Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TPC.jpg?resize=750%2C375&ssl=1

இந்தியாவை  நோக்கிச்செல்லும்  தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை..

அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்றார்கள். துணைத் தூதரைச் சந்தித்து படம் எடுத்துக் கொண்டார்கள். கடல் தொழிலாளர்களின் போராட்டத்தில் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர் இந்தியாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். புயலுக்குப்பின் முதலில் உதவிய நாடும் அதிகம் உதவிய நாடும் இந்தியா என்ற அடிப்படையில் இந்திய உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களினதும் பின்னணியில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது.அங்கே அவர்கள் மீனவர்கள் விவகாரமும் உட்பட இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கப் போகும் “எக்கிய ராஜ்ய” இடைக்கால வரைவை எதிர்ப்பது முதலான பல விடயங்களை குறித்தும் தமிழகத்  தலைவர்களோடு பேசியதாகத் தெரிய வருகிறது.

தமிழ்த் தேசிய பேரவையின் இந்திய விஜயம் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருந்த பின்னணியில், மற்றொரு செய்தியும் கிடைத்தது. தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

கிடைக்கப்பெறும் தகவல்கள்படி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பவர்களின் பட்டியலில் சுமந்திரனின் பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்தச் சந்திப்பின் நோக்கம் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக வைக்குமாறு அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று கேட்பதுதான் என்று தெரிய வருகிறது.

அமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கும் ஒரு பின்னணியில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத ஈபிடிபியும் உட்பட தமிழ்க் கட்சிகள் அந்தக் கருத்துக்கு எதிரான விதத்தில் இந்தியாவை நோக்கியும் தமிழகத்தை நோக்கி உழைப்பதைத்தான் மேற்படி செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

இலங்கை மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு புதுடில்லி அல்லது தமிழகம் தேவை என்று தமிழ்க் கட்சிகள் கருதுவதாகத் தெரிகிறது.அதுதான் உண்மையும் கூட.

இந்த உண்மையை கடந்த 16 ஆண்டுகளாகவும் அதற்கு முன்னரும் எடுத்துக் கூறிய அரசியல் விமர்சகர்களையும் நோக்கர்களையும் ஒரு பகுதி தமிழ்க் கட்சிகள் கேவலமாக விமர்சித்தன. அவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்றும் இந்திய புலனாய்வுத் துறையால் இயக்கப்படுகிறவர்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் சம்பளம் வாங்குகின்றவர்கள் என்றும் விமர்சித்தன. அவர்கள் சோற்றுக்காகத்தான் அப்படியெல்லாம் கூறுகிறார்கள் என்று மீம்ஸ்கள் போடப்பட்டன.இதனால் அந்த விமர்சகர்களின் சிலர் மனம் நொந்து பொது வெளியிலிருந்தே விலகி நின்றார்கள்.

இறுதிக்கட்டப் போரில் அப்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசாங்கம் ஈழத் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுவதையும் ஆயுதப் போராட்டம் நசுக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்தது என்ற ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு.திமுக நினைத்திருந்திருந்தால் இறுதிக்கட்ட போரின் முடிவை மாட்டியிருந்திருக்கலாம் என்று கருதுபவர்களும் உண்டு. தமிழகம் தன்னியல்பாக எழுச்சி பெற்ற போது அந்தப் பேரெழுச்சியை திமுக மடைமாற்றி வடியச் செய்துவிட்டது என்றும் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இக்குற்றச்சாட்டுகளின் பின்னணியில் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒரு பகுதியினர் திமுகவுக்கு எதிராக சீமானை நோக்கிப் போனார்கள்.இன்னொரு பகுதியினர் பாரதிய ஜனதாவை நோக்கிப் போனார்கள்.

சமூக வலைத்தளங்களில் திமுக தொடர்பாகவும் காங்கிரஸ் தொடர்பாகவும் குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் குடும்பம் தொடர்பாகவும் எழுதப்படும் விமர்சனங்களைப் பார்த்தால் ஈழத் தமிழர்கலீல் ஒரு பகுதியினர் எந்த அளவுக்கு திமுகவின் மீது கோபமாக,வெறுப்பாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

திமுகவின் மீதான தமிழ் மக்களின் கோபத்தை சீமான் சிறப்பாக அறுவடை செய்தார். 2009க்கு பின் தன்னை ஈழப் போராட்டத்தின் உரித்துள்ள வாரிசாக காட்டிக்கொண்டார்.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை நிபந்தனையின்றி ஆதரித்தார்கள்.விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவிப்பது தமிழகத்தில் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருந்த ஒரு பின்னணியில், சீமான் துணிந்து விடுதலைப்புகளின் சின்னங்களையும் படங்களையும் முன்வைத்து அரசியல் செய்தார்.இதனால் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை அதிக எதிர்பார்ப்போடு பார்த்தார்கள்.

சீமான் தன்னுடைய விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழகத்தின் உள்நாட்டு அரசியலுக்குள் ஒரு கருவியாக உபயோகிக்கிறார். 2009 க்குப் பின்னரான உளவியலின் பின்னணியில்,அவர் தமிழ்;திராவிடம் இரண்டையும் எதிரெதிர் நிலையில் வைத்து அரசியல் செய்கிறார். உள்ளூரில் தனது அரசியல் எதிரிகளை மடக்குவதற்கு அவர் தமிழீழ விடுதலை போராட்டத்தோடு தனக்குள்ள தொடர்பை ஒரு கவசமாக முன்வைக்கின்றார். இதனால் சீமானுக்கு விழும் அடி பல சமயங்களில் ஈழப் போராட்டத்திற்கும் விழுகிறது.

எனினும் சீமானின் நாம் தமிழர் கட்சியானது இப்பொழுதும் ஒரு மாற்று நீரோட்ட கட்சியாகத்தான் காணப்படுகிறது.அது தமிழகத்தின் பெருந்திரள் உணர்வுகளைப் பிரதிபலிக்கும், தீர்மானிக்கும் பிரதான நீரோட்டக் கட்சியாக இன்றுவரை எழுச்சி பெறவில்லை.அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக வெகுஜனங்களை ஒன்று  திரட்டி பெருந்திரளாகப் போராட வைப்பதற்கு சீமானால் கடந்த 16 ஆண்டுகளிலும் முடியவில்லை. திராவிடக் கட்சிகளும் அந்த விடயத்தில் ஆர்வமாக இல்லை. இதனால் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கொதிக்காத,கொந்தளிக்காத ஒரு நிலைதான் தொடர்ந்து காணப்படுகிறது.இப்படிப்பட்டதோர் தமிழகச் சூழலில்தான் தமிழ்த்தேசியப் பேரவை அண்மையில் தமிழகத்துக்குச் சென்றிருக்கிறது.

இந்தியாவைக் கையாள வேண்டும்,மத்திய அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழகத்தை நொதிக்கச் செய்யவேண்டும் என்று கூறியவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள்,ரோவின் கையாட்கள் என்றெல்லாம் விமர்சித்த ஒரு கட்சி,கிட்டதட்ட 16 ஆண்டுகளின்பின் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இதனால் கடந்த 16 ஆண்டுகளிலும் அவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் முன்வைத்த அனைத்து விமர்சனங்களும் இப்பொழுது பூமரங் ஆக அவர்களை நோக்கித் திரும்பி வருகின்றன.

தமிழ்நாட்டுக்குச் செல்வது என்று தமிழ்த் தேசிய பேரவை எடுத்த முடிவு காலத்தால் பிந்தியது. இந்தியாவை கையாள்வது என்று அவர்கள் எப்பொழுதோ முடிவெடுத்து இருந்திருக்க வேண்டும். ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து இந்தியாவைக் கையாள்வது என்பது இந்தியாவிடம் சரணடைவதோ அல்லது கண்ணை மூடிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதோ அல்ல. இந்தியாவைக் கையாள்வது என்பது இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர்களின் நலன்களும் சந்திக்கும் பொதுப் புள்ளிகளை அடையாளம் கண்டு அந்த இடத்தில் பேரம் பேசுவது. அதாவது ஓர் அரசைப் போல சிந்திப்பது;முடிவெடுப்பது;செயல்படுவது.ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் அதைக் கடந்த 16 ஆண்டுகளிலும் செய்திருக்கவில்லை. இப்பொழுதும் கூட கட்சிகளுக்கு இடையில் உள்ள போட்டிகள் காரணமாக ஒரு கூட்டு தமிழகத்தை நோக்கிச் சென்றிருக்கிறது.இன்னொரு கூட்டு இந்தியத் தூதுவரை நோக்கிச் சென்றிருக்கிறது. இங்கேயும் தமிழ் மக்கள் ஓர் அரசு போல முடிவெடுக்கவில்லை.ஒரு கூட்டு “எக்கியராஜ்ய” வேண்டாம் என்று கூறுகிறது. இன்னொரு கூட்டு,மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று கேட்கிறது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் இருந்து இரண்டு விதமான கோரிக்கைகள் இந்தியாவை நோக்கியும் தமிழகத்தை நோக்கி முன்வைக்கப்படும் போது இந்தியா எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கும்? தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மையை எப்படி தனது நோக்கு நிலையில் இருந்து கையாளலாம் என்று சிந்திக்கலாம்தானே? இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு பேரரசும் அப்படித்தான் சிந்திக்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் நலன்களின் அடிப்படையிலானவை.நிச்சயமாக அன்பு,பாசம்,அறம்,தொப்புள் கொடி உறவு…போன்றவற்றின் அடிப்படையிலானவை அல்ல.ஈழத் தமிழர்கள் வெளி அரசுகளோடு இடையூடாடும்  போதும் இதுதான் விதி.இந்த விதியின் அடிப்படையில்தான் இனி மேலும் அரசியல் செய்யலாம்.

https://athavannews.com/2025/1456862

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் மாற்றங்கள் உள்ள இன்னோர் அலசல்..

தமிழ்நாட்டை நோக்கிச்சென்ற தமிழ்த்தேசியப் பேரவை - நிலாந்தன்

600143479_1255608483372907_8348978700758

“சென்னையில் திறவுகோல்” என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 2006ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் இந்தியாவின் வெளியுறவு முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றால் தமிழகம் பெருமெடுப்பில் கொந்தளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதாவது டெல்லியைக் கையாள்வதற்கான திறவுகோல் தமிழகத்தில்தான் உண்டு என்ற பொருள்பட கட்டுரையின் சாராம்சம் அமைந்திருந்தது. தமிழக வெகு சனங்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்து எழுந்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கட்டுரை கூறுகிறது. இது எழுதப்பட்டது 18.11.2006 இல். அதாவது 2009 மே மாதத்துக்கு முன்.

இறுதிக்கட்டப் போரில் தமிழகம் நொதிக்கத் தொடங்கியது. எனினும் அதனை அப்போது இருந்த திமுக அரசாங்கம் மடை மாற்றியது என்றும், அதனால்தான் இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற முடிந்தது என்றும் ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு. இக்குற்றச்சாட்டு காரணமாக கலைஞர் கருணாநிதியை இப்பொழுதும் விமர்சிக்கும் ஈழத் தமிழர்கள் உண்டு.

இவ்வாறான குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவு பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாடு ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை.

தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் உருவாக்கப்பட்டமை, ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை போன்ற இரண்டு குறிப்பிடத்தக்க விடயங்களைத்தவிர கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை.

கடந்த 16 ஆண்டு கால ஈழத்தமிழர்களின் ஐநாமைய அரசியலில்,ஐநா கூட்டத்தொடர்களின்போது இந்திய மத்திய அரசாங்கம் 13ஆவது திருத்தத்தைத்தான் ஒரு தீர்வாக தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. கடந்த ஐநா தீர்மானத்தின் போதும் அதுதான் நிலைமை. கடந்த 16 ஆண்டுகளிலும் இந்தியா ஐநாவில் ஒரு முறை மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த பதினாறு ஆண்டுகளிலும் இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்து வருகின்ற பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் கீழ், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. ஐநாவில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் மாறாத நிலைப்பாடு அதைத்தான் உணர்த்துகின்றது. அவ்வாறு இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தக்க விதத்திலோ அல்லது ஈழத் தமிழர்களோடு தனது சகோதரத்துவத்தை நிரூபிக்கும் விதத்திலோ தமிழ்நாடு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு கொதிக்கவில்லை.கொந்தளிக்கவில்லை.

2009க்குப் பின் திமுகவுக்கு எதிராகவும் ஏனைய திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் “தமிழ் எதிர் திராவிடம்” என்ற துருவநிலை அரசியலை முன்னெடுக்கும் சீமான், தன்னை ஈழப் போரின் ஆகப் பிந்திய வாரிசாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால் அவரால் சில பேரணிகளை ஒழுங்குபடுத்தியதற்குமப்பால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழுத் தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் பேரெழுச்சிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ ஒருங்கிணைக்க முடியவில்லை.

எனினும் ஈழத் தமிழர்கள் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாக அல்லது பேசப்பட வேண்டிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது என்பதைத்தான் நடிகர் விஜய் அண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கள் காட்டுகின்றன. அதாவது தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் சூழல் இப்பொழுதும் உண்டு. ஆனால் அது ஒர் உள்ளுறையும் சக்திதான். அதனை மகத்தான ஒரு மக்கள் சக்தியாக, எழுச்சியாக, கொந்தளிப்பாக மாற்ற சீமானால் முடியவில்லை. திராவிட இயக்கக் கட்சிகளும் அதில் ஆர்வம் காட்டவில்லை.

தமிழ்நாட்டில் இறுதிக்கட்டப் போர் வரையிலும் 19க்கும் குறையாத தமிழர்கள் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எந்த ஒரு தமிழ்ச் சமூகமும் அவ்வாறு ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை. ஒரு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற தமது சகோதர மக்களுக்காக அவ்வாறு அதிக தொகையினர் தீக்குளித்தமை என்பது தமிழகத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. நவீன அரசியலில் ஒப்புவமை இல்லாத போற்றுதலுக்குரிய தியாகம் இது.

facebook_1766118925953_74076396756028843

facebook_1766118734333_74076388718912576

facebook_1766143770448_74077438809674807

முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவாலயம் தமிழகத்தில் தஞ்சாவூர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சசிகலாவின் கணவருடைய காணியில் கட்டப்பட்டது. தமிழ் இனஅழிப்புக்கு எதிராக உலகின் முதலாவது தீர்மானம் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. எனவே ஈழத் தமிழர்களுக்காக பல விடயங்களை முதலில் செய்தது தமிழகம்தான்; தீக்குளித்தது தமிழகம்தான். அப்படிப்பட்ட தமிழகம் கடந்த 16 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது.

இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் சூழலில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையானது கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு விஜயத்தை மேற்கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியப் பேரவையில் பங்காளிகளாக இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்களும் தமிழகம் செல்வதற்குத் தயாராக இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், தவறாசா ஆகிய மூவரும் மருத்துவக் காரணங்களுக்காகப் பயணம் செய்யமுடியாத ஒரு நிலைமை தோன்றியதால் ஐங்கரநேசன் மட்டும் அந்தத் தூதுக்குழுவில் இணைந்தார்.

இத்தூதுக்குழுவானது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினும் உட்பட ஏனைய கட்சித் தலைவர்களையும் மூத்த ஈழ உணர்வாளர்களும் சந்தித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 2009க்குப் பின்னர் தமிழ்நாட்டை நோக்கிச் சென்ற ஒப்பீட்டளவில் பெரிய தமிழ்த் தேசிய அரசியல் தூதுக்குழு இதுவெனலாம். ஏற்கனவே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்தனியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை நோக்கித் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகத் திரண்ட ஒரு சந்தர்ப்பம் சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதியாகிய சாந்தனின் விடயத்தில் இடம்பெற்றது. சாந்தனை விடுவிக்கக்கோரி அப்போது இருந்த தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதன்பின் இப்பொழுது ஒரு தூதுக்குழு தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது. இத்தூதுக்குழு தமிழ் நாட்டுக்குச் சென்றிருக்கும் அதே காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இவ்வாறு ஒரே சமயத்தில் பிராந்திய அரசியலைக் கையாள முற்படுவது வரவேற்கத்தக்கது.

அரசியல் என்பது சாத்யக்கூறுகளின் கலை.பிராந்தியத்திலும் அனைத்துலக அளவிலும் காணப்படும் வாய்ப்புக்களை கெட்டித்தனமாகக் கையாளாமல் ஈழத் தமிழர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது.

கடந்த வாரம்,யாழ்ப்பாணத்தில் நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர்,யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை அகற்ற வேண்டும், இங்கு சீனத் தூதரகத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருக்கும் ஒரு காலச்சூழலில்,கிழக்கைரோப்பாவில், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதில்லை என்ற முடிவை அறிவித்திருக்கும் ஒரு காலச் சூழலில், தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

https://www.nillanthan.com/8024/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.