Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் - ஒரு பார்வை

Featured Replies

கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'.

இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்நாட்டை வெள்ளைக்காரர்கள் 'ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa)' என்று குறிப்பிட்டனர். அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது!

உகாண்டா தனிநாடாக ஆனா கையோடு, வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே, 1962 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். எடுத்த எடுப்பிலேயே புதிய பிரதமருக்கு பெரிய தலைவலி காத்திருந்தது. ஒன்றரை கொடி உகாண்டா மக்களும் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களாக, பழங்குடிகளாக (Tribes) பிரிந்து நின்றனர்.

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவர் - நம்ம ஊர் ஜாதி தலைவர்கள் மாதிரி. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அதற்கேற்ப, ஒவ்வொரு பழங்குடியினரும் மற்ற பிரிவினர் மீது பொறாமையும் இளக்காரமும் கொண்டிருந்தனர். முதல் வேலையாக இவர்களையெல்லாம் இணைத்து ஒரே நாட்டு மக்களாக்க வேண்டியிருந்தது.

ஒபோடே, லாங்கி பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அது மைனாரிட்டி இனம். புகாண்டா என்னும் பெரும்பான்மையான பழங்குடியின் தலைவரான கிங் பிரெடி என்பவரை உகாண்டாவுக்கு ஜனாதிபதியாக்கினார் ஒபோடே.

பிரிட்டிஷ்காரர்களின் (வழக்கமான) பிரித்தாளும் கொள்கையில் புகாண்டா இனம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அந்த இனத்தை ஒபோடே பகைத்துக்கொள்ள முடியாத நிலை...

பிரெடி ஜனாதிபதியான உடனேயே அவருக்கும் ஒபோடேவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், படிப்படியாக ஜனாதிபதியின் அதிகாரங்களை ஒபோடே பறிக்க ஆரம்பித்தார்.

உடனே 'எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட அவமானம் இது' என்று புகாண்டா இன மக்கள் கொதித்தனர். ஆங்காங்கே கலவரங்களும் வெடித்தன. இதை அடக்குவதற்காக செமத்தியான ஒரு ராணுவ அதிகாரி ஒபோடேவுக்கு தேவைப்பட்டார். ஒபோடே தேர்ந்தெடுத்தது, ஆஜானுபாகுவான முரட்டுத்தனமான ஒரு ராணுவ அதிகாரி. பெயர் - இடி அமீன்.

இடிஅமின் 'காக்வா' என்னும் வேறொரு இனத்தை சேர்ந்தவன். படிப்பறிவு அவ்வளவாக இல்லை. ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது. ஆனால், கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் கெட்டிக்காரன்.

ஆறடி நாலங்குல உயரமுள்ள இடிஅமின், உகாண்டாவின் மாஜி தேசிய (Heavy Weight) குத்துசண்டை சாம்பியன் வேறு! அதிகாரம் தரப்பட்ட உடனேயே இடிஅமின் செய்த முதல் காரியம் - ராணுவ டாங்கிகளை கொண்டு ஜனாதிபதி மாளிகையை Sarround செய்தது தான்.

இடிஅமின் பர்சனலாக செலுத்திய பீரங்கி குண்டு, ஜனாதிபதி மாளிகை சுவரில் பெருத்த சத்தத்துடன் துளை போட்டது. ஜனாதிபதி பிரெடிக்கு இடிஅமின் முரட்டுத்தனம் பற்றி தெரியும். ஒரு ப்ரைவேட் விமானத்தில் ஏறி தப்பித்தோம், பிழைத்தோம் என்று பிரிட்டனுக்கு ஓடி தஞ்சம் புகுந்து, சில மாதங்களில் நோயுற்று பரிதாபமாக இறந்துபோனார் அவர்.

தொடர்ந்து நாலாண்டுகளுக்கு ஒபோடேயின் விசுவாசியாக, செல்லப்பிள்ளையாக - அதே சமயம், தனிப்பட்ட முறையில் அட்டுழியங்களும் அதிகார துஷ்ப்ரயோகங்களும் செய்துகொண்டு வந்தான் இடிஅமின்.

Idi-Amin.jpg

ஜனவரி 1971 அன்று ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்தார். அவரிடம் பணிவோடு கைகுலுக்கி வழியனுப்பிய இடிஅமின், விமானம் கிளம்பியவுடன் ராணுவத்தின் ஒரு பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றினான்.

கையில் ஒயின் கோப்பையோடு விமானத்தில் ஜாலியாக அமர்ந்திருந்த ஒபோடே, ரேடியோவில் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம்.

மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை கூட்டி, ராணுவ தலைமை அதிகாரியின் உடையணிந்து கொண்டு மேடை ஏறி நின்ற இடிஅமின், 'ஜனாதிபதி பிரெடியை கொல்ல திட்டம் போட்டார் ஒபோடே! நான்தான் அவருக்கு ரகசிய தகவல் தந்து, நாட்டைவிட்டு தப்பிக்க உதவி செய்தேன். தேச துரோகி ஒபோடே, இனி உகாண்டா திரும்ப முடியாது. என் முதல் வேலையாக, பிரிட்டனில் புதைக்கப்பட்டிருக்கும் நம் அருமை ஜனாதிபதியின் உடலை உகாண்டா கொண்டுவந்து, சகல மரியாதைகளுடன் மீண்டும் புதைத்து, அங்கே மிகப்பெரிய நினைவு சின்னம் அமைக்க போகிறேன்!' என்றான் உணர்ச்சிகரமாக.

ஒபோடே ஆட்சியிலிருந்தபோது பெரிதாக எதையும் கிழிக்கவில்லை என்பதால், மக்கள் கரவொலி எழுப்பினார்கள்!

ராணுவத்தில் இடிஅமினை போல, பதவி ஆசை உள்ள பல சீனியர் அதிகாரிகள் இருப்பார்கள் அல்லவா, அவர்களையெல்லாம் ஒன்றுகூடி தன்னை கவிழ்க்க திட்டம் போட்டால்?!

முக்கியமாக முப்பத்து ஆறு உயர் ராணுவ அதிகாரிகளை விருந்துக்கு கூப்பிட்டு அனுப்பினான் இடிஅமின்.

'நாம் எல்லோரும் இணைந்து, உகாண்டாவை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்ற திட்டங்கள் தீட்ட வேண்டும்!' என்று அவன் சொல்லியனுப்ப, எல்லா ராணுவ அதிகாரிகளும் ஆர்வத்துடன் விர்ந்துக்கு வந்தனர்.

இடி அமீனுக்கு விசுவாசமான அடியாள் படையொன்று திடீரென்று ஜனாதிபதி மாளிகையின் விருந்து மண்டபத்தில் புகுந்தது. இதை கண்டு திடுக்கிட்டு, பாதி விருந்திலிருந்து எழுந்து ஓட பார்த்த எல்லா ராணுவ அதிகாரிகளையும் கத்தியாலும் பயோனட்களாலும் குண்டர்கள் குத்தி கொன்றனர்.

மறுநாள் இடிஅமின் ரேடியோ மூலம் மக்களுக்கு விடுத்த செய்தியில், 'என்னை கொலை செய்யும் திட்டத்துடன் வந்த சில ராணுவ அதிகாரிகளுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டி வந்தது!' என்று வருத்தத்துடன் அறிவித்தான்.

அதிர்ச்சியடைந்த ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சுலைமான் ஹுசைன், இடி அமீனை நேரில் சந்தித்து கடுமையான வார்த்தைகளால் தன் ஆட்சேபனையை தெரிவித்தார். ஆனால், அமீனை சந்திக்கப்போன சுலைமான் திரும்பி வரவில்லை!

அவரை ஒரு சாக்கு பையில் திணித்து, ஜெயிலுக்கு தூக்கி சென்ற இடி அமினின் அடியாட்கள், அங்கே தடிகளால் அடித்தே அவரை கொன்றனர். 'நேருக்கு நேர் நின்று என்னை மிரட்டிய சுலைமானின் தலையை மட்டும் வெட்டி எடுத்து அனுப்புங்கள்' என்று சொல்லியனுப்பினான் இடிஅமின்.பிறகு, டைனிங் அறையில் இருந்த குளிர் சாதன பேட்டியில் சுலைமானின் தலையை வைக்க சொன்னான்.

3-x-idi-amin-1024x477.jpg

பிற்பாடு உகாண்டா நாட்டு பிரமுகர்கள், கலைஞர்கள், அயல்நாட்டு தூதுவர்களை அழைத்து பெரிய விருந்து கொடுத்த இடிஅமின், 'இந்த விருந்தில் நீங்கள் இது கேட்டாலும் கிடைக்கும். மனித இறைச்சி வேண்டுமா? சொல்லுங்கள்!' என்று உரக்க சொல்லிவிட்டு, எழுந்து போய் குளிர்சாதன பெட்டியிலிருந்து ஜில்லிட்டு போயிருந்த சுலைமானின் தலையை கொண்டுவந்து தூக்கி காட்டி, இடி சிரிப்பு சிரிக்க... எல்லோரும் திகைத்து போனார்கள்.

உச்சக்கட்டமாக, அந்த தலையிலிருந்து சில துண்டுகளை வெட்டி எடுத்து, ஊறுகாயில் தொட்டுக்கொண்டு ருசித்தான் இடிஅமின். அதிர்ச்சியோடு அந்த காட்சியை பார்த்த எல்லோருக்கும் 'இடிஅமின் ஒரு கிறுக்கு பிடித்த நவீன கலிக்யூலா' என்பதை புரிந்து கொண்டனர்.

ஏராளமான ராணுவ அதிகாரிகளை இடிஅமின் பரலோகம் அனுப்பிய தகவல் உகாண்டா மக்களுக்கு தெரியவே இல்லை! பத்திரிகைகளே இல்லாத நிலை, ரேடியோவோ... இடிஅமின் கையில்! 'தேச துரோக குற்றத்துக்காக சில ராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது' என்று மட்டும் ரேடியோ சுருக்கமாக அறிவித்தது.

இருப்பினும் எப்படியோ செய்தி வெளியே கசிந்து, அமெரிக்க 'பிலடெல்பியா புல்லடின்' பத்திரிக்கை நிருபரான நிகோலஸ் ஸ்ட்ரோ என்பவரும் ராபர்ட் ஸைடில் என்கிற சமூகவியல் பேராசிரியரும் உகாண்டாவில் ராணுவ டெபுடி கமாண்டரான மேஜர் ஜூமோ அய்கா என்பவனை சந்தித்து, இதுபற்றி விசாரித்தனர்.

தொடர்ந்து கேள்விகனைகளை இவர்கள் வீசியதால், குழப்பமடைந்த அய்கா போன் போட்டு, இடி அமீனிடம் 'கேள்விமேல் கேள்வி கேட்டு பேஜார் பண்ணுகிறார்கள் தலைவா!' என்று முறையிட... 'முட்டாள்! எதற்கு மெனக்கெட்டு பதில் சொல்லி கொண்டிருக்கிறாய்? முதல் வேலையாக அவர்களை சுட்டு தள்ளு!' என்று இடி அமீனிடம் இருந்து ஆணை வந்தது.

போனை வைத்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து வந்த அய்கா, இரு அமெரிக்கர்களின் நேற்று பொட்டிலும் கைத்துப்பாக்கியை வைத்து சுட்டு தள்ளினான். அவர்களுடைய உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

போனவர்களை திரும்பாததால், அமெரிக்கா தூதரகம் விசாரிக்க துவங்க, 'அவர்கள் வந்து பேட்டிஎடுத்துக்கொண்டு போய்விட்டார்களே!' என்று அய்காவிடமிருந்து பதில் வந்தது.இதற்கு பிறகே உலக நாடுகள், 'உகாண்டாவுக்கு அதிபதி ஆகியிருப்பவன் திமிர் பிடித்த, சராசரி சர்வாதிகாரி இல்லை. சற்றே மனநிலை பாதிக்கப்பட்ட, ஆபத்தான கொடுங்கோலன்' என்று புரிந்து கொண்டு கவலைப்பட ஆரம்பித்தன.

இடிஅமின் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டுக்குள் உகாண்டா திவால் நிலைமைக்கு வந்துவிட்டது. பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் எல்லோரும் கொல்லப்பட்டதால், தனக்கு பரிச்சயமான குண்டர்கள், குற்றவாளிகள், சமூகவிரோதிகள் எல்லோருக்கும் மேஜர், கேப்டன் என்று பதவிகள் கொடுத்து, ராணுவத்தில் சேர்த்துக் கொண்டான் இடி அமீன்.

விசுவாசமான இந்த ரௌடிகளால் தன் பதவிக்கு ஆபத்தில்லை என்கிற நம்பிக்கை வந்தவுடன், உகாண்டாவின் பொருளாதார நிலைமையை சீர்படுத்த, நிதி உதவி கேட்டு பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு 'ஜனாதிபதி' என்கிற முறையில் விஜயம் செய்தான் இடி அமீன். எல்லா நாடுகளும் (லிபியா தவிர௦!) கழன்று கொள்ள...

வெறுப்போடும் வெறுங்கையோடும் நாடு திரும்பிய இடி அமீன், விமானநிலையத்திலிருந்து அரண்மனைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தபோது, ஒரு இந்தியரின் பெரிய கடை அவன் கண்ணில் பட்டது. சரேலென்று நிமிர்ந்து உட்கார்ந்தான் அந்த கொடுங்கோலன்!

உகாண்டாவில் 50,000 -க்கு மேற்ப்பட்ட ஆசிய மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் தொழிலதிபர்களாகவும் டாக்டர்களாகவும் இன்ஜினியர்களாகவும் நர்சுகளாகவும் ஆசிரியர்களாகவும் பல துறைகளில் பணியாற்றி, உகாண்டாவின் பொருளாதாரத்தையும் தூக்கி பிடித்து நிறுத்தினார்கள். ஆசிய தொழிலதிபர்களால் லட்சக்கணக்கான உகாண்டா மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

2205010231_4b8848be1e.jpg

காரில் சென்று கொண்டிருந்த இடி அமீனின் கண்களில் தென்பட்ட இந்தியரின் கடை, அவனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. கூடவே பளீரென்று ஒரு ஐடியாவும் அவன் மனதில் உதித்தது.

இரண்டு நாட்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான் அந்த சர்வாதிகாரி. பிறகு அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டான்! 'உகாண்டாவின் அத்தனை பொருளாதார பிரச்சனைகளுக்கும் ஆசியர்கள்தான் காரணம். அந்த சுரண்டல் பேர்வழிகள் ஒழித்தால்தான் உகாண்டா உருப்படும். இன்னும் 90 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அத்தனை ஆசியர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்!' இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரேடியோவில் இடி அமீன் மிரட்டலாக 'இன்னும் 75 நாள், 74 நாள், 73 நாள்...' என்று 'கவுன்ட்-டௌன்' வேறு சொல்லிப் பயமுறுத்த ஆரம்பித்தான்.

பல தலைமுறைகளாக உகாண்டாவிலேயே பிறந்து, வளர்ந்து, அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்ந்த ஏராளமான இந்தியா குடும்பங்கள் கையில் மூட்டை முடிச்சிகளுடன், கண்களில் மிரட்சியுடன் நாட்டைவிட்டு வெளியேறின.

தீனி போடாமல் குண்டர்கள் எப்படி விசுவாசமாக இருப்பார்கள்? இடி அமீன் அவனுடைய பெரும் குண்டர் படையை அழைத்து, 'பிசினஸ் எல்லாவற்றையும் நீங்களே எடுத்து நடத்துங்கள்!' என்று அறிவித்தான்.

சில வாரங்களுக்குள் கடைகளில் உள்ள எல்லா பொருட்களையும் விற்று பணமாக்கிக் கொண்ட குண்டர்கள், அதற்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க - கடைகள் மூடப்பட்டன. பிறகு பார்மசிகள், மருத்துவமனைகள், ஆபிஸ்கள், தொழிற்சாலைகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டு, உகாண்டாவின் பொருளாதார நிலைமை அதலபாதாளத்துக்குப் போக ஆரம்பித்தது.

அமீன் அசரவில்லை! குண்டர்களை அழைத்து, கலிக்குலா ஸ்டைலிலேயே ஒரு திட்டத்தை சொன்னான்! 'யாரை வேண்டுமானாலும் கொலை செய்து, கொள்ளையடித்துக் கொள்ளுங்கள், நான் கண்டுகொள்ள மாட்டேன்' என்று!

உகாண்டா மக்கள், இறந்தவர்களின் உடல்களை மிகவும் பவித்ரமாக கையாண்டு, விசேஷ சடங்குகளை (காரியம்) செய்யும் வழக்கமுடையவர்கள். இந்த 'Weakness', அமீனின் ஆட்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. அங்குமிங்குமாகப் பொதுமக்களைத் தனித்தனியாக வேட்டையாடிக் கடத்தி சென்று கொல்ல வேண்டியது, பிறகு உடலை எங்கேயாவது ஒழித்து வைத்துவிட்டு, உடலை கண்டுபிடித்துக் கொடுக்கப்பணம் வசூலிக்க வேண்டியது! இது, அவர்களுடைய கொடூரமான வேலையாகிவிட்டது.

தவித்துப்போன உறவினர்கள் பணம் (ஏழை மக்கள் என்றால் ரூ. 10,000) சேகரித்து கொடுக்க, 'State Research Bureau' என்ற பெயரில் அரசு அமைப்பு ஒன்று (அதாவது, அடியாட்கள் அமைப்பு!) செத்துப் போனவரின் உடலைத் தேடுவதுபோலத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பணம் வசூலித்தது. இதில் ஒரு பெரும் பகுதி இடி அமீனுக்கு!

'சாகடித்தால் வசூல்!' என்கிற நிலை ஏற்பட்டதால், உகாண்டாவில் இரவு சூழுந்தால், எங்கு பார்த்தாலும் துப்பாக்கிவேட்டு சத்தம் கேட்க ஆரம்பிக்க, இந்த சத்தம் பற்றி பிரான்ஸ் தூதரகம், 'தூதுவர்களால் தூங்க முடியவில்லை!' என்று இடி அமீனிடம் முறையிட்டது என்றால் பார்த்துக் கொள்ளலாம்! இதனால் சற்று தர்மசங்கடப்பட்ட அமீன், குண்டர் தலைவன் மால்யா முங்கு என்பவனை அழைத்து, 'சத்தமில்லாமல் கொலைகளை செய்ய முடியாதா?' என்று கேட்டான்.

நம்முடைய ஐ.ஜி. மாதிரி பெரும் பதவியில் அமர்த்தப்பட்டிருந்த மால்யா, முன்பு ஒரு தொழிற்சாலையின் கேட்கீப்பராக பணிபுரிந்தவன். முரட்டு ரௌடியான அவன், 'ஒன்று செய்யலாம் தலைவா! நாம் கடத்துபவர்களை ஜெயிலில் போட்டுவிடலாம். அங்கு மற்ற கைதிகளை விட்டு இவர்கள் கழுத்தை நெரித்து, அல்லது சுத்தியலால் மண்டையில் அடித்துக் கொல்லச் சொல்லலாம். சத்தமே வராது! கொலைகாரர்களுக்கு ஒரு தொகை கொடுத்துவிடலாம்' என்றான்! 'பலே!' என்றான் அமீன். உடனே பெரிய சைஸ் மர சுத்தியல்கள் நிறைய வாங்கப்பட்டன.

ஏற்கனவே இஸ்லாம் மதத்துக்கு மாறியிருந்த இடி அமீனுக்கு ஐந்து மனைவிகள் (பிற்பாடு மூன்று பேரை விவாகரத்து செய்தான் அவன்). கேஅமீன் என்னும் ஒரு மனைவி (அமீனால்) கர்ப்பமடைந்து, பிறகு 'டிப்ரெஷன்' காரணமாகத் தானாகவே கருச்சிதைவு செய்ய முனைந்து அதில் குளறுபடியாகி இறந்து போனாள். தன்னை அவள் ஏமாற்றியதாக எடுத்துக்கொண்ட அமீன், கடுங்கோபம் கொண்டு மார்ச்சுவரியில் இருந்த டாக்டர்களை அழைத்து, அவளுடைய உடலிலிருந்து கைகளை வெட்டி கால் பகுதியிலும், கால்களை எடுத்து கைப்பகுதியிலும் வைத்துத் தைக்கச் சொன்னான். இறந்த பிறகும் அவளுக்கு பனிஷ்மென்ட்! மற்ற மனைவிகளை இழுத்துக்கொண்டு வந்து, 'பாருங்கடி, என்னிடம் விளையாடினால் இதுதான் கதி!' என்று வெறியோடு கத்தினான்!

2-idi-amin-dada-oumee.jpg

உகாண்டா அரசுக்கு லிபியா நாடு மட்டுமே எதோ நிதியுதவி அளித்து வந்தது. லிபியாவின் ஒரே கண்டிஷன் - யூதர்கள் அத்தனை பேரையும் நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் மற்றும் பாலஸ்தீனிய தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்பதே. இதெல்லாம் அமீனுக்கு 'கரும்பு தின்னக் கூலி' மாதிரிதான்! ஆனால், இந்த பாலஸ்தீனிய புரட்சிக்காரர்களின் உறவு விபரீதத்தில் கொண்டுபோய் விட்டது.

1976 ஜூன் 28- ஆம் தேதி. இஸ்ரேலிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை பாலஸ்தினிய தீவிரவாதிகள் கடத்தி, உகாண்டாவில் உள்ள என்டேபி விமான நிலையத்தில் இறங்கினார்கள். விமானத்தில் முன்னூறு பயணிகள். பலர் யூதர்கள்...

'இஸ்ரேலிலும் ஐரோப்பாவிலும் சிறைகளிலிருக்கும் 53 பாலஸ்தீனிய பயங்கரவாதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தனை பயணிகளும் கொல்லப்படுவார்கள்' என்று மிரட்டல் அறிக்கையைக் கடத்தல்காரர்கள் வெளியிட... உலகத்தின் கவலையான கவனம் முழுவதும் உகாண்டா பக்கம் மீண்டும் திரும்பியது. அந்த விமானநிலையத்தில் இடி அமீனும் எதோ கடத்தல்காரர்களின் தலைவன் மாதிரி கம்பிரமாக நடைப்போட்டு கொண்டிருந்ததை டி.வி-யில் பார்த்து பல உலக நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாயின.

ஒரே ஒரு விஷயத்தில் கோட்டை விட்டான் இடி அமீன். முன்னொரு சமயம் இஸ்ரேலிய தொழில் வல்லுனர்களை நாட்டைவிட்டுத் துரத்தியபோது, அந்த இன்ஜினியர்கள் என்டேபி விமானநிலையத்தின் வரைபடத்தையும் கையோடு எடுத்துப்போயிருந்தார்கள். அவர்கள் கட்டிய விமானநிலையம் தான் அது! அந்த 'பிளானை' கொண்டு வரச்செய்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள், பயணிகள் விமானநிலையத்துக்குள்ளே எந்த இடத்தில் 'ரகசியமாக' அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று (ஒற்றர்கள் மூலம்) கண்டுபிடித்தார்கள்.

ஜூலை 3- ஆம் தேதி நள்ளிரவு... இஸ்ரேலிய கமாண்டோக்களைச் சுமந்துக்கொண்டு ஒரு ராணுவ விமானம் 'ராடார்'களிடம் சிக்காமல் இருக்க தாழ்வாகப் பறந்து, விமானநிலையத்தின் ஒரு மூலையில் இறங்கியது. விமானத்திலிருந்து மின்னலாக வெளிப்பட்ட கமாண்டோக்கள் இயந்திரத் துப்பாக்கிகளை இயக்கியவாறு விமான நிலையத்தில் புகுந்து, அத்தனை பயணிகளையும் காப்பாற்றி, தங்கள் விமானத்தில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டார்கள்!

குறுக்கே வந்த அமீனின் இருபது ராணுவ வீரர்கள் காலி! ஒரு மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட, பிறகே விமானநிலையத்துக்கு ஓடிவந்த இடி அமீன், 'ஓ'வென்று கூச்சல் போட்டு புலம்பினான் (இந்த 'அட்வென்ச்சர்' பிற்பாடு திரைப்படமாகவும் வெளிவந்தது!).இதுவும், பிற்பாடு அண்டை நாடான டான்சானியா மீது படையெடுத்ததும் அமீனின் விழ்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது.

எந்த பயிற்சியும் இல்லாத ராணுவத்தை துரத்தியடித்த டான்சானியப் படையினர், குஷாலாகி உகாண்டாவுக்குள்ளேயே புகுந்தனர். உகாண்டா மக்கள் கரகோஷத்துடன் டான்சானியப் படையை வரவேற்க, திகைத்துப்போன இடி அமீன், 'போரிட தயாராகுங்கள்!' என்று ராணுவத்துக்கு அறைகூவல் விடுத்தான். ஆனால், ஒரு ராணுவ வீரன்கூட வரவில்லை!

இதற்குள் உலகநாடுகள் உதவியோடு மில்டன் ஒபோடேவும் நாடு திரும்ப, அவருக்கும் மக்கள் பெரும் வரவேற்ப்பு தந்தார்கள். இந்த தகவலையெல்லாம் கேட்டு நடுங்கிப் போய் அழ ஆரம்பித்த இடி அமீன், லிபியா நாட்டு அதிபர் கடாபிக்கு போன் போட்டு 'என்னை காப்பாற்றுங்கள்!' என்று அலற, கடாபி தன்னுடைய பிரத்தியேக ஹெலிகாப்டரை உகாண்டாவுக்கு அனுப்பினார். குடும்பத்தோடு அதில் மரணபயத்துடன் தாவிஎறிக்கொண்டான் இடி அமீன்.

உயிர் பிழைத்தாலும், வெளியே தலைக்காட்டப் பயந்துக்கொண்டு, சவூதி அரேபியாவில் ஒரு ஹோட்டலில் தனக்கென்று சவூதி அரசால் தரப்பட்ட அறையில் தங்கி, கடைசி காலத்தை கழித்த அந்த கொடுங்கோலன், 16 ஆகஸ்ட் 2003 அன்று மாரடைப்பு ஏற்பட்டு செத்துப்போனான்...

நன்றி: மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்', விகடன் பதிப்பகம்

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கொடுமை செய்தும் கடைசியில் மாரடைப்பில் தான் இறந்திருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

உகண்டா விமான நிலையத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த, இஸ்ரேலியர்களை விடுவித்ததையிட்டு ஒரு படமும் வெளிவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

உகண்டா விமான நிலையத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த, இஸ்ரேலியர்களை விடுவித்ததையிட்டு ஒரு படமும் வெளிவந்தது.

அந்த விமானத்தை கடத்திய கார்லோஸ் பின்னர் பிளாஸ்ரிக் சிகிச்சை மூலம் முகம் மாற்ற முயன்றபொழுது பிரான்ஸ் உளவுத்துறையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தான்.

Raid on Entebbe

Rise of False of Idi Amin

Edited by தப்பிலி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இடி அமீன் பற்றி epdp னரின் தினமுரசு பத்திரிகையில் தொடர் ஆக வந்தது

நன்றி ரதி அக்கா தமிழ்சிறி அண்ணா சாத்திரி அண்ணா தப்பிலி அண்ணா உங்களின் கருத்துகளுக்கு..:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.