில் பேசினாலும் அவர்களைச் சுரண்டுகிற, ஏமாற்றுகிற, தாக்குகிற ஆதிக்க ஜாதிகளையும் பேசுவது தவிர்க்க இயலாது. இதனால் சுயஜாதியும், ஆதிக்க ஜாதிகளும் அவரைக் கண்டிக்கின்றனர். எழுகின்ற எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதார்த்தங்களை எடுத்துரைப்பேன் என அறிவிக்கும் மாரி செல்வராஜின் பெருங்கோபமும் அரசியலும் திரைப்படங்களாய் வெளிப்படுகின்றன. அவருடைய ‘பரியேறும் பெருமாள்’ (2018), ‘கர்ணன்’ (2021), ‘மாமன்னன்’ (2023), ‘வாழை’ (2024), ‘பைசன்’ (2025) ஆகிய ஐந்து திரைப்படங்களும் ஒடுக்குமுறைகளின் வெவ்வேறு வடிவங்களையும் அவற்றுக்கெதிராகப் போராடுவதையும் கருவாகக் கொண்டிருக்கின்றன.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ‘தமிழ்நாட்டில் தேவேந்திரகுல வேளாளர் இயக்கம், 1920 – 2000’ என்ற தலைப்பில் கா.அ.மணிக்குமார் நெறியாள்கையில் மேற்கொண்ட ஆராய்ச்சியால் முனைவர் பட்டம் பெற்ற நான், மாரி செல்வராஜின் திரைப்படங்களைத் தென்மாவட்டங்களின் ஜாதிய எதார்த்தத்தின் பின்புலத்தில்தான் மதிப்பிடுகிறேன். ‘பரியேறும் பெருமா’ளில் உரையாடலை முன்வைத்த மாரி செல்வராஜ், ‘கர்ண’னில் உரசலைத் தூண்டுகிறாரோ எனச் சிலர் விமர்சித்தபோது, “அத்திரைப்படம் சமூக எதார்த்தத்தை, வரலாற்றை, உண்மையைப் பேசுகிறது” என இடதுசாரி தோழர்கள் சிலரிடம் வாதித்தேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் விழுப்புரம் கிளை சார்பில் மதுசூதனன் ஏற்பாடு செய்த இணையக் கூட்டத்திலும் அவ்விவாதத்தை வலுப்படுத்தினேன். ‘கர்ண’னின் கருப்பொருள்தான் ‘மண்டேலா’ (2021) திரைப்படத்திலும் பேசப்பட்டிருப்பதால் ‘கர்ணனும் மண்டேலாவும் பொதுவுரிமையின் கலகக் குரல்கள்’ என்ற கட்டுரையைக் காலச்சுவடு (ஜூன் 2021) இதழில் எழுதினேன்.

‘பைசன் என்ற காளமாடன்’ என்னுள் உணர்ச்சிவய மனநிலையையும் ஏற்படுத்தியது. காளமாடனை உருவாக்கிய தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷியஸ் பள்ளியில்தான் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை நானும் பயின்றேன். அப்பள்ளியின் கால்பந்தாட்டக் குழுவிலும் இடம்பெற்றேன். மர்காஷியஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தில் சேர்ந்தபோதும் கால்பந்தாட்டக் குழுவில் இணைந்து சில மாதங்கள் விளையாடினேன். கால்பந்தாட்ட வீரர்கள் அனைவருக்கும் பூட் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் சில்வியா, அதை எனக்குத் தராதபோதுதான் பாகுபாட்டை உணர்ந்தேன். இதைக் கிறிஸ்துவ தேவேந்திர சமூகத்தைச் சேர்ந்த தேவா, தேவர் சமூகத்தைச் சேர்ந்த கணேசன் ஆகியோரிடம் கூறினேன். தேவா எனக்கு இலவசமாக பூட் தந்தார். பாகுபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அனுபவத்திலும் வயதிலும் என்னைவிட மூத்தவர்களான அவர்கள் நட்சத்திர வீரர்களாகப் பிரகாசித்ததால் “வேலியிட இயலாது நிலையில் இருந்தனர்.” இச்சிக்கலைக் கல்லூரியின் கபடி வீரர்களும், தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்களுமான தேமாங்குளம் சுந்தர், செம்பூர் ஜூலியஸ் போன்றோரிடம் கூறினேன். கல்லூரியின் கபடி அணிக்குத் தேவேந்திரர் சமூக மாணவர்களே பலமானவர்கள் என்பதால் ஜாதிய பாகுபாடு இல்லை எனப் பதிலளித்தனர். நானும் அவ்வப்போது கபடி விளையாடினேன். மணத்தி கணேசனையும் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே அறிந்தேன். ஜாதி பாகுபாட்டால் குழுவிலிருந்து வெளியேறி விளையாடுவதையே முற்றிலும் நிறுத்தினேன். விளையாடிய நேரத்தைத் தட்டச்சும் சுருக்கெழுத்தும் படிக்கச் சென்றேன். முனைவர் பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் தலித் இலக்கிய எழுச்சியின் தாக்கத்தால் பள்ளி கல்லூரி அனுபவங்களுடன் வேறுசில பாகுபாட்டு அனுபவங்களையும் இணைத்து ‘அந்தப் பாவிகளைத் தண்டிப்பீராக!’ எனத் தலைப்பிட்டுக் குறுநாவல் எழுதினேன். அப்பிரதியைத் தொலைத்துவிட்டேன்! என் சுய அனுபவங்களால், பிற ஜாதியைச் சேர்ந்த அனைவருமே பாகுபாட்டைக் கடைபிடிப்பர்; பகையுடன் அணுகுவர் எனக் கூற இயலாது. ஏனென்றால், மர்காஷியஸ் பள்ளியிலும் கல்லூரியிலும் பிற சமூகத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் (விலங்கியல்), ஃப்ரடெரிக் (இயற்பியல்), பியூலா (தமிழ்), ஜாஸ்மின் (வரலாறு), கிறிஸ்டோபர் (வரலாறு), பீட்டர் (வரலாறு) போன்றோர் படிப்பில் என் ஆர்வத்தைக் கண்டு என்னை ஊக்கப்படுத்தினர்; அரவணைத்தனர். ஆசிரியர்களில் ஒரே ஜாதியைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டில் பாகுபாட்டையும், சிலர் படிப்பில் ஊக்கப்படுத்தலையும் பின்பற்றிய பின்னணியிலும், தேவேந்திரர் சமூக ஆராய்ச்சி அனுபவத்திலும்தான் காளமாடனை மதிப்பிடுகிறேன்.

மர்காஷியஸ் பள்ளியின் பிரார்த்தனை நேரத்தில் வகுப்பறையில் பிறரின் சாப்பாடு பாத்திரங்களைத் திறந்து தன் பசியை அடக்கும் காளமாடனைக் கண்டிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் சந்தனராஜ், அவனுடைய கபடி ஆர்வத்தைக் கண்டுணர்கிறார்; அவனை அரவணைத்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்துகிறார். சந்தனராஜின் உடல்மொழியும் வார்த்தைகளும்கூட கனக்கச்சிதமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவரைப் போல் ‘கடா மீசை’யுடன் ஒர் உடற்பயிற்சி ஆசிரியர் நான் பயின்றபோது மர்காஷியஸ் பள்ளியில் இருந்தார். அவருடைய பெயர் மோகன் என்பது என் நினைவு. பிறர் உணவை உண்ணும் காட்சி இடம்பெற்றிருக்க வேண்டாம் எனச் சிலர் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் பிறரின் உணவை உண்ணுவது இயல்பாக நடைபெறும். அந்தப் பிறர் நண்பர்களாகவும் வகுப்புத் தோழர்களாகவும் இருப்பர். இச்செயலைத் ‘திருட்டு’ என எவரும் கருதவில்லை. விளையாடிய காலங்களில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. கொடும்பசியில் இருக்கும் விளையாட்டு வீரனுக்கு ஒருடிபன் பாக்ஸ் உணவு போதுமானது அல்ல; கூடுதலாகத் தேவைப்படுவது இயல்புதானே. அவனுடைய கொடும்பசிக்காகப் பச்சாதாபம் கொள்வதுதானே சரியாக இருக்க இயலும்! இதைப் போன்று, 300 பரோட்டாக்களைச் சாக்கு மூட்டையில் கொடுக்கும் காட்சியும் விமர்சிக்கப்படுகிறது. தென்மாவட்டக் கிறிஸ்துவ தேவாலயங்களில் வருடத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாள் ‘அசனம்’ என்ற பெயரில் உணவு வழங்குவது இன்றுவரை பின்பற்றப்படுகிறது. இது சமத்துவத்துக்கான செயலாகத் தோன்றியிருக்கலாம். அதைப் புனிதமாகக் கருதுவர். அனைத்து ஜாதியினரும் வேறுபாடற்றுச் சமத்துவமாய் ‘அமர்ந்து’ உண்பதும், ‘அசனச் சோற்றைத்’ தோளிலிடும் துண்டுகளில் வாங்கி பொதிந்துச் செல்வதும் நடைபெறும். நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் டீ வாங்கும் பழக்கமுடைய இக்காலத்தில் சாக்கு மூட்டை பரோட்ட சிக்கலானது அல்ல.

தென்மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களின் இரவு நேரங்களில் நடத்தப்படும் ‘மின்னொளி கபடி போட்டி’களைக் காண்பதற்கெனக் கூட்டம் கூடும். எங்கள் கிராமத்திலிருந்தும் சென்றிருக்கிறோம். ஒவ்வொரு கிராமங்களும் குழுக்களும் இதில் விளையாடினர். இது தனித்த ஜாதியாகவும், ஜாதிகள் கலந்தும் இருக்கும். சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் கபடிக் குழுக்களில் முக்கியமான காளமாடன்கள் சிலர் இருந்தனர். தனியார் கம்பெனிகளும் கபடி குழுக்களைக் கொண்டிருந்தன. விளையாட்டுத் திறமையால் கபடி அணியில் சேர்க்கப்பட்டு அக்கம்பெனிகள் வேலையும் கொடுத்தன. பல்கலைக்கழக, மாநில அளவிலான வீரர்களுக்கு அரசு வேலை எளிதாகக் கிடைத்ததும் கால்பந்து, கபடி விளையாட்டுகளில் பங்கெடுப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்தது. இந்த நிலைக்கு முன்னேறுவது எளிதானது அல்ல. ஜாதி மோதல் கூர்மைபெற்ற 1990களில் ஜாதிகளுக்குள் பகை புகைந்தது; மோதல் வெடித்தது. நட்பும் பகையும் மின்னலாய் வந்துசென்று ஏற்படுத்திய தாக்கத்தின் பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டு வீரராகவும் நட்சத்திரமாகவும் உருமாறுவது கடினம். விளையாட்டில் பதுங்குதல், பாய்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட நுணுக்கங்களை வீரனுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் அவசியம். அவனுக்கு உணவு, உடை உட்பட சில பொருட்கள் வேண்டும். அவற்றை வாங்கும் பொருளாதாரச் ‘சக்தி’ ஒடுக்கப்பட்டோருக்கு இல்லை. இவை புற ஜாதிகளிடமிருந்து கிடைக்கின்றன. காளமாடன் கபடி வீரனாக உருவாவதிலும் அவனை அங்கீகரிப்பதிலும் ஜாதியின் உள்முரண்தான் முக்கியத் தடையாக இருக்கிறது. முந்தைய நான்கு படங்களிலும் ஜாதியின் புறமுரணைப் பேசிய மாரி செல்வராஜ், முதன்முதலாகக் காளமாடனில் அகமுரணைக் காட்சிப்படுத்தியுள்ளார். ஆசிரியரின் ஆதரவில் வயிறாற பரோட்டா உண்ணும்போதுதான், தன் முன்னே ஒருவர் அறுத்துக் கொல்லப்படுவதைக் கண்டு ‘காளமாடனே’ அஞ்சுகிறான்; பதறுகிறான். கொல்லப்பட்டது தன் ஜாதியைச் சேர்ந்தவர் என்றபோதிலும் அச்சம்பவத்தில் காளமாடன் சாட்சியாய் மாறி அவன் வாழ்க்கைத் திசை திரும்பாதிருக்க அந்த ஆசிரியர் காளமாடனைக் காப்பாற்றுகிறார். ஜாதி மோதலில் ஏதாவது ஒருவகையில் வழக்கில் சிக்கியவர்களின் வாழ்க்கை சீரழிந்ததைப் பார்த்தால் இக்காட்சியின் முக்கியத்துவம் விளங்கும். விளையாட்டும் வினையாவதை அனுபவத்தில் உணர்ந்த காளமாடனின் தந்தை பசுபதி, மகன் விளையாடுவதை மறுக்கிறார். அப்போதும் ஆசிரியர்தான் விளையாட உதவுகிறார். இக்காட்சிகள் ஒருவேளை ‘உண்மைச் சம்பவங்கள்’ என்றால், காளமாடனின் ஆசிரியருக்கு இந்த நாடே நன்றிக் கடன் பட்டிருக்கிறது!

bison-poster-magazine-Picsart-AiImageEnh

உள்ளூரின் உள்பகையால் ஊர்க் கபடிக் குழுவிலேயே காளமாடனை வீரனாக அங்கீகரித்துச் சேர்க்க மறுப்பதும் நிகழ்கிறது. ஒரேநேரத்தில் உள்பகையின் புறக்கணிப்பையும், புறஜாதியைச் சேர்ந்த பண்ணையாரின் ஆதரவையும் பெறுகிறான். வீரனின் திறமையைத்தான் பார்க்கிறார்; அவரின் ஜாதியை அல்ல. இதைப் புரிய வைக்க ஆசிரியரும் பண்ணையாரும் முயற்சிக்கின்றனர். இது காளமாடனின் தந்தைக்கு அச்சமாகவும் நம்பிக்கையற்றதாகவும் இருக்கின்றன. நம்பிக்கைக்குப் பின் ஏற்படும் ஜாதிய தாக்குதலால் காளமாடனைப் பண்ணையாரின் ஆட்கள் சந்தேகித்தாலும், ‘வீரன்’ துரோகம் செய்ய மாட்டான் எனப் பண்ணையார் நம்புகிறார்; அவனைப் பாதுகாப்பாக அனுப்புகிறார்; தொடர்ந்து விளையாட அறிவுறுத்துகிறார். அச்சமும் சந்தேகமும் ஜாதியம் உற்பத்தி செய்ததாகும். காளமாடன் கபடி நட்சத்திரமாகி இந்திய அணியில் சேர்வதற்குப் புறஜாதியினரின் ஆதரவுதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு அவர்களைச் சுரண்டுகின்ற ஆதிக்க ஜாதியினர்களே உதவுவார்களா?

ஜாதிய அமைப்பு, ஜாதிகளுக்கிடையே பாகுபாட்டையும் பகையையும் விளைவித்தாலும் திறமைக்கான ஆதரவைப் பிற ஜாதிகளின் ‘தனிநபர்கள்’ கொடுக்கச் செய்கிறது. நான் பிறந்துவளர்ந்த கிராமத்தை என் தந்தை கோ.பெ.கோயில்பிள்ளை புதிதாக உருவாக்கிய காலத்தில், எங்கள் உறவினர்களுக்குத் தன் நெருங்கிய நண்பரான டி.கே.செல்லத்துரை நாடார் செய்த உதவிகளுக்காக ‘டிகேசி நகர்’ என என் தந்தை பெயரிட்டார். எனக்கும் பிற ஜாதியினரின் உதவிகள் முக்கியமானவை. எனவே, ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் பிற ஜாதி தனிநபர்களின் ஆதரவு கிடைப்பது இயல்பு. சுரண்டும் ஜாதிகளிலும் இரக்கமும் மனிதநேயமும் இருக்கின்றன. பண்ணையார் ‘திறமையை’ அங்கீகரிப்பதில் ஜாதியைப் புறக்கணிக்கும் வகையைச் சேர்ந்தவர். சுயஜாதித் தலைவரும் பண்ணையாரும் எதிரிகளாக இருந்தபோதிலும் காளமாடனின் விளையாட்டுத் திறமையை அங்கீகரிப்பதில் ஒத்தச் சிந்தனையுடன் இருக்கின்றனர்! அத்திறமையை அவனுடைய ஜாதியினர் அங்கீகரிக்க மறுக்கின்றனர்; இழிவாகப் பேசுகின்றனர். இதைக் கண்டிக்கும் ஜாதித் தலைவர், காளமாடன் அவனுடைய திறமையால்தான் நிற்கிறான்; அதுவே சமூகத்தின் பெருமை எனக் கூறுகிறார். இத்தகைய தனிநபர்கள், திறமையை ஜாதியிலிருந்து மதிப்பிடவில்லை; திறமையைத் திறமையாகப் பார்க்கிறபோது ஜாதியைப் புறக்கணிக்கின்றனர். உடற்பயிற்சி ஆசிரியரும், பண்ணையாரும், விளையாட்டுத் தேர்வுக்குழு நபரும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் திறமையைத் திறமையாகப் பார்த்ததால் அத்திறமை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றனர். இதனால் காளமாடன் நட்சத்திரமானான். திறமைதான் திறமையை அங்கிகரீக்கும்; திறமை ஜாதியையும் புறக்கணிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியது மாரி செல்வராஜின் தனித்திறமை! அது இப்படத்தின் தனிச்சிறப்பு! “நான் அல்ல, கண்ணகிநகர்தான் பிராண்ட்” எனக் கார்த்திகா அறிவித்த விளையாட்டின் ‘திறமை’ அரசியல்தான் காளமாடனின் அரசியலும். ஏககாலத்தில் காளமாடன் நிழலாகவும், கண்ணகிநகர் கார்த்திகா நிஜமாகவும் ஒடுக்கப்பட்டோரின் திறமைகளை வெளிச்சமாக்கியுள்ளனர். ஒடுக்கப்படும் சமூகங்களின் வலியை அவர்களை வதைப்பவர்களால் புரிந்துகொள்ளவே இயலாது என முன்வைக்கப்படும்  விவாதத்துக்கு எதிராக அதைப் புரிந்துகொள்ள இயலும் என்று காளமாடன் பறைசாற்றுகிறான்.

பகையின் பரிமாணம்

பள்ளிக்கூடத்திலிருந்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தரும்வரை காளமாடன் ஜாதிப் பாகுபாட்டை அனுபவித்ததாகக் காட்சிகள் இல்லை. காளமாடனைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் அவனைப் பாதிக்கின்றன; விளையாட்டுக்குத் தடைகளாக இல்லை. ஒருவன் தன்னைக் கட்டிப்பிடிப்பதாகவும் மற்றொருவன் கத்தியால் குத்துவதாகவும் இதனால் யாரிடம் பேசுவது, சிரிக்கிறது, பழகுவது என ஜாதியரசியல் தெரியாத வெள்ளந்தி அவன். கபடியில்தான் எவராலும் கட்டுப்படுத்த இயலாத காளமாடன், ஆட்டைப் பலியிட கோயிலுக்குச் செல்கிறபோது வேற்று ஜாதியைச் சேர்ந்தவராலும், கிராமத்தில் தன் காதலியின் அண்ணனாலும், இந்திய அணியில் விளையாடச் செல்கிறபோது காவலர்களாலும் தன் தந்தை தாக்கப்படுகிறபோது காளமாடன் சீறிப் பாய்ந்து எதிர்த்துத் தாக்குகிறான். தன் தந்தையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்; வேறு அரசியல் இல்லை. உண்மையில் காளமாடனுக்கு அரசியல் தெரியவில்லை; குழந்தைப் பருவத்தில் ஒரு முத்தம் மட்டும் கொடுத்தவனுக்கு அதற்குப் பின் காதலும் வரவில்லை. மர்காஷியஸ் பள்ளியின் விளையாட்டு காலரியில் அமர்ந்து சைட் அடித்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இந்த அனுபவங்கள்கூட காளமாடனுக்கு இல்லை போலும்! வயதுக்கு மூத்தப் பெண்களைத் திருமணம் செய்ததும், குழந்தைக் கணவர் வழக்கமும் சில சமூகங்களில் இருந்தன. இவற்றைச் சிக்கலாக மாற்றியிருக்க வேண்டாம். தேசிய வீரனாகச் செல்கிறபோது அவனது தந்தை காவலர்களால் தாக்கப்படுவதும், காளமாடன் எதிர்த்துத் தாக்குவதும் அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற காட்சி. இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் ஜாதிய மோதல் சூழலில் அரசின் உரிய ‘மரியாதையுடன்’ காவலர்களின் பாதுகாப்பிலேயே சென்றிருக்க முடியும். இவ்விடத்தில் காவல்துறையுடன் மோதலை ஏற்படுத்தியது அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற, பொருத்தமற்ற, அவசியமற்ற காட்சி. சில சண்டைக் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். காளமாடன் எப்போதுமே கோபத்துடனேயே இருக்கிறான். அவன் முகத்தில் சிரிப்பே இல்லை. ஒடுக்கப்படுகிற சமூகங்களை மகிழ்ச்சியாக்கும் அவர்களுக்கு இடையேயான கேலியையும் கிண்டலையும் காட்சிப்படுத்தாமல் அவற்றை மாரி செல்வராஜ் விலக்குவது விளங்கவில்லை; அது வியப்பாகவும் இருக்கிறது.

‘பைச’னில் காட்டப்பட்ட இரு ஜாதிகளுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட தலைவர்கள் அக்காலத்தில் இருந்தனர். வாலிபர்களும் மாணவர்களும்கூட அவரவர் ஜாதி தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர். வெவ்வேறு ஜாதி நபர்களுடன் நட்பாகவும் பழகினர். என் நண்பன் கண்ணன் பண்ணையாரைப் பார்க்கச் சென்றதாக அவ்வப்போது கூறியது என் நினைவில் உள்ளது. தென்மாவட்ட ஜாதி மோதல்களின் பரிணாமமும் பரிமாணமும் ஒற்றைத் தன்மை கொண்டவை அல்ல; அவை பன்மையானவை. இந்தப் படத்தின் ‘பகை’, தாமிரபரணி பாசனத்தின் தென்கிழக்குக் கடைகோடிக்கு உரித்தானது. இத்தாக்கம் பிற பகுதிகளில் இல்லை. பிற்காலத்தில் இது வேறுவடிவம் பெற்றது. ஆனால், “நான், நீங்க, தாத்தனுக்கும் தாத்தன் பிறக்கிறதுக்கு முன்னாடியே பகையும் பழியும் இருப்ப”தாகச் சித்திரிப்பது அவ்விரு ஜாதிகளுக்குமான பகை நிரந்தரமாக நீடிக்கிற தோற்றத்தைத் தருகிறது. இது சிக்கலுக்குரியது. பைசனின் கதைக்களம் நெல், வாழை என விவசாயமும் விற்பனையும் நிகழும் பகுதி. இவ்விரண்டும் வெவ்வேறு ஜாதியினரால் செய்யப்படுகின்றன. வியாபாரிகளும் விவசாயிகளும் ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருப்பதால் இணக்கமும் பிணக்கமும் உண்டு. இங்கு நிலவுடைமையாளர்களாக இருந்த பிராமண, வெள்ளாள ஜாதிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் காலத்திலேயே குடிபெயர்ந்து நவீன வாழ்க்கைக்குள் சென்றதால், அந்நிலத்தில் விவசாயம் செய்த தேவேந்திரர்கள் நிலவுடைமையாளர்களாகினர். அங்குச் சில இடங்களில் நாடார்களில் சிலரும் பண்ணையார்களாக இருந்தனர். காளமாடனின் கந்தசாமி, பண்ணையார்களின் பிரதிநிதியே. அவருடைய ஆட்களின் பொருளாதார நிலை அவரைப் போன்றது அல்ல. அந்த “ஆட்களின்” வீடுகளையும், உடற்பயிற்சி ஆசிரியரின் வீட்டையும், கிராமத்தையும் காட்சிப்படுத்தியிருந்தால் ஜாதியின் உண்மை நிலை பார்வையாளர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். பிற்காலத்தில்தான் பண்ணையார், ஜாதியின் பிரதிநிதியாக உருமாறுகிறார். அதற்கான அரசியல் பொருளாதார காரணிகள் வேறு. ஆராய்ச்சிக் காலத்தில் அப்பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வில் அங்கு பண்ணையார், பண்ணையாள் என்ற ‘வர்க்க’ முரண் இருப்பதை அறிந்தேன். வர்க்க முரண்தான் சமத்துவ உரிமைக்கான போராளியாகப் பாண்டியராஜாவையும் உருவாக்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கியதால் பிற்காலங்களில் அது ஜாதிய மோதலாக உருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வர்க்க அணிதிரட்டலின் பலகீனத்தால் அது ஜாதிய மோதலாக உருமாறியது. இது மேலும் ஆய்வுக்கு உரியதுதான். இருப்பினும், மாரி செல்வராஜ் கூறுவதுபோல் அது முப்பாட்டன் காலத்துக்கும் முந்தைய பகை அல்ல. ஏனென்றால், பகை உருவாவதற்குப் பொருளாதார ஆதிக்கமும் (நிலவுடைமை, முதலாளித்துவம்) அல்லது இவ்வமைப்புகளின் அதிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பதும், இவற்றால் ஆளப்படுகிற குழுக்கள் இருப்பதும் அவசியம். இவ்வமைப்பு முரண்களை உருவாக்கும்.

‘பைச’னில் கந்தசாமியைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியினர் அடிப்படையில் ஜாதிய கிராம கட்டமைப்புக்குள் இல்லை. அவர்கள் தனித்த கிராமங்களில் சுயமாக, சுதந்திரமாக வசிக்கின்றனர். தென்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இவ்விரு பிரிவினருக்கும் இடையேயான உறவு ஆதிக்கமும் சார்பு நிலையையும் கொண்டிருக்கவில்லை. கந்தசாமி பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியில் பல பிரிவுகள் இருந்தன. அவர்களில் நிலவுடைமையாளர்களும் ஒரு பிரிவினர்; இவர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்குமான முரண் இயல்பானதே. இதுவும்கூட அந்தப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது. இது சுதந்திர இந்தியாவில் தோன்றிய முரண்தான். அது பாண்டியராஜா கொல்லப்படுவதுவரை நீடித்தது. ஒரு மூலையில் தோன்றிய வர்க்க முரண், அதற்குத் தொடர்பற்ற ஜாதிகளின் பகையாக மாறியதில் சில காரணிகள் உண்டு; இதைத் தனித்து விவாதிக்க வேண்டும். கந்தசாமிக்கும் பாண்டிராஜாவுக்கும் இடையிலான மோதலுக்கான அடிப்படைக் காரணத்தைக் காட்சிப்படுத்தாமல் மோதலை மட்டுமே காட்சிப்படுத்தியது, இரு ஜாதிகளுக்குமான “முப்பாட்டன் காலத்துப் பகை”யாகக் கூறுவது ஜாதியச் சிக்கலை மேலும் வலுப்படுத்துகிறது. காளமாடனுக்கே ஜாதியச் சிக்கல் புரியாதபோது, இதன் அரிச்சுவட்டை அறியாதோர் அதை விளங்குவது கடினம். ‘பைசன்’ என்ற பெயரைப்போல் உள்ளடக்கமும் அனைவரும் உள்வாங்கும் விதமாகக் காட்சியமைத்தல் அவசியம். பாண்டியராஜா, கந்தசாமி ஆதரவாளர்களாலும், கந்தசாமி காவலர்களாலும் கொல்லப்படுகிற சம்பவங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டது ஜாதியின் பிரதிநிதிகள்தான் என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார். இவை, சுய ஜாதியினர் நம்பிக்கையானவர்கள் அல்லர்; அவர்கள் துரோகிகளாகவும் மாறுவர் என்பதற்குச் சாட்சி. ஒவ்வொரு துறைகளிலும் காளமாடன்கள் இயல்பிலேயே திறமையானவர்களாக இருப்பினும் அவர்கள் முட்டி மோதிதான் வெல்கிறார்கள். ஆனால், பைசன் என்ற காளமாடன் இதைச் செய்யாமலேயே வெற்றிபெறுகிறான். அவனுக்காகப் ‘பிறர்’தான் முட்டிமோதுகின்றனர்; அவன் விளையாட்டில்தான் காளமாடன். காளமாடன் பொதுச் சமூகத்தில் முன்வைக்கும் முக்கியக் கேள்வி: “சுயஜாதி அடையாள அணிதிரட்டல் அவசியமா?”

https://theneelam.com/bison-review/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.