Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான ஆண்களை ஏன் காதலிக்கிறார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான ஆண்களை ஏன் காதலிக்கிறார்கள்?

ஜி. ஆர். சுரேந்தர்நாத்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவுடனேயே எனது மனைவி மிகவும் பரபரப்பாக, "ரமலத் உண்ணாவிரதம் இருக்கப்போறாங்களாமே? " என்றாள். நான் குழப்பத்துடன், "ரமலத் யாரு?" என்றேன். "காந்தி யாரு?" என்று நான் கேட்டது போல் என்னை முறைத்துவிட்டு, "ரமலத் யாருன்னு தெரியாதா? அப்புறம் பேப்பர், புக்ல எல்லாம் என்னத்ததான் படிக்கிறீங்க? ரமலத், பிரபுதேவாவோட ஒய்ஃப்." என்றாள். என் மனைவியின் பொதுஅறிவு வீச்சைக் கண்டு எனக்குப் புல்லரித்துப்போனது. ~~ஏன் உண்ணாவிரதம் இருக்காங்களாம்?" என்றேன். "பிரபுதேவா நயன்தாராவ லவ் பண்றத வெளிப்படையா சொல்லிட்டாராம். அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு உண்ணாவிரதம் இருக்கப்போறாங்கன்னு இன்னைக்கி ‘மாலைமலர்’ல போட்டுருக்காமே…" என்றாள். நான், "தெரியல…" என்பதோடு அந்தப் பேச்சை நிறுத்திக்கொண்டேன்.

நடைமுறையில் உள்ள சமூக விதிமுறைகளை மீறும் ஒரு சிக்கலான காதலும், அதனால் சுரக்கப்படும் ஒரு மனைவியின் கண்ணீரும் கோடிக்கணக்கான மக்களுக்கு வெறும் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு செய்தியாகும் அபத்தம் என்னை உறுத்தியது. சினிமா நட்சத்திரங்கள் என்பவர்கள், அந்தரங்கம் மறுக்கப்பட்டவர்கள். அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், திரைக்கு வெளியிலும் அவர்கள் தொடர்ந்து ஒரு கேளிக்கைப் பொருளாகவே இருக்கவேண்டியிருக்கிறது.

இந்த வார ‘கல்கி’ வார இதழில் நடிகை ஊர்வசி கூறியிருந்த ஒரு விஷயத்தைப் படித்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. நடிகை சில்க் ஸ்மிதா உச்சத்தில் இருந்த காலத்தில், ஆந்திராவில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். உடம்பில் டூ பீஸ் ஆடையை அணிந்துகொண்டு, மேலே நீளமான பாம்பு உடையை அணிந்துகொண்டு நடனமாடுவது போல் காட்சி. பல மணி நேரப் படப்பிடிப்பில் இருந்த சில்க்கிற்கு திடீரென்று பாத்ரூம் போகவேண்டிய அவஸ்தை. அப்போது கேரவன் வசதியெல்லாம் கிடையாது. அருகில் பாத்ரூம் வசதியும் இல்லை. சுற்றிலும் ஆண்கள் திருவிழாக் கூட்டம் போல் கூடியிருந்ததால் பக்கத்திலும் ஒதுங்கமுடியாது. மேனேஜருக்கு விஷயம் தெரிய வந்து, ஒரு காரில் ரகசியமாக சற்று தூரத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பெரிய கொல்லைப்புறத்தில், மதில் சுவருக்கு உள்ளே ஆட்கள் யாரும் இல்லை என்ற தைரியத்தில் பாம்பு உடையைக் கழற்றி வைத்துவிட்டு, அவர் இயற்கை உபாதையைத் தணித்துக்கொண்டு நிமிர்ந்தால், மதில் சுவர் முழுவதும் ஆண்களின் தலைகள்(இதை தட்டச்சு செய்யும்போதே மனதிற்குள் மிகவும் சங்கடமாக உணர்கிறேன்.). அவர் "ஐயோ கடவுளே…" என்று கத்தியிருக்கிறார். மேனேஜர் ஓடிவந்து ஒரு ஆடையை சில்க்கின் மீது போத்தி காருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சில்க் காரில் கதறிக் கதறி அழுதிருக்கிறார். இதற்குக் காரணமான ஆண்களை என்ன செய்யலாம்?

எவ்வளவு கொடுமையான சூழ்நிலை பாருங்கள். புகழ்பெற்ற நடிகையாக இருந்ததற்கு அவர் கொடுத்த மிகப் பெரிய விலை. ஒரு திரை நட்சத்திரமாக இருந்துகொண்டு, இயற்கை உபாதையைத் தணித்துக்கொள்வதற்கான அந்தரங்கம் கூட மறுக்கப்படும் நிலையில், நயன்தாரா போன்ற பிரபலமான நடிகையும், பிரபுதேவா போன்ற புகழ்பெற்ற நடிகரும் இம்மாதிரியான காதலில் ஈடுபடுவது எல்லாம் மிகவும் சிக்கலான காரியம்தான். இதில் பிரபுதேவா விவகாரம், வெறும் காதல் விவகாரம் மட்டும் அல்ல. அதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் சினிமா நட்சத்திரங்கள். மேலும் அதில் பிரவுதேவாவுக்குத் திருமணமாகி விட்டதால், அது ஒரு சீரியல் கதைக்குரிய சுவாரஸ்யத்தை நமது மக்களுக்கு அளிக்கிறது. அதிலும் அதில் சம்பந்தப்பட்ட பெண்கள் ஓப்பன் பேட்டிகள் எல்லாம் அளிக்க… அடுத்து என்ன என்ற ஆர்வத்தை அது சாதாரண மக்களிடையே கிளப்பிவிட்டது.

இப்போது பிரபுதேவாவே தனது காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்துவிட… இட்ஸ் அஃபிஷியல் நௌ. இப்போது க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருப்பதால், விஷயம் மீண்டும் சூடு பிடித்துவிட்டது. பொதுவாக அடுத்தவர் அந்தரங்கம் பற்றி பொதுவெளியில் விவாதிப்பதை நான் நாகரிகமாக நினைக்கவில்லை. ஒரு துவக்கத்திற்காகத்தான் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டேனே தவிர, மற்றபடி இவ்விஷயத்தில் என் கருத்து இதுதான்: இது அவர்களுடைய சொந்த வாழ்க்கை. இதனால் விளையும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் அவர்களே பொறுப்பு. அது சரியோ, தப்போ அது பற்றிக் கருத்துக் கூற நமக்கு உரிமை இல்லை. எனவே இத்துடன் இந்த விஷயத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இது ஒன்றும் நம் சமூகத்தில் புதிய விஷயம் அல்ல. இது ஆங்காங்கே, அவ்வப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம்தான்(லேட்டஸ்ட் உதாரணம் பூவரசி கேஸ்). பிரபுதேவாவும், நயன்தாராவும் சினிமா நட்சத்திரங்களாக இருப்பதாலேயே இந்த செய்திக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது. மற்றபடி நான் கல்லூரியில் படித்த காலத்திலிருந்து தற்போது வரை திருமணமான ஆண்களைக் காதலிக்கும் இது போன்ற பெண்களைப் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டும், நேரில் பார்த்துக்கொண்டுமிருக்கிறேன். ஆனால் அதில் பெரும்பாலானோர் திருமணம் வரை செல்லாமல், வெறும் ரகசிய உறவாகவே முடிந்துபோவதால் அவை கடைசியில் வெறும் கிசுகிசுப்பாகவே முடிந்துவிடும். மிகச் சிலரே திருமணம் வரைக்கும் வருகிறார்கள்.

வேறு ஆள் கிடைக்காததால், வெறும் செக்ஸ் சுகத்திற்காக மட்டும் பழகிவிட்டுப் பிறகு பிரிந்துவிடும் பெண்களைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் சில பெண்கள், ஒரு ஆணுக்குத் திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் மிகவும் சீரியஸாக அவனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஏன் விரும்புகிறார்கள்? ஏனெனில் மிகப் பெரும்பாலும் நமது ஆண்கள், அந்தப் பெண்களை உடல் சுகத்திற்காக சிறிது காலம் அனுபவித்துக் கொண்டிருந்துவிட்டு, விட்டுவிடுவார்களே தவிர, பொண்டாட்டி, பிள்ளையை எல்லாம் விட்டுவிட்டு வந்து திருமணம் செய்துகொள்பவர்கள் மிகவும் அரிதுதான். இருப்பினும் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து, இளம் பெண்கள் தன் சம வயது இளம் ஆண்களை எல்லாம் விட்டுவிட்டு வயதான, குழந்தைகள் பெற்ற ஒருவனை ஏன் காதலிக்கிறார்கள்? யோசித்து, யோசித்துக் குழம்பி, "அதான் சாமி, எனக்கும் தெரியல…" என்று இக்கட்டுரையை முடித்துக்கொண்டுவிடலாமா என்று ஒருகணம் நினைத்தேன். இருப்பினும் அப்படியெல்லாம் விட்டுவிடமுடியுமா?

எனதருமை நண்பர்களே… இனி நான் சொல்லப்போகும் விஷயங்கள் அனைத்தும், பொதுவாக திருமணமாகாத இளம் பெண்கள், திருமணமான ஆண்களை ஏன் காதலிக்கிறார்கள்? என்பது பற்றியதுதானே தவிர, இந்தக் காரணங்களுக்கும் பிரபுதேவா-நயன்தாரா காதலுக்கும் யாதொரும் சம்பந்தமும் இல்லை.

முதலில் "why young women attracted to married men?"என்று போட்டு கூகுளில் ஏதாவது சிக்குமா என்று கொஞ்சம் சர்ச்சிப் பார்த்தேன். பல சைட்டுகளிலும் mate copying என்ற பதத்தை உபயோகிக்கிறார்கள். லூயிஸ்வில்லி(உச்சரிப்பு சரியா?) பல்கலைக்கழகம் மேற்கொண்டதொரு ஆய்வில் என்ன தெரிய வந்ததென்றால், ஏற்கனவே ஏதோ ஒரு சிறப்பான காரணத்துக்காக ஒரு பெண்ணால் காதலிக்கப்பட்டுத், திருமணம் செய்துகொள்ளப்பட்டவன், ஒரு சிறந்த ஆணாகத்தான் இருக்கவேண்டும் என்று இளம் பெண்கள் கருதுகிறார்களாம். இதைத்தான் மேட் காப்பியிங் என்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட நாம் ஸோனி டி.வி வாங்குவது போன்றது இது. ஏற்கனவே சில சிறப்பான காரணங்களுக்காகப் பலரும் அதைப் பயன்படுத்துவதால், நாமும் அதை வாங்குகிறோம் அல்லவா? அதுபோல் ஆணும் இங்கு வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்ட ஒரு பிராண்ட் போல் ஆகிவிடுகிறான். ஆனால் இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களே என்பதால், ஏற்கனவே ஒரு பெண்ணால் காதலிக்கப்பட்டவன் என்ற வாதம் இங்கு அடிபட்டுப் போகிறது. ?"

அடுத்துச் சொல்லும் பல காரணங்கள் செக்ஸ் சம்பந்தப்பட்டவை. மேலை நாடுகளில் பார்த்த பத்தாவது நிமிடத்திலேயே, படுக்கையறைக்குள் நுழைந்து எல்லா மேட்டரையும் முடித்துக்கொண்டுதான் ~ ‘ஐ லவ் யு’ என்றே சொல்கிறார்கள். ஆனால் இந்தியாவில் காதலுக்குப் பிறகே காமம் என்பதால் அந்த வாதத்தையும் இந்தியர்களுக்கு பொருத்த முடியாது.

?"

இவ்வாறு அதில் கூறப்படும் பல காரணங்கள், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தைச் சேர்ந்தது என்பதால், இந்தியப் பெண்கள் ஏன் இதில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து நாமே வேறு ஒரு கண்ணோட்டத்தில் சிந்தித்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முதலில் சாதாரணமான காதல் குறித்து சில வார்த்தைகள். ஒரு ஊரில் நூறு ஆண்-பெண் ஜோடிகள் நெருக்கமான நண்பர்களாகப் பழகிக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் நிச்சயம் ஐம்பது ஜோடிகளுக்காவது காதல் வந்து, இவனை அல்லது இவளைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அந்தக் காதலைச் சொல்லவிடாமல் பல மனத்தடைகள் தடுக்கின்றன. முதலில் சாதி, மதம் மற்றும் அந்தஸ்து வேறுபாடுகள். அதாவது உள்ளுக்குள் அவன் மீது காதல் வந்துவிட்டாலும் கூட, இந்த வேறுபாடுகளைக் கருத்தில்கொண்டு அந்தக் காதலை டிக்ளேர் செய்யாமலே பிரிந்துவிடுவர். அடுத்து மிகப்பெரிய மனத்தடை பெற்றோர்கள். பெற்றோர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்று நிச்சயம் அவர்கள் உள் மனதுக்குத் தெரிந்தால், காதல் வந்தாலும் கூட அதை மறைத்துக்கொண்டு பிரிந்து விடுவர். ஆக, காதல் வந்த ஐம்பது ஜோடிகளில், 40 ஜோடிகள் மனதில் காதல் வந்த பிறகும் கூட, பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு தங்கள் காதலைத் தெரிவிக்காமலே இருந்துவிடுவர். இதில் பத்து ஜோடிகள்தான் மனத்தடைகளைக் கடந்து வந்து காதலிக்கும்.

ஓகேவா? இப்போது ஒரு திருமணமாகாத இளம் பெண்ணும், ஒரு திருமணமான ஆணும் நெருக்கமாகப் பழகிக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உண்மையில் காதல் என்பது யாருக்கு, யார் மீது வேண்டுமானாலும் ஏற்படக் கூடும். ஒரு ஆணும், பெண்ணும் நெருக்கமாகப் பழகிக் கொண்டிருக்கும்போது அவர்கள் திருமணமானவர்களாகவே இருந்தாலும் கூட, சில குணங்கள் மிகவும் பிடித்துப்போனால், ஏதோ ஒரு கணத்தில் நிச்சயம் ஒரு சிலருக்கு அது காதலாக மாறக்கூடும்(ஆனால் இதை வெளியில் சொன்னால் செருப்படி விழும் என்பதால், அதைப் பற்றி யாரும் வெளிப்படையாக விவாதிப்பதில்லை.) நாம் விதிக்கப்பட்ட ஒரு முறையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதை மீறிச் செல்லும்போது பல பிரச்சினைகளை சந்திக்கவேண்டும் என்பதாலேயே பலரும் தங்கள் உணர்வுகளை அடக்கிக்கொண்டு அமைதியாகிவிடுகிறார்கள். இதில் பலரும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சென்றுவிட்டு, சமூகம் வரையறுத்துள்ள எல்லையை மீறுவது தெரிந்தவுடன் சைலண்ட்டாக மீண்டும் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிவிடுகிறார்கள். ஆக… இங்கு முந்தைய பத்தியில் சொன்ன பல மனத்தடைகளைப் போல், ஒரு ஆணுக்குத் திருமணமாகியிருப்பது என்பதும் ஒரு பெரிய மனத்தடை. சாதாரணக் காதலில் காணப்படும் பல்வேறு மனத்தடைகளை(குடும்பம், அந்தஸ்து…) நூற்றில் ஒருவர் கடந்து வருவதைப் போல், பழகிக்கொண்டிருக்கும் ஆண் திருமணமானவன் என்ற மனத்தடையையும் மிகவும் தில்லான ஒரு பெண் கடந்து வரக்கூடும். ஆனால் அவர்கள் லட்சத்தில் ஒருவராகவே இருப்பர்.

அடுத்த காரணமாக நான் நினைப்பது, பொதுவாக நமது பெண்களின் மனோபாவம். ஒருவன் தன்னைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு அவனுக்கு யாரும் கிடையாது, அவளுக்காக அவன் எல்லாவற்றையும் துறந்துவிடவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள். பெற்றோர்கள், சகோதர-சகோதரிகள், நண்பர்கள், புத்தகங்கள், சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்துவிட்டு எந்நேரமும் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள். அதிலும் ஒரு ஆண் தனக்காக மனைவி மற்றும் குழந்தைகளைக் கூட விட்டுவிட்டு வரத் தயாராக இருக்கிறான் என்று தெரியவரும்போது அவர்களின் அந்தரங்க தன்முனைப்பு மிகவும் சந்தோஷமடைகிறது. நமக்காக பொண்டாட்டி.. பிள்ளையையே விட்டுவிட்டு வாரான் எனும்போது அவர்களைப் பற்றிய ஒரு உயர்ந்த மனோபாவம் உருவாகிவிடுகிறது. சுருக்கமாச் சொல்லணும்னா, அவங்க போதைக்கு நம்பாளுங்க ஊறுகாய்யாய் ஆயிடுறாங்க.

அடுத்த அந்த தனிப்பட்ட பெண்களின் வாழ்க்கைச் சூழல். அவர்களுடைய டீன்ஏஜ் பருவத்தில், சில டீன் ஏஜ் பையன்களுடன் பழகி அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்… அல்லது காதலிக்கும் இச்சை இருந்தும் தன்னைக் காதலிக்கும் ஒரு சம வயது ஆணை அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளாமலே இருத்தல்…. குடும்பத்தில் ஏதாவது பெரிய பிரச்சினைகள் இருந்து, மிகவும் வெறுப்பாக இருக்கும் தருணத்தில், ஒரு முதிர்ந்த ஆண் சொல்லும் ஆறுதலான பேச்சுகள் போன்றவை உபரிக் காரணங்களாக இருக்கலாம்.

அடுத்த இந்த முதிர்ந்த ஆண்கள் குறிபார்த்து விடும் அம்புகள். அதாவது ஒரு திருமணமான ஆண், ஒரு இளம்பெண் தன்னை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்த பிறகு, இது வரையிலும் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகிய வாழ்க்கை உருவாக்கிய அனுபவங்களின் அடிப்படையில், எந்த ஸ்விட்சு போட்டா, எந்த லைட்டு எரியும் என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியும். அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொள்ளும் சில முயற்சிகளாலும் பெண்கள் அவர்களைக் காதலித்து விடக்கூடும்.

சரி… இது சரியா? தவறா? யோசித்துப் பார்த்தால் எனது பதில்: தெரியவில்லை. சென்னையின் கடும் போக்குவரத்து நெருக்கடியை நீங்கள் அறிவீர்கள். இதில் எங்கும் நிற்காமல், சிக்னல்களை மதிக்காமல், வளைந்து, வளைந்து வேகமாக, த்ரில்லாக பைக் ஓட்டவேண்டும் என்று பலருக்கும் ஆசைதான். ஆனால் விபத்துகளை நினைத்து பயந்து, அனைவரும் அப்படி செய்வதில்லை. சில இளைஞர்கள் மட்டுமே ரிஸ்க் எடுத்து இம்மாதிரியான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் இளம்பெண்கள் என் கண்களுக்கு அந்த பைக் ஓட்டும் இளைஞர்களாகவே தெரிகிறார்கள்.

இதனைப் படித்துக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு நியாயமாக ஒரு எண்ணம் தோன்றும். திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான ஆண்களை விரும்புவதற்கான காரணம் எல்லாம் இருக்கட்டும். திருமணமான ஆண்கள், ஏன் இளம் பெண்களை விரும்புகிறார்கள்? என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும். எனக்கும் அது பற்றி எழுத மிகவும் ஆசையாகத்தான் உள்ளது. நானும் ஒரு ஆண் என்ற முறையில், அது பற்றி இன்னும் ஆழ்ந்து, ஆதாரபூர்வமாக, சூப்பராக ஒரு தனிக்கட்டுரையே எழுதமுடியும். ஆனால் பாருங்கள்… எனக்குத் திருமணமாகிவிட்டது.

ஏற்கனவே இன்று காலையில்தான் ஒரு பிரச்சினையில் சிக்கி மீண்டு வந்துள்ளேன். கடந்த சனிக்கிழமை வெளிவந்த ‘ஜூனியர் விகட’னில் நடுப்பக்கத்தில், ஒரு அனுஷ்கா ஸ்டில்லைப் போட்டிருந்தார்கள். நான் பாட்டுக்கு அனுஷ்காவின் முதுகைப் பார்த்துவிட்டு கமுக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் பாருங்கள் ‘இந்தக் கேடு கெட்ட கண்ணில் ஒரு காட்சி தென்பட்டுவிட்டது. அனுஷ்காவின் ஜாக்கெட்டின் பின்பக்கம் கையும், முதுகுப்பக்கமும் இணையும் இடத்தில் ஒரு ஊக்கு(பின்)போட்டு அட்ஜஸ்ட் செய்திருந்தார்கள். எனக்கு மிகவும் ஆச்சர்யம். பொதுவாக சினிமாவில் அவசரத்துக்கு இந்த மாதிரி பின்போட்டு சமாளிப்பார்கள். அது காட்சிகள் வேகமாக ஓடும்போது தெரியாது. ஆனால் ஒரு ஸ்டில் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி ஊக்கு தெரிய ஸ்டில்லை வெளியில் விடுவார்களா? இல்லை. ..யார் கண்ணிலும் படாமல் எனது தேவ கண்களில் மட்டும் பட்டுவிட்டதா? இல்லை ஒரு டிசைன்தான் ஊக்கு போன்று தோற்றமளிக்கிறதா? என்ற தத்துவக் குழப்பத்தில், நான் வெள்ளந்தியாக எனது மனைவியைக் கூப்பிட்டு படத்தைக் காண்பித்து, "இது ஊக்கா… இல்ல டிசைனா?" என்று கேட்டேன். பதிலுக்கு அவள் என்னைக் கடுமையாக முறைத்தாள்.

அவளுடைய முறைப்புக்கு நியாயமான காரணம் உள்ளது. ஏனெனில் முந்தைய நாள்தான் நான் அலுவலகம் விட்டு வரும்போது, வீட்டுக்கருகில் உள்ள ஒரு சாலையில், யதார்த்தமாக ஒரு அடித் தொலைவில் எனது மனைவி எதிர்ப்பட்டும், அவள் என்னைக் கவனித்து கைதட்டிக் கூப்பிட்டும் கூட, ஏதோ ஒரு சிந்தனையில் நான் அவளைக் கவனிக்காமல் வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்துவிட்டேன். அதனை மனதில் வைத்துக்கொண்டு, "தாலி கட்டுன பொண்டாட்டி, கல்லு மாதிரி முன்னாடி நிக்கிறது கண்ல படல. அனுஷ்கா ஜாக்கெட்ல இத்தனூன்டு இருக்குற ஊக்கு மட்டும் கரெக்டா தெரியுது… அப்படி நுணுக்கமா பாக்குறீங்க?" என்று ஒரு எகிறு எகிறினாள். இப்படி ஏற்கனவே பிரச்சினையாக இருக்கும் சூழ்நிலையில், ஒரு கட்டுரை எழுதுவதற்காக எல்லாம் மனைவியிடம் மிதிபட நான் தயாராக இல்லை என்பதால் குட் பை மை ஃப்ரெண்ட்ஸ்.

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3457

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அனுபவத்துக்கு உள்ள மவுசுதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான ஆண்களை ஏன் காதலிக்கிறார்கள்?

அனுபவமில்லாதவர்கள்.... சொதப்பிப் போடுவார்கள் என்னும் பயம் தான் காரணம்.

ஒரு நேர் முகத் தேர்வுக்குப் போனாலே... முன் அனுபவம் உண்டா எனக் கேட்கிறார்கள்.

திருமணம் என்பது ஆயிரங் காலத்துக்குப் பயிர்.

அதனை முன் அனுபவமில்லாதர்களிடம் கொடுப்பது சரியல்ல.

அனுபவமில்லாதவர்கள்.... சொதப்பிப் போடுவார்கள் என்னும் பயம் தான் காரணம்.

ஒரு நேர் முகத் தேர்வுக்குப் போனாலே... முன் அனுபவம் உண்டா எனக் கேட்கிறார்கள்.

திருமணம் என்பது ஆயிரங் காலத்துக்குப் பயிர்.

அதனை முன் அனுபவமில்லாதர்களிடம் கொடுப்பது சரியல்ல.

அடடா என்ன ஒரு ஆரோக்கியமான கருத்து. :)

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் ஆன ஆண்கள் தாங்கள் திருமணம் ஆனதை மறைக்கிறது அல்லது தனது முதல் பொண்டாட்டி தனது ரசனைக்கு ஏற்றவள் மாதிரி இல்லை என சொல்லி மற்றப் பெண்ளுக்கு அவர்கள் மேல் அனுதாபம் வரச் செய்கிறது...கடைசியில் மூத்ததும் இல்லை,இரண்டாவதும் இல்லை நடுத் தெருவில் நிற்கிறது :)

  • கருத்துக்கள உறவுகள்

அடடா என்ன ஒரு ஆரோக்கியமான கருத்து. :)

இப்ப சிலர்... பொல்லு எடுத்துக் கொண்டு வரப் போறார்கள்..... தப்பிலி.schlagen.gif:D:D

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் ஆன ஆண்கள் தாங்கள் திருமணம் ஆனதை மறைக்கிறது அல்லது தனது முதல் பொண்டாட்டி தனது ரசனைக்கு ஏற்றவள் மாதிரி இல்லை என சொல்லி மற்றப் பெண்ளுக்கு அவர்கள் மேல் அனுதாபம் வரச் செய்கிறது...கடைசியில் மூத்ததும் இல்லை,இரண்டாவதும் இல்லை நடுத் தெருவில் நிற்கிறது :D

நல்ல ஐடியாக்கள். என்றாலும் இப்படியான ஐடியாக்கள் வேர்க் அவுட்டாகினால் நடுத்தெருவில் நிற்கிறது பெண்கள்தான் :)

அனுபவமில்லாதவர்கள்.... சொதப்பிப் போடுவார்கள் என்னும் பயம் தான் காரணம்.

ஒரு நேர் முகத் தேர்வுக்குப் போனாலே... முன் அனுபவம் உண்டா எனக் கேட்கிறார்கள்.

திருமணம் என்பது ஆயிரங் காலத்துக்குப் பயிர்.

அதனை முன் அனுபவமில்லாதர்களிடம் கொடுப்பது சரியல்ல.

:):D:D

Edited by வீணா

இப்ப சிலர்... பொல்லு எடுத்துக் கொண்டு வரப் போறார்கள்..... தப்பிலி.schlagen.gif:D:D

.

நாங்களும் பொல்லு குடுத்து ஓடினால் எல்லாம் சரியாயிடும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.