Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலரும் நினைவுகள் - வரதர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18. உடையும் நகையும்

ஒரு மனிதனின் வெளித் தோற்றத்துக்கு முக்கியமான காரணமாயிருப்பவை அவனுடைய ஆடையணிகளும் தலைமுடி (கூந்தல்) அமைப்புமே ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்று பழமொழியும் உண்டு.

ஆயிரத்துத் தொழாயிரத்து இருபதுகளில் சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணப் பகுதியில் பொதுவாக ஆண்களும் பெண்களும் முடியுடை வேந்தர்களாகவே இருந்தார்கள். அதாவது குடுமி வைத்திருந்தார்கள். ‘சிலுப்பா’ வெட்டிய ஆண்களை மிக அரிதாகவே காண முடியும்.

ஆண்களும் குடுமி வைத்திருப்பது அக்காலத்தில் ஒரு சமூக வழக்கமாக இருந்தது. அந்தச் சமூக வழக்கத்தை மீறுவதற்குப் பெரும்பாலானவர்கள் துணியவில்லை.

இப்போதெல்லாம் புதுமை செய்வதற்காகவும் பகுத்தறிந்து சரியானதைச் செய்வதற்காகவும் சமூக வழக்கங்களை உடைத்துக்கொண்டு வருவதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்தக் குணம் மக்களிடையே சற்றுக் குறைவாகவே இருந்தது. அப்பா எப்படிச் செய்தார். அப்பாவின் அப்பா எப்படிச் செய்தார். நாமும் அப்படித்தான் செய்யவேண்டுமென்ற ஒரு மனப் பதிவு அன்றைய மக்களிடம் இருந்தது.

இப்போது புலிப் பெண்களில் சில ஆண்களைப்போலச் ‘சிலுப்பா’ வெட்டியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அந்தக் காலத்தில் யாராவது இதை நினைத்துக் கூடப் பார்ப்பார்களா?

சில ஆசாரக் குடும்பங்களில் பெண்களின் கணவன் இறந்து விட்டால் அந்தப் பெண்களின் தலையை மொட்டையடிப்பார்கள். இந்தியப் பிராமணர்களிடையே இந்தப் பழக்கம் முன்பு பெருவழக்கு. யாழ்ப்பாணத்திலும் மிக மிகக் குறைந்த அளவில் சில குடும்பங்களில் இந்த வழக்கம் இருந்தது.

புலிப் பெண்களின் சிலுப்பாத் தலைகளைப் பார்க்கும் போது என் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி தோன்றுகிறது. எங்கள் பெண்களின் முன்னேற்றப் பாதைக்கு இரு ஒரு அடையாளம் என்றே நான் கருதுகிறேன். “ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே.”

(ஆனால் “ஐயோ, நமது தமிழ்ப் பண்பாடு சீரழிந்து போகிறதே!” என்று கூக்குரலிடும் பழைமைவாதிகள் இப்போதும் நிறைய இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்களின் வாய்கள் இப்போதைக்கு மூடப்பட்டிருப்பது நல்லதே!)

அந்தக் காலத்தில் ஆண்கள் சிலர் தலையின் முன் பக்கத்தை மழுங்கச் சிரைத்து பின் அரைவாசிக்கே மயிரை வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள்.

‘காற்சட்டை, கோட் போட்டுக்கொண்டு ‘கச்சேரி’ உத்தியோகத்துக்குப் போன பலர்கூட அந்தக் காலத்தில் குடுமியை வெட்டத் துணியவில்லை. அவர்கள் தமது தலைப்பாகைக்குள் குடுமியை மறைத்து வைத்திருப்பார்கள்.

ஆண்களின் இந்தக் குடுமி மோகம் மிக விரைவில் மாறத்தொடங்கிற்று. 1930களில் பல இளைஞர்கள் குடுமிகளை வெட்டிச் சிலுப்பா வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

குடுமி வைத்திருந்த இளைஞர்களை மற்றச் சிறுவர்கள் ‘டேய், குடும்பாஸ்!’ என்று கேலி செய்யவும் தொடங்கினார்கள். அதற்குப் பயந்து தமது குடுமிகளை வெட்டிக் கொண்ட சில நண்பர்களை நான் அறிவேன்.

பெண்களின் தலைமுடி அன்று தொடக்கம் - இன்று கூடப் பெரும்பாலும் மறையாமல் இருக்கிறதென்று சொல்லலாம்.

ஆங்கிலப் பள்ளிகளுக்கு சென்ற சில பெண்கள் தமது கூந்தலை சற்றே தோள்வரை வெட்டிவிட்டதுண்டு. ஆனால் அவர்களும் தமது திருமணத்துக்கு முன்பு கூந்தலை வளர்த்துக்கொண்டை போட்டுக்கொள்வார்கள். அல்லது பின்னித் தொங்கவிடுவார்கள்.

கூந்தலை வளர்த்து அழகாகக் கொண்டைகள் போடுவதும். அல்லது விதம் விதமாகப் பின்னி விடுவதுமே தமக்கு அழகாக இருக்கும் என்ற ஒரு மனப்பான்மை பெண்களிடம் பொதுவாகப் பதவியிருக்கிறது.

ஆபிரிக்காவுக்குப் போகவேண்டாம். பக்கத்திலுள்ள தமிழ்நாட்டுக்குக்கூடப் போகவேண்டாம். இங்கே யாழ்ப்பாணத்தில்கூட, முன்பெல்லாம் காதுகளில் துளை போட்டு, அற்றில் பெரிய பெரிய பாரமான ஆபரணங்களைத்தொங்க விடுவதும், அதனால் காதுத் துவாரம் இரண்டு விரல்களை நுழைக்கக்கூடிய அளவுக்குப் பெரிதாகப் போவதும் அழகென்று, நாகரிகமென்று நினைத்தார்கள். சேலை கட்டுவதில்கூட ஒரு காலத்தில் பதினாறு முழச் சேலையைச் சுற்றிச் சுற்றி வரிந்து கட்டினார்கள். பிறகு பன்னிரண்டு முழச் சேலையைக் கட்டும்போதுகூட அதன் முந்தானையைத் தோள்மீது போட்டு, பின்பக்கமாக எடுத்து, இடுப்பை ஒரு சுற்றுச் சுற்றி மறுபடியும் பின்பக்கத்தில் ‘பின்’ பண்ணித் தொங்கவிட்டார்கள். அதுவே அழகென்றும் நாகரிமென்றும் நினைத்தார்கள். இன்றைக்கு யாராவது அப்படிச் செய்தால் அதை அழகாயிருக்கிறதென்று சொல்வார்களா, நாகரிகமென்று சொல்வார்களா?

பெண்களைத் தங்கள் ஆளுகையின் கீழ் அடக்கி வைத்திருக்கவேண்டுமென்றும், அவர்களை அழகுபடுத்தித் தங்கள் போகப்பொருளாக வைத்திருக்க வேண்டுமென்றும் இன்றைக்கும் பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்படி அடக்கி அடக்கமாக இருப்பதே – அல்லது அப்படி இருப்பதாக உலகுக்குக் காட்டுவதே நாகரிகம் என்றும், பண்பாடு என்றும் பெண்களும் நினைக்கிறார்கள்! – சிறு வயதிலிருந்தே பெண்களுக்கு அப்படிப் பாடம் படிப்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.

“கணவன் எப்படித்தான் கொடுமைப்பத்தினாலும் அவற்றையெல்லாம் பொறுத்து வாழ்வதே பெண்ணின் பெருமை” என்ற இந்தப் படிப்பு இன்னும் பல நாட்களுக்கு நின்று பிடிக்காதென்றே நினைக்கிறேன். உலகெங்கும் பெண்ணியல் வாதமும் பகுத்தறிவு வாதமும் தலைதூக்கியிருக்கிறது. நமது தமிழீழப் பெண்கள், தமிழ் கூறும் நல்லுலகுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதுக்குமே வழிகாட்டிகளாக நெஞ்சில் உரமும் நேர் கொண்ட பார்வையும் கொண்டவராய்க் கைகளில் துப்பாக்கி ஏந்தியிருக்கிறார்கள்!

ஈழத் தமிழகம் பெருமைப்படலாம்!

அந்தக்கலத்தில் இரண்டு மூன்று வயதுச் சிறு பிள்ளைகள் பலர் உடம்பில் உடை என்று எதுவுமில்லாமல் பிறந்த மேனியாகத் திரிவதை நான் பார்த்திருக்கிறேன். இப்போது குழந்தை பிறந்த உடனேயே ‘நப்கின்’ என்றும், பிறகு ‘யங்கி’என்றும் அணியாத பிள்ளைகளைப் பார்ப்பதே அரிது!

முன்பு, மூன்று நாலு வயதாகும் போது ஆண் பிள்ளைகளும் சரி, பெண் பிள்ளைகளும் சரி இடுப்பில் ஒரு சிறு துண்டு கட்டியிருப்பார்கள்.

இன்னும் சற்றே வளர்ந்ததும், பெண்பிள்ளைகள் மேலுக்கு ஒரு சட்டையும், அரையில் சிற்றாடையும் அணிவார்கள். சிறிய பெண்பிள்ளைகள் அணிவதற்கேற்ற சிற்றாடைகள். சிறிய பெண்பிள்ளைகள் அணிவதற்கேற்ற சிற்றாடைகள் (சிறிய சேலைகள் - நீளமும் குறைவு@ அகலமும் குறைவு) அப்போது விற்பனைக்கு வந்தன. அத்தகைய சிற்றாடை தயாரிக்கும் தொழிலே இப்போது நின்று விட்டிருக்குமென்று நினைக்கின்றேன்.

‘பெரிய பிள்ளை ஆகிவிட்ட, வசதிபடைத்த பெண் பிள்ளைகள். வெளியே விசேடங்களுக்குப் போகும்போது. கீழே பாவாடைகட்டி, மேலே சட்டை போட்டு, அதன்மீது தாவணி அணிந்து செல்வார்கள்.

இப்போது கூடப் பல இந்துப் பாடசாலைகளில் சரஸ்வதி பூசை போன்ற விசேட தினங்களில் பெண்பிள்ளைகள் இப்படித்தாவணி அணிந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி உடை அணியும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் அல்லது ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பெண் பிள்ளைகள் இப்படிப் பாவாடை தாவணி அணிந்து, தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகச் சிலர் நினைவு கொள்கிறார்கள்!

ஆனால், அவர்களும் ஆண் பிள்ளைகள் வேட்டி சால்வை – அவசியமானால் தலைப்பாகையும் அணிந்து தமிழர் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று வற்புறுத்துவதில்லை!

இங்கே பெண்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்ற நினைவே தலைதூக்கி நிற்கிறது!

முன்பெல்லாம் பெண்கள் திருமணம் ஆகிவிட்டால் சேலைதான் அணிவார்கள். வீட்டுக்குள் இருக்கும்போதும் சேலைதான்; வெளியே போகும்போதும் சேலைதான்!

இப்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே போகும்போது தான் சேலை அணிவது என்று ஆகிவிட்டது. சில பெண்கள் திருமணமான சில பெண்கள் வெளியே போகும்போது கூடப் பாவாடை சட்டை, ‘கவுண்’ போன்றவற்றை அணிகிறார்கள். அவர்களை யாரும் தள்ளிவைத்து விடவில்லை.

ஆண்கள் காற்சட்டை அணிவது இப்போது சர்வசதாரணம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, காற்சட்டை போட்டவர் ஏதோ வெள்ளைக்காரருக்கு அடுத்த துரை என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் மட்டுமே காற்சட்டை அணிவார்கள். அவர்களில் சிலவகை உத்தியோகத்தர்கள் - முக்கியமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரைக் காற்சட்டையே அணிவது வழக்கம். (அரைக் காற்சட்டை என்பது ‘சோட்ஸ்’ அது முழங்காலுக்குக் கீழே இறங்காது.)

அந்த அரைக் காற்சட்டை இப்போது காணக்கிடைக்காத ஒரு பொருளாகிவிட்டது. முன்பு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் அரைக்காற்சட்டைதான் அணிவார்கள். (பாடசாலைகள் என்றதும் ஆங்கிலப் பாடசாலைகள், தமிழ்ப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே வேட்டியும் சால்வையும்தான் அணிவார்கள்) பல்கலைக்கழகம் போகிறவரையும் அரைக்காற் சட்டைதான் மாணவர்களின் யூனிபோம் ஆக இருந்தது.

இப்போது மூன்று வயதுப் பையனுக்கும் முழுக்காற் சட்டைதான்!

பதவி, அந்தஸ்து வித்தியாசங்களின்றி காற்சட்டை பொது உடைமையாகிவிட்டது. ‘தமிழ்ப்பண்பாடு அழகிறதே!’ என்று முக்கியமாகப் பெண்கள் சேலை உடுக்கிவேண்டும். சிறுபெண்கள் பாவாடை, சட்டை தாவணி போட வேண்டும் என்று அழுகிறவர்கள் யாருமே இந்தக காற்சடடை நாகிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவதில்லை. ஏனென்றால் அப்படிக்குரல் கொடுக்கக் கூடிய வரும் காற்சட்டைதான் அணிந்திருப்பார். அல்லது அவருடைய உறவினர்கள் நண்பர்கள் எல்லோருமே காற்சட்டை அணிந்தவர்களாக இருப்பார்கள். – ஏன் வம்பு? சிறிய வாய்க்காலில் வரும் நீருக்கு அணைபோட்டுப் பார்க்கலாம். சீறிப் பொங்கி வரும் கட்டாற்றுக்கு அணைபோட்ட நினைப்பர்களா.

இப்போது வேட்டி உடுக்கும் ஆண்களில் அநேகர் சால்வை போடுவதில்லை. ‘சேட்’ தான் போடுகிறார்கள்.

முன்பு சிறுவர்கள் வேட்டி உடுத்தி மேலே ‘சேட்’ போடுவார்கள். சேட் போட்டால் அனேகர் சால்வை அணிவதில்லை. ஆனால் பெரியவர்கள் வேட்டி உடுத்துவதானால் ‘நாஷனல்’ என்னும் சட்டை அணிந்து, அதற்கு மேல் கழுத்தைச் சுற்றி சால்வை அணிவார்கள். ‘நாஷனல்’ சட்டை என்பது தமிழாசிரியர்களின் ‘யூனிபோம்’ மாதிரியே அந்தக் காலத்தில் விளங்கிற்று. ‘சேட்’ வெள்ளைக்காரருடைய உடுப்பு. ‘நாஷனல்’ என்பது எங்கள் நாட்டுக்குரிய சட்டையாகக் கருதப்பட்டது. ஆனால் அதன் பெயர்மட்டும் ‘நாஷனல்’ என்று இந்திய மொழியிலேயே வழங்கப்பட்டது.

முன்பெல்லாம் ஆண்களில் பலரும் நெற்றிப் பொட்டு வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. இப்பொழுது அந்தப் பழக்கம் மிக அருகிவிட்டது. நெற்றியில் விபூதிக் குறிவைத்துப் பெரிய அளவில் அதன்மீது சந்தனப் பொட்டு வைப்பவர்கள் ஒருவகை. விபூதியையோ பவுடரையோ அழுத்திப் பூசி, புருவங்களின் நடுவே சின்னஞ் சிறு வட்டமான சந்தனப்பொட்டு இட்டுக் கொள்வார்கள். அந்தச் சந்தனப்பொட்டின் நடுவே சிறு குச்சி முனையால் குங்குமம் வைத்து அலங்கரிப்பவர்களும் உண்டு.

ஆண்களில் சிலர் கழுத்திலே தங்கச் சங்கிலியில் ‘அச்சரக்கூடு’ கோத்து அணிந்ததும் உண்டு. அது அவர்களின் செல்வச் செழிப்பின் அறிகுறியாகவும் இருந்தது.

பெரும்பாலான ஆண்களும் பெண்களைப் போலக் காதுகளின் துளை போட்டிருந்தார்கள். அதிலே கடுககன் போட்டுக்கொள்வதே அழகாகக் கருதப்பட்டது. இப்போதும் திருமணச் சடங்கின் போது மணமகனுக்குக் கடுக்கன் அணிவது ஓர் முக்கிய சடங்காக நடக்கின்றது. இப்போது ஆண்கள் காதில் துளை போடுவதில்லையாதலால் அவர்களுக்காக ‘வில்லுக் கடுக்கன்’ வந்திருக்கிறது!

பெண்களின் நகைப்பித்து அன்றைக்கும் உள்ளதுதான் இன்றைக்கும் உள்ளதுதான். நகைப்பித்தும் புடைவைப் பித்தும் பெரும்பாலான பெண்களோடு உடன் பிறந்த வியாதி.

புடைவைகளின் தரத்திலும் மாதிரிகளிலும் அணியும் விதத்திரும் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது போலவே நகைகளின் வடிவங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பெண்களின் முக்கிய ஆபரணங்களில் ஒன்றான ‘அட்டியல்’ என்ணனும் நகையை இப்போது காணோம். அட்டியல் கழுத்தைச்;சுற்றி இறுக்கமாக பட்டை போல அணியப்படும். அதன் நடுவில் ஒரு சிறிய பதக்கம் தொங்கும்.

பல பெண்கள் காதுகளில் கீழ்ப்பக்கம் நடுப்பக்கம் மேல் பக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் துளை போட்டு அவற்றில் நகைகள் அணிந்ததுணடு. காதில் மேற்பக்கத்திலிருந்து தொங்கிய நகைக்கு ‘வாளி’ என்று பெயர். கீழ்க் காதில் அணிந்த தோடு பெரிய கொட்டைப் பாக்கின் அளவில் பல சிவப்புக் கற்கள் பதித்ததாகவும், வேறு பல வடிவங்களிலும் இருந்தது.

பெண்கள் கழுத்தில் இப்போது முக்கியமாக அணியும் ‘நெக்கிலஸ்’ அப்போது இல்லை. அட்டியலைவிட, இரட்டைப்பட்டுச் சங்கிலி, பெரிய பதக்கம் கோத்த சங்கிலி முதலியவற்றை அப்போது அணிந்தார்கள். பெரிய பணக்கார வீட்டுப்பெண்கள் கழுத்தில் காசு மாலையும், இடுப்பில் தங்க ஒட்டியாணமும் அணிந்ததுண்டு.

கைகளில் அப்போது அணியும் காப்புகள் இப்போது போல மெல்லிய வளையல்களாக இருக்கவில்லை. ஒவ்வொன்றும் இரண்டு பவுனுக்கு குறையாத தட்டையான தடித்த காப்புகளையே அன்று அணிந்தார்கள்.

கை விரல்களில் தங்க மோதிரமும், கால் விரல்களில் வெள்ளி மோதிரமும் அணியும் வழக்கம் இருந்தது.

பெண்களின் இந்த நகை விஷயத்திலும் அந்தக் காலத்து வேறுபல நடைமுறைகளிலும் சரி எனக்குத் தெரியாதவையும் நான் மறந்துவிட்டவையும் இன்னும் நிறைய இருக்கலாம்.

http://noolaham.net/project/04/367/367.htm

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்கும்போது எனக்கும் எனது பருவவயது ஞாபகம் வந்துவிட்டது

நான் சாதாரண வகுப்பு (O/L) படித்துக்கொண்டிருக்கும்போது எனது வகுப்பு நண்பர்கள் பலரும் முழுக்காற்சட்டை போடத்தொடங்கிவிட்டார்கள். ஆனால் நானும் எனது நண்பனொருவனுமாக கதைத்துபேசி முடிவு செய்திருந்தோம். சாதாரணதரப்பரீட்சையில் (O/L) சித்தியடைந்தால் மட்டுமே முழுக்காற்சட்டையை அணியத்தொடங்குவது என. ஆனால் அதற்கு முன்பே வீட்டில் தைத்து தந்துவிட்டார்கள். ஆனால் பரீட்சையில் சித்தி அடைந்ததைப்போய்ப்பார்த்தபின்பே நாங்கள் இருவரும் நீளக்காற்சட்டை அணிந்தோம். ஆனால் இன்று இதைச்சொன்னால் உங்களுக்கு சிலவேளை ......... இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் வாசிக்கத் தேடித்தந்தமைக்கு..நல்ல ஒரு முற்போக்கான கட்டுரை..

இப்போது கூடப் பல இந்துப் பாடசாலைகளில் சரஸ்வதி பூசை போன்ற விசேட தினங்களில் பெண்பிள்ளைகள் இப்படித்தாவணி அணிந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி உடை அணியும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் அல்லது ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இப்படித்தான் கல்வியை சொல்லித்தரும் எமது பாடசாலைகள் அதிபர்மாரின் அல்லது ஆசிரியரின் மண்டையில் இருக்கும் பிற்போக்குத்தனங்களையும் மாணவர்களுக்கு ஊட்டி அனுப்பி விடுகின்றன..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் அர்ஜுன் வரதரின் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கூறியிருந்தார். நூலகம் இலங்கையில் இருந்து வெளிவந்த அனேகமான நூல்களை மின்னூலாக்கியுள்ளார்கள். மிகுதிக் கட்டுரைகளை ஆர்வமுள்ளோர் நூலக இணைப்பில் சென்று படிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கலை, இலக்கியத் துறையில் வரதரின் பங்களிப்பு மிகக் குறைவாகவே தோன்றலாம். ஆயினும் அவர் தமது சிறுகதைகளில் ஆணித்தரமாக பல சமுதாய விழுமியங்கள் பற்றிய தன் கருத்துக்களைப் பதித்துள்ளார். அவற்றையும் மேலேயுள்ள கலாநிதியின் அறிமுகக் குறிப்பில் காணலாம்.

“வரதர் கதைகள்’’ என்ற சிறுகதைத் தொகுதியில் வரும் “வெறி’’ என்ற கதை தேர்தல் ஊட்டும் வெறியை மட்டும் கூறி நிற்பதல்ல. அதன் முடிவில் கதை மாந்தர்களை ஆசிரியர் கையாளும் சிறப்பையும் காட்டி நிற்கும். கதையை இன்பியலாக முடிக்க வேண்டும் என எதிர் பார்ப்பது மட்டுமல்ல முற்போக்காக அமைக்க வேண்டும். என்பதையும் வரதர் மறைமுகமாகக் கதை மூலம் தெரிவிக்கிறார். கதை மாந்தரை, நிகழ்ச்சிகளை, சம்பவங்களை எழுத்தாளனே ஆக்கப+ர்வமாக உருவாக்கி கதையை நகர்த்திச் செல்கிறான் என்ற அடிப்படை உண்மையையும் அக்கதையின் இறுதிப்பகுதி வெளிப்படுத்தி விடுகிறது.

வரதர் தமது எழுத்து வேலைகள் முடித்து விட்டதாக எண்ணாது மேலும் தமது படைப்பாற்றவை வெளிப்கொணர வேண்டும் என விரும்புகிறேன்.

சென்னை செ. கணேசலிங்கன்

23.6.96

பொருளடக்கம்

1. எங்கள் கிராமம் 17

2. புன்னாலை பொன்னாலையானது 26

3. சாதிகள் 33

4. கடந்துபோன கற்காலம் 42

5. வீடுகள், மாடுகள் 47

6. சைவம் 59

7. அப்பா 66

8. பிரசித்தகாரன் 75

9. விளையாட்டுகள் 80

10. பேய் பிசாசுகள் 86

11. நீர் விளையாட்டு 91

12. புகழ்பெற்ற வைத்தியர்கள் 94

13. அப்பாவின் கடை 100

14. தீ வாத்தியார் 128

15. பெரிய பள்ளிகூடம் 131

16. இந்தியப் பயணம் 141

17. உணவு 152

18. உடையும் நகையும் 159

1. எங்கள் கிராமம்

1928 ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போது எனக்கு வயது நான்கு.

நான் பிறந்து வளர்ந்த கிராமம் பொன்னாலை. இது யாழ் குடாநாட்டின் வடமேற்கு மனையில் அமைந்திருக்கிறது.

மிகச் சிறிய கிராமம்… அப்போது மிக ஏழைக் கிராமம் என்று கூடச் சொல்லலாம்.

ஏழைக் கிராமமாக இருந்த போதிலும் அதற்கு ஒரு செல்வாக்கும், நல்ல வரலாறும் உண்டு. அந்தப் பெருமையைத் தந்தது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம். அந்தச் சுற்று வட்டாரமெங்கும் மிகவும் புகழ் வாய்ந்த ஆலயம். ஏதோ ஒரு காலத்தில் அந்தக் கோயிலுக்கு பிரமாண்டமான கட்டிடங்களும், ஏழு வீதிகளும் இருந்ததாகச் சொல்வார்கள். கடைசியாக ஒல்லாந்தர் அந்தக் கோயிலை இடித்து, சங்கிலித் தொடராக ஆட்களை நிறுத்தி அந்தக் கற்களைச் சங்கானைக்கும் வேறு இடங்களுக்;கும் கொண்டு சென்று வேறு கட்டிடங்களைக் கட்டியதாகச் சொல்வார்கள்.

எனக்குத் தெரியத்தக்கதாக இப்போதுள்ள வயிரக்கல் மூலத்தானமும், முன் பண்டபமும், உள் வீதியைச் சுற்றி மதிலும், அந்த மதிலைச் சுற்றி வெளி வீதியும் இருந்தன, கோபுரம் கட்டுவதற்கு அடித்தளம் இடப்பட்டிருந்தது.

சிறு வயதில் எங்களுடைய விளையாட்டுக் களம் இந்தக் கோயிலும் அதன் வீதிகளும் தான்.

கோயில் மண்டபங்களின் மேல் ஏறி ஒழிந்து விளையாடியதும், தேர் முட்டியிலிருந்து பந்தயம் போட்டுக் குதித்ததும், மேற்கு வீதியில் “தாச்சி’’ விளையாடியதும், மாரி காலத்தில் கோயில் கேணியில் ஒல்லி கட்டி நீந்திப் பழகியதும் எனக்கு இப்போது நினைவுக்கு வந்து நெஞ்சை நிறைக்கின்றன. திரும்பக் கிடைக்க முடியாத அற்புதமான, மகிழ்ச்சியான காலம் அது.

பொன்னாலைக் கோயில் அந்தக் காலத்தில் வருடம் பதினொரு மாதங்களும் வெறிச்வோடிக் கிடக்கும்.

ஆவணிமாதத்தில் பதினேழு நாட்கள் திருவிழா நடக்கும் போது மட்டும் கோயில் கலைகட்கும் எல்லா நாட்களுமல்ல. சில திருவிழா நாட்களில் சாமி தூக்கவும் ஆளில்லாமல், தற்காலிகத் தேனீர்க் கடையின் முன்னால் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களைக் கூட்டிக் கொண்டு போகவேண்டியிருக்கும்.

ஏழாத்திருவிழா, பன்னிரண்டாந்திருவிழா என்றால் “கூத்து’’ நடக்கும் கூத்து என்றால் ஏழாந் திருவிழாவன்று கொட்டகைக் கூத்து. கொட்டகை போட்டு, அதனிடையே மேடை அமைத்து, “சீன்’’ கட்டி “பெற்றோல்மாக்ஸ்’’ வெளிச்சத்தில் நடக்கும் ஏழாந் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் “லங்கா தகனம்’’ நடகத்தான். இணுவில் நாகலிங்கம் இராமனாக வருவார்.

“ஐயோ என் ஜானகியை

அரக்கன் கொண்டு

போயினானே………’’

என்று அவர் பாடிக் கொண்டு தலையில் கைவைத்துப் புலம்புவது என் கண்முன் இன்றும் தெரிகிறது. கடைசியில் ராவணனாகவும் அவரே பத்துத் தலைகளைத் கட்டிக் கொண்டு வருவார்.

நெல்லியடி ஆழ்வாப்பிள்ளை சீதை, பப+ன் செல்லை யாவும் முக்கியம். அனுமானாக வந்தவர் யாரென்று நினைவில்லை. ஆனால் அவர் மேடையில் ஒரு சால்வையை விரித்;துவிட்டு, அதையே, கடலாகப் பாவனை செய்து கொண்டு பாய்கிறேன் கடலை………. என்ற பாட்டுடன் தொங்கிப் பாய்ந்தது நினைவிருக்கிறது. (இந்த லங்கா தகனம் நாடகத்திலும் வேறு பல நாடகங்களிலும் 1940 மட்டில் பொன்னாலை வரகவி பி. கே. கிருஷ்ணபிள்ளை பங்குபற்றி “போட்டோ போட்டிகள்’’’ நடத்தியது மிக பிரசித்தம். அவரைப் பற்றிப் பின்னால் எழுதுகின்றோன்.)

பன்னிரண்டாந் திருவிழாவில் நடப்பது கொட்டகைக் கூத்தல்ல. அது மக்கள் கூட்டத்தினிடையே நடக்கும். பொன்னாலைக் கோயில் கூத்து என்றால் சுமார் பத்து ரதல் சுற்றாடலிலுள்ள மக்களெல்லாம் வந்து குவிவார்கள். ஒற்றை மாட்டுத் திருக்கல் வண்டிகளும், வில் வண்டிகளும் இரட்டை மாட்டு வண்டிகளும், வில் வண்டிகளும் இரட்டை மாட்டு வண்டிகளும் கோயிலின் பக்கத்தேயுள்ள வளவுகளில் நிரம்பிவிடும்.

அந்தக்காலத்தின் வானொலி. தொலைக் காட்சி, சினிமா கூட இல்லை மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு கோயில் திருவிழாக்கள்தான்.

திருவிழாக்களிலும் மேளக் கச்சேரி, சதிர்க் கச்சேரி என்ற சின்னமேளம், கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றால் மக்கள் திரண்டு கூடுவார்கள்.

மேளக் கச்சேரியை விட சின்ன மேளத்துக்குக் கூட்டம் அதிகமாக வரும். நேரத்தோடு வந்து அங்காங்கே படுத்துத் தூங்கியவர்களெல்லாம் மத்தளச் சத்தம் கேட்டதும் துள்ளி எழுந்து மண்டபத்துக்கு வந்துவிடுவார்கள். றலிசெற், பண்டிருட்டி செற் என்ன அந்த நாளில் மிக பிரபலம். மக்களுக்கு அவர்களுடைய நடனச் சிறப்புகள் முக்கியமல்ல.

ஏதோ அந்தப் பெண்கள் அலகரித்துக் கொண்டு சபை நடுவே துள்ளிக் குதிப்பதும், அவர்கள் பாடும் பாட்டுகளும் தான் முக்கியம்.

‘பண்டித மோதிலால்

நேரைப் பறிகொடுத்தோமே

பறிகொடுத்தோமே. நெஞ்சம்

பரிதவித்தோமே – (பண்டித)

என்று ஒரு பாட்டு

“வாங்கித் தர வேண்டும்

கதராடை

அடுத்த தீபாவளிக்கு

எங்கம்மாவுக்கும் எனக்கும்’’

- வாங்கி

என்று ஒரு பாட்டு எல்லாம் தென்னிந்திய இறக்குமதிகள், மக்களுக்கும் பாட்டின் பொருள் முக்கியமல்ல. இசையும், பாடுபவரும்தான் முக்கியம்.

பன்னிரண்டாந் திருவிழாக் கூத்து – “கிருஷ்ண லீலா’’ மக்கள் மத்தியில் நடக்கும். மேடையோ, சீனோ எதுவும் கிடையாது.

என்னுடைய இன்றைய நினைப்பில் பெரிய சன சமுத்திரம், நடுவில் பாதை விட்டு இரு பிரிவாக மக்கள் அமர்ந்திருப்பார்கள். ஒரு பக்கம் ஆண்கள், மறுபக்கம் பெண்கள், நடுவே இருக்கும் பாதையில் தான் கூத்து நடக்கும்.

திருவிழா ஆரம்பிக்கும் முன் கோயிலில் முன் மண்டத்தில் கூத்தின் முதற் காட்சி நடைபெறும். ப+தகி என்ற அரக்கி வருவதும் அவளைக் கண்ணன் கொல்வதும் அங்கே நடக்கும். ப+தகியாக மூளாய் பெரியதம்பி என்ற நடிகர் சபையில் வந்ததும் “ப+’’ என்று பெரியதாக வாயால் ஊதுவார். நெருப்புப் பொறிகள் பறக்கும் (அப்போது அது எனக்கு மிகுந்த அச்சம் தந்த காட்சி. அது ஏதோ குங்கிலிய விளையாட்டு என்று பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன்.

சாமி புறப்பட்டு வந்து தெற்கு வீதி தாண்ட முன்னர்லுள்ள கேணியடியில் கூத்தின் இரண்டாம் காட்சி நடைபெறும். கோபிகைகளின் துணிகளைக் கண்ணன் கவர்கிற காட்சி. (இது அவ்வளவாக என் நினைவில் இல்லை)

வடக்கு வீதியில் கூத்தின் கடைசிக் காட்சி நடைபெறும். கம்சனைக் கண்ணன் கொல்கிற காட்சி. கழிவுபுரம் பண்டாரி என்பவர் கம்சன் வேடத்தில் வந்து மிக அட்டகாசமாகப் பாட்டுகள் பாடி வாசனங்களும் பேசுவார். கண்ணனாக வந்தவர் பெயர் நினைக்கவில்லை. யாரோ அன்னாவி என்று சொல்லுவார்கள். ஒரு சால்வையைக் கயிறு போல உருட்டி அதை இரண்டு பேர் வழியின் குறுக்காக பிடித்திருக்க, கயிற்றின் ஒரு பக்கத்தில் கண்ணனும் மறுபக்கத்தில் கம்சனும் நின்று துள்ளிக் குதித்து சண்டையிடுவதாகப் பாவனை செய்வார்கள்.

கடைசியில் கண்ணன் கயிற்றைத் தள்ளிக் கொண்டு மறுபக்கம் போய் கம்சனை விழுத்திக் கொல்லுவார்.

இவ்வளவுடன் கூத்து முடியும். பொழுதும் விடியும்.

இதெல்லாம் 1930 ஆண்டளவிலான கதை. 1940 மட்டில் பொன்னாலைக்குப் புகழ் சேர்க்க ஒரு அருமையான கவிஞர் தோன்றுகிறார். “கவிஞர்’’ என்பதை விட, “நாடகக் கலைஞர்’’ என்றுதான் அவர் மக்களிடையே பிரசித்தம் பொன்னாலைக் கிருஷ்ணன் என்றால் அந்தக் காலத்தில் தெரியாதவர்கள் இல்லை. “பப+ன் கிருஷ்ணன்’’ என்றும் சொல்லுவார்கள். ஊரில் எல்லாரும் “அண்ணாவி யார்’’ என்று அன்போடு அழைப்பார்கள். அவர் அவ்வப்போது அச்சிடுவித்து வெளியிட்ட சிறு சிறு பாட்டுப் புத்தகங்களில் இஃது மூளாய் திரு. கணபதிப்பிள்ளை அவர்களின் சீடன், பொன்னாலை வரகவி பே, க. கிருஷ்ணபிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது’ என்று அச்சிடப்பட்டிருக்கும்.

இந்தக் கிருஷ்ணபிள்ளை ஆங்கிலம் கற்று அந்த நாளைய வழக்கப்படி மலேசியா சென்று அங்கே உத்தியோகம் பார்த்தார். அங்கே போயும் நாடகப் பைத்தியம் அவரை விடவில்லை. அங்கே அவர் ஒரு சிறிய புகைவண்டி நிலையத்தின் பொறுப்பாளராக இருந்ததாகவும் ஒரு நாள் ஒரு நாடகத்தில் பங்கு பெறுவதற்காக, புகை வண்டி வரும் போது வளையத்தைக் கொடுக்கும்படி அங்கிருந்த சிற்றூழியரிடம் சொல்லிவிட்டு இவர் நாடகம் நடிக்கப் போனதாகவும், அன்று புகைவண்டி வந்தபோது சிற்றூழியன் தூங்கி விடவே, கடமை தவறிய குற்றத்துக்காக கிருஷ்ணபிள்ளையின் வேலை போய்விட்டதாகவும் சொன்னார்கள்.

வேலை போனபின் கிருஷ்ணபிள்ளை தமது ஊராகிய பொன்னாலைக்குத் திரும்பிவிட்டார். அதன் பிறகு தமது புலமையை யாழ்ப்பாணம் எங்கும் பரப்பினார்.

பொன்னாலைக் கிருஷ்ணனை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு கவிஞனுக்குரிய முத்திரைகள் அவரிடம் நிறைய இருந்தன.

எந்தப் பெரிய கொம்பன் எதிர்ப்பக்கத்தில் இருந்தாலும் அவர் நியாயத்தின் பக்கமே தலை நிமிர்த்திப் பேசுவார்.

குடிப்பது தமது பிறப்புரிமை, என்பது போல நன்றாகக் குடிப்பார். ஆனால் குடியின் கொடுமைகளைப் பற்றி மக்களிடையே பிரசாரம் செய்வார்.

“”மதுவெனும்

குடிவகையே – கெடு

மதியொடு தரும்

பகையே – அட

மனிதனே

மகா புனிதனே – உந்தன்

மனைவியுடைய மனதும்

கெடுக்கும்’’ (மதுவெனும்)

............................

http://noolaham.net/project/04/367/367.htm

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எனக்கு தாத்தா முறை, ஆனால் இவரை போல என்னால் எழுத முடியாது,

இவர் சிறு வயதில் வசித்த பொன்னாலை தான் எனது ஊர், A/L படிக்கும் போது துரைய்ப்பாவை சுட்ட இடத்தில்தான் இரவில் கூடி நின்று கதைப்பம், எனென்றால் இந்த பேய்க்கு பயத்தில் மற்ற பேய்கள் வராது என்று,

அவரது வீட்டில் ஒருமுறை களவு போய்விட்டது. ஏழைக் குடும்பம், கல் அடித்தும், புல் செதுக்கியும், வெயிலில் அலைத்தும் சேர்ந்த பொருள் போய் விட்டது. கவிஞர் பாடுகிறார்.

“கல்லடித்துப் புற்செருக்கிக்

கானலுண்டு கடுகளவாய்மெல்ல மெல்லச் சேர்ந்தநகை

மிக்கரா யிரத்தினையும்

கொள்ளை கொண்ட

கள்வர்களும்

கொண்டநகைச்

செல்வர்களும்’’

…………………….

…………………….

நானும் கல்லடித்து விற்றனான் Year 9 - A/L படிக்கும் போது. புளிய மர இலை கூப்பை, இப்படி பல தொழில்.........

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஈழத்தின் இலக்கிய முன்னோடி [/size][size=5]வரதர் [/size]

[size=5]- முன்னும் பின்னுமாக சில குறிப்புகள்[/size]

[size=4]கருணாகரன்[/size]

download-30.jpg?w=620

கமல்ஹாசனின் ‘ஹேராம்’ படத்தைப் பார்த்தபோது வரதர்தான் நினைவுக்கு வந்தார். வரதர் காலமாகியபோது ஹேராம் நினைவுக்கு வந்ததானது வேடிக்கையா? அல்லது உண்மையா? யதார்த்தமா? அல்லது எல்லாமே கலந்த துன்பியலா?

‘ஹேராம்’ ஒரு துயர்மிகு சினிமா. அதை ஏனையவர்கள் எப்படி அதை விளங்கினார்களோ தெரியவில்லை. அதைப்பார்த்தபோது எனக்கு அப்படித்தான் பதிந்ததாக ஞாபகம்.

யுத்தம் முழுச் சந்நதமாடிய “ஜெயசுக்குறு” காலகட்டத்தில் ஒரு முன்னிரவில் எதிர்பாராத விதமாக ‘ஹேராமை’ப் பார்க்கக் கிடைத்தது.

ஏழு பேர் பார்க்க இருந்தோம். படத்தின் பாதியிலிருந்து நான் மட்டுமே மிஞ்சியிருந்தேன். துயரத்தைப் பகிர்வதற்கு அதிகம்பேர் இருப்பதில்லை என்பார்கள். அது உண்மைதான். உண்மையில் ஹேராம் கமல்ஹாசனுக்கு தோல்வியுமல்ல, சேதாரமுமல்ல. ஆனால் அதற்காக அதற்கு விமர்சனங்கள் இல்லையென்றில்லை.

அதுவொரு முதன்மைச்சினிமா. அதற்கு எப்போதும் ஒரு இடமுண்டு. துயர்மிகு காலமும், வாழ்வும் நிகழும்வரையில் அதற்கிடமுண்டு.

ஹேராமில் கமல்ஹாசன் சொல்கிற அதே சேதிதான் வரதர் சொல்வதும். ஹேராமில் இந்திய அவலத்தை கமல்ஹாசன் சொல்கிறார். வரதரோ தன்னுடைய கதைகளில் ஈழத்தமிழரின் அவலங்களைச் சொல்கிறார். இலங்கையின் இனமோதல்களின் அவலத்தைச் சொல்கிறார்.

ஹேராமில் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இந்து முஸ்லீம் வன்முறை தொடங்கிவிட்டது என்பதைக்காட்டப்படுகிறது. சுதந்திரத்தின் பின்னர் இப்போதும் இந்து முஸ்லீம் கலவரங்களும், வன்முறையும் தொடர்கிறது. இடையில் காந்தி மீதான கடுமையான விமர்சனங்களும் காந்தியின் அணுகுமுறை மீதான ஆட்சேபணைகளும் வைக்கப்படுகின்றன. காந்தி சுட்டுக்கொல்லப்படுகிறார். ஆனாலும் வன்முறை அடங்கவில்லை. இன்றும் அது தொடர்கிறது. ஆக காந்திக்கு முன்னும் வன்முறை. பின்னும் வன்முறை. அது கருக்கொண்ட புள்ளிகள் வேறு இடத்தில். அதை அழிக்காதவரையில், அவை அழியாத வரையில் அவை ஒரு தீரா நோயைப்போலத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

ஆகவே எங்கே தவறு ….? என்பதைக் கண்டறிய வேண்டியதே இன்றைய மனிதர்களின் எதிரேயுள்ள மிக முக்கியமான சவால். இந்தத் தவற்றைக் கண்டறியத் தயங்கினால், தவறினால், தொடர்ந்தும் தீக்குளிப்புத்தான்.

ஹேராமில் இது துலக்கமாக்கப்படுகிறது. வன்முறையால் சுதந்திரத்துக்கு முன்பு ஒருமனிதர் தன் துணையை அநியாயமாக இழக்கிறார். சுதந்திரம் கிடைத்து ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் எட்டுகிறபோதும் - காந்தியின் அணுகுமுறை, காலச்சூழல் மாறியபோதும் அதே வன்முறையால் அதே மனிதர் பாதிப்புக்குள்ளாகிறார். இவ்வளவுக்கும் அந்த வன்முறைக்கும் அந்த மனிதருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை.

வன்முறைகள் எப்போதும் பொது மனிதர்களையே தின்கின்றன. அவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். வன்முறைக்குத் தூண்டப்பட்டு, வன்முறையத் தூக்கி, வன்முறையிலேயே பொது மனிதர்கள் அழிந்து போகிறார்கள். ஆனால், வன்முறையின் சூத்திரதாரிகள், அல்லது வன்முறை மையங்கள் அப்படியே பாதிப்பில்லாமல் இருக்கின்றன. அத்துடன் அவை மேலும் பலம் பெறுகின்றன.

இக்குறிப்பு ‘ஹேராம்’ மீதான விமர்சனமல்ல. வரதர் பற்றி சிந்திக்கும்போது ‘ஹேராமி’ன் நினைவு தவிர்க்கமுடியாமல் வந்து குவிவதால் எழுதவேண்டியிருக்கிறது. (ஹேராமைப் பார்க்கும்போது தவிர்க்க முடியாமல் வரதருடைய கதையே நினைவில் குவிந்தது).

வரதர் 1958 க்கும் 60 க்கும் இடைப்பட்ட காலத்தில் ’கற்பு’ என்ற சிறுகதையை எழுதியிருந்தார். 1958 இல் கொழும்பு, மற்றும் சிங்களப்பகுதிகளில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது நடாத்திய வன்முறையை பதிவுசெய்த கதை அது. அந்தக்கதை இதுவரையில் ஐம்பது தடவைக்குமேல் பிரசுரமாகியிருக்கிறது. பல இதழ்கள் மீளமீள அதை பிரசுரிக்கின்றன. பல தலைமுறைகள் அதைப் படித்திருக்கின்றன. இன்னும், அந்தக்கதை மீள் வெளியீட்டுக்குள்ளாகும். அதற்கான சூழல் மாறாதிருக்கும்வரை அது மீளமீள வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும்.

இதுவொரு துன்பியல் நாடகம். துயரமும், அருவருப்பும் தருகிற நிலை இது. ஆனால், இதுதான் யதார்த்தம். இந்த நிலை மாற்றமடையாமல் இருக்கும்போது இந்தக்கதைதானே வேண்டியிருக்கிறது. அதாவது இனக்குரோதமும் வன்முறைச் சூழலும் தீராதவரையில் வாழ்க்கை தவிர்க்க முடியாதவாறு அருவருப்பூட்டுவதாகவேயிருக்கும்.

‘கற்பு’ கதையை வரதர் எழுதுவதற்கு 1958 இல் தமிழர்கள் சிங்களவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் காரணமாகின. களுத்துறையில் வன்முறையின்போது சிங்கள வன்முறைக் கும்பலால் சிதைக்கப்பட்ட தமிழ்ப்பெண்களை ஒரு குறியீடாக்கினார் வரதர்.

வன்முறைக்கும்பலொன்றினால் சிதைக்கப்பட்ட தன் துணைவியை – தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளும் கணவனின் கதையே ‘கற்பு’. அவள் மீது எந்தக்குற்றமும் இல்லையென்று கணவருக்குத்தெரியும். அவர் வன்முறையை விரும்பவில்லை. ஆனால், அதுவொரு பெரும் பிசாசாக வெறிகொண்டுவரும்போது அதனை எதிர்க்க அவரால் முடியவில்லை. அதைப்போல அவளாலும் அதனை எதிர்த்து வெற்றியடைய முடியவில்லை. வன்முறை அவளைச் சிதைக்கிறது. இந்த நிலையில் அந்த வன்முறைக் கும்பலை அவர் எதிர்த்து அவளைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அதற்கு அவரால் முடியவில்லை. இது ஒரு யதார்த்தம். இந்தக் குற்றவுணர்வு அவரை வதைக்கிறது. ஆனால் அவர் தனக்குள் வளர்த்து கொண்ட பக்குவத்தினால் அதனை தன்னளவில் கடந்து செல்கிறார்.அவர் தன் மனைவியை எந்தத் தயக்கங்களும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்.

வரதர் அந்தக் கதையை எழுதத்தூண்டிய சூழலும் நிலவரங்களும் இன்றும் மாறவில்லை. அது மாறக்கூடிய சாத்தியங்களும் தென்படவில்லை. காலம் நகர்ந்துவிட்டது. உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. தலைமுறைகள் மாறிவிட்டன. சிறுகதையின் வடிவத்தில்கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. கதை சொல்லும் முறைகள் எல்லாம் மாறியுள்ளன. ஆனால், காயங்கள் ஆறவில்லை. வலி தீரவில்லை. மூடத்தனமும், வன்முறையும், இனவெறியும் நீங்கவில்லை. வாழ்வில் தொடரப்படும் ஈனக்கதைகள் மாறவில்லை. வரதரின் ‘கற்பு’ சொல்லும் ‘ரணகளம்’ திரும்பத் திரும்பத் நிகழ்ந்தபடியே இருக்கிறது. குருதியும், ஓலமும் குரூரமாக வெளிச்சிதற வன்முறை நிகழ்கிறது. அது முடிவற்ற வன்முறை. வாழ்வைத்தின்னும் தீராப்பசி கொண்ட வன்முறை. இந்த வன்முறைபற்றி ஒவ்வொருவரும் அவரவர் தத்தம் நிலைப்பாட்டிலிருந்து ஆயிரமாயிரம் நியாயங்களை முன்வைக்கலாம். ஆனால் அது வாழ்வைத்தின்கிறது என்பது மட்டும் உண்மை.

வரதர் இலங்கையின் தமிழரசுக்கட்சிப் பாரம்பரிய அரசியலை முன்நிறுத்திய இலக்கியப்படைப்பாளி. இதனால், அவர் ஒருபக்கம் அங்கீகரிக்கப்பட்டார். இன்னொரு பக்கத்தில் விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவர்மீதான விமர்சனங்களையும், கண்டனங்களையும் இதுவரை யாரும் காட்டியதோ, கடுந்தொனி முன்வைக்கவில் முன்வைத்ததோ இல்லை.

வரதர் ஒரு ‘சனாதனி’ என்று சொல்லுவோர்கூட அவரை முற்றாகப் புறக்கணிக்கவில்லை. வரதரின் இயல்பே இதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அவர் எதற்கும் சலனமுறாத ஒரு வகையான அமைதியானவர். தன்னுடைய எழுத்துக்களிலோ, உரையாடலிலோ என்றைக்கும் உரத்ததொனியை அவர் எழுப்பியதில்லை. பதற்றம், சினம் என்ற உணர்ச்சி நிலைகளை நான் அவரிடத்தில் கண்டதேயில்லை. மட்டுமல்ல, விமர்சனங்கள், சர்ச்சைகள், மறுப்புக்கள், எதிர்வினைகள், கடுந்தொனியிலான விவாதங்கள் எதிலும் அவர் கடுமையாக ஈடுபட்டதாகவும் இல்லை.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்புத்துறையில் இயங்கிவந்த வரதருக்கு எதிர்முகாம்கள் இருந்ததாக அறியமுடியவில்லை. பதிலாக சகல தளங்களிலும் இயங்கிய அவரையொத்தவர்களிடையேயும், அடுத்தடுத்த தலைமுறையினரிடத்திலும் அவருக்கு உறவிருந்தது. அவரவர் கருத்துக்களுக்கும், நிலைப்பாட்டிற்கும் அவரவரே பொறுப்பு என்ற நிலைப்பாட்டை வரதர் கொண்டிருந்ததே இதற்குக் காரணம் என நினைக்கிறேன். அதேபோல தன்னளவில் தன்னிடம் ஒரு கருத்துநிலையும் செயற்பாட்டுக்களமும் உண்டு என்ற கருத்துடையவர் அவர். இது ஒருவகைப் பண்பு. ஒரு வகையான ஜனநாயக முறைமை. வரதர் இதைக் கடைசிவரை பின்பற்றினார். இதையே தன்னுடைய அடையாளமுமாக ஆக்கினார்.

இலங்கையி்ல் 1940 களில் வெளியாகிய“மறுமலர்ச்சி“ என்ற இதழின் காலத்தில் இருந்து படைப்புத்தளத்தில் இயங்கிய வரதர் இலக்கியத்தின் பண்முகத்தன்மையராகவே இருந்திருக்கிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பத்தி எனப் பல வடிவங்களில் எழுதியிருக்கிறார். எழுத்தைவிட பதிப்புமுயற்சிகளிலும் செயற்பட்டுள்ளார். வரதரின் பதிப்பு முயற்சிகள் முக்கியமானவை.

வரதர் பதிப்பகம் நூறுவரையான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. வரதர் இறக்கும்வேளையிலும் நான்கு புத்தகங்களை அச்சிட்டுக்கொணடிருந்தார்.ஆரம்பத்தில் ஈழத்தின் முக்கிய கவிஞரான மகாகவியின் வள்ளி தொடக்கம் பல நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். பேராசிரியர் கைலாசபதி பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை சொக்கன், செங்கை ஆழியான் எனப் பலரின் புத்தகங்கள் வரதர் வெளியீடாக வந்துள்ளன. தவிர அரசியல் ரீதியான பதிவுகளையும் தீவிர நெருக்கடிக் காலகட்டத்தில் வெளியிட்டார்.

‘யாழ்ப்பாணம் எரிகிறது’ ’24 மணிநேரம்’ உட்பட முக்கியமான வன்முறை அழிவு சார்ந்த பல வெளியிடுகளை அந்த கொதிப்பான சூழலில் வெளியிட்டவர் அவர். அந்த நூல்களை எழுதிய செங்கை ஆழியான் அவற்றை நீலவண்ணன் என்று பெயர் குறிப்பிடும் போது பதிப்பாளரான வரதரோ துணிச்சலுடன் தன்னுடைய பதிப்பகத்தின் பெயரிலேயே அவற்றை வெளிக்கொண்டு வந்தார். இப்படி பலநூல்கள் வரதர் வெளியீடாக வந்திருக்கின்றன.

வரதர் இதழியல் துறையிலும் இயங்கினார். ‘தேன்மொழி’ என்று கவிதைக்கான இதழை மஹாகவியுடன் இணைந்து நடத்தினார். அதற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘மறுமலர்ச்சி’ என்ற இதழை 1940களில் வரதர் ஏனைய படைப்பாளிகளுடன் இணைந்து வெளியிட்டார். பின்பு ‘புதினம்’ என்ற வாரப்பத்திரிகையும் வரதரால் வெளியிடப்பட்டது. கூடவே மாணவர்களின் அறிவுவிருத்தி கல்வி வளர்ச்சிக்காக ‘அறிவுக் களஞ்சியம’ என்ற இதழையும் சில காலம் வெளியிட்டார். தன்னுடைய முதுமைக்காலத்திலும் அவர் தளர்ந்திருந்ததில்லை போரின் நெருக்குவாரங்கள் சூழ்ந்திறுக்கிய போதும் அவர் அதற்கெதிராக இயங்கிக்கொண்டேயிருந்தார்.

யாழ்ப்பாணம் 1990களில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு பொருளாதாரத்தடை இறுக்கமாக வாழ்வை இறுக்கிப்பிடித்திருந்த காலம் அது. வரதர் அப்போது வெளியிடுகளை கொண்டு வரும் மும்முரத்தில் இயங்கினார். யாழ்ப்பாணம் கே கே எஸ் வீதியில் உள்ள ஆனந்தா அச்சகத்தில் தினமும் வரதரை எவரும் காணலாம். நிமிர்ந்த நடை. நல்ல உயரமான தோற்றம். நரைத்த தலை. ஏறக்குறைய 30 வருடமாக இதேமாதிரியான தோற்றத்தில்தான் வரதரைப் பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் தலை மட்டும் நரைக்காதிருந்தது.

பெரிய தடித்த பிறேம் போட்ட மூக்குக்கண்ணாடி போட்டிருப்பார். வெள்ளை அரைக்கைசேட்டும் வெள்ளை வேட்டியுமே அவருடைய அடையாளங்கள். அவர் சத்தமிட்டுப் பேசியோ சத்தமிட்டு சிரித்தோ நான் கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை. யாரையும் அவர் திட்டியதையும் குறைசொன்னதையும் அறிந்ததில்லை. அவருடைய இயல்பும் வாழ்வும் ஒரு வகையானது. தனியான அடையாளங்கள் கொண்டது. ஆனந்தா அச்சகத்தில் அவர் உழைத்ததை விடவும், அதனைப் பயன்படுத்தி தன் விருப்பங்களுக்குரிய காரியங்களைச் செய்தார் என்றே சொல்லவேண்டும். யாழ்ப்பாண முற்றுகைக் காலத்தில் நோட்புக் எனப்படும் பயிற்சிப் புத்தகத்தின் தாள்களைப் பயன்படுத்திக்கூட தன்னுடைய வெளியீடுகளை வரதர் வெளிக்கொண்டு வந்தார். எந்தச் சூழ்நிலையிலும் இயங்கக்கூடிய ஒருவர் – ஒரு ஆற்றலாளர் என்பதை தன்னுடைய முதுமைக்காலத்திலும் அவர் நிரூபித்தார். இது உண்மையில் ஒரு சாதனை. சாகஸம். ஒரு வியப்பே.

00

யாழ்ப்பாணத்தின் மேற்கே இருக்கும் மூளாய் பகுதியில் பிறந்த வரதர் யாழ்ப்பாண நகரத்திலேயே பெரும்பாலான காலம் வாழ்ந்தார். சைவவேளாள வாழ்க்கையிலிருந்து வரதர் விலகவில்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கும் தரப்பினருண்டு. ஒருவகையில் அவர் அப்படித்தான் வாழ்ந்தார் எனலாம். அவர் அந்த வாழ்க்கை வட்டத்தைவிட்டு விலகவில்லை என்பது உண்மை. என்ற போதும் அதற்குள்ளிருந்த மேலாதிக்கத்தையோ, வன்முறையையோ அவர் பின்பற்றவில்லை. தனக்கிருந்த செல்வாக்கையும் வளங்களையும் பயன்படுத்தி தன்னை

ஸ்தாபித்துக்கொள்ள அவர் முயன்றதும் இல்லை.

ஆனால், அந்த சைவவேளாள ஆதிக்கத்தையோ, அல்லது சைவவேளாள வாழ்முறையையோ அவர் விமர்சிக்கவும், கண்டிக்கவும் இல்லைத்தான். வேளாள ஆதிக்கம் ஒரு காலத்தில் வெறித்தனமாக இயங்கிய வேளையிலும் வரதர் அதற்கெதிராக சாட்சிய நிலையில் தன்குரலை முன்வைக்கவில்லை என்பதும் அவர் மீதான விமர்சனங்கள் ஆகின்றன. பதிலாக அவர் தன் சமூக அமைப்பிற்குள் தன்னை ஒழுங்குபடுத்தி அதற்குள் அமையக்கூடிய அளவுக்கான அறத்தைப் பின்பற்றி வாழ்ந்தார். இதை ஒருவகையான சாதுரியம், தந்திரம், பதுங்கல், சமாளிப்பு எனக் கூறுகிறார்கள் சிலர். ஆனால், அவர் தன்வாழ்வில் ஒதுக்கல்களையோ புறக்கணிப்புகளையோ கடைப்பிடித்ததில்லை.

இதனால் வரதரின் இயல்பு குறித்தும், அவருடைய வாழ்க்கை குறித்தும் பகிரங்கமான எந்த விமர்சனங்களும் இதுவரை எழுப்பப்படவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல அவருக்கு எதிர்முகாம்கள் இல்லாமல் இருந்ததுதான் இதற்கான காரணமாக இருக்கலாம். இன்னொரு வகையில் சொன்னால், எதிர்முகாம்கள் உருவாகமுடியாத அளவுக்கு நுட்பமாக தன்னை அவர் ஓழங்கமைத்திருந்தாரோ என்னவோ. இனப்பிரச்சினைபற்றிய வரதரின் நிலைப்பாட்டிற்கும் யாழ்ப்பாணச்சமுகம் பற்றிய அவருடைய நிலைப்பாட்டுக்குமிடையில் வேறுபாடுகள் இருந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவருடைய பங்களிப்பை யாரும் மறுத்துவிடமுடியாது.

வரதரின் இலக்கிய இயக்கத்திற்கும், கோட்பாட்டுக்கும் மாற்றான தளத்தில் இயங்கிய கே. டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், தெணியான், எஸ்.பொ. போன்றோர் தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள். எதிரெதிர் அணிகளாகினார்கள். ஆனால், வரதர் எல்லோருக்குமிடையில் பாலத்தை நிர்மாணித்தே இருந்தார். இது தொடர்பாக நிச்சயம் விரிவாக ஆராயவேண்டும்.

வரதருக்கு கைலாசபதியோடும் உறவியிருந்தது. கா.சிவத்தம்பி, மு.த. டொ மினிக் ஜீவா, யேசுராசா எனச்சகலதரப்புக்குமிடையில் தொடர்பாடல் நிகழ்ந்து வந்தது. என்றைக்கும் இது முறிந்துபோனதாக இல்லை. இது எப்படி நிகழ்ந்தது? இது குறித்தும் நாம் ஆராய வேண்டும். இது ஒரு புரியாத புதிரே.

தமிழரசுக்கட்சி அரசியலை ஆதரித்த வரதர் அதன்வழியான தமிழ்த்தேசியத்தையே தொடர்ந்தும் ஆதரித்தார். ஆனால், எண்பதுகளில் ஏற்பட்ட தலைமுறை மாற்றம், ஆயதப்போராட்ட அரசியலின் பக்கம் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தினார் என்றோ அவற்றை சார்ந்தார் என்றோ சொல்ல முடியாது. பினபொரு கட்டத்தில் அவருக்குப் புலிகளிடம் ஒரு மெல்லிய அனுதாபம் இருந்தது.

அவருடைய முதல் இலக்கிய நோக்கு தமிழ் மக்கள் இலங்கை அரசினால் அல்லது சிங்கள ஆளும்வாக்கத்தினால் வன்முறைக்குள்ளாக்கப்படுவதை எதிர்ப்பதே. அதன் வழியாக தமிழ்மக்கள் நிம்மதியாக நீதியுடன் வாழக்கூடிய ஒரு நிலையைக் காண்பதே. இதற்கப்பால் புதிய அரசியல் உருவாக்கம் பற்றியோ, சமூக மாற்றத்துக்கான கலகங்களிலோ அவரின் அக்கறைகள் கட்டமைவுகொள்ளவில்லை.

வரதர் பின்னாளில் மல்லிகையில் தொடராக எழுதி பின்னர் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்த ‘தீ வாத்தியார்’ ஒருவகையில் வரதரின் தன்னடையாளத்தைக் காட்டும் படைப்பு. தீ வாத்தியார் அவரைக் காண்பதற்கும், விமர்சனம் செய்வதற்கும் அதிகம் இடமளிக்கும் ஒரு பிரதி என்று சொல்லமுடியும். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கயமை மயக்கம்’ என்பதில் இருந்து அவர் கடைசிவரை எழுதிய அநேக கதைகளில் ’மூர்த்திமாஸ்ரர்’ என்ற பாத்திரத்தை தொடர்ந்து இயக்கி வந்தார். அந்த மூர்த்திமாஸ்ரர் தலைமுறைகளைக் கடந்தாரா? மூர்த்தி தயங்கிய இடங்கள், தடுமாறிய இடங்கள், அவருடைய நிலைப்பாட்டிற்கும், வாழ்க்கைக்குமான இடைவெளி எந்தளவு என்பனவும் தனியான கவனத்திற்குரியது. வரதரை விளங்கிக்கொள்வதற்கும் அவரை வாசிப்பதற்கும் இதுவும் அவசியமானது.

வரதர் தொடர்பான முழுமையான மதிப்பீடுகள் செய்யப்படவேண்டும். ஆனால் அவை அவரை நிபந்தனையின்றிக் கொணடாடுவதாகவோ அல்லது காழ்ப்புடன் புறக்கணிப்பதாகவோ இருக்க்கூடாது.

எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும் வரதர் ஒரு முன்னோடி. ஈழத்திலக்கியத்தில் அவருக்கென்றொரு வலுவான பாத்திரமுண்டு. கைலாசபதி நவீன கவிதையை அங்கீகரிக்க மறுத்தபோது வரதர் நவீன கவிதையை அங்கீகரித்திருந்தார். ஆனால், அரசியல் மற்றும் சமூகப் பார்வைகளில் வரதர் ஒடுங்கிய நிலையில் இருந்தார். அதேவேளை நவீன கவிதைகளுக்கிடமளித்து தனியாக கவிதைக்கான இதழையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் வரதருடைய பதிப்பு முயற்சிகள் குறித்தும் சரியாக மதிப்பிட வேண்டும். ஈழத்தில் பதிப்புத்துறை இன்னும் செழுமையாக வளர்ச்சியடையவில்லை. ஆனால், வரதர் அழகிலை விடவும் காலகட்டங்களை முன்னிலைப்படுத்திய பதிப்புப் பணிகளை மேற்கொண்டார். அது சவால் மிக்க ஒன்று. ஆக வரதரின் பங்களிப்புக்குறித்து சரியான புரிதலுடன் மதிப்பீடு செய்தல் அவசியம்.

***

http://malaigal.wordpress.com/2012/09/03/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.