Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவு நனவாகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனவு நனவாகிறது!

- பழ. நெடுமாறன்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், கவிஞர் கண்ணதாசன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவ்வப்பொழுது அப்பிரச்சினை குறித்து தனது பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார். இலங்கையில் அமைச்சராக இருந்தவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான எஸ். இராசதுரை அவருக்கு மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார். 1955-ஆம் ஆண்டில் இராசதுரையின் அழைப்பினை ஏற்று இலங்கைத் தமிழர் பகுதிகளில் கவிஞர் கண்ணதாசன் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கூட்டங்களில் பேசினார். ஈழ நாட்டுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமையை அறிந்துவந்த பிறகு அப்பிரச்சினையில் கவிஞரின் ஈடுபாடு மேலும் அதிகமாயிற்று.

ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தபொழுது "இலங்கைத் தமிழர் பிரச்சினை அன்னியநாட்டின் உள்நாட்டுப்பிரச்சினை. அதில் இந்தியா தலையிட இயலாது" எனக் கூறியதற்குக் கவிஞர் கடும் கண்டணத்தைத் தெரிவித்தார். அப்பொழுது "தென்றல்" இதழில் அவர் எழுதிய கனல்பறக்கும் கவிதையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"கொதிக்கின்ற நெஞ்சத்தைத் தேற்றுவார் யார்?

குமுறி எழும் கண்ணீரை நீக்குவார் யார்?

வதைக்கின்ற முள்வேலி மாற்றுவார் யார்?

வாடிவிழும் நிலைமாற்றி வழங்குவார் யார்?

கதியின்றித் திகைக்கின்ற தாயும் சேயும்

கால்பார்த்து நடக்கின்ற மாத ராரும்

சதிக்கூட்டம் மத்தியிலே புறாக்கூட்டம் போல்

தடுமாறும் நிலைமாற்ற வல்லார் யார்? யார்?

நம்பியதோர் பண்டிதரும் காலை வாரி

நட்டாற்றில் விட்டாரோ! தமிழா! உன்றன்

கும்பியிலே தீயள்ளிப் போட்டா ரேடா!

கும்பிடு நீ வடதிசையை நோக்கி நோக்கி!

தம்பிகளே! காங்கிரசுச் சாம்பி ராணித்

தமிழர்களே! புளியமரம் அருகில் உண்டா!

கயிறொன்று நான்தரவா? முடிவு கொள்வீர்!

வடநாடா, தென்னாடா? யாரி னினத்தார்

வாழ்கின்ற மாந்தரெலாம் ஓரினத்தார்!

நடவாது, நடவாது பிரிவி னைத்தீ

நம்நாட்டைப் பாழாக்கும் விடவே மாட்டோம்!

படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்

பண்டிதரோ அவர்வாயைத் திறக்கக் கூறிப்

பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்

பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்.

அருங்குலத்தீர்! நம்மவரை நாமே காப்போம்!

அவதியுறச் சேயீன்ற அன்னை அல்லால்

பெருமலடி அறிவாளோ பிள்ளைப் பாசம்!

பேடிகளை நம்புவதால் தேற்ற முண்டோ?

வருவதெல்லாம் நமக்கேதான்! மாற்றி வைக்க

வல்லவரும் நாமேதான்! வடக்கிருந்து

வருவோரை உதைத்தோட்டி, இலங்கை விட்டு

வருவோரை அங்கங்கே வாழ வைப்போம்!

இலங்கைத் தமிழர்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் பல்வேறு இன்னல்களுக்கு நமது முன்னோர்களின் முன்யோசனையற்ற செயலே காரணம் என்று கவிஞர் கருதினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கைத் தீவை வென்று அங்கு தங்கள் கொடியை பறக்கவிட்ட பாண்டியரும் சோழரும் அந்நாட்டினை நிரந்தரமாக ஆண்டு வந்திருந்தால் இன்று இந்த இழிநிலை வந்திருக்காதே என்றும் அவர் அங்கலாய்த்தார். இதைப்பற்றி தென்றல் இதழில் "இலங்கையில் வாழும் என் தமிழ்த் தோழி" என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

படைகொண்டு மோதி வென்ற

பாண்டியர் ஈழநாட்டில்

விடைகொண்டு திரும்பி டாமல்

வேரூன்றி நின்றிருந்தால்

கடைதாவிக் குதிக்கு மிந்தக்

காடையர் வாழ்க்கை நின்று

நடை தேய்ந்துபோயிருக்கும்

நம்மவர் செய்தாரில்லை!

இலங்கையை வென்ற பின்னர்

இராசரா சனும்தி ரும்பி

இலங்கிடும் சோழநாட்டிற்(கு)

ஏன்வந்தான்? ஈழமண்ணில்

துலங்கிடும் கொடிஎந் நாளும்

சோழரின் கொடியே யாக

விளங்கிடச் செய்திடாமல்

விட்டவன்! தவறே செய்தான்!

பிடித்ததை விட்டார்: நம்மைப்

பிடித்தவர்க் கடிமை யானார்!

கெடுத்தனர் முன்னோர்! அந்தக்

கீழ்மையால் புவியெ லாமும்

படுத்தனன் தமிழன்! அந்தப்

பாவிகள் செய்த "பாவம்"

அடுத்தநம் தலைமுறைக்கும்

அவதியைத் தந்த தன்றோ?

இந்திரா காங்கிரசில் அவர் அங்கம் வகித்த காலத்திலும்கூட ஈழத் தமிழர் பிரச்சினையில் பிரதமர் இந்திரா செய்த தவற்றைச் சுட்டிக்காட்ட அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. பிரதமர் இந்திராவை தனது இணையற்ற தலைவியாக ஏற்றுக்கொண்டிருந்த கவிஞர் ஈழத் தமிழர் பிரச்சினையில் அவர் காட்டிய அலட்சியத்தைக் கண்டு மனம் கொதித்தார். 73-ஆம் ஆண்டில் இலங்கைத் தீவுக்குச் சென்ற பிரதமர் இந்திரா, தமிழர் தலைவர் எஸ்.ஜெ.வி. செல்வநாயகம் அவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் எந்தக் காரணமும் கூறாமலேயே அந்தச் சந்திப்பை இரத்து செய்துவிட்டார். இதைக்கண்டு கவிஞர் சினந்து எழுந்தார். "கண்ணதாசன்" மாத இதழில் பின்வரும் தலையங்கத்தை அவர் தீட்டினார்.

"இலங்கைத் தமிழர் பிரச்சினையை இந்திய அரசு அலட்சியப்படுத்திவிட்டதாகத் தோன்றுகிறது.

"இலங்கைக்குச் சென்ற இந்தியப் பிரதமர் தமிழர் தந்தை செல்வநாயகத்தைச் சந்திப்பதற்கு ஒருநேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் காரணம் கூறாமலேயே அதை அவர் இரத்து செய்தார். எப்படிப் பேசினால் திருமதி பண்டார நாயக்காவுக்குப் பிடிக்குமோ அப்படிப் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்

இலங்கையில் தமிழர்களைத் தூக்கிலிடுவதற்குச் சமமாகத் தயாரிக்கப்பட்ட இலால்பகதூர்-சிரிமாவோ ஒப்பந்தத்தை அவர் அங்கீகரித்து தமிழர்களைத் துரிதமாகத் திருப்பி அழைத்துக்கொள்வதற்கு வாக்குறுதியும் அளித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களின் வேதனையைத் தீர்ப்பதற்கு ஒரு சமிக்ஞையைக் கூடக் காணோம்.

இந்த அலட்சியப் போக்கை நாம் சகிக்க முடியாது.

இலங்கைக் குடியரசு நாளை, இலங்கைத் தமிழர்கள் துக்க நாளாகக் கொண்டாடியதுபோல, இந்தியச் சுதந்திர தினத்தை நாமும் துக்க நாளாகக் கொண்டாடினால் என்ன?

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தாயகத் தமிழர்கள் ஏதேனும் முயற்சி எடுக்காவிட்டால், கொடிய நரகத்தில் உழலும் நமது சகோதரர்களுக்கு வேறு விமோசனமே கிடையாது.

தாயகத் தமிழர்கள் கட்சி வேறுபாடில்லாமல் இதில் ஒன்றுபட வேண்டும்.

நம்முடைய கடும் எதிர்ப்பைப் பண்டார நாயக்காவுக்கும் இலங்கைத் தமிழர்களிடம் நமக்குள்ள அக்கறையையும் பாரதப் பிரதமரிடம் தெரிவிப்பதற்கும் நமக்குள்ள ஒரே வழி வரும் சுதந்திரத் திருநாளைத் துக்க நாளாகக் கொண்டாடுவதுதான் என்று நான் நினைக்கிறேன். வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள்".

அமைதியான வழிகளில் எவ்வளவோ போராடிப் பார்த்தும் ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியாது தவிப்பது கண்டு கவிஞர் மனம் குமைந்தார். தந்தை செல்வாவின் தலைமையில் ஈழத் தமிழர்கள் நடத்தி வந்த அறப்போராட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு அளித்துப் பேசினார், எழுதினார். ஆயுதப் போராட்டம் பற்றி ஈழத் தமிழர்கள் நடுவில் சிந்தனையே இல்லாத வேளையில் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தூக்குவது தவிர வேறு வழியில்லை என்று கவிஞர் எழுதினார். எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் அவர் இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது.

தென்றல் இதழில் இது குறித்து பின்வருமாறு எழுதினார்:

குன்றத்தில் உச்சியேறிக்

கொடும்புலி பாம்பு கொன்று

அன்றந்த இலங்கை நாட்டை

ஆக்கினான் உனது பாட்டன்

இன்றந்த நாட்டில் நீயும்

என் தமிழ்த் தோழர் தாமும்

நன்றிகொள் நாடாள்வோ ராலே

நலிவுற நேர்ந்த தென்றால்

என்னயான் சொல்வேன்? வாழும்

இருபது இலட்சம் பேரும்

என்னவர்! எனது மூச்சு!

இழைபிரித் தெடுத்த பாகம்!

அன்னமே வருந்த வேண்டாம்

அழிவது தமிழே என்று

சொன்னவர் அழியுமாறு

துவக்குக போரை! வெல்வோம்!

குருதியே ஓடி னாலும்

கடல்நிலம் சிதைந்தபோதும்

பரிதியில் மாலை வண்ணம்

படைத்தது மண்ணென் றாலும்

வருதுயர் தமிழர்க் கென்றே

"வாழிய" பாடல் பாடி

உறுதியில் இறங்கு! வெற்றி

உனக்கிது! இயற்கை வேதம்!

மொழியின்றி விழிகளில்லை

மூச்சில்லை பேச்சு மில்லை!

கழிசடை உடைமை யாளர்

கருவிலே கயமை தோய்ந்தோர்

இழிமொழி வீசினாலும்

எடுபிடி வேலை செய்து

அழிவுனக் கீந்த போதும்

அஞ்சிடேல் பண்பு குன்றேல்!

நாமெல்லாம் தமிழ் மக்கள்

நமக்குநாம் பாது காப்பு!

நாமெல்லாம் அழிவ தால்ஓர்

நாட்டினர் வாழ்வாரென்றால்

நாமெல்லாம் வாழ்வதற்கந்

நாட்டினர் அழிதல் நீதி!

நாமெல்லாம் அழிந்து எந்த

நாடிங்கு வாழும்! பார்ப்போம்!

தமிழர்கள் கெடுவ தொன்றே

தரணியில் முறையா? தூய

அமிழ்தொழித் தரக்கர் கூட்டம்

ஆள்வது சரியா? இல்லை!

தமிழுக்கும் தமிழருக்கும்

தடைபோடும் வெறியர் தம்மை

இமைவேறு கண்கள் வேறாய்

இருநூறு துண்டங் காண்போம்!

ஈழத் தமிழரை புறநானூற்றுத் தமிழராக மாறும்படி எழுதிய கவிஞர் அந்தக் கவிதையில் தனது எதிர்காலத் திட்டத்தை வெளியிடுகிறார். தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டம் துவக்கப்பட்டு வெற்றிபெற்ற பிறகு தமிழ்நாட்டின் விடுதலைக்காகவும் அடுத்தகட்டப் போராட்டம் தொடங்கப்படவேண்டும் என்று தனது திட்டத்தினை அவர் வெளியிட்டார். இதைப் பற்றி அவர் எழுதும்பொழுது பின்வருமாறு குறிப்பிட்டார்:

"அங்கு நீ போர்துவக்கு!

அடுத்தபோர் தமிழர் நாட்டில்!

இங்குநம் மொழியைத் தாக்கும்

இந்திக்குப் பாடை கட்டி

சங்கொடும் பறைமுழக்கி

சட்டியில் கொள்ளி தூக்கி

அங்குல எலும்பு கூட

அகப்படா தழிப்போம்! உண்மை!

தமிழீழத்தில் பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தொடங்குவதற்கு நெடுநாட்களுக்கு முன்னேயே ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஆயுதம் தாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்த கவிஞர் அதைத் தெளிவாக எழுதியது அவரது மன ஓட்டத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

"வீரமைந்தர் வேலொடும் தோன்றுக

வேங்கையென்று பெயர்பெற வாழுக"

எனப் பாடினார் கவிஞர். அவர் பாடியபடியே வேங்கைகள் தோன்றினார்கள். அவர்களின் போராட்டம் பற்றியும் கவியரசர் கனவு கண்டார்.

"ஏ ஓய் தமிழா! ஏ ஓய் தமிழா!

எழில், கலை, காதல் ஒதுக்கி மூடிவை!

நாடெனும் வானொடு முட்டுக போரை!

அழிவதில் இப்பணிக் கழிவதே பெருமை!

வீடணக் குழாத்தை வேரொடு சாய்ப்பாய்!

குருதியில் குளிப்பாய்! கொற்றவர் ஆண்ட

திருவினை நாட்டை மீட்பதில் அழிவாய்!

அவர் கனவு அப்படியே பலித்தது. குருதியில் குளித்தவண்ணம் புலிகள் தங்கள் திருநாட்டை மீட்கப் போராடி வருகிறார்கள். எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் தலைமையில் தமிழீழ இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள். இருபது ஆண்டுகளில் அந்தப் போராட்டம் வளர்ந்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 20 ஆண்டுக் காலத்தில் இந்தப் போராட்டம் எத்தகைய மகத்தான வெற்றிகளை ஈட்டியிருக்கிறது என்பதைக் கவிஞர் இன்று இருந்து பார்த்திருந்தால் எவ்வளவு மனம் பூரித்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகிறது. தம்பி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் நடத்திவரும் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஒரு வீரகாவியமே இயற்றியிருப்பார் என்பதில் ஐயம் இல்லை.

தென்செய்தி

இணைப்பிற்கு நன்றி கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசன் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தென் செய்தி பத்திரிகையில் இருந்து

kannadasaneelamzw4.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.