Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவாக…..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவாக…..

ஈழத்தை திரும்பிப்பார்த்தல்…!

முள்ளிவாய்க்காலில் பெற்றெடுத்த போராட்டக்குழந்தைகளை வளர்த்தெடுத்தல்

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பரவியிருந்த பௌத்தம் இன்று தமிழர்களை அழித்துத் துடைக்க ஈழமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. அன்று வெளிக்கடைச் சிறையில் தமிழர்களின் உடல்கள் புத்தர் சிலைக்குமுன் வெட்டப்பட்டதுண்டங்களாக பலியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து எழுந்ததே கடந்த கால்நூற்றாண்டு காலப்போர். இன்று ஈழமெங்கும் தமிழர்களின் எலும்புக்குவியல்கள் மண்மூடிக்கிடக்க புத்தர் சிலைகள் வேக வேகமாக நிறுவப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்னும் கால்நூற்றாண்டுக்கு கட்டியம் கூற வேண்டியது உலகத்தமிழர்களின் பொறுப்பாகிறது.

இந்தியமோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனத்திலிருந்து தனிநாடு என்ற ஒரு கனவு அழிக்கப்படவேண்டுமென்றால் ஈழம் என்ற ஒரு கனவும் இருக்கக்கூடாது என்று போட்ட கணக்கிலேயே காய்நகர்த்தி வருகிறது. இலங்கையோ ஈழம் என்ற ஒன்று இருக்கும்வரை தமிழகம் மற்றும் இந்தியாவிலிருந்து நேரடி, மறைமுக அழுத்தங்கள் தன்மீது செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும், எனவே ஈழத்தை இல்லாது துடைத்தெறிந்துவிட துடிக்கிறது சிங்களம். உலகமோ அரசு அதிகாரமற்ற ஈழத்தமிழர்களை விட, அரசு அதிகாரமுடைய சிங்களமே இலங்கையை கூறுபோட உதவிகரமாயிருக்கும் என்பதால் சிங்களத்திற்கே தன்மனப்பூர்வ ஆதரவை வழங்கி வருகிறது.

ஆனால் மேற்குலகம் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட போர்க்குற்றம், உலகச்சட்டங்கள், மனித உரிமைகள் மீறப்படாமலிருப்பது போன்ற தடைகள் சிங்களத்தோடு நெருங்கி வருவதிலிருந்தும் அதனை தடுத்தபடியே உள்ளது. இதுவே உலகத்தமிழர்களின் ஒரே அரசியல் ஆயுதமாக இன்று கிடைத்துள்ளது. இந்தியா, இலங்கை, உலகம் மூன்றுமே ஈழத்தை அழித்தொழிக்க பாடுபடுகையில், போர்க்குற்ற வலையில் இம்மூன்றையும் பதில்கூற வைப்பதுவும், அதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசு மூலம் தாயகத்தில் வேகமாக அழிக்கப்படும் இனவாழ்வை பாதுகாப்பதும், அதனை உலக அரங்கில் முன்னிறுத்துவதும் மற்றும் ஈழநாட்டின் மீதான தமிழர்களின் பாத்தியதையை நிலைநாட்டுவதும் முன்னெடுக்கப்படவேண்டிய மூன்று கடமைகளாக உள்ளன.

இந்த திருப்புமுனை செயல்பாடுகளுக்கெல்லாம் காரணமாக அமைந்து, உலகவரலாற்றில் நீங்காத கறையாகப்படிந்து விட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வு விடுதலைப்புலிகளின் ராணுவத்தோல்வியை எடுத்துக்காட்டினாலும், அதனைத் தொடர்ந்த பண்ணாட்டு அரசியல் வெற்றியை கோடிகாட்டி நிற்கிறது. இந்தியா மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடித்திருக்கிறது. இலங்கையரசும் விடுதலைப்புலிகள் மீள்கட்டமைவதாகக்கூறி நெருக்கடி நிலை சட்டத்தை மேலும் இலங்கையில் நீடித்து உள்ளது. ஆக விடுதலைப்புலிகளின் தலைமை நீடிக்கிறது என்பதிலும், அதுதன் போராட்டப்பாதையை வேறு தளத்திற்கு எடுத்துச்சென்றுவிட்டது என்பதிலும் இந்த அரசுகளுக்கு சிறிதும் அய்யமே இல்லை. இன்று புலம்பெயர் தமிழர்களால் ஏர்படுத்தப்பட்டு வரும் அரசியல் திருப்பங்கள் (போர்க்குற்ற வலையில் இம்மூன்றையும் பதில்கூற வைப்பது, அதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசு மூலம் தாயகத்தில் வேகமாக அழிக்கப்படும் இனவாழ்வை பாதுகாப்பது, அதனை உலக அரங்கில் முன்னிறுத்துவது மற்றும் ஈழநாட்டின் மீதான தமிழர்களின் பாத்தியதையை நிலைநாட்டுவதும்) முள்ளிவாய்க்காலிலிருந்து விடுதலைப்புலிகள் விட்டுச்சென்ற போராட்டக்குழந்தைகள் என்பதில் அய்யமில்லை.

முள்ளிவாய்க்காலின் இந்த போராட்டாக்குழந்தைகளை வளர்த்தெடுப்பதே அடுத்த கால்நூற்றாண்டுக்கான தமிழர்களின் தேசங்கடந்த, உலகந்தழுவிய அரசியலாக இருக்கப்போகிறது என்பதிலும் அய்யமில்லை. இனியொரு முழுமையான ராணுவத்தாகுதலை ஈழத்திலிருந்து எதிரிகள் மீது தொடுக்க முடியாது என்பது வெள்ளிடை. இனியாவும் அரசியல் போராட்டக்களத்தில் எதிரிகளின் கால்களை எப்படிச் சிக்கவைப்பது என்ற தந்திரத்தாக்குதல்களே. இத்தகைய நிலை இருபத்தியைந்து ஆண்டுகளுக்குமுன் இருந்ததில்லை என்பதையும், விடுதலைப்புலிகள் விட்டுச்சென்ற சொத்துக்களாகவே இந்த போராட்டக்குழந்தைகளும், அரசியல்த்தந்திர களமும் தமிழர்களுக்கு விடப்பட்டிருக்கின்றன என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உள்ளது. இதற்காக கால்நூற்றாண்டுகளுக்காலத்திற்கும் அதிகமாக விடுதலைப்புலிகள் தங்கள் போராட்டத்தை காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட நிலைப்பாடுகள் அனைத்தையும் சரியென்றே சொல்லவேண்டியுள்ளது.

விழாத வீரமும் விட்டுக்கொடுக்காத மானமுமாக வெற்றிமேல் வெற்றி அடைந்து வந்த விடுதலைப்புலிகளைப் பார்த்து சிங்களத்தைவிட பெரிதும் அஞ்சிய வெள்ளை ஓநாய்களும், இந்திய நரிகளும் தங்கள் முழுவலுவையும் வரலாற்று ரீதியான தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியையும் பயன்படுத்தத் துவங்கினர். சிங்களத்திற்கு நிகராக வெள்ளை ஓநாய்களுக்கே விடுதலைப்புலிகளுக்கு தோல்வியைப் பரிசாகத் தரவேண்டுமென்ற வெறி மேலோங்கியிருந்தது. பேச்சுவார்த்தை அவர்களது பேசாத குழிபறிக்கும் கலையாக அமைந்தது. பேச்சுவார்த்தையின் வலைகள் சிங்களத்துக்கு சாதகமாகவும், ஈழத்துக்கு பாதகமாகவும் விரிக்கப்பட்டிருந்ததை முன்னூகித்த தேசியத்தலைவர் அடுத்தக்கட்டப்போராட்டத்திற்கு எப்போதோ தயாராகிவிட்டார் என்பதே உண்மை. இல்லையெனில் அவர் தன் இன்னுயிரை காப்பாற்றிக்கொண்டு செல்லவேண்டிய தேவையில்லை, களமாடி தன் சகோதரபந்தங்களோடு வீழ்ந்திருப்பார்; இறுதிவரை கொள்கையை குழிதோண்டி புதைக்காது இருந்திருக்க வேண்டியதில்லை, கிடைப்பது போதும் என கருணா, பிள்ளையான் வரிசையில் சேர்ந்திருப்பார்; இறுதிவரை போரை முன்னெடுத்துச் சென்றிருக்கவேண்டியதில்லை, இடையினில் சரணாகதி அடைந்து தன்குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பார்.

மேற்கண்டவற்றுள் யாதொன்றையும் செய்யாமல் கொண்ட லட்சியம் குறைந்துவிடாமல் பார்த்து அதனை, சதிபுரிந்த அனைத்து ஓநாய்களுக்கும், நரிகளுக்கும் சவால்விடும் வகையில் தன் மக்கள் கையில் இன்னும் தொடருமாறு ஒப்படைத்தாரே, அந்த தொலைநோக்குப்பார்வைக்கு ஈடில்லை. சதிபுரிந்த, துரோகம்புரிந்த எந்த சளக்கர்களும் விடுதலைப்புலிகள் ஒழிந்ததாக இன்று வரை கூறமுடியாமல் அவர்கள் மீதான தடையை நீடிப்பதிலேயே தங்கள் அரசியலை நகர்த்த முற்படுகின்றனர். புலிகளின் தமிழீழத்தாயகம் எனும் தாகம் இன்னமும் புயல்போல தொடர்ந்து வரும்போது இந்த வழிமுறையே தமக்கு பாதுகாப்பு என்று கருதுகின்றனர். தமிழீழத்தாயகத்தின் பேராளர்களை இனி எப்படி முடக்கலாம் என இப்போதே திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். எனவே மேற்குலகம் இனியொரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் எனபதும் திண்ணம்.

புலிகள் இருந்தவரை இலங்கையையும் ஈழத்தையும் அவர்களால் சூறையாட முடியவில்லை. இப்போது புலிகள் இல்லாதவிடத்து தமது சிங்களம் ஈழம் இணைந்த ஒருங்கிணைந்த சூறையாடலை முழுமைபெறச் செய்ய பிள்ளையான்களோடும், கருணாக்களோடும் பேசினால் மட்டும்போதாது. நாடுகடந்த தமிழீழ அரசுடன் நைச்சியமாக பேசி கவிழ்க்க வேண்டும். அதன் நாட்களை எண்ணச் செய்ய வேண்டும். அதற்க்காக வருவார்கள், மீண்டும் பேச்சுவார்த்தை எனும் பேராயுதத்தை எடுத்துக் கொண்டு. மீண்டும் வருவார்கள், தேசியத்தலைமையின் தொலைநோக்குத் திட்டத்தை தொலைத்துவிடும் துணிச்சலோடு.

அத்தகையதோர் களமே, இனிவரப்போகும் பேச்சுவார்த்தை எனும் களமே தலைமையும், தமிழினமும் இனி தங்கள் இலட்சியக்கொடியை உயர்த்திப் பிடிக்கும் களமாகும். அந்தக களத்தினில் முந்தைய முறைபோல இழப்பதற்கு கப்பல் கொள்வனவு இல்லை; கடற்படை, தரைப்படை, வான்படை என இல்லை; பெறுவதற்கு மட்டுமே இருக்கிறது பெருமதிப்புடைய ஈழத்தின் உரிமைகளை, இழந்த உரிமைகளை, இவ்வுலகம் இதுவரை தேசிய இனத்திற்கென்று வரையறுத்துள்ள உரிமைகளை! அது இலங்கையரசையும், இந்தியத்தையும் போர்க்குற்றவாளிகளென சட்டப்பதாகையை முள்ளிவாய்க்காலின் மீது ஆணையிட்டு உயர்த்திப்பிடிப்பதன் மூலமே சாத்தியமாகும். உரிமைகளைப் பெறுவது என்பது, இதுவரை உரிமைகளைப் பறித்தவர்களை உலகின்முன் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தாமல் சாத்தியமில்லை. இரண்டும் ஒருநாணயத்தின் இருபக்கங்கள்.

இந்த இருபக்கங்களையும் கண்காணும் உண்மைகளாக்கிட புலம்பெயர் ஆற்றல்களும், தமிழக சமுதாயமும், தாயகத்தின் தேர்தல் குழுக்களும் கொடுக்கும் அழுத்தத்திலேயே 2009-ம் ஆண்டின் – இந்த நூற்றாண்டின் பேரவலமான முள்ளிவாய்க்காலின் அழிவை….இல்லை, இல்லை அந்த பிரசவத்தில் வந்து விழுந்த, முள்ளிவாய்க்கால் பெற்றெடுத்த அந்த குழந்தைகளான போர்க்குற்றவாளிகளை தண்டிப்பது, நாடுகடந்த தமிழீழ அரசு மூலம் தாயக இனவாழ்வைப்பாதுகாப்பது, தாயகத்தின் மீதான பாத்தியதையை நிலைநாட்டுவது ஆகிய மூன்றையும் வளர்த்தெடுப்பது நடைபெறும் என்பதை ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் மனதில் நிறுத்தி செயலில் துணியவேண்டும். அன்று வெளிக்கடைச் சிறையில் தமிழர்களின் உடல்கள் புத்தர் சிலைக்குமுன் வெட்டப்பட்டதுண்டங்களாக பலியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து எழுந்த கடந்த கால்நூற்றாண்டு காலப்போர்போல இன்று வன்னிமக்களின் எலும்புகளின் மீது எழுப்பபடும் புத்தர் சிலைகள் மேலும் கால்நூற்றாண்டுகாலம் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என நிரூபித்திட இதுவே வழி.

தமிழகத்தை திரும்பிப் பார்த்தல்!

இந்திய அரசில் தமிழ்நாட்டுத் தமிழரின் உண்மை நிலை என்ன? மாற்றம் ஏற்பட தீர்வுகள் யாவை?

உலகில் எந்த அளவுக்கு உலகமயமாக்கல் குழப்பங்களை ஏற்படுத்தி போரட்டங்களை சிதைத்து வருகிறதோ, அந்தளவுக்கு எதிர்கால திட்டங்களும் போராடும் மக்களின் கைகளில் விரைந்து உருவாகி வருகின்றன. அவை பல்வேறு வடிவங்களில் உருவாகி வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதே இன்றைய தமிழ்தேசிய இனப்போராட்டம் எனலாம். தமிழர் தேசிய இனப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால் எங்கு நோக்கினும் ஒரு குழப்பமயம். உலகத்தமிழர் நடுவே ஒரு தெளிவற்ற போக்கு. தமிழ்நாட்டு தமிழர்கள் நடுவே ஒரு மந்த நிலை. ஈழத்தமிழர் நடுவே ஒரு கோமா நிலை. இன்று இதுதான் தமிழர் வாழ்வின் அடிநாதமாக இருக்கிறது.

ஆனால் இந்நிலையை மாற்றும் போக்குகள் இல்லாமலில்லை. ஈழத்தமிழர் தமிழரின் கோமநிலையைத் தவிர்த்து மற்றபடி உலகத்தமிழர்கள் தமது ஒருங்கிணைப்பை நாடுகடந்த தமிழீழ அரசு மூலம் காட்டி வருகின்றனர். இன்னமும் ஈழ விடுதலைப்போராட்டத்தின் உந்துவிசையாக அவர்கள் இருப்பதாக சிங்கள ஆட்சியாளர்களே புலம்பி வருவது உலகத்தமிழர்கள் மீதான நம்பிக்கையை பலமடங்கு பெருகச் செய்கிறது. புலம்பெயர் ஈழத்தமிழர்களே தமிழர் வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகின்றனர்.

ஆனால் இந்த நிகழ்வுப்போக்குகள் யாவற்றுக்கும் தலைமை வகிக்க வேண்டியது…..தாய்த் தமிழகம்தான். கெட்டவாய்ப்பாக தமிழ்நாடு தனது அந்த வரலாற்றுப்பாத்திரத்தை தொலைத்து விட்டது. உலகத்தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் தலைமை தாங்க வேண்டிய நிலையிலன்றி அவர்தம் நிலையை தமது உள்ளூர் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தரம் தாழ்ந்த அரசியலையே இதுகாறும் தமிழ்நாடு வளர்த்து வந்துள்ளது. இதற்கு காரணங்களாக தமிழ்நாடு இந்திய அரசால் ஆக்கிரமிக்கப்பட்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தனதாக பாவிக்க வேண்டிய நிலையிலிருப்பதும், இந்திய நடுவணரசின் இறையாண்மையை தனது இறையாண்மையாக பாவிக்க வேண்டியிருப்பதும் ஆகும். அதற்கேற்றாற்போல தமிழகத்தில் வாய்த்த காங்கிரசு மற்றும் திராவிடக் கட்சிகளின் சுயநலவாத, நிலவுடைமை – முதலாளிவர்க்க ஆட்சிப்போக்கினை சுட்டிக்காட்டுவது இன்றியமையாதது. 1967 வரையிலும் காங்கிரசின் கபடவேட ஆட்சி தமிழ்நாட்டுத் தமிழர்களின் தேசிய இறையாண்மை வெளிப்பாட்டை வன்கை கொண்டு ஒடுக்கியது. அதன்பின் தேர்தல் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரசார் இன்று வரையும் தமிழ் தேசிய இறையாண்மைக்கெதிராக தமது நிலவுடமை அதிகாரத்தை பயன்படுத்தி நடுவணரசோடு சேர்ந்துகொண்டு போராடும் தமிழர்களை ஒழித்துக்கட்டும் வேலையையே செய்து வருகின்றனர்.

அதே வேளையில் காங்கிரசின் இந்த போக்கினை எதிர்த்து களம்புகுந்த திராவிடக் கட்சிகளோ அதைவிட மோசமான வகையில் தமிழர்களின் இறையாண்மைப் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பினை கையிலெடுத்திருக்கின்றனர். தி.மு.க.வும் அதன் ஒட்டுப்படைக் கட்சிகளும் தமிழக அரசியலில் தமது இருப்பினை உறுதி செய்துகொள்ளவும், நடுவணரசில் தமது எலும்புத்துண்டுகளை சரிபார்த்து பொறுக்கிகொள்ளவும் மாநில அரசியலில் எதிர்ப்பதுபோல் காட்டினாலும், அனைத்திந்திய காங்கிரசின் அடியாளாகவே தமிழகத்தில் வேலை செய்துவருகின்றனர். இதன்மூலம் தம்மை திராவிடக் கட்சியினர் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற கூற்றினை மாற்றி வடக்கிற்கு நிகரான பெருமுதலாளிகளாக தம்மை வளர்த்துக் கொண்டனர். இவ்வாறு எல்லாவகையிலும் தெற்கு அரசியல்வாதிகள் வடக்கின் முதலாளிகளுக்கு போட்டியாக விளங்கினாலும், அரசியல் யாப்பின் வலிமையான கைப்பிடிகள் வடக்கு முதலாளிகளின் கையிலிருப்பதால் தம்மை அவர்களுக்கு கீழாக வைத்திருப்பதில் கூச்சமின்றி செயல்படுகின்றனர்.

காங்கிரசும்,அதன் மாற்றாக வந்த திராவிடக் கட்சிகளும் இவ்வாறு தமிழர் இறையாண்மை நலத்தை பலியிடுவதிலேயே தமது அரசியல் நலத்தை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். இதனால் உலகத்தமிழர்களுக்கு தலைமை தாங்க வேண்டிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாக, வெற்றுரையாளர்களாக இருக்கின்றனர் என்று சொன்னால் மிகையில்லை. தமக்கென்று ஓர் இறையாண்மை உன்டென்ற நினைப்போ, அதனை வெளியுறவுப் பார்வை கொண்டு நோக்கிடவேண்டும் என்ற விழிப்புணர்வோ தமிழகத்தில் இல்லை. அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட்டதனால்தான் ஈழத்தில் போராளிகள் தோன்றினர். இன்று அவர்தம் விடுதலைப் போராட்டம் புலம்பெயர் தமிழர் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதில் தமது பங்கினை செலுத்தவோ, துரிதப்படுத்தவோ தமிழகத்தமிழர்களுக்கு எந்த வக்கும் இல்லை. கருணாநிதி ராஜராஜசோழனை உருவகப்படுத்துவதன் மூலம் தமிழர் வாழ்வை தம் கையிலெடுத்துக் கொண்டு சூறையாடினார். எம்.ஜி.ஆரோ பார்ப்பனீயத்தின் பம்பரமாக மாறி சுழன்று கொண்டிருந்தார். ஈழத்தமிழர்களுக்கு உதவுவதாக பாவ்லா காட்டினார். ஆனால் தமிழகத்தில் ஏற்பட்ட புரட்சிகர அலைகளை ஒடுக்கினார். ஜெயலலிதாவோ தமிழர்களின் எல்லாவகையான தன்மதிப்பு எழுச்சிகளை நசுக்குவதிலும், ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கேவலப்படுத்தி சேதப்படுத்துவதிலும் தன் கடைமையை செவ்வனே ஆற்றினார்.

மாற்று அணியினர் என்று எதேனும் ஒரு கூட்டம் இந்நிலையில் ஆட்சிக்கு வருவார்களானால் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயா, காங்கிரசார் ஆகியோரை விட எந்த மாற்று வழியிலும் அவர்கள் செயல்பட முடியாது. ஏனெனில் என்னதான் இந்த அதிகாரப்பங்கீட்டுக்கும்பல்கள் வடக்கிற்கு போட்டியாக வளர்ந்தாலும் – வாழ்ந்தாலும் – ஆட்சிபுரிந்தாலும் ஆற்றல் வாய்ந்த அரசியல் யாப்பின் விதிகள் வடக்கின் கைகளில் பத்திரமாக இருக்கின்றன. அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் தெற்கில் எந்த ராஜராஜனுக்கும், ராஜேந்திரசோழனுக்கும் கிடையாது. இவர்கள் வேண்டுமானால் கனகவிஜயனை இமயத்திலிருந்து கல்லெடுத்து தலையில் சுமந்து வரச்செய்த பரம்ப்பரை நாமென்று மேடைகளில் இடிமுழக்கம் செய்யலாம். அதுவே ஒரு ஆதிக்கப்போட்டி, ஆக்கிரமிப்பு என்பதோ, அதனை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது என்பதோ அறிஞர்களான அண்ணாக்களுக்கோ தம்பிகளுக்கோ இங்கு கிடையாது. ஆனால் ஈழப்போராளிகளுக்கு அந்த விவரணை இருந்தது. அதனால்தான் ஆதிக்க நிலவுடைமைவாதி எல்லாளனை முன்மாதிரியாக் கொள்ளாமல் வெள்ளையரை எதிர்த்து வீரச்சமர் புரிந்த பண்டாரக வன்னியனை முன்மாதிரியாகக் கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்க முடிந்தது. ஆனால் கனக-விஜயனின் தோல்வியை தமிழினத்தின் நிரந்தர வெற்றியாக பாடிக்கொண்டிருந்தவர்களோ நடுவணரசு தனிநாடு கோருவோர் தேர்தலில் நிற்க தடைச்சட்டம் கொண்டுவந்தவுடன் கொள்கையை குழி தோண்டி புதைத்தனர். இனி எங்களுக்கு தனிநாடு வேண்டாம், தேர்தலில் நிற்க அனுமதித்தால் போதும் என்று சரணாகதி ஆகினர். கருணாநிதியோ ‘கொள்கையை கைவிடவும் துணிச்சல் வேண்டும்’ என்று ஈழப்போராளிகளுக்கு இப்போது அறிவுரை நல்குகிறார்! நடைமுறைக்கியைந்தபடியான கொள்கை என்பதே திராவிடக் கட்சியினரின் போக்காக இருந்து வருவதை இது உணர்த்துகிறது.

இவ்வாறு – அனைத்துத் துறைகளிலும் முன்னேறினாலும், அரசியல் யாப்பின் அடிப்படையில் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலை இலங்கையில் செய்யப்பட்டது போலவே இந்தியத்திலும் வெள்ளையர்களால் திறம்படச் செய்யப்பட்டது. தமது காலனித்துவ நலன்களுக்கு தமக்கு இணக்கமான வடஇந்திய ஆட்சியாளர்களின் ஆளுகையில் துணைக்கண்டம் முழுதும் இருப்பதே சரியென்று நினைத்த வெள்ளையர்கள் இந்தியத்தையும் கூட்டைமைப்பு என்று கூறினாலும், ஏதோ ஒரு வகையான ஒற்றையாட்சிக்கான சோதனைக்களமாக மாற்றி வைத்தார்கள்.

ஆக, கூட்டைமைப்பு என்ற பெயரில் கபடத்தனமாக ஒற்றையாட்சி திணிக்கப்பட்ட ஒரு அரசியல் சூழமைவில் ஒரு மாநிலம் என்று சொல்லத்தக்க பரப்பில் வாழும் தமிழ் மக்கள் இந்தியத்தில் உள்ள மற்ற எல்லா தேசிய இனங்களைப்போலவே தமது இறையாண்மையைப் பற்றிய விழிப்புணர்வு இன்றி, தமது அரசியலை வெளிநாட்டுறவில் சேர்த்துப் பார்க்க வாய்ப்பில்லாதவர்களாக, உலகத்தமிழர்களுக்கு வழிகாட்ட முடியாதவர்களாக, ஒரு தேசிய இனம் என்றால் ‘கிலோ என்ன விலை?’ என்று கேட்கும் நிலையில் திராவிடக்கட்சிகள் பேசும் பழம் பெருமைகளை மட்டுமே நினைத்துப் பார்க்குமளவுக்கு புதுப்பெருமைகளின் வரலாற்றுப் பதிவின்றி வாழ்ந்து வருகின்றனர்.

இன்று துணைக்கண்டத்தின் அரசியல் போக்கு வெகுவாக மாறி வருகிறது. இதுவரையிலும் தேசிய இனங்களையெல்லாம் ஆக்கிரமித்து வைத்து ‘தேசபக்தி’ என்ற பெயரில் வாய்ப்பூட்டு போட்டு பேசவிடாமல் செய்துவைத்திருக்கும் இந்திய நடுவணரசு, இப்போது தானே வாய்ப்பூட்டு போட்டுக்கொள்ளுமளவுக்கு சீனத்தின் கைகள் துணைக்கண்டத்தை சுற்றிவளைத்துகொண்டிருக்கின்றன. நேபாளம், மியான்மர், பாக்கிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் என்று அண்டை நாடுகள் யாவற்றிலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவை சுற்றிவளைக்கும் ‘முத்துமாலை’ நடவடிக்கையை சீனா முழுவீச்சில் நடாத்தி வருகிறது. ஒருதுருவ அமெரிக்க ஆதிக்கம் போய், பல்துருவ ஆதிக்க உலகு தோன்றியிருப்பதன் அடையாளமாக தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவைப் பொறுத்தவரை இனி சீனம்தான் வல்லரசு என்ற நிலை உருவாகிவிட்டது. இதன்முடிவாக அண்மைக்காலத்தில் வெளியாகிய ஒரு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வில் சீனா இந்தியாவை 26 தனிநாடுகளாகப் பிரித்துவிட்டால் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கு நல்லது என்று பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தது டெல்லியை வாயடைக்கச் செய்துவிட்டது. அதுசம்பந்தமாக டெல்லியிலிருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.

இந்த புதுப்போக்கினை உற்றுநோக்குபவர்கள் ‘இந்தியாவின் உதவியுடன்…………ஈழம் அமைப்போம்’, ‘இந்தியாவின் ஆசிபெற்று……..ஈழத்தமிழர் உரிமைகளை வென்றெடுப்போம்’ என்று ஒருபோதும் கூறமாட்டர். ஏனெனில் இந்தியாவின் உதவியும் ஆசிகளும் இனி இங்கு போராடும் எந்த தேசிய இனத்திற்கும் தேவையில்லை என்பதைத்தான் சீனத்தின் வெளிச்சம் நமக்கு காட்டுகிறது. இதை நிரூபிப்பதைப் போல ஜம்மு-காஷ்மிரை தனிநாடாக்கக் கோரும் ஜம்மு-காஷ்மிர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் சீன ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து தமது அமைப்புக்கு உதவி கேட்டபோது, சீன ராணுவ அதிகாரிகளும் மறுக்காமல் செய்வோம் என்றிருக்கின்றனர்.

அதுபோல் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியாவிற்குள்ளடங்கிய ஆட்சியில் தமிழர் தம் உரிமைகளை இன்று இருப்பதை விட எந்த வகையிலும் அதிகமாக பெற முடியாது. வடக்கு முதலாளிகளோடு வசந்தத்தை அனுபவிக்கும் தமிழ்நாட்டின் காங்கிரசாரும், திராவிடக் கட்சியினரும் ஏகாதிபத்திய நலன்களின் ஒருபகுதியாகத் தாம் விளங்கி தமிழக மக்களின் நலன்களை தொடர்ந்து நசுக்கியே வருவர். இப்போது தமிழகத்தை நோக்கி ஒரு பொற்காலம் வந்து கொண்டிருப்பதை யூகிப்பது சிரமமாக இருக்காது. இந்தியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட தமிழகத்தமிழர்கள் துணைக்கண்ட வெளியுறவுக் கொள்கை விளையாட்டை தாமே கைய்யிலெடுப்பதே அந்த பொற்காலம். ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எதுவோ அதுவே தமிழகத்தின் வெளியுறவுக் கொள்கை’ என்று கடந்த ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் புரிவதற்காக கருணாநிதி சொன்னது அவரது குடும்பத்திற்கும் காங்கிரசுக் கூட்டத்திற்கும் வேண்டுமானால் இன்பம் தருவதாக இருக்கலாம்.

ஆனால் இந்த திராவிடக் கட்சிகள் மற்றும் காங்கிரசுக் சிறுகும்பலைத்தவிர தமிழகத்தை ஆள மிகப்பெரும்கோடிக்கணக்கான எதுவமற்ற அல்லது நடுத்தரவர்க்க தமிழர்கள் துடித்துக் கொண்டுதானுள்ளனர். தங்களுக்கு அதிகாரம் வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். கருணாநிதி குடும்பமும், காங்கிரசுக் கூட்டமும் நந்திபோல அமர்ந்துகொண்டு தமிழகத்தின் புதிய அதிகார விரும்பிகள் மேற்கொண்டு செல்ல முடியாதபடி தடுத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போது புதிய அதிகார விரும்பிகள் சொல்லப்போவதென்ன்? ‘இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை எமது வெளியுறவுக் கொள்கை அல்ல’! என்பதே அவர்கள் முழக்கமாக இருக்கப்போகிறது. ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எதுவோ அதுவே தமிழகத்தின் வெளியுறவுக் கொள்கை’ என்று சொல்வோருக்கும், ‘இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை எமது வெளியுறவுக் கொள்கை அல்ல’ என்று சொல்வோருக்கும் இடையேயான முரண்பாடே பகையாக மாறி தமிழகத்தின் தலைவிதியை நாளை தீர்மானிக்கப்போகிறது. இதுவரை தாங்கள் கவர்ந்து வைத்திருக்கும் நிலங்களையும், ஏகாதிபத்திய தொழில் உரிமைகளையும் காப்பாற்றுவதற்காக நடுவணரசோடு ஒட்டிக்கொண்டிருப்பதை தேசபக்தி என்று சொல்வோருக்கும், சுமார் ஆயிரம் குடும்பங்களின் பிடியிலிருந்து பலலட்சக்கணக்கான ஏக்கர் தமிழகத்தின் நிலங்களை விடுவித்து பலகோடிக்கணக்கான தமிழர்களுக்கு அதனை பிரித்து வழங்குவதையும் ஏகாதிபத்திய ஒட்டுமொத்த தொழில் உரிமைகளை முள்வேலிமுகாம்களுக்குள் அடைக்க வருவோருக்கும் இடையே நடக்கப்போகும் போராட்டமே தமிழகத்தின் விடுதலைப் போராட்டமாக நாளை மலரப்போகிறது. ‘தடைச் சட்டங்கள் எம்மிடம் உள்ளன, உங்கள் கொள்கைகளை வழக்கம்போல் குழிதோண்டிப் புதையுங்கள்’ என்று சொல்வோருக்கும், ‘எமது கொள்கைகளால் உங்கள் தடைச்சட்டங்களை குழிதோண்டிப்புதைப்போம்’ என்று சொல்வோருக்கும் இடையேயான மோதலே இனி தமிழகத்தின் புதுப்பெருமைக்கான வரலாறாக மாறவிருக்கிறது.

இப்போது சீனம் துணைக்கண்டத்திற்கு அணிவிக்கும் முத்துமாலையில் நமக்குரிய முத்தினை தேர்ந்தெடுப்பதுவே முரண்பாட்டை, பகையை, போராட்டத்தை, மோதலை நமக்கு சாதகமாக மாற்றவல்லது என்பது சொல்லாமலேயே விளங்கும். இந்தியாவின் உதவிகளோ ஆசிகளோ இங்கு செல்லாக்காசுகள். அந்நிலையில் இன்று இலங்கை சீனத்திற்கு எந்தளவு முதன்மைத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ, அதைவிட தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகள் பாதுக்காப்பு வாய்ந்தனவாக விளங்கும். அத்தகையதோர் சூழலே இலங்கையை நெம்பித் தள்ளிவிட்டு ஈழத்தை தனிநாடாக மலரச்செய்யும் சூழல். இன்னும் இரண்டு முதல் இருபது ஆண்டுகளுக்குள் சூல் கொள்ளப்போகிற இந்தச் சூழலின் காலமே தமிழக மற்றும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பொற்காலமாக விளங்கும் என்றால் மிகையில்லை. இந்தப் புரிதலிலிருந்து தமிழகத்தில் இன்று வெறும் பார்வையாளர்களாக மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள், உலகத்தமிழர்களுக்கு வழிகாட்ட முடியாத, ஈழத்தமிழர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையிலிருக்கும் தமிழர்கள் தமது தலைமைப் பாத்திரத்தைப் பெற இன்று மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் ஐந்து ஆகும். அவை:

1.இந்திய அரசில் கூட்டாட்சி அமைப்பின்கீழ் தமிழகம் அடையவேண்டிய உரிமைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை கட்டியெழுப்புவது. தமிழ் தேசிய இறையாண்மைக்கெதிராக விளங்கும் கருணாநிதி குடும்பம், ஜெயா கும்பல் மற்றும் காங்கிரசு காடைகூட்டம் ஆகியோரை தொடர்ந்து பெரும்பான்மை தமிழர்கள் நடுவே அம்பலப்படுத்தி வருவது. தமிழர் தன்னுரிமைக்கான குரலை தவறாமல் எழுப்பமுடிந்த இடத்தில் எழுப்புவது. இவை அனைத்தையும் அமைதி வழியில் செயல்படுத்துவது.

2.ஈழத்தமிழர்களுக்கான பந்நாட்டு அரங்கில் தமது தலைமைப் பாத்திரம் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் தொடர்ந்தும் ஈழ ஆதரவு அலையைத் தக்கவைப்பதன் மூலம் தமிழக-தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடிநாதமாக அதனை பயன்படுத்திக்கொள்ளல்.

3.உலகத்தமிழர்களுக்கான மற்றும் ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமைக்கான மாநாடுகளை தொடர்ந்தும் தமிழகெங்கும் நடத்துவதன் மூலம் (ஏற்கனவே தஞ்சாவூரில் நெடுமாறன் தலைமையிலும், கோவையில் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையிலும் நடந்தைப் போன்று) உலகத்தமிழர்களின் காப்பாளர்கள் கருணாநிதி குடும்பம் இல்லை என்றும், உலகத்தமிழர்களின் தலைவர் கருணாநிதி இல்லை என்றும் தொடர்ந்து நிரூபித்து வருவது.

4.இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள விடுதலை ஆதரவு அணிகளுடன் சேர்ந்து செயல்படுவது. பிற மாநில ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு தோள் கொடுப்பது. தமிழர் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பிறமாநில ஆற்றல் குழுக்களை திசை திருப்புவது (எ.கா.: தற்போது ‘நாம் தமிழர்’ கட்சியினர் மும்பையில் நடிகர் அமிதாபட்சன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், அவரை தமிழர்களின் உணர்வுக்ளுக்கு ஆதரவாக சிந்திக்கிறேன், நடவடிக்கை எடுக்கிறேன் என்று பேச வைத்திருப்பதும் இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்).

5.விரைந்து எழுந்துவரும் துணைக்கண்ட ஆதிக்கப்போட்டியில் தமிழகத்தின் வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டி ஆதிக்கவலையில் தமிழர் இறையாண்மைக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை ஏற்படுத்தி இந்தியாவின் போட்டிநாடுகளோடு பேரம்பேசும் ஆற்றலை உருவாக்கி வளர்த்துக் கொள்ளல்.:

http://nilavarasu.wordpress.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஈழத்தமிழனும் மிகவும் ஆழமாக யோசிக்க வேண்டிய பல விடயங்களை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

உலகமோ அரசு அதிகாரமற்ற ஈழத்தமிழர்களை விட, அரசு அதிகாரமுடைய சிங்களமே இலங்கையை கூறுபோட உதவிகரமாயிருக்கும் என்பதால் சிங்களத்திற்கே தன்மனப்பூர்வ ஆதரவை வழங்கி வருகிறது

சிந்திக்க வேண்டிய வரிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.