Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன்

உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 10 ஆண்டுகளில் தன்னை காப்பாற்றி கொள்ள போர் என்ற ஆயுதத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியது, அந்த போரால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை

அமெரிக்க வரலாற்றில், போர் என்பது ஒரு தொடர் கதை. அந்த நாடு உருவாகும் முன்பு, அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்ததில் துவங்கிய அந்தப் போர், நிலத்துக்காக, அடிமைகளுக்காக, வர்த்தக உரிமைகளுக்காக, துறைமுகப் பகுதிகளுக்காக, இயற்கை வளங்களுக்காக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இரண்டாவது உலகப் போருக்கு பின், வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா மீதான பனிப்போர், கொரியா, வியட்நாம், தென் அமெரிக்கா இவற்றை தொடர்ந்து, தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான போர்கள் என, தனது ராணுவ இயந்திரத்தை ஓய்வில்லாது இயக்கி கொண்டே இருக்கிறது.கடந்த 1990ல், குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பை முறியடித்த கையோடு, மத்திய கிழக்கின் எண்ணெய் வள நாடுகளில் தனது ராணுவ தளங்களை நிரந்தரமாக நிறுவி, அப்பகுதிகளின் மீதான தனது ஆதிக்கத்தையும், இருப்பையும் உறுதி செய்து கொண்டது.கடந்த 2001 முதல் 2010 வரையிலான 10 ஆண்டுகளில் கூட, உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, இரு பெரும் போர்களை தொடுத்துள்ளது அமெரிக்கா. இப்போர்கள் அமெரிக்காவை மட்டுமின்றி, பிற உலக நாடுகளையும் பாதித்துள்ளன.

இரட்டை கோபுர தகர்ப்பு : கடந்த 2001, செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டை கோபுர தகர்ப்பு மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அமெரிக்காவை மட்டுமின்றி, உலகையே அதிர்ச்சியுறச் செய்தன. இத்தாக்குதல்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் போக்கையே மாற்றியமைத்தன. அமெரிக்காவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இத்தாக்குதலில் 2,985 பேர் பலியாயினர்.சவுதி அரேபியாவைச் சேர்ந்த 18 பயங்கரவாதிகள், இதற்காக அமெரிக்காவில் தங்கிப் பயிற்சி பெற்றனர். இவர்களை இயக்கியவன் ஒசாமா பின்லாடன். நிதி ஏற்பாடும் பிற சதி வேலைகளும், பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,யும் செய்தவை. அமெரிக்காவில் பயிற்சி பெற்று, அமெரிக்க விமானங்கள் மூலம் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தது, பென்டகனை தாக்கியது இவற்றின் மூலம், பயங்கரவாதிகள் அமெரிக்கா மீது அறிவிக்கப்படாத போர் ஒன்றை துவக்கினர்.இஸ்லாமியர்களின் புனித நகரம் இருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்; இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை நிறுத்த வேண்டும் என, இத்தாக்குதலுக்கு காரணம் சொன்னார்கள் பயங்கரவாதிகள்.

ஆப்கானிஸ்தான் மீதான போர் : இத்தகைய தாக்குதல்கள் வருங்காலத்தில் நிகழாமல் தடுக்கவும், அமெரிக்கா மீது உலகின் எந்த ஒரு நாடும் தாக்குதல் தொடுக்க கனவில் கூட துணியக் கூடாத அச்சத்தை ஏற்படுத்தவும் வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டது.ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்பும், வெறும் வெற்று வார்த்தைகளை மட்டும் உதிர்த்து விட்டு அமைதி காக்கும் பலவீனமான தலைமையுள்ள இந்தியா போல இருந்து விடாமல், உடனடியாக பதிலடி கொடுக்க இறங்கினார், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.அமெரிக்காவை தாக்கிய எதிரிகள் புகலிடம் அடைந்திருக்கும் நாடு என்பதால், 2001 அக்டோபர் 7ம் தேதி ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது அமெரிக்கா.ஆப்கனில் உள்ள தலிபான் ஆட்சியை அகற்றுதல், தலிபான்களையும் அவர்களை ஆதரிக்கும் அல்-குவைதா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளையும் வேரோடு அழித்தல், ஆப்கனில் ஒரு ஜனநாயக அரசை ஏற்படுத்தி, அந்நாடு மீண்டும் தலிபான்களின் கைகளில் விழுந்து விடாமல் இருக்க, அதற்கென சொந்தப் பாதுகாப்புப் படைகளை உருவாக்குதல் என ஆப்கன் போருக்கான காரணங்களை அடுக்கியது அமெரிக்கா.

தலிபான்களுக்கு யார் உதவி?அமெரிக்க தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகள், சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் சவுதியின் மன்னர் குடும்பம் அமெரிக்காவுக்கு வேண்டப்பட்ட குடும்பம். சவுதி, அமெரிக்காவிற்கு எண்ணெய் கொடுக்கிறது; ராணுவ தளம் அமைக்க இடம் கொடுக்கிறது; இருதரப்புக்கும் வர்த்தக உறவு உள்ளது.இதனால், தனது நட்பு நாடான சவுதியின் மீது தாக்குதல் தொடுக்க முடியாத அமெரிக்கா, ஆப்கனை குறி வைத்தது ஏன்?தாக்குதலுக்கு சதி தீட்டம் தீட்ட இடம் கொடுத்து, அல்-குவைதா செயல்பட அனுமதித்தது அப்போது தலிபான்களின் ஆட்சியில் இருந்த ஆப்கன்.இன்னொரு பக்கம், தலிபான்களுக்கு நிதி, ராணுவம் மற்றும் நிர்வாக உதவிகளை அளித்து வந்தது பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ., தன்னிச்சையாக செயல்பட முடியாத தலிபான்கள், ஐ.எஸ்.ஐ.,யின் உதவியால் தான், காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானின் இரட்டை வேடம் : தலிபான்கள் மற்றும் அல்-குவைதாவினர் பதுங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள், இயற்கையிலேயே சிக்கலான, ஆபத்தான மலைப் பகுதிகள். ஆப்கனைச் சேர்ந்த பழங்குடிகள் மட்டுமே அந்த நிலப்பரப்பின் ரகசியத்தை அறிந்தவர்கள். அவர்கள், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் கணிசமான அளவில் உள்ளனர்.அவர்கள் மத்தியில் தான் தலிபான்களும், அல்-குவைதாவினரும் கலந்துள்ளனர். பயங்கரவாதிகளை அழிக்க வேண்டுமானால், அந்த நிலப்பரப்பை அறிந்தவர்களின் உதவி தேவை. அதனால் பாகிஸ்தானை தனது போரில் கூட்டாளியாக்கி கொண்டது அமெரிக்கா.தலிபான் என்பதே பாகிஸ்தானின் நிழல் அமைப்பு தான் என்பது தெரிந்த பின்னும், அமெரிக்கா அதை கூட்டாளியாக்கி கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

கடினமான எல்லைப் பகுதிகளை கையாளுவதற்கான உதவி, ஆப்கனில் தங்கியுள்ள நேட்டோ படையினருக்கு தேவையான தளவாடங்கள், மருந்துகள், உணவுகள் போன்றவற்றை தக்க சமயத்தில் கொடுப்பது போன்றவற்றுக்கு நிலவியல் ரீதியில், பாகிஸ்தானின் உதவி அமெரிக்காவுக்கு தேவை.ஆனால், பூனைக்கும் காவல் பாலுக்கும் காவல் என்ற ரீதியில், பாகிஸ்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை தலிபான் ஒழிப்பிற்காக கறந்தபடியே, தலிபான்களுக்கு ரகசியமாக நிதி மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது.அமெரிக்காவிடம் இருந்து தந்திரமாக பெறும் பணத்தை, இந்தியாவிற்குள் தான் நடத்தும் அழிவு வேலைகளுக்கு திருப்பி விட்டும் வருகிறது.

ஏன் நம்புகிறது அமெரிக்கா?தலிபான்களுடனான பாக்.,கின் கள்ள உறவு அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தும், அமெரிக்க அரசு இன்னும் பாக்., ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.பாக்.,கிற்கு நிதி அளிப்பதன் மூலம் அதன் நம்பிக்கையை பெறலாம்; அதன் மூலம் ஆப்கனில் தலிபான்களையும் அல்-குவைதாவையும் ஒழித்து விடலாம் என்றும் அமெரிக்கா கருதுகிறது.எக்காரணம் கொண்டும், பாகிஸ்தானை விரோதித்து கொண்டு, உலகின் முக்கியமான இடத்தில் இருக்கும் ஒரு நாட்டின் மீதான தங்கள் பிடியை விட்டுக் கொடுக்க, அமெரிக்கா விரும்பவில்லை.

அமெரிக்காவின் தோல்வி ஏன்?ஆப்கன் மீது அமெரிக்கா போர் தொடுத்து 10 ஆண்டுகள் கழிந்தும், பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்ட பின்னும், இதுவரை தலிபான்களும், அல்-குவைதாவும் அழிக்கப்படவில்லை. ஒசாமா பின்லாடன் கண்டுபிடிக்கப்படவில்லை.தலிபான்கள், ஒரு ராணுவ அமைப்பாகச் செயல்படாமல், மக்களோடு மக்களாக கலந்து கொரில்லா தாக்குதல்கள் நிகழ்த்துவது, எதிர்பாராத வகைகளில் அமெரிக்கப் படைகளை தாக்கி நிலை குலைய செய்வது, பாக்., மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தொடர்ந்து வரும் நிதியுதவி, பாக்.,கின் நம்பிக்கை துரோகம், ஆப்கனின் நிலவியல் அமைப்பு என, அமெரிக்காவின் தோல்விக்கான காரணங்களுக்கு ஒரு பட்டியலே போடலாம்.

அமெரிக்காவின் அடுத்த திட்டம் : “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, தலிபான்களுடன் ஓரளவுக்கு சமாதானமாக போகும் கசப்பான முடிவுக்கு கூட இப்போது அமெரிக்கா வந்து விட்டது. இதற்கு பாக்., இடைத்தரகு செய்து, ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி தரவும் முன்வந்துள்ளது.அமெரிக்காவை தாக்க மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்கும் பட்சத்தில், தலிபான்களும் பங்கேற்கக் கூடிய, பாக்., ஆதரவில் நடக்கக் கூடிய ஒரு அரசை அமைத்து தந்துவிட்டு, தன் துருப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அழைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது அமெரிக்கா.

ஈராக் போருக்கு காரணம் : அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷûக்கு, ஈராக்கின் எண்ணெய் வளத்தின் மீது ஒரு கண். அதை, அமெரிக்காவுக்கு அடிபணிய வைப்பதில் புஷ் தீவிரம் காட்டி வந்தார்.குவைத் போரில், ஈராக்கை அமெரிக்கா விரட்டி அடித்த பின்பும் கூட, ஈராக் மீது அமெரிக்கா ராக்கெட் தாக்குதலை நடத்தி வந்தது. சீனியர் புஷ்ஷûக்கு (ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை) இரண்டாவது முறையும் அதிபர் பதவி கிடைக்காததால், சதாம் உசேனை அழிக்கும் பணி முடிவடையாத ஒரு அவமானமாகவே தொடர்ந்தது.தந்தை புஷ்ஷின் சபதத்தை மகன் புஷ் நிறைவேற்றத் துடித்தார். அதற்கான சூழல்களும் கனிந்து வந்தன. இரட்டை கோபுர தகர்ப்பு அதற்கு சாக்காக கிடைத்தது. ஈராக்கிற்கும், அச்சம்பவத்திற்கும் நேரடியாக முடிச்சுப் போட வாய்ப்பில்லை. அதனால் சுற்றி வளைத்த சந்தேகங்களை, ஈராக் மீது தூவ ஆரம்பித்தது அமெரிக்கா.அமெரிக்காவைத் தாக்குவதற்காக ஈராக் ஏராளமான பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ஈராக்கில் சோதனை நடத்தும்படி, ஐ.நா.,வை நிர்பந்தித்தது. ஐ.நா.,வால், ஈராக்கில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால், ஏற்கனவே அங்கு அமெரிக்க உளவுத் துறை சி.ஐ.ஏ.,யால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சில ஆயுதங்களை கண்டுபிடித்த அமெரிக்கா, அதையே காரணமாக வைத்து, 2003ல் ஈராக் மீது போர் தொடுத்தது.

மண் கவ்விய அமெரிக்கா : நியாயமான காரணங்களின் அடிப்படையில் துவங்கிய ஆப்கன் போரில், முழு கவனத்தையும் செலுத்தியிருந்தால், தலிபான்களை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியாவது பெற்றிருக்கலாம்.ஆனால் புஷ்ஷின் அரசு, ஈராக்கின் மீது தன் கவனத்தை திருப்பியது, ஆப்கன் போரில் ஒரு தொய்வை ஏற்படுத்தியது. இறுதியில் சதாமை தூக்கிலிட்டு, போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.எந்த அடிப்படையிலும் ஈராக் போரை நியாயப்படுத்த முடியாமல், ஆட்சியாளர்களின் பழி வாங்கும் உணர்வு மற்றும் பேராசை, இன்னும் வெளியில் வராத பல காரணங்களால், உலகளவில் ஒரு பெரிய வல்லரசு என்ற பலத்தில் ஈராக்கின் மீது திணிக்கப்பட்ட ஒரு போரை, ஏழு ஆண்டுகளாக அமெரிக்கா நடத்தி முடித்தது.

சரிந்த அமெரிக்காவின் மதிப்பு : ஈராக் போரால் உலகளவில் அமெரிக்கா மீதான மதிப்பு சரிந்து விட்டது. அது மட்டுமின்றி, அமெரிக்காவை பெருத்த கடனிலும் பொருளாதார சீரழிவிலும் ஈராக் போர் தள்ளி விட்டது.இந்த போரால், இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவை வெறுக்க துவங்கி விட்டன. போரால் ராணுவ ஒப்பந்த நிறுவனங்களும், தளவாட தொழில்களும், எண்ணெய் நிறுவனங்களும் பயனடைந்திருந்தாலும், அவை ஒட்டுமொத்தமான இழப்பை சரிக்கட்டும் அளவுக்கு லாபமானதாக இல்லை.ஈராக் போரில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலியாயினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து, உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.போராலும், அதை தொடர்ந்த உள்நாட்டு பயங்கரவாதங்களாலும் லட்சக்கணக்கான ஈராக்கியர்களும் பலியாகியுள்ளனர்.

போர்களால் ஏற்பட்ட பாதிப்பு : ஈராக் மற்றும் ஆப்கன் போர்களால், அமெரிக்காவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. பொருளாதார சிக்கலால் ஏற்பட்ட பணவீக்கமும், அமெரிக்க கரன்சி மதிப்பின் வீழ்ச்சியும், பட்ஜெட் பற்றாக்குறைகளும், வர்த்தக இறக்கங்களும் அமெரிக்காவை உலகளவில் ஒரு பலவீனமான நாடாக மாற்றி விட்டன.கடந்த 2000ல், அதிபராக கிளின்டன் பதவியேற்ற போது, அமெரிக்காவின் நிதி நிலைமை பலமாக இருந்து, உபரி பட்ஜெட் போடும் நிலையில் கையிருப்புடன் இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் நிதி நிலைமை பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அமெரிக்காவின் கடன் எகிற ஆரம்பித்தது.கடந்த 2000ல், 300 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்க ராணுவ செலவு, 2010ல், 700 பில்லியன் டாலர்களை எட்டியது. எட்டு ஆண்டுக்கால புஷ் ஆட்சியில், கடுமையான பொருளாதாரச் சரிவை கண்டது அமெரிக்கா.கடந்த 2009ல், அமெரிக்காவின் தேசியக் கடன் 13 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்தது (ஒரு டிரில்லியன் – 1,000 பில்லியன் டாலர்).இந்த போர் செலவுகளோடு, 2000ல் நிகழ்ந்த, “டாட் காம் பபுள்’ வீழ்ச்சியும் சேர்ந்து கொண்டது. அதை தொடர்ந்து, 2007ல் துவங்கிய வீட்டுச் சந்தை சரிவுகளாலும், வங்கிகள் திவாலானதாலும் சங்கிலி தொடராக, ஒன்றை தொடர்ந்து மற்றொன்றாக, தொடர்ந்த பொருளாதாரச் சரிவுகளால் அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமின்றி, ஒட்டு மொத்தமாக உலகப் பொருளாதாரமுமே பெரும் பாதிப்பை அடைந்தது.

ஆப்கன் மற்றும் ஈராக் போர்களின் செலவு மட்டுமே, ஒரு டிரில்லியன் டாலர்களில் இருந்து, இரண்டு டிரில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இதில் ஆப்கன் போருக்கான செலவு ஓரளவு நியாயப்படுத்தப்பட்டாலும் கூட, ஈராக் போரால் ஏற்பட உள்ள எதிர்கால நன்மைகளை விட, செலவு அதிகமாகவே உள்ளது.மாதம் ஒன்றுக்கு, ஏழு பில்லியன் டாலர்கள் வரை ஆப்கனில் செலவிடப்படுகிறது. இதில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதியுதவி தனி. இந்த செலவுக்கான பட்ஜெட்கள் அனைத்துமே, அவசர கால அடிப்படையில் தனி கணக்குகளின் வாயிலாக, ஒப்புதல் பெற்று செலவிடப்படுகின்றன.கடந்த 10 ஆண்டுகளில் ஈராக் போருக்காக, 800 பில்லியன் டாலர்களும், ஆப்கனில் இதுவரை 200 பில்லியன் டாலர்களும் செலவிடப்பட்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆப்கன் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பளு தாங்க முடியாத அளவிற்கு செல்வதால், எவ்வளவு சீக்கிரமாக அங்கிருந்து வெளிவர முடியும் என்பதை ஒபாமா அரசு யோசித்து வருகிறது.இந்த போர்களுக்காகும் செலவை வைத்து, அமெரிக்காவின் நசிந்து வரும் சமுதாய ஓய்வு பாதுகாப்பு நிதியை சீர் செய்திருக்கலாம்; அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கிட்டும் வகையில், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை சீரமைத்திருக்கலாம்; இன்னும் எத்தனையோ நலன்களை அமெரிக்கர்களுக்கு அளித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகளவிலான தாக்கங்கள் : அமெரிக்கா மேற்கொள்ளும் போர்களின் பாதிப்புகள், உலகளவில் பல்வேறு மாற்றங்களை கொணர்கின்றன. அமெரிக்காவுடனோ, ஈராக்குடனோ, சம்பந்தமே இல்லாத ஒரு சாதாரண இந்தியனிடம் கூட இந்த போர்கள் நேரடியான மறைமுகமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.உலகமயமாகிவிட்ட வர்த் தகத்தில், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், பிற உலக நாடுகளையும் பாதிக்கின்றன. போர்கள், விலைவாசி உயர்வை ஏற்படுத்துகின்றன. இந்தியா போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு பிரச்னைகளையும், பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகின்றன. இதுவரை பெருமளவில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர் கொண்டிராத ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் பயங்கரவாத சம்பவங்களை காணத் துவங்கி விட்டன.

அடுத்த 10 ஆண்டில் அமெரிக்காவின் திட்டம் : ஈராக்கில் இருந்து வெளியேறி விட்டாலும், ஆப்கனில் இருந்து வெளியேற திட்டமிட்டிருந்தாலும் கூட, அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் சில பெரும் போர்களை சந்திக்க வேண்டிய தயாரிப்புகளில், ஏற்கனவே அமெரிக்கா இறங்கி விட்டது.அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ள ஈரானை, மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் எதிரியாகவே பார்க்கின்றன. அதனால் அவை ஈரான் மீது போர் தொடுக்கும்படி அமெரிக்காவை தூண்டி வருகின்றன.ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால், அதன் செலவுகளை ஈரானின் எதிரி நாடுகள் பகிர்ந்து கொள்ளும்பட்சத்தில், அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியில் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படாது.ஆனால், ஈரான் போர் துவங்கினால், ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்படையும். உலகம் முழுவதும் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும். அதன் விளைவாக, மீண்டும் ஓர் உலகப் பொருளாதார சீர்குலைவு ஏற்படும்.அமெரிக்காவை பொறுத்தவரை, அதன் போர் கொள்கைகள் அதிபரால் தீர்மானிக்கப்படுவதை விட, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயிக்கும் அமைப்புகள் மற்றும் ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களாலேயே பெருமளவு தீர்மானிக்கப்படுகின்றன. ஒருவேளை ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரான் போர் வராவிட்டாலும், அடுத்த அதிபரின் ஆட்சி காலத்தில் ஈரான் மீதான ஒரு போர் நிகழ காத்து கொண்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் அடுத்த பெரும் போராக, ஈரான் மீதான படையெடுப்பு நடக்கலாம். அதற்கான சாத்தியங்களும் கனிந்தே உள்ளன.

அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் :* 2000ல், ஆப்ரிக்காவின் சியாரா லியோன் என்ற சிறிய நாட்டில் நிகழ்ந்த, உள்நாட்டு சண்டையில் இருந்து அப்பாவி மக்களை மீட்டது.

*அதே ஆண்டு, அக்டோபரில், ஏமன் நாட்டில் இருந்த அமெரிக்கப் போர் கப்பல் யு.எஸ்.கோல்., குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் ஏமனில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை அழிக்க ஏமனுக்கு சென்றது.

*அதே ஆண்டு பிப்ரவரியில், இந்தோனேசியா அருகில் உள்ள கிழக்கு திமோர் நாட்டில் அமைதி ஏற்படுத்துவதற்காக அங்கு சென்றது.

* 2001 அக்டோபரில், ஆப்கன் மீதான போரைத் துவக்கியது.

* 2002ல், ஏமனில் அல்-குவைதாவினரை அழிக்க ராக்கெட் தாக்குதல்.

*பிலிப்பைன்சில் இயங்கி வரும் அபு சயாப் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க, 2002ல் அங்கு சென்றது. அன்று முதல் இன்று வரை அதற்கு உதவி வருவது.

*2003ல் “ஆப்பரேஷன் ப்ரீடம்’ என்ற பெயரில், ஈராக் மீதான தாக்குதல்.

* 2003ல் லைபீரியாவில் சிக்கிக் கொண்ட அமெரிக்க நாட்டவரை மீட்க அமெரிக்கக் கடற்படை வீரர்கள் அங்கு சென்றது.

*ஜார்ஜியா நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு துணையாக, 2003ல் அங்கு சென்றது.

*2004ல் ஜார்ஜியா, கென்யா, எத்தியோப்பியா, ஏமன் மற்றும் எரித்ரியா நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

*2004ல் இருந்து இன்று வரை, பாக்.,கின் வடமேற்குப் பகுதிகளில் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது.

*இத்தாக்குதலில் உதவி செய்ய, இதுவரை 21 பில்லியன் டாலர், புஷ் அரசாலும், மேலும் மூன்று பில்லியன் டாலர் ஒபாமா அரசாலும் அளிக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலரை ஒபாமா பாக்.,கிற்கு அளிக்கிறார். மொத்தத்தில் பாக்.,கின் ராணுவ பட்ஜெட்டில் 25 சதவீதம் அமெரிக்காவால் தரப்படுகிறது.

*2005-06ல் பாக்.,பூகம்ப நிவாரணப் பணி.

*2006ல் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் மாட்டிக் கொண்ட அமெரிக்க நாட்டவரை மீட்க, லெபனானுக்கு சென்றது.

*2007ல் சோமாலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.

*2008ல் ஜார்ஜிய ராணுவத்துக்கு பயிற்சி, பிற உதவிகள்.

*இவை தவிர, ஐ.நா., அமைதிப் படையின் ஒரு பகுதியாகவும், அமெரிக்க நேச நாடுகளை பாதுகாக்கும் பணியிலும், அமெரிக்க கூட்டணி நாடுகளான சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ தளம் அமைப்பதிலும், உலக கடற்பரப்புகளில் ரோந்து வருவதிலும், ராணுவப் பயிற்சிக்காகவும், உளவு வேலைகளுக்காகவும், அமெரிக்காவின் லட்சக்கணக்கான தரை, விமான, கப்பற்படை துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

தலிபான்களை வளர்த்தது யார்? *தலிபான்களையும், அல்-குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளையும் இந்த அளவுக்கு நாசக்கார சக்திகளாக வளர்த்து விட்டதே அமெரிக்கா தான்.

* சோவியத் ரஷ்யா ஆப்கனை ஆக்கிரமித்திருந்த போது, அதை நேரடியாக எதிர்க்க விரும்பாத அமெரிக்கா, ஆப்கனில் இருந்த பல கொரில்லா படைகள் மற்றும் பல பழங்குடி இனக் குழுக்களுக்கும் ராணுவப் பயிற்சி, நிதியுதவி, ஆயுதங்களை வழங்கியது.

* அமெரிக்காவுக்கும், ஆப்கனின் கொரில்லா படைகளுக்கும் இடையில் தரகராக இருந்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., பணம் மற்றும் ஆயுதப் பரிமாற்றங்கள் பாகிஸ்தான் மூலமாகவே நடந்தன.

* “வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக’ அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட பயங்கரவாத குழுக்கள் பின்பு அமெரிக்கா மீதே தங்கள் தாக்குதலை துவக்கின.

ஆப்கன் தோல்வியால் ஏற்படும் பாதிப்புகள் : ஆப்கனில் இருந்து உறுதியான வெற்றி பெறாமல், அமெரிக்கா வெளியேறும்பட்சத்தில்…

*ஆப்கன் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கத்தில் வரும். அப்போது அதன் அடுத்த குறி, காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிப்பதாகத் தான் இருக்கும்.

*சீனா தற்போது அடக்கி ஒடுக்கி வைத்துள்ள ஷிங்ஜியாங் பகுதியின் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தலிபான்கள் போராடத் துவங்கினால், சீனாவுக்கு அது பெரிய தலைவலியாக மாறும்.

*ரஷ்யாவின் செசன்யா பிரிவினை போராட்டத்திற்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரிவினை போராட்டத்திற்கும், தலிபான் பிடியில் சிக்கும் ஆப்கன் ஒரு வலுவான அடித்தளமாக மாறும். ஒட்டுமொத்தத்தில் ஆப்கன் பிரச்னைக்கு தீர்வு காணாமல் திரும்பும் அமெரிக்காவின் முடிவு, இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

(கட்டுரையாளர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணியாற்றி வருகிறார். அரசியல், அமெரிக்க நிகழ்வுகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார்)

http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

பழைய விடயத்தை தூசிதட்டி எடுத்திருக்கின்றார், புதிதாக எதுவும் இதில் இல்லை ,அமெரிக்காவிற்கு இருப்பு என்பது மிக அவசியமும் தவிர்க்கமுடியாததும். ஈரான் மற்றும் வட கொறிய யுத்தம்தான் அடுத்து வரும் யுத்தங்கள் ,இவர்களின் கொட்டங்கள் இன்னும் ஒரு பத்து வருடங்கள்தான் ,அதன்பின் அடக்கியே வாசிக்கவேண்டும் .

* ஒட்டுமொத்தத்தில் ஆப்கன் பிரச்னைக்கு தீர்வு காணாமல் திரும்பும் அமெரிக்காவின் முடிவு, இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும்

கட்டுரையாளர் ஒரு இந்தியன் போல இருக்கு.......இந்தியாவில் பிரிவினை வராமல் இருக்க அமேரிக்கா தலிபான்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார் போல கிடக்குது

அமெரிக்காவும் மற்ற நாடுகளும் நாங்கள் பிழை விட்ட ஆக்கள் எண்டு உண்மையின் வளி நிண்டு தான் அழிச்சவை எண்டு சொல்லுற ஆக்களை நினைக்க பரிதாபமாக மட்டும் தான் இருக்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா - அமெரிக்கா: வல்லரசுப் போட்டியின் காய்நகர்த்தல்கள் எதுவரை?

'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி

காலநிலை மாற்றத்தின் விளைவான பெருமழை, வெள்ளம் நம் தாய்மண்ணில் எம்மவரை பெரும் துன்பத்திற்குள்ளாக்கியமை உலக செய்தி நிறுவனங்களின் பார்வையில் முன்னுரிமை பெற்றிருந்ததை சீன தலைவர் கு ஜின்தாவோவின் [Hu Jintao] அமெரிக்க பயணம் பின்னுக்கு தள்ளிவிட்டிருக்கிறது.

சீனத் தலைவரின் இந்தப்பயணம், சீனாமீதான மேற்கு நாடுகளின் பார்வையை சீர் செய்வது, குறிப்பாக அமெரிக்க மக்கள் மத்தியில் சீனாவின் மீதான பார்வையை மாற்றி அமைப்பது, அமெரிக்க மக்கள் தொடர்பு நிறுவனங்கள் சீனாவை உலகின் எதிரியாக காட்ட முயலும் தன்மையை திருத்தி கொள்வது என்ற கருத்தை கொண்டிருந்தாலும்,

இரு வல்லரசுகளுக்கும் இடையிலான அடிப்படை நலன்கள் பேணும் கட்டமைப்பில் இப்பயணம் எந்த விதத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

தென் சீன கடற்பரப்பை சீனா தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்க கடற்சட்ட நடவடிக்கைகள் மூலம் முயற்சி செய்தது, ஆனால் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் தனது கடற்படை ஒத்திகைகளை இக்கடற்பரப்பிலே மேற்கொண்டது.

தென்கொரிய ஆகாயப்படைகள் வடகொரிய எல்லைகளில் சேதங்களை விளைவிக்ககூடிய பரீட்சார்த்தமான ஆயுதப்பயிற்சிகளும், வடகொரியாவின் தென் கொரியா மீதான குண்டு வீச்சுகளும் இடம்பெற்ற ஒரு பதட்டத்தின் பின்பு சீனத்தலைவரின் இந்தப்பயணம் அமைந்திருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இராசதந்திர சம்பிரதாயங்கள் என்பது மேற்கு நாடுகளிற்கே உரித்தான நாடகம் என்பதை சீனத்தலைவரின் இந்த பயணம் நன்கு உணர்த்தி உள்ளது.

பொருளாதாரத்தில் பலமாக முன்னேறி வரும் சீனாவை தனது திட்டமிட்ட இராசதந்திர வலைக்குள் வீழ்த்திவிட அமெரிக்க தலைவர் ஒபாமா பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியதாய் இருந்தது.

மனித உரிமை விவகாரத்தை முன்வைத்து சீனதலைவரை சங்கடப்படுத்தும் பல கேள்விகளை ஊடகவியலாளர்கள் கிளப்பியபோதும் அதற்கு பரிந்து பேசுவதுபோல காய்களை நகர்த்த வேண்டிய கட்டத்திற்குள்ளானார் அதிபர் ஒபாமா.

இதன் மூலம் சீன தலைவர் மனித உரிமைகள் விவகாரத்தில் சீனா இன்னும் முன்னேற்றத்தை காணவேண்டி உள்ளது என்பதை ஏற்றுகொண்டுள்ளமை மேற்குலக கேள்விகளுக்கு தற்காலிகமாக தீர்ப்பளிப்பதாக இருந்தது.

இருந்த போதிலும் இந்த கூற்று குறித்து அமெரிக்க அரசியல் நுண்ணறிவாளர்கள், இது சந்தர்ப்பத்திலிருந்து தப்பித்து கொள்வதற்கான வெறும் வார்த்தைகளே அன்றி சீனா தனது உள்விவகாரங்களில் பெரிய மாற்றங்களை செயற்படுத்த மாட்டாது என்று கணிப்பிட்டுள்ளனர்.

அதே வேளை சில சகாப்தங்களாக அமெரிக்கா உள்நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலையில் தமது நலன்களை வாக்காளர் மத்தியில் பெற்றுகொள்ளும் நோக்குடன் அமெரிக்க தலைவர்கள் சீன திட்டநலன்களை பாதுகாக்கும் பாணியில் நடந்து கொள்வதால் தியனமன் சதுக்க படுகொலைகள் போன்ற பாரிய மனிதஉரிமை மீறல்களில் இருந்து நழுவ வசதியாய் இருப்பதாக மேலும் அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அரச செயலர் ரோபேட் கேற்ஸ் அவர்கள் அண்மையில் சீனாவுக்கு சென்றிருந்தார். சீன மக்கள் விடுதலை இராணுவத்துடன் தொடர்புகளை வலுவடைய வைப்பதற்கான அவருடய பயணத்தின்போது சீனா தனது புதிய இரகசியமாக சென்று தாக்க வல்ல விமானத்தை வெள்ளோட்டம் விட்டமை கூட அமெரிக்காவை சீனா உதாசீனம் செய்வதாகவே அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவரை சிறைக்குள் அடைத்து வைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது தலைவர் என்ற துணிகர பெருமையை கு ஜின்தாவோ பெறுகிறார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சீன பொருளாதாரம் அமெரிக்காவில் ஊடறுத்து விட்டதை தவிர்க்க முடியாத வகையில் ஏற்று கொள்ள வேண்டிய நிலையில் ஒபாமா நிர்வாகம் இதர ஆசிய நாடுகளுடனும் உலகின் பல்வேறு சிறிய பொருளாதார நாடுகளுடனும் திறந்த பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதன்மூலம் சீனாவுக்கு பொருளாதார நிட்சயமற்ற தன்மையை உருவாக்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து.

அதேவேளை அதிபர் ஒபாமா தலைவர் ஜின்தாவோ இருவருக்குமிடையில் இடம் பெறும் பேச்சுக்கள் வெளியுலகிற்கு ஒன்றாகவும் திறை மறைவில் இன்னுமொன்றாகவுமே இந்த முறை சந்திப்பில் இருந்தது என ஊடகங்களின் கருத்துகள் கூறுகின்றன.

அடுத்த ஆண்டு தலைமை போட்டியை தொடர்ந்து 2013ம் ஆண்டு புதிய தலைமை சீனாவில் வர விருப்பதால் தற்போதைய தலைமை பெரும் முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.

இருந்த போதிலும் அமெரிக்காவின் Wal - Mart என்னும் பல்பொருள் அங்காடியை விரிவாக்க சீனாவுக்குள் வியாபார அனுமதி பெறுதல். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பிரதி செய்யாது காப்பதற்கான சட்ட முறைகளை சீனாவில் உருவாக்குதல்.

உதாரணமாக ஹொலிவூட் [Hollywood] திரைப்படங்கள், அமொரிக்காவில் தயாரிக்கப்பட்ட மருந்துப்பொருட்கள் மற்றும் [Microsoft Windows] ஆகியன சீனாவில் தாரளமாக திருட்டுத்தனமாக பிரதிசெய்யப்பட்டு விற்பனையாகின்றது. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் இழப்பை உருவாக்குகின்றது.

அமெரிக்க முதலீட்டாளர்கள் சீனாவில் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட உரிமம் பெறுதல் போன்றனவும் இந்த பேச்சுகளில் இடம் பெற்றதாக கூறுகின்றன.

ஆனால் சீன தலைவரின் நோக்கம் எந்த அளவுக்கு வெற்றி அளித்தது என்பது இது வரை இரு தரப்பாலும் குறிப்பிடப்படவில்லை.

தென்கொரிய வடகொரிய விவகாரம், வடகொரியாவை அணுவாயுத கட்டுபாட்டு வலைக்குள் கொண்டுவருதல், தென் சீன கடலில் அமெரிக்க கலன்கள் சுதந்திரமாக பயணித்தல் போன்றனவற்றிற்கே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்பட்ட போதிலும்,

தானே தனிப்பெரும் வல்லரசாக ஏகாதிபத்தியம் செலுத்தி வந்த அமெரிக்கா தற்போது அனைத்துலக ஒழுங்கில் சீனாவின் திடகாத்திரமான நகர்வுகளால் தனது நிலையை இழக்க வேண்டிய கட்டத்துக்கு வந்ததுள்ளது.

அமெரிக்க ஆளும் தரப்பினர் தமது வாக்காளர்களுக்கு பொருளாதார நலன்களை பெற்று கொடுப்பதன் மூலம் தமது இருப்பை பலப்படுத்த முற்படும் பொருட்டும் அல்லது தாம் சார்ந்த அனைத்துலக நிறுவனங்களை திருப்த்திப்படுத்தும் பொருட்டும் இன்று சீனாவுடன் வளைந்து போக வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

சீனாவின் மக்கட்தொகையும் அவர்களின் வாழ்க்கை தரமும் அமெரிக்க மக்கட்தொகை பரம்பலுக்கும் வாழ்க்கை தரத்திற்கும் பெரும் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மூடிய பொருளாதார கொள்கையில் ஒன்றிலொன்று தங்கி இருக்கும் தன்மையும், [அமெரிக்காவுக்கு சீனா இரண்டாவது வியாபார பங்காளி சீனாவுக்கு அமெரிககா முதலாவது வியாபார பங்காளி] சீனா யுத்தம் புரிவதில் நாட்டம் காட்டாமையும், அமெரிக்கா சீனாவுக்கு நேரடி முதலீட்டு வளமாக இருப்பதாலும். சீனாவின் தேவை அமெரிக்காவுக்க மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே மேலே குறிப்பிட்டது போல அடிப்படை நலன்கள் என்று பார்க்கும் பொழுது அமெரிக்கா தனது தனிப்பெரும் வல்லரசு கோட்பாட்டை விட்டு விட்டதாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் சிந்தித்தது கூட கிடையாது.

இது சீன பழுவை தாங்கும் திறமையின் தேவையை அமெரிக்கா உணரவைத்துள்ளது என்பதை காணலாம். இந்த நிலை சீன அமெரிக்க போட்டிநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லதாகவே தெரிகிறது.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்து எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

http://www.puthinappalakai.org/view.php?20110129103049

  • கருத்துக்கள உறவுகள்

பழைய விடயத்தை தூசிதட்டி எடுத்திருக்கின்றார், புதிதாக எதுவும் இதில் இல்லை ,அமெரிக்காவிற்கு இருப்பு என்பது மிக அவசியமும் தவிர்க்கமுடியாததும். ஈரான் மற்றும் வட கொறிய யுத்தம்தான் அடுத்து வரும் யுத்தங்கள் ,இவர்களின் கொட்டங்கள் இன்னும் ஒரு பத்து வருடங்கள்தான் ,அதன்பின் அடக்கியே வாசிக்கவேண்டும் .

இப்பாதே அரைவாசி அமெரிக்க வர்த்தகம் சீனாவின் பணத்தில்தான் இருக்கிறது........... கொரியாவுடன் அல்லது ஈரானுடன் போர் என்றுபோனால். அமெரிக்காவை சீனாவிற்கு எழுதிகொடுத்துவிட்டே போகலாம்.............. அப்படி எழுதவிட்டாலும் நடக்கபோவது அதுதான்.

ஈரான் அணுஆயுத உற்பத்தியை செய்யாது போனாலும் செய் என்று சீனாவும் ரசியாவும் முண்டுகொடுப்பதன் உள்நோக்கமும் அதுதான்.

இஸ்ரேல் யூதர்களின் ஆதிக்கம் அமெரிக்க அரசியலிலும் வர்த்தகத்திலும் ஆழுமைகொண்டிருப்பதால்............ அமெரிக்க பொருளாதார அழிவிலும்விட இஸ்ரேலின் இருப்பை நோக்கியே அவர்கள் அமெரிக்காவை நகர்த்துகிறார்கள். நடந்துமுடிந்த ஈராக்கிய போரும் யூதர்களின் துண்டுதலால் நடந்த ஒன்றுதான். சாதம் உசைனின் இஸ்ரேலுக்கு எதிரான போக்கு அதற்கு அத்திவாரம் இட்டுள்ளது. அமெரிக்க இராணுவீரர்களையும் பலிகொடுத்து அமெரிக்க நாட்டு மக்களின் பணத்தையும் பாவித்து யுதர்கள் செய்த கொடுமை அது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.