Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஸ்தமன வானில்.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்தமன வானில்.......

இளவேனிற் காலத்து இதமான தென்றலின் தாலாட்டில் மேபிள் மரங்களெல்லாம் மெல்லச் சிலிர்த்துக் கொண்டன. பூங்காவின் வாங்கில் சாய்ந்து அமர்ந்திருந்த கற்பகத்தின் பார்வை அடிவானத்து அந்திச் சிவப்பில் லயித்துக்கிடந்தது. ஆங்காங்கு அருகருகே அமர்ந்திருந்த இளம்சோடிகள் தமக்குள் ஏதேதோ பேசிச் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். முதியவர் சிலர் தம்மால் முடிந்தளவு தூரம் நடந்துகொண்டிருந்தனர்.

பூச்சியங்களைத் தாண்டி புவியீர்ப்பு மையத்தைத் தொடும் குளிரில் விறைத்துக் கிடந்த உடல்கள் இங்கு சற்று தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டன. மழலைகள் புற்றரையில் பந்தை உருட்டுவதும் ஊஞ்சலில் ஆடி ஆடி அலுத்து மீண்டும் படிகளில் ஏறி ஏறி வழுக்குவதுமாக விளையாட்டில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தனர்.

சில வாங்குகளில்கற்பகத்தைப் போலவே சிலர் அனுபவ முத்திரையின் அடிச்சுவடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தனர்.

கற்பகத்தின் பார்வையிலோ வெறுமை. உடலிலோ தள்ளாமை. எங்கோ தொலைத்து விட்ட வாழ்க்கையின் பக்கங்களை எத்தனை நாட்களுக்குத்தான் புரட்டிப் புரட்டி ஏங்குவது. தேடலுக்கு விடைதான் கிடைக்கவில்லை.

கற்பகத்தின் மனம் வேதனையின் விளிம்பில் தள்ளாடியது. பல்வேறு இனக் குழந்தைகளும் புற்றரையெங்கும் சிதறிய மணிகளைப்போல் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

கற்பகத்துக்கு சந்துரு ஒரே மகன். அவனைத் தரையில் நடக்க விடாமல் தாங்கியே வளர்த்தவள் அவள். அதனால்தானோ அவனுக்கு பாசத்தைப் பகிர்ந்து கொள்ள மட்டும் பயிற்சி கொடுக்க மறந்து விட்டாள்.

மகனை நினைத்தவுடன் பெற்ற வயிறு சங்கடப்பட்டது. ஆரம்ப நாட்களில் தன் மகனுக்குக் கிடைத்த செழிப்பான வாழ்க்கையைப் பற்றி அவளுக்குப் பெருமை பிடிபடவில்லை.

'என்ர மருமகள் கொழும்பில பிரபல தொழிலதிபரின் மகளாக்கும்.’’

‘’அவளுக்கு சமைக்கவே தெரியாது’’

‘’அழகென்றால் அப்படியொரு அழகு.சந்துரு கொடுத்து வைத்தவன்’’என்று தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் தம்பட்டம் அடித்தக் கொண்டவள் கற்பகம்.

கற்பகம் கனடா வந்த புதிதில் தனது மகனின் ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து பரவசப்பட்டாலும் காலப்போக்கில் அவர்கள் ;நடந்து கொள்ளும் முறை மனதைக் குடையத்தொடங்கியது. வேலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கணவனும் மனைவியுமாக நண்பர்கள். விருந்து.சினிமா என்று புறப்பட்டுப் போய்விடுவார்கள். அந்த வீட்டில் ஒரு சீவன் இருப்பதோ அதன் உணர்வுகளைப் பற்றியோ

உறவின் பரிதவிப்புகள் பற்றியோ அங்கு யாருக்கும் அக்கறையில்லை.

‘’அம்மா, அம்மா juice வேணும்’’ என்று தன் மழலை மொழியில் அழைத்தபடி ஒரு குழந்தை தனது அம்மாவின் அருகில் ஓடி வந்தது. தாய் தன் கைப்பையிலிருந்து யூஸ் எடுத்துக் கொடுத்ததும் குடித்துவிட்டு குழந்தை தன் விளையாட்டில் கவனம் செலுத்தியது. அந்த இளம் தாயோ மெல்ல மெல்ல புற்றரையில் நடந்தபடி; கற்பகம் இருந்த வாங்கின் பக்கத்தில் வந்தவள் ‘’இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே ‘’ என்று ஒரு கணம் தயங்கியவள் திகைத்துப்போனாள்.

கற்பகமோ தமிழ்ப்பெண் ஒருவர் தன் அருகில் வருவதைக் கண்டு ஒரு புன் சிரிப்பை உதிர்த்து வரவேற்றார்.

தயக்கத்துடன் கற்பகத்தின் அருகே வந்த சரிதா "அம்மா சுகமாக இருக்கிறீங்களா?’’என்று கேட்கவும்

கற்பகம் இவளை இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று தன் சிந்தனையை பின்னோக்கி ஓட விட்டவள் நிச்சயம் திகைத்துத்தான் போனாள். பதில் சொல்ல வாய் வராதவளாய் மேலும் கீழும் பார்த்தவள்

கிpராமத்தில் பாவாடை சட்டையுடன் இடைக்குக் கீழே புரளும் முடி அசைய மிரண்ட மான் விழிகளுடன் பார்த்த சின்னப் பெண் சரிதா இன்று முற்றிலும் மாறி இருந்தாள். இவரது சிந்தனை ஓட்டம்தான் சரிதாவின் மனதிலும் ஓடியது.

அன்று நிமிர்ந்த நடையும் திமிரான பேச்சும் எவரையும் ஓடஓட விரட்டும் ஒய்யாரமான பார்வையுமாக கிராமத்தையே கிடுகிடுக்க வைத்த அவரா இவர். கூனிக் குறுகி தலைச் சிகரங்களெல்லாம் வெண்பனி படர்ந்து கண்கள் இடுங்கி ஆடி அடங்கி விட்ட அமைதியான தோற்றத்தில் இருக்கிறார். வார்த்தைகளுக்குப் பஞ்சமேற்பட்டு விட்ட அந்தப்பொழுதில் இருவரும் தம்மைச் சுதாகரித்துக் கொண்டனர்.

கிராமத்தில் சரிதாவின் பெற்றோர் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள். இருந்தும் பண்பும் அன்பும் மிக்க பரிவான குடும்பம். இல்லாமை இருந்தாலும் அன்பில்லாமை அங்கில்லை. சரிதா அக் குடும்பத்தில் நான்காவது பெண். அழகிலும் அறிவிலும் கூட அனைவரையும் அதிசயிக்க வைப்பவளாகத் திகழ்ந்தாள். எனவே வறுமையின் எல்லையையும் தாண்டி உயர்தரக்கல்வி கற்க மகாவித்தியாலயத்தில் நுழையும் சந்தர்ப்பமும்

கிடைத்தது.

வகுப்பில் சரிதா விண்மீன்களிடை வெண்ணிலவு போலத் திகழ்ந்தாள். அவளது அழகும் அறிவும் அந்தஸ்த்தை அகற்றி விட்டதால் சந்துருவின் அன்புக்கு அடிமையாக வேண்டி ஏற்பட்டதை விதி என்றுதான் சொல்ல வேண்டும்.

படிப்பில் சரிதா அளவு கெட்டித்தனம் இல்லாவிட்டாலும் சந்துரு வகுப்பில் ஒரு கதாநாயகனாகத்தான் பவனி வந்தான். அவனது பளபளப்பும் வாட்டசாட்டமான தோற்றமும் துருதுரு என்ற பேச்சும் அவனை நண்பர் கூட்டத்திடை நடுநாயகமாக வலம்வர வைத்தது.

அன்று காலைப்பொழுது பாடசாலை வழக்கமான பரபரப்புடன் காணப்பட்டது. சரிதா பத்து நிமிடங்கள் முன்னதாகவே வகுப்புக்கு வந்து விட்டாள். ‘’என்ன இண்டைக்கு நேரத்திற்கு வந்திற்றீங்க போல’’ என்ற குரல் கேட்டுத் திரும்பியவள் அங்கு சந்துரு நிற்பதைப் பார்த்ததும் தயக்கத்துடன் ஒரு புன்னகையை மட்டும் சிந்தினாள்.

கடந்த ஆறு மாதங்களாக ஒரே வகுப்பில் படித்தாலும் தனிமையில் கதைப்பது முதல் தடவை என்பதால் ஏனோ மனம் படபடத்தது. காரணம் சில நாட்களாக அவளது மனமும் சந்துருவைச் சுற்றிச் சுற்றிவந்தது. சுந்துருவும் அவளை அடிக்கடி பார்த்துப் புன்னகைப்பதை சில நாட்களாக அவதானித்து வந்திருந்தாள். அந்தப் பதினாறுவயதுப் பருவம் ஏற்படுத்திய பல்வேறு கோலங்கள் அந்த இளம் நெஞ்சங்களையும் விட்டுவைக்கவில்லை. தினமும் ஏதாவது சாக்கு வைத்து சந்துரு பேச்செடுப்பதும் ஆரம்பத்தில் ஒரு சொல்லில் பதிலளித்தவள் காலப்போக்கில் கலகலப்பாகச் சிரித்து பகிடிவிட்டுக் கதைக்கவும் ஆரம்பிpத்து விட்டனர்.

அறிவிலும் அழகிலும் முன்னணியில் விளங்கிய அந்தப் பெண்மைக்குள் அன்பின் பரிணாமம் காதலாக மலரத் தொடங்கியதை சரிதா உணராமலில்லை. இருந்தும் சந்துருவின் அன்பான பேச்சும் கவர்ச்சியான பார்வையும் அவளைக் கட்டிப் போட்டு விட்டது. வகுப்புத் தோழிகள் இவர்களது கனிவான பேச்சையும் களிப்பான சிரிப்பையும் கூட்டிக் கழித்து விடையை எடை போட்டு விட்டனர்.

அன்று ஒரு புதன் கிழமை

பாடசாலை முடிந்து வீடு திரும்பியவள் .வீடு என்றுமில்லாமல் அமைதியாக இருப்பதை உணர்ந்தாள்.

சமையலறையில் அம்மா பாத்திரங்களை பலமாக வைக்கும் ஓசை அம்மாவின் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.

மெதுவாக புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு சமையலறையை எட்டிப் பார்த்தாள்.

‘’நீ படிக்கப் போய் எங்களை அவமானப் படுத்தினது போதும். பேசாமல் அக்காவோட நெசவடிக்கப் போனாலும் வீட்டுக் கஸ்ரமாவது தீரும்’’ அம்மாவின் பேச்சு ஆழமாக இறங்க ‘’என்னம்மா?’’ என்று வாய்க்குள் முணுமுணுத்தாள். ‘’என்னவோ? இண்டைக்கு முதலாளியம்மா அப்பாவை என்ன பேச்சுப் பேசிப் போட்டா தெரியுமா?’’தங்கட பணத்தை அபகரிக்கத்தான் திட்டம்போட்டு உன்னை விட்டிருக்கிறமெண்டு என்னென்னவோ பேசிப்போட்டாவாம்’’

‘’அம்மா’’

என்றவள் அடுத்தது என்ன பேசுவது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள். ஐயோ எமக்காக தன் உடல் வருந்த உழைத்துக் காப்பாற்றும் அப்பாவுக்கு என்னால் இப்படி ஒரு அவமானமா? என்று இதயம் துடித்தது. கண்களில் திரண்ட கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட தன் கைகளில் முகம் புதைத்து விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

அப்பாவின் ஸ்பரிசம் பட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பரிதாபமாக அப்பாவைப் பார்த்தவள் அந்தத் தந்தையின் பார்வையில் கசிந்த கனிவைக் கண்டு கரைந்து போனாள்.

‘’சரிதா இந்தப் பணக்காரரே இப்படித்தான் . எத்தனை வருசமா நான் பழகுறன். அந்த மனுசி சரியான இராட்சசி. மனித மனங்களைப் புரிய முடியாத பிறவிகள் எங்களிடம் காசு பணம் இல்லாட்டியும் அன்பும் பண்பும் இருக்கு. அதோட உனக்கு அறிவும் இருக்கு. நீ நல்லாப் படித்து நல்ல தொழிலில் அமர்ந்து எங்கட குடும்பத்தை உயர்த்த வேணுமென்றுதான் நான் ஆசைப்படுறன். பணம் இருக்கிற இடங்களில மனம் இரக்காது எண்டது உண்மைதான்.’’ எனறு சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்று வாசல் திண்ணையில் அமைதியாக அமர்ந்தார்.

பெற்றோர் எம்மைப் படிக்க அனுப்ப நான் வீணாக மனதை அலைய விட்டது எவ்வளவு தப்பு என்பதை உணர்ந்த சரிதா தன் கற்பனைகளைக் கலைக்கத் தொடங்கினாள்.

அங்கு சந்துரு வீட்டிலோ ‘’உன்னை மகாவித்தியாலயத்தக்கு அனுப்பும் பொழுதே பார்வதி சொன்னவள் கண்டதுகளோட எல்லாம் சேர்ந்து படிக்க விட வேணாம் . பட்டணத்தக்கு தன்ர வீட்ட அனுப்பச் சொல்லி படிச்சுப் படிச்சுச் சொன்னவள். நான் கேளாமல் விட்டது எவ்வளவு தப்பு எண்டு இப்பதான் தெரியுது. எங்க பணம் இருக்கு எப்படி அமுக்கலாம் எண்டு அலையுதுகள். இனியும் உன்னை இங்க வச்சிருக்க ஏலாது. என்னட்டை கை நீட்டி கூலி வாங்கிறதுகள் என்னோட சம்பந்தியாகிற எண்ணம் வந்திற்றுது.’’ மூச்சிரைக்க முழமளவு நீட்டி முழக்கி கற்பகம் பேசவும் சந்துருவுக்கு நிலமை படிப் படியாகப் புரியத் தொடங்கியது.

என்ன காரியம் செய்து விட்டேன்? சரிதாவின் அழகும் அறிவும் என் கண்களைக் கட்டிப்போட்டு விட்டதே.

அம்மாவுக்கு நிச்சயம் பிடிக்காது என்று தெரிந்தும் ஏன் இப்பிடி ஒரு காரியத்துக்கு நான் ஆசைப்பட்டேன்.

எங்கள் தோட்டத்தில் வேலை செய்பவனை நான் மாமா என்று கூப்பிடுவதா? தன் பருவம் ஏற்படுத்திய கோளாறான சிந்தனைகளை எண்ணி வெட்கப்பட்டான். என் அந்தஸ்துக்கு ஏற்ற அழகான பெண் கிடைக்காமலா போய்விடுவாள் என்று மனதைத் தேற்றிக் கொண்டான். கற்பகம் அன்று இரவு தூங்கவே இல்லை. மறுநாள் சந்துருவை பட்டணத்திலுள்ள தன் சகோதரி பார்வதி வீட்டிற்கு அனுப்பி அங்குள்ள தனியார் பாடசாலை ஒன்றில் சந்துருவைச் சேர்த்த பின்பே ஓய்ந்தாள். தன் நிலை உணர்ந்த சரிதாவும் முழுமூச்சாக கல்வியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தி பல்கலைக்கழகம் புகுச்து தன் குடும்பத்து வறுமையை விரட்டியடித்தாள்.

பழைய ஞாபகங்களிலிருந்து சில கணப்பொழுதுகளில் இருவரும் தத்தமது நிலைக்குத் திரும்பினர். சரிதாவுக்கு கற்பகத்தின் நிலையைப் பார்க்க கவலையாக இருந்தாலும் அன்று பணம் அந்தஸ்து அவரை எப்படியெல்லாம் ஆட்டம் போட வைத்தது.

‘’சரிதா இது உன் மகனா?என்று பரிவுடன் கேட்டாள் கற்பகம். சரிதாவும் நெகிழ்ச்சியுடன் கற்பகத்தின் பக்கத்தில் அமர்ந்தாள். கற்பகத்தின் கண்கள் கண்ணீரைக் கொட்டத் தொடங்கியது. உதடுகள் துடித்தன.பார்வை பல வகையில் மன்னிப்புக் கேட்டது.

‘’சரிதா ஊரில இருக்கேக்க எங்கட வீடு எங்கட ஊர் சொத்து சுகம் எண்டு எல்லாக் கட்டுக்களும் எங்களை மட்டமாக்கிப் ;போட்டுது. இங்க வந்தப்பிறதுதான் எல்லாம் விளங்குது.’’

அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் புடம் போடப் பட்ட பொன்னாக வாயிலிருந்து வெளிப்பட்டது.

‘’எல்லாம் இழந்து அகதிகளாகி முகாம்களிலயும் அந்நிய நாடுகளிலயும் இப்ப எங்கட அந்தஸ்தும் கௌரவமும் எங்க போயிற்றுது’’என்று சொல்லி விட்டு

‘’என்னை மன்னித்துவிடு சரிதா’’என்று கூறவும்

‘’அம்மா நீங்க எவ்வளவு பெரியவர் நீங்க என்னட்ட மன்னிப்புக் கேட்பதா?

வீணா மனதை அலட்டிக்கொண்டால் வருத்தம்தான் வரப்போகுது’’என்றாள்.

‘’வருத்தமா? எனக்கா? இனி புதிதாக என்ன வருத்தம் வரப்போகுது?

பணக்கார மருமகள் வேணுமெண்டு ஆசைப்பட்டு எடுத்ததால நான் படுற அவஸ்தை எனக்குத்தான் தெரியும். மனிதத்துக்கு மதிப்புக் கொடுக்காம பணத்துக்கும் புகழுக்கும் மதிப்புக்கொடுத்து இன்று நானே மதிப்புக்கெட்டு ஐடமாக நிற்கிறேனே’’ என்று கூறிய கற்பகத்தின் கண்கள் மழை மேகமாகின.

மெல்ல கற்பகத்தின் கைகளை வருடிக் கொடுத்த சரிதா ‘’ஏனம்மா உங்கட மருமகள் உங்களோட இல்லையா? ஏன்று கேட்டாள்.

‘’அதையேன் கேட்கிறாய் ராணி போல வாழ்ந்த எனக்கு ஒரு வேலைக்காரி அந்தஸ்துகூட கிடைக்கஇல்லை. இப்ப எனக்கு தனிமைதான் துணை.’’

‘’அம்மா கவலைப் படாதேங்க. நான் பக்கத்து அப்பார்ட்மெண்டிலதான் இருக்கிறன். ஓவ்வொரு நாளும் இங்க வருவன். உங்களைச் சந்திப்பன்.

எங்கட குடும்பத்துக்கு அன்னமிட்ட உங்களுக்கு நான் என்ன உதவி வேணுமெண்டாலும் செய்வனம்மா’’என்றாள்.

செயற்கை மின்மினிகள் இயற்கை இருளை கலைக்கத் தொடங்கவும் பூங்காவை விட்டு ஒவ்வொருவராக விலகத் தொடங்கினர். பூங்காவை விட்டு வீதி; முனை வரை சரிதாவின் கையை பரிவுடன் பற்றியபடி நடந்க கற்பகம்’’நாளைக்கு கட்டாயம் வருவியா சரிதா? என்றார் ஆதங்கத்துடன்.

‘’கட்டாயம் வருவனம்மா’’என்றாள் சரிதா.

பாட்டி bye என்று மழலை சிந்திய குழந்தையை அணைத்து முத்தமிட்டபடி

விடை பெற்றாள்.

தளர்ந்து நடக்கும் கற்பகத்தை சற்று நேரம் பார்த்தபடி நின்றவள்

அம்மா இல்லாத எனக்கு இனி இவர் தான் அம்மா என்று நினைத்தபடி

நடக்கத்தொடங்கினாள்.

பல இரவுகளின் பின் அன்றிரவு கற்பகத்தின் மனம் மிகத் தெளிவாக இருந்தது.

கொழுகொம்பில்லாத கொடிக்கு பற்றிப்பிடிக்க ஒரு பந்தல் கிடைத்துவிட்ட பூரிப்பில் கற்பகம் நிம்மதி;யாகத் தூங்கச் சென்றார்.

---------------------------------------------------------------------

Edited by Kavallur Kanmani

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை காவலூர் கண்மணி. ஒரு தாயின் ஏக்கத்தை புடம் போட்டு காட்டினீர்கள். நிஜ வாழ்வில் இப்படி சில அம்மாக்கள் அன்புக்காக ஏங்குவதை நேரில் கண்டுள்ளேன். நன்றிகள் உங்கள் கதைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை காவலூர் கண்மணி.

கிராமத்தில் சரிதாவின் பெற்றோர் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள். இருந்தும் பண்பும் அன்பும் மிக்க பரிவான குடும்பம். இல்லாமை இருந்தாலும் அன்பில்லாமை அங்கில்லை. சரிதா அக் குடும்பத்தில் நான்காவது பெண். அழகிலும் அறிவிலும் கூட அனைவரையும் அதிசயிக்க வைப்பவளாகத் திகழ்ந்தாள். எனவே வறுமையின் எல்லையையும் தாண்டி உயர்தரக்கல்வி கற்க மகாவித்தியாலயத்தில் நுழையும் சந்தர்ப்பமும்

கிடைத்தது.

என்ன உங்களின் இந்த சொல்லுக்கு இங்கை ஒருத்தரும் போர் கொடி தூக்காவிட்டால் சந்தோசம். :D:lol:

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு கதை காவலூர் கண்மணி. பணத்துக்காக அலைபவர்களுக்கு நல்லதொரு பாடம் கூட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையைப் படித்துப் பாராட்டிய நுணாவிலான் சபேஸ் இன்னிசை அனைவருக்கும் நன்றிகள். பொருளாதாரத்தின் அடிமட்டம் என்றால் வறுமைக் கோட்டைத்தான் குறிப்பிடுகிறது. சபேஸ் ஒருவரும் போர்க் கொடி தூக்கமாட்டார்கள் என்பது என் கருத்து.நன்றிகள் சபேஸ்.

கண்மணி அக்கா "அஸ்தமன் வானில்" என்ற கதையை படித்தேன் ரசித்தேன் பலவற்றை அறிந்தேன்,தாயின் ஏக்கத்தை புடம் போட்டு காட்டியிருந்தீர்கள் மனது சில நேரம் கணத்தது :D .....வாழ்த்துகள் கண்மணி அக்கா :lol: !!ஆனாலும் கதையில் ஒரு விசயத்தில் எனக்கு உடன்பாடில்லை எந்த தாயும் தன் பிள்ளை நல்லா இருக்க வேண்டும் என்று தான் ஆசைபடுவா :) அதே போல் தான் இந்த தாயும் என்பது என் பார்வையில் நான் எடுத்து கொண்டது :lol: ......சில தவறுகள் இந்த கதாபாத்திரத்தில் வரும் தாய் செய்திருந்தாளும் எல்லாம் பிள்ளையின் நன்மைக்கு என்பதே என்பது குறிபிடதக்கது :lol: .....அத்துடன் பொருளாதாரத்தில் உயர்மட்டத்தில் இருகிறவர்கள் எல்லாம் திமிரில் இருப்பவர்கள் என்று இல்லை ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம்!! :lol:

இப்ப நடைமுறையில் பார்த்தீங்கள் என்றால் சில பொருளாதார உயர்மட்டத்தில் இருப்பவர்கள் அடிமட்டத்தில் உள்ளவர்கள் நல்ல பண்பு உள்ளவர்கள் என்று திருமணம் செய்து வைக்கிறார்கள் ஆனால் வாறவை முதல் வேளையா தாயை பிரித்து குடும்பத்தை பிரிந்த்து இவ்வாறான வேலைகளை செய்வதை உன்னிப்பாக அவதானிக்கலாம் :D இவர்களை என்ன சொல்ல கண்மணி அக்கா ஆகவே இதனை நாம் மட்ட வித்தியாசத்தில் பார்ப்பது என்னால் ஏற்று கொள்ளமுடியாவிட்டாலும் கதை என்ற ரீதியில் உங்கள் கதை என் மனதை கொள்ளை கொண்டது வாழ்த்துகள் அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யமுனா கதைகளில் எழுதுபவைகளோ சினிமாவில் பார்ப்பவைகளோ அனைத்தும் உண்மைகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கற்பனை கலந்த நிஜங்கள். சில விதிவிலக்குகள் எதற்கும் இருக்கத்தான் செய்யும். புலம் பெயர்ந்தபின் எம்மவர் எவ்வளவோ புடம் போடப்பட்டு விட்டோம். இக்கதை எம் மண்ணின் நிகழ்வுதானே. எது எப்படி இருந்தபோதும் கதையைப் படித்து விமர்சனம் தந்த உங்களுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.