Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்காணல் – த.அகிலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல் – த.அகிலன் (ஞாயிறு தினக்குரல்)

agithinan.jpgஈழத்தின் அகோரமான போர்ச்சூழலில் உங்களின் வாழ்வின் ஆரம்பம் கழிந்திருக்கின்றது, அந்த வகையில் உங்களின் வாழ்வியலின் அந்த ஆரம்ப நாட்கள் குறித்து?

நான் கிளிநொச்சியில் தான் பிறந்தேன், கிளிநொச்சியிலேயே வளர்ந்து அனேகமாக வன்னி மண்ணின் மகன் என்று கூடச் சொல்லலாம். கிளிநொச்சி மத்திய கல்லூரியிலே தான் என்னுடைய முதலாம் ஆண்டியிலிருந்து க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றேன்.

அனேகமாக நான் ஈழத்தை விட்டு இந்தியாவுக்குப் புலம் பெயரும் வரை வன்னியிலே தான் வாழ்ந்திருக்கின்றேன். வன்னியின் அவலங்களோடு, வன்னியின் துயரங்களோடு வன்னியின் சகல விஷயங்களோடும் நான் வாழ்ந்திருக்கின்றேன். வன்னியில் இன்றைக்கிருக்கிருக்கின்ற எல்லோருக்கும் இருக்கின்ற துயரங்களோடு தான் என்னுடைய பால்யமும் இருந்திருக்கின்றது என்று சொல்லலாம். அதை விட வித்தியாசமாக ஒன்றும் இல்லை. நான் எழுதுகிறேன், கவிதை எழுதுகிறேன், ஒரு ஊடகவியலாளனாக இருந்தேன் என்பதைத் தவிர வன்னியில் சகலருக்கும் இருக்கின்ற பால்யம் தான் எனக்கும் இருந்தது.

இப்படியாக ஈழத்திலே வாழ்ந்த காலகட்டத்திலே எழுத்துத் துறையிலே உங்கள் ஈடுபாட்டை ஆரம்பித்திருக்கின்றீர்கள், படைப்புத் துறையிலே உங்களுடைய ஆர்வம் எப்படி அமைந்திருந்தது, அதற்குக் களம் அமைத்துக் கொடுத்தவர்கள் யார்?

நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது கவிதைகள் எழுதக்கூடிய அண்ணாக்கள் இருந்தார்கள. அவர்கள் எழுதுகின்ற கவிதைகளை மேடையிலே நான் வாசிப்பேன். ஏனெனில் சிறுவயதில நான் நன்றாகப் பேசுவேன் என்பதால் மேடைக் கூச்சம் எனக்கில்லை என்று சொல்லுவார்கள் (சிரிக்கிறார்). நானாகச் சொல்லக் கூடாது. தங்களுடைய கவிதைகள் மேடை ஏறவேண்டும் என்று நினைக்கிற ஆட்கள் அவர்கள் கவிதைகளை எழுதி என்னட்டை தருவினம்., கவிதைகளை வாசிக்கச் சொல்லி. குறிப்பாக ராஜேந்திர குமார், லட்சுமி காந்தன் இன்றைக்கு அவர் பொன் காந்தன் என்று அறியப்படுகிற ஒரு ஆள். எனது ஐந்தாம் ஆண்டிலே அதாவது பத்து, பதினோராவது வயதுகளிலே லட்சுமிகாந்தனின் கவிதைகளை நான் மேடையிலே வாசிப்பேன். சரஸ்வதி பூஜைகள் போன்றவற்றிலே இவற்றை நான் மேடையில் வாசிப்பேன். இப்படியாக கவிதை என்கின்ற விஷயம், இலக்கியம் இப்படியாக படைப்புலகம் என்பதற்குள் நான் வந்தது அப்படித்தான்.

அல்லது அதையும் விடச் சொன்னால் எனது முதலாம் ஆண்டிலே அதாவது ஆறு வயசிலே மேடையிலே பேசிய ஒன்றைக் கூடச் சொல்லலாம். மற்றாக்களிடம் இருந்து வித்தியாசப்படத் தொடங்கியது என்பதற்காக. எல்லாமே வாசிப்பில் தானே ஆரம்பிக்குது. எனது அம்புலிமாமா வாசிப்பில் இருந்து என்று சொல்லலாம், முக்கியமா நான் பெரியாட்களின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கிப் பிறகு பத்தாம் ஆண்டு வரேக்க ஏன் நாங்களே கவிதை எழுதக்கூடாது என்று ஒரு எண்ணம். நகுலகுமார் என்று ஒரு ஆசிரியர் இருந்தவர். இன்று வரைக்கும் நான் அவருக்குப் பிறகும் நிறையப் பேரக் கடந்து வந்துவிட்டேன். அவருக்கு முதலும் நிறையப் பேரைக் கடந்து வந்தனான். ஆனால் நான் சந்தித்த ஆசிரியர்களிலேயே எனக்குப் பிடிச்ச ஆசிரியர் நகுலகுமார் ஆசிரியர் தான் . இப்போது அவர் வன்னியில் இல்லை, புலம் பெயர்ந்து போய்விட்டார். அவர் தான் சொன்னார் “ஏன் நீ கவிதை எழுதக்கூடாது? நீ மற்றாக்களின் கவிதைகளை வாசிக்கிறாய், நீயே கவிதை எழுது” என்று ஒரு நாள் எட்டாம் ஆண்டிலே நாங்கள் கவிஅரங்கம் செய்தனாங்கள். “கடவுள் ஏன் கல்லானாய்” என்ற தலைப்பிலேயே அது இருந்தது. அப்படித் தான் என் படைப்புலகம் மீதான ஆர்வம் ஆரம்பித்தது.

உங்களது ஆரம்பகாலக் கவிதைகளில் ஏதாவது ஒன்றை இப்போது உங்களால் ஞாபகப்படுத்த முடிகின்றதா?

ஆரம்பகாலக் கவிதையை என்னால் இப்போது ஞாபகப்படுத்த முடியாவிட்டாலும் அப்போது பிள்ளையார் பால் குடிக்கின்றார் என்ற வதந்தி உலாவிக் கொண்டிருந்தது. பிள்ளையார் சிலை பால் குடிக்குது என்று பேசப்பட்ட காலத்தில் தான் இந்த கவியரங்கம் செய்தனாங்கள்.

அப்போது நிறையப் பொருளாதாரத் தடை இருந்தது ஐங்கர் பால்மா உட்பட. அப்போது இதை வைத்தே நான் எழுதினேன். சரியான கவிதை வரிகள் எனக்கு ஞாபகமில்லை. “கல்லும் பால் குடிக்கும் அதிசயம் நடக்கிறது இந்நாட்டில் ஆனால் பிஞ்சுக் குழந்தை பால் இன்றித் தவிக்கிறது” இப்பிடியாக. என்னுடைய கவிதைகளைத் திரும்பிப் பார்க்கும் போது இப்போது கடுமையாகச் சிரிப்பு வரும்.

ஆனால் மகிழ்ச்சியாகத்தானிருக்கின்றது. அப்படி இருந்து தானே இப்படி வர முடிகின்றது.

அதில் முக்கியமான ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கு. அப்போது நான் சின்னப் பிள்ளையாக இருந்த போது வகுப்புத் தலைவராக இருந்தேன். ஜெயா என்று பெண் பிள்ளை இருந்தார். அவ என்னை விட நன்றாகக் கவிதை எழுதுவா. அவ இப்ப கவிதை எழுதுறாவோ என்னவோ தெரியவில்லை. அவவை ஒருமுறை வகுப்பில் வைத்து நான் கூப்பிட்ட விதத்தை இப்போது ஞாபகப்படுத்த முடியுது. ஆனால் அதை நான் எழுதவில்லை.

“இவள் ஒரு நெருப்பு

இவள் பேனா ஒரு செருப்பு

இவன் கவிதை உங்கள் இதயத்தை நொருக்கும்

ஆனால் ஆள்தான் கொஞ்சம் கறுப்பு” என்று அமைந்திருந்தது அது.

நீங்கள் குறிப்பிட்டது போன்று அம்புலிமாமா காலத்தில் இருந்து பின்னர் வாசிப்பினை விசாலப்படுத்தி ,அதன் படித்த அந்த அனுபவங்கள் என்பவை நாளாக ஒரு படைப்பாளியை உருவாக்கும் அளவுக்கு மாற்றி விடுகின்றது. அத்தோடு நாம் எமக்கான ஒரு களத்தையும் தேர்ந்தெடுத்துப் படைக்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையிலே உங்களுடைய களம் என்பது, பொதுவாக கவிஞன் என்றால் அதீதமான கற்பனை, நிலவையும், பூவையும், செடியையும் என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் பாடும் பொது வழக்கில் இருந்து விலகி எமது தாயக மண்ணின் அவலங்கள், வாழ்வியல் இவற்றையெல்லாம் உங்கள் கவிதைகளிலே நீங்கள் காட்டியிருக்கின்றீர்கள். இப்படியான ஒரு படைப்புப் பாணியை உங்கள் ஆரம்பகால எழுத்தில் இருந்து இப்போது மாற்றிச் சென்றது எதுவாக இருக்கும்?

நான் எட்டாம் ஆண்டிலே குறித்த ஒரு கவியரங்கம் செய்தாலும் பின்னர் நான் அதை மறந்து விட்டேன். அந்தக் காலகட்டத்தில் புலம்பெயந்து கனகராயன் குளம் போனோம், பின்னர் மல்லாவிக்குப் பெயர்ந்தோம், துணுக்காயிற்குப் போனோம், கந்தபுரம் வந்தோம் என்று நிறைய இடங்களுக்கு இடப்பெயர்வுகள், அலைச்சல்கள். இதுக்குள்ள இந்தக் கவிதை எழுதுவது என்பதையே விலக்கியிருந்தேன். பின்னர் கிளிநொச்சி நகரம் அப்போது இராணுவத்தின் வசம் இருந்தது. அப்போது புலிகள் அதைக் கைப்பற்றினார்கள். அப்போது மக்கள் உடனடியாகப் போகவில்லை. ஆனையிறவிலும், பரந்தனிலும் ஆமி இருந்தது. கிளிநொச்சியில் எங்கள் ஸ்கூலுக்கு ஷெல் வரும் ஆனால் அந்த இடத்துக்கு போய்ப் பார்க்கக் கூடியது மாதிரியான சூழல் இருந்தது. எல்லோருமே போகமாட்டார்கள். ஆக நெஞ்சுத் தைரியம் இருக்கிற ஆட்கள் போகக்கூடியது மாதிரி இருந்தது.

அப்ப எங்கட ஸ்கூல் படிப்பித்த ராஜேந்திர குமார் என்று சொல்லி அவர் ஸ்கூலில் இருந்து சின்னக் கண்ணாடித் துண்டொன்றை எடுத்துக் கொண்டு வந்தார். அவர் அதை எங்கள் வகுப்பு மேசையில் போட்டு விட்டு “எது என்ன தெரியுமா” என்று கேட்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த நிறையப் புதிய ஆட்கள் சேர்ந்திட்டினம். எமது பள்ளியிலும் அப்படியே, அதில் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் சிலரே. கிளிநொச்சி மத்திய கல்லூரில் முதலாம் ஆண்டிலிருந்து படித்தவர்கள் சிலரே. அப்போது தான் இந்தக் கேள்வியை கேட்டார். “இந்தக் கண்ணாடித் துண்டு என்னவென்ரு உங்களால் ஞாபகப்படுத்த முடியுமா?” என்று. எமது பள்ளிக் கூடத்தின் ஜன்னல் கண்ணாடியின் அலங்காரம் சற்று வித்தியாசமானதாக இருக்கும், அது தான் இது என்று என்று எனக்கு உடனே ஞாபகம் வந்தது.

அதாவது பள்ளிக்கூடம் மீதான் ஈர்ப்பு, இந்தப் பள்ளிக்கூடம் இடிஞ்சு போச்சு என்ற அந்த ஏக்கம். அக்கராயன் குளத்திலே ஒரு சாதாரணமான கொட்டிலிலே , கிடுகுக் கொட்டிலுக்கை இந்தக் கண்ணாடித் துண்டு கிடந்ததைக் கண்டு எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அப்போது நான் கேட்டேன், இந்தப் பொருள் கிடைத்து விட்டது, அதன் அடையாளங்களைக் காணேல்லை. நான் கிளிநொச்சி மத்திய பாடசாலையில், முதலாம் வகுப்பிலே டீச்சர் ஆனா ஆவன்னா சொல்லித் தரக் கத்திக் கொண்டிருந்த இடம், நான் விளையாடிய அந்த இடங்கள் எல்லாத்தையுமே நான் இழந்திட்டேன். அப்போது அதை வைத்து ஒரு கவிதை நான் எழுதினேன் “பொருளை அல்ல அதன் அடையாளத்தை” என்று. அதுதான் முதலில் பிரசுரமான கவிதை. அது ஈழநாதத்தில் பிரசுரமானது.

அந்தவேளை வெளிச்சம் சஞ்சிகை ஆசிரியர் கருணாகரன், தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் இயக்குனராக இருந்தவர், அவர் இந்தக் கவிதையை பார்க்கின்றார். கவிதைகளை நீங்கள் சொன்ன மாதிரி மலரே, வண்டே என்று அதீத கற்பனைகளில் இருக்கும் ஒரு வழக்கமான கவிஞனாக நான் ஆகிவிடக் கூடாது என்ற முனைப்பில் கருணாகரன் அவர்கள் அதிக அக்கறையா இருந்தார். நிறையப் புத்தகங்களை வாசிக்கத் தந்தார். அவர் தான் என்னுடைய கவிதைகளை அடுத்த இடத்துக்குக் கொண்டு போனவர். இவையெல்லாம் கடந்து ஒரு சீரியசான உலகம் இருக்கு என்று என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்றவர் இவர் தான். இன்றைக்கு அவர் கேட்கக் கூடிய சூழ்நிலையில் இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவரை நான் சந்திக்கும் போது நிச்சயம் சொல்வேன்.

இப்படியான இந்தப் படைப்புக்கள் நீங்கள் வன்னி மண்ணிலே இருந்த போது ஈழநாதம், வெளிச்சம் போன்ற சஞ்சிகைகளிலே வந்திருந்தன. புலம்பெயர்ந்த பின்னர் உஙகளின் படைப்பாற்றலை எந்த ஊடகத்தினூடாக அதிகம் வெளிப்படுத்தியிருந்தீர்கள்?

புலம்பெயர்ந்த பின்னர் என்னுடைய படைப்பாக்கங்களை நான் பத்திரிகைகள் வாயிலாக அதிகம் செய்யவில்லை. இணையத் தளங்களினூடாக அதாவது வலைப்பதிவுகளினூடாக அதே வேளை லண்டனில் இருந்து வரும் “ஒரு பேப்பருக்காக” நான் எழுதிக்கொண்டு வந்தேன். ஆங்காங்கே தமிழகத்திலும் சில பத்திரிகைகளிலும் கூட ஆனந்த விகடன், உயிர்மை, தீராநதி போன்றவற்றிலும் அவ்வப்போது எழுதி வருகின்றேன். பிறகு அப்பால் தமிழ் இணையத்திலே எழுதினேன். நான் வன்னியில் இருந்து 2006 இல் புலம்பெயர்ந்த பின்னர் அச்சு ஊடகங்களில் இருந்து பெரும்பாலும் விலகி வந்து விட்டேன் என்று தான் நினைக்கின்றேன்.

இப்பொழுது வன்னி மண்ணில் இருந்து விலகி தமிழகத்திலே ஒரு தற்காலிகமான வாழ்வினை அமைத்திருக்கின்றீர்கள், இந்த சூழல் எப்படியிருக்கின்றது?

இங்கு வந்து கிபீர் வராது, ஷெல் அடி இருக்காது, அதைத் தவிர மிச்ச எல்லாமுமே இருக்கிறது. தனிமை இருக்கிறது. இந்த நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டியிருக்கிறது. வெயிலில் இருந்து சகலதுமே இங்கே வேறுபட்டுத் தான் இருக்கின்றது. தமிழக மக்கள் எங்களை இரக்கமாகப் பார்க்கின்றார்கள், கருணையோடு நடத்துகிறார்கள், எங்களை மதிக்கிறார்கள் என்பதற்கும் அப்பால் ஈழத்தமிழர் குறித்தான வேறோர் பார்வை இங்கே இருக்கின்றது. நான் நிறைய இடங்களிலே அவற்றை குறிப்பிட்டிருக்கின்றேன்.

இப்ப நான் வந்து உங்களோட கதைக்கிறன். இப்ப வந்து தமிழ்நாட்டிலே இதே மாதிரியான ஒரு உரையாடலைத் தான் நான் நிகழ்த்துவேனா என்றால் இல்லை. ஏனென்றால் நான் ஒரு பக்கா தமிழ்நாட்டுக்காரனாக என்னால் பேசமுடியும். ஏனென்றால் அப்படிப்பட்ட அவசியம் இங்கே இருக்கின்றது. ஏனென்றால் நான் அதிகமான ஈழத்தமிழ்ச் சொற்களோடே ஒரு தமிழகத்தவரோடு நான் உரையாடலை நிகழ்த்த ஆரம்பிக்கும் போதே அவர் இரண்டாவது வசனத்திலேயே அவர் கேட்பார் “நீங்க சிலோனா” என்று. அந்தக் கேள்விக்குள்ளே நான் ஏதோ குண்டொன்றை இடுப்பில் வைத்திருப்பது போல அந்தக் கேள்விக்குள்ள இருக்கா என்ற பயம் எனக்குள்ளே வந்து விடும். ஆனா அதுக்குள்ள அப்படியும் ஒரு அர்த்தம் இருக்கும். அதுக்காக என்னுடைய அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டிய தேவை வந்து விடும். உங்களைப் போன்ற நண்பர்கள் அங்கே இருந்து பேசும் போது நான் இந்தியத் தமிழில் பேசும் போது “நீ என்ன இந்தியத் தமிழில் பேச ஆரம்பிக்கிறாய், அங்கே இருப்பவர் மாதிர் மாறீட்டியா” என்று.

இன்னும் ஒரு கொஞ்சக் காலம் இருந்தா நான் என்ர அடையாளங்களா நான் இழந்திடுவனோ, ஈழத்தமிழ்ச் சொற்களை நான் மறந்திடுவேனா. அதை விட்டிட்டு “வாங்க”, “உட்காருங்க” , “பேசுங்க” அப்படி மாதிரியான சொற்கள், இப்படிப் பேசப்படுகின்ற நிர்ப்பந்தத்துக்குள் நான் தள்ளப்படுகிறேன். இந்தத் தமிழ் என்பது என்னை வந்து தனிச்சுக் காட்டுது. என்ர மொழி, என்ர இயல்பு இது குறித்து எனக்கு அச்சுறுத்தலா இருக்கு.

என்ன இருந்தாலும் நாங்கள் சொல்லும் வீடு என்னும் ஒரு விஷயம், நான் முந்தி எழுதினான்

“வீடெனப்படுவது யாதெனில்

பிரியம் சமைக்கிற கூடு” அப்படி என்று.

என்னைப் பாதிக்கும் விஷயம் அதுதான். நான் கிளிநொச்சியில் நான் வீட்டை இருக்கேக்க நான் தனிய இருக்கோணும், என்ர றூமுக்கை ஒருத்தரும் வரக்கூடாது, என்ர சாமான்களை ஒருத்தரும் தொடக்கூடாது. எந்த நேரமும் நான் வீட்டைத் தட்டலாம், எந்த நேரமும் சாப்பாடிருக்கும். வெளியே நான் எங்காவது போய்விட்டு மூண்டு மணிக்குப் போனாலும் வீட்டில் சாப்பாடை அம்மா மூடி வைத்திருப்பா.

வீட்டுக் கதவை திறந்து வரும் போதே பெரியம்மா வந்து “தம்பி சாப்பிட்டியா” என்று கேட்பா. இது போன்ற விஷயங்கள் எல்லாமே இங்கே இருக்காது. நான் இங்கே இருக்கிறேன். இது ஒரு அறை, சுவர்கள் சூழந்த இடம். நாங்கள் ஐந்தாம் ஆண்டு சுற்றாடல் புத்தகத்தில் படித்தது போல உணவு, உடை, உறையுள் என்கிறது மாதிரி இந்த வெய்யில், மழை இதுகளில் இருந்து பாதுகாக்கிற இடம் தானே தவிர இந்து எங்கட வீடில்லை அப்படிச் சொல்ற உண்மை பயங்கரமா உறைக்குது. நான் நினைக்கிறேன் புலம்பெயர்ந்திருக்கிற ஒவ்வொரு தனியனுக்கும் இந்த உணர்வு இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

உங்களுடைய படைப்புக்கள் நூலுருவில் வந்தபோது அவற்றின் வெளிப்பாடுகள் எப்படி அமைந்திருந்தன?

எனக்குத் திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதியின் அறிமுகம் எனக்கு இந்தியா வந்தவுடன் கிடைக்கிறது. யுகபாரதி பழகுவதற்கு இனிமையான ஒரு நண்பர். வன்னியில் இருக்கும் போது எப்படி கருணாகரன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போனாரோ அதைப் போன்று யுகபாரதி நான் இங்கே இருக்கும் போது மிகுந்த உறுதுணையாக இருக்கின்றார். எனது தனிமையை, எனது ஆட்களற்ற நிலமையில் திடீரென்று யுகபாரதியின் நட்பு கிடைக்கின்றது. நான் ஊரில் இருக்கும் போது யுகபாரதியின் கவிதைகள் பார்த்திருக்கின்றேன், அவர் எழுதிய மன்மதராசா பாட்டு கேட்ட நினைவுகள் என்று நிறைய பிம்பங்கள் இருக்கும் தானே. ஒரு சினிமாப் பாடலாசிரியர், ஒரு சினிமாக் கவிஞர் என்று . அந்த விம்பங்கள் அற்று அவரோடு பழக முடிஞ்சது. அப்போது தான் உன்னுடைய கவிதைகளைக் கொண்டு வாங்க என்று கேட்டு, அவற்றைப் படித்து சரி நான் உங்களுடைய கவிதைகளைத் தொகுப்பாகப் போடுகிறேன் என்று சொல்லி, அவர் தனது சொந்தப் பதிப்பகமான நேர் நிரை பதிப்பகம் மூலம் “தனிமையின் நிழல் குடை” என்ற பெயரிலே அந்தத் தொகுதி வெளியானது. அப்போது கிளிநொச்சியில் இருந்த கருணாகரன் அண்ணா தான் முன்னுரை எழுதியிருந்தார். அந்தக் கவிதைகளை தனித் தனி உதிரிகளாகப் படிக்கும் போது வரும் உணர்வுகளை விடை ஒட்டுமொத்த தொகுப்பாகப் படிக்கும் போது வரும் உணர்வுகள் வித்தியாசமாக இருக்கு, காத்திரமா இருக்கு என்ற கோணத்தில் விமர்சனங்கள் வந்தன, அதே வேளை ஈழத்தைப் பற்றி, சண்டையைப் பற்றி, யுத்தத்தைப் பற்றி எல்லாம் எழுதேல்ல, ஒரு தனிமனிதன்ர உணர்வாத் தான் இருக்கு அப்படியெல்லாம் கூட விமர்சனம் வந்துச்சுது. ஆனா நான் வந்து எனக்குள்ளாகத் தான் பார்க்க முடியும். மலரே, வண்டே, நிலவே என்று என்னால் எழுத முடியாதோ அதே போல என்னால் இதையெல்லாம் படைக்க முடியாது. என்னைச் சுற்றி இருக்கிற உலகம் பற்றித் தான் என்னால் எழுத முடியும்.

இந்த தனிமையின் நிழல் குடை போன வருஷம் வந்தது. அதை விட “மரணத்தின் வாசனை” என்கிற புத்தகமும் இப்போது வந்திருக்கிறது. 2009 இலே அது வெளியாகி இருக்கின்றது. இந்த நூலை நம் நண்பர் சயந்தனும் (சாரல் வலைப்பதிவு மூலம் அறிமுகமானவர்), நண்பர் சோமியும் (எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனர்) இணைந்த முயற்சியாக அது வெளிவந்தது.

இந்த வேளை அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்ல வேணும்.

மரணத்தின் வாசனை என்பது உங்கள் கவிதைப் படைப்பிலிருந்து விலகியதான, ஈழத்தில் உங்களின் வாழ்வியலின் நனவிடை தோய்தலாக அமைந்திருந்தது அப்படித் தானே?

ஆம், மரணத்தின் வாசனை கவிதைத் தொகுப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. போர் குறித்த கதைகளைப் பேசினது. நிறையப் பேருக்கு வந்து அது ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தது. இப்படியும் இருக்குதா, என்னெண்டு இப்படி நிறைய சாவு , இவ்வளவு சாவை ஒரு மனிதன் சந்திக்க முடியுமா? இப்படியாக தமிழகத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் பலரும் என்னிடம் இதைக் கேட்டார்கள். ஒன்றிரண்டு சினிமாத் துறையைச் சேர்ந்த நண்பர்கள், அரசியல் துறையைச் சேர்ந்தவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்தார்கள்.

படித்தவர்கள் எல்லாரும் என்னட்டைக் கேட்ட கேள்விகள் தான் அவை.

மரணத்தின் வாசனை என்பது என்னுடைய ஆறாவது வயசில் சாவதில் இருந்து என்னுடைய இருபத்திரண்டாவது வயதில் என்னுடைய தோழன், என்னுடைய தோழி, என்னுடைய மச்சான் என்று என்னுடைய 24, 25 வயதுகளில் நான் சந்தித்த மரணங்கள், இதைப் போரில் நேரடியாக ஈடுபடாமல், இந்தப் போர் எத்தனை அப்பாவிகளைக் கொல்லுது, எத்தனை விதவிதமா கொல்லுது இப்படியாக போர் தின்ற சனங்களின் கதை இப்படியாகத் தான் இந்த நூலைச் சொன்னேன். இது சிறுகதையோ, கட்டுரையோ போன்ற புனைவு கிடையாது. இது ஒரு பதிவு அவ்வளவு தான். நான் என் மனத்துக்குள் சுமந்து கொண்டிருக்கும் மரணங்கள் குறித்துப் பேசுகின்றது.

இந்த நூலை சயந்தனும், சோமிதரனும் வெளியிடுவதற்கு முன்பாக இன்னொரு தமிழகப் பதிப்பகம் கேட்டிருந்தார்கள். பத்திரிகைகளில் விளம்பரமாகவும் இட்டிருந்தார்கள். ஆனால் கொஞ்ச நாள் கழித்து அவர்கள் என்னிடம் கேட்ட ஒரேயொரு விஷயம் மரணத்தின் வாசனை இந்தத் தலைப்பு கொஞ்சம் நல்லாயில்லை, இது குரூரமா இருக்கிறது மாதிரி இருக்கு, வேற தலைப்பை யோசியுங்களேன் என்ற போதுதான் நாங்கள் தனியாக வெளியிடுவோம் என்று முடிவெடுத்தோம். இந்தத் தலைப்பினை மாற்றக் கூடாது என்பதில் சயந்தன் உறுதியாக இருந்தார்.

இந்த மரணத்தின் வாசனை நூல் வடலி வெளியீட்டகத்தினூடாக வந்திருக்கின்றது, நான் நினைக்கிறேன் அவர்களின் முதல் வெளியீடே இதுவாக அமைந்திருக்கின்றது அப்படித் தானே?

ஆமாம். தற்போது ஈழத்தமிழர்கள் பலர் வலைப்பதிவுகளினூடாக எழுத்தாளர்களாக இருக்கின்றார்கள். தமிழகத்தில் நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்கள் வைத்திருக்கின்ற பதிப்பகங்கள் இருக்கின்றன, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, ஈழத்தமிழர் நூல்களை வெளியிடுகின்ற பதிப்பகங்கள் இருக்கின்றன. ஆனால் ஈழத்தமிழர்களுக்கான களத்தை தமிழகத்திலே அமைக்க வேண்டும் என்கின்ற நோக்கம் எங்களுக்கு இருந்தது. காரணம் தமிழகம் ஈழம் பற்றி அறிந்திருக்கின்ற விஷயங்கள் எண்பதுகளுக்குப் பின்னாலே நகரவில்லை என்று தான் தோன்றுகின்றது. ஆண் கவிஞர்கள் என்று சொன்னால் கடைசியாகத் தெரிந்தவர் யாராக இருக்கும் என்றால் பா.அகிலன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக இருக்கின்றார். அவர் “பதுங்கு குழி நாட்கள்” என்னும் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். அந்தக் கவிஞர் தான் ஆகக் கூடுதலாகப் பின்னாளில் அறியப்பட்ட ஆண் கவிஞர்.

பெண் கவிஞர்கள் என்று பார்த்தால் சிவரமணி ஆட்களோடு நின்று போயிற்று. அதற்குப் பிறகான நிறைய வீரியமான படைப்பாளிகள் எங்களுக்குள் வந்திருக்கின்றார்கள். நிறைய வீரியமான ஆண் கவிஞர்கள், நிறைய வீரியமான பெண் கவிஞர்கள், போராளிகளுக்குள் இருக்கும் கவிஞர்கள் என்று நிறையப் பேர். ஆனால் அவர்களது படைப்புக்கள் தமிழகத்திலே எடுத்து வரப்படவில்லை. வேறொரு விதமான அரசியல் இங்கே இருக்கிறது. அதே நேரம் அவற்றை வெளியிடுவதற்கான சரியான ஆட்கள் இங்கே இல்லை என்ற ஒரு விஷயம் இருக்கிறது. வெளியிடக் கூடாது என்ற அரசியல் அழுத்தங்கள் அவை எல்லாவற்றையும் தாண்டி சரியான களம் இங்கில்லை என்ற உண்மையும் அங்கே இருக்கின்றது. அப்போது தான் நாம் முடிவெடுத்தோம், அப்படியான களத்தை ஏற்படுத்த வேண்டும் என்று. இப்படியான டைட்டில் வைக்காதே, இந்தப் போரைப் பற்றி இப்பிடி எழுதாதை அப்படி எழுது என்று இல்லாமை எங்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான களத்தை ஏற்படுத்த வேணும் என்று யோசித்தோம். அதன் மூலமாகவே வடலி பதிப்பகம் மலர்ந்தது. இது ஈழத்தமிழர்களுக்கான சிறந்த வெளியீட்டு நிலையமாக இருக்கும் என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். வரும் ஏப்ரலில் நான்கு புத்தகங்களைக் கொண்டு வர இருக்கின்றோம். அதில் உங்களின் கம்போடியப் பயண நூலும், நான் மிகவும் மதிக்கின்ற, அவர் ஒரு படைப்பாளி என்பதற்கு அப்பால் நேசிக்கின்ற கருணாகரன் அண்ணையின் “பலியாடு” என்ற கவிதைத் தொகுதியும், தூயாவின் ஈழத்துச் சமையல் குறித்த ஒரு வித்தியாசமான நூலும் வர இருக்கின்றேன். ஈழத்தமிழர்களுக்கான புதிய களத்தை வடலி திறக்கும், திறந்து விடும் என்று நான் நம்புகின்றேன்.

இந்த வடலி வெளியீடுகள் தமிழகத்திலே பரவலாக அறிமுகம் செய்யப்பட இருந்தாலும் புலம் பெயர்ந்த வாசகர் வட்டத்தினை எப்படி இவை சென்றடையப் போகின்றன?

தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கு எப்படி இவற்றைப் பரவலாகக் கொண்டு போகப் போகின்றோமோ, தமிழகத்தின் அனைத்து நூலகங்களுக்கும் இவற்றை வழங்கப்போகின்றோமோ அதே போன்று இந்தமுயற்சியிலும் ஈடுபடுவோம்.

புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் “வடலி வாசகர் வட்டம்” என்ற அமைப்பினை உருவாக்குவதன் மூலம் இவற்றை நாங்கள் செயற்படுத்த இருக்கின்றோம். எமது வாசகர் வட்டங்கள் எங்கள் நூல்களை நிச்சயமாக வாங்கும். ஏனென்றால் அந்தளவுக்கு காத்திரமான நூல்களைத் தான் நாம் வெளியீடு செய்ய இருக்கின்றோம். நாங்கள் தனியே கடைகளை நம்பிக்கொண்டிராமல், இலவசப் பிரதிகளை வழங்கிக் கொண்டிருக்காமல் இவற்றின் மூலம் சாத்தியப்படுத்த இருக்கின்றோம்.

உங்களுடைய அடுத்த முயற்சி என்ன?

நான் கவிஞராக இருந்தாலும் உரை நடைக்கு மாறினேன். அத்தோடு புகைப்படத்துறையிலும் ஆர்வம் வந்தது. செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தை புகைப்படம் எடுக்கப் போயிருந்தேன். அப்போது அங்குள்ள சிறுமிகள் என்னோடு பழகிய விதங்களைப் பார்த்து “தாயாய், சகோதரியாய், தோழியாய்” என்னும் உரை நடைக் கட்டுரை ஒன்றை எழுதினோன். அது தான் என்னுடைய முதல் உரை நடைப் படைப்பு. அதன் பின் அங்கு தயாரான குறும்படங்களிலே என் பங்களிப்பை வழங்கியிருக்கின்றேன். ஒரு காட்சி ஊடகத்துக்கு அங்கேயிருந்து மாறினேன். எனவே அந்த அனுபவத்தின் மூலமாக சினிமாவை எனது எதிர்காலத்திற்கான திட்டமாக வைத்திருக்கின்றேன். வன்னிக்கு வெளியே தமிழகத்தில் ஒரு ஈழ சினிமாவை இயக்க வேண்டும். அங்கே நிறையப் படைப்புக்கள் தமிழகத்துக்கு தெரியாதவை வந்திருக்கின்றன. இங்கே ஈழத்தைச் சேர்ந்த பலரும் தமிழ் சினிமாவிலே இப்படியான முனைப்போடு இருக்கின்றார்கள். அவர்களில் நானும் ஒருத்தனாக இருக்க விரும்புகின்றேன். எதிர்காலத்தில் ஈழத்தின் கதை சொல்லும் சினிமாவாக அது இருக்கலாம்.

உங்களின் அடுத்த படிநிலைக்கு எமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடு நிறைவாக உங்களின் ஈழத்தில் வாழ்வியலை, வலிகளைச் சொல்லும் கவிதைகளில் ஒன்றைத் தாருங்களேன்?

நான் நேற்று எழுதிய கவிதை இருக்கின்றது. நேற்று நான் வன்னியில் இருக்கின்ற தம்பியோடு தொலைபேச நேர்ந்தது. அதன் வெளிப்பாடாய் இந்தக் கவிதை

நமது தொலைபேசி

உரையாடலை

கேட்டுக்கொண்டிருக்கின்றன

நமக்குச் சொந்தமற்ற செவிகள்.

பீறிட்டுக்கிளம்பும் சொற்கள்

பதுங்கிக் கொண்டபின்

உலர்ந்து போன வார்த்தைகளில்

நிகழ்கிறது.

நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்

உன் ஒப்புதல் வாக்குமூலம்.

வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும்

சொல்லவியலாச்

சொற்களைச் சபித்தபடி

ஒன்றுக்கும் யோசிக்காதே

என்கிறாய்..

உன்னிடம்

திணிக்கப்பட்ட

துப்பாக்கிகளை நீ

எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்

வாய் வரை வந்த

கேள்வியை விழுங்கிக்கொண்டு

மௌனிக்கிறேன்.

தணிக்கையாளர்களாலும்

ஒலிப்பதிவாளர்களாலும்

கண்டுகொள்ளமுடியாத

ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்

உதிர்கிறது..

தொலைபேசிகளை

நிறைக்கிறது

ஒரு நிம்மதிப்பெருமூச்சு..

நீ நிம்மதியாப் போ..

தம்பி அன்பழகனுக்கு

-கானாபிரபா ஞாயிறு தினக்குரல் (இலங்கை)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவிலான் தேடி எடுத்து வந்து வாசிக்கத்தந்ததிற்க்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.