Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக் கட்டப் போர்!‏‏

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் அநேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன என்று தெரிந்து கொண்டிருந்தது அப்போது. ஏனென்றால், புவியியல் ரீதியாக சிறிய ஒடுங்கிய பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட நிலைக்கு மக்களும் புலிகளும் தள்ளப்பட்டு விட்டனர். சர்வதேச ஆதரவுத்தளத்தையும் பெறக்கூடிய நிலையில், போரைத் தணிக்கக் கூடிய நிலையில் நிலைமைகளும் இல்லை. எனவே போர் தன்னுடைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதாவது அது ஏறக்குறைய முடிவுக் கட்டத்துக்கு வந்து விட்டது என்று நிலைமைகளைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தோர் தீர்மானித்தனர்.

ஆனாலும் பலர் இன்னும் ஏதாவது செய்யக் கூடிய நிலைமை இருக்கிறது என்றே நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கும் காரணங்களிருந்தன.கரும்புலிகள் அணி எந்தப் பெரிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவில்லை. கடற்புலிகளும் கூட மிகப் பிரமாண்டமான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதைவிட தொடர்ந்து மோதல்கள் நடந்து கொண்டேயிருந்தன. விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்குரிய தளபதிகள் இன்னும் போரை வழிநடத்திக் கொண்டேயிருந்தார்கள்.

ஆகையால் எப்படியும் இறுதிக் கட்டத்திலாவது ஏதாவது அதிரடியான போர் நடவடிக்கைகள் நடைபெறக் கூடும் என்று அவர்கள் நம்பினார்கள். இல்லையென்றால், இவ்வளவு இயக்க உறுப்பினர்களும் இறுதியில் என்ன செய்வது? அதைவிட தலைவர் பிரபாகரன் ஏதாவது செய்யாமல் விடமாட்டார் என்ற எண்ணம் அவர்களுக்கிருந்தது. ஆனாலும் அவர் ஏன் இன்னும் தாமதித்துக் கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்குப் புரியவில்லை. அதற்கு அவர்களால் விடைகாணவும்; முடியவில்லை.

எனவே இறுதிக் கட்டப் போர் எப்படியும் நம்பிக்கைக்குரியதாக, மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு அவர்களிடம் போதிய விளக்கங்களிருக்கவில்லை. ஆனாலும் அந்த நம்பிக்கையிலும் அவர்கள் கொஞ்சம் தளர்ந்தேயிருந்தார்கள். அதுவொரு கலவையான மனநிலைதான். பொதுவாகச் சொன்னால், நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த நாட்களில் பலரும் என்ன செய்வது, எங்கே செல்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனென்றால், தொடர்ந்து போரை நடத்தக் கூடிய நிலையில் அப்போது போராளிகளில் பலரின் மனநிலை இருக்கவில்லை. பலரும் தங்கள் குடும்பங்களைத் தேடுவதிலும் அவர்களைக் காப்பாற்றுவதிலும்தான் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைவிட போரைத் தாங்கக் கூடிய சனங்களும் இல்லை. அவர்களுக்கு சாப்பாடில்லை. அதைவிடத் தங்குமிடமில்லை. காயப்படுகிறவர்களுக்கு மருத்துவமனைகளில்லை.இதற்கிடையில் வெடிபொருட்கள் தீர்ந்து விட்டதாக மெல்லிய சேதி கசிந்தது. இனிச் சண்டை ஓய்ந்து விடலாம். அதுக்குப் பிறகு ஏதாவது ஒரு வழி – அது நன்மையைத் தருமோ தீமையைத் தருமோ என்பது வேறு விசயம் – கிடைத்து விடும் என்று அவர்கள் எண்ணினார்கள்.

இனி வன்னியில் இருந்தால் மரணம் அல்லது கைது என்ற நிலையைத்தவிர வேறு மார்க்கமில்லை என்று திடமாக முடிவு கட்டினார்கள். இதனால் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு படைத்தரப்பிடம் ஓடுவோரின் தொகை அதிகரித்தது. இந்த நிலை வரவரக் கூடியது. இந்த மனநிலை வளர்ந்து போராளி குடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள் வரையில் பரவியது.

இந்த நிலையைத் தடுத்தாற்தான் அடுத்த கட்டமாக எதையாவது செய்யலாம் என்ற நிலை தவிர்க்க முடியாதபடி உருவாகியது. அதேவேளை தாக்குப்பிடிப்பதன் மூலம் தான் சர்வதேச ரீதியான மாற்று அபிப்பிராயத்தை உருவாக்கலாம் என்ற நிலையும் புலிகளுக்கு ஏற்பட்டது. அத்துடன், என்னதான் நடந்தாலும் படைத்தரப்புக்குப் பேரழிவை ஏற்படுத்தி, அதன் உளநிலையைச் சிதைப்பதன் மூலம் அதைப் பலமிழக்கச் செய்து பின்வாங்கச் செய்யலாம் என்று புலிகளின் மூத்த தளபதிகள் கருதினார்கள்.

இது இறுதிக்கட்டம். வாழ்வா சாவா என்ற நிலை. தோற்கமுடியாது. அப்படித் தோற்பதாக இருந்தாலும் மரணத்துக்குப் பின்னர் அது நிகழட்டும். அந்த மரணம் தோல்விளைத் தருவதற்குப் பதிலாக வெற்றியைத் தருவுதாக ஏன் அமையக் கூடாது? என்று அவர்கள் கருதினார்கள். எனவே இதற்கான ஒரு தர்க்க நிலைப்பட்ட நியாயத்தையும் அவர்கள் சொன்னார்கள். அது போராளிகளை சிறிது உற்சாகப்படுத்தியது.

தொடர்ந்து வெற்றியைச் சுவைத்தபடியே படையினர் முன்னேறி வருகின்றனர். அதனால் தாம் இலகுவில் வெற்றி பெற்று விடுவோம், புலிகள் இனிமேல் பெரிய தாக்குதல் எதனையும் நடத்தக்கூடிய நிலையில் இல்லை. அவர்கள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்று நம்பியிருக்கும்போது அதிரடியாக பத்தாயிரம் வரையான படையினர் பலியாகக் கூடிய தாக்குதலைத் தொடுத்தால் போரின் நிலையே மாறிவிடும் என்று அவர்கள் நிறுவினர். இதையடுத்து பலரிடம் ஒரு தெம்பு ஏற்பட்டது.

எனவே படையினரை எப்படியாவது தடுக்க வேண்டும். அப்படித் தடுப்பதற்கான உபாயம் என்ன என்ற கேள்வி எழுந்தபோதுதான் ஆனந்தபுரம் சமர் தொடங்கியது. அது இறுதிச் சமர். அதுதான் இப்போது தாய்ச்சமர். அதுவே இப்போது விடுதலைக்கான திறப்புச் சமர். அதுதான் புலிகளின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சமர் என்ற நிலையில் அதில் அத்தனை சிறப்புப் பயிற்சியும் போர் அனுபவமும் உள்ளவர்கள் களமிறங்கினார்கள்.

அந்தச் சமருக்கு முன்னர் அங்கிருந்து தான் வெளியேற மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு திரு. பிரபாகரன் அங்கே நின்றார். அப்போது இராணுவம் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கேப்பாபிலவு, தேவிபுரம் ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தது. அதாவது முக்கால வட்ட வடிவில் இராணுவம் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்திருந்தது. மிஞ்சிய பகுதி, புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம், இரணைப்பாலை என்ற சிறு பகுதியும் மாத்தளன் முள்ளிவாய்க்காலுக்கிடைப்பட்ட ஒடுங்கிய கடற்கரைப் பிரதேசமும்தான்.

ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தையும் இந்தப் பிரதேசத்தையும் இழந்தால் வேறு மார்க்கமே இல்லை, அது அழிவாகத்தான் இருக்கும் என்று பிரபாகரன் நம்பினார். அதுதான் உண்மையும். எனவேதான் அவர் அப்படியொரு முடிவை எடுத்தார்.

திரு. பிரபாகரனுடன் அப்போது அங்கே புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திரு. சூசை ஆகியோரும் இருந்தனர். எனவே அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு தாங்கள் களத்தில் இறங்குவதாக மூத்த தளபதிகள் முடிவெடுத்தார்கள்.

ஆனந்தபுரம் சமரில் ஏறக்குறைய மூவாயிரம் வரையான போராளிகள் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கியமான படைத்தளபதிகள் எல்லோரும் கூடிக் களத்திலிறங்கினர். கேணல் பானு, கேணல் விதுஷா, கேணல் தீபன், கேணல் கடாபி, கேணல் மணிவண்ணன், கேணல் நாகேஸ், கேணல் சேரலாதன் இப்படிப் பலர். (இவர்களில் பலர் பின்னர் பிரிகேடியர் என்ற இராணுவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர்) இவர்களைத் தவிர, அடுத்த நிலையிலுள்ள முக்கிய தளபதிகள் பலரும் களத்தில் நேரடியாக இறங்கியிருந்தனர்.

குடாரப்புத் தரை இறக்கம், அதைத் தொடர்ந்து பெட்டி வடிவில் இத்தாவிலில் வியூகம் அமைத்து கேணல் பால்ராஜ், கேணல் விதுஷா ஆகியோர் தமது அணிகளை வைத்துச் சமரிட்டதைப் போல ஆனந்தபுரம் சமரை இந்தத் தளபதிகள் வடிவமைத்திருந்தனர். எனவே இந்தத் திட்டத்தின்படி இந்தச் சமரை ஒரு மாதத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் நீடிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒரு மாதத்திலும் படையினரை அந்தப் பகுதிக்கு – தமது வியூகத்தினுள் – கவர்ந்திழுத்து அவர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவதே திட்டம். ஆகவே அதற்கேற்ற வகையில் வியூகங்கள், தாக்குதல் முறைமைகள், தாக்குதல் அணிகள், அதற்கான ஆயுதப் பிரயோகம் மற்றும் வழங்கல் என சகலதும் ஒழுங்கு படுத்தப்பட்டன.

திட்டத்தின்படி போர் தொடங்கியது. கடுமையான போர். பேரழிவுகளோடு அது தொடர்ந்து கொண்டிருந்தது. உடனடியாக சரியான தகவல்களைப் பெற முடியவில்லை. ஆனால் உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவதற்கு எல்லோருக்குமே பெரும் ஆவல். வதந்திகள், ஊகங்கள் தாறுமாறாகப் பறந்து கொண்டிருந்தன. வந்து விழும் எறிகணைகளை விடவும் அந்த வதந்திக் கணைகள் அதிக சக்தி வாய்ந்தவையாக இருந்தன.

ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு தகவல். விடுதலைப்புலிகள் இப்போது புதுக்குடியிருப்பைக் கைப்பற்றி, அதற்கு அப்பால் கேப்பாபிலவை நோக்கியும் தேவிபுரத்தை நோக்கியும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்று இன்னொரு தகவல். இப்படிப் பலதகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. ஆனால் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. அப்படிப் போர்க்களத்தில் சிறிது வெற்றி பெற்றாலும் அதனுடன் போர் நின்று விடப்போவதில்லை என்பதையும் சிலர் மதிப்பிட்டிருந்தனர். ஏனெனில் அதற்கான அக புற நிலைமைகள் மாறிவிட்டன. என்றாலும் போர் தொடர்ந்து கொண்டிருப்பதால் வெளியே நின்றவர்கள் சற்று மகிழ்ந்தார்கள். இந்தப் போர் நிச்சயம் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை ஒரு பக்கத்தில் உண்டென்றால், இது வெற்றிபெற வேண்டும் என்ற பிரார்த்தனை இன்னொரு பக்கத்தில். வாழ்வா சாவா என்ற நிலை அல்லவா?

உள்ளே நின்ற தளபதிகள் சாதாரணமானவர்கள் அல்ல. கேணல் தீபன் பால்ராஜூடன் கூடவே நின்று வளர்ந்தவர். பால்ராஜ்ஜூக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் பேரபிமானம் பெற்ற தளபதியாக அவர்தான் இருந்தார். அவருடைய தலைமையில் போரிடிடுவதற்குப் பல போராளிகள் தயாராகவே இருந்தனர். மிக நீண்டகாலம் முகமாலை முன்னரங்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தீபன். ஆனையிறவை வெற்றிகொண்ட சமரில் இயக்கச்சி முனையை வென்று அந்தச் சமரின் வெற்;றிக்கு உதவியர் அவர். இன்னும் பல சமர்க்களங்கள் தீபனின் ஆற்றலுக்கு அடையாளமாக உண்டு. ஆகவே தீபன் சமர்க்களத்தில் நிற்கிறார் என்பது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் சற்று நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

இதைப்போல தளபதி பானுவும் களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது இன்னொரு முக்கியமான விசயமாகும். பானு நீண்டகால அனுபவமுடைய தளபதி. யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு வரையில் பொறுப்பு மிக்க தளபதியாக இருந்தவர். யாழ்ப்பாணக் கோட்டையைப் புலிகள் கைப்பற்றியபோது பானுதான் அங்கே அப்போது கொடியேற்றியிருந்தார். அதைப்போல ஆனையிறவுப் படைத்தளத்தையும் புலிகள் வென்ற பிறகு பானுதான் கொடியேற்றியிருந்தார். இப்போது அதே பானுவும் களத்தில் நின்றார். பானு பீரங்கிப் படையணிக்கும் பொறுப்பாக இருந்தவர். அதைவிட வன்னியின் இறுதிச் சமரில் மன்னாரிலிருந்து அவர்தான் ஒருங்கிணைப்புத் தளபதியாகவும் கட்டளைத் தளபதியாகவும் இருந்தவர்.

அடுத்தது கேணல் மணிவண்ணன். இவர் கேணல் ராஜூவுக்குப்பின்னர் புலிகளின் பீரங்கிப் படைத்தளபதியாக பொறுப்பேற்றவர். இந்தச் சமரில் அவர் நேரடியாகக் களமிறங்கியிருந்தார். அவருடன் அவருடைய படையணியின் இரண்டாம் மூன்றாம் நிலையிலிருந்த ஏனைய தளபதிகளும் சமரில் குதித்திருந்தனர்.

அடுத்தது கேணல் விதுஷா. கேணல் விதுஷா பால்ராஜூடன் குடாரப்புத் தரையிறக்கத்தில் இறங்கி, முகமாலைச் சமரில் தாக்குப் பிடித்து நின்று வெற்றிகண்டவர். அதைவிட மாலதி படையணியின் தளபதியாகவே நீண்டகாலம் இருந்து அந்தப் படையணி பங்குபற்றிய பல சண்டைகளில் வெற்றியீட்டியவர். துணிச்சல் மிக்கவர். எதற்கும் விட்டுக் கொடாதவர். கடும் பிடியாளர் என்று பலராலும் விமர்சிக்கப்படுபவர் விதுஷா. பெண்போராளிகளின் ஆதர்சம் அவர். அவரும் தன்னுடைய மூத்த பெண் போராளிகளுடன் இணைந்து நின்று போரிட்டார்.

இதைப்போலவே கேணல் துர்க்கா, கேணல் கடாபி என்கிற ஆதவன், மட்டக்களப்புத் தளபதியாக இருந்த கேணல் நாகேஸ், நிதர்சனம் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த கேணல் சேரலாதன் எனப் பலர் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர். கேணல் ஆதவன் முன்னர் திரு. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராகவும் பின்னர், மெய்ப்பாதுகாவலர் அணிக்குப் பொறுப்பான தளபதியாககவும் பிறகு படையப் பயிற்சிக் கல்லூரிகளுக்குப் பொறுப்பாளராகவும் இருந்தவர். இதைவிட திரு. பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனியின் படையணியைச் சேர்ந்த – கணனிப் பிரிவைச் சேர்ந்த தளபதிகள் போராளிகள் என்போரும் போரில் ஈடுபட்டனர்.

இரவு பகல் என்றில்லாத தாக்குதல். நிலைகொண்ட படையினர் மீதும் தாக்குதல். முன்னேறி வரும் படையினர் மீதும் தாக்குதல். இப்படி படையைச் சிதைக்கும் உச்சகட்டப் போர் இரண்டு நாட்களைக் கடந்தது. புலிகளின் வானொலி சில செய்திகளைச் சொன்னபோதும் எதையும் சரியாக உறுதிப்படுத்தவோ உத்தரவாதப் படுத்தவோ முடியவில்லை. சனங்கள் கொஞ்சம் நம்பிக்கை நிலைக்கு வந்தனர். போராளிகளிற் பலரிடமும் உற்சாகம் ஏற்பட்டது. ஆனால் எல்லோரிடமும் ஒரு அவநம்பிக்கையும் இழையோடிக் கொண்டேயிருந்தது. அதைப் பலரும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

இதேவேளை படையினரிடம் செல்வோரின் தொகை திடீரெனக் குறைந்து விட்டது. போர் நடந்து கொண்டிருக்கும்போது படையினரிடம் சென்றால் உயிராபத்துகள் நிகழக்கூடிய அபாயம் உண்டென்ற அபிப்பிராயம் சனங்களிடம் இருந்தது. அதனால் அவர்கள் நிலைமைகளின் போக்கை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்கள் தீவிரமாக நடந்த போர் மூன்றாவது நாள் மெல்ல தணிவுக்கு வந்தது. ஆனாலும் அதன் கொந்தளிப்புக் குறையவில்லை. அப்போது ஒரு செய்தி மெல்லக் கசிந்தது. ஆனால் அந்தக் கசிவுத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் பரபரப்பையும் உண்டாக்கியது.

ஆனந்தபுரம் பகுதியை படையினர் சுற்றி வளைத்துத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். படையினரின் முற்றுகைக்குள் ஏறக்குறைய எண்ணூறுக்கும் அதிகமான போராளிகள் சிக்கிவிட்டனர் என்றும் முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால் அங்கே உண்மையான நிலைமை என்ன என்று அறிய முடியவில்லை. தளபதிகளில் பலரும் காயப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர் என்று அடுத்து வந்தது தகவல். ஆனால் அதிலும் யார் யாருக்கு என்ன பிரச்சினை, யார் எப்படி இருக்கிறார்கள் என்று எதுவும் சரியாகத் தெரியவில்லை.

உண்மையில் அங்கே என்ன நடந்தது என்றால்…

புலிகள் ஆனந்தபுரத்தில் பெரியதொரு படைத்தளத்தை நிர்மாணித்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரையில் அதை படையினருக்கான ஒரு பொறியாகவே உருவாக்கியிருந்தனர். அங்கே மையமாக நின்று போரிடும் போது – சூட்டு வலுவை ஓரிடத்தில் குவித்துக் கொண்டு போரிடும் போது அதற்கெதிராக படையினர் நிச்சயம் போரிட்டே ஆகவேண்டும். அப்போது அதற்கெதிராக தாம் தொடர்ச்சியாக செறிவும் வலுவும் கூடிய தாக்குதலை நடத்துவது என்றும் அவர்கள் திட்டமிட்டனர்.

புலிகளின் எதிர்ப்பு அதிகரிக்கும் போது மேலதிக படையினர் அங்கே கொண்டு வரப்படுவர். அப்படி வருகின்ற படையினர் மீதும் பல வகையான அதிர்ச்சிகரமான தாக்குதல்களைத் தொடுப்பது. அதில் பல படையினரைக் கொல்வது அல்லது அந்தப் படையணிகளைச் சிதைப்பது என்பது இந்தத் திட்டத்தின் இன்னொரு விரிவு. அதற்குத் தக்கமாதிரியே வியுகமும் தந்திரோபாயமும் நிலைகளும் அமைக்கப்பட்டன.

இப்படிக் கவர்ந்திழுத்துக் கொல்லப்படுதன் மூலம் படையினரைக் கலங்கவைத்தல் களைப்பும் திகைப்பும் அடைய வைத்தல் என்ற தந்திரோபாயத்தை படையினர் வேறு விதமாக முறியடித்தனர். அவர்கள் புலிகளின் பின் வழியான காயப்படுகிறவர்களையும் இறப்பவர்களையும் கொண்டு செல்லும் வழி மற்றும் உணவு, மேலதிக படையணிகளை வழங்குவது, ஆயுதங்களை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கான வழங்கல் வழியை மூடினர்.

இது எப்படித் தெரியுமா?

புலிகளின் எதிர்ப்பு அதிகரித்திருக்கின்றதாலும் அது மிக மூர்க்கமாக இருக்கின்ற படியினாலும் அந்தத் தாக்குதலை தமக்கெதிரான முறையில் புலிகள் வடிவமைத்திருக்கின்றனர் என்று அவர்கள் கருதினர். இதனால் அந்தப் பொறியில் சிக்கி விடாமல் அவர்கள் தமது பலமான தரப்பான கண்காணிப்பு அணியை அதாவது ஆழ ஊடுருவிக் கண்காணித்துத் தாக்கும் அணியைப் பயன்படுத்தி புலிகளின் விநியோக வழியைக் கண்டு பிடித்தனர்.

பின்னர் இந்த வழியை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள் இரவோடிரவாக முட்கம்பிச் சுருள்களைப் பாவித்து மூன்று அடுக்கிலான தடுப்பு வேலியைப் போட்டனர். இப்போது புலிகள் தப்பிச் செல்வதற்கு வழியுமில்லாமல், அங்கே தொடர்ந்திருப்பதற்கான விநியோக வழியுமில்லாமல் சிக்கிக் கொண்டனர்.

இதைச் சற்றும் புலிகள் எதிர்பார்க்கவேயில்லை. அதேவேளை படையினர் உள்ளே சதுர வடிவில் நின்ற ஆயிரக்கணக்கான புலிகளை நோக்கி – அவர்கள் நின்ற அந்தச் சிறிய நான்கு சதுர கிலோ மீற்றர் பகுதியின் மீது – படையினர் மிகவும் உக்கிரமான தாக்குதலைத் தொடுத்தனர். இந்தத் தாக்குதலுக்காக அவர்கள் செலவிட்ட வெடிபொருட்கள் கிட்டத்தட்ட வேறு இடங்களில் செலவிட்ட வெடிபொருட்களை விடவும் பத்து மடங்குக்கும் அதிகமாகும்.

பொறி இப்போது அதன் நோக்க நிலையை – அர்த்த நிலையை மாற்றிக் கொண்டு விட்டது. அதாவது அது பொறியாகத்தான் இருந்தது. ஆனால், அதை உருவாக்கிய புலிகளுக்குப் பதிலாக படையினருக்கு வாய்ப்பாகவே அமைந்து விட்டது. துரதிருஷ்ர வசமாக அது புலிகளுக்கான பொறியாகி விட்டது.

இரவில்தான் விநியோக நடவடிக்கைகள் நடப்பது வழக்கம். பகலில் எதுவும் செய்ய முடியாது. கண்காணிப்பு விமானங்கள் அதற்கு இடமளிக்காது. ஆளில்லா வேவு விமானம் வானத்தை விட்டு நீங்குவதே இல்லை. ஒரு விமமானம் இறங்குவதற்கு முன்னர் இன்னொரு விமானம் வானத்தில் நிற்கும்.

புலிகளின் வியூகத்துக்குக் கிழக்கே களப்பும் வெளியும். ஆகையால் காயப்பட்டவர்களையும் இறந்தவர்களையும் மற்றும் மருந்து, ஆயுதம், உணவு எல்லாவற்றையும் இரவில்தான் அந்த வழியால் கொண்டு செல்ல முடியும். மாலையானதும் அந்த வழியால் சென்ற போராளிகள் முட்கம்பி தடுப்புகளைக் கண்டு அதிர்ந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு நிலைமை விளங்கியது. கட்டளைப் பீடத்துக்கு அவர்கள் தகவல் தந்தனர். நிலைமை பாதகமாகியுள்ளது என்பதை கட்டளைப் பீடம் உணர்ந்தது.

இப்போது உள்ளே நிற்கின்ற போராளிகளை மீட்கவேண்டிய நிலை. அதற்காக மேலதிக படையணிகள் வரவழைக்கப்பட்டன. இதேவேளை உள்ளே கடுமையான தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. தலையை வெளியே தூக்க முடியாதபடியான தாக்குதல். எதிர்பார்த்ததை விடவும் இழப்புகள் அதிகம். நெருக்கடிகள் அதிகம். ஆனாலும் அவர்கள் சளைத்து விடவில்லை. இது இறுதிப் போர். வாழ்வா சாவா என்ற போர். இதை விட முடியாது. விட்டால் வேறு வழி கிடையாது. ஆகவே எதிர்த்து நின்று தான் ஆகவேண்டும். போரிட்டுத்தான் ஆகவேண்டும்.

அந்த நெருக்கடி நிலையிலும் போரின் தீவிரம் குறையவில்லை.

ஆனாலும் படையினரின் தடையை உடைப்பதற்குப் புலிகளால் முடியவில்லை. இதற்குள் அந்தப் பகுதியில் புலிகளின் முக்கிய தளபதிகள்தான் நிற்கிறார்கள் என்ற தகவலை படையினரின் ஒட்டுக் கேட்கும் பிரிவினர் கண்டு பிடித்து விட்டனர். அதற்குள் யார் யாரெல்லாம் நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. அதனால், அது தங்களுக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பென்றே அவர்கள் கருதிக் கொண்டனர். அந்த வாய்ப்பை அவர்கள் இழக்க விரும்பவில்லை.

அதனால் முற்றுகை இறுக்கப்பட்டது. சுற்றிவர முற்றுகையை இறுக்கிக் கொண்டு, உள்ளே பேரழிவுத் தாக்குதலை படையினர் மேற்கொண்டனர். சக்கை, சரமாரி என்றெல்லாம் சொல்லக்கூடியமாதிரி, எறிகணைகளை அவர்கள் புலிகள் மையமிட்டு நின்ற பகுதிக்குள் கொட்டினர். அந்தப் பகுதியை அப்படியே அழிப்பதுதான் அவர்களுடைய இலக்கு.

புலிகளின் மீட்புப் படையணிகளோ, உதவிப் படையணிகளோ அங்கே செல்வதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றாகி விட்டது. அதேவேளை உள் நிலைமைகள் சீர்செய்ய முடியாத கட்டத்துக்கு, நின்று தாக்குப்பிடிக்க முடியாத கட்டத்துக்குச் சென்று விட்டன. உள்ளே நிற்பவர்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டு முற்றுகையை உடைத்து வெளியே வருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டம். அத்துடன் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டு விட்டனர் என்ற தகவல்களும் வெளிவரத் தொடங்கியது.

இது வெளியே இருந்த மக்களையும் போராளிகளையும் கலங்கவைத்தது. ஒரு பக்கம் பெருந்துக்கம். அடுத்த பக்கம் இந்த இழப்புகளின் வலி. பல களங்களை வெற்றிகரமாக வழி நடத்தியவர்கள், எத்தனையோ தாக்குதல்களில் இருந்து தப்பியவர்கள், மரணத்துடன் வெற்றிகரமாக இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நின்று விளையாடியவர்கள், தமிழ்ப் படையணிகள் என்ற புலிகளின் போராளிகள் அணிகளைக் கட்டிப் போரில் பல பரிமாணங்களை உருவாக்கியவர்கள் எல்லாம் மிகச் சாதரணமாகவே அங்கே, அந்த ஆனந்தபுரம் சமரில் கொல்லப்பட்டு விட்டனர்.

கேணல் தீபன், கேணல் கடாபி, கேணல் விதுஷா, கேணல் துர்க்கா, கேணல் மணிவண்ணன், கேணல், நாகேஸ்… என்று ஒவ்வொருவரும் துக்கத்துடன் இந்த இழப்புகளையிட்டுப் பல கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

கேணல் பானு உட்பட சிலர் கடுமையான போராட்டத்தின் பின்னர் காயங்களுடன் வெளியேறினர். அவர்கள் அங்கிருந்து தப்பி வந்ததை யாராலுமே நம்பிக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு முற்றுகையின் இறுக்கமும் தாக்குதலின் தீவிரமும் இருந்தது.

சனங்களிடம் இப்போது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் அப்படியே சரிந்தது. போராளிகள் சோர்ந்து விட்டனர். பல போராளிகள் மனங்கலங்கிப் போனார்கள். இப்படி இத்தனை தளபதிகளும் ஒன்றாகவே கொல்லப்படுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை.

ஆனந்தபுரம் சமரைப் புலிகள் அப்படித் திட்டமிட்டிருந்ததற்கு இன்னொரு காரணம் இந்தச் சமர்ப்புள்ளியில் படையினரை ஒரு மாதகாலம் வரையில் நிறுத்திக் கொண்டால், அதற்குள் சர்வதேச நிலைமைகளை தமக்கேற்றமாதிரி மாற்றிக் கொள்ளலாம் என்பதுடன், அந்த ஒரு மாத கால அவகாசத்தைப் பயன்படுத்தி அடுத்த பெருந்தாக்குதலுக்கான தயாரிப்புகளைச் செய்து கொள்ளலாம் என்பதாக இருந்தது.ஆனால், அந்த எதிர்பார்ப்பு பெருந்தோல்வியில் முடிந்ததை அடுத்து, எல்லாத் திட்டங்களும் அப்படியே குலைந்து போயின. புலிகளின் இறுதி முயற்சியும் பெருந்தோல்வியில் முடிந்ததையடுத்து படைத்தரப்பு முழு உஷாரடைந்தது. அது இறுதிப் போரை இன்னும் உக்கிரமாக்கியது.

உண்மையில் அந்தச் சமர்தான் புலிகளின் இறுதிச் சமர். அதற்குப் பின்னர் நடந்தவை எதுவும் பதிவுக்குரிய பெறுமானத்தைக் கொண்டவையாக இல்லை. அதாவது புலிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இறுதி நடவடிக்கை அதுதான்.அந்தச் சமரில் கொல்லப்பட்டதைப்போல வேறு எந்தச் சமரிலும் புலிகளின் பெரும் எண்ணிக்கையான மூத்த தளபதிகள் கொல்லப்படவேயில்லை. அது எல்லோரையும் உலுக்கியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏப்ரல் 2009 மாத்தளன் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பெருந்துக்கத்துடனும் பேரவலங்களோடும் கழிந்து கொண்டிருந்தது. சனங்கள் படையினரிடம் தப்பிச் செல்வதற்காக இன்னும் கடுமையாகப் போராடத் தொடங்கினர். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை.

- விதுல் சிவராஜா, பொங்கு தமிழ் இணையத்திற்காக

உண்மையில் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத பேரிழப்பு. நான் அறிந்த மட்டில் போர் தொடங்கும் முன்னரே சிறிலங்கா இராணுவத்தில் அதி விசேட பயிற்சிகளை பெற்ற தென் தமிழீழ, வட தமிழிழத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்திய , இலங்கை ஏற்பாட்டில் புலிகள் அமைப்பில் சேர்ந்துவிட்டார்களாம். இவர்களில் பலரை புலிகளின் சில தாக்குதல் அணிகளுக்கு கப்டன்களாக புலிகளால் நியமிக்கபட்டிருந்தனராம். மட்டு முதல் முள்ளிவாய்க்கால் வரை இவர்களே புலிகளுக்குள் இருந்து மிக துல்லியமான தகவல்களை படைகளுக்கு வழங்கினராம். தமிழ்ச்செல்வனின் மரணம் முதல் முள்ளிவாய்கால் வரை இவர்கள் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டனராம். ஆனந்தபுரத்தில் புலிகளின் திட்டம் அதிசீக்கிரமமக படையினருக்கு போய் சேர இவர்களே தான் காரணமாம். ஆழ ஊடுருவும் படைகளுக்கான தகவல், உதவிகளையும் இவர்கள் தான் செய்ததாகவும், படையினரை நோக்கி சென்ற மக்களை புலிகளின் சீருடையில் இருந்து சுட்டு தள்ளியவர்களும் இவர்களே தானாம். பின்னர் போராளிகள் மக்களோடு மக்களாய் சரணடைந்த போது முகாம்களில் தாய் தந்தையரோடு மறைந்து வாழ்ந்த போராளிகளை இவர்கள் இராணுவ உடைகளில் வந்து பெயர் சொல்லி அழைத்து கைது செய்து கொண்டு சென்றதாகவும் நான் வவுனியாவில் இருக்கும் போது சில தடுப்பு முகாம்களுக்கு சென்று பார்க்கும் போது அங்கிருந்தவர்களில் சிலர் தெரிவித்தனர்.

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஆயுத விநயோகம் தடுக்கப்பட்டது தான் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என நான் சந்தித்த மக்கள் கூறினார்கள். இந்தியா தான் முழு உளவு தகவல்களையும் (சற்றலைட்டின் உதவியுடன்) வழங்கியது மட்டுமில்லாமல் இரசாயன வாயுக்களையும் அரச கூலிப்படைகளுக்கு வழங்கியது.

பிரிகேடியர் பால்ராஜின் மறைவோடு மன்னாரில் இருந்து முன்னேறத்தொடங்கிய படைகள் ஆனந்த புரம் சமருடன் போரை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். உளவியல் ரீதியாக பெரும்சேர்வு மக்களிடத்திலும் போராளிகள் இடத்திலும் மேலும் லட்சக்கணக்கில் உலக வீதிகளில் ஆர்பாட்டம் செய்தும் சிறிதும் கண்டுகொள்ளாத உலகநாடுகள் பொருட்டு அனைவரிடத்திலும் ஏற்பட்டிருந்தது.

தென்னிலங்கையில் நடவடிக்கைகள் செய்து போரின் போக்கை திசை திருப்புவது குறித்த திட்டங்கள் சடுதியாக கைவிடப்பட்டது சோர்வை மேலும் வலுவாக்கியது.

எங்கும் ஆழ ஊடுருவும் படையணிகள் பெரும் பதற்றத்தை எப்போதும் உண்டுபண்ணிக்கொண்டிருந்தது இதை கட்டுப்படுத்த முடியவில்லை. நிலமை மோசமாகின்றது என்றபோதும் மரபுவளி போர் முறையில் இருந்து கெரில்லா முறைக்கு மாறுவது சாத்தியமற்றுப்போனதற்கான பிறிதொரு காரணமாக ஆழ ஊடுருவும் படைகளின் நடவடிக்கை அமைந்தது.

உளவாளிகளின் ஊடுருவல் எல்லாவற்றிற்கும் மேலான சவாலக அமைந்தது. ஆள ஊடுருவும் படையணியும் உளவாளிகளும் ஆங்காங்கே ஒருங்கிணைந்தனர். புலநாய்வுத்துறை இரட்டை முகவர்கள் அரசுபக்கம் சாய்ந்தார்கள். கேணல் சாள்ஸ், மகேந்தி போன்றவர்கள் இந்த ஒருங்கிணைவில் கொல்லப்பட்டனர். துல்லியமான தகவலடிப்படையில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் குறிவைக்கப்பட்டார்.

புலம்பெயர் நாடுகளில் பணத்தை கையாண்டவர்கள் விலைபோனார்கள். வினயோகம் பெருமளவு பாதிக்கப்பட்டது.

என்னும் ஏராளமான கசப்பான கதைகள் வன்னியில் இருந்து அறிய முடிகின்றது. இதில் உண்மைகள் எது ஊகங்கள் எது என்பதை என்றைக்குமே பிரித்தறிவது கடினம். ஆனால் ராணுவரீதியில் தோல்வி முள்ளிவாயக்காலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே நிச்சயிக்கப்பட்டிருந்தது என்பதையே எல்லாக் கதைகளும் சொல்லிக்கொண்டிருக்கின்றது. சிங்களப்படைகள் வென்றார்கள் புலிகள் தோற்றார்கள் என்பதற்கு இது ஒன்றும் விழையாட்டுப்போட்டியில்லை மாறக ஈழத் தமிழர்கள் வழமைபோல் வரலாற்றுப்பாதையில் என்னுமொரு தோல்வியை பதிவுசெய்தார்கள் பெரும்பாலும் இதுவே இறுதிப்பதிவாகவும் அமையும் வாய்புள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.