Jump to content

மனசுக்குள் என்ன..?!


Recommended Posts

பதியப்பட்டது

மனசுக்குள் என்ன..?!

"என்ர அப்பு ராசா. நீ யார் பெற்ற பிள்ளையோ தெரியாது மோனை, நல்லாய் இருப்பாய்." கொடுத்த சாப்பாட்டை கையில் வாங்கிய படி அந்த ஆச்சி தன்னை அறியாமலே எங்களைப் பாராட்டுறார். ஏன் ஆச்சி சாப்பிடாமல் இருக்கிறீங்கள். சாப்பிடுங்கோ. " கன காலமப்பு இப்படிச் சாப்பாடுகள் கண்டு.. நீ நல்லாய் இருப்பாய் மோனை" மீண்டும் மீண்டும் ஆச்சியின் வார்த்தைகள் எங்களைப் பாராட்டுவதிலையே குறியாய் இருக்குதே தவிர கொடுத்த உணவை கையால் தொட்டுக் கூடப் பார்க்க முயலவில்லை. இதை அவதானித்தப்படியே நான் சற்று அப்பால் நகர்ந்தேன்.

அப்படி என்ன தான் இருக்கு அந்த ஆச்சிக்கு எங்களில பாசம் காட்ட, மனதுக்குள் நானே எனக்குள் பேசி ஏக்கத்தை வளர்த்தப்படி மற்றவர்களுக்கும் சாப்பாடு பரிமாறினேன். அவை பரிமாறப்பட்டு முடிந்ததும் மீண்டும் அந்த ஆச்சியிடம் சென்று.. அப்ப ஆச்சி நாங்கள் போயிற்று வரப்போறம். " என்ன மோனை அவசரம், இஞ்ச கொஞ்சம் இரனப்பு". ஆச்சியின் கெஞ்சல் என் இதயத்தின் வாசல் வரை சென்று மனதை நெகிழச் செய்தது. இல்லை ஆச்சி நேரம் போகுது, இங்கால பக்கத்திலையும் ஒரு இடத்த போகனும். "அப்ப போயிட்டு வா மோனை. இஞ்சால திரும்பிப் போகேக்க போற வழியில என்னையும் ஒருக்கா வந்து பாத்திட்டுப் போ என்னப்பு". நிச்சயமா ஆச்சி.. நேரம் கிடைச்சா வருவன். கவலைப்படாதேங்கோ இப்ப தந்ததைச் சாப்பிடுங்கோ என்ன.

யாரோ ஒரு ஆச்சி. பார்த்து விட்ட அந்த ஒரு சில நொடிகளுக்குள் எத்தனை பாசம். போற வழில ஆச்சியைப் பாத்திட்டுத்தான் போறது. திடமாய் எண்ணியபடி அடுத்த இடம் நோக்கி பயணிக்கலானேன்.

" என்ன பிரியன் ஆச்சிக்கு உன்னைப் பிடிச்சிட்டுது போல". இல்ல மோகன்... ஆச்சிக்கு நாங்கள் கொடுத்த சாப்பாட்டை விட எங்களைக் கண்டது தான் மகிழ்ச்சியடா. ஆச்சிட கண்களைக் கவனிச்சனியே, அவா சாப்பாட்டை வாங்கும் போது அவை பனிச்சிட்டுது. அவாக்குள்ள ஏதோ பெரிய ஏக்கம் ஒன்று பொதிஞ்சிருக்குதடா. இப்படித்தான் அங்க இருக்கிற மற்றவைக்குள்ளும் இருக்கும் என்ன?. என் ஏக்கம் கலந்த வினவல் மோகனையும் சிந்திக்க வைச்சிருக்க வேணும். "உண்மை தான் பிரியன் நானும் அவதானிச்சனான். அங்கை இருக்கிற ஒவ்வொருத்தருக்கையும் ஒரு திரைக்கதையே இருக்கும் போல". நிச்சயமா மோகன். திரும்பி வீட்ட போகேக்க அங்க ஒருக்கா போயிட்டுப் போவமே?. " நேரம் இருந்தா போவம் பிரியன். நீ உதுகளைப் பற்றி யோசிக்காத இது தாண்டா இப்ப உலகம்." மோகன் சொல்லுறதும் சரி போலத்தான் தெரியுது. நிச்சயம் ஆச்சியைச் சந்திக்க வேணும் அவாக்குள் இருக்கிறதுகளை அறிய வேணும் என்ற உறுதியோடு சைக்கிளை மிதித்தேன்.

"வாங்கோ தம்பிமார் வாங்கோ. வருசம் என்டால் எங்களுக்கு பொழுது வராட்டிலும் நீங்கள் வந்திடுவியள் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. உங்களைக் கண்டதில பெரும் மகிழ்ச்சி. பிள்ளைகள் இஞ்ச வாங்கோ யார் வந்திருக்கினம் என்று பாருங்கோ". இவ்வளவையும் வாசலிலேயே கேட்ட நமக்கு எங்களை எந்தளவுக்கு இந்த உள்ளங்கள் எதிர்பார்த்திருக்கின்றன என்ற உண்மை புரிந்தது. ஒருவேளை நாங்க வராமல் விட்டிருந்தால் அதை எண்ணி இவர்கள் எவ்வளவு வருந்தியிருப்பார்கள். உள்ளத்தில் அவற்றை எண்ணங்களால் உணர்ந்தபடி..வாங்கோ ரீச்சர் பிள்ளையளோட கொஞ்சம் கதைப்பம் என்று கூறி இல்லத்துக்குள் நுழைகின்றோம்.

நாங்கள் ரீச்சரோடு இல்லத்துக்குள் நுழைந்ததும். " பிள்ளையள் அண்ணாமார் புது வருசத்துக்கு உங்களைப் பார்க்க வந்திருக்கினம். வணக்கம் சொல்லுங்கோ" இது ரீச்சர். அதற்குப் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து, "வணக்கம் அண்ணாக்கள்" என்றார்கள். அவர்களின் ஓங்கி ஒலித்த அந்த வணக்கம் ஒன்றே அவர்களுக்குள் எங்களைக் கண்டத்தில் எவ்வளவு பூரிப்பு என்பதைச் சொல்லியது. ரீச்சர்.. நாங்கள் இவற்றைப் பிள்ளையளட்ட நேர கொடுக்க விரும்புறம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லைத் தானே. " என்ன இப்படிக் கேட்டுட்டீங்கள்.. நீங்கள் வருடா வருடம் எங்கட சிறுவர் இல்லத்துக்கு அன்பளிப்புகள் கொடுக்கிறனீங்கள் தானே. உங்களில எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. இந்த முறை நீங்களே அன்பளிப்புகளை நேர பிள்ளையளட்டக் கொடுங்கோ. அப்பதான் அவைக்கும் மகிழ்ச்சியா இருக்கும்". நன்றி ரீச்சர் எங்கட ஆதங்கத்தைப் புரிஞ்சு கொண்டிருக்கிறீங்கள்.

ஒவ்வொரு குழந்தைகளிடமும் நேரடியாக பரிசில்களையும் வழங்கிவிட்டு, கொண்டு சென்ற கணணியை இயக்கி அந்தச் சிரார்களுடன் இணைந்து சில கணணி விளையாட்டுக்களை விளையாடிவிட்டு விடைபெற ஆயத்தமானோம். தம்பி தங்கைகளா.. அண்ணாக்கள் போயிட்டு வரப்போறம் "ராரா" காட்டுங்கோ. இதைக் கூறி முடிப்பதற்குள்.. ஒரு சிறுவன் ஓடி வந்து.. "அண்ணா போகாதேங்கோ..எங்களோட கணணி விளையாட ஆக்களில்லை போகாதேங்கோ.. என்று ஏக்கத்தோடு கண்களில் நீர் ததும்ப கையைப் பிடித்துக் கொண்டான்". "சீலன் அண்ணாக்கள் தூரத்த இருந்து வருகினம். இப்ப போயிட்டு பிறகு வருவினம். இஞ்ச தான் இருப்பினம். இப்ப போயிட்டு வரட்டும் என்ன. அதுவரைக்கும் ரீச்சர் சொல்லித்தாறன் கணணில விளையாட்டு எப்படி விளையாடுறது என்று சரியா" ரீச்சரிடம் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, அரை மனத்தோடு வலிந்து உருவாக்கிய நம்பிக்கையோடு சிறுவன் கையை விட்டு ரீச்சரிக்கு அருகில் போய் நின்று கொண்டு ஏக்கத்தோடு பார்க்கத் தொடங்கினான். அவன் பார்வைக்காகவே அங்கு தங்க வேண்டும் போல் இருந்தது. பாவம் அந்தப் பிஞ்சுக்குள் உணரப்படும் தனிமைக்கு யார் கொடுப்பார் ஆறுதல். பெற்றவர்களா..?? உறவினர்களா..?? இல்லை உலககெங்கும் சிறுவர்களைப் பராமரிக்கிறம் என்று கூறித்திரியும் கனவான் நிறுவனங்களா..??!

புதுவருடமும் அதுவுமா எங்கும் ஏக்கங்களும் வினாக்களுமே மீதமாக மீண்டும் வீட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமான போது.. முதியோர் இல்லத்து ஆச்சியின் எண்ணங்கள் வந்து மோதிச் சென்றன. மோகன் வீட்ட போகேக்கை அந்த ஆச்சியோட ஒரு நாலு வார்த்தை பேசிட்டுப் போவம் என்ன?. " என்ன பிரியன் ஆச்சியின் பாசம் உன்னை மிகவும் பாதிச்சிட்டுப் போல.. சரி சரி போகேக்க ஒருக்கா போயிட்டுத்தான் போவமே".

சைக்கிள் முதியோர் இல்லத்தை நெருங்குகிறது. கண்கள் ஆச்சியைத் தேடத் தொடங்கின. ஆச்சி வாசலில் எங்களை எதிர்பார்த்தபடி அதே சாப்பாட்டுப் பொட்டலத்தோடு காத்திருக்கிறார். சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு, ஆச்சியை அணுகி.. என்ன ஆச்சி இன்னும் சாப்பிடல்லைப் போல. எங்களையோ எதிர்பார்த்து இருகிறீங்கள்?. "ஓம் மோனை உன்னைத்தான் எதிர்பாத்திருக்கிறன். எனக்கு ஒரு உதவி செய்வியோ மோனை?" என்ன செய்யனும் கேளுங்கோ ஆச்சி.

"எனக்கு ஒரே ஒரு மகள். இங்க ஊருக்கத்தான் கலியாணம் கட்டினவள். மாப்பிள்ளை வெளிநாடு போய்.இப்ப எல்லாரும் லண்டனில இருக்கினம். என்ர பேரப்பிள்ளையளும் இங்க தான் பிறந்தவை. நான் அவையளை 10, 15 வயது வரை வளர்த்தனான் மோனை. இப்ப லண்டன் போய் 5 வருசம். ஒரு கடிதம் கூடப் போடுறதில்லை. இங்க ஆமிக்காரன் வரேக்க என்ர வீட்டை குண்டு வைச்சு உடைச்சுப் போட்டான். நான் அநாதையா நிக்கிறன் இப்ப. எனக்கு ஊரில காணி பூமி இருக்கு. அதுவும் இப்ப இவன் ஆமிக்காரன்ர வளவுக்க இருக்காம் என்று அங்க போக விடுறாங்கள் இல்லை. அதுதான் நான் போக இடமில்லாம உறவினர்களும் கவனிக்காம விட இங்க வந்திட்டன் மோனை.

என்ர தங்கச்சிட மகன் செல்வராசா நல்லூரடியில முத்திரைச்சந்தியில கடை வைச்சிருக்கிறான். அவன்ர பிள்ளையள் எல்லாம் லண்டனிலையாம் என்று அறிஞ்சன். அவையளுக்கு என்ர மகள் வீட்டோட தொடர்பு இருக்கும். அதுதான் ஒருக்கா இவன் செல்வராசாட்ட என்னை வந்து பார்த்திட்டு போகச் சொல்லுறியோ மோனை." என்று தன் ஆதங்கத்தை கொட்டிய ஆச்சி மீதியையும் தொடர்ந்தார்..

"இவள் என்ர மகள் காசு அனுப்ப வேணாம். நாலு வரில ஒரு கடிதம் போடலாம் எல்லோ. என்ர பேத்திமார் பேரன்மார் என்னை மறந்திட்டுதுகள். முந்தி இங்க இருக்கேக்க அம்மாச்சி அம்மாச்சி என்று முன்னும் பின்னும் காலுக்க நிண்டதுகள். இப்ப எல்லாம் மறந்திட்டுதுகள். அம்மம்மாக்கு எண்டு நாலு வரி எழுதக் கூட அவைக்கு நேரமில்லை. எனக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும். வயசு போன நேரத்தில என்ர பிள்ளை என்னைப் பராமரிக்கும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தன். காலம் இப்படிச் செய்து போட்டுது மோனை. எப்படி இருந்த நான் இப்படி அநாதையா இங்க சீரழியுறன். என்னை யார் பாப்பினம் சொல்லு ராசா. நீ பாக்கிறாய் தானே மோனை, என்ர கோலத்தை" என்று ஏக்கங்களோடு தன் சொந்த எதிர்பார்ப்புக்களை எல்லாம் சொல்லி முடித்ததும் ஆச்சியின் கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தின் வழி வழிந்தோடியது.

சரி சரி.. அழதேங்கோ ஆச்சி. உங்களைப் போலத்தான் பல பேர் இங்கையும் இன்னும் கொஞ்சப் பேர் பிறநாட்டுக்குப் பிள்ளைகளை நம்பிப் போய் அங்கும் அநாதைகளா அன்புக்கும் பராமரிப்புக்கும் ஆளில்லாமல் தவிச்சுக் கொண்டு இருக்கினம். நிச்சயமா ஆச்சி உங்களுக்கு நான் உதவி செய்யுறன். உங்கட தங்கைச்சிட மகனைச் சந்திச்சு விபரம் சொல்லுறன். எதுக்கும் உங்கட விபரங்களைத் தாங்கோ. " ஓம் ராசா என்னைப் பற்றிச் சொல்லுறன் எழுதிறியோ மோனை". ஓம் ஆச்சி.

ஆச்சிடம் விபரங்களைப் பெற்றுக்கொண்டு.. அப்ப ஆச்சி நாங்கள் போயிட்டு வரப் போறம். நீங்கள் கவலைப்படாமல் இருங்கோ. சாப்பிடுங்கோ ஒழுங்கா. நாங்கள் உங்கள் மகளோட உங்களுக்கு தொடர்பு ஏற்படுத்த இயன்றது செய்வம். சரியா ஆச்சி. " நீ யாற்ற பிள்ளையோ தெரியாது மோனை.. என்னில இவ்வளவு பாசம் வைச்சிருக்கிறாய். என்ர சொந்தப் பிள்ளை என்னை மறந்திட்டுது. சரி மோனை நீங்கள் கவனமா போயிட்டு வாங்கோ. இஞ்சால வந்தா இந்த ஆச்சியையும் பார்க்காமல் போகாத மோனை". நிச்சயமா ஆச்சி, இங்கால வரமுடியல்ல என்றாலும் ஒரு கடிதமாவது போடுவன். கவலைப்படாதேங்கோ. என்று உறுதிமொழி அளித்து விட்டு ஆச்சியிடம் இருந்து நானும் நண்பன் மோகனும் விடைபெற்றுக் கொண்டோம். அப்போது கூட ஆச்சியின் கண்கள் பனித்தபடியே இருந்தது. நாங்கள் வெளியேறி மறையும் வரை ஆச்சி எங்களை நோக்கியபடி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். எங்களைச் சந்தித்ததன் மூலம், தனக்குள் வைத்திருக்கும் சுமைகளில், கொஞ்சத்தை என்றாலும் இறக்கி வைச்ச சுகமாவது நிச்சயம் அவருக்குள் இருக்கும் என்ற நம்பிக்கையோடு அவருக்காக நான் முத்திரைச்சந்தி நோக்கி பயணிக்கலானேன்.

ஆக்கம்: தேசப்பிரியன்

Posted

ஆச்சியின் பேச்சு நடை மறைந்த எனது உறவின் பேச்சு போலவே இருக்கிறது...

இணைப்பிற்கு நன்றி நுணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிகழ்கால நிஜங்களோடு அமைந்த கதை.

தாயகத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு யுத்தம்.. இப்படி எத்தனையோ ஆச்சிகளை.. குழந்தைகளை அநாதைகளாக்கி விட்டுள்ளது. இவர்கள் மீதான எம்மவர்களின் கவனயீர்ப்பு குறைவாகவே உள்ளது.

சிறுவர் படை என்று உரக்கக் கத்தியோர் போரில் பல நூறு சிறுவர்கள் சிங்கள அரச படையால் கொல்லப்பட்ட போதும்.. திறந்த வெளிச் சிறை வைக்கப்பட்ட போதும்.. அதன் பின்னர் தாய் தந்தையரை இழந்து அநாதைகளாக்கப்பட்ட போதும் அவர்களுக்கு உதவ முன் வரவில்லை. இப்போதும் அது தொடர்கிறது. இந்த யுனிசெப் ஆனந்த சங்கரிக்கு எதற்கு விருது கொடுத்திச்சோ தெரியாது.. ஆனால் அவரால் ஒரு குழந்தை நன்மை பெற்றதாக அறிய முடியவில்ல

யாழ்ப்பாணத்தில் மட்டும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் பின்னான கலாசார சீரழிவு பல சிசுக்களை பலியிட்டுள்ளது. குழந்தைகளைப் பெற்று வீதியில் எறிகிறார்கள். கருக்கலைப்பு அளவு மீறிச் சென்றுள்ளது. இவை குறித்து உலகின் மனித உரிமையாளர்களுக்கு.. யுனிசெப்புக்கு செய்தி போகவில்லை. ஆனால் வன்னியில்.. பின்னர் முள்ளிவாய்க்காலில் புலிகள் பிள்ளைகளை கட்டாயப்படுத்திய செய்தி மட்டும் தெளிவாக கிரமமாக கிடைத்திருக்கிறது. ஒரு நீதியற்ற பக்கச்சார்பான உலகம் இது என்பதையே இவை காட்டி நிற்கின்றன.

அதுமட்டுமன்றி.. வெளிநாடுகளுக்கு எம்மவர்களால் கொண்டு வரப்படும் எம் முதியவர்களும்.. அரசாங்கப் பணத்துக்காக தனிய வாழ விடப்படும் சூழல்களை அவதானிக்க முடிகிறது. ஊரில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் போர் அனர்த்தம் உறவுகளை குடும்பங்களை சீரழிக்கிறது என்றால் வெளிநாடுகளில்.. இயந்திர வாழ்க்கையும்.. பணமும்.. அன்பை.. உறவுளை.. குடும்பங்களில் மகிழ்ச்சியை.. குறிப்பாக முதியோர்களின் மகிழ்ச்சியை இல்லாமல் செய்வதை காண முடிகிறது.

  • 1 year later...
Posted

இதை வாசிக்கும் போது அழுகையே வந்து விட்டது. இப்படி பலரை நானும் சந்தித்திருக்கிறேன். :(

அம்மம்மாவின் நினைவும் வந்து போனது. ஒரு கிழமை கதைக்காவிட்டாலும் அந்தரப்படுவார். :( அம்மாவிடம் சொல்லி call எடுத்து விசாரிப்பார். :(

 

அப்படியிருக்கும் போது ஊரிலும் யாரும் தொடர்பில் இல்லை. வெளிநாட்டிலிருந்தும் யாரும் கதைக்கவில்லை என்றால் அவர்கள் எவ்வளவு பாவம்.. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
நல்ல பகிர்வு என்று சொல்ல மனம் வருகுதில்லை. யாவும் உண்மை.
பகிர்விற்கு நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.