குரியாச்சன் என்ன ஆனார்? கோம்பை நாய்களை நடிக்க வைத்தது பற்றி பிபிசி தமிழுக்கு 'Eko' பட இயக்குநர் பேட்டி
பட மூலாதாரம்,AARADYAA STUDIOS
கட்டுரை தகவல்
சிராஜ்
பிபிசி தமிழ்
28 ஜனவரி 2026, 09:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
'பிரேமம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்' என மலையாள திரைப்படங்கள் பலவும் தமிழ்நாட்டில் ரசிகர்களால் வரவேற்புப் பெற்றுள்ளன.
அந்த வரிசையில் இணைந்துள்ள சமீபத்திய மலையாளத் திரைப்படம் 'எக்கோ'.
"சில சமயங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு, இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்", "சில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளி தான்", "நாயை சங்கிலி போட்டோ கூண்டிலோ வளர்க்கக் கூடாது, அதை சுதந்திரமாக வளர்க்கவேண்டும்", என திரைப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் இணையத்தில் பிரபலமாயின.
மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பந்தங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, தின்ஜித் அய்யதன் இயக்கியுள்ளார். காக்ஷி: அம்மினிப்பிள்ள, கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து இது அவரது மூன்றாவது திரைப்படம்.
இந்தத் திரைப்படம் குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் பெரும்பாலும் முன்வைக்கப்படும் கேள்வி, 'குரியாச்சன் என்ன ஆனார்?' என்பதே. பிபிசி தமிழுக்கு இயக்குநர் தின்ஜித் அய்யதன் அளித்த பேட்டியில் 'எக்கோ' குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பட மூலாதாரம்,AARADYAA STUDIOS
படக்குறிப்பு,இயக்குநர் தின்ஜித் அய்யதன்
'எக்கோ' கதை உருவானது எப்படி?
இத்திரைப்படத்திற்கு 'எக்கோ' (Eko) என பெயரிட்டது ஏன்?
இதை நிறைய பேர், ஈக்கோ என சொல்கிறார்கள். இது எக்கோ (Echo) தான். அதாவது எதிரொலி அல்லது 'கர்மா', 'பூமராங்', என்பதைக் குறிப்பது போல.
நாம் செய்யும் செயல்களின் விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது, அது நம்மை என்றாவது ஒருநாள் பின்தொடர்ந்து வரும் அல்லது அது வாழ்க்கையில் எதிரொலிக்கும் என்ற அர்த்தத்தில் தான் 'எக்கோ' என வைத்தோம்.
இதில் குரியாச்சன் கதாபாத்திரம் (நடிகர் சௌரப் சச்தேவா) தான் முன்னர் செய்த செயல்களின் விளைவுகளால் தான் தலைமறைவு வாழ்க்கைக்குள் செல்வார். அவரை பிற கதாபாத்திரங்கள் தேடி வருவதும் அதற்காக தான்.
மற்றபடி, 'Echo' என வைக்காமல் 'Eko' என தலைப்பு வைத்தது, வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக தான்.
இந்தக் கதை உருவானது எப்படி?
பஹுல் ரமேஷ் (எக்கோ திரைப்படத்தின் கதாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர்) வீட்டிற்கு அருகில் வசித்த ஒருவர், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று, அங்கு ஒரு மலேசியப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கேரளாவிற்கு அழைத்து வந்து, வாழ்ந்து கொண்டிருந்தவர்.
அதிலிருந்து தான், ரமேஷுக்கு 'எக்கோ' கதை தோன்றியது. இந்தக் கதையை ரமேஷ் சொன்னபிறகு, நாய்கள் வளர்ப்பவர்கள் குறித்தும், புதிய நாய் இனங்களை தேடிச் செல்பவர்கள் குறித்தும் படித்தோம். பல நாய் இனங்கள் குறித்தும் அவற்றின் நடத்தைகள் குறித்தும் படித்தோம். அது கதை மேலும் விரிவதற்கு உதவியது.
கோம்பை நாய்கள்
பட மூலாதாரம்,AARADYAA STUDIOS
திரைப்படத்தில் 'மலேசியாவைச் சேர்ந்த நாய்கள்' என ஒரு இனத்தைக் காட்டியிருப்பீர்கள், அவை உண்மையில் எந்த இனம்?
அவை தமிழ்நாட்டின் தேனியைச் சேர்ந்த கோம்பை நாய்கள். இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களே நாய்கள் தான்.
மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று கதையில் சொல்லப்படுவதால், எந்த இனத்தை காட்டுவது என்ற குழப்பம் இருந்தது.
நாய்களை திரையில் பார்க்கும்போது நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும், அதேசமயம் அவை வழக்கமான வெளிநாட்டு நாய்களைப் போலவும் இருக்கக்கூடாது.
மற்றொரு பிரச்னை கன்டினியூட்டி (Continuity). எனவே நாய்கள் ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு நெருக்கமாகவும் தோன்ற வேண்டும்.
எனது நண்பரும் துணை இயக்குநருமான துரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் தான் கோம்பை நாய்கள் பற்றிச் சொன்னார். தேனிக்குச் சென்று, கோம்பை நாய் வளர்ப்பவர்களை சந்தித்து பேசி, புகைப்படங்கள் அனுப்பி வைத்தார். அப்போதே முடிவு செய்துவிட்டோம், கோம்பை நாய்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று.
ஆனால், மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. ஒரு நாய்க்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கேட்டார்கள். எங்கள் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 8 கோடி தான். எனவே நாய்களுக்கு மட்டும் எங்களால் பல லட்சங்களை செலவழிக்க முடியாது.
ஒருவழியாக 2 மாதங்கள் படப்பிடிப்பிற்கு ஒரு நாய்க்கு வாடகை 5000 ரூபாய் எனப் பேசி, 10 நாய்களை கொண்டு வந்தோம்.
பட மூலாதாரம்,AARADYAA STUDIOS
படப்பிடிப்பில் எவ்வாறு அவற்றை சமாளித்தீர்கள்? அதற்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் குறித்து சொல்ல முடியுமா?
நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர் ஒருவர் எங்களிடம் சொன்னது, 'நாட்டு நாய்கள் எனும்போது ஒன்றரை வயதிற்குள் இருந்தால் மட்டுமே அவற்றுக்கு சொல் பேச்சு கேட்டு நடக்கும் வகையில் பயிற்சி அளிக்க முடியும்.' எனவே 1 முதல் ஒன்றரை வயதிற்குள் இருக்கும் கோம்பை நாய்களையே தேர்ந்தெடுத்து 1 மாதம் முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டது.
திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு நாய், மலாத்தி சேட்டத்தி கதாபாத்திரத்தை எட்டி உதைப்பது போல இருக்கும். அதற்கு நாங்கள் இரண்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்திருந்தோம். ஒருவேளை ஒரு நாய், அதைச் சரியாக செய்யவில்லை என்றால் மற்றொரு நாய் செய்யவேண்டும் என்பதற்காக.
இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. சில சமயங்களில் அவை தங்களுக்குளே சண்டையிட்டுக் கொள்ளும். அவை சமாதானமடையும் வரை காத்திருந்து, பின்னர் காட்சிகளை எடுப்போம். இதெல்லாம் சவாலாகவே இருந்தது. இருப்பினும், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
பட மூலாதாரம்,Dinjith Ayyathan/Facebook
45 நாட்களில் முழு திரைப்படத்தையும் முடித்துவிட்டீர்களா?
ஆமாம், அதற்கு காரணம் பட்ஜெட் தான். படத்தின் நாயகன் சந்தீப், மலையாள சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோ. 3 முதல் 5 கோடி பட்ஜெட் திரைப்படம் என்பது அவருக்கான அதிகபட்ச மார்கெட் (Market). ஆனால், இது 8 கோடி பட்ஜெட் திரைப்படம். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, செலவுகளில் மிகவும் கவனமாக இருந்தோம். அனைத்தையும் முன்பே திட்டமிட்டு செய்தோம்.
உங்களது முந்தைய திரைப்படம் கிஷ்கிந்தா காண்டம், இப்போது எக்கோ, இரண்டிலும் கதை நடக்கும் பகுதிகள் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும், கதை சொல்வதற்கான ஒரு கருவியாகவும் பயன்பட்டிற்கும் அல்லவா? உதாரணத்திற்கு எக்கோ-வின் இறுதிக் காட்சியில் சேட்டத்தியும் பீயூஸும் அமர்ந்து பேசும் ஒரு பாறை.
ஆம், குறிப்பிட்ட நிலவியல் அமைப்புகள் ஒரு கதைக்கு பெரும் பலமாக இருக்கும். உதாரணத்திற்கு, எக்கோ திரைப்படத்திற்காக நான் தேடியது காய்ந்த புல்வெளிகள் கொண்ட ஒரு மலை. அதன் உச்சியில் குரியாச்சன்- சேட்டத்தி வீடு இருக்கும் என்பது போல. அதற்காக இடுக்கியில் ஒரு பகுதியை முடிவு செய்து, படப்பிடிப்புக்கு அங்கு சென்றபோது, மழை காரணமாக அந்த காய்ந்த புற்கள் பசுமையாக மாறியிருந்தன. வேறு வழியில்லை என படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் திரைப்படத்தில் பார்க்கும்போது அந்தப் பசுமை கதைக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதுபோல சில விஷயங்களை நாங்கள் முடிவு செய்கிறோம், சிலவற்றை இயற்கை முடிவு செய்கிறது.
குரியாச்சனுக்கு என்ன ஆனது?
பட மூலாதாரம்,AARADYAA STUDIOS
எக்கோ திரைப்படத்தில் பல விஷயங்களை நீங்கள் நேரடியாக சொல்லவில்லை. உதாரணத்திற்கு நரேன் கதாபாத்திரம் ஏன் குரியாச்சனை தேடுகிறது? அதேபோல பல விஷயங்கள் வசனங்களாக அல்லது மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும், அல்லவா?
ஆம், அதற்கு காரணம் இது குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி பற்றிய கதை மட்டுமே. அதனால் தான் அவர்கள் தொடர்பான 'பிளாஷ்பேக்' மட்டும் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கும். நரேன், வினீத், அல்லது சந்தீப் கதாபாத்திரங்களின் கதைகளைச் சொன்னால் அது அவர்களுடைய கதையாகிவிடும். அவர்கள் குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி கதையின் ஒரு அங்கம் மட்டுமே. எல்லா கதாபத்திரங்களுக்கும் ஒரு பின்கதை இருக்கும், ஆனால் அதை சொல்லி திரைப்படத்தின் மையக்கருவை சிதைக்க வேண்டாம் என நினைத்தேன்.
அதுமட்டுமல்லாது, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி-களின் வரவு காரணமாக மக்கள் உலகத் திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள். திரைப்படங்கள் குறித்த ரசனையும், எதிர்பார்ப்பும் மாறிவிட்டது. எனவே எதையும் நேரடியாக சொல்லவேண்டாம் என நினைத்தோம்.
'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என திரைப்படத்தின் இறுதிக்காட்சி குறித்து சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளை பார்த்தீர்களா?
ஆமாம், பார்த்தேன். ஏஐ (AI) கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு காணொளியை மிகவும் ரசித்தேன். திரைப்படத்தின் இறுதிக்காட்சியை மட்டும் இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம் என எனக்கு முன்பே தோன்றியது.
அதாவது, மலாத்தி சேட்டத்தி அந்தப் பாறையில் அமர்ந்து பைனாகுலர் மூலம், தொலைவில் உள்ள ஒரு பாறை இடுக்கைப் பார்க்கிறார். அந்த பாறை இடுக்கின் வாசலில் சில நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அது குரியாச்சன் அங்கு தான் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்திவிடும், எனவே இதை காட்சியாக வைத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், என் குழு வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள்.
ஒருவேளை, அந்தக் காட்சியை வைத்திருந்தால், மக்கள் இன்னும் திருப்தியாக உணர்ந்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது. 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என்பதை இன்னும் சற்று தெளிவாக சொல்லியிருந்தால், இந்தத் திரைப்படம் இன்னும் அதிகமாக மக்களால் கொண்டாடப்பட்டிருக்குமோ என்றும் தோன்றியது.
மலையாள சினிமா அதன் யதார்த்தமான திரைப்படங்களுக்காக இந்தியா முழுவதும் அறியப்படுகிறது. அத்தகைய திரைப்படங்கள் இங்கு அதிகம் உருவாக முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
தயாரிப்பாளர்கள் மற்றும் மக்கள் தான். ஒரு கதையைச் சொல்லும்போது, அதில் பாடல்களை சேருங்கள், இந்தக் காட்சிகளைச் சேருங்கள், இவரை வைத்து எடுக்கவேண்டாம் என்றெல்லாம் இங்கு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிபந்தனைகள் விதிப்பதில்லை.
மக்களும் வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேசமயம், எல்லா திரைப்படங்களுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை தான். இருப்பினும், பிற மொழி திரைப்படத்துறைகளுடன் ஒப்பிடும்போது, 'வணிக அம்சங்கள்' தொடர்பான அழுத்தம் இங்கு குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
பட மூலாதாரம்,AARADYAA STUDIOS
தமிழ் சினிமாவிலிருந்து வந்த பாராட்டுகள்
தமிழ் சினிமாவிலிருந்து உங்களுக்கு பாராட்டுகள் வந்தனவா?
ஆம், நடிகர் ரவி மோகன் அழைத்துப் பேசினார். தனுஷ் 'எக்கோ' திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டிருந்தார். சில இயக்குநர்களும் பேசினார்கள். கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் எக்கோ திரைப்படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. அது நிறைவேறும் என நம்புகிறேன்.
என் முதல் திரைப்படம் தமிழில் தான் எடுத்திருக்க வேண்டும். சில காரணங்களால் அது நடக்கவில்லை. நான் 20 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். படித்தது எல்லாம் இங்கே தான்.
'கிஷ்கிந்தா காண்டம்- குரங்குகள்', 'எக்கோ- நாய்கள்', உங்கள் அடுத்த திரைப்படம்?
விலங்குகளை வைத்து தான் எடுப்பேன் என்று இல்லை. கதைகள் அவ்வாறு அமைந்தன. அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cd9ep7g7244o
By
ஏராளன் ·