Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன?

எம்.ஜி.ஆருக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்துகிறாரா விஜய்?

பட மூலாதாரம்,@TVKHQITWingOffl

கட்டுரை தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டின் துவக்க விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கட்சி துவங்கியதிலிருந்தே தி.மு.கவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய், இதற்கு முன்பும் இதேபோல, எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். அவரது இந்த வியூகத்திற்குப் பலன் கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய் பேச்சின் துவக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆரை முன்னிறுத்திப் பேச ஆரம்பித்தார்.

"தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருப்பதற்கு காரணம் நீங்கள்தான். 1977 ஜூன் மாதத்தில் எம்.ஜி.ஆர். வானொலியில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் பேசும்போது 'பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில், இப்படிப் பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டது எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்று அந்தக் கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அ.தி.மு.க.' என்று சொன்னார். 2017க்குப் பிறகு, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழக மக்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டதே என கண்ணீர் வடித்தார்கள். இன்று இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்" என்றார்.

விஜய் எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம் செய்வது ஏன்? தேர்தலில் இத்திட்டம் பலனளிக்குமா?

பட மூலாதாரம்,@TVKHQITWingOffl

தேர்தல் களம் பற்றி என்ன சொன்னார்?

தொடர்ந்து, "எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த பிறகு, அவர் வெற்றிபெற்ற பிறகுகூட, சட்டசபையில் ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறது என கேலியும் கிண்டலும் செய்தார்கள். அதைப்போலத்தான் நாம் அரசியலுக்கு வந்த பிறகும், இந்த விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு என்ன அனுபவம் இருந்தது தெரியுமா? 1952லிருந்து 72வரை தி.மு.கவில் இருந்தார் என்று சொன்னார்கள். பிறகு அதே வாயால், எம்.ஜி.ஆரைப் பார்த்து அவருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது, கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும், டெல்லியை பகைத்துக்கொள்ள மாட்டார் என்று சொன்னார்கள். எம்.ஜி.ஆரை மட்டுமல்ல அவருடைய தொண்டர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கேலி செய்தார்கள்.

மக்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அரசியலில் பழம் தின்று, கொட்டை போட்டவர்களுக்கு கோட்டை என்பது பகல் கனவாகவே மாறிவிட்டது. இப்போது அதே பழைய ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்" என்றார் விஜய்.

மேலும், "மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்று சொல்கிறார்கள். நாம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் தி.மு.க. கூட்டணி , இன்னொரு பக்கம் பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். எத்தனை பேர் வந்தாலும் தி.மு.கவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். ஒவ்வொரு வீட்டிலும் டி.வி.கே. இருக்கிறது. தீயசக்தியை வீழ்த்த தூயசக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நம் மக்கள் விசிலை ஊதுவதில் தீய சக்தியும் ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்துகிறாரா விஜய்?

பட மூலாதாரம்,@TVKHQITWingOffl

'தவறான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார்'

அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சின் சாரமும் "எம்.,ஜி.ஆர் Vs தி.மு.க., எம்.ஜி.ஆரைக் கேள்வி கேட்டதைப் போல தன்னையும் கேள்வி கேட்கிறார்கள், தி.மு.கவால் எம்.ஜி.ஆரைக் கடைசிவரை வெல்ல முடியவில்லை, தி.மு.கவை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி த.வெகதான்" என்பதாகவே இருந்தது.

எம்.ஜி.ஆரைப் பார்த்து விஜய் காப்பியடிக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை.

"அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டு அதை எப்படி வழிநடத்துவது, இந்த அரசியல் கட்சியை மக்கள் அங்கீகரிக்கிற வகையில் எப்படிப்பட்ட கொள்கைகளை வகுப்பது என்ற அரசியல் அரிச்சுவடி கூட தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரைப் பார்த்து காப்பியடிக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.''

''சினிமாவில் வேண்டுமானால் 'டூப்' போடுவது சரியாக இருக்கும். ஆனால் அரசியலில் 'டூப்' எடுபடாது. ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிற ஓர் அரசியல் தலைவர் தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் செம்மலை.

மேலும், பா.ஜ.கவை மகிழ்விப்பதற்காகவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று குறிப்பிடுவதாகவும் சொல்கிறார் செம்மலை.

"பா.ஜ.க. தலைவர்களே தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில்தான் எங்கள் கூட்டணி என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். அப்படிச் சொல்லியிருக்கிறபோது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என விஜய் சொல்லத் தயங்குகிறார்? ஒரு மிகப்பெரிய பலம் வாய்ந்த ஒரு கட்சியை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அந்த கட்சியினிடத்தை தான் பிடிக்கலாம் என்று ஒரு தவறான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.கவின் பெயரை இவர் சொல்லவில்லையென்றாலும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முன்னணியிலே இருக்கிற எங்கள் கட்சியை இவர் சேதப்படுத்த முடியாது. மக்கள் மத்தியிலே எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதைக் கூட சோதிக்காத கட்சியாக இருக்கிற த.வெ.க., தான்தான் களத்திலே ஹீரோ என்று சொல்லிக் கொள்வது நகைப்பிற்குரியதாக இருக்கிறது" என்கிறார் செம்மலை.

அதிமுகவை குறிப்பிடாமல் பாஜக கூட்டணி என விஜய் குறிப்பிடுவது பற்றி அதிமுக கூறுவது என்ன?

பட மூலாதாரம்,@EPSTamilNadu

முன்பே துவங்கிய விஜய்

எம்.ஜி.ஆரை தன் பக்கமும் தி.மு.கவை எதிராகவும் விஜய் நிறுத்துவது இது முதல் முறையல்ல. மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டிலேயே இதைத் துவங்கிவிட்டார் விஜய்.

அந்த மாநாட்டில் பேசும்போது, "அவர் உயிரோடு இருக்கும்வரைக்கும் அந்த சி.எம். சீட்டப் பத்தி ஒருத்தராலையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல. கனவுகூட காண முடியல. எப்படியாவது அந்த சி.எம். சீட்டை என்கிட்ட கொடுத்திருங்க, என் நண்பர் எம்.ஜி.ஆர். திரும்ப வந்த பிறகு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று தன் எதிரியைக்கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அப்படியானது" என்றார் விஜய்.

அதேபோல, ஈரோட்டில் நடந்த கூட்டத்தில், ''எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.கவை தீய சக்தி என்றார்கள். அதையே நானும் கூறுகிறேன். தி.மு.க தீய சக்தி, த.வெ.க. தூய சக்தி. தூய சக்தி த.வெ.கவுக்கும், தீய சக்தி தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி. மக்கள் சக்தியான த.வெ.கவால்தான் தி.மு.கவை வீழ்த்த முடியும்" என்றார்.

கிட்டத்தட்ட அதே தொனியில்தான் திங்கட்கிழமையும் பேசினார் விஜய்.

வெற்றியாக எதிரொலிக்குமா?

திடீரென ஒருவர் தன்னை எம்.ஜி.ஆராக முன்னிறுத்தினால், அது தேர்தல் களத்தில் வெற்றியாக எதிரொலிப்பது சந்தேகம்தான் என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை.

"இயக்குநர் கே. பாக்யராஜில் துவங்கி விஜயகாந்த்வரை இப்படிச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கு இருந்த புறச் சூழல் அவர்களுக்கு இல்லை என்பது அவர்களுக்கு புரியவில்லை. எம்.ஜி.ஆர். தி.மு.கவின் உருவகமாக இருந்தார். அவருடைய ரசிகர் மன்றங்கள் கட்சியின் ஒரு பகுதியாகவே இருந்தன. அதனால்தான் அவர் தி.மு.கவைவிட்டு வெளியேறியபோது கட்சி செங்குத்தாகப் பிளந்தது. அவருடைய ரசிகர் மன்றங்கள் புதிய கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பாக மாறின. எம்.ஜி.ஆருக்குப் பிறகு யாராலும் அந்த இடத்திற்குப் போக முடியாததற்கு அதுதான் காரணம்" என்கிறார் ராஜன் குறை.

விஜய்

பட மூலாதாரம்,@TVKHQITWingOffl

திமுக கூறுவது என்ன?

தி.மு.க. விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

விஜய்யின் பேச்சு எடப்பாடி கே. பழனிசாமிக்கு வைக்கப்படும் செக் என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான டி.கே.எஸ். இளங்கோவன்.

"த.வெ.க. VS தி.மு.க. என முன்னிறுத்துவது எடப்பாடி கே. பழனிசாமிக்கு வைக்கப்படும் செக். அவர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்கிய பிறகு, அவர் தி.மு.கவை விமர்சித்தார், தி.மு.கவும் பதிலுக்கு அவரை விமர்சித்தது. இதிலென்ன இருக்கிறது? இதையெல்லாம் ஒரு வாதமாக முன்வைக்கிறார் அவர். மக்கள் பிரச்னைகளுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்? எங்கள் கூட்டணிக் கட்சிகள்கூட மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். எதுவும் செய்யாமல் முதலமைச்சராகிவிட வேண்டுமென நினைக்கிறார் விஜய்" என்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clymkkmy2pro

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழக மக்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டதே என கண்ணீர் வடித்தார்கள்.

large.4e3f93e0-004c-11f1-9972-d3f265c101c6.jpg.webp

இவருக்கு பின்னால் உள்ள படத்தில் இருப்பவர் தானே காமராஜர் இவரின் காங்கிரஸ் தான் ஹிந்தி திணிப்பை தமிழ்நாட்டில் நடத்தியது. தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழர்கள் இவரை தேர்தலில் படு தோல்வி அடைய செய்ததோடு அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாமல் பார்த்து கொண்டனர் 👏

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2026 at 23:36, விளங்க நினைப்பவன் said:

large.4e3f93e0-004c-11f1-9972-d3f265c101c6.jpg.webp

இவருக்கு பின்னால் உள்ள படத்தில் இருப்பவர் தானே காமராஜர் இவரின் காங்கிரஸ் தான் ஹிந்தி திணிப்பை தமிழ்நாட்டில் நடத்தியது. தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழர்கள் இவரை தேர்தலில் படு தோல்வி அடைய செய்ததோடு அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாமல் பார்த்து கொண்டனர் 👏

இதே காங்கிரஸோடு கூட்டணி வைத்துத்தானே திமுக இவ்வளவு காலமும் தமிழ்நாட்டை சூறையாடுகிறது? அப்போ இதே மக்கள் எங்கே போனார்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.