Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன். சிவகுமாரன்

Featured Replies

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தற்கொடையான

தியாகி பொன்.சிவகுமாரன் நினைவோடு...

அடக்குமுறைக்குள்ளான மக்களின் உரிமைக்குரலாக ஒலித்து, அம்மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்தெழுகின்ற போர்க்குணத்தை மக்கள் மனங்களில் விதைக்கின்ற ஆற்றல் மாணவர் சமூகத்திடம் அதிகமுண்டு.

இன விடுதலைப் போராட்டப் பாதையில் மாணவ சமூகத்தின் பங்களிப்பென்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் மாணவர் சமூகத்தின் பங்களிப்பை பதிவாக்கிய தனியான, தனித்துவம் வாய்ந்த அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இன்று தாயகத்தை மீட்டெடுக்கின்ற இலக்கை நோக்கி விருட்சமாய் வளர்ச்சியுற்று, விடியலின் வாசலை நெருங்கியிருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களும் அதனை வீறுகொண்டு எழுச்சிகொள்ளச்; செய்தவர்களும் அன்றைய மாணவர்களே.

அந்த வகையில் தியாகி பொன்.சிவகுமாரனது பங்கு மிக முதன்மையானது.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாளாகிய யூன் 5ற்கு அடுத்த நாள் (யூன் 6, யூன் 5 உலகச் சுற்றாடல் தினம் என்பதால் சுற்றாடல் தினத்திற்கு மதிப்பளிக்கும் பொருட்டு) தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.

யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர். தமிழ் மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.

தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.

புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய சமாதான காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)

தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்;படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு. இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

* கடந்த ஆண்டுப் (2007) பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ponsivakumaran.gif

அன்றும் இன்றும் என்றும் எம் நினைவுகளில்

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத பெயர்.

  • 11 months later...

நினைவுகளில் சுமந்து ....

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி பொன். சிவகுமாரனைப் பற்றிய நினைவு ஒன்று தமிழ்நாதத்திலிருந்து ........

34 ஆண்டுகள் காலத்துள் கரைந்து சென்றாலும் சிவகுமாரனின் சுவடுகள் ஒளிர்ந்தவண்ணமே உள்ளன.

அவனுடனான நினைவுகளும் என்னுள் கிளர்ந்தவண்ணமே உள்ளன.

1974 ஜனவரி 10 ஆம் நாளில் இருந்து அவனது இறுதிநாளான 1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் வரையில் நான் அவன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாதங்களும் ஈழத் தமிழ் சமூகத்தின் திருப்புமுனைக்கான ஒரு காலகட்டமெனவும் குறிப்பிடலாம்.

பொன்.சிவகுமாரன் தனது மரணத்தின் மூலம் ஈழப் போராட்டத்திற்கு சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப்போராளியாகி ஈழப் போராட்டத்தை முன்நகர்த்தினான். தன் சாவின் மூலம் அன்றைய இளந்தலைமுறையை, தமிழ்ச் சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கினான்.

திரவியம் என வீட்டாராலும் நெருக்கமானவர்களாலும் அழைக்கப்பட்ட சிவகுமாரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உரும்பிராய் கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் 26-08-1950 ஆம் ஆண்டில் பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்தான். (அண்மையில் காலமான சிவகுமாரனின் தாயார் அன்னலட்சுமி நாட்டுப்பற்றாளராய் மதிப்பளிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.) யாழ். இந்துக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியிலும் கல்வியை முடித்தான். யாழ்ப்பாண நகரில் இயங்கிய மீனாட்சி கணக்கியல் கல்லூரியிலும் கற்றிருக்கிறான். சிவகுமாரனைவிட மூன்று வயது இளையவனான நானும் வேறு பல அரசியல் சார்ந்த நண்பர்களும் சிவகுமாரானும் ஒன்றாக அந்த தனியார் கணக்கியல் கல்லூரியில் சிறிது காலம் கணக்கியல் கற்றோம்.

சிவகுமாரன் தனது 24 ஆவது வயதில் 1974 இல் களப்பலியானபோது கலைஞானி ஒளிப்பட கலையகத்தால் வெளியிடப்பட்டு பரவலாக விநியோகிக்கபட்ட படங்களே தற்போது ஊடகங்களால் பயன்படுத்தப்படும் ஒளிப்படங்களாகும். அந்த பால்வடியும் முகம் கொண்ட சிவகுமாரனின் ஒளிப்படம் அவனது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு எடுக்கப்பட்ட அடையாள அட்டைக்கான படமாகும்.

அவன் தனது மாணவப் பருவத்தில் அதாவது 1968 ஆம் ஆண்டில் ஒரு சமூகப் போராளியாகவே அரசியலுக்குள் நுழைந்தான்.

1960-களின் பிற்கூறு இலங்கைத்தீவின் இன்றைய நிலைமைக்கான பல முகிழ்ப்புகளைக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகுஐன இயக்கப் போராட்டங்கள், உலக அளவில் நிகழ்ந்த சீனக் கலாச்சாரப் புரட்சி, பிரான்சில் எழுந்து உலகெங்கும் பரவிய மாணவர் கிளர்ச்சிகள், தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட நவரெத்தினம் அமைத்த சுயாட்சிக் கழகத்தின் தோற்றம், ரசியாவில் ~லுமும்பா| பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ரோகண விஐயவீர இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் தனியான கட்சியை அமைத்தும் இளம் கிளர்ச்சிக்காராக தோற்றம் பெற்றமை போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளை உள்ளடக்கிய காலகட்டம் அது.

இவை யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சிவகுமாரனைப் பாதித்தது ஆச்சரியம்தான். சிவகுமாரன் கம்யூனிசக் கருத்துக்கள் கொண்ட நண்பர்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் சமூக நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். யாழ்பாண குடாநாட்டில் எழுச்சிபெற்ற சாதிய எதிர்ப்பு போராட்டத்தால் சிவகுமாரன் ஈர்க்கப்பட்டான். ஆர்வத்துடன் அதில் பங்கேற்றான்.

சாதிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் உரும்பிராய் வைரவர் கோயிலின் முன்னால் சமபந்தி போசனம் நடத்தினான். அத்துடன் இறப்பு வீடுகளில் பறைமேளம் அடிப்பதை தடுக்கும் வகையில் பறையடிப்பவர்களின் சேர்ந்து பறைமேளத்தை உரும்பிராய் சந்தியில் வைத்து உடைத்து எரித்தான். கோயில்களில் நடாத்தப்படும் வேள்விகளை தடுத்து குரல் கொடுத்தான். மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் நுழைவுப் போராட்டத்திலும் கலந்து கொண்டான்.

இவ்வேளையில்தான் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஐக்கிய முன்னணி அரசமைத்தது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியினை தலைமையாக கொண்ட ஐக்கிய முன்னணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஐக்கட்சியும் இணைந்திருந்தன.

ஐக்கிய முன்னணி அரசில் கல்வியமைச்சராக பதவியேற்ற பதியுதீன் முகமது அவர்கள் பல்கலைகழக நுழைவுத்தேர்வுக்கு புள்ளிகள் அடிப்படையிலான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை எதிர்க்கும் வகையில் மாணவர் பேரவை அமைக்கப்பட்டது. அந்த மாணவர் பேரவையை அமைப்பதிலும் அதனூடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் திரு.சத்தியசீலனுடன் இணைந்து சிவகுமாரனும் முக்கிய பங்கெடுத்தான்.

இந்த ஐக்கிய முன்னணி அரசில் இணைந்திருந்த லங்கா சமசமாஐ கட்சியின் மூத்த தலைவரான கொல்வின் ஆர் டி சில்வாவினால் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பின்படிதான் 1972 மே 22 ஆம் நாளில் இலங்கைத்தீவு சிறிலங்கா பௌத்த குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் இந்த நாளும் மிக முக்கியமான நாளாகும்.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் மாணவர் பேரவை தரப்படுத்தலுக்கு எதிரான கண்டன ஊர்வலத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது.

பின்னர் திருக்கோணமலை, மட்டக்களப்பு நகரங்களிலும் நடாத்தப்பட்டது. இந்நடவடிக்கைகளில் பற்கேற்ற சிவகுமாரன் சாத்வீக நடவடிக்கைளில் திருப்தியுறாமல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.

ஆதலால் பத்திரிகைச் செய்திகளில் அவனது பெயர் அடிபடத் தொடங்கி இருந்தது. யாழ்ப்பாண பிரதான வீதிக்கு அருகே அப்போதைய யாழ்ப்பாண மேயர் துரையப்பாவின் காருக்கு குண்டு வைத்தது, அப்போதைய ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்து குண்டெறிந்தது என்பன போன்ற சம்பவங்களில் அவனது பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இவற்றிற்காக அவன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண விளக்கமறியலில் வைக்கப்பட்டான். இவையெல்லாம் 1970-க்கும் 1972-க்கும் இடைப்பட்ட கால நிகழ்வுகளாகும்.

சிறைக்குள்ளும் அவன் கலகக்காரனாகவே இருந்ததனால் அவன் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தான். அவனது வழக்குகளுக்கான ஒவ்வொரு தவணையின் போதும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவான். அவனது வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் தவணைகளாக இழுத்தடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டான். அப்படியாக யாழ்ப்பாணச் சிறைக்கு கொண்டு வந்த ஓரு பொழுதினில்தான், 1972 மே மாதத்தில் நான் சிவகுமாரனை முதலில் சந்தித்தேன். நான் அப்போது மே 22 ஆம் நாள் குடியரசுப் பிரகடனத்தை எதிர்த்து இடம்பெற்ற கிளர்ச்சியில் கைதானவர்களில் ஒருவனாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்தேன். 1972 இன் இறுதிப்பகுதியில் நாங்கள் எல்லோரும் விடுவிக்கப்பட்டோம். பின்னர் சிவகுமாரனும் பிணையில் விடுதலையானான்.

1973 இன் பிற்பகுதியில் மலையக மக்களுடன் உறவைப் பேணவேண்டும் என்ற வேலைத்திட்டம் இளைஞர் பேரவையால் முன்வைக்கப்பட்டபோது அதில் சிவகுமாரன் ஆர்வத்துடன் பங்கேற்று எங்களுடன் மலையகம் வந்திருந்தான்.

ஒரு மாதத்தின்பின் மலையகத்தில் இருந்து நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பியபோது நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. (மாநாட்டை கொழும்பில்தான் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நெருக்குதல்களை மீறி அமைப்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்த முடிவெடுத்திருந்தனர்) ஆனால் எங்களைப் போன்ற இளம் சமூக ஆர்வலர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கணிக்கப்பட்டிருந்தோம்.

இது எங்களுக்குச் சினத்தை மூட்டியது. சிவகுமாரன் தலைமையில் யாழ்ப்பாண பிரதான வீதியில் அமைந்திருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் செயலகத்திற்குச் சென்றோம். மாநாட்டுப் பொறுப்பாளர்களைச் சந்தித்து நாங்களும் பங்களிக்கும் வகையில் செயல் திட்டத்தை வகுக்கும்படி கோரினோம்.

முதலில் அவர்கள் மறுத்தார்கள். அப்படியானால் எங்கள் பங்களிப்பு இல்லாமல் மாநாடு நடைபெற முடியாது என சிவகுமாரன் எச்சரித்தான். அதன் பின் தொண்டர் அமைப்பில் எங்களையும் இணைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. சிவகுமாரன் பொறுப்பாளர்களில் ஒருவனாக அறிவிக்கப்பட்டான். நானும் வேறு பல நண்பர்களும் தொண்டாராகப் பணியேற்றோம்.

1974 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 10 ஆம் நாளில் இறுதி நாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றும் பொதுக்கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக மக்கள் ஆதரவு இதற்குக் கிடைக்கும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை.

ஆதலால், சில நூற்றுக்கணக்கானவர் கலந்து கொள்ளக்கூடிய வீரசிங்கம் மண்டபத்தைப் பொதுக்கூட்டத்திற்கு ஒழுங்குபடுத்தியிருந்தனர். ஆனால் மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே எழுச்சியைத் தோற்றுவித்துவிட்டது.

ஆதலால் யாரும் எதிர்பாராத வகையில் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கணக்கில் மக்கள் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கிவிட்டனர். மண்டப ஒழுங்கைக் கவனித்துக் கொண்டிருந்த தொண்டர்களாகிய எங்களுக்கு நிலமையின் தீவிரம் தெரியத் தொடங்கி விட்டது.

உடனடியாக சிவகுமாரன் எங்களை அழைத்து மாற்று வழிகளை யோசிக்கும்படி கோரினான். அப்போதுதான் நாங்கள் கூட்டத்தை எல்லாப் பொதுமக்களும் பார்க்கவும் கேட்கவும் வசதியாக மண்டபத்திற்கு வெளியே நடத்தக் கோருவதென்று தீர்மானித்தோம்.

எங்கள் அழுத்தம் காரணமாக அமைப்பாளர்கள் வெளியே கூட்டம் நடாத்தச் சம்மதித்தனர். நாங்கள் வெளியே கட்டப்பட்டிருந்த சிகரத்தற்குக் கீழே வாங்குகளை அடுக்கி தற்காலிக மேடை அமைத்தோம். வீரசிங்க மண்டபக் கட்டடத்தின் சிறு முற்றம் அதற்கும் எதிரே கோட்டைச் சுவரில் இருந்து சரிவாக அமைந்த புல்வெளி. இதனைப் பிரித்தபடி தார்ச்சாலை. நாங்கள் மேடைக்கு அருகே இருந்தோம்.

தார்ச்சாலை புல்வெளி எங்கும் மக்கள் தலைகளே தெரிந்தன. திருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசத் தொடங்கினார். நாங்கள் பேச்சை இரசிக்க தொடங்கியிருந்தோம். அப்போதுதான் அந்த நாமெல்லாரும் அறிந்த துயரம் நிகழ்ந்தது. மேடையின் இடது பக்கத்தே அதாவது, புல்லுக்குளம் பக்கத்தே சலசலப்பு ஏற்பட்டது. பொலிசார் அமர்ந்திருந்த மக்களை கலைக்க முயற்சித்தித்து கொண்டிருந்தனர்.

சலசலப்பு உடனேயே அல்லோல கல்லோலமாக மாறத்தொடங்கியது. மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர். மேடையில் இருந்தவர்கள் மக்களை அமைதியாக இருக்கும்படியும் பொலிசாரை விலகிச் செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது.

மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர். அவ்வேளையில்தான் அது நடந்தது. தொண்டர்கள் என்ற நிலையில் மேடையின் அருகே இருந்தோம் என்பதால் எல்லாவற்றையும் எங்களால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. அந்த மேடை அமைக்கப்பட்டிருந்த சிறு முற்றத்தையும் தார்த்தெருவையும் பிரித்த மறிப்புக் கம்பியை தாண்டுவதற்காக ஒருவர் தொட்டபோதே எங்களைப் பார்த்து அலறியபடி வீழ்ந்தார்.

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் இருந்து மின் ஒழுக்கு அந்த மறிப்பு கம்பியிலும் பரவியிருப்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். ஆதலால் அதனைத் தொடவேண்டாம் என்று நாங்கள் கத்தித் தடுத்துக் கொண்டிருந்த போதும் அதைத் தொட்டவர்கள் அலறியபடி செத்து வீழ்ந்தார்கள்.

எல்லாம் அடங்கிய இறுதி நேரம் வரையில் நானும் சிவகுமாரனும் அங்கிருந்தோம். இதற்குப் பழிக்குப் பழி வாங்குவதென்று நாங்கள் இருவரும் சபதம் செய்து கொண்டோம். காலையில் சந்திப்பதற்கான இடத்தையும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனால் விடிவதற்கு முன்பாகவே நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசி விட்டான். பொலிசார் காயமடைந்தார்கள்;. சிவகுமாரன் தேடப்படுபனாக மாறிவிட்டான். இது அவனது குண இயல்பை விளக்க போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் துயர நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் மா அதிபர் சந்திரசேகரவை பழிவாங்குவதே எங்களின் நோக்கமாக இருந்தது. மிகச் சரியான அந்தத் திகதி எனக்கு நினைவில் இல்லை.

கைலாசப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் சந்திரசேகரவை மறித்துக் கொலை செய்வது என்பது எங்கள் திட்டமாக ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி எங்களுக்குப் பாரிய தோல்வியையே தேடித்தந்தது.

சந்திரசேகரா உயிர் தப்பிவிட்டான் சிவகுமாரன் மிக உயர் தேடலுக்கு உரியவனாக அறிவிக்கப்பட்டான். அவனது தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1974 ஆம் ஆண்டில் அவனது ஊரான உரும்பராய் கிராமம் எழுநூறு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டைக்கு உள்ளானாது. இன்றைக்கு போராட்டம் முதிர்ந்த நிலையில் இவையெல்லாம் சாதாரணமாக இருக்கக்கூடும்.

இந்நிலையில் சிவகுமாரனை இந்தியாவுக்கு அனுப்ப முடிவெடுத்தோம். அவ்வேளையில் தரமான கருவிகள் வாங்குவதென்றும் எண்ணியிருந்தோம். இரகசிய கடல்வழி பயணத்திற்குத் தேவையான பணம் எம்மிடம் இருக்கவில்லை. பணம் தேடும் வேறு முயற்சிகளை ஆராயத் தொடங்கினோம். கோப்பாய் கிராமிய வங்கி எங்கள் கவனத்திற்கு வந்தது.

1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் காலை 10:00 மணியளவில் மருதனார்மடத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட வாடகை வண்டியில் உரும்பிராயில் இருந்து நாங்கள் நால்வர் (சிவகுமாரன், மகேந்திரன், ஜீவராசா, நான்) கோப்பாய் நோக்கி பயணித்தோம். எங்கள் திட்டம் சொல்லளவில் மிகச் சிறந்ததாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் இறங்கியபோது கட்டுத் தோட்டாக்கள் கொண்ட எங்கள் ஆயுதங்கள் எதுவும் ஒத்துழைக்கவில்லை. ஒன்று பிழைக்க மற்றவையெல்லாம் குழப்பமாகிவிட்டன.

எங்கள் கால்களை நம்பி குடிமனைகளுக்கு ஊடாக ஓடத்தொடங்கினோம். கொள்ளைக்காரர் என்றபடி ஊர்மக்கள் எங்களைத் துரத்தத் தொடங்கினர். கற்காளால் எறியத் தொடங்கினர். ஊர்மனை தாண்டி தோட்டப்பகுதிக்கு வந்துவிட்டோம்;. வெடிக்காத கட்டுத் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியைக் காட்டி துரத்தி வருபவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நாம் யார், எதற்கு வந்தோம் என்பதை விளங்கப்படுத்தினோம்.

சிவகுமார் தன்னை அறிமுகப்படுத்தியதும் சிலருக்கு அவனைத் தெரிந்திருந்தது. நாங்கள் மெதுவாக ஆசுவாசப்படுத்தியபடி நீர்வேலி நோக்கி தோட்ட வரப்புகள் வழியே நடக்கத் தொடங்கினோம். ஊர்மக்கள் பின்னே எங்களைப் பார்த்தபடி நின்றிருந்தனர். நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் எதிரே மண்பாதையில் விரைந்து வந்த பொலிஸ் வாகனங்கள் எங்களை வழிமறித்தன. பின்னால் திரும்பிய போது அங்கேயும் பொலிசார் எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நாங்கள் முற்றுகைக்குள் மாட்டப்பட்டோம். இப்போது எல்லோரது கைகளிலும் இருந்த குண்டுகள் இல்லாத ஆயுதங்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. நால்வரும் ஓன்றாகப் பிடிபடாமல் நான்கு திசையில் பிரிந்து செல்வதுபோல் போக்கு காட்டுவதென்றும் தீர்மானித்துக் கொண்டோம். இதனால் சிவகுமாரன் உட்பட எல்லோரும் தப்ப முடியுமென்று நம்பினோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக சிவகுமாரனே பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டான்.

ஏறத்தாழ நண்பகல் நேரம். உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி சூரியன். மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியால் குறிபார்த்தபடி காக்கிச் சட்டைக் காவலர்கள் சூழ்ந்து நின்றனர். இனித் தப்ப வழியில்லை என்னும் நிலையில் தன் சட்டைப்பையில் இருந்த சிறிய வெற்று வாசனைத் திரவிய குப்பிக்குள் பத்திரப்படுத்தியிருந்த சயனைட்டை அவன் அருந்தினான்.

ஈழப்போராட்டத்தின் முதல் வித்தாய், முன்னறிவித்தவனாய், மாணவர் - இளைஞர் எழுச்சியின் குறியீடாய் மாறிப்போனான் சிவகுமாரன்.

'சாத்வீகப் பாதையில்

சந்தி பிரித்தாய்

கால வெளியில்

சுவடுகள் பதித்தாய்

காலக் கரைவிலும்

உந்தன் சுவடுகள்..."

பொன் சிவகுமாரனின் 15 ஆவது ஆண்டு நினைவின்போது அதாவது 1989 ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இவை.

கி.பி.அரவிந்தன்.

http://www.tamilnaatham.com/articles/2009/...an_20090605.htm

தமிழ்த் தாய் பெற்றெடுத்த தங்கமகன் பொன்.சிவகுமாரன். எம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவரைப் பற்றிய ஒரு சிறந்த பதிவு இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவகுமாரன் தமிழர்களால் என்றுமே மறக்கமுடியாத ஒரு பெயர்.

தியாகி சிவகுமாரன் குறித்து வளரி வலைக்காட்சிக்கு கி.பி.அரவிந்தன் அவர்கள்

வழங்கிய நினைவுப் பகிர்வு.

http://www.valary.tv/?p=1176

Edited by அகரன்

  • கருத்துக்கள உறவுகள்

பொன்.சிவகுமாரன்............ !

வெறும் பெயரல்ல

விடியலுக்காய் வழிசெய்த

வரலாற்றுப் பெரு நெருப்பு !

புலம்பெயர் மாணவர்காள்

புரிந்து கொண்டு ஒன்றிணைவீர்

புதியதொரு பாய்ச்சலுடன்

உங்கள் கரமிணைந்தால்

உயரும் எம் தேசக் கொடி !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.