Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் 2026: இலங்கை குழாம்த்தில் யாழ். வீரர்கள் இருவர்

01 Jan, 2026 | 01:11 PM

image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக இந்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களில் யாழ். வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரே 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெறும் யாழ். வீரர்களாவர்.

vimath_dinsara_captain.jpg

kugadas_mathulan...png

துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற 11 வீரர்கள், உலகக் கிண்ண குழாத்திலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

நால்வர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை திரித்துவ கல்லூரி விக்கெட் காப்பாளர் ஆதம் ஹில்மி, வெஸ்லி கல்லூரி வீரர் ஜீவகன் ஸ்ரீராம் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

பதினாறு அணிகள் 4 குழுக்களில் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி  ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் அணியை ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து 19ஆம் திகதி அயர்லாந்தையும் 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும் இலங்கை சந்திக்கும்.

இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் யாவும் நமிபியாவில் விண்ட்ஹோக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

vigneswaran_akash_hartley_-_hartley_poin

19 வயதின்கீழ் இலங்கை குழாம்

விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். சேவேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஜீவகன் ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி)

https://www.virakesari.lk/article/234928

நம்ம ஊர்ப்பையனும் விளையாடப்போகிறார். வாழ்த்துகள் ஜீவகன் ஸ்ரீராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sriram.jpg

ஜீவகன் ஸ்ரீராம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

12 Jan, 2026 | 09:34 PM

image

(நெவில் அன்தனி)

நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் தைப் பொங்கல் தினத்தன்று   ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.

நமிபியாவின் விண்ட்ஹோக், யுனைட்டட் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த ஆகிய இருவரும் 121 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

Dimantha-Mahavithana_trinity.jpg

u19_viran_chamuditha.png

அதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்களை இழந்தது. (49 - 4 விக்.)

இந் நிலையில் கவிஜ கமகே, சாமிக்க ஹீனட்டிகல ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர்.

திமன்த மஹாவித்தான 87 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 45 ஓட்டங்களையும் உப அணித் தலைவர் கவிஜ கமகே 48 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களை எட்டவில்லை.

226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 34 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

2_mathulan_kugathas.jpg

3_sriram_jeewahan.jpg

பந்துவீச்சில் குகதாஸ் மாதுளன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மலின்த சில்வா 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கொழும்பு வெஸ்லி கல்லூரி வீரர் ஸ்ரீராம் ஜீவகன் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

துடுப்பாட்டத்தில் 11 வீரர்களும் பந்துவீச்சில் 11 வீரர்களும் பயன்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் விளையாடவில்லை.

இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இதே மைதானத்தில் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அப் போட்டியில் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் சுற்று போட்டிளை நமிபியாவில் விiளாடவுள்ளது.

ஜப்பனை 17ஆம் திகதியும் அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ள இலங்கை சுப்ப 6 சுற்றில் விளையாட தகுதிபெறும் என நம்பப்படுகிறது.

இலங்கை இளையோர் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன கருதப்படுகின்றார்.

ஐசிசியினால் பெயரிடப்பட்டுள்ள கவனிக்கத்த வீரர்களில் செத்மிக்க செனவிரட்னவும் ஒருவராவார்.

பத்து இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள  செத்மிக்க  16 விக்கெட்களைக் கைபற்றியுள்ளார்.  

19 வயதின்கீழ் இலங்கை குழாம்

விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி)

https://www.virakesari.lk/article/235873

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம்; குழு ஏ இல் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை

Published By: Vishnu

13 Jan, 2026 | 07:13 PM

image

(நெவில் அன்தனி)

பதினாறு நாடுகளைச் சேர்ந்த 240 எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரங்களின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் இன்னும் 2 தினங்களில் ஆரம்பமாகவுள்ளது.

நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று கிரிக்கெட் போட்டிகள் இம் மாதம் 15ஆம் திகதியிலிருந்து 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஏ குழுவில் நடப்பு சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியனுமான அவுஸ்திரேலியா, 2000ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் உப சம்பியனான இலங்கை ஆகிய நாடுகளுடன் அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் மோதவுள்ளன.

ஏ குழு போட்டிகள் யாவும் விண்ட்ஹோக் நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியா

1988இல் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்திலும் தென் ஆபிரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 15ஆவது அத்தியாயத்திலும் உலக சம்பியனான அவுஸ்திரேலியா, சம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் குறிக்கோளுடன் இம்முறை களம் இறங்கவுள்ளது.

under_19_australia_sqaud.jpg

ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர மற்றைய 14 அத்தியாயங்களிலும் விளையாடியுள்ள அவுஸ்திரேலியா, 2024இல் இந்தியாவை இறுதிப் போட்டியில் வெற்றிகொண்டு சம்பியனானது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியில் இடமபெற்ற வீரர்களில் ஒரே ஒருவர் இந்த வருடமும் விளையாடுகின்றார்.

under_19_australia_nitesh_samuel_player_

under_19_australia_naden_cooray.jpg

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு மாற்றுவீரராக அழைக்கப்பட்டு ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்ற ஒலிவர் பீக் மாத்திரமே இந்த வருடம் விளையாடுவதுடன் அவர்தான் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள், 19 வயதுக்குட்பட்ட இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி இருந்தனர்.

அத் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றிபெறாததை அடுத்து, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய சம்பியன்ஷிப்பில் பிரகாசித்த நிட்டேஷ் செமுவல், நேடன் குறே, வில்லியம் டெய்லர் ஆகியோர் உலகக் கிண்ண குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களில் நிட்டேஷ் செமுவேல், நேடன் குறே ஆகிய இருவரும் இலங்கை வம்சாவளிகளாவர்.

அயர்லாந்து

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் போன்றே இந்த வருடமும் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுடன் ஒரே குழுவில் அயர்லாந்து இடம்பெறுகின்றது.

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 15ஆவது அத்தியாயத்தில் இந்தியாவுடனும் அயர்லாந்து விளையாடி இருந்தது.

கடந்த அத்தியாயத்தில் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறிய அயர்லர்நது அங்கு நியூஸிலாந்தை வெற்றிகொண்டு வரலாறு படைத்திருந்தது. அப் போட்டியில் கெவின் ரூல்ஸ்டன் 82 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஒலிவர் ரைலி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

under_19_ireland_sqaud.jpg

ஒலிவர் ரைலி இம்முறை அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரூபன் வில்சன் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். ரூபன் தனது 15ஆவது வயதில் 2022 உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடி இருந்தார்.

அவர்கள் இருவர் மாத்திரமே 2024 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய வீரர்களாவர்.

எனினும் அயர்லாந்து அணியில் அனுபவத்துக்கு பஞ்சம் இல்லை.

அடம் லெக்கி, செப் டிக்ஸ்ட்ரா, தோமஸ் ஃபோர்ட் ஆகிய மூவரும் அவுஸ்திரேலியாவில் விளையாடியுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டுவரும் அயர்லாந்து அணியினர் இந்த வருடம் திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயர்லாந்து இளையோர் அணியின் பயிற்சிகளுக்கு சர்வதேச வீரர்களான ஜோர்ஜ் டொக்ரெல், கரெத் டிலேனி, லோக்கன் டக்கர் ஆகியோர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

19 வயதுக்குட்பட்ட அயர்லாந்து அணிக்காக 2010, 2012 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய டொக்ரெல் 15 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார்.

2010இல் அயர்லாந்து 10ஆம் இடத்தைப் பெற்றது. அதுவே அதன் சிறந்த பெறுபேறாகும்.

ஜப்பான்

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் ஜப்பான் பங்குபற்றுவது இது இரண்டாவது தடவையாகும். 

நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஜப்பான் அறிமுகமாகி இருந்தது.

2020 இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா, நியூஸிலாந்து, இலங்கை அகிய அணிகளுடன் முதல் சுற்றில் குழுநிலைப்படுத்தப்பட்டிருந்த ஜப்பான், இரண்டு மோசமான தோல்விகளைத் தழுவியது.

under_19_japan_squad.jpg

ஒரு போட்டி மழை காரணமாக விளையாடப்படவில்லை.

தொடர்ந்து கோப்பை பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் ஜப்பான் அதிகூடிய 93 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் கனடாவுடனான போட்டியில் அந்த மொத்த எண்ணிக்கையைக் கடந்த ஜப்பான் 118 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த வருடம் நைஜீரியாவுடனான போட்டியில் தோல்வி அடைந்த ஜப்பான், இப்போது நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளது.

ஆசிய கிரிக்கெட் பெரவை பிறீமியர் கிண்ணப் போட்டியில் தலைவராக இருந்த கஸுமோ காட்டோ-ஸ்டஃபர்ட், உலகக் கிண்ணப் போட்டியில் தலைரவாக விளையாடவுள்ளார்.

ACC பிறீமியர் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கத்தாருக்கு எதிராக காய்செய் கொபாயாஷி-டொகெட் சதம் குவித்து அசத்தி இருந்தார்.

under_19_japan_squad_waduge_kneeling_2nd

ஜப்பான் அணியிலும் இலங்கை வம்சாவளி விரர் ஒருவர் இடம்பெறுகின்றார்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறைகளிலும் பிரகாசித்து வரும் சந்தேவ் ஆரியன் வடுகே என்பவரே இலங்கை வம்சாவளி வீரராவார்.

இது இவ்வாறிருக்க,ஜப்பான் அணியில் மூன்று ஹரா-ஹின்ஸே சகோதரர்கள் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சார்ள்ஸ், கேப்றியல், மொன்ட்கோமெரி ஆகியோரே மூன்று சகோதரர்களாவர்.

ஜப்பானின் சிரேஷ்ட அணி தலைவர் கெண்டெல் கடோவாக்கி-ஃப்ளெமிங் 2020இல் போன்றே உதவி பயிற்றுநராக செயற்படவுள்ளார்.

இலங்கை

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் சகல அத்தியாயங்களிலும் விளையாடியுள்ள இலங்கை இம்முறை அதிசிறந்த பெறுபேறுகளை ஈட்டும் குறிக்கொளுடன் 16ஆவது தடவையாக களம் இறங்குகிறது.

தனது சொந்த நாட்டில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியிலேயே இலங்கை அதிசிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது.

under_19_sri_lanka_squad..jpg

அந்த வருடம் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியன் பட்டத்தை இலங்கை சூடியது.

இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி 178 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஜெஹான் முபாரக் 58 ஓட்டங்ளைக் குவித்தார்.

மொஹம்மத் கய்வ் தலைமையிலான இந்திய அணி 40.4 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 6 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியனானது.

அதன் பின்னர் இரண்டு தடவைகள் அரை இறுதிவரை முன்னேறிய இலங்கை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுப்பர் 6 சுற்றுவரை முன்னேறி இருந்தது.

இலங்கை இளையோர் அணிக்கு 2024இல் சினேத் ஜயவர்தன தலைவராக விளையாடியதுடன் அவர் கல்வி பயின்ற  றோயல் கல்லூரியைச் சேர்ந்த விமத் டின்சார இந்த வருடம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

under_19_sri_lankan_kugadas_mathulan...p

under_19_sri_lanka_Vigneswaran_Akash..__

under_19_sri_lanka_sriram_jeewagan_wesle

under_19_sri_lanka_aadam_hilmy_trinity__

இலங்கை அணியில் இம்முறை தமிழ் பேசக்கூடிய நால்வர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விக்னேஸ்வரன் ஆகாஷ் (முன்ளாள் பருத்தித்துறை ஹாட்லி தற்போது மருதானை புனித சூசையப்பர்), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி), ஆதம் ஹில்மி (திரித்துவம்) ஆகிய நால்வரே தமிழ் பேசும் வீரர்களாவர்.

இலங்கை குழாம்

விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி)

போட்டி விபரங்கள்

ஜனவரி 16: அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

ஜனவரி 17: ஜப்பான் எதிர் இலங்கை

ஜனவரி 19: அயர்லாந்து எதிர் இலங்கை

ஜனவரி 20 அவுஸ்திரேலியா எதிர் ஜப்பான்

ஜனவரி 22: அயர்லாந்து எதிர் ஜப்பான்

ஜனவரி 23: அவுஸ்திரேலியா எதிர் இலங்கை

https://www.virakesari.lk/article/235958

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம்: குழு பி இல் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா

Published By: Vishnu

13 Jan, 2026 | 09:28 PM

image

(நெவில் அன்தனி)

16ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழும் இந்தியாவுடன் 2020 சம்பியன் பங்களாதேஷ், நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பி குழுவில் மோதவுள்ளன.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஐந்து தடவைகள் உலக சம்பியனான இந்தியா, இந்த வயதுப் பிரிவில் மிகவும் பலசாலியாக வருணிக்கப்படுகிறது. கடந்த ஐந்து அத்தியாயங்களில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா, 2024இல் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

2020 இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட இந்தியாவும் பங்களாதேஷும் இந்த வருடம் ஜனவரி 17ஆம் திகதி பி குழுவுக்கான போட்டியில் சந்திக்கவுள்ளன.

பி குழு போட்டிகள் யாவும் ஸிம்பாப்வேயில் நடைபெறும்.

பங்களாதேஷ்

தனது பத்தாவது முயற்சியில் முதல் தடவையாக அரை இறுதிக்கு முன்னேறி இருந்த பங்களாதேஷ், 2016ஆம் ஆண்டு 3ஆம் இடத்தைப் பெற்றது.

நான்கு வருடங்கள் கழித்து இலங்கையின் முன்னாள் வீரர் நவீட் நவாஸின் பயிற்றுவிப்பில் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை  பங்களாதேஷ்   ஸ்பரிசித்தது.

under_19_bangladesh_squad.jpg

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு நவீட் நவாஸ் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றார்.

சம்பியனான அந்த அணியில் இடம்பெற்ற மஹ்முதுல் ஹசன் ஜோய், ஷொரிபுல் இஸ்லாம், தௌஹித் ஹிர்தோய் உட்பட பல வீரர்கள் தற்போதைய பங்களாதேஷின் சிரேஷ்ட அணியில் இடம்பெறுகின்றனர்.

இந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் அரை இறுதிப் போடடிவரை முன்னேறிய பங்களாதேஷ் அணிக்கு அஸிஸ்உல் ஹக்கிம் தமிம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் ஸவாத்  அப்ராரும் பந்துவீச்சில் ஷாரியார் அஹ்மத்தும் திறமையாக செயல்பட்டிருந்தனர்.

இந்தியா

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 6ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் கங்கணத்துடன் இந்திய இளையோர் அணி களம் இறங்கவுள்ளது.

எதிர்கால உலக கிரிக்கெட் அரங்கில் உயரிய இடத்தை அடையக்கூடியவர் என இந்திய கிரிக்கெட் விமர்சகர்களால் வருணிக்கப்படும் இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி முழு கிரிக்கெட் உலகினாலும் கவரப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

under_19_india_squad.jpg

இங்கிலாந்துக்கு எதிரான  இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சூரியவன்ஷி 78 பந்துகளில் 143 ஓட்டங்களை விளாசி இருந்தார்.

ஐபிஎல் ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் இளம் வயதில் அபரிமிதமாக பிரகாசித்து அனைவரையும் பிரமிக்க வைத்த சூரியவன்ஷி, இந்த உலகக் கிண்ணத்தில் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

அவர் 2028 உலகக் கிண்ணத்தில் விளையாடினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அவர் இப்போதுதான் 15 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.

அவரைவிட விக்கெட் காப்பாளர் அபிக்யான் குண்டு, ஆரோன் ஜோர்ஜ், விஹான் மனோஜ் மல்ஹோத்ரா ஆகியோர் துடுப்பாட்டத்திலும் தமிழகத்தைச் செர்ந்த தீப்பேஷ் தேவேந்திரன், கௌஷிக் சௌஹான் ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்து

28 வதுடங்களுக்கு முன்னர் உப சம்பியனான நியூஸிலாந்து, ஒரு கட்டத்தில் 3 தொடர்ச்சியான தடவைகள் அரை இறுதிகளில் விளையாடி இருந்தது. கடைசியாக ஐந்து வருடங்களுக்கு முன்னரும் நியூஸிலாந்து அரை இறுதிவரை முன்னேறி இருந்தது.

தென் ஆபிரிக்காவில் 2020 இல் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதியில் பங்களாதேஷிடம் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.

under_19_new_zealand_squad.jpg

நியூஸிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அன்டன் டேவ்சிக் பயிற்றுவிக்கும் இளம் நியூஸிலாந்து அணியில் முதல் தர கிரிக்கெட் விளையாடிவரும் பல வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

ஒட்டாகோ அணிக்காக விளையாடிவரும் இளையோர் அணித் தலைவர் டொம் ஜோன்ஸ், தனது அறிமுக முதல்தர போட்டியில் சதம் குவித்திருந்தார்.

அவரை விட நொதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியில் பிரகாசித்தவரும் ஸ்னேஹித் ரெட்டி, ஆரியன் மான் ஆகிய இருவரும் நியூஸிலாந்து அணிக்கு முக்கிய பங்காற்றுவர் என நம்பப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்கா

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்கா பங்குபற்றுகின்றது.

அமெரிக்காஸ் குவாலிபயர்ஸ் என்றழைக்கப்படும் அமெரிக்காக்களுக்கான தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் இந்த வருட உலகக் கிண்ணத்தில் அமெரிக்கா பங்குபற்ற தகுதிபெற்றது.

தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகளிலும் இலகுவாக வெற்றியீட்டிய அமெரிக்கா சார்பாக பல வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

under_19_usa_squad.jpg

அம்ரிந்தர் கில் குவித்த சதத்தின் உதவியுடன் பேர்மூடாவை வெற்றிகொண்ட அமெரிக்கா, சஹிர் பாட்டியா பதிவுசெய்த 5 விக்கெட் குவியலின் உதவியுடன் ஆர்ஜன்டீனாவை 34 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

ஐக்கிய அமெரிக்காவுக்கு இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலகுவாக அமையாது. ஆனால், அமெரிக்காவின் இளம் வீரர்கள் தேவையான அனுபவங்களை இப் போட்டிகள் மூலம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

ஐக்கிய அமெரிக்க அணிக்கு உத்கார்ஷ் ஸ்ரீவஸ்தாவா தலைவராக விளையாடவுள்ளார்.

போட்டி விபரங்கள்

ஜனவரி 15: ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா

ஜனவரி: 17: இந்தியா எதிர் பங்களாதேஷ்

ஜனவரி 18: நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

ஜனவரி 20: பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து

ஜனவரி 23: பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அமெரிக்கா

ஜனவரி 24: இந்தியா எதிர் நியூஸிலாந்து

(குறிப்பு பங்களாதேஷ் - ஐக்கிய அமெரிக்கா போட்டி மாத்திரம் ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும். மற்றைய போட்டிகள் யாவும் புலாவாயோ குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும்)

https://www.virakesari.lk/article/235963

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.