Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்பலகைகள் (ஈரானியத் திரைப்படம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பலகைகள் (ஈரானியத் திரைப்படம்)

bl1.jpg

ஈரான்-ஈராக் நாடுகளுக்கிடையே போர் நடந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில், உணவின்றி, உழைக்க வேலையின்றி, வீடுவாசல் இழந்து, உயிர்பயத்தோடு இருநாட்டு மக்களும் பெரும்பாலும் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்த அவலம்தான் அரங்கேறியது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் நம் கண்களை கலங்கடிக்கிற ஆயிரமாயிரம் அனுபவங்கள் கதைகளாக கொட்டிக்கிடக்கின்றன.

கதைச்சுருக்கம்:

"கரும்பலகைகள்" என்கிற இத்திரைப்படம், 'பாடம் சொல்லிக்கொடுக்க எங்கேயாவது மாணவர்கள் கிடைக்கமாட்டார்களா?' என்று ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிற இரண்டு ஈரான் ஆசிரியர்களின் பயண அனுபவங்களைப்பற்றி பேசுகிற படம். இரு வேறு காரணங்களுக்காக ஈரானிலிருந்து ஈராக்கிற்கு நடைபயணமாக சென்று கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தோடு இணைந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க முயல்கிறார்கள் அவ்விரண்டு ஆசிரியர்களும். எத்திசையிலிருந்தும் குண்டுகள் வந்து தாக்கலாம், எவ்விடத்திலிருந்தும் புதைக்கபட்டிருக்கிற கண்ணிவெடிகள் வெடிக்கலாம், என்னும் உயிருக்கு உத்திரவாதமில்லா இப்பயணத்தில், அவர்களுக்கு ஏற்படுகிற அனுபவங்கள்தான் இத்திரைப்படத்தின் திரைக்கதை.

இத்திரைப்படத்தை இயக்கியது சமிரா மக்மல்பப் என்கிற 20 வயதேயான இளம் ஈரானிய பெண் இயக்குனர். இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதைப்பெற்றது.

திரைக்கதை:

முதுகில் கரும்பலகையினை சுமந்துபடி பேசிக்கொண்டே மானவர்களைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஈரானைச்சேர்ந்த ஆசிரியர்கள். சிறிய புல்பூண்டுகூட முளைக்காத கடும் வறட்சியான மலைப்பாதையில்தான் அவர்கள் பயணிக்கிறார்கள். அக்கூட்டத்திலிருக்கும் ரேபோர் மற்றும் சையது ஆகிய இரண்டு ஆசிரியர்கள் பேசிக்கொள்கிறார்கள்,

ரேபோர் : நீ நேத்து எங்க போயிருந்த?

சையது : டேசல் என்கிற ஊருக்கு மாணவர்களைத்தேடித்தான் போயிருந்தேன். ஆனா யாருமே கிடைக்கல. மூணு நாள் அங்கேயே இருந்தும் பாத்தேன். :-(

ரேபோர் : ஒருத்தர் கூடவா கிடைக்கல?

சையது : இல்ல.

சையது : எங்கப்பா அப்பவே சொன்னாரு. நாந்தான் அவர் பேச்சை கேக்கவே கேக்கல. அதுக்கு இப்ப வருத்தப்படறேன். பாரு, மூணு நாள் சுற்றிக்கூட மாணவர்கள் யாருமே கிடைக்கிறதில்ல. எங்கப்பா பேச்சை அப்பவே கேட்டிருக்கலாம்.

ரேபோர் : சரி உங்கப்பா உன்ன என்னவாக சொன்னாரு?

சையது : ஆடு மேய்க்க சொன்னாரு. நாந்தான் செய்யாம போயிட்டேன்

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) பறக்கிற சத்தம் கேட்கிறது. ஒட்டுமொத்த ஆசிரியர்க்கூட்டமும் சற்று தொலைவில் மறைவான இடத்திற்குச்சென்று, தத்தமது கரும்பலகைகளை தங்கள் மீது வைத்துக்கொண்டு ஒளிந்துகொள்கிறார்கள். சிறிதுநேரம் கழித்து உலங்கூர்தியின் சத்தம் குறைந்து மறைகிறது. அது பறந்துகொண்டிருந்த திசையில் கைகளும் பருந்துகளும் கூட்டமாக சத்தமிட்டுக்கொண்டிருந்தன. இப்போது ஆசிரியர்கள் தங்களது கரும்பலகைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்கிறார்கள்.

மற்றொரு ஆசிரியர் : உடல்நிலை சரியில்லாத என்னோட சின்ன குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவும் வசதியில்ல. நானும் ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன். படிக்கிறதுக்குதான் பசங்க யாருமே கிடைக்கமாட்றாங்க. இப்படியே சுற்றி சுற்றி, நாம கடைசில நம்ம ஊருக்குகூட திரும்பி போக மாட்டோமுன்னு நினைக்கிறேன்."

இப்போது சையது ஒரு திசையிலும், ரேபோர் மற்றொரு திசையிலும், மீதமுள்ள ஆசிரியர்கள் வேறொரு திசையிலும் பிரிந்து செல்கிறார்கள் மாணவர்களைத்தேடி...

ரேபோர்....

ரேபோர் சென்ற திசையில், கூட்டமாக சிறுவர்கள் தங்கள் மீது பெரிய சுமைகளை எடுத்துக்கொண்டு நடந்துகொண்டிருப்பதைக்காண்கிறான். அவர்கள் ஈரானிலிருந்து கள்ளத்தனமாக பொருட்களை ஈராக்கிற்கு எடுத்துச்செல்லும் பொதிவேலை செய்வோர் என்பதனை அறிகிறான். இத்தனை சிறுவர்களைப்பார்த்ததும் ரேபோருக்கு எல்லைகடந்த மகிழ்ச்சி.

ரேபோர் : நீங்கல்லாம் எங்க போறீங்க? இங்க ஏதாவது பள்ளி இருக்கா? யாராவது ஆசிரியர்கள் இருக்காங்களா?

சிறுவர்கள் : எங்களுக்கு வழியை விடுங்க. ஏற்கனவே பாரம் தாங்க முடியல. நீங்க வேற எங்களை நிக்க வெச்சி கேள்வி கேக்குறீங்க.

ரேபோருக்கு சரியான பதில் கிடைக்காவிட்டாலும், அச்சிறுவர்களுடன் இணைந்து பயணத்தைத் தொடர்கிறான்.

ரேபோர் : நான் ஒரு ஆசிரியர். உங்களுக்கெல்லாம் எழுத படிக்க சொல்லித்தரத்தான் வந்திருக்கேன். அதுக்காக ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கேன். இவ்வளவு நாளா உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். உங்களுக்கெல்லாம் கூட்டல், பெருக்கல் எல்லாம் சொல்லித்தரேன். எனக்கு அதிகமா காசெல்லாம் வேணாம். உண்பதற்கு ஏதாவது கொடுத்தீங்கன்னா அதுவே போதும்.

ஒரு சிறுவன் : நாங்களே திருட்டுத்தனமா பொருளை ஈரானுக்கும் ஈராக்குக்கும் கொண்டு போற வேலையை செய்யுறோம். எங்களுக்கே கூலி குறைவுதான். எங்களுக்கு நிக்கக்கூட நேரமில்ல.

ரேபோர் : தம்பி! நீ படிக்க கற்றுக்கொண்டால், உன்னால புத்தகமெல்லாம் வாசிக்க முடியும். உலக நிகழ்வுகளை எல்லாம் நீங்க தெரிஞ்சிக்க முடியும். கணக்கெல்லாம் நீங்களே போடலாம். எவ்ளோ நல்லா இருக்கும்ல?

சிறுவன் : வரவு செலவு கணக்கு போடறதெல்லாம் எங்க மொதலாளிக்கு வேணும்னா உதவியா இருக்கலாம். எங்களுக்கு இல்ல. எங்களுக்கு நடக்கத்தேரிந்தாலே போதும். அதேமாதிரி, ஒரு இடத்துல உக்காந்து புத்தகம் படிக்கிற அளவுக்கெல்லாம் எங்க நிலைமை நல்லாயில்ல.

இப்படியே அச்சிறுவர்களுடன் பேசிக்கொண்டே நடக்கிறான் ரேபோர். அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள்.

அப்போது ஒவ்வொரு சிறுவனிடமாக பேச்சுக்கொடுக்கிறான் ரேபோர். ஆனால் யாரும் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

ஒரு சிறுவனிடம்,

ரேபோர் :
நீ எழுத படிக்கக் கற்றுக்கொண்டால், புத்தகமெல்லாம் படிக்கலாம். புத்தகத்தில் நிறைய கதைகள் இருக்கும்.

சிறுவன் :
கதைகளா? எங்ககிட்டயே நூற்றுக்கணக்கான கதைகள் இருக்கு.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு சிறுவன், ரேபோரை தன்னருகில் வரச்சொல்லி தன்னுடைய பெயரும் ரேபோர் என்றும் தனக்கு எழுதப்படிக்க கற்றுக்கொள்வதில் ஆர்வமிருக்கிறதென்றும் சொல்கிறான். தன்னுடைய சட்டைப்பையிலிருந்து ரொட்டித்துண்டொன்றினை எடுத்து அதில் பாதியை ரேபோருக்கு கொடுத்து மீதியை உண்கிறான் சிறுவன். ரொட்டித்துண்டினை பார்த்ததும் ரேபோருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தன்னுடைய பெயரை எழுத சொல்லித்தந்தாலே போதுமென்கிறான் சிறுவன்.

ஆசிரியர் ரேபோர் : "R ..... e ..... e .... b ..... o .... r .... "

சிறுவன் ரேபோர் : " "R ..... e ..... e .... b ..... o .... r .... "

இதற்கிடையே, "ஓடுங்க... ஓடுங்க..." என்கிற எச்சரிக்கை குரல்கேட்க எல்லா சிறுவர்களும் வேறொரு திசைநோக்கி ஓடுகிறார்கள். ரேபோரும் அவர்களைப்பின் தொடர்கிறான். கரடுமுரடான மலைப்பாதையில் உயிர்பயத்தில் ஓடியதால், ஒரு சிறுவன் தடுமாறி கீழே விழுகிறான். அவனுக்கு காலில் பலத்த அடியுடன் எழும்பும் முறிந்துவிடுகிறது.

ரேபோர் தன்னுடைய கரும்பலகையினை இரண்டு துண்டுகளாக வெட்டி உடைத்து, அதில் ஒரு துண்டினால் காலுடைந்த அச்சிறுவனுக்கு கட்டிவிடுகிறான்.

ஒரு சிறுவன், அடிபட்ட சிறுவனை தன் தோளில் தூக்கி சுமந்துகொண்டு நடக்க, எல்லோரும் பயணத்தை மீண்டும் துவக்குகிறார்கள்.

ஆசிரியர் ரேபோர் : "R ..... e ..... e .... b ..... o .... r .... "

சிறுவன் ரேபோர் : "R ..... e ..... e .... b ..... o .... r .... "

ஆசிரிய ரேபோர் : "R என்கிற எழுத்தை கொஞ்சம் நீட்டி சொல்லணும்... 'ரே' என்று சொல்லணும்"

இப்போதும் ரேபோர் என்கிற பெயருடைய சிறுவனைத்தவிர வேறுயாரும் பாடம் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஒருவனாவது கிடைத்தானே என்கிற மகிழ்ச்சியில், அவனுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டே செல்கிறான் ரேபோர்.

ஓரிடத்தில் ஓய்வாக அமர்ந்துகொண்டிருக்கையில், சிறுவன் அக்கரும்பலகையில் தட்டுதடுமாறி தன்னுடைய பெயரினை எழுதிமுடிக்கிறான். அளவு கடந்த மகிழ்ச்சியுடன், ரேபோர் ஆசிரியரை அழைத்துச்சொல்கிறான். அவர் அக்கரும்பலகையினை திரும்பிப்பார்க்கிற வேளையில், எங்கிருந்தோ வந்த குண்டு அச்சிறுவனின் உயிரைப்பதம்பார்க்கிறது. அங்கேயே செத்துமடிகிறான். மீதமுள்ள சிறுவர்களும் ரேபோரும் ஆளுக்கொருபுறம் ஓடுகிறார்கள். ஆனாலும் மனிதாபிமானத்தையெல்லாம் கற்றறியாத பேராதிக்கம்கொண்ட குண்டுகளிலிருந்து அவர்களால் தப்பமுடியவில்லை. ரேபோரும் ஒரு குண்டுக்கு இரையாகி கீழே விழுகிறான். அவனுடைய ஒரே சொத்தான கரும்பலகை அவன்மீது விழுந்து அவனது உடலை மூடுகிறது...

சையது....

வழிநெடுக அவன் சந்திக்கிற ஒன்றிரண்டு நபர்களிடமும்,

"இங்கே ஏதாவது பள்ளி இருக்கிறதா?படிக்க யாராவது இருக்காங்களா?"

என்று கேட்டுக்கொண்டே செல்கிறான் சையது.

ஒரு சிறிய கிராமத்தை பார்க்கிறான். ஆனால் அங்கே வீடுகள் மட்டுமிருக்கிறது, யாரும் வெளியில் நடமாடவில்லை. எந்த வீட்டினுள்ளேயாவது யாரேனும் இருக்கமாட்டார்களா என்கிற ஆவலில், உரக்க சத்தம்போட்டுக்கொண்டே போகிறான்,

"யாராவது இருக்கீங்களா? கதவைத்திறங்க...

நான் எழுத படிக்க சொல்லித்தரேன்...

பெருக்கல் வாய்ப்பாடு சொல்லித்தரேன்...

ஓர் ரெண்டு ரெண்டு... ஈர் ரெண்டு நாலு...

யாராவது வாங்க.."

தொலைவில் ஒரு பெண்ணைப்பார்த்ததும், மேலும் உரக்கக்கத்துகிறான்,

"நான் ரொம்ப தூரம் நடந்து வந்துருக்கேன்...

உங்க குழந்தைகளுக்கெல்லாம் எழுத படிக்க சொல்லித்தருவதற்குதான் வந்துருக்கேன்..."

ஆனால் அவனது குரலுக்கு பலனில்லை. ஆட்கள் யாருமில்லாமையால், அக்கிராமத்தை கடந்து மேலும் நடக்கத்துவங்குகிறான்.

இப்போது நூற்றுக்கணக்கான வயது முதிர்ந்தோர் கூட்டமாக மூட்டை முடிச்சுகளுடன் ஈரானிலிருந்து ஈராக்கிலிருக்கும் அலப்ஜா என்னும் நகரை நோக்கி நடந்துகொண்டிருப்பதைப்பார்க்கிறான். இம்முதியவர்கள் அனைவரும் ஈராக்கின் அலப்ஜா நகரில் பிறந்து வளர்ந்தவர்கள். ஈராக்கில் குர்து இன மக்களை ஒடுக்கும் ஈராக் அரசைக்கண்டு பயந்து, பல ஆண்டுகளாக ஈரானில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

[

ஈராக்கில் குர்து இன மக்களின் போராட்டத்தை அடக்க, அமெரிக்க அரசின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இரசாயன குண்டுகளை ஈராக்கிய அரசு அலப்ஜா என்னும் நகரில் வீசி 5000 த்திற்கும் மேற்பட்ட மக்களை ஒட்டுமொத்தமாக கொன்று குவித்தது. மேலும் 10000 த்திற்கும் மேற்பட்டும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர்.]

இப்போது, அவர்கள் பிறந்து வளர்ந்த நகரம் இரசாயன குண்டு தாக்குதலினால் அழிந்துகிடக்கிற செய்தி கேட்டு, அவ்வூருக்கு நடைபயணமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.

சையது அக்கூட்டத்தில் நுழைந்து, ஒவ்வொருவரிடமாக சென்று,

"உங்களுக்கு எழுத படிக்கத்தெரியுமா? நான் சொல்லித்தரட்டுமா? எனக்கு உண்பதற்கு மட்டும் ஏதாவது கொடுங்க போதும்.."

என்று கெஞ்சி கேட்கிறான்.

ஒரு முதியவரிடம்,

சையது : "வேற ஏதாவது வேலை இருந்தாலும் பரவாயில்ல. நான் செய்யிறேன்"

முதியவர் : "நாங்க ஈராக் போகணும். வயசாயிட்டதால நான் வழி தவறி வந்துட்டோம். எங்களை ஈரான் எல்லை தாண்டி கொண்டு போயி ஈராக்கில் விடமுடியுமா?" என்று கேட்கிறார்

அதற்கு பிரதிபலனாக ஏதாவது உண்பதற்கு தாருங்கள் என்று கேட்கிறான். அவர்களிடம் உணவாக எதுவுமே இல்லையென்பதால், 40 வால்னட்டிற்கு (Wallnut - ஒரு வகையான பருப்பு) அவர்களை ஈராக்கின் எல்லைத்துவக்கம் வரை அழைத்துச்செல்வதாக ஒப்புக்கொண்டு அவர்களோடு பயணிக்கிறான்.

அக்கூட்டத்தில் ஒரு முதியவர் உயிருக்குப்போராடிக்கொண்டிருப்பதால் அவரால் மேலும் நடக்க இயலவில்லை.

வேறொரு முதியவர் : "உன்னுடைய கரும்பலையில் வைத்து நடக்கமுடியாத இவரை தூக்கிட்டுப்போக உதவி செய்தால், உனக்கு மேலும் 5 வால்நட் தருகிறோம்"

என்கிறார். அதற்கும் சம்மதித்து கரும்பலகையில் அம்முதியவரை வைத்து தூக்கிக்கொண்டே போகிறான்.

உடல்நிலை சரியில்லாத அம்முதியவர், கைக்குழந்தையுடன் விதவையாக இருக்கும் தன்மகள் அலாலுக்கு ஒரு திருமணம் செய்துவிட்டால் மகிழ்ச்சியாக இறப்பார் என்று கூட்டத்திலிருக்கும் ஒருவர் சைய்யதிடம் சொல்லிக்கொண்டே வருகிறார். சையது, தானே அலாலை மணமுடிப்பதாகவும் அதற்காக தன்னிடம் இருக்கிற ஒரே சொத்தான கரும்பலகையையே வரதட்சணையாக அப்பெண்ணுக்கு கொடுக்கத்தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் சொல்கிறான். போகிற வழியிலேயே அவர்களது திருமணம் நடக்கிறது.

புதுமணத்தம்பதிகள் தனிமையில் இருக்கட்டுமென்று மறைவான ஓரிடத்தில் அவர்களை விட்டுவிட்டு, அலாலின் குழந்தையையும் அழைத்துச்சென்று முதியவர்கள் அனைவரும் சற்று தொலைவில் ஓய்வெடுக்கிறார்கள். குழந்தையுடன் முதியவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கேமரா மெதுவாக சையதும் அவனது புதுமனைவியும் இருக்கிற மறைவிடத்திற்கு மெல்ல நுழைகிறது. அங்கே சையது தன்னுடைய கரும்பலகையினை எடுத்துவைத்துக்கொண்டு அவளது மனைவிக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

சையது : "'நான்....... உன்னை...... காதலிக்கிறேன்......' சொல்லு பாப்போம்..."

சையது : "என்னைய பாரு... என் கைய பாரு..."

என்று சொல்லிக்கொண்டே தனது வலது கையை தூக்கி 'நான்'... இடது கையை தூக்கி 'உன்னை'.... மீண்டும் வலது கையை தூக்கி 'காதலிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு அலாலையும் சொல்லச்சொல்கிறான்.

ஆனால் அவள் அவனது முகத்தைக்கூட பார்க்காமல், தனது கைகளால் முகத்தினை மூடிக்கொண்டு வேறொருபுறம் திரும்பியே இருக்கிறாள்.

சையது : "நீ பதிலே சொல்லாதனால, உனக்கு முட்டை மார்க்குதான் தருவேன்"

சையது : "சரி நீ ரொம்ப நல்ல பொண்ணுல்ல... அதனால உனக்கு 18 மார்க்கு போடறேன். இப்பவாவது சொல்லேன்... "

சையது : "நீ ஏன் படிக்க மறுக்கிற? இந்த சுற்றவட்டாரத்திலேயே நான் ஒரு நல்ல டீச்சர் தெரியுமா? என்கிட்டே படிச்சவங்கள்ளாம் 20 க்கு 20 மார்க்கு வாங்குவாங்க தெரியுமா?"

சையது : "உனக்கு முட்ட மார்க்குதான் போடணும். ஆனா நீ நல்ல பொண்ணாச்சே.. அதனால உனக்கு திரும்பவும் 18 மார்க்கு போடுறேன்..."

அலால் பதிலேதும் சொல்லாமலும், அவனது முகத்தைப் பார்க்காமலும் திரும்பியே இருக்கிறாள். அப்போது அவளது குழந்தை மெல்ல மெல்ல நடந்து அவர்கள் இருக்கும் மறைவிடத்திற்கு வந்துவிடுகிறது. அவள் ஓடிச்சென்று அவளது குழந்தையை தூக்கிக்கொள்கிறாள்.

அலால் சில துணிகளைத்துவைத்து சையதின் கரும்பலகையின் மீது காயப்போடுகிறாள். அந்த ஈரத்துணியிலிருக்கும் தண்ணீர் மெல்ல இறங்கி, அவன் எழுதி வைத்திருந்த "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்கிற எழுத்துகளை நனைத்து அழித்துக்கொண்டிருந்தன...

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் பாதையில், அவ்வப்போது ஏதாவதொரு திசையிலிருந்து வரும் வெடிகுண்டு சத்தங்களையும் கேட்டுக்கொண்டே தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.

சையது அக்கூட்டத்தினை வழிநடத்திக்கொண்டே செல்கிறான். அவனால் அமைதியாக நடக்கமுடியவில்லை. அதனால், அலால் அவனை கவனிக்கிறாளா இல்லையா என்பதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டே நடக்கிறான்.

"ரெண்டு ரெண்டு நாலு... பதில் சொல்லு... "

"உடனே உடனே சொல்லிபழகினாதான் சீக்கிரமா படிக்கமுடியும்..."

"ரெண்டு மூணு ஆறு.."

"நாலு ரெண்டு எட்டு..."

"அஞ்சு ரெண்டு பத்து..."

"கணக்கு பிடிக்கலன்னா வேற ஏதாவது சொல்லிதரட்டுமா? சரி உனக்கு ஒரு 8 மார்க்கு போடுறேன்.. வேண்டாம்... 8 மார்க்கு போட்டா, நீ பெயிலாயிருவியே... சரி 10 மார்க்கு போடுறேன்... 'நான் உன்னைக் காதலிக்கிறேன்'னு சொல்லு பாப்போம்..."

"சரி என்ன காதலிக்கலன்னாவது சொல்லேன்... அதுவும் சொல்லமாட்டியா? உனக்கு முட்டை மார்க்கு போடுறேன் பாரு... உன் குழந்தைக்கும் முட்டை மார்க்கு போடுறேன்... உனக்கு சொல்லிகொடுத்ததுக்காக எனக்கும் ஒரு முட்டை மார்க்கு போடறேன்..."

என்று தன்னுடைய கரும்பலகையை எடுத்துக்கொண்டு அவளை விட்டு வேகமாக நடக்கிறான்.

அலால் : "கரும்பலகை"

அலால் : "கரும்பலகை"

என்று சத்தமாக அழைத்துக்கொண்டு சையதின் பின்னாலேயே ஓடுகிறாள் அலால்.

அலால் : "என்னுடைய மனசு ஒரு இரயில்மாதிரி. ஒவ்வொரு ஸ்டேசன்லயும் பலபேரு ஏறி இறங்குறாங்க... அதுல எப்பவுமே எறங்காம இருக்கிறது என் குழந்தைமட்டுந்தான்..."

என்று சொல்லிவிட்டு, அவனது கரும்பலகையில் காயப்போட்டிருந்த தன்னுடைய துணிகளை மட்டும் எடுத்துகொண்டு நடக்கிறாள்.

அவர்கள் எல்லையை நெருங்கிக்கொண்டிருப்பதால், சையது மற்றும் கூட்டத்தினரை நோக்கி குண்டுகள் வீசத்துவங்குகின்றனர் ஈராக் படையினர். மீண்டும் ஈராக்கிலிருந்து இரசாயன குண்டுகள் வீசிவிட்டார்களோ என்கிற அச்சம் அவர்களை ஆட்கொள்ள எல்லோரும் தரையில் படுத்துக்கொள்கிறார்கள். அலால், அவளது குழந்தை மற்றும் அவளது தந்தை ஆகியோரின் மீது தன்னுடைய கரும்பலகையினை வைத்து மறைத்துக்கொண்டே, "கவலைப்படாதீங்க... நான் உங்களை காப்பாற்றுகிறேன்" என்று அவர்களுக்கு தைரியம் கொடுக்கிறான் சையது. முட்டிபோட்டே மெதுமெதுவாக அவர்கள் அனைவரும் நகர்ந்து நகர்ந்து எல்லையினை அடைகிறார்கள்.

சையது : "இதுதான் எல்லை! உங்களுடைய, உங்களது முன்னோர்களுடைய இடம் இதுதான்! உங்க தாய்நாடு இதுதான்!"

ஒரு முதியவர் : "நீ பொய் சொல்ற. நான் அடிச்சி சொல்றேன், இது எங்க சொந்த ஊர் இல்ல."

சையது : "நான் சொல்வது உண்மைதான். இதுதான் உங்க ஊர் அலப்ஜா"

மற்றுமொரு முதியவர் : "அவன் நம்மள ஏமாத்துறான். இது எல்லை இல்ல. நம்மள வேற எங்கயோ கூட்டிட்டு வந்துட்டான். எல்லை எதுன்னு எனக்கு நல்லா தெரியும். இது இல்ல."

மற்றுமொரு முதியவர் : "கரும்பலகை! நீ எங்களை ஏமாத்திட்ட"

சையது : "இல்லங்க. இரசாயன குண்டு போட்டதுனால உங்க ஊர் இப்படி ஆயிரிச்சி."

என்று சொல்லிக்கொண்டே சற்று தொலைவிலிருக்கிற எல்லை வேலியைக்காட்டுகிறான் அவர்களுக்கு. உருத்தெரியாமல் அழிந்துபோயிருக்கிற அவர்களது சொந்த ஊரைப்பார்த்து அழுகிறார்கள். தங்களை சரியாகக் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி தெரிவித்துவிட்டு, சையதிடன் ஒரு பெரியவர் 40 வால்னட்டுகளை கொடுக்கிறார்.

பெரியவர் : "எங்களோட சேர்ந்து எல்லை தாண்டி வர்றியா?"

சையது : "அது என்னால முடியாதே"

பெரியவர் : "ஆனா உன்னோட மனைவியால இந்த நாட்டுல இருக்க முடியாது. அவள் எங்களோட ஈராக் வரப்போறா. நீயும் எங்களோட வந்திடேன்."

சையது : "என்னால அங்க வரமுடியாதே. நான் இந்த நாட்டை சேர்ந்தவன்."

பெரியவர் : "உன் மனைவி உன்னோட ஈரான்ல இருக்க மாட்டாளாம். அவளுக்கு சொந்த ஊருக்கே போகணுமாம். சரி அவளை விவாகரத்து பண்ணிடு."

அலால் மற்றும் சையதின் சம்மதத்துடன் எல்லையருகே நின்றுகொண்டே விவாகரத்து நடக்கிறது. திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்து கரும்பலகையினை எடுத்துக்கொண்டு அலால் எல்லையினைக் கடக்கிறாள். சையது அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவள் தோளின்மீது எடுத்துச்செல்கிற கரும்பலகையின் பின்னே "நான் உன்னை காதலிக்கிறேன்" என்கிற வாசகம் சையது நின்றுகொண்டிருக்கும் ஈரானின் எல்லையினை கடந்து ஈராக்கிற்குள் நுழைந்து மெல்ல மறைகிறது அலாலுடன் சேர்ந்து...

-இ.பா.சிந்தன்

http://www.maattru.c...-post_1835.html

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது போன்ற திரைப்பாடங்களை எல்லா மக்களும் பார்க்கவேணும்

எல்லா நாடுகளிலும் திரையிட வேண்டும்

பகிர்த்து கொண்டமைக்கு நன்றி

ஈரானிய சினிமா மிக சிறந்த படைப்புகளை அழித்திருக்கின்றது.UNIVERSAL STUDIOS இல் வேலை செய்யும் போது பிறமொழி படங்கள் எனும் பிரிவில் பல மொழி படங்கள் வரும் .அதனால் பல படங்கள் பார்க்க சந்தர்பம் கிடைத்தது .நான் வேலை செய்த அந்த பதினேழு வருடத்தில் ஒரே ஒரு இந்தியபடமே அங்கு வந்தது .அதுவும் ஒரு காமசூத்திரா கதையின் பின்னணியில் கோவாவில் எடுத்த படம் .ஒரு சிறு வேடத்தில் நாசர் நடித்திருந்தார் .

BARAN,KANDAKHAR,CHILDREN OF HEAVEN,BORN UNDER LIBRA எல்லாமே அருமையான ஈரானிய படங்கள் .

அதுவும் BARAN அப்கானிஸ்தான் அகதி பெண் ஈரானுக்கு வந்து ஆண் போல் வேடம் போட்டு வேலை எடுத்து அங்கு அவளை அடையாளம் காணும் ஒருவனுடன் உண்டாகும் காதல் கதை . எனக்கு மிக பிடித்த படமொன்று .தமிழில் எடுத்தாலும் பிரித்துக்கொண்டு ஓடும்.யாரும் காசு தந்தால் நான் எடுக்க தயார் .

சீன படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நன்றி சுபேஸ்

நண்பன் ரஞ்சகுமார் (ஈழத்து எழுத்தாளர்) கடந்த சில தினங்களாக தன் Facebook இலும் சில ஈரானிய திரைப்படங்களை யூரியூப் மூலம் பகிர்ந்து கொண்டு இருக்கின்றார். அவற்றை பார்த்து விட்டு தனித்திரிகளில் இணைக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.