Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்குலகத்திற்கு தமிழ் மக்கள் தேவையா? தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவையா?

Featured Replies

மேற்குலகத்திற்கு தமிழ் மக்கள் தேவையா?

தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவையா?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குழுவினர் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி அதனைப் பரிசீலனை செய்துவிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும் அதன் ஒரு பிரதியை ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப் போவதாகவும் தகவல்.

அரசினைப் பொறுத்தவரை இரண்டும் கெட்டான் நிலை. அறிக்கையினை வெளியிட்டாலும் பிரச்சினை. அறிக்கையை வெளியிடாவிட்டாலும் பிரச்சினை. இதனால் அறிக்கையின் சில விடயங்களை மட்டும் கசியவிட்டு உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் பிரதிபலிப்பைப் பார்க்கின்றது.

சர்வதேச சக்திகளுக்கு குறிப்பாக மேற்குலக சக்திகளுக்கு இந்த அறிக்கை தொடர்பாக எந்தவித நம்பிக்கையும் கிடையாது. எனினும் அழுத்தம் கொடுப்பதற்கான நியாயம் தேடுவதற்கு இந்த அறிக்கை அவர்களுக்குத் தேவையாக உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் நோர்வே தரப்பினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சியின் படுதோல்விக்கான காரணங்கள், 30 ஆண்டுகால யுத்தத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் என இரண்டு விடயங்கள் எதிர்பார்க்கப்பட்டன. அத்துடன் பொறுப்புக்கூறல் எதிர்கால சமாதான முன்னெடுப்புகள் பற்றிய சிபார்சுகளும் எதிர்பார்க்கப்பட்டன.

கசியவிடப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கைகள் இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் தெளிவாக எதனையும் கூறவில்லை. யுத்தத்தின் இறுதிக்கால நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை ஒன்றை நடாத்துவது நல்லது எனக்கூறியதன் மூலம் சர்வதேசம் அக்கறை செலுத்தும் முக்கியமான பிரச்சினையை காலம் கடத்துவதற்கு யோசனை கூறியுள்ளது. அதேவேளை சனல் 4 காணொளி தொகுப்பினை முழுமையாக நிராகரித்துள்ளது. அத்தொகுப்பு சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தொகுக்கப்பட்டது. சர்வதேச நிபுணர்கள் அவை உண்மையானவை என ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே இந்த நிராகரிப்பை மனித உரிமை நிறுவனங்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. எனினும் உத்தியோகபூர்வ அறிக்கை வெளிவராததினால் அவை மௌனமாக இருக்கின்றன. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் அறிக்கை முழுமையாக வரட்டும். அதன் பின்னர் தமது கருத்துக்கள் வெளியிடப்படும் எனக் கூறுகின்றன.

மேற்குலக நாடுகளுக்கு அரசினை தமது நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வருவதற்கு இருக்கின்ற ஒரேயோரு பிடி இந்தப் போர்க்குற்றம்தான். தமது முயற்சிகள் அதிகாரப் பகிர்வுப் பாதைக்கு மேல் செல்லக்கூடாது என்பதற்காக அதனை இனப்படுகொலை எனக் கூறவில்லை என்பது வேறுகதை.

எனவே போர்க்குற்ற விவகாரத்தை தமிழ் மக்கள் கைவிட்டாலும், சர்வதேசச் சக்திகள் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை வரும் வரை கைவிடப்போவதில்லை. தென்னாசியாவில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதற்கு போர்க்குற்ற விவகாரம் மேற்குலகத்திற்கு மிகமிக அவசியம்.

முன்னர் தென்னாசியாவின் அதிகாரச் சமநிலையைப் பேணுவதில் புலிகளும் மிகப் பெரும் பங்காற்றியிருந்தனர். அதனூடாக தென்னாசிய அதிகாரச் சமநிலையைப் பாதுகாப்பதில் தமிழ் மக்களும் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கியிருந்தனர். புலிகளிடமிருந்த ஆயுத பலமும் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் சுயநிர்வாகமும் அந்த ஆற்றலைக் கொடுத்திருந்தன.

இந்தக்கூட்டுப்பலம் இலங்கைத் தீவில் ஒரு அதிகாரச்சமநிலை உருவாக, அதன் வழி தென்னாசிய அதிகாரச் சமநிலையிலும் பங்களிப்புச் செய்தது. புலிகளுக்கும் இலங்கை அரசிற்குமிடையிலான அதிகாரச்சமநிலை, தென்னிலங்கையில் ஆளும் கட்சிகளுக்கும் எதிர்கட்சிக்குமிடையிலும் ஒரு அதிகார சமநிலையினை உருவாக்கியது.

புலிகள் அழிக்கப்பட்டபின் இவ் அதிகாரச்சமநிலை பாரதூரமாகக் குழம்பியது. சமநிலைத் தராசினை ஜனாதிபதி மகிந்தருக்க சார்பாக அதிகளவில் சரித்தது. அதாவது இலங்கை அரசு புலிகள் - ஆளும் கட்சி - எதிர்க்கட்சி, இலங்கை அரசு - இந்தியஅரசு, இலங்கைஅரசு - அமெரிக்கஅரசு என்பவற்றிற்கிடையிலான அதிகாரச் சமநிலையினை இலங்கை அரசிற்குச் சார்பாக வலுவாகக் கொண்டு வந்தது. ஜனாதிபதி மகிந்தர் எவரும் கையகப்படுத்த முடியாத உயரத்திற்கு சென்றார்.

மதுரையில் செம்மனச்செல்விக்காக பிட்டுக்கு மண்சுமந்த இறைவனுக்கு விழுந்த அடி உலகில் ஜீவராசிகள் அனைத்திற்கும் பட்டதுபோல, ஜே.வி.பி, ஐ.தே.க, முஸ்லீம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, இந்திய அரசு, தி.மு.க, மேற்குலகம் ஆகிய அனைத்தின்மீதும் பட்டது. இன்று இவ் அனைத்து சக்திகளும் தமது இருப்பை பாதுகாப்பதற்காக புலிகள் மீள வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் தமிழ் நாட்டில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளைப்போல தற்போதைக்கு மீள எழும்ப முடியாத கோமா நிலைக்குச் சென்றுள்ளன. தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி என தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெறும் 5 வீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் ஆதரவு வழங்கியதனால் கொழும்பு மாநகர சபையுடன் மட்டும் சுருண்டு கிடக்கின்றது. ஜே.வி.பியை கவனிப்பார் யாருமில்லை.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் அழுத்தங்களுக்கெல்லாம் பணியாமல் ஜனாதிபதி மகிந்தர் மிக இலாவமாக வெட்டி ஓடுகின்றார். இந்தியா, இலங்கையில் தனது நலன்களைப் பாதுகாக்க ஜனாதிபதியின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறது. ஐ.நா. செயலாளர் பான்.கீன்.மூன் தனது கையாலாத்தனத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றார். சூடானையும் லிபியாவையும் சீனாவிடமிருந்து பிரித்த அமெரிக்காவிற்கு இலங்கையிடமிருந்து மட்டும் சீனாவை பிரிக்க முடியவில்லை.

தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு ஜனாதிபதி மகிந்தருக்கு இருக்கின்றது. இது இலங்கையின் உள்நாட்டு மட்டத்தில் அவரை அசைக்கமுடியாத மனிதராக்கியுள்ளது. பிராந்திய மட்டத்தில் சீனா, ரஸ்யாவின் ஆதரவும் அணிசேரா நாடுகளின் ஆதரவும் மேற்குலகின் எறிகணைகள் ஜனாதிபதி மகிந்தர் மீது விழாமல் கவசம் போல பாதுகாக்கின்றன.

மேற்கூறியவாறு அதிகாரச் சமநிலைகள் மோசமாகக் குழம்பும் என மேற்குலகம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவும் கூட எதிர்பார்க்கவில்லை. இலங்கை சிறிய நாடு தானே, நாம் இலகுவாக அமத்திவிடலாம் என்ற மேலாதிக்கச் செருக்கு அவர்களிடம் இருந்தது.

சிங்கள சமூக உருவாக்கத்தையும் அதன் வழி கட்டியெழுப்பப்பட்ட சிங்கள அரசு உருவாக்கத்தையும் சிறிதளவு கூட கவனத்தில் கொள்ளாததுதான் இதற்கு காரணம்.

சிங்கள் சமூக உருவாக்கத்தின்படி இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டும் சொந்தம். ஏனைய இனங்கள் வேண்டுமானால் இந்தத் தீவில் வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் எந்த வித உரிமைகளும் கிடையாது. ஏனைய இனங்களை இலங்கைத் தீவில் தங்க இடங்கொடுத்தமையே சிங்கள மக்கள் காட்டிய மாபெரும் கருணை.

இந்தக் கருத்துநிலை வெறுமனவே அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்டது எனத் தவறாக ஒருவரும் கற்பிதம் கொள்ளக்கூடாது. வரலாறு, சமயம், ஐதீகம், பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றின் மூலமே கட்டியெழுப்பப்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் செய்த பணிகளெல்லாம் இந்தக் கருத்து நிலை திரட்டிற்கு மேல் ஏறிக் குந்திக் கொண்டமை மட்டும்தான்.

இந்த சிங்கள சமூக உருவாக்க கருத்து நிலையின் அடிப்படையில்த்தான் சிங்கள அரசு உருவாக்கம் இடம்பெற்றது. இந்த அரசு உருவாக்க முயற்சிக்கான அத்திவாரம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது.

1921ம் ஆண்டு மானிங் அரசியல் சீர்திருத்தத்தில் பிரதிநிதித்துவ சமநிலையை மாற்றும் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்துடன் இந்த அத்திவாரப் பணிகள் ஆரம்பமாகி டொனமூர் யாப்புடன் சற்று உறுதி நிலையை அடைந்தது.

டொனமூரில் வழங்கப்பட்ட அரைகுறைப் பொறுப்பாட்சி பெரும்பான்மை ஜனநாயகத்தின் அடிப்படையிலமைந்த ஒற்றையாட்சி அதிகாரக் கட்டமைப்பிடம் வழங்கப்பட்டமையினால் இயல்பாகவே ஆட்சி அதிகாரம் சிங்கள தேசத்திடம் சென்றது. தமிழ்த்தேசத்திற்கு தேசாதிபதியிடமிருந்த ஒதுக்கு அதிகாரப் பாதுகாப்பு மட்டுமே இருந்தது.

பெரும்பான்மைச் சமூகத்தை பகைக்கக்கூடாது என்பதற்காகவும், டொனமூரின் பிற்பகுதியான இரண்டாம் உலக யுத்தகாலம் சிங்கள தலைமைகளின் ஆதரவினை வேண்டியிருந்தமையினாலும் தேசாதிபதி ஒதுக்குஅதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. அது யாப்பினை அலங்கரிக்கும் வெறும் குஞ்சமாக மட்டும் இருந்தது. அதிகாரக் கட்டமைப்பில் பன்மைத் தன்மைக்கான அம்சங்களை பொருத்தாமல் வெறுமனவே தொங்கவிடப்படும் குஞ்சங்கள் பேரினவாதத்தின் வெப்பம் தாங்காமல் தானாகக் கழன்றுவிடும் என்பதற்கு டொனமூரின் ஒதுக்கு அதிகாரங்கள் முதல் சாட்சியாக அமைந்தது.

சோல்பரி யாப்பிலும் அரச கட்டமைப்பினை பேரினவாத ரீதியாக வலுப்படுத்துவதற்காக அதிகாரக் கட்டமைப்பினை வழங்கிவிட்டு 29வது பிரிவு, நீதிப்புனராய்வு அதிகாரம், பிரித்தானிய உயர்நீதிமன்றத்திற்கு மேன்முறையிடும் உரிமை என்ற குஞ்சங்கள் மட்டும் தமிழ்த் தேச நலன்களுக்காக கட்டப்பட்டன. பேரினவாதத்தின் வெப்பம் தாங்க முடியாமல் அந்தக் குஞ்சங்கள் எல்லாம் கழன்று விழுந்தமைதான் வரலாறு.

1972ம் ஆண்டு யாப்பு உருவாக்கக்தின்போது இந்தக் குஞ்சங்கள் சலசலத்து இடைஞ்சல்கள் கொடுக்கும் என்பதற்காக அதனைக் கழற்றி எறிந்தது சிங்கள தேசம். 1978ம் ஆண்டு யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் யாப்பிற்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத வகையில் மாகாணசபை முறை செருகப்பட்டது. அதுவும் வெப்பம் தாழாமல் கழன்று விழுந்தது என்பதுதான் அண்மைக்கால வரலாறு.

மறுபக்கத்தில் டொனமூரில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மயமாக்கல் செயன்முறை சோல்பரி யாப்புக் காலத்தில் அபரிதமாக வளர்ந்தது. அரச இயந்திரங்கள், அரச அடையாளங்கள் என அனைத்தும் சிங்கள மயமாக்கப்பட்டன. 1972ம் ஆண்டு யாப்பு சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் அனைத்திற்கும் யாப்பு அந்தஸ்து கொடுத்து அதனைப் பூரணப்படுத்தியது. இவ் அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியேயும் எதுவும் இருக்கக் கூடாது. எதிராகவும் எதுவும் இருக்கக் கூடாது என்ற நிலை உருவாக்கப்பட்டது.

அதேவேளை எதிர்கால சிங்களக் கட்டமைப்புக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக தமிழ்த்தேசத்தின் இருப்பைச் சிதைக்கும் முயற்சி முடுக்கி விடப்பட்டது. சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழித்திணிப்பு, பௌத்தத்திணிப்பு என்பவையாக அவை தொடர்ந்தன.

மறுபக்கத்தில் தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாப்பதற்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தனர். அது சமத்துவக் கோரிக்ககை, சமஸ்டிக் கோரிக்கை என வளர்ந்தது. இறுதியில் தனிநாட்டுக் கோரிக்கை என்ற நிலைக்குச் சென்றது. அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டம் என்ற வகையில் ஆயுதப் போராட்டமாக வளர்ந்தமையினால் சிங்கள தேசத்தின் அதிகாரக் கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்குள்ளானது. இன்னோர் பக்கத்தில் அது பிராந்திய மட்டத்திற்கும், சர்வதேச மட்டத்திற்கும் வளர்ந்து சென்றது. இதனால் இன விவகாரம் பிராந்திய நலன்கள், சர்வதேச நலன்களுடனும் இணைய வேண்டியதாயிற்று.

இந்த வரலாற்றுப் பின்புலத்தினை மேற்குலக நாடுகள் ஒழுங்காக உள்வாங்கவில்லை. அதற்குள்ளேயுள்ள சிக்கல்பாடுகளையும் புரிந்து கொள்ளவில்லை. எல்லாவற்றிற்கும் புலிகளே காரணம் என்ற ஒற்றைப் பார்வையின் அடிப்படையில் புலிகளை ஓரங்கட்டத் தொடங்கின. இறுகிப்போன சிங்கள அதிகாரக் கட்டமைபிடமிருந்து அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவற்றிற்கு இருந்தது. இதற்கு புலிகளின் சுயாதீனத்தன்மையும் சுயநிர்ணய உரிமைப் பாதையும் இடைஞ்சல் என அவை கருதின.

புலிகள் பற்றிய தவறான பிம்பங்களை இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ் புத்திஜீவிகள் கூட்டம் என்பவையும் வழங்கியிருந்தன. இவையெல்லாம சேர்த்து புலிகளை அழிப்பதற்கான ஊக்கத்தினை மேற்குலகத்திற்கு கொடுத்தன.

இன்னோர் பக்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை இலகுவாக அதிகாரப் பகிர்வுப் பாதைக்குள் வைத்திருக்கலாம் என்பதற்காகவும் அதனிடம் உறுதியான கொள்கைத் திட்டம், உறுதியான வேலைத்திட்டம், உறுதியான கட்டமைப்பு, மக்கள் பங்கேற்பு என்பன இல்லாததினால் இலகுவாகக் கையாளலாம் என்பதற்காகவும், புலிகள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை விட குறைந்த தீர்வினை ஏற்பார்கள் என்பதற்காகவும் புலிகளின் இடத்திற்கு கூட்டமைப்பினர் வருவதை விரும்பிருந்தன. புலிகள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினையே, கூட்டமைப்பினர் முன்வைப்பர் என அறிந்திருந்தால் புலிகளை வைத்துக்கொண்டே பிரச்சினையை தீர்க்க அவை முயற்சித்திருக்கும்.

தற்போது அதிகாரச் சமநிலை குழம்பியுள்ளதால் தமிழ் அரசியலுக்கு சர்வதேச சக்தியை அளித்து வலுவூட்டுவதைத்தவிர மேற்குலகத்திற்கு வேறு தெரிவு இல்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை செயற்பட விடுவதற்கும் கூட்டமைப்பினரை மேற்குலக நாடுகளுக்கு கூட்டிச் செல்வதற்கும் இதுவே காரணம்.

எனினும் தமக்கு நெருக்கடிகள் அதிகம் வரக்கூடாது என்பதற்காகவும் அதிகாரப் பகிர்வுப் பாதையினையே அவை தேர்ந்தெடுத்துள்ளன. இதற்கேற்ற வகையில் கூட்டமைப்பு உள்ளதனால் அதனையே ஊட்டி வளர்க்க விரும்புகின்றன. நோர்வே சமாதானத் தூதுவர் சொல்கெய்மின் உரை அதனையே வெளிக்காட்டியிருந்தது.

அதிகாரப் பகிர்வுப் பாதை ஒரு போதும் சாத்தியமாகப் போவதில்லை. சிங்கள அதிகாரக் கட்டமைப்பு அதற்கு ஒரு போதும் இடம்கொடுக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம்.

சுயாதீனமுள்ள தமிழர் அரசியல் இயக்கம் தனி நாடல்லாத சுயநிர்ணய உரிமைப் பாதையை முன்வைக்கும்போது அதனை மேற்குலகத்தினால் ஒருபோதும் நிராகரிக்க முடியாது.

இன்று தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவை என்பதை விட மேற்குலகத்திற்குத்தான் தமிழ் மக்கள் தேவை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=78556732-2f25-476d-92c1-415a7de8de1d

கதை நல்லாய்த்தான் இருக்கு. முடிவு மட்டும் வில்லங்கமாக செருகு பட்டதாக இருக்கு.

மேற்குலகங்களை வளத்து போடுவதும், போர்குற்ற விசாரணையை முன்னெடுக்க வைப்பதும் புலம் பெயர் மக்களின் தோளிலிருந்து இலகுவில் இறக்கி வைத்து விடக்கூடிய சுமைகள் அல்ல.

தம் கைதான் தமக்கு உதவி என்று நினைத்து புலம் பெயர் மக்கள் மேற்கு நாடுகளின் தமிழீழம் சம்பந்தமான அபிப்பிராயத்தை மாற்ற முயலவேண்டும். போர்குற்ற விசார்ணையை மேற்குலகம் தமது தேவைக்கு மட்டும் உபயோகப்படுத்த விடாமல், குற்றவாளிகளை தண்டிக்கவும், தமிழருக்கு ஒரு நீதி கிடைக்கவும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இன்று தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவை என்பதை விட மேற்குலகத்திற்குத்தான் தமிழ் மக்கள் தேவை.

இது கானல் நீர் போல் உண்மை போலத்தென்படும் ஒரு பிரமை. தாகத்தால் அதன் பின் ஓடினால் நா வறண்டு சாவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

”இன்று தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவை என்பதை விட மேற்குலகத்திற்குத்தான் தமிழ் மக்கள் தேவை.”

நான் விரிவாக எழுதப்போய் ஈழத் தமிழரின் வளமையான த்னிநபர் மோதலுக்கு தயாராக இல்லை. என் கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் வலி இழந்திருக்கும் நிலையில் விஞ்ஞான பூர்வமான அரசியல் சித்தாந்த தெளிவும் சரியான இராச தந்திரமுமே நமக்கு மீண்டும் உயிர்தெழுகிற பலத்தைத் தரும் ஆனால் நமது பக்க சர்பிழையை மதிப்பிடாமல் அது சாத்தியப்படுமா? அதற்க்கு பலர் தயராக இல்லை. அத்தகைய நிலை நமது பெருந்தோல்விக்கு வழி வகுத்த பிழைகளை மகிமைப் படுத்தி மீண்டும் வெற்றி வாய்ப்புகளை உருவாகவிடாமல் அழிக்கவே காலாகும். மாவீரர்களை மகிமைப் படுத்துவது வெற்றியின் மார்க்கம். நம் வரலாற்றின் தவறுகளை மகிமைப்படுத்துவது தோல்வியின் மார்க்கம்.

எங்கள் பலம் குறைய குறைய நமது இராசதந்திரத்தின் தெளிவு அதிகரிக்கவேண்டும். இந்தியாவை எங்களுக்குத் தேவை என்பதைவிட இந்தியாவுக்குத்தான் எங்களைத் தேவை என்கிற கருத்து 1985களின்பின்னர் மேலோங்கி இருந்தபோதே நான் அதனை எதிர்த்தேன்

1986ல் .விடுதலைப் புலிகள் ரெலோ மோதலின்போது அந்தக் கருத்து இந்தியாவுக்கெதிரான மோதல் பிரசாரமாக மாறியது. பின்னர் இந்தியாவின் நிலைபாடுகளில் அந்த பிரசாரங்கள் முக்கிய பங்களித்தது. நான் அப்பவே அதை எதிர்த்தேன். நான் விவாதித்த நிதர்சனம் பாரதி, திருநாவு, ராஜன்நாயகம் கடாபி -கனடா போன்ற பலர் இன்றும் உயிரோடு இருக்கிறார்கள்.நமது நிலைபாடுகளின் விபரீதங்களும் நம்மை மோதலிலும் அழிவிலும் கொண்டுவந்து விட்டது. நான் இந்தியாவை விமர்சித்தேன் ஆனால் இந்தியாவுடனான மோதல் போக்கை எதிர்த்தேன்.

இன்று 2011ல் து கால் நூற்றாண்டுகளின் பின்னர் பெரும்தோல்விக்குப் பின் மேற்கு நாடுகளோடு அதே தொனியில் பேசும்போது அச்சமாக இருக்கு. இது மேற்க்கு நாடுகளில் உள்ள எங்கள் இளைய தலைமுறை விடுதலை ஆதரவாளர்களை மேற்க்கு நாட்டு மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைக்குத் தூண்டி எங்களது விடுதலைக்கான மிகுதி வாய்ப்புகலையும் நாசமாக்கும் கருத்து. என் கருத்தை பதிவுசெய்துவிட்டு அகல்கிறேன்.

யாழ்கள நண்பர்கள் ஒதுங்கி இருக்க வேண்டாம். மேற்படி கட்டுரையை அல்லது என்னுடைய விமர்சனம் எது சரியாகப் படுகுதோ அதற்க்கு உங்கள் பச்சைகளைக் குத்துங்கள்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்க சக்திகள் எப்போதுமே இரண்டு வகையான போர் செய்வார்கள்.

1. நேரடியாக தங்கள் இராணுவ வல்லாதிக்கத்தை இனம் காட்டும் போர்.

2. தோல்வியைக் காட்டி... தோல்வியில் இருந்து நீ மீளெளவே முடியாது.. எங்களுக்கு ஏற்ற.. மாற்று வழியைத் தேடு.. இன்றேல்.. மீண்டும் உனக்கு இராணுவ பலத்தின் மூலம் தீர்வு தரப்படும் என்பது..!

மேற்குலகம்.. சரி இந்தியா சரி எல்லாமே இந்த ஆதிக்க சக்திகளின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு உட்பட்டவை தான்.

விடுதலைப்புலிகள் அமைப்பு 35 ஆண்டு காலம் போராட முடிந்தது என்றால்.. அதற்குக் காரணம்.. அந்த அமைப்பு எடுத்த சில நடவடிக்கைகள் தான். புலிகள் அமைப்பை அழிக்க.. ஏன் தமிழர் தனிநாட்டுக் கோரிக்கையுடனான விடுதலைப் போராட்டத்தை அடக்க.. அமெரிக்கா ரெனோல்ட் ரேகன் காலத்தில் இருந்து இன்று வரை சிங்களவர்களுக்கு கொள்கை மாற்றமின்றி உதவி வருகிறது. 1981 இல் இருந்து தமிழர்களின் போராட்டத்தை அது பயங்கரவாதமாக உச்சரிக்காத தருணங்களே இல்லை..!

ஆனால் இந்தியாவின் போக்கு சற்று மாறுதலானது. ஆரம்பத்தில் அமெரிக்க எதிர்ப்பு நாடாக இருந்த இந்தியா அமெரிக்க ஆதரவு ஜே ஆர் அரசை தனக்குப் பணிவிக்க எம்மை விடுதலைப் போராளிகள் ஆக்கியது. சோவியத் சிதைவின் பின் அமெரிக்க ஆதரவு இந்தியாவான பின்.. அமெரிக்காவின் அதே உச்சரிப்பை அதுவும் எம்மீது திணிக்க ஆரம்பித்துவிட்டது.

பிரச்சனை விடுதலைப்புலிகள் அல்ல. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய நியாயத்தை மேற்குலகமும் சரி.. இந்தியாவும் சரி.. புரிந்து கொள்ளாத மாதிரி நடித்துக் கொண்டு.. சிறீலங்காவின் கேந்திர முக்கியஸ்த்தை யார் தக்க வைத்துக் கொள்வது என்ற போட்டியில் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதுதான்.

நாங்கள் தமிழர்கள்.. இதனை புரிந்து கொள்ளாது.. மேற்குலகில் இருந்து கத்தினால் என்ன.. இந்தியாவோடு நெருங்கி நின்று கத்தினால் என்ன எம்மை யாரும் ஏறெடுத்தும் பார்க்கப் போறதில்லை.

எமக்குள்ள ஒரே தேர்வு.. இவர்களுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடிய இன்னொரு சக்தியோடு நாம் கூட்டு வைப்பதும்... அந்தச் சக்தியுடன் இவர்களை கேந்திர முக்கியஸ்துவத்திற்காக போட்டி போட வைப்பதுமே..! அப்படி செய்வதுனூடே.. இவர்களை நமது வழியில் சிந்திக்க செய்ய முடியும். இவர்கள் வழிக்கு நாங்கள் போனால் எங்களுக்கு இருப்பதும் கிடைக்காமல் போகவே அதிக சந்தர்ப்பம் உண்டு.

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்பதாகக் காட்டி அழித்தார்களே அன்றி.. இவர்களின் புலி அழிப்பிற்கான உண்மை நோக்கம்.. சிறீலங்காவின் கேந்திரஸ்தானத்திற்கான போட்டியில் புலிகளின் வளர்ச்சி தமக்கு பாதகமாக அமையக் கூடாது என்ற நோக்கமே அன்றி வேறல்ல..!

நம்மில் சிலர்.. இன்னும்.. ரெலோ சண்டை.. ஈபி சண்டை.. தான் உதுக்கெல்லாம் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கினம்.. அப்படி எதுவும் அங்கில்லை.

உந்தச் சண்டைகள் எல்லாம் நடக்க முதல் புளொட் எடுத்த ஒரு ஆயுத கடத்தல் முயற்சியை இந்தியா முறியடித்து அன்றிருந்த எமக்கு சாதகமான சூழலை.. தனக்கு பாதமான சூழலாகக் கருதி இந்தியா செயற்பட்டுக் கொண்டது.

அமெரிக்கா.. 1981 இல் இருந்து இன்று வரை.. சிறீலங்கா படைகளை பலப்படுத்தும் எல்லா நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. அன்றும் பெல் கெலிகளை அன்பளிப்பாக வழங்கியது.. இன்றும் தனது நல்லெண்ண வெளிப்பாடாக அதையே வழங்குகிறது. இத்தனை ஆண்டுகள்.. இத்தனை அழிவுகளின் பின்னும் அமெரிக்கா தன் பிராந்தியக் கொள்கையை மாற்றவில்லை. இந்த நிலையில்.. அதனிடம் நாம் மண்டியிட்டு எதைப் பெற போகிறோம்.

எம்மிடம் சரியான இராஜதந்திர அரசியல் தலைமைகள் இல்லாமையே இந்த நிலைக்குக் காரணம். ஒன்றில் உணர்ச்சிப் பெருக்குள்ள தலைமைகள்.. அல்லது.. கிடைச்சதோடு திருப்திப்பட்டு அடிமையாய் கிட எனும் தலைமைகள். இந்த இரண்டைத் தவிர.. எமது இனத்திற்கு சரியான தலைமைகள் இல்லை.

இன்றைய நிலையில் தமிழர்களுக்கு அவசியமான ஒன்று அவர்களை பிரதிநிதிப்படுத்தக் கூடிய பலமான சுயாதீன அரசியல் கட்டமைப்பு ஒன்றே. அந்தக் கட்டமைப்பு இராஜதந்திர வழிகளை சரியாக வகுத்துச் செயற்படும் போது.. உலகத் தமிழ் மக்களின் ஒற்றுமை ஒத்துழைப்பு அதற்கு கிடைக்கின்ற போது.. நிச்சயம் அந்த அமைப்பு வலுவாக செல்வாக்குச் செய்ய முடியும். அது எம்மை சரியான திசை நோக்கிய நகர்வுகளுக்கு இட்டுச் சென்றால் அன்றி.. கிடைப்பதை வைச்சு.. சாவு வரை வாழ்தல் என்பதை தவிர தமிழர்களுக்கு வேறு தெரிவு இருக்க வாய்ப்பில்லாத சூழலையே ஆதிக்க சக்திகள் இனங்காட்டி நிற்பர். இதைத்தான் மேற்குலகம் என்றாலும் சரி இந்தியா என்றாலும் சரி செய்யும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் சரியான இராஜதந்திர அரசியல் தலைமைகள் இல்லாமையே இந்த நிலைக்குக் காரணம். ஒன்றில் உணர்ச்சிப் பெருக்குள்ள தலைமைகள்.. அல்லது.. கிடைச்சதோடு திருப்திப்பட்டு அடிமையாய் கிட எனும் தலைமைகள். இந்த இரண்டைத் தவிர.. எமது இனத்திற்கு சரியான தலைமைகள் இல்லை.

இன்றைய நிலையில் தமிழர்களுக்கு அவசியமான ஒன்று அவர்களை பிரதிநிதிப்படுத்தக் கூடிய பலமான சுயாதீன அரசியல் கட்டமைப்பு ஒன்றே. அந்தக் கட்டமைப்பு இராஜதந்திர வழிகளை சரியாக வகுத்துச் செயற்படும் போது.. உலகத் தமிழ் மக்களின் ஒற்றுமை ஒத்துழைப்பு அதற்கு கிடைக்கின்ற போது.. நிச்சயம் அந்த அமைப்பு வலுவாக செல்வாக்குச் செய்ய முடியும். அது எம்மை சரியாக திசை நோக்கிய நகர்வுகளுக்கு இட்டுச் சென்றால் அன்றி.. கிடைப்பதை வைச்சு.. சாவு வரை வாழ்தல் என்பதை தவிர தமிழர்களுக்கு வேறு தெரிவு இருக்க வாய்ப்பில்லாத சூழலையே

கட்டுரை தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் நெடுக்கால போவானின் மேற்படி கருத்து பொதுவாக ஏற்றுகொள்ளக்கூடியதாகும். மேற்படி அடிப்படையில் நாமெல்லாம் சேர்ந்து சிந்திக்க முடியும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களை மகிமைப் படுத்துவது வெற்றியின் மார்க்கம். நம் வரலாற்றின் தவறுகளை மகிமைப்படுத்துவது தோல்வியின் மார்க்கம்.

கருத்து பகிர்வுக்கு நன்றி Poet

என்னை பொறுத்த வரைக்கும் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் செல்வதே எமது இலக்கை அடைய சிறந்த வழி. எந்த நாடும் தனித்து நின்று உருவானதாக அண்மைக்கால வரலாறு இல்லை. இஸ்ரேல், சிங்கப்பூர், கிழக்கு திமோர் இன்னும் பல உதாரணங்கள் உண்டு. நம்மில் சிலர் இந்தியா எங்களுக்கு உதவும் என்று இப்பவும் நம்புகிறார்கள். எனது அறிவுக்கு எட்டியவரை இதுவரை ராஜ தந்திர முறையில் இந்தியா எந்த நாட்டையும் பெற்று கொடுக்கவில்லை. அதற்கு அந்த சக்தி இருகிறதா என்பது இமாலய கேள்வி. மற்றும் இந்தியா தனது நலனுக்காக எம்மை அழித்தது இதை 8 கோடிக்கு மேல் தமிழர் இருந்தும் எமது அழிவை தடுக்க முடியவில்லை.

இந்த தவறை நாம் திரும்பவும் விடக்கூடாது. மேற்குலகின் பலம், ஆதரவு எமக்கு தேவை. அவை சில நேரம் இஸ்ரேலை போலை எம்மையும் செல்ல பிள்ளையாக பாவிக்க கூடும். இந்த நிலையில் எமக்கு அதிக பட்ச தீர்வு கிடைக்க சாத்தியம் வரலாம். இவற்றுக்கு எமக்கு தேவை தீவிர அரசியல். சர்வதேச மயப்பட்டுள்ள எமது பிரச்சனையை அரசியல் முன்னெடுப்புகள் மூலம் மேலும் நகர்த்த வேண்டும். தற்பொழுது எதிர் தரப்பு மேசையில் இருக்கும் அணிசேரா நாடுகளை நம் பக்க ஆதரவு சக்திகளாக மாற்ற வேண்டும். இந்த நிலையில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ நமது அணிக்கு வரலாம்.

"மாவீரர்களை மகிமைப் படுத்துவது வெற்றியின் மார்க்கம். நம் வரலாற்றின் தவறுகளை திருத்துவது எமது அரசியல் தேவை ."

இது எனது கருத்து. எனது அனுபவ அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

"மாவீரர்களை மகிமைப் படுத்துவது வெற்றியின் மார்க்கம். நம் வரலாற்றின் தவறுகளை திருத்துவது எமது அரசியல் தேவை .".

நன்றி அகத்தியர். உங்கள் திருத்ததுடன் மேற்படி கூற்று எ மேம்பட்டுள்ளது. எமது எதிர்கால அரசியலுக்குத் தேவையான தாரக மந்திரமாக மேம்பட்டுவிட்டது. யாழ் நேயர்களும் ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  • தொடங்கியவர்

மகிந்தா தொடர்ந்தும் பலமாக இருக்கும்பொழுதே தமிழர் பக்கம் மீது மேற்குலக காற்று வீசும்

மேற்குலக அரசியல் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேகமாக பொருளாதார ரீதியில் வளரும் ஆசியாவை நோக்கி நகருகின்றது. இங்கே அதிவேகமாக வளரும் சீனாவும், இந்தியாவும் அத்துடன் ஜப்பானும், ஒரு பகுதி உருசியாவும் உள்ளன. அதைவிட மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பொருளாதார வளர்ச்சிகாணும்/கண்ட நாடுகள் உள்ளன.

கட்டுரையில் கூறப்பட்டது போன்று சூடானிலும், இலிபியாவிலும் இருந்து வெற்றிகரமாக சீனா அகற்றப்பட்டுள்ளது. இன்று சீனாவின் நீண்டகால நண்பனான பர்மாவில் அமெரிக்கா கால் பதித்துள்ளது. வட கொரியா சீனாவின் நெருங்கிய நண்பனாக உள்ளது. தென் சீன கடலில், வியட்நாமில் இந்தியா காலை வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அமெரிக்கா படைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.

அதேவேளை அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளில் சீனா காலை பதித்துள்ளது: பாகிஸ்தான் , இலங்கை.

ஒரு கையால் மகிந்த அரசுடன் சில இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்தாலும் மறுபக்கத்தில் சீனாவுடன் இலங்கை நெருக்கமாக செல்வதை மேற்குலகம் விரும்பவில்லை. சிங்கள எதிர்க்கட்சியும் பலமாக இல்லை, கடந்த வாரமும் ஒருவர் அரசு கட்சிக்கு தாவினார். கூட்டமைப்பையும் அமெரிக்கா உட்பட பல மேலைத்தேய நாடுகளுக்கு அழைத்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.