Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின் குழப்பங்களும் வித்தியாதரனின் முதலமைச்சர் கனவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் குழப்பங்களும் வித்தியாதரனின் முதலமைச்சர் கனவும்

முத்துக்குமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உடைகின்றதா என்ற சந்தேகம் அரசியல் ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. இறுதியாக கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளே இச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

அக்கூட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் ஒரு கூட்டத்தில் அது முற்றி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையே கைகலப்பு இடம்பெறும் அளவிற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் செயற்பட்டிருக்கின்றன. ஒன்று தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுப்பதற்கு கட்சியினர் எடுத்துக் கொண்ட தீர்மானம். இரண்டாவது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யார் போட்டியிடுவது என்ற விவகாரம்.

முதலாவதைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையல்ல தமிழரசுக் கட்சியினையே வளர்த்தெடுப்பது என தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். இது விடயத்தில் பேராசிரியர் சிற்றம்பலம் நீண்ட காலமாகவே மிகவும் பிடிவாதமாக இருந்திருக்கின்றார். தமிழரசுக் கட்சி சார்பில் ஏனையோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்தி தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும் நிலை உருவாக வேண்டும் என்பதே இதற்குப் பின்னாலுள்ள இலக்காகும்.

கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களில் மாவை சேனாதிராஜா மட்டும் தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டமையே இதனை ஊக்குவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியினரைப் பொறுத்தவரை முன்னாள் இயக்கக்காரர்களுக்கு இன்று ஒரு மக்கள்தளம் இல்லை. மக்கள் தளம் எங்களுக்கு மட்டுமே உள்ளது. அதனை விட்டுவிடக்கூடாது என்பதே கருத்தாக உள்ளது

நீண்டகாலமாக இருந்த இந்தப் புகைச்சல் கடந்த கூட்டத்தில் வெடித்துக் கிளம்பியது. மாவை சேனாதிராஜா நாம் தமிழரசுக் கட்சியினை வளர்க்கப் போகின்றோம் நீங்களும் உங்கள் கட்சிகளை வளர்த்துக் கொள்ளுங்கள் தேர்தல் வரும் போது கூட்டமைப்பாக இயங்குவோம் எனக் கூறியதைத் தொடர்ந்தே வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக் கிளைகள் திறக்க முடியாது என மாவை கூறிய போது சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் என அனைவரும் அதனைக் காரசாரமாக எதிர்த்தனர். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தான் இயங்குவோம் நீங்கள் செய்வதைச் செய்யுங்கள் என சவால் விடுத்தனர்.

வாதப் பிரதிவாதம் நடைபெற்று ஒருவாரத்திற்குள்ளேயே மாவைக்கு சவால் விடும் வகையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய்க் கிளைக் காரியாலயத்தைத் திறந்தார். அந்த அங்குராப்பணக் கூட்டத்திற்கு வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் செல்லவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரனும், ஐங்கரநேசனும் மட்டுமே கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எனக் கலந்து கொண்டனர். கூட்டத்தின் பிரதான பேச்சாளர்களும் இவர்கள் மட்டுமேயாவர்.

ஐங்கரநேசன் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக முன்னேற வேண்டியதன் அவசியத்தைப் பேசினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சிதைய விடுவது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என மறைமுகமாக தமிழரசு கட்சியினரையும் குற்றம் சாட்டினார்.

அடுத்த அடுத்த வாரங்களில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளைகளைத் திறக்க சிவசக்தி ஆனந்தனும் செல்வம் அடைக்கலநாதனும் முற்படலாம்.

உண்மையில் இந்த முன்னாள் இயக்கக்காரர்களுக்கோ அல்லது தமிழரசு கட்சிக்காரர்களுக்கோ தனிப்பட்ட வகையில் எந்தச் செல்வாக்கும் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கும் செல்வாக்கு கிடையாது. தமிழ் மக்களுக்கு ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் அடையாளம் தேவை என்ற வகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும் வரைதான் இவர்களுக்கும் மரியாதை. இவர்களின் கட்சிகளுக்கும் மரியாதை. என்று அதனைத் துறக்கின்றார்களோ அன்றே அவர்களது அரசியல் வாழ்வையும் அவர்கள் கைவிட வேண்டியது தான்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது தமிழ் மக்களுக்கு தனிப்பட்ட நம்பிக்கைகள் இருந்த போதும் சென்ற தேர்தலில் அவர்களைப் புறக்கணித்தமைக்கு இதுவே காரணம்.

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தமிழரசுக் கட்சியின் வெள்ளை முடி தரித்தோர் பழைய வெற்றிக் கனவில் மிதக்கின்றனர். இவ்வாறு மிதப்பவர்களுக்கு ஒரு பத்து இளைஞர்களைக் கூட தமது கட்சியில் சேர்க்க தற்போது முடியவில்லை.

இந்த இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருக்கின்ற புத்திசாலித்தனமான அணுகுமுறை கூட தமிழரசுக் கட்சியினரிடம் இல்லை. டக்ளஸ் தேவானந்தா அரங்கம் என்ற பெயரில் சிறிய சிறிய கட்சிகளைக் கூட தனக்கு பின்னால் இணைத்து வருகின்றார். டக்ளஸ் தேவானந்தாவுடன் பெரியளவிற்கு உடன்படாத சிவாஜிலிங்கம், மனோகணேசன் போன்றவர்களும் இன்று அரங்கத்தில் இணைந்துள்ளனர். மலையக மக்கள் முன்னனி விரைவில் இணையவிருக்கின்றது.

இந்த அரங்கத்தினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுத்தக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிமையை இல்லாமல் செய்தல். இரண்டாவது அரங்கத்தினைச் சாட்டியே மகிந்தரின் கட்டுப்பாட்டிலிருந்து சற்று விலகியிருத்தல்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடுவதை விட அரங்கத்தின் சார்பில் போட்டியிடுவதிலேயே அக்கறை காட்டி வருகின்றார். அவ்வாறு போட்டியிடுவாராயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலகுவாக வெற்றியீட்டப் போவதில்லை. கடும் போட்டி நிலவுவதற்கான வாய்ப்புகளே உண்டு.

அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்படுமாயின் டக்ளஸ் தேவானந்தா வெற்றியீட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இன்று வலுவான ஊழியர் பலத்தோடு வடக்கில் பரவலாக அரசியல் செய்யும் ஒரேயொரு அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தாதான். அவரது அரசியல்தளம் பலவீனமாக இருந்த போதும் இன்று பல புத்திஜீவிகள் அவருடன் இணைந்து அவரது அரசியலை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

முன்னாள் புலிப் போராளிகள் பலர் இன்று அவரது கூடாரத்தில் உள்ளனர். சிங்களக் குடியேற்றங்கள், மீள் குடியேற்ற நெருக்கடிகள் பற்றி அரங்கம் பேசிவருவதும் அவரது நிலையினைப் பலப்படுத்துகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விட அரங்கம் கிரமமாக கூட்டங்களை நடாத்தியும் வருகின்றது. கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையேயான நெருக்கத்தினை விட அரங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கின்றது.

யாழ் குடாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியற்தளம் முழுக்க முழுக்க டக்ளஸ் தேவானந்தாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இத்தளம் இடதுசாரிகளிடமிருந்து ஈழமக்கள் புரட்சிகர முன்னணியிடம் கைமாறி தற்போது டக்ளஸ் தேவானந்தாவிடம் கைமாறியுள்ளது. சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு இத் தளத்தில் சிறிய இடம் கூட கிடையாது.

தற்போது டக்ளஸ் அந்த தளத்திலிருந்து மற்றைய தளத்திற்கும் ஊடுருவி வருகின்றார். அதற்கேற்ற வகையில் தினமுரசுப் பத்திரிகையும் தினசரி பத்திரிகையாக மாற்றப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசித்த முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் பலர் நாடு திரும்பி அவரது கட்சியில் இணைந்து செயற்படுகின்றனர். கோவை நந்தன், அங்கையற் கண்ணி, மித்திரன் எனப் பலர் இதற்குள் உள்ளடக்கம்.

இவர்களை விட கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னர் புலிகளோடு செயலாற்றிய ஆசிரியர்கள், அதிபர்கள் பலரும் பாதுகாப்பு கருதியும் தமது சொந்த தேவை கருதியும் டக்ளஸின் முகாமில் சேர்ந்துள்ளனர். புலிகளின் அழிப்பிற்கு கூட்டமைப்பினரும் ஒரு காரணம் என்ற கருத்தும் டக்ளசின் முகாமில் சேர்வதை ஊக்குவித்துள்ளது.

டக்ளசும் சிறிதும் சளைக்காமல் நாள்தோறும் மக்களையும், சிவில் நிறுவனங்களையும் சந்தித்து வருகின்றார். காலை 6 மணி தொடக்கம் மக்களைச் சந்தித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. மக்களும் காலை 5 மணியிலிருந்தே கியூவில் நின்று சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நீண்ட கியூ வரிசை இருப்பதாக தகவல்.

சலுகை அரசியல் தளத்தில் நின்று கொண்டு மக்களின் செல்வாக்கினைப் பெறுவதற்கு டக்ளசின் தனிப்பட்ட ஆற்றல்களும் பிரதான காரணம். மாறுபட்ட கருத்துக்கள் உடையோருடனும் உறவுகளைப் பேணுவதற்கு அவர் என்றும் தயங்கியது கிடையாது.

டக்ளஸ் நடாத்துவது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான துரோக அரசியல் தான். ஆனால் குடாநாட்டின் பெரும்பான்மை மக்கள் அவரைத் துரோகியாகப் பார்ப்பதில்லை என்பதே உண்மை நிலை. இதற்கு காரணம் அவரது செயற்பாட்டின் பிரக்ஞைபூர்வத் தன்மை தான். சலுகை அரசியல் என்றாலும் அதில் ஒரு பிரக்ஞைபூர்வ தன்மை அவருக்கு இருக்கின்றது.

சென்ற தேர்தலின் போது யாழ்ப்பாண நண்பரிடம் கேட்டேன். 'எவர் நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார்கள் என்று' 'மற்றவர்களைப் பற்றிக் கூற முடியாது. ஆனால் டக்ளஸ் தெரிவு செய்யப்படுவார் என்பதை உறுதியாகக் கூறுவேன்' என அவர் தெரிவித்தார்..

குடாநாட்டில் சலுகை அரசியல் மூலம் செல்வாக்குப் பெற்ற ஒரேயொரு அரசியல் தலைவர் டக்ளஸ் என்றே கூற முடியும்.

மறுபக்கத்தில் இப்போக்கின் ஆபத்து பற்றி முன்னேறிய பிரிவினரிடம் கூட போதிய தெளிவு இல்லை. தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசைகள் அனைத்தையும் தாரைவார்க்கும் செயற்பாட்டின் வெளிப்பாடு இது. இந்த அரசியற் போக்கினால் சில கட்டிடங்களைத் தவிர தமிழ் மக்களினால் எதையும் பெற்று விட முடியாது.

பிரக்ஞைபூர்வ அரசியல் முன்னெடுக்காத காலங்களில் எல்லாம் இப்போக்கு வளர்வதை தடுக்க முடியாது. இப்போக்கின் அடுத்தகட்ட வளர்ச்சிதான் இன்று எழுச்சியடைந்துவரும் ஒத்துழைப்பு அரசியல் என்ற கருத்து. எதிர்ப்பு அரசியல் தோல்வியடைந்து விட்டது. எனவே ஒத்துழைப்பு அரசியல் தான் இனிமேல் மேற்கொள்ள வேண்டும் என பல பத்திரிகையாளர்கள் புலமையாளர்கள் என்போரும் கூறத் தொடங்கியுள்ளனர். எஜமானுக்கும், அடிமைக்கும் இடையில் ஒத்துழைப்பு அரசியல் எவ்வாறு இருக்கும் என்பது கூறுபவர்களுக்குத்தான் வெளிச்சம்.

இந்த ஒத்துழைப்பு அரசியல் என்பது அரசாங்கத்தின் பச்சை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு செல்வதுதான். ஒரு தேசிய இனத்தின் இருப்பு அழிக்கப்படுகின்றதே என்பதில் இந்த ஒத்துழைப்புக்காரருக்கு எந்த கவலையும் கிடையாது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்த ஒத்துழைப்பு காய்ச்சல் பீடித்துள்ளது. ஆனால் அவர்களது கவலை தாம் ஒத்துழைத்துத் செயற்பட தயாரென்றாலும் அரசு தயாரில்லை என்பதுதான். அரசு ஒத்துழைப்பு அல்ல, முழுமையாக சரணடைந்து விடவேண்டும் என்றே எதிர்ப்பார்க்கின்றது. கூட்டமைப்பினர் அதற்கும் தயார். ஆனால் கதிரை போய்விடும் என்ற கவலைதான் அவர்களுக்கு. இந்தியாவும் சரணடையும்படி தொடர்ச்சியாக தூண்டுதல்களைக் கொடுத்து வருகின்றது.

தட்டுத்தடுமாறிக்கூட கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ளக்கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக இருக்கின்றது. தற்போது கூட்டமைப்பிற்கு பணத்தையும் வாரி இறைக்கின்றது. அரசு கூட்டமைப்போடு ஒத்துழைக்காத நிலையில் பணத்தைக் கொடுத்தாவது எதிர்ப்பு அரசியலை இல்லாமல் செய்வதுதான் அதன் நோக்கம். கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகளையும் அது ஊக்குவிக்கின்றது. எல்லோரையும் தன்னில் தங்கியிருக்கச் செய்கின்ற உபாயம்தான் அது.

தற்போது கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்பதை கூட்டமைப்பினர் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு தீர்மானிப்பதற்கு எந்தக் கட்டமைப்பும் அதனிடம் கிடையாது. எல்லாவற்றையும் இந்தியத் தூதரகமே தீர்மானிக்கின்றது. நல்லிணக்க ஆணைக் குழுவில் சாட்சியமளித்தல், எதிர்ப்பு அரசியலைக் கைவிடுதல் என எல்லாவற்றையும் தூதகரத்தின் கட்டளைக்கிணங்கவே கூட்டமைப்பு மேற்கொள்கின்றது.

தமிழ் மக்கள் சுயமரியாதையுள்ளவர்கள் என்றே இந்தியா இதுவரை காலமும் நினைத்தது. காலை நக்கும் எடுபிடிகளாக கூட்டமைப்பினர் மாறுவர் என ஒரு போதும் நினைக்கவில்லை. இந்தியா சற்றுக்காலை விலக்கினாலும் கட்டிப்பிடிப்பதை கைவிடுவதற்கு கூட்டமைப்பினர் தயாராக இல்லை.

இந்தியாவின் மனம் எந்தவகையிலும் கோணக் கூடாது என்பதற்காக யாழ்ப்பாணம் நோக்கிய சிங்களவரின் படையெடுப்பு, நூலக அத்துமீறல் என்பன பற்றி ஒரு அமைப்பு என்ற வகையில் கூட்டமைப்பு எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. தனிநபர்கள் மட்டும் சில அறிக்கைகளை விட்டுள்ளனர்.

கூட்டமைப்பிற்குள் பிளவு உருவாவதற்கு இரண்டாவது காரணம் நான் ஏற்கனவே கூறியது போல வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலைமைச்சர் வேட்பாளராக யார் இருப்பது என்பதுதான்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் தான் தான் முதலைமைச்சர் வேட்பாளர் என நீண்டகாலமாக கனவு கண்டு கொண்டு இருக்கின்றார். அதுமட்டுமல்ல, சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் தான் தான் என்ற கனவும் அவருக்கு இருக்கின்றது. இந்தியாவின் விசுவாசமான எடுபிடியாக இருப்பதனால் இந்தியாவின் அணுசரணையும் தனக்கு கிடைக்கும் என்பது அவரது எதிர்ப்பார்ப்பு.

கடந்த தேர்தலில் கஜேந்திரகுமார் அணியினை கழற்றுவதிலும் முழு மூச்சாக அவர் ஈடுபட்டதுக்கு இதுவே காரணம். அவரைப் பொறுத்தவரை மாவை சேனாதிராஜாவினை அவர் போட்டியாளராக பார்க்கவில்லை கஜேந்திரகுமாரினையே அவர் போட்டியாளராக பார்த்தார்.

கஜேந்திரகுமாரின் கொள்கை உறுதி, குடும்பப் பின்னணி, கல்வித்தகைமை, மேற்குலக இராஜதந்திரிகளுடனான தொடர்பு, ஆங்கில- சிங்களப் புலமை என்பவை காரணமாக அவருடன் போட்டி போடுவது கடினம் என்பதால் அவரைக் கழற்றி விடும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.

தற்போது இந்தியாவும், தமிழரசுக் கட்சியும் தன்னைக் கழற்றி விடும் என அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நன்றாகவே ஆடிப்போய்விட்டார். குடாநாட்டில் அவருடன் இணைந்து குரல் எழுப்புவதற்கு ஐங்கரநேசனைத் தவிர அவருக்கு எவரும் கிடைக்கவில்லை. ஐங்கரநேசன் நீண்டகாலம் இந்தியாவில் இருந்ததினால் நேரடி மக்கள் தொடர்பை இழந்துவிட்டார். புதிய தலைமுறையுடன் தொடர்பு அவருக்கு குறைவு. இதனால் ஒரு வெகுஜனக் களத்தை தங்களிற்காக உருவாக்கவும் இவர்களால் முடியவில்லை. சற்று முன்னேறிய பிரக்ஞைபூர்வ சக்திகளுக்கு இவர்கள் 'இந்தியாவின் ஆட்கள்' என்பதால் பெரிய நம்பிக்கை கிடையாது.

இந்தியா சுடரொளி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனையே முதலமைச்சர் வேட்பாளராக சிபார்சு செய்துள்ளது. இதனை சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஐங்கரநேசனும் கடுமையாக எதிர்த்துள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் வித்தியாதரன் போட்டியிடுவாரேயானால் தான் எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என இந்தியாவிடமே கூறியுள்ளார்.

இந்தியாவின் பார்வை தன்மீது விழ வேண்டும் என்பதற்காக வித்தியாதரன் நீண்ட காலமாக கடுமையாக உழைத்தார். முன்னர் அவர் தீவிர புலி ஆதரவாளராக விளங்கியவர். தமிழ்ச்செல்வனுடன் ஒரு நாள் பேசாவிட்டாலும் அவருக்கு தூக்கம் வராது. வன்னிப் பத்திரிகை என சுடரொளியை சூரியன் வானொலி விமர்சனம் செய்யுமளவிற்கு அவரது நடவடிக்கை அமைந்திருந்தது. அக்காலத்தில் இந்தியாவின் தமிழ்த் தேசிய எதிர்ப்புச் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

புலிகள் போரில் தோல்வியடைந்ததும் புலிக் கொடியை மாற்றி இந்தியக் கொடியை பிடிக்கத் தொடங்கினார். இந்தியாவிற்கு தமிழ்ப் பத்திரிகை உலகம் தனது செல்வாக்கிற்குள் இல்லை என்ற கவலை நீண்டகாலமாக இருந்தது. ஒரு பத்திரிகையாளனையாவது தன் செல்வாக்கிற்குள் கொண்டு வருவதற்கு நீண்டகாலம் முயற்சித்தும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

புலிகளின் தோல்வியின் பின்னர் வித்தியாதரன் இந்தியாவின் எடுபிடியாக செயற்படுவதற்கு முன்வந்தபோது இந்தியா இரு கைகளினாலும் அவரை அரவணைத்துக் கொண்டது. போர் முடிந்தவுடன் மகிந்தர் அரசினால் இவர் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார். அப்போது இவரது மைத்துனர் சரவணபவன் பிரதியமைச்சர் இராதாகிருஷ்னனுடன் சென்று கோத்தபாய ராஜபக்ஸவிடம் விடுதலை செய்யுமாறு கெஞ்சிய போதும் அவர் முகத்திற்கு நேரேயே புலிகளின் வால்கள் எனப் பேசி அனுப்பிவிட்டார். இதன் பின்னர் இந்தியத் தூதுவராலாயத்தின் வேண்டுதலின் பேரிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையடைந்தது தொடக்கம் இந்தியாவின் பக்தி மிக்க எடுபிடியாளராக வித்தியாதரன் மாறினார். கடந்த தேர்தலின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலைத் தெரிவு செய்வதில் இந்தியாவின் பணிப்பின் பேரில் இவரும், சுரேஷ் பிரேமச்சந்திரனும், சம்பந்தனுமே ஈடுபட்டனர்.

புலிகள் சார்பானவர்கள் எவரும் வேட்பாளர் பட்டியலில் இருக்கக் கூடாது என்பதில் அதிதீவிரமாக இருந்தவர் வித்தியாதரனேயாவார். சிலநடுநிலையாளர்கள் ஒரு பெண் அரசியல்வாதி என்ற வகையில் பத்மினி சிதம்பரநாதனுக்கு இடங்கொடுக்க வேண்டும் எனக் கேட்ட போதும் அதற்கு சம்மதிக்க வித்தியாதரன் தயாராக இருக்கவில்லை. புலிகள் இல்லாத வேட்பாளர் பட்டியலை தயார் செய்துள்ளோம் என்ற நற்சான்றிதழை இந்தியாவிடம் வித்தியாதரன் பெற்றிருந்தார். இந்தியா அதற்கு நன்றிக்கடனாக முதலமைச்சர் வேட்பாளராக அவரை சிபார்சு செய்துள்ளது.

வித்தியாதரன் தேர்தல் பிரச்சரத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். மாலைநேரம் முழுவதிலும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார். ஒரு நாளாவது தமிழ்ச் சங்கத்திற்கு வராமல் அவர் இருந்ததில்லை.

அண்மையில் தமிழ்ச் சங்கத்தில் புதன்தோறும் நடைபெறும் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் 'போர்காலப் பத்திரிகைப்பணி' என்ற தலைப்பில் அவர் பேசினார். இது தமிழ்ச் சங்கம் வழமையாக நடாத்தும் பொது நிகழ்வு. 50 பேருக்கு மேல் இந்நிகழ்வில் சமூகமளிப்பதில்லை. ஆனால் வித்தியாதரன் தனது பத்திரிகை செல்வாக்கினைக் காட்டி கொழும்பு பத்திரிகைகள் அனைத்திலும் தனது புகைப்படத்துடன் நிகழ்வு பற்றிய செய்தி வருவதற்கு ஏற்பாடு செய்தார். தமிழ் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் நேரடியாகவே அழைப்பு விடுத்தார். இதனால் அன்றைய தினம் மண்டபம் நிரம்பிய சனக்கூட்டம். முன்னாள் பிரதியமைச்சர் இராதகிருஷ்னன் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மாவை சேனாதிராஜா எனப்பல அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர்.

அரசியல் தலைவர்களை விட முக்கிய பத்திரிகையாளர்களான தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம், தினக்குரல் வாரமலர் ஆசிரியர் பாரதி, வீரகேசரி தினசரி ஆசிரியர் பிரபாகரன், செய்தி ஆசிரியர் சிறீகஜன் எனப்பலரும் வருகை தந்தனர். மாவை சேனாதிராஜா வித்தியாதரனுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார் இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவரும் வந்திருந்தார். வித்தியாதரன் அவரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

உரையின் போது தனது சுய புராணமே வித்தியாதரனால் முன்வைக்கப்பட்டது. முழுக்க முழுக்க தேர்தல் பிரச்சார உரையாகவே அது அமைந்தது. ஒரு பொது நிறுவனத்தின் பொது நிகழ்வை வித்தியாதரன் தேர்தல் பிரச்சார மேடையாக மாற்றினார். கூட்டத்தின் முடிவில் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து இந்தியத் தூதுவராலயத்தின் செலவில் எல்லோருக்கும் வித்தியாதரன் மதுபான விருந்து வழங்கினார்.

வித்தியாதரனின் இத்தகைய பிரச்சார செயற்பாடுகளைத் தொடர்ந்தே சுரேஷ் பிரேமச்சந்திரன் உஷாரடைந்து பிரச்சினைகளை வெளியே கொண்டு வந்திருக்கின்றார். இதற்காக வித்தியாதரன் தனது பிரச்சார நடவடிக்கைகளை விட்டுவிடவில்லை.

இவ்வாறு முரண்பாடு வளர்ந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் சார்பில் சிலர் கஜேந்திர குமார் அணியோடு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். தாம் கூட்டமைப்பிலிருந்து விலகி வருவதாகவும், நாங்களும் நீங்களும் இணைந்து செயற்படலாம் எனக் கேட்டிருக்கின்றனர்.

கஜேந்திர குமார் அணியினர் தங்களை சந்தித்தமைக்கு முதலில் நன்றி தெரிவித்ததுடன் எமது கட்சிக்கு என ஒரு கொள்கை இருக்கின்றது. அந்தக் கொள்கையுடன் கடந்த காலத்தில் நீங்கள் உடன்பட்டு வரவில்லை. எமது கொள்கைகளுடன் உங்களுக்கு உடன்பாடு இருக்குமானால் அதனை நடைமுறையில் செய்து காட்டுங்கள் அதன் பின்னர் இணைந்து செயற்படுவது பற்றி யோசிக்கலாம் எனப்பதில் கூறி அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் யாழ் குடாநாட்டில் வசிக்கும் டாக்டர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், கத்தோலிக்க மதகுருமார்கள் கொண்ட நடுநிலையாளர் குழு ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கஜேந்திரகுமார் அணியினை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியது.

இதன்போதுவரும் மாகாணசபைத் தேர்தலில் சுயேட்சைப் பட்டியல் ஒன்றில் இருதரப்பும் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு கஜேந்திரகுமார் மாகாணசபைகளை தான் கொள்கை ரீதீயாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இதனால் தன்னால் போட்டியிட முடியாது.என்றும் ஆனால் அரசியல் அவசியம் கருதி ஐக்கியப்பட்டு சுயேட்சைப்பட்டியலில் போட்டியிட்டால் தனது அணி அதற்கு ஆதரவு தரும் என்றும் குறிப்பிட்டார்.

இணைவு தொடர்பில் கருத்து தெரிவித்த போது இணைவிற்கு நாம் தயார். கடந்தகால விடயங்கள் எல்லாம் ஒரு பொது நிறுவனத்திற்கு முன்னால் பேச வேண்டும் என்றும் உடன்பாடுகள் பொது நிறுவனத்தின் முன்னால் எழுத்தில் எழுதப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நடுநிலையாளர் குழுவும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது.

நடுநிலையாளர்கள் இவ்வாறு முயற்சி செய்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எவ்வளவு தூரம் தயாராக இருக்கின்றது என்பது சந்தேகமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியினர் இன்று கட்சி அரசியலையே நடாத்த விரும்புகின்றனர். ஆனால் இன்றைய தேவை அதுவல்ல. ஒரு தேசிய அரசியல் இயக்கமே இன்றைய தேவையாகும்.

தமிழரசுக் கட்சியினர் அதற்கு உடன்படாவிட்டால் அவர்களை விட்டுவிட்டு ஒரு தேசிய அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்பும் முயற்சியில் தமிழ்த் தேசிய சக்திகள் ஈடுபடுவது இன்றைய நிலையில் அவசியமானது.

அந்த தேசிய இயக்கம் தனது சொந்தக்காலில் தங்கி நின்று இந்தியாவுடன் நட்பு பாராட்டுகின்ற இயக்கமாக இருக்க வேண்டுமே தவிர இந்தியாவின் எடுபிடியாக இருப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது

http://www.ponguthamil.com/paarvai/paarvaicontent.asp?sectionid=2&contentid={55DB9802-3363-4EDE-A835-5491D59DB1AE}

கூட்டமைப்பை இந்தியா இயக்கும் வரைக்கு உடைவுகள் தவிர்க்க படாது.... அதுதான் இந்தியாவின் தேவையும் கூட ...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒற்றுமையாக சுயமாக இயங்க வேண்டும்.அன்றேல் இந்தியாவும் மகிந்தரும் தங்கள் எண்ணத்திற்கு ஆட்டுவிப்பார்கள்.அதைவிட அரசியலை விட்டு ஒதுங்கலாம்.டக்கிளசுக்கு நிச்சயமாக தமிழ்க் கட்சிகளுடன் இணங்கிப் போக வேண்டிய தேவை எழுந்துள்ளது.மகிந்த மெல்ல மெல்ல கழட்டி விடத் தொடங்கி விட்டார்.சுய நலம் கருதியாவது எல்லோரும் ஒற்றுமையாக வந்தால்தான் சிங்களக் குடியேற்றங்கள் பற்றியாவது மெல்லிய குரலாவது எழுப்ப முடியம்.

பிரபாகரன் என்னும் ஆளுமையாலையே தமிழர்களை ஒன்று பட வைக்க மிகச்சிரமமாக இருந்தது. அடுத்த முதலமைச்சர் அனேகமாக டக்கிளசாக இருக்கக் கூடும்.இன்னும் ஒரு பிரபாகரன் வரும் வரை தமிழர்களுக்கான அரசியல் என்பது இந்தியாவுடனோ அல்லது சிறிலங்காவுடனோ சேர்ந்த அரசியலாகத் தான் இருக்கும், தமிழர்களின் நலங்கள் இவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு ,மக்கள் புலிகளையோ அல்லது அவ்வாறான ஒரு இயக்கத்தையோ உருவாக்குவதற்கான கால அவகாசம் போகிற போக்கைப்பார்த்தால் வெகு தொலைவில் இல்லை என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது..

"கூட்டமைப்பை இந்தியா இயக்கும் வரைக்கு உடைவுகள் தவிர்க்க படாது.... அதுதான் இந்தியாவின் தேவையும் கூட ... "

உண்மை.

விரைவில் தமிழர் தாயக பிரதேசம் மீண்டும் ஒரு பலப்பரீட்சைக்கு ஆளாவதை தமிழ்த்தலைவர்கள் தவிர்க்கவேண்டும். சீனா/சிங்களம் ஒரு பக்கமும் இந்தியா/றோ மறுபக்கமும் தாயகத்தில் எம்முறவுகளை பகடைக்காய்கள் ஆக்குவதை தடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.