Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"நான் கடவுள்" - ஒரு பார்வை

Featured Replies

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆறு மில்லியன் யூத மக்கள் கிட்லரின் நாசிப் படைகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான யேர்மனிய மக்களும் நாசிகளால் கொல்லப்பட்டார்கள். இந்த யேர்மனிய மக்கள் எதிரிகளோடு கூட்டுச் சேர்ந்தார்கள் என்பதற்காகவோ, நாட்டைக் காட்டிக் கொடுத்தார்கள் என்பதற்காகவோ கொல்லப்படவில்லை.

வாழ "இயலாத" ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நாசிகளால் "வரமாக" மரணம் வழங்கப்பட்டது.

இந்த "வரம்" 1940இல் இருந்து 1941 வரை முழுவீச்சில் வழங்கப்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், உடல் உறுப்பு ஊனம் உள்ளவர்களும் ஆயிரக்கணக்கில் அள்ளிச் செல்லப்பட்டு, முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள். இவர்களைக் கொல்வதற்கு பெரும்பாலும் விசவாயு பயன்படுத்தப்பட்டது.

உதாரணமாக யேர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள "கொமடிங்கன்" என்னும் இடத்தில் "கிராவெனெக்" என்னும் காப்பகத்தில் 10654 பேர் இப்படி விசவாயு வைத்துக் கொல்லப்பட்டார்கள். தம்மை ஏன் கொண்டு வந்தார்கள், என்ன செய்யப் போகிறார்கள், ஏன் வலிக்கிறது, ஏன் மூச்சுத் திணறுகிறது என்று எதுவுமே தெரியாமல் இவர்கள் இறந்து போனார்கள்.

இவர்களைப் போன்று வேறுபல இடங்களிலும்; ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் இதே போன்று கொல்லப்பட்டன. தூய்மையான ஆரிய யேர்மனிய இனத்தை காண விரும்பிய கிட்லர் செய்த வெறிச் செயல் இது.

இந்த வெறிச்செயலுக்கு நாசிகள் வைத்த பெயர் "கருணை மரணம்" அல்லது "விடுவிக்கும் மரணம்" என்பதுதான். வாழ முடியாத இந்த மக்களுக்கு செய்கின்ற ஒரு நல்ல செயலாகவே இதை அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இந்த மக்களை தங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்த விரும்பிய மருத்துவர்களும் இந்த வெறிச் செயல்களை ஆதரித்தார்கள்.

யுத்தம் முடிந்த பிற்பாடு கூட "இது மனிதத்திற்கு எதிரான குற்றம் அன்று" என்று ஒரு மருத்துவன் வாதிட்டான். மனிதர்களுக்கு எதிராக செய்யப்படுவதே மனிதத்திற்கு எதிரான குற்றம் என்றும், மனிதர்களுக்குள் அடங்காத உயிரினங்கள் மீது அவைகளின் நன்மை கருதி செய்யப்பட்டதை மனிதத்திற்கு எதிரான குற்றமாக கருத முடியாது என்றும் அவன் வாதிட்டான்.

மனிதர்களாக கருத முடியாத, வாழ்வதற்கு இயலாத இந்த உயிரினங்கள் அவலம் மிகுந்த வாழ்க்கையில் இருந்து விடுவிக்கப்படும் வரத்தைப் பெற்றார்கள் என்பதே நாசிகளின் கருத்து.

--------------------------------------

பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலமே தன்னுடைய படங்களை வித்தியாசப்படுத்தியும், பேசவைத்தும் வெற்றிப் படமாக்குவதில் இயக்குனர் பாலா வல்லவர். ஆனால் நான் கடவுளில் அவர் கொடுக்க நினைத்த அதிர்ச்சி கடைசியில் அபத்தமானதாகவும் அருவருப்பானதாகவும் மாறி விட்டது.

இயக்குனர் பாலா "சேது" என்ற முதல் படத்திலேயே எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்தவர். தமிழ் சினிமா காட்டாத, காட்ட விரும்பாத இடங்களுக்கு எல்லாம் பார்வையாளனையை அழைத்துசக் கொண்டு செல்பவர் பாலா.

சேது படத்தில் பாண்டி மடத்தைக் காட்டிய போதே இது புரிந்து விட்டது. பல வசதிகளைக் கொண்ட மருத்துவ மனைகளில் வெள்ளை உடைகளோடும், நகைச்சுவைப் பாத்திரங்களாகவும் மட்டுமே மனநலம் குன்றியவர்களை தமிழ் சினிமா காட்டிக் கொண்டிருக்க, பாலாவோ யாருமே போகாத பாண்டிமடத்திற்கு எங்களைக் கூட்டிக் கொண்டு போனார்.

பிதாமகனில் இடுகாட்டையும் அங்கேயே வளர்ந்த ஒரு மனிதனையும் காட்டினார். தற்பொழுது நான் கடவுளில் பொதுவான மனிதர்களுக்கு பரிச்சியம் இல்லாத இரண்டு உலகங்களை பாலா காண்பிக்கின்றார். ஒன்று காசியில் உள்ள சாமியார்களின் உலகம். மற்றது உடல் நலன் குன்றிய பிச்சைக்காரர்களின் உலகம். காசி பற்றி மனிதர்கள் சற்று அறிந்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பிச்சைக்காரர்களின் உலகம்...? இப்படி ஒரு உலகம் இருப்பதை அறியாத, அல்லது அறிந்து கொள்ள விரும்பாத மனிதர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிதான்.

அதிர வைக்கும் கதைக் களங்களோடு கதையின் நாயகர்களாக பாலா படைக்கின்ற பாத்திரங்களும் ஒரு வகைப்பட்டதாகவே இருக்கும். ஒரு வகை மனப் பிறள்வோடு கூடிய பாத்திரங்களாக அவைகள் இருக்கும். இப்படி இருப்பதற்கு பாலாவின் வாழ்க்கையும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

பாலா தான் முன்பு ஒரு தாதா போன்று வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தாதா என்பவன் யாருக்கும் கட்டுப்படாதவன். சமூகத்திற்கோ, அதிகார வர்க்கத்திற்கோ, குடும்பத்திற்கோ அவன் அடங்கியவன் அல்ல. அதிகார வர்க்கத்திற்கு அடங்கிய கூலிகளாக செயற்படும் தாதாக்கள் உண்டு என்றாலும், பல தாதாக்கள் யாருக்கும் அடங்கமால் இருப்பதையே விரும்புபவர்கள்.

சேதுவில் தறுதலையாகத் திரியும், குடும்பத்தின் சொற் கேளாத ஒருவனை பாலா கதாநாயகன் ஆக்குகின்றார். நந்தா படத்தில் எல்லோரையும் அடித்து உதைக்கும் ஒரு ரௌடியை கதாநாயகன் ஆக்குகின்றார். ஆனால் பாலாவிற்கு திருப்தி ஏற்படவில்லை.

சேதுவிலும், நந்தாவிலும் வந்த நாயகர்கள் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள். வேறுவழியின்றி சட்டத்திற்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். இவைகளில் இருந்தும் விடபட்ட கதாநாயகர்களை பாலா தன்னுடைய அடுத்த படங்களில் உருவாக்குகின்றார்.

பிதாமகனில் பாசம் என்றால் என்னவென்று தெரியாத அத்தோடு சட்டம், சமூகம் என்று எதற்கும் அடங்க மறுக்கின்ற சித்தன் இடுகாட்டில் இருந்து வருகின்றான். சிரிப்பு, அழுகை என்ற மனித உணர்வுகளுக்கும் அவன் அடங்கியவன் அல்லன். ஆயினும் நட்பு என்பதற்கு அடங்கி அப்படியே சிரிப்பு, அழுகை என்னும் உணர்வுகளுக்கும் சித்தன் அடங்குகின்றான். ஒரு நேரத்தில் சட்டமும் அவனை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்துக் கட்டுப்படுத்துகின்றது.

சேது, நந்தா, சித்தன் என்னும் படிகளில் இப்பொழுது அடுத்த படியாக ருத்ரனை பாலா உருவாக்கியிருக்கிறார். பாலாவின் மற்றைய நாயகர்களுக்கு இருந்து தளைகளில் இருந்து ருத்ரன் முற்றிலுமாகவே விடுபட்டவன். பாசம், சமூகம், சட்டம் என்று எதனாலுமே கட்டுப்படுத்த முடியாத ஒருவன் ருத்ரன்.

சித்தனால் அதிகார வர்க்கத்தை (காவல்துறை) அடித்து உதைக்க முடிந்தது. ஆனால் பணிய வைக்க முடியவில்லை. சட்டத்தை அலட்சியம் செய்து அதை தாண்டிச் செல்ல முடியவில்லை. ஆனால் ருத்ரனால் அது முடிந்தது. நீதிமன்றத்தைக் கூட ருத்ரன் அலட்சியம் செய்கிறான். காவல்துறை பணிந்து குழைந்து ருத்ரன் இருந்த இடத்திற்கே வந்து விசாரணை என்ற பெயரில் வணங்கி விட்டுப் போகின்றது.

பாலா என்னும் தாதாவின் அடிமனக் கனவுகள் பாத்திரங்களாக உருவெடுப்பதை பார்க்கின்றோம்

--------------------------------------

பாலாவின் படங்களில் படத்தின் கதை பேசுவதை விட காட்சிகள்தான் பேசும். நான் கடவுளும் அப்படித்தான். ஒவ்வொரு காட்சியும் பார்த்து நாம் வியந்து போய் நிற்கின்றோம். இடைவேளை வந்தது கூடத் தெரியவில்லை. படத்தின் கதை பற்றி சிந்திக்கக் கூட நேரம் இல்லை. யாருக்கும் அடங்காத ஒரு கதையின் நாயகனும், சமூகம் பார்க்க மறந்த ஒரு களமும், இவைகளைக் கொண்ட அற்புதமான காட்சிப்படுத்தல்களும்தான் பாலாவின் திரைப்படங்கள்.

பாலா தன்னுடைய திரைப்படங்களின் மூலமாக சமூகத்திற்கு செய்தி சொல்ல விரும்புவதாக நான் நினைக்கவில்லை. சிலருடைய கதைகளில் ஒரு செய்தி இருக்கும். ஒரு நோக்கம் இருக்கும். பாலாவின் கதைகள் சோகங்களையும் அவலங்களையும் சொன்னாலும் அவற்றிற்கு தீர்வு சொல்லும் வேலையை பாலா செய்வது இல்லை. எந்த ஒரு நோக்கமும் இன்றி புதிய பாத்திரங்களையும், திருப்பங்களையும் கொண்ட காட்சிகளை சுவையாகச் சொல்லிக் கொண்டு போவதே பாலாவின் பாணி.

ஆனால் நான் கடவுளில் பாலா தெரிந்தோ தெரியாமலோ தீர்வு ஒன்றைச் சொல்லும் வேலையில் இறங்கி விட்டார். பார்வையாளனுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்ததாலோ என்னவோ, அந்த அபத்தத்தை செய்து விட்டார்.

எந்த இனமாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்கள் உடல் நலம் குன்றிய பிச்சைக்காரர்கள். இவர்களின் அவலங்களை பேச முற்பட்ட பாலா, இவர்களின் அவலங்களுக்கான தீர்வை பார்வையாளனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ருத்ரனிடம் ஒப்படைத்திருக்க்க் கூடாது.

தொடரும்.....

இதனை முழுமையாக நீங்கள் எழுதிய பின் இச் சினிமாப் படம் சார்ந்த்த என் அபிப்பிராயத்தினையும் பார்வையையும் வைக்க விரும்புகின்றேன்

  • தொடங்கியவர்

நிழலி,

இரண்டு பாகமாக எழுதினால் புதன் கிழமை முடித்து விடுவேன். மூன்று பாகமாக நீண்டு விட்டால் வெள்ளி அல்லது சனிக் கிழமைதான் முடிப்பேன். பரவாயில்லையா?

ஆனால் நீங்கள் எனக்காக பொறுக்கத் தேவையில்லை. நீங்கள் எழுத நினைப்பதை நான் எழுதி விட்டால் அதன் பிறகு என்ன செய்வீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடவுள்

இயக்குனர் பாலாவின் படங்களில் மட்டுமல்ல.. தமிழின் சிறந்த படங்கள் பட்டியலிலும் நிச்சயமாக ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு.

இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியும், உள்ளடக்கத் தரமும் தமிழ் சினிமாவை நிச்சயமாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். சீரியஸான நாவல் தரும் எல்லா உணர்வுகளையும் இப்படம் தருகிறது. ஒரு முழுமையான பின்நவீனத்துவப் படம். பிரதிக்குள்ளிருந்தே பிரதியை பகடி செய்யும் படைப்பிது.

இந்திய சினிமா இதுவரை கண்டிராத கதைக்களம். யாசகம் கேட்கும் விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றிய காட்சிகள் அதிகமென்றாலும் அவர்கள் மீது பரிதாபம் மட்டுமே படம் பார்க்கும் ரசிகனுக்கு ஏற்படுவதை பலவந்தமாக தடுத்திருக்கிறார் பாலா. அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம், அழுகிறோம், கோபப்படுகிறோம், நெகிழ்கிறோம், இத்யாதி.. இத்யாதி.. ஹேட்ஸ் ஆஃப் பாலா.

இதுதான் படத்தின் கதை என்று ஆரம்பக்காட்சிகளிலேயே தெளிவுபடுத்திவிடும் இயக்குனர் பிற்பாடு கதையை மறந்து காட்சிகளை மையப்படுத்தியே படத்தை நகர்த்திச் செல்கிறார். இசையமைப்பாளர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என்று அவரவர் தரப்பும் முழுவீச்சில் வித்தையைக் காட்ட இயக்குனர் எடுக்க நினைத்ததை விட நேர்த்தி சுலபமாக கைகூடுகிறது. இவ்வளவு மூர்க்கமான படத்துக்கு க்ளைமேக்ஸ் சப்பை என்பதால் படம் முடிந்தவுடன் கைத்தட்ட மனமின்றி வெறுமை சூழ்கிறது.

நாயகன், நாயகி இருவரை சுற்றிதான் கதை என்ற தமிழ் சினிமா மரபை பாலா கொஞ்சம் கூட மதிக்கவேயில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ரிலே ரேஸ் மாதிரி ஓடி படத்தின் சுமையை பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படத்தில் ஆர்யாவுக்கு கிடைத்த ஓபனிங் சீன் மாதிரி எந்த ஹீரோவுக்காவது இதுவரை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். அழகான அஹோரி. இவரிவர் தான் சிறப்பாக நடித்தார் என்று சுட்டிக்காட்ட இயலாத அளவுக்கு படத்தில் பங்கேற்ற நண்டு, சிண்டுக்கள் வரை எல்லோருமே பர்ஃபெக்ட் ஃபெர்பாமன்ஸ்.

இளையராஜாவின் இசை படத்தின் பல காட்சிகளை நடத்திச் செல்கிறது. வசனங்கள் இல்லாத இடத்திலும் யாரோ பேசிக்கொண்டிருப்பது போன்றே, கதை சொல்லிக் கொண்டிருப்பது போன்றே ஒரு பிரமை. கோல்டன் க்ளோப், ஆஸ்கர் விருதுகள் தரும் கம்முனாட்டிகள் குழுவுக்கு இப்படி ஒரு மேதை இங்கே இருப்பதாவது தெரியுமா என்பதே சந்தேகம். மேஸ்ட்ரோவுக்கு இணை மேஸ்ட்ரோ மட்டுமே.

ஜெயமோகனின் பகடி பலாப்பழம் மாதிரி இனிக்கிறது. வசன சூறாவளியாய், சுனாமியாய் எட்டுத்திக்கும் சுழன்றடித்து வியாபித்திருக்கிறார். மதம், கடவுள், சினிமா, அரசு, காவல்துறை என்று தமிழ்ச்சூழலில் பலமாக அஸ்திவாரம் போட்டு நிறுவப்பட்டிருக்கும் அதிகாரமைய கேந்திரங்களை இரக்கமேயில்லாமல் கேலிக்குள்ளாக்குகிறது அவரது கூர்மையான பேனா. ‘ஜெயமோகனா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்?’ என்று அதிர்ச்சி மதிப்பீடுகளையும் மீறி கைத்தட்டலை அள்ளிச் செல்கிறது வசனங்கள். ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

கவலைப்படாதீங்க எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்” என்றொருவர் சொல்ல மற்றொருவர், “தேவடியா மகன். புளுத்துவான்” என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகள் இனியும் ஜெமோவை நம்பலாமா? அண்ணாச்சி நைசாக இறுதிக்காட்சிகளில் தன்னுடைய இந்துத்துவா விசுவாசத்தைக் காட்டவும் தவறவில்லை. இக்கட்டான நேரத்தில் நாயகியை இந்து சாமியார் காப்பாற்ற, அதன் பின்னர் மாதாவை வேண்டி அவளுக்கு எந்த பிரயோசனமும் இல்லையாம். படத்தோடு ஒட்டாமல் க்ளைமேக்ஸ் வரும் நேரத்தில் தேவாலயமும், கன்னியாஸ்திரியும், நாயகியின் ஜெபமும் காட்டப்பட்டது வேண்டுமென்றே ஒட்டவைத்தது போல் தெரிகிறது. இந்த நுண்ணரசியலைக் கண்டு மனம் வெறுத்து தீக்குளிக்க முடிவு செய்திருக்கும் தோழர் அதிஷாவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.

க்ளைமேக்ஸ் இதுதான் என்பதை படம் ஆரம்பிக்கும்போது இயக்குனர் முடிவு செய்திருக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இடைவேளைக்குப் பிறகு குருட்டாம் போக்கில் அதுபாட்டுக்கு செல்லும் படம் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க பதட்டத்தோடு எடிட் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பாதியின் க்ரிப் இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை.

ஒரு நார்மலான மனிதரால் இதுபோன்ற கதையை சிந்தித்து படமெடுப்பது என்பது சாத்தியமேயில்லாத ஒன்று. மிகக்கொடூரமான காட்சிகள் படம் நெடுகிலும் கொடூரத் தோரணமாய் கட்டி தொங்க விடப்பட்டிருக்கிறது. இளகிய மனம் படைத்தவர்களும், பெண்களும், குழந்தைகளும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய படமிது. ஹேராம் படத்தில் ஒரு குருட்டுப்பெண் குடிசையில் நடந்துவரும் காட்சி நினைவிருக்கிறதா? மனதை உலுக்கும் அந்த ஒரு காட்சி தரும் தாக்கத்தையே இப்படத்தில் எல்லாக் காட்சிகளும் தருகிறது. ஒருமுறை படம் பார்த்தவர்களே இரண்டாவது முறை பார்ப்பது சந்தேகம்.

சென்னையின் சத்யம், ஐனாக்ஸுகளில் யுவகிருஷ்ணாக்களும், கேபிள்சங்கர்களும் பார்த்து பாராட்டி, எழுந்து நின்று கைத்தட்டக்கூடும். உசிலம்பட்டி கண்ணனில் படம் பார்க்கும் முனுசாமிகளும், மாடசாமிகளும் இப்படத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வசூல்ரீதியான மிகப்பெரிய வெற்றியை இப்படம் தவறவிடக்கூடும் என்றாலும் பல்வேறு விருதுகள் பட்டியலில் இப்போதே துண்டுபோட்டு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. லாபம் பற்றி சிந்திக்காமல் கலைச்சேவையாக இப்படத்தை தைரியமாக தயாரித்த தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டியவர்.

கொண்டாட்ட சூழலுக்கான படம் இது இல்லை என்றாலும் இயக்குனர் பாலா பல்லக்கில் வைத்து தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியவர். ஹேராமுக்குப் பிறகு இசையும், இயக்கமும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருக்கிறது.

இக்கட்டான சூழலில் தமிழ் சினிமாவை ரட்சிக்க வந்திருக்கிறார் கடவுள்!

http://www.viduppu.com/view.php?2a34OTZ4b4...2j5iG0cc3rhYAde

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.