Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது!

Featured Replies

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது! Outlook India கட்டுரை

இலங்கை மீதான சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு, இந்தியாவின் அணுகுமுறையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது என Outlook India இதழில் வெளிவந்த அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களினுடைய மனித மற்றும் அரசியல் உரிமைகள் சீன - இந்திய முரண் அரசியலுக்குள் பணயக் கைதியாகி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்குக்கான அதிகாரப்பரவலாக்கத் தீர்வினை எட்டுவதற்கு இந்தியாவால் இயலவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டதாக உணருகின்றார் எனவும் Outlook India இதழில் Satarupa Bhattacharjya எழுதிய அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்டுரையின் தமிழாக்கத்தினை முழுமையாக இங்கே தருகின்றோம்:

'ஒரு பயங்கரவாதியைக் கொல்வதற்கு இப்பொழுதும் உனக்குப் பயமா'? ஒரு படையினன் தனக்கு அருகில் நிற்கும் மற்றுமோர் படையினனிடம் இவ்வாறு சிங்களத்தில் கேட்கின்றான். அப்படிக் கேட்கும் போது, நிர்வாணமாக்கப்பட்டு, கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் முழங்காலிட்டிருந்த மூன்று பேரை அவனது சுடுகலன் குறி பார்த்தபடி உள்ளது. சன்னங்கள் வெளியேறும் சத்தம் கேட்கிறது. மூன்று கைதிகளும் தரையில் விழுகின்றனர். அவர்களது தலைகள் குருதியில் தோய்ந்துள்ளன.

மிகக் கொடூரமான படங்கள் அடுத்தடுத்து வேகமாக காண்பிக்கப்படுகின்றன. நிர்வாணமாக்கப்பட்டு - பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு - கொல்லப்பட்ட பெண்களின் உடலங்கள் வாகனத்தில்; இழுத்துப் போடப்படுகின்றன.

'போரற்ற பகுதியில்' அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் குருதி வெள்ளம் பாய்கின்றது. இந்த மருத்துவமனைகள் மீது, சிறிலங்காப் படைகள் மீண்டும் மீண்டும் - திட்டமிட்டு இலக்கு வைத்து எண்ணிலடங்கா பொது மக்களைக் கொன்றனர். பொது மக்களுக்கு மத்தியில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தியோ அல்லது தமது கட்டுப்பாட்டை மீறி வெளியேறிய பொதுமக்கள் மீது சூடு நடத்தியோ விடுதலைப்புலிகளும் இந்த அவலத்திற்கு பங்காளிகளாகியுள்ளனர்.

இவை சனல் 4 உருவாக்கிய 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள கொடூரமான படங்களில் சிலவாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற போரில், 2009 இன் இறுதி மாதங்களில் 40 000 வரையான பொது மக்கள் கொல்லப்பட்டதாக மூன்றாம் தரப்பு தெரிவித்துள்ளது. கொடூரங்களை இழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து செல்லிடப்பேசி மற்றும் சிறிய வகை ஒளிப்படக் கருவிகளால் பிடிக்கப்பட்ட படங்களை பெற்றுத் தொகுப்பற்கு சனல் 4 இற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மீறல்களை மட்டும் சனல் 4 ஆவணப்படம் எதிரொலிக்கவில்லை. 'ஒரு கையில் ஆயுதங்களையும் மறு கையில் மனித உரிமைகளையும் படையினர் தாங்கினர்' என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கூற்று பொய்யென்பதையும் எடுத்தியம்புகின்றது.

சிறிலங்காவிற்கு இது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. சனல் 4 காட்சிகள் அதிர்ச்சியூட்டுவனவாக உள்ளனவா எனச் சிறிலங்கா படைத்துறைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் Ubhaya Medawala விடம் கேட்ட போது, 'சனல் 4 இவ்வாறானதொரு கதையைச் சோடித்துள்ளமையே அதிர்ச்சியளிப்பதாக' Outlook இற்கு அவர் பதிலளித்தார்.

நாட்டினதும் பாதுகாப்புப் படையினரதும் நற்பெயரைக் கெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆவணப்படம் இதுவென கடந்த வாரம் ஊடகர் மாநாடொன்றில் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். 'சனல் 4 காணொளி நாட்டுக்கெதிரான அரசியல் பரப்புரை' என அவர் மேலும் தெரிவித்தார்.

வீதியில் செல்லும் சாதாரண சிங்களவரிலிருந்து, ஆட்டோ ஒட்டுபவர் முதல் அலுவலகங்களில் பணிபுரிவோர், இளைஞர்கள் மத்தியிலும் இதே கருத்தே நிலவுகின்றது. மேற்குலக அரசாங்கங்கள் கொழும்பினை பலிக்கடாவாக்க முனைவதாகவும், பழைய புண்ணைக் கிளறுவது, மீள் நல்லிணக்கத்தினைப் பாதிக்குமென்றும் அவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில், மீள் நல்லிணக்கத்திற்கான பாதையில், அரச கொடூங்கோன்மைக்கு முகம் கொடுத்தவர்களுக்கான நீதி உள்ளடக்கப்பட வேண்டும்.

'அனைத்துலக கண்காணிப்பாளர்களை அனுமதிக்க மறுத்த சிறிலங்கா அரசாங்கத்தின் போக்கின் விளைவே சனல் 4 இன் ஆவணப்படம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் நிறுவனர் ராஜன் கூல் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாட்சிகள் அற்ற ஒரு போரை நடத்தியமை, போரின் போதும் அதற்குப் பின்னரும் உலகம் தழுவி வெளிப்படுத்தப்படும் அக்கறைக்கு உரிய பதிலளிக்காமை, எடுத்த அனைத்திற்கும் மறுப்பு என்ற ஒரே நிலைப்பாட்டினை வெளிப்படுத்துதல் ஆகிய அனைத்தினதும் விளைவே சனல் 4 காணொளி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரமான கண்காணிப்பாளர்களை சிறிலங்கா தடுத்தமை தொடர்பாக, சிறிலங்காவிற்கான முன்னாள் ஐ.நா பேச்சாளர் Gordon Weiss அவர்களின் கருத்து ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. போர் உக்கிரமடைந்த 2008 இன் இறுதி – 2009இன் ஆரம்பத்தில் வடக்கிலிருந்து திட்டமிட்ட வகையில் 'அனைத்துலக சாட்சிகள்' கொழும்பினால் வெளியேற்றப்பட்டதாக அவர் குற்றம் சுமத்துகின்றார்.

ஐ.நா பணியாளர்களின் பாதுகாப்பிற்குத் தம்மால் உத்தரவாதம் வழங்க முடியாதெனக் கூறிய மகிந்த அரசாங்கம், ஐ.நா பிரதிநிதிகளை போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு பணித்தது.

அண்மையில் வெளியாகியுள்ள தனது ’The cage - கூண்டு' எனும் நூலில் Weiss இவ்வாறு எழுதுகின்றார்:

இத்தனை ஆயிரம் உயிர்களைப் பலியெடுக்கக் காரணமாகவிருந்த சிறிலங்கா அரச படைகளின் நடவடிக்கைகள் மீது நம்பகமான நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் தற்போதுள்ள நிலையில் அவ்வாறானதொரு நீதி விசாரணையை முன்னெடுத்து, பொறுப்புக் கூறும் தகுதி நிலையில் இல்லை.

ஆவணப்படத்தினைப் பற்றி பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் David Miliband மற்றும் பிரான்சின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Bernard Kouchner ஆகியோர் அண்மையில் எழுதிய கட்டுரையில், வெளியுறவு அரசியல் கொள்கைக்கு ஏதும் அர்த்தம் இருப்பின், இந்த வகை மனிதத்தன்மை அற்ற நடத்தைகள் தடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட கருத்துகளை எதிர்ப்பதில் சிறிலங்காவின் அமைச்சர்களும் பத்தி எழுத்தாளர்களும் வேகமாக உள்ளனர்.

அதேவேளை சிறிலங்கா அரசியல் மட்டத்தில், மாறுபட்ட கருத்துக்கள் இல்லை என்பதாக அர்த்தப்படுத்த முடியாது. முன்னாள் வெளியுறவு அமைச்சரும் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர Outlook இற்கு கருத்துரைக்கும் போது, 'மனித உரிமை மீறல்கள் தொடர்பான அரசாங்கத்தின் மறுத்துரைப்புகள், அனைத்துலக சமூகத்திடமிருந்து அதனைத் மேலும் தனிமைப்படுத்தவே வழி வகுக்கும்' எனக் குறிப்பிட்டார்.

அத்தோடு இறைமையைப் பாதுகாத்தல் என்ற பேரில் தமது சொந்த மக்களை இத்தகு மோசமாக நடத்த எவருக்கும் உரிமை கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆவணப்படத்தினை You Tube இல் காணக் கூடியதாக உள்ளது. உலகம் தழுவிய அளவில் பற்பல விமர்சகர்களையும் இது சென்றடைந்திருக்கின்றது. ஜுன் முதல் வாரத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணையகத்தில் இது காண்பிக்கப்பட்ட போது, பலர் அச்சமடைந்தனர். ஒருவர் வெளிப்படையாக கண்ணீர் விட்டு அழுதார்.

ஆவணப்படக் காட்சிகள் போர்க் குற்ற ஆதாரங்களாக நோக்கப்படக் கூடியமை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான வர்த்தக வரிச் சலுகையை நிறுத்தியது.

ஆனால் அரசாங்கம் இவற்றைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக மாநாடு ஒன்றினை சிறிலங்கா படைத்தரப்பு கொழும்பில் நடாத்தியிருந்தது. பயங்கரவாத முடியறிப்பு தொடர்பான தமது அனுபவ முன்மாதிரியை வெளியிட்டதோடு, பங்கேற்றவர்களின் பாராட்டுகளையும் பெற்றிருந்தது.

கடந்த வாரம் St Petersburg இல் நடைபெற்ற அனைத்துலக பொருளாதார ஒன்றுகூடலில், ரஸ்ய அரச தலைவர் Dmitry Medvedev மற்றும் சீனத் தலைமை அமைச்சர் Hu Jintao ஆகியோரின் ஆதரவு மகிந்த ராஜபக்சவிற்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உட்கட்டுமானத் துறையில் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் சீனாவின் முதலீட்டுடன் முன்னெடுக்கப்படுகின்றது. மன்னார் கடலில் எண்ணெய் மற்றும் வாயு ஆராய்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ரஸ்யாவின் GAZPROM நிறுவனம் தயாராகி வருகின்ற புறநிலையில் புதியதொரு நகர்வு வேகமாக மையம்கொள்ளத் தொடங்கியுள்ளது.

சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு, இந்தியாவின் அணுகுமுறையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களினுடைய மனித மற்றும் அரசியல் உரிமைகள் சீன - இந்திய முரண் அரசியலுக்குள் பணயக் கைதியாகி வருவதாக ராஜன் கூல் சுட்டிக்காட்டுகின்றார்.

வடக்குக் கிழக்குக்கான அதிகாரப்பரவலாக்கத் தீர்வினை எட்டுவதற்கு இந்தியாவால் இயலவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டதாக உணருகின்றார்.

பிரேமச்சந்திரன் மேலும் கூறுகையில், போர் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் இந்தியாவிடம் உள்ளன. எனவே எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கு இந்திய அரசாங்கத்திற்குத் தெரியும். இலங்கைத் தமிழர்களிடமிருந்து இந்தியா தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளப் போகின்றதா என்பதை சிந்திக்க வேண்டும்.

அரசாங்க ஆதரவு தமிழ் அரசியல்வாதியாக இருக்கக்கூடிய தர்மலிங்கம் சித்தார்தன் கூட, மனித உரிமை விவகாரங்கள் தொடர்ச்சியாக கவனிக்கப்படாது உள்ளதாகவும், இந்நிலை மீண்டும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான இடைவெளியை அதிகரிக்கும் எனக் கூறுகின்றார். 2009இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள போதும், இலங்கைத் தீவு தன்னகத்தே ஒரு போரைக் கொண்டுள்ள தேசமாகவே காணப்படுகின்றது.

இவ்வாறு அவுட்லுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={30C9EA69-5D36-4CEC-9723-1AC74BC197B6}

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது! Outlook India கட்டுரை

இல்லாத ஒன்றுக்கு இப்படியெல்லாம் கட்டுரை வரையப்படாது.. கிந்திய வெளியுறவு கொள்கை..இளிச்சவாயர்களை குத்துதல் .. வலிமையார்வர்களிடன் காலில் விழுந்து கதறுதல்.. கூடுமானவரை தள்ளி தள்ளி போட்டு சொறிந்து விடுதல் ஆகியனவாகும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.