Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?

February 10, 2026

சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?(மூன்றாவது கண்: VII.)

 — அழகு குணசீலன் —

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும்,  அமைப்புக்களுக்கும், அவர்களின் அரசியலுக்கும் மங்குசனி தொடங்கிய காலம் அது.  இதனால்  புலிகளின் தலைவர் பிரபாகரனால் வீட்டு  சின்னத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற லேபல் புதுப்பித்து  ஒட்டப்பட்டது. ஒரு வகையில் இதை  “ஒப்பரேசன் தமிழரசு” என்று சொல்லமுடியும்.  இது முரண்பாடுகளைக்கொண்ட பலரை  கூட்டமைப்பு என்ற சாக்குக்குள் போட்டு கட்டி புலிகள்  அரசியல் பாடம் எடுத்த தருணம். இந்த புதிய லேபல் ஏற்படுத்திய  பாராளுமன்ற பிரதிநிதித்துவ அதிகரிப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பால், 2009 க்கு  பின்னர் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. 

 இதற்கு இரா.சம்பந்தர், மாவை சேனாதிராசா ஆகியோரின் ஆளுமையற்ற தலைமைத்துவமும், தமிழ்த்தேசிய வாடையே படாத எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர்  முறையே சம்பந்தனாலும்,  முன்னாள் மட்டக்களப்பு புலிகளின் சிபார்சிலும் கட்சிக்குள் நுழைந்ததும் முக்கிய சாபக்கேடு. சாணக்கியனின் உள் நுழைவுக்கு  முன்னாள் புலிகள்,  கி.துரைராசசிங்கம்  ஊடாக சம்பந்தருக்கு வழங்கிய நற்சான்றிதழும் காரணமாக அமைந்தது. பலவீனமான கூட்டமைப்பு – தமிழரசு தலைமைகள் காரணமாக சுமந்திரன் படிப்படியாக கட்சிக்குள் தனது நிலையை பலப்படுத்திக்கொண்டார். சுமந்திரனின் அரசியலை ஏற்காத முன்னாள் புலிகள் சாணக்கியனை தமிழரசுக்கு   வழங்கியது சுமந்திரனின் பலத்தை  அதிகரிக்கவே உதவியது. இது முன்னாள் புலிகள் தங்களுக்கு தாங்களே சூனியம் செய்தகதை. இப்போது நாயைக்கடித்து, பேயைக்கடித்து, சிறிதரனை கடித்திருக்கிறது தமிழரசுக்கட்சி சுமந்திரன் அணி.

2024, ஜனவரி 21இல் , திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் சி.சிறிதரன் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.  கூட்ட மண்டபத்திற்கு வெளியே சிறிதரனின் கையை பிடித்து, ‘நண்பன் சிறிதரனுக்கு’ எனது முழு ஆதரவும் என்று சொன்ன சுமந்திரன்  அடுத்த கணத்தில் இருந்தே அவருக்கு ஆப்பு வைக்கத் தொடங்கினார். தமிழரசுக்கட்சியின் அரசியல் வரலாறு மட்டும் அன்றி, அதன் நிர்வாக வரலாறும் ஜனநாயகத்தில் கறைபடிந்த கதைகளை கட்டுக்கட்டாக கொண்டது. இதற்கு சிறிதரனும் ஒரு காலத்தில் ஒத்து ஓடியவர் தான். 

இப்போது அந்த “ஜனநாயகம்” அவரையே கட்சியில் இருந்து துரத்தும் அளவுக்கு வந்து நிற்கிறது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கு பின்னர் ஒரு அமிர்தலிங்கம் போன்று, இரா.சம்பந்தருக்கு பின்னர் ஒரு சுமந்திரன் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து தன்னிஷ்ட அரசியல் செய்கிறார். இதனால்தான் இரு வேறுபட்ட சூழ்நிலைகளை கொண்ட அரசியல் செயற்பாடுகளாயினும் “சிறிதரன்” தமிழரசுக்கட்சியின் இன்னொரு இராசதுரையா? என்று கேட்க வேண்டியுள்ளது. அமிர்தலிங்கத்திற்கு மட்டக்களப்பில் ஒரு காசி ஆனந்தன். சுமந்திரனுக்கு மட்டக்களப்பில் ஒரு சாணக்கியன். 

அ.அமிர்தலிங்கம் தனக்கு ஆதரவான ஒரு குழுவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு செல்லையா இராசதுரைக்கு எதிரான தனது நடவடிக்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்தினார்.  இராசதுரைக்கு கிடைக்க வேண்டிய தமிழரசுக்கட்சி தலைமைத்துவத்தை சி.மு.இராசமாணிக்கத்திற்கு வழங்கி, நாங்கள் பிரதேசவாதம் அற்றவர்கள், ஜனநாயகவாதிகள் என கிழக்குமாகாண மக்களுக்கு காதில் பூச்சுத்தியது. இத்தனைக்கும்  இராசமாணிக்கம்  ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தமிழரசுக்கட்சிக்கு தாவியவர். இதை இராசதுரைக்கு எதிராக நியாயப்படுத்த கிழக்கிலும் ஆட்கள் இருந்தார்கள்.  

அதேபோன்று இன்றும் இரா. சாணக்கியனை பாராளுமன்ற குழுத்தலைவராக நியமித்து சுமந்திரன் கிழக்கு மீதான தனது காதலையும், ஜனநாயகத்தின் மீதான பற்றையும் மத்திய குழு உறுப்பினர்களான பதில் தலைவர் சி.வி.கே .சிவஞானம், பாராளுமன்ற குழுவின் ஊடகப்பேச்சாளர் ஞா.சிறிதரன் ஆகியோரின் முரண்பட்ட கருத்துக்களுக்கு மத்தியிலும்  வெளிப்படுத்தியுள்ளார்.  இத்தனைக்கும் இராசமாணிக்கத்தின் பேரன் சாணக்கியன் பட்டிருப்பு தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்து பாட்டன் வழியில் தமிழரசுக்கு தாவியவர். சிறிதரனிடம் இருந்து பறித்து சாணக்கியனுக்கு  வழங்கப்பட்ட பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை, இனிப்பு வழங்கியும்,  பட்டாசு கொழுத்தியும் கொண்டாட சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும்  மட்டக்களப்பில் இன்னும்  ஆட்கள் இருக்கிறார்கள்.

“தமிழரசுக்கட்சியின் தற்போதுள்ள எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களது  ஏகமனதான  தெரிவாக இந்த தெரிவு இடம்பெறவில்லை. கட்சி பதில் செயலாளருடைய தனி விருப்பமாக தற்போது ஏற்கனவே பதவிவகித்த சிறிதரனின் பதவி மாற்றப்பட்டுள்ளது. இந்த விடயம் சரியா, தவறா என்பதை நான் விவாதிக்க விரும்பவில்லை.”  என்று தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரன் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.  இதில் வேடிக்கை என்னவென்றால் பதில் செயலாளர் தனிவிருப்பமாக சிறிதரனின் பதவியை பறித்து இருக்கிறார் என்றால் அது அப்பட்டமான தவறு. ஜனநாயகத்தை மறுதலிக்கின்ற முடிவு. ஆனால் அதைப்பற்றி பேச அரியநேந்திரன் தயாரில்லை. இந்தப்பாணி தான் தமிழரசுக்கட்சியின் அரசியல் பாணி. ஜனநாயக மறுப்பு ஒன்றின் ஊடாக  பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்த அரியநேந்திரனிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கமுடியும்.? 

அவரது கண்ணுக்கு குத்தியிருப்பது இனிப்பும், பட்டாசும். இந்த நடவடிக்கை பிரதேசவாதத்தின் வெளிப்பாடு என்ற சாரப்பட அவர் கூறுகிறார். தமிழரசுகட்சிக்குள் நிலவுகின்ற உட்கட்சி ஜனநாயகமின்மை,  பக்கச்சார்பான பழிவாங்கல், பிரதேச வாதம், பதவிப்போட்டி கழுத்தறுப்பு….. போன்றவை பற்றி அரங்கம் மின்னிதழ் பத்திகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தது நூறு பதிவுகளாவது பல்வேறு பத்தியாளர்களால் எழுதப்பட்டுள்ளது. அப்போது எல்லாம் இவற்றை மறுத்தவர்களுள் இவரும் ஒருவர். ஏற்கனவே அரியநேந்திரன் வீட்டுக்கதவை தட்டிய சுமந்திரன் தற்போது சிறிதரன் வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார். அதைக்கூட அவரால் சரியா? தவறா? என்று சொல்லமுடியாத நிலை உள்ளது. சிறிதரன் நீக்கப்பட்டது ஒருவரின் தனி விருப்பம் என்றால் அது எப்படி சரியாக இருக்க முடியும்?

தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவராக  ஒருவரை தெரிவு செய்வது உலக நடைமுறையில் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சார்ந்தது. வேண்டுமானால் கட்சி ஆலோசனையை வழங்க முடியும். அந்த வகையில் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார். இது அவருக்கு அரசியல் அமைப்பு குழுவில் உறுப்பினராவதற்கும் உதவியது.  சிறிதரனின் அரசியல் அமைப்பு குழுவில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக அல்ல. பிரதான எதிர்கட்சி தவிர்ந்த சிறிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாகவே குழுவில் இடம் பெறுகிறார். தமிழரசுக்கட்சி எம்.பி.க்களின் ஏழு வாக்குகள் சிறிதரனுக்கு கிடைத்ததாகவும் , சாணக்கியன் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற சாரப்பட சிறிதரன் ஊடகபேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  சிறிதரனுக்கு ஜீவன் தொண்டமானை விடவும் ஒரு வாக்கு மேலதிகமாக கிடைத்தது. தனக்கு வாக்களித்த மாற்று கட்சியினர் யார், வாக்கு அளிக்காத தன்கட்சிக்காரர் யார் என்பதும் சிறிதரனுக்கு தெரியும்.

இப்போது உள்ள பிரச்சினை என்னவெனில் சுமந்திரன் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கும், அரசியல் அமைப்பு சபை உறுப்பினர் பதவிக்கும் முடிச்சுப்போடுவதுதான். உண்மையில் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியில் இருந்து சிறிதரனை கட்சி நீக்க முடியும். ஆனால் அது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதம் இன்றி இடம்பெற்றுள்ளது. ஆனால் ஞா. சிறிநேசன் எம்.பி.யைத்தவிர இது பற்றி பேச மற்றைய ஏழு பேரும் தயாரில்லை. ஏனெனில் சுமந்திரனின் ஜனநாயகம் அவர்களை கணுவில் வளையப் போட்டிருக்கிறது. அரசியல் அமைப்புச்சபை உறுப்பினர் பதவியை சிறிதரன் விரும்பி விலகினால் அன்றி அதை பறிக்க முடியாது என்பது சுமந்திரனுக்கு தெரியாததல்ல. அந்த பதவி முக்கியமானதும் அல்ல. ஆனால் அரசியல் அமைப்பு சபையில் சிறிதரனின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை பறித்து அதை சாணக்கியனுக்கு வழங்கி பாராளுமன்றக்குழுவை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே சுமந்திரன் அணியின் இலக்கு. அது அடையப்பட்டிருக்கிறது.

சி.சிறிதரன் எம்.பி.மீதான  குற்றச்சாட்டு அவர் எட்டு தடவைகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதும், முக்கியமாக இராணுவப்பிரிவு கணக்காய்வாளர் ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஆதரவளித்தார் என்பதாகும். இந்த குழுவில் அரசாங்கம் தான் சிபாரிசுகளை செய்கிறது. அதற்காக அனைத்து சிபாரிசுகளையும் சிறிதரன் நிராகரிக்கவேண்டும் என்று தமிழரசு எதிர்பார்க்க முடியாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நியமனங்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அப்பால் நோக்கப்படவேண்டியவை. அதை செய்வதற்கான உரிமை சிறிதரனுக்கு இருக்கிறது. எந்த சிபாரிசை ஆதரிப்பது எந்த சிபாரிசை எதிர்ப்பது என்று தமிழரசுக்கட்சி தீர்மானிக்க முடியாது. ஏனெனில் சிறிதரன் தமிழரசுக்கட்சியை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

ஆனால் சர்ச்சைக்குரிய கணக்காய்வாளர் நாயக நியமனத்தில் அரசாங்கமும் அரசியல் செய்தது என்பது வெளிப்படையானது. கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தில் ஓய்வு பெற்று சென்றவருக்கு பின்னால் தகுதி, சேவைமூப்பு, அனுபவம் என்பன வற்றின் அடிப்படையில் ஒருவரல்ல ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்ற பொழுது  இராணுவ சேவையில் இருந்து ஒரு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்காகவே எதிர்கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  

ஆனால் இந்த நிர்வாக ஒழுங்கீனத்தை முதன்மைப்படுத்தாது தமிழ்த்தேசிய கட்சிகள் “இராணுவம்” என்ற கண்ணாடியை மட்டும் போட்டுக்கொண்டு எதிர்க்கின்றனர். அதுவல்ல இங்கு பிரச்சினை ஜே.வி.பி. தனது கட்சியின் ஆதரவாளர் ஒருவரை, ஒப்பீட்டளவில் சேவை மூப்பு, தகுதி, அனுவம் குறைந்த ஒருவரை நியமித்து கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தை கட்சி அரசியலின் கீழ் கொண்டு வர முயற்சித்ததே பிரச்சினை. இந்த காரணங்களுக்காக சிறிதரன் அதை எதிர்த்து இருக்கவேண்டுமே ஒழிய இராணுவ அதிகாரி என்பதற்காக அல்ல. இது விடயமாக சிறிதரனும் பேசவில்லை, சுமந்திரனும் பேசவில்லை .கஜேந்திரகுமாரும் பேசவில்லை. ஏனெனில் இராணுவம் என்ற வார்த்தையே தமிழ்த்தேசிய அரசியலில் தாரகமந்திரம்.

எது எவ்வாறாயினும் சுமந்திரன், சாணக்கியன் வலையில் சிறிதரன் சிக்கியுள்ளார். சிறிதரனை கட்சியில் இருந்து கழட்டி விட்டால் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு உள்ள மிகப்பெரும் தமிழ்த்தேசிய தடை அகற்றப்பட்டுவிடும் என்று சுமந்திரன் கூட்டம், இவ்வாறான உட்கட்சி ஜனநாயகம் அற்ற முடிவுகளை நியாயப்படுத்துவதும், மௌனம்சாதிப்பதும் ஒன்றுதான். இதையே கிழக்கின் ஐந்து தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த நிலைப்பாடு சாணக்கியனை பலமாக்கவே உதவும்.

இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு தடவை குறிப்பிட்டது போன்று பாராளுமன்ற குழுத்தலலைவர் பதவி ஆரம்பத்திலேயே சாணக்கியனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை பதிவிட்டதற்காக  பிரதேச வாதம் பேசுகிறோம் என்றவர்கள், இப்போது இனிப்பு வழங்குகிறார்கள். அவர்களை பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்று கூறுகிறார் அரியநேந்திரன். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில்  தமிழரசுக்கட்சியில் இருக்கிறார்கள். மேலும் சேவை மூப்பைத்தவிர எல்லா வகையிலும் தகுதியானவராகவும், பாராளுமன்ற நடைமுறைகளை கையாளக்கூடிய ஆற்றல் உள்ளவராகவும் சாணக்கியன் இருக்கிறார். ஆனால்  தமிழரசுக்கட்சியின் வெடிப்புக்கு ஒட்டுப்போடக்கூடிய ஒருவராக சாணக்கியன் இல்லை. சுமந்திரனின் அரசியல் குணாம்சங்களையே அவரும் கொண்டு  இருப்பதால்   வடக்கில் மட்டும் அல்ல கிழக்கிலும் தமிழரசு சிதறப் போகிறது என்பதே ஜதார்த்தம்.

 “விலகினேனா விலக்கப்பட்டேனா….?”  என்று கேட்டார் செ.இராசதுரை. 

” விலகேன் முடிந்தால் விலக்குங்கள்… பார்க்கலாம்…” என்று சவால் விடுகிறார் சி.சிறிதரன்.

இந்த அரசியலுக்கு வயது எழுபத்தியேழு என்ற பெருமை வேறு.

 பிறப்பின் அடிப்படையிலான மூப்பு அல்ல அரசியல் சாணக்கியம். தமிழரசுக்கட்சி தன்னை புதுமைப்படுத்த வேண்டும்.

 தூய்மைப்படுத்தவேண்டும். ஜனநாயகம் படுத்தவேண்டும்.

 அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களை செய்யவேண்டும்.

இல்லையேல் வருகின்ற வெள்ளத்தில் அது அடித்துச்செல்லப்படும்…….! அவ்வளவுதான்….!!

https://arangamnews.com/?p=12666

  • கருத்துக்கள உறவுகள்

கணக்காளர் நியமனத்திற்கு விண்ணப்பித்த ஒரு இராணுவத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதே இராணுவத்தின் பாதுகாப்போடு வலம் வந்த சுமந்திரனுக்கு என்ன தண்டனை? இனவழிப்பு செய்த சிங்களக்கட்சியில் இருந்து வந்து புகுந்த சாணக்கியனுக்கு ஏன் இந்த பதவி உயர்வு? தமிழர் நிலத்தில் புத்தர் சிலை வைத்ததை நிஞாயப்படுத்தி தமிழரை கொச்சைப்படுத்தி பேசிய சஜித்துக்கு வாக்களிக்கச்சொன்ன சுமந்திரன் ஏன் இன்னும் தமிழரசுக்கட்சியில் தொங்கிக்கொண்டிருக்கிறார்? வேறொரு கட்சியை உருவாக்கி வென்று காட்டட்டும் பாப்போம் முடிந்தால்.

சி .வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து விலத்துவதற்காக சுமந்திரன் செய்த செயல்கள் பேச்சுக்கள் அநாகரீகமானவை. அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை, அதை எல்லோரும் மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள். அதற்கு சுமந்திரன் பாவித்த ஆள் மாவையர், மாவையரை வீழ்த்த சிறிதரனை பாவித்தார், இனி சிவஞானம், அடுத்து யார்? சுமந்திரனுக்கும் ஒரு சுழியோடி வருவார் அல்லது அதற்கு தேவையில்லாமல் கட்சியே இல்லாமற் போகலாம். விதி வலியது. அன்று தேவையில்லாமல் அழுக்காறு கொண்டு விக்கினேஸ்வரனை அவமானப்படுத்தி வெளியேற்றினார்கள், அதன் பயனை இப்போது அறுவடை செய்கிறார்கள். சிவனே என்று இருந்த ஒருவரை வலிய தேடிச்சென்று கொண்டுவந்து சேர்த்து தங்கள் வேலை முடிந்தவுடன் சேறடித்து அனுப்பினார்கள். தமிழரசுக்கட்சியில் புதிதாக இணைபவர்கள் இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கென்ன என்று பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு மௌனம் காக்காதீர்கள். மக்கள் மனம் வைத்தாலே உங்களுக்கு பதவி.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2026 at 19:44, கிருபன் said:

சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?

இராசதுரையை இப்படி கேவலப்படுத்த கூடாது.

சிறிதரன் ஈழதமிழர் அரசியலில்

ஒரு மிக்சர் மாமா 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

கணக்காளர் நியமனத்திற்கு விண்ணப்பித்த ஒரு இராணுவத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதே இராணுவத்தின் பாதுகாப்போடு வலம் வந்த சுமந்திரனுக்கு என்ன தண்டனை?

சிங்கள குடியேற்றத்தை செய்யப் போகிறார்கள் என ஆர்ப்பாட்டம் செய்த தமிழரசுக் கட்சி

இதற்காக ஒதுக்கிய பல மில்லியன் ரூபா பாதீட்டின் போது அதை எதிர்க்காமல் நடுநிலமை வகித்தார்கள்.

தெற்கில் ஆதரவு.

வடக்கில் தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்கள குடியேற்றத்தை செய்யப் போகிறார்கள் என ஆர்ப்பாட்டம் செய்த தமிழரசுக் கட்சி

இதற்காக ஒதுக்கிய பல மில்லியன் ரூபா பாதீட்டின் போது அதை எதிர்க்காமல் நடுநிலமை வகித்தார்கள்.

தெற்கில் ஆதரவு.

வடக்கில் தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கை.

செல்வா காலத்திலேயே…

வடக்கில் தமிழ் “அரசு” கட்சி எனவும்…

தெற்கில் பெடரல் “கூட்டாட்சி” பார்ட்டி எனவும்…

பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டு கள்ளர் என சீனியர் பொன்னர் ஏசுவாராம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.