Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புத்தாண்டு தையில் வருவதில் தவறு ஒன்றும் இல்லை

Featured Replies

பழுதை நீக்கி வந்த பழந்தையே வருக!

"தெய்வத்தமிழ்" இணையத்தில் வெளிவந்த கட்டுரை

இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு!

காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும், மாதத்தின் பெயரும், நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்கு அயலான மொழியில் இருக்கும். கிழமை ஒன்று தான் அவனுக்குப் புரிவதாக இருக்கும். அதிலும் ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் அந்த ஆண்டைப் பயமுறுத்துவது போல எழுத்தெழுத்தாக உச்சரிக்கும் போது அதற்குள் அந்த ஆண்டே ஓடிவிடும் போலத் தோன்றி அச்சத்தை விளைவிக்கும்.

ஆமாம், இந்த சக ஆண்டு என்பது என்ன? யாருக்குத் தெரியும் என்கிறீர்களா? நானே சொல்லி விடுகிறேன்.

விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு. விக்கிர மாதித்தன் தமிழனா? இல்லை. அவன் ஒர் சாளுக்கிய மன்னன். அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏதாவது வேண்டுதலா?

கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின் நிலைமை என்ன? எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள். இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத் தெடங்கும். கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை. எனவே இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தெடங்கும். ஆகவே கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு, யாண்டு என்பது வேறு என்று தெளிவுபடுத்துகிறார்கள். ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை சரி. ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று கவலைப்படுவதில்லை. எனவே, எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப் பற்றித் தான் அது பேசும்.

ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும். அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது. அதனுடன் வடமொழிப் பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதுர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள்.

இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை. அதன்பின் தொடர்ந்து பல்லவரும், இசுலாமியரும், நாயக்கர்களும், மராட்டியர்களும், பிரஞ்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் சக ஆண்டே நிலைத்துப் போயிற்று.

ஒரு கேள்வி: பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆண்டை திடீரென மாற்றலாமா?

ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. அப்படியானால் தமிழரசு ஒன்று தமிழாண்டுக்கு மீண்டும் மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா? அவனோடு தான் இந்த உலகம் பிறந்ததா? இல்லையே. அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக் கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன் இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க இயலும்?

சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

இது பற்றி ஆரிய பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் கூறுவது:

கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே குறிப்பிடுகிறார்?

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி

கூதிர் யாமம் என்மனார் புலவர்

என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின் மூலம் அறிய முடிகிறது. அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று.

சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர் வைத்துத் தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுக்களில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று. இது தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை.

இதை உணர்ந்து தான் ஏற்கெனவே தெய்வமுரசு இந்த ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றின் பெயர்களை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டிய நெறி முறையின் அடிப்படையில் தமிழ்ப் பெயர்களாக மாற்றிப் பட்டியலிட்டுக் காட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவை தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு ஏற்றுக் கொண்டு வரப்படுகின்றன.

இப்போது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள் தமிழகத்தில் நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழர்களின் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்? அதே போல் அந்தக் கணக்கைத் தமிழர்கள் சிந்தித்துத் தமக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி அநியாயம் ஆகும்? ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும். இனி இதை எப்படி அமைப்பது?

போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள் இரண்டு. இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும்.

இரண்டாவதாக ஆண்டுத் தொடக்கத்தைத் தை முதல் நாளிலிருந்து கணக்கிடுவது.

இதில் முதலாவது ஏற்கெனவே தமிழக அரசின் நாட்காட்டிகளில் நடைமுறைக்கு வந்து விட்டது. அடுத்து அதை ஒட்டிய தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு எனக் கடைப்பிடிப்பது. இதோ, இன்னும் சில நாளில் அரசு முத்திரை அதற்குக் கிடைத்துவிடும் என்பது இனிப்பான செய்தி.

அடுத்து இன்னொரு கேள்வி. ஏன் நச்சினார்க்கினியர் தான் ஆவணியைச் சொல்லி இருக்கிறாரே. மாற்றுவது தான் மாற்றுகிறீர்களே ஆவணி மாதத்திற்கே போவது தானே! இப்போது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் ஒரே நாள் விடுமுறைக்கும் வேட்டு வைக்கிறீர்களே! இப்படி ஒரு கேள்வி எங்கோ ஒரு அரசு அலுவலக மூலையில் இருந்து கேட்கிறது.

விடுமுறையை விடுங்கள். பழைய ஆவணி மாதம் பற்றிய கேள்வி கவனிக்கப்பட வேண்டியதே!

தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது உலகம் என்றார். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்துக் கிடப்பவன் தமிழன். ஆவணி பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை. அந்த மாதத்திற்குச் சற்று முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அடுத்த மாதம் அறுவடை செய்ய முடியுமா? இயற்கை அப்படி இல்லையே. எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே! அப்போது தானே ஆண்டு முழுவதும் அவனக்கு நல்ல படியாக நடந்தேறும். இதையெல்லாம் சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் இந்த மாதத்தில் தான் இயற்கை கூட இனிமையான கரும்பைக் கொடுக்கிறது. தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன்.

சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன. தாயருகா நின்று தவத்தை நீராடுதல் என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு. தையில் நீராடிய தவம்தலைப் படுவாயோ என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59-ஆவது பாடல். நறுவீ ஐம்பால் மகளிராடும் தைஇத் தண்கயம் என்று பாடுகிறது ஐங்குறுநூற்றின் 84-ஆம் பாடல். எனவே தை தவ ஆற்றல் மிக்கது என்பது சங்க நூற்கள் கருத்து. அதனால் வள்ளலார் தமிழர்க்கு ஏற்ற மாதம் என்பதோடு தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால் தைம் மாதத்தைத் தேர்ந்தெடுத்து தைப்பூசத்தில் அருட்சோதி தரிசனம் காட்டினார். தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என்று சம்பந்தரும் தைப்பூசத்தைப் போற்றிப் பாடுகிறார். ஆக உலகியலாலும் அருளியலாலும் இருவகையாலும் மிகச் சிறந்த மாதம் தை. இதுவே ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது.

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!

அப்தம் என்ற வடமொழிச் சொல்லுக்கு முடிவு என்று பொருள். சஷ்டி அப்தம் என்றால் அறுபது நிறைந்தது என்று பொருள். இனி சகம் அப்தமாவதால் சகாப்தத்திற்கு இது சகாப்தம். தொடங்கட்டும் புதிய தமிழ் வரலாறு! பழுதை நீக்கி வந்த பழந்தையே வருக!

Edited by சபேசன்

என்ன இந்தக் குழப்பத்தில கொஞசக்காலத்திற்கு.. இரண்டு நாளும் செலவா இருக்கப்போகுது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.