Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலையில் விலகாத மர்ம முடிச்சு!

Featured Replies

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்​டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்!

'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்​பற்ற வேண்டுமா?’ என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்​கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் அதிர்ச்சிக்​​குரிய முக்கியக் குரல்!

இவர்கள் அத்தனை பேரும் அடையாளம் சுட்டிச் சொல்வது சந்திராசாமி என்ற மனிதரை!

நேமி சந்த் ஜெயின் என்று அழைக்கப்படும் இவரை சந்திரா​சாமி என்றால்தான் அனை​வருக்கும் தெரியும். முன்​னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமான நண்பராகவும், ராஜீவ் கொலை நடந்த காலத்தில் இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு நெருங்கிய சகா​வாக​வும் இருந்தார். உலகத்​தின் மிக முக்கியமான ஆயுத வியாபாரியாகச் சொல்லப்படும் கசோக்​கிக்கும் இவருக்கும் நெருங்​கிய தொடர்பு உண்டு. அரசி​யல் தலைவர்களை சதி வேலைகள் செய்து கவிழ்ப்​பதில் கைதேர்ந்தவர் இவர் என்பது வி.பி.சிங் விஷயத்தில் வெளிச்​சத்துக்கு வந்தது. காங்கிரஸில் இருந்து வெளியேறி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங்கை எப்படிக் கவிழ்ப்பது என்று சிலர் திட்டமிட்டபோது, செயின் கீட்ஸ் தீவில் வி.பி.சிங் மகனுக்குச் சொத்துகள் இருப்பதாக ஆவணங்களைத் தயாரித்துத் தந்தது இந்த சந்திராசாமிதான். அந்த ஆவணங்கள் போலியானவை என்று நிரூபணம் ஆனபோது, சந்திராசாமி பெயர் டெல்லி மீடியாக்களில் அதிகம் அடிபட்டது. இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காரியங்களுக்கு சொந்தக்காரர் இந்த சந்திராசாமி!

இவர் மீது, அன்னியச் செலாவணியை மீறிய 12 குற்றச்சாட்டுகள் இருந்தன. அதில் மூன்றில் விடுதலை ஆகிவிட்டார். மீதி 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் எப்போது வெளிநாடு சென்றா லும் டெல்லி நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே செல்ல முடியும். 'சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதித்தால், அவர் திரும்பி வர மாட்டார்!’ என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் பதில் மனுத் தாக்கல் செய்வார்கள். குறிப்பிட்ட தொகையை டெபாஸிட்டாகக் கட்டிவிட்டு அவர் செல்லலாம் என்று நீதிமன்றமும் அனுமதிக்கும். இது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் வழக்கம்.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, 'எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்!’ என்று அனுமதி கேட்டபோது, அமலாக்கத் துறை அதிர்ச்சிக்குரிய காரணத்தைச் சொன்னது. 'சந்திராசாமி வெளிநாடு போனால், திரும்ப மாட்டார். பல ஆதாரங்களை அழித்துவிடுவார். மேலும் அவர் மீது சி.பி.ஐ. வழக்கும் உள்ளது!’ என்றது. 'சி.பி.ஐ. வழக்குத் தொடருமா?’ என்று நீதிபதிகள் கேட்க, 'தொடரும்...’ என்று பதில் தந்தார்கள். ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்புப் புலனாய்வுப் பிரிவும் அப்போது மனுத் தாக்கல் செய்தது. அதில், 'ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி சம்பந்தப்பட்டு உள்ளார். எனவே, அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி தரக் கூடாது’ என்று உறுதியாகச் சொன்னது. 'இதற்கு முன்னர் வெளிநாடு சென்றுவிட்டு அவர் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார். ஆனால், இம்முறை திரும்ப வருவாரா என நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருக்கிறது. உடல்நிலையைக் காரணமாகக் காட்டுவதால், அனுமதி அளிக்கலாம். 90 லட்சம் ரூபாயை டெபாஸிட்டாகச் செலுத்திவிட்டு, அவர் செல்லலாம்’ என்று நீதிமன்றம் சொல்ல... 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால், என் சீடர்களிடம் வாங்கிச் செலுத்திவிடுவேன்!’ என்று சொன்னார் சந்திராசாமி. பணத்தை உடனடியாகக் கட்டிவிட்டு, வெளிநாடு சென்றார். சந்திராசாமி இதுவரை அமலாக்கத் துறைக்கு 65 கோடி வரை கட்ட வேண்டிய பாக்கி உள்ளதாக அத்துறையின் வக்கீல் நீதிமன்றத்தில் கூறினார். அப்படிப்பட்ட சந்திராசாமியை வளைக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் தமிழ் உணர்வாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது!

ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடந்து, கைதான 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 19 பேரின் தண்டனை விலக்கப்பட்டு, அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற நான்கு பேரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவர் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் இருக்கிறார்.

நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ராஜீவுக்குத் தரப்பட்ட பாதுகாப்பில்ஏதாவது குளறுபடிகள் நடந்ததா, அதற்கு யார் குற்றவாளி என்பதை அந்த கமிஷன் விசாரித்தது. இதில் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

மூன்றாவதாக அமைக்கப்பட்டது நீதிபதி ஜெயின் கமிஷன். ராஜீவ் படுகொலை செய்யப்​பட்டதற்கான பின்னணிகள், அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் பற்றி இது விசாரித்தது. இந்த கமிஷனில்தான் பல்வேறு சர்ச்சைக்குரிய மனிதர்கள் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்கள்.

பல்வேறு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்ட பப்லு ஸ்ரீவத்சவா என்பவர் ஜெயின்கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், ''ராஜீவ் கொலைச் செய்தி கேட்டதும்சந்திராசாமி மகிழ்ச்சியில் கூத்தாடினார். 'நரசிம்மராவைப் பிரதமராக்கப்போறேன்...’ என்று சொல்லிக்​கொண்டே, ராவ் வீட்டுக்கு போன் செய்து அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்...'' என்று வாக்குமூலம் கொடுத்தார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர் ரமேஷ் தலால், 'சந்திராசாமிக்கு இந்த சதியில் பங்கு இருக்கிறது’ என்று சொன்னதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை சந்திராசாமி மிரட்டியதாகவும் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேட்டி கொடுத்துள்ளார். சந்திராசாமியின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகள் தொடர்பாக, மகந்த் சேவா தாஸ் சிங் என்பவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அவர், ஷாஹித் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவர். இவை அனைத்தையுமே பதிவு செய்துள்ளது ஜெயின் கமிஷன்.

ஆனால், சந்திராசாமிக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திடீரென்று காணாமல்போன தகவல்களும் 97-ம் ஆண்டு அம்பலம் ஆனது. 89-ம் ஆண்டு முதல் ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அதிகாரிகளது அறிக்கையுடன் சந்திரா​சாமியின் தொலைபேசி உரையாடல்களை மறித்துக் கேட்கப்பட்ட செய்திகளின் ஆவணத் தொகுப்பும் காணாமல்போனது.

இவை அனைத்துக்கும் மேலாக பெங்களூ​ருவைச் சேர்ந்த ரங்கநாத் என்பவரது வாக்கு​மூலமும் சந்திராசாமியை நேரடியாகக் குற்றம் சாட்டி இருந்தது. ''பெங்களூருவில் இருந்து எங்களை சந்திராசாமி தப்பவைத்துவிடுவார். நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்’ என்று சிவராசன் தன்னிடம் சொன்னதாக ரங்கநாத், தனது வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார். சிவராசன் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்த ரங்கநாத், ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக இருந்து தூக்குத் தண்டனை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.

சென்னையில் இருந்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம், ஈழத்துக்குச் சென்று வந்துவிட்டு தனது அனுபவங்களை 'ஈழப் புலிகளுடன் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் தினமணியில் தொடராக எழுதினார். அவர் இலங்கை சென்றிருந்தபோது, நடிகை பமீலா அங்கு இருந்தது குறித்த தகவலைச் சொல்கிறார். மிஸ் கே.என்.சிங் என்ற பெயரில் பமீலா, ஈழப் பகுதிக்குள் சென்றிருந்தாராம். கொழும்பு சென்ற அவரை விமானப் படை விமானத்தில் சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தனர். இந்திய அழகு ராணிப் போட்டியில் வென்ற இந்த பஞ்சாபிப் பெண் பிரிட்டனில் குடியிருந்தவர். ஆயுதத் தரகர் என்று டெல்லி மீடியாக்களால் அடையாளப்படுத்தப்படும் கஸோகியுடன் நெருக்கமாக இருந்தவர். அவரைப்பற்றி கொழும்பு பத்திரிகைகள் அப்போது என்ன எழுதியது என்று கார்மேகம் சொல்கிறார்....

'பிரபாகரனை எப்படியும் தேடிப் பிடித்துத் தருவேன் என்று சந்திராசாமி, இந்திய அரசிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். எந்த வழியைக் கையாண்டாவது அதனை செய்து முடிப்பதாக அவர் சபதம் ஏற்றிருக்கிறாராம். அந்த சபதத்தை நிறைவேற்றத்தான், அவர் பமீலாவை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார் என்று கொழும்பு நாளேட்டில் செய்தி வந்தது. பமீலா இப்போதும் சந்திராசாமியின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவராக இருப்பதாகத் தெரிகிறது. பிரபாகரனை சந்திக்க ஈழப் புலிகள் அனுமதிக்கவில்லை!’ என்று அன்று கொழும்புவில் பரவிய தகவல்களை எழுதுகிறார்.

ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள் முதல் கொழும்பு பத்திரிகைகள் வரைக்கும் சந்திராசாமியை நோக்கியே நீளும் நிலையில், அவரை விசாரிக்காமல் ராஜீவ் வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்?

Thanks to Junior vikatan.

To see the pictures of chandhrasamy.....

http://www.thedipaar.com/news/news.php?id=32739

  • கருத்துக்கள உறவுகள்

மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்? - - ஆனந்த விகடன்

ரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்?

ராஜீவ் கொலை மட்டும் அல்ல... எல்லாக் கொலைகளும் கண்டிக்கத்தக்கவை, பயங்கரமானவை, ஆதரிக்க முடியாதவை!

ஆனால், அநியாயத்தின் பெயரால் செய்யப்பட்ட கொலைக்குத் தண்டனையாக, நீதியின் பெயரால் கொலை செய்வது தீர்வாகுமா? கொலை செய்தவனைக் கொலை செய்வதுதான் தீர்வா? கண்ணுக்குக் கண்... பல்லுக்குப் பல்... என்று சொல்லக்கூடிய காட்டுமிராண்டிக் காலம் இருந்தது என்றால், இப்போது நடப்பதற்கு என்ன பெயர்? - மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் கேள்வி இதுதான்!

இந்தக் கேள்விக்கு இறுதி விடை சொல்லாமலேயே, பேரறிவாளன் (எ) அறிவு, தாஸ் (எ) முருகன், ரவிராஜ் (எ) சாந்தன் ஆகிய மூன்று உயிர்களைத் தூக்கு மேடையில் நிறுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் தயாராகிவிட்டார்.

பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள். ஆனால், புலிகளையோ, பிரபாகரனையோ தெரியாத மகாத்மா காந்தி சொன்னதையாவது கேட்க வேண்டாமா? 'குற்றவாளிக்கு உரிய மன நோய் மருத்துவமனைதான் சிறைச்சாலை. அது கொலைக் களம் அல்ல’ என்றவர், 'உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது. அதனைப் பறிக்க, அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை’ என்றார். காந்தி சொன்ன எதையுமே கேட்கவில்லை காங்கிரஸ். இதை மட்டுமாவது கேட்கக் கூடாதா?

1991 மே 21 - ஸ்ரீபெரும்புதூர் பனங்காட்டுக்குள் பழி தீர்க்கப்பட்டார் ராஜீவ். அந்த வழக்கில் 41 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு, பெண்கள் படைத் தலைவர் அகிலா ஆகிய மூவரும் பிடிக்க முடியாத குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள். மனித வெடிகுண்டாக வந்த தணு, பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட சிவராசன் மற்றும் சுபா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய கோடியக்கரை சண்முகம் உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர். மீதம் உள்ள 26 பேர் மீது வழக்கு விசாரணை பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் நடந்தது. 1998 ஜனவரி 28-ம் நாள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நவநீதன் தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை ஒழிப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக் கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஆயுள் தண்டனை என்றால், இதுவரை நடந்த குற்றங்களுக்கு எல்லாம் 14 ஆண்டுகளில் விடுதலை செய்ய... இந்த வழக்கில் கைதானவர்கள் மட்டும் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். 'ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முழுக்க உள்ளேயே இருக்க வேண்டும்’ என்று வியாக்யானம் சொல்லப்படுகிறது. இதே தமிழ்நாட்டில்தான் ஏழு ஆண்டு களுக்குள் வெளியே வந்த ஆயுள் தண்ட னைக் கைதிகளும் உண்டு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் - என்பதுதான் எல்லாச் சட்டத்துக்கும் முதல் விதி... மீறப்படும் முதல் விதியும் இதுதான். செத்துப்போனது ராஜீவ் காந்தியா, ராஜா ராமா என்று சட்டம் பார்க்கக் கூடாது. 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கள், 'இது பயங்கரவாத வழக்கு அல்ல. எனவே, தடா சட்டம் இந்த வழக்குக்குப் பொருந்தாது’ என்று சொல்லிவிட்டார்கள்.

''இந்திய அரசைத் திகைக்கச்செய்வதோ, இந்திய மக்களுக்கு அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க போதிய ஆதாரம் இல்லை. தடா சட்டத்தின் பிரிவுகளுக்கான குற்றங்களுக்கு எங்களுக்கு முட்டுக் கொடுக்க முடியவில்லை'' என்று நீதிபதிகள் சொன்னார்கள். பழ.நெடுமாறன், மேல் முறையீடு செய்யாமல் போயிருந்தால், இன்று 26 பேரும் தூக்கு மேடையில் நின்றிருப்பார்கள். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் வாதத் திறமையால், 22 பேருடைய உயிர்கள் தப்பின. இப்போது நான்கு உயிர்கள் துடிக்கின்றன!

பேரறிவாளனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இங்கு இருப்பவர்களுக்கு இணையாகக் குரல் கொடுப்பவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர். இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல. நல்லவேளை, தமிழரும் அல்ல. இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் 'வாழும் நீதி தேவதை’யாக எவரை நினைக்கிறார்களோ, அவரே சொல்கிறார்...

''இந்தியன் என்ற முறையில், உலகக் குடிமகன் என்ற முறையில், நீதிபதி என்ற முறையில் மரண தண்டனையை ஒழிக்கப் போராடுகின்றவன் என்ற முறையில், இதுவே என் நெடுநாளைய விருப்பம். நான் ஒரு கொள்கை வெறியன். உயிருக்கு ஆதரவும் சாவுக்கு எதிர்ப் பும் காட்டுகிற கொள்கை வெறியன். தூக்குத் தண்டனையைத் தூக்கில் இடுங்கள். இதுவே என் உறுதியான நிலைப்பாடு!'' என்றார் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

சட்டங்கள் மனிதனைத் திருத்துவதாக அமைய வேண்டும் என்ற அவர், தன்னு டைய எண்ணத்துக்கு 'வால்மீகி நடவ டிக்கை’ என்றும் பெயரிட்டார்.

''ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆக முடியும் என்றால், எந்தக் குற்றத்துக்காகவும் ஒரு மனிதனின் உயிரை ஏன் பறித்துத் தண்டனை தர வேண்டும்?'' என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் கேட்டார். மேலும், தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கும் பேரறிவாளன் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம், சந்தேகத்துக்கு இடமற்ற முறையில்மெய்ப் பிக்கப்படவும் இல்லை.

'சிவராசன், சுபா, தணு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும்’ என்ற தனியார் ரேடியோ ஸ்டேஷன் உரையாடலை (எக்ஸ்.பி.392) சி.பி.ஐ. தனது ஆதாரங்களில் ஒன்றாகக் காட்டி, அதையே நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள். அது உண்மையானால், இன்றைக்கு தூக்கு மேடையில் நிறுத்தப்படும் நான்கு பேரும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நான்கு பேரும் சதி தெரியாமலேயே அந்தச் சுழலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்றுதானே சொல்ல முடியும்? - பேரறிவாளனின் விடுதலைக்குப் போராடுபவர்கள் இதையே தங்கள் தரப்பு வாதமாக வைக்கிறார்கள்.

1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா எழுதிய கடிதத்தில், 'என் அன்புக் கணவரின் கொடூரமான கொலைக்குக் காரணமாக இருந்த நான்கு பேரும் தூக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று, எங்கள் குடும்பம் நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்குக் கருணை மனு அனுப்பும்போது, தாங்கள் அவர்களை மன்னித்து தூக்குத் தண்டனையை நிறுத்தும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

'இதே நிலைப்பாட்டில்தான் நான் இன்றும் இருக்கிறேன்’ என்பதை சோனியா உறுதிப்படுத்துவதில்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களும் அடங்கியிருக்கிறது.

120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் எனும் உலகச் சட்டம் 'கொல்லாமை’பற்றி நிறையவே சொல்கிறது.

வள்ளுவர், காந்தி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் மூவரில் யார் பேச்சைக் கேட்டாலும் மூவர் தலை தப்பும். தப்புமா?

- ஆனந்த விகடன்

இறுதியில் பயங்கரவாதி ராஜீவின் வீட்டுக்குள்ளேயே இருக்கும் உண்மையான கொலைகாரர்களை நோக்கி விசாரணை சென்றுவிடும் என்று பயப்படுவதால் மூவரை தூக்கில் போட முயலுகிறார்கள்.

நடந்தது எப்படி..? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்.(VIdeo in)

http://www.tamilthai.com/?p=24588

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.