Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட்டுக்கோட்டை-திம்பு-ஒஸ்லோ:முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை-திம்பு-ஒஸ்லோ:முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்

on 21-10-2009 07:44

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரத்தை ஒட்டி பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து குறிப்பாகப் புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு எண்ணக்கருக்கள் பிரதிபலிக்கப்படுகின்றன.

எவ்வகையிலான தீர்வு என்ற விடயத்தில் இடங்களின் பெயர்களை "ஆகு பெயர்களாக" குறிப்பிட்டு கருத்து வெளியிடும் சூழலும் இப்போது காணப்படுகின்றது.

ஒரு சாரார் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பார்கள். இன்னொரு தரப்பினர் திம்புக்கோட்பாடு என்பார்கள். பிறிதொரு குழுவினரோ ஒஸ்லோ கூட்டு அறிவிப்பு என்பார்கள்.

இப்படி இடங்களின் பெயரால் சுட்டப்படும் ஒவ்வொரு அம்சமும் தன்தன் நிலையில் ஆழமான கருத்து நிலைப்பாட்டைப் பிரதிபலித்து நிற்கின்றமை கண்கூடு.

"வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்பது 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதியில் உள்ள பண்ணாகத் தில் இடம்பெற்ற தமிழர் விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை குறித்து நிற்கிறது. தனித் தமிழீழம் அமைப்பதற்கான முடிவைத் தமிழினம் அந்த மாநாட்டிலேயே முதன் முறையாக உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தது.

"இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு தேசத்துக்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய மத சார்பற்ற சோஷலிஸ தமிழீழ அரசு மீளப்பட்டு, மீள்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்"" என அந்த மாநாட்டின் மேற்படி தீர்மான வாசகம் கூறுகின்றது.

அடுத்தது, திம்புக்கோட்பாடு பற்றியது. பூட்டான் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும் தமிழர்கள் தரப்பில் அவர்களின் விடுதலைக்காகப் போராடிய அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்த அணிக்கும் இடையில் பூட்டான் அரசின் ஆதரவுடனும் இந்திய மத்தியஸ்தத்துடனும், இடம்பெற்ற பேச்சுகள் பற்றியதே இது. திம்புப் பேச்சுகள் இரண்டு சுற்றாக நடைபெற்ற போதிலும் பொதுவாகத் திம்புக் கோட்பாடு என்பது 1985 ஜூலை 8 முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முதல் சுற்றுப்பேச்சின் முடிவில் தமிழர்களின் அனைத்துத்தரப்பினரும் ஒன்றுகூடி வெளியிட்ட கொள்கை விளக்கமாகும். தமிழரின் தனித்துவத் தேசியஇனம், தனியானதாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய மூன்று பிரதான அம்சம்களையும், இலங்கையில் வாழும் சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் உண்டென்ற அடுத்த விடயத்தையும் உள்ளடக்கி மொத்தம் நான்கு விசேட கொள்கைகளை திம்புக்கோட்பாடு வெளிப்படுத்தி நின்றது. இதில் முதல் மூன்றும் வடக்கு, கிழக்கு தமிழர் தொடர்பிலும் நான்காவது விசேடமாக மலையகத் தமிழர் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டன.

அடுத்த விவகாரம் ஒஸ்லோ கூட்டு அறிவிப்பாகும். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 முதல் 2004 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுகள் சமயத்தில் 2002 டிசெம்பர் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுகளின் முடிவில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்ப ஏற்பாடாகத் தங்களுக்குள் ஏற்பட்ட இணக்கம் குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களையே இது பிரதிப லித்து நிற்கின்றது.

"உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில், ஐக்கியமான இலங்கைக்குள், சமஷ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது."" இதுவே ஒஸ்லோ கூட்டறிக்கையின் சாரமாகும்.

இந்த மூன்று முக்கிய அம்சங்களையும் தங்களின் வாதங்களுக்கு அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் தமது தீர்வுத் திட்ட எண்ணங்களைப் பிரதிபலித்து நிற்போர் மற்றைய ஒரு விவகாரத்தையும் இன்றைய நிலையில் கவனத்தில் கொள்வது நல்லது.

முதலாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

அது தனித்துத் தமிழர் தரப்பினால் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவு.

இரண்டாவது திம்புக்கோட்பாடு.

அது ஈழத் தமிழர்களும், தென்னிலங்கை அரசுத் தரப்பினரும் இந்திய மத்தியஸ்தத்துடன் ஒரு மேடையில் இருந்து பேசியசமயம் தமிழர் தரப்பால் ஏகமனதாக அங்கு முன்வைக்கப்பட்டது. அதிலே அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை உண்டு என்ற நான்காவது கோட்பாடு தவிர்ந்த ஏனைய மூன்றையும் தமிழர்கள் தனித்துவமான இனம், அவர்களுக்குத் தனித்துவமான, விசேட பாரம்பரிய தாயகம் உண்டு, அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உள்ளது என்ற மூன்றையும் அந்தப் பேச்சுகளின் போதே கொழும்பு அரசு நிராகரித்து விட்டது. (இரண்டு ஆண்டுகள் கழித்து 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம், மேற்படி தமிழர் தரப்பின் பிரதான மூன்று கோரிக்கைகளில் சுயநிர்ணய உரிமை தவிர்ந்த ஏனைய இரண்டையும் தமிழர்கள் இலங்கையில் தனித்துவமான இனம், வடக்கும் கிழக்கும் அவர்களின் பாரம்பரிய, பூர்வீகத் தாயகம் என்ற இரண்டு கோட்பாட்டையும் கொழும்பு ஏற்றுக்கொண்டு விட்டது என்பது வேறு விடயம்.)

மூன்றாவது ஒஸ்லோ கூட்டறிவிப்பு. இது,

அதில் தமிழர் தரப்பில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளும் தென்னிலங்கைச் சிங்களவர் தரப்பில் பங்குபற்றிய கொழும்பு அரசும் ஒப்புக்கொண்டு இணங்கிய விடயமாகும்.

ஆகவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலா அல்லது திம்புக்கோட்பாடு மீதான உறுதிப்பாட்டுடனா அல்லது ஒஸ்லோ கூட்டறிவிப்பின் போக்கிலா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சர்ச்சைப்படும் புலம்பெயர் தமிழர்களின் தரப்புகள், நாம் சுட்டிக்காட்டிய இந்த விடயங்களைக் கவனத்திலும் பரிசீலனையிலும் கொள்வது அவர்களைச் சிறந்த முறையில் வழிப்படுத்த உதவும் என நினைக்கிறோம்.

புலம்பெயர் தமிழர்களுடன் ஒன்றிப்பு தாயகத் தமிழர்களுக்கு இன்று அவசியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தனது இராணுவ நடவடிக்கைகள் மூலம் முறியடிக்கப்பட்டு, முழு அளவில் வெற்றி காணப்பட்டாயிற்று என்று கொழும்பு கடந்த மே நடுப்பகுதியில் அறிவித்து ஐந்து மாதங்களாகிவிட்டன.

இனி என்ன என்ற குழப்ப நிலைமை தமிழர்கள் மத்தியில் அது உள்நாட்டிலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி தொடர்ந்து நீடிக்கின்றது. யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக உசிதமான வழியைப் பின்பற்றுவதே இன்றைய நிலையில் தமிழர்களைப் பொறுத்தவரை சிறந்ததாகும். வெறும் எழுச்சிப் பேச்சுகளும், புரட்சிக்கொள்கை விளக்கங்களும், சாத்தியமற்ற பிரகடனங்களும் தனித்துப் பயன்தரப் போவதில்லை. அவை இச்சமயத்தில் பொருத்தமற்றவை; அர்த்தமற்றவையும் கூட.

நொந்துபோயிருக்கும் தமிழினத்தை தென்னிலங்கையின் நிரந்தர அடிமையாகுவதே சிறந்த வழி என்று வழிப்படுத்தும் பலர் நம் மத்தியில் இரட்சகர்களாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிட்டார்கள். அத்தகையோர் மும்முரமாகச் செயற்படவும் ஆரம்பித்துவிட்டனர்.

இச்சமயத்தில், உண்மையில் தமிழ் மக்களை இங்கு வழி நடத்த வேண்டிய பொறுப்புடையவர்கள் தூங்கிக்கிடந்தால் அல்லது அப்படிப் பொறுப்போடு செயற்படுபவர்களை உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் எமது விமர்சனங்கள் மூலம் பாதிப்புற வைத்து அவர்களின் செயற்பாட்டுக்குத் நாமே குந்தகம் விளைவிப்போமானால் கடைசியாக "குரங்கு அப்பம் பகிர்ந்த கதையாக" தெற்கின் சூறையாடலுக்குத் தமிழினம் நிரந்தரமாகப் பலியாகி விடுவது தவிர்க்க முடியாத தாகிவிடும்.

ஆகவே, தென்னிலங்கைக்கு சாமரம் வீசி, அதில் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளை விட்டு விட்டு, தமிழர்களுக்காக அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடனும், திடசங்கற்பத்துடனும் செயற்பட வேண்டிய வேளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சக்திகளுக்கு வந்தாயிற்று. அதைப் புரிந்து கொண்டு அவை செயற்படவேண்டும். அப்படி அவை செயற்படுவதற்கு மற்றையோர் இடமளித்து ஒத்துழைக்கவேண்டும் அவற்றுக்கு வீண் தொல்லைகளைக் கொடுத்து விபரீதங் களை ஏற்படுத்துவதை விடுத்து.

புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியபோது புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பங்களிப்பை சரிவர இன்னும் சொல்லப்போனால் அளவுக்கு அதிகமாக வழங்கினார்கள் என்பது உண்மையே. அது காலத்தின் தேவையாக இருந்தது.

ஆனால், இன்றைய நிலையில் அவர்கள் உருப்படியாக பயனுள்ள வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கில், தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் தங்களின் இரத்த உறவுகளான தமிழ் மக்கள் அவர்களின் நியாயமான அபிலாஷைகள் நிறைவு செய்யப்பட்டுக் கௌரவமாக வாழ்வதற்குத் தாம் எத்தகைய முறையில் செயற்படவேண்டும் என்பது குறித்து ஒரு சுயபரிசோதனை செய்து பார்க்க வேண் டியவர்களாக இருக்கின்றனர்.

சிலர் "நாடு கடந்த தமிழீழ அரசு" என்கின்றனர். மற்றும் சிலர் "உலகத் தமிழர் பேரவை" என்கின்றனர். வேறு சிலர் இந்தியாவுடன் இணைந்து போகக் கூடாது என்கின்றனர். மற்றும் சிலர் வேறு வழியில்லாததால் இந்தியாவுக்குப் பணிந்து இயன்றதைச் சாதிப்போம் என்கின்றனர். இதுபோன்ற வேறு சில வழிகாட்டல்களும் பிரேரிக்கப்படுகின்றன. இவை குறித்தெல்லாம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கடும் வாதப் பிரதி வாதங்கள் நடக்கின்றன. சாடல்களும், விமர்சனங்களும் சூடு பறக்கின்றன. தனிப்பட்ட விமர்சனங்களும் அபவாதங்களும் கூட நீடிக்கின்றன.

அவை எவையும் தவறு என்றோ, பிழை என்றோ குறை கூறும் அருகதை தாயகத்தில் உள்ள நமக்கு உண்டு என்று நாம் கருதவில்லை. அதேசமயம், இலங்கைத் தமிழர்களின் எதிர்காலப் பயணமும், இலக்கும் எத்திசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கும் கணிசமான உரிமையையும், பாந்தயத்தையும் கூட நாம் யாரும் கேள்விக்கு உட்படுத்தவும் முடியாது.

ஆனால், ஒரு விவகாரம் உண்டு. அவர்கள் இவ்விடயத்தில் எதைச் செய்வதானாலும் எதைக் கூறுவதானாலும் அதற்கு முன்னர் களத்தில் தமிழ் மக்களின் தாயகத்தில் உள்ள நிலைமைகளை, அங்கு செய்யக்கூடியவற்றை, செய்ய முடியாதவற்றை எல்லாம் ஒருதடவை சீர்தூக்கிப்பார்த்து, அளவிட்டு, வரையறை செய்து, தமது தீர்மானங்கள், முடிவுகளின் போது அந்த அம்சங்களுக்கும் முக்கிய இடமளித்து கருமமாற்றுவது மிக அத்தியாவசியமானதாகும்.

புலம்பெயர் தமிழர்கள் ஐக்கியப்பட்டு வலிமையாக இருந்தாலும் கூட, தாயகத்தில் அதனுடன் சேர்ந்தியங்கும் வலிமையான அரசியல் ஆதரவுச்சக்தி அதற்கு இல்லாவிட்டால் அந்தப் புலம்பெயர் தரப்புகளால் அதிகம் சாதித்துவிட முடியாது.

அதேசமயம், தாயகத்தில், தமிழர் தரப்பில், தமிழர்களைத் தெற்குக்கு அடிமையாக விடாமல் வழிநடத்தக்கூடிய தரப்புகள் அரசியல் வலுப்பெற்றாலும் கூட பலம்மிக்க தென்னிலங்கை அரசின் அசைக்கமுடியாத வலிமைக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவின்றி அந்த அரசியல் சக்திகளாலும் ஏதும் சாதித்துவிடமுடியாது. இதுதான் இன்றைய யதார்த்த நிலை

.

ஆக, புலம்பெயர் தரப்புகள் கொள்கை, கோட்பாடு, இலட் சியம்,இலக்கு, தரப்பு, அணி என்று கூறிக்கொண்டு தமக்குள் பிணக்குப்பட்டு நிற்பதை விட முதலில் வேற்றுமைகளைக் களைந்து ஐக்கியப்பட வேண்டும். அதேசமயம் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவையோ, நம்பிக்கையையோ கொண்டவை எனக் கூறக்கூடிய தரப்புகள் தாயகத்தில் அரசியல் சத்தியாக இங்கு எழுச்சி பெறவேண்டும். அவை தம் மண்ணிலிருந்து தமது மக்களுக்காகச் செயற்படக்கூடிய தகுதியும் துணிச்சலும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.

இத்தகைய பரஸ்பர நலனோக்கு அடிப்படையில் புலம் பெயர் தமிழர்களும், தமிழர் தாயகத்தின் அரசியல் சக்திகளும் ஒன்றிப்பதே இன்றைய நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச வாய்ப்பையேனும் தந்து நிற்கும் என்பது உறுதி.

சம்பந்தப்பட்டோர் புரிந்துகொண்டு, தம்மை சரியான நெறியில் வழிப்படுத்திக் கொண்டால் சரி.

- உதயன் நாளிதழ்

அதிகாலை

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான கட்டுரை. இணைத்ததற்க்காக கறுப்பிக்கு நன்றி. இக்கட்டுரை தொடர்பாக ஆரோக்கியமாக விவாதிப்பது காலத்தின் தேவையாகும். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை இணைக்கும்போது முறைப்படு பதிரிகையின் ப்யர், திகதி எழுதியவர் பெயர், இணைய முகவரி என்பவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். கறுப்பி அவர்களிடம் மேற்படி விபரங்களை கோருகிறேன

வ.ஐ.ச.ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது சரி, ஆனால் எங்கே புலம்பெயர் தமிழர்கள் திம்பு பற்றியோ அல்லது ஒஸ்லோ உடன்படிக்கை பற்றியோ கதைக்கிறார்கள்? இதற்குள் இவைபற்றி முரண்பாடுகள் எங்கிருந்து வந்தது ? இதுவரை நாம் திம்பு பற்றியோ அல்லது ஒஸ்லோ உடன்படிக்கை பற்றியோ கேள்விப்படவில்லையே?? உதயன் நாளிதழ் இச்செய்தியை எங்கிருந்து பெற்றுக்கொண்டது?? அல்லது அவ்வாறு பிரிந்து அடிபடுவது என்பதுதான் உதயனுக்குத் தேவையாக இருக்கிறதா?? வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழிந்து இன்று உலகெங்கு நடைபெற்றுவரும் மீள் கருத்துக்கணிப்பை திசை திருப்பவும், தோல்வியடையச் செய்வதும்தான் இந்த திம்பு, ஒஸ்லோ போன்ற இடைச் செருகள் செய்திகளின் பிண்ணணி என்று நான் நினைக்கிறேன்.

நோர்வேயில் கடந்த மே மாதம் 99.9 % ஆன மக்கள் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு தனித் தமிழ் ஈழமே எமது முடிவு என்று வாக்களித்தார்கள். அதைத் தொடர்ந்து இன்று பிரான்ஸில் அக்கருத்துக்கணிப்பு வெற்றிகரமாக நடைபெறுகிறது. விரைவில் ஜேர்மணியிலும், இங்கிலாந்திலும் நடைபெறவுள்ளது. அவுஸ்த்திரேலியத் தமிழர்களும் இதை நடத்துவதுபற்றி சிந்தித்து வருகிறார்கள். இப்படியிருக்க எவர் வட்டுக்கோட்டை - திம்பு - ஒஸ்லோ என்று பிரிந்து நிற்கிறார்கள்?? எதற்காக இந்த தேவையற்ற வசை பாடல்??

இன்னொரு விடயம், அரசுக்கு அடிமைச் சேவகம் செய்யாத தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையில் இருக்கின்றனவா?? அப்படியிருந்தால் அவை எவை என்று உதயனால் சொல்ல முடியுமா??நிச்சயமாக டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சியாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கும் உதயனுக்கும் அப்படியொரு நட்பு.சிதத்தார்த்தன் கட்சிய் பற்றிச் சொல்லத் தேவையில்லை, வவுனியாவில் கேட்டாலே தெரியும். வரதர் அணியைக் கொண்டுவந்ததே சிங்கள அரசாங்காங்கள்தான், அப்படியிருக்க அவர் எப்படி அடிமைச் சேவகம் செய்யாமல் இருப்பது. மீதமிருப்பது தொண்டைமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பும் தான்.

தொண்டைமானை விட்டு விடுங்கள், அவர் தனது மக்கள் பற்றியே கவலைப்படுவதில்லை, பிறகு எங்கே நேரமிருக்கும் எம்மைப்பற்றிக் கவலைப்படுவதற்கு?

ஆக கூட்டமைப்புத்தான் மீதியாக இருக்கிறார்கள். அதற்குள்ளும் கிஷோர் மகிந்தவை வழிபடும் அளவிற்கே வந்துவிட்டார். சிறீ காந்தா பசில் ராஜபசவின் செய்தியாளராகவே மாறிவிட்டார். ஆக மீதமிருக்கும் சில எம்பீக்களும் என்ன செய்வதென்று தெரியாது இருக்கிறார்கள். ஒருவர் தனியாகச் சுயேற்சை வேட்பாளாரகா இருக்க்ப்போகிறேன் என்கிறார், அதற்கு இன்னொருவரோ "இல்லை இல்லை, அவர் பணம் வாங்கிக்கொண்டு இப்படிச் செய்கிறார், தமிழர்களின் வாக்கைச் சிதைப்பதுதான் அவரது நோக்கம்" என்று அழுகிறார். சுயேற்சையாக நிற்பது எவ்வாறு தமிழர் வாக்குகளைப் பிரிக்கும் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆக மொத்தமாக தமிழர் வாக்குகளை அள்ளிக்கொண்டு போய் மகிந்தவினதோ அல்லது சரத்தினதோ காலில் போட்டு அடைமையாவதுதான் அவரது எண்ணம் போல.

உதயந்தா சொல்ல வேன்டும் அப்படி ஏதாவது ஒரு அடிமைச் சீவியம் பிடிக்காத தமிழ்க் கட்சி இருக்கின்றதா என்று.

இங்கு சிலர், " ஏக பிரதிநிதித்துவம் என்கிற பேச்செல்லாம் இனி எடுபடாது, எல்லாரையும் சேர்த்துக்கொள்ள வேன்டும்" என்று அவ்வப்போது அழுவது தெரிகிறது. சரி, இப்போது புலிகள்தான் இல்லையே? பிறகேன் ஏக பிரதிநிதித்துவத்துக்காக அலைகிறீர்கள்? தாராளாமாக தூக்கித் தோலில் போட்டுக்கொள்ள வேண்டியதுதானே??

இவ்வளவு காலமும் புலிகள் இருந்தார்கள் என்று இந்த ஏக பிரதிநிதித்துவத்தில் பங்கு கேட்ட கட்சிகள் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டியிருந்தன. இப்போது புலிகள் இல்லை, ஆனாலு ஒட்டியிருப்பதைக் கழற்ற விருப்பமில்லை?? பிறகு எப்படி அடிமைச் சீவியம் பிடிக்காத கட்சியத் தேர்ந்தெடுப்பது ??புரியவில்லை!!!

உதயன் பந்தி பந்தியாக இந்த இலட்சியக் கட்சி பற்றிப் பேசுகிறது, ஆனால் யார் என்று மட்டும் இறுதிவரை சொல்லவில்லை. சிலநேரம் வேற்றுக்கிரக வாசிகளின் கட்சியாக இருக்குமோ??

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள் ஆக்கம் செய்வதற்கு இதனமைப்பாளர்களும், தொண்டர்களும் செய்யும் சேவையைத் தயவு செய்து குளப்பாதீர்கள். சர்வதேச ரீதியில் புலம்பெயர் தமிழர்களை ஒருங்கிணைத்து நடைபெறும் இந்த அரும்பணியைத் தடுக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் படும் கஷ்ட்டம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். சிங்கள அரசின் வெளிநாட்டு அரசுகள் மூலமான அழுத்தங்கள், தமிழ் எதிரிகளால் இதற்குப் போடப்படும் முட்டுக்கட்டைகள், அநாமதேயக் கொலைப் பயமுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் என்று முடியுமான அளவிற்குத் தடைகள் வந்துவிட்டன. நீங்களும் அவற்றுடன் சேர வேண்டாம். முடிந்தால் உதவுங்கள். முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

தோற்றுப்போன மனோபாவத்துடன், சோர்ந்த வாழ்வை வாழும் ஈழத்தமிழர் அனைவரும் இந்த இலட்சியத்தை நோக்கியேனும் ஒன்றுகூடுவோம். அதே எமக்கு ஒரு புது எழுச்சியைத் தரட்டும்.ஆகவே இந்த வாக்கெடுப்பை வெறும் சடங்காகப் பார்க்காமல், எமது உணர்வுகளை கொட்டி வெளிக்கிளம்பும் தளமாக மாற்றுவோம்.

தீயவன் எப்போதுமே வெற்றிபெறுவதற்கான ஒரே காரணம், நல்லவர்கள் எதுவுமே செய்யாமலிருப்பதுதான் என்று யாரோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே நீங்களும் செய்யுங்கள், முடியாவிட்டால் செய்யும் ஒரு சில நல்லவர்களையாவது செய்ய விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்னதான் ஊளைக் கூப்பாடு போட்டாலும் எதுவுமே நடக்கப்போவதில்லை. சனம் செய்ய வேண்டியதைச் செய்யும். நோர்வேயில் நடந்ததும், இன்று பிரான்ஸில் நடந்ததும் அதைத்தான் காட்டுகிறது. காலம் உங்களைக் கடந்து செல்லும், நீங்கள் உங்களின் விருப்பப்பட்ட அடிமைத் தளைகளுக்குள் முப்பதினாயிரம் வருடங்கள் அடைந்து கிடவுங்கள். ஏனென்றால் தமிழனின் உரிமைப் பிரச்சனையை விடவும் சிங்களவன் கேலியாகச் சிரிக்கப்போகிறானே என்கிற கவலைதானே உங்களுக்கு. வைக்கோல் பட்டடை.........

மக்கள் ஒர் அணியாகத்தான் இருக்கின்றார்கள்.

செயற்பாட்டாளர்கள்தான் இரு அணியாக இருப்பதாக அறிக்கை விடுகின்றார்கள்.

புலத்தில் பெரும் பிரச்சனை இருப்பதாக ஊடகங்களில் வெளிவரும் அறிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மக்களே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீழ் வலியுறுத்தி வாக்களிப்பதுடன் உங்கள் கடமை முடிந்து விடவில்லை.

மக்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கின்றனர்.

செயற்பாட்டாளர்கள் உங்கள் நிலைப்பாட்டை மக்களுக்குத்தெரியப்படுத்வேண்டிய காலம் நெருங்கி வருகின்றது.

செயற்பாட்டாளர்களே! அவர், இவர் என்று வெறும் கை காட்டி மரங்களாக நிற்பது போல் நடிப்பதை நிறுத்துங்கள்.

மே 19 இற்குப் பின் உங்கள் வரலாற்றுக் கடமையைச் செய்வதற்குத் தவறி உள்ளீர்கள்.

மே 19 இற்குப் பின் புலத்தில் இடம் பெற்று வரும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் உங்களுக்கிடையேயிருந்த மாற்றுத்தலைமை விரும்பிகளும், விடுதலை அமைப்பால் விலக்கி வைத்தவர்களுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை மீள் வலியுறுத்துவதன் காரணம் இடையில் வந்த திம்பு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒஸ்லோ பிரகடனம் எவற்றாலும் தமிழின அழிவைத் தடுக்க முடியவில்லை.இனிச் சிங்களவருடன் சேர்ந்து வாழ முடியாது என்பதையே வரலாறு எமக்குச் சொல்லி நிற்கிறது.வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழிந்து 1977 இல் வாக்களித்தவர்களில் டக்ளஸ் சித்ததார்த்தன் ஆனந்த சங்கரி உட்பட இன்று சிங்களத்திற்கு வால் பிடிப்பவர்கள் கூட்டமைப்பினர் முஸ்லிம்கள் மலையகத்தமிழர்கள் எனச் சகல தமிழர்களாலும் வழிமொழியப்பட்டு சனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. இது ஒன்றும் புலிகளின் கோரிக்கை அல்ல.புலிகள் அக் கோட்பாட்டை எண்ணற்ற உயிர்த்;தியாகத்தினூடாக அழிந்து போகாமல் பாதுகாத்து மக்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள். இத் தீர்மானம் எடுக்கப் பட்ட காலத்திலோ அது சனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளப் பட்ட காலத்திலோ உதயன் பிறக்கவேயில்லை.இப்பொழுது டக்ளசைப் பகைக்கூடாது என்பதற்காக சூழ்நிலைக் கைதியாகி புலம்பெயர்ந்தவர்களைக் குற்றஞ் சாட்டுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.தாயக மக்களின் பொருளாதாரத்திற்கு இன்றும் உதவிக் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர் மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மிக்க நன்றி புலவர். உங்கள் கருத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டை-திம்பு-ஒஸ்லோ என்று எந்தத்தமிழனும் முரண்படவில்லை.

ஒரு சில மேதாவிகள்தான் தமிழ்மக்கள் முரண்படவேண்டும் என்று கச்சைகட்டி கருத்துச் சேவை செய்யினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

99% எண்டு சொன்து பொய்யாயிருக்குமோ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை-திம்பு-ஒஸ்லோ என்று எந்தத்தமிழனும் முரண்படவில்லை.

ஒரு சில மேதாவிகள்தான் தமிழ்மக்கள் முரண்படவேண்டும் என்று கச்சைகட்டி கருத்துச் சேவை செய்யினம்.

இது உண்மைதான்

ஆனால் மக்களுக்கு தெரியும்

விழிப்பாகவே இருக்கிறார்கள்

இருப்பர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.