Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத் தாய்மொழி தினம்

Featured Replies

இன்று (பிப்.21) சர்வதேசத் தாய்மொழி தினம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது. இளம் பருவத்தில் கல்வி என்பது தாய்மொழியில் இருந்துதான் தொடங்க வேண்டும். கல்வி என்பது வெறும் படிப்பு இல்லை. அது பண்பாடு, கலாசாரம், நாகரிகம், கலைஇலக்கியம், தத்துவம், இசை, நாட்டியம் என்று பலவற்றோடும் தொடர்பு கொண்டது. அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாக அறிந்துகொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கம்.

சர்வதேசத் தாய்மொழி தினம் என்பது ஒரு தாய்மொழிக்கான தினம் இல்லை. ஒவ்வொரு தாய்மொழிக்கான தினம். அதிகமான மக்கள் பேசும் தாய்மொழி, குறைந்த எண்ணிக்கையிலான தாய்மொழி, எழுத்து கொண்ட தாய்மொழி, எழுத்து இல்லாத தாய்மொழி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தாய்மொழி என்ற முறையில் எல்லா மொழிகளும் ஒன்றுதான். உலகத்தில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட தாய்மொழிகள் பேசப்படுகின்றன.

எல்லா மொழிகளும் ஒலிகள்தான். மனிதர்கள் வாய்வழியாக எழுப்பும் நாற்பத்திரண்டு ஒலிகள்தான் லட்சக்கணக்கான வார்த்தைகள் கொண்ட மொழிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஒரே கூட்டமாக வாழ்ந்த மக்கள் நல்வாழ்க்கையைத் தேடிச் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள். அதன் காரணமாகப் புதிய மொழிகள் தோன்றின. மக்கள் புலம் பெயர்ந்ததை ஆராய்ந்த அறிஞர்கள் ஒரே மொழியில் இருந்துதான் எல்லா மொழிகளும் தோன்றின என்கிறார்கள். அதற்கு ஆதாரமாக மனிதர்களின் உறவுச் சொற்கள் இருப்பதை எடுத்துக் காட்டுகிறார்கள். மனிதர்கள் புலம் பெயர்ந்த சரித்திரமும் தாய்மொழிகளின் சரித்திரமும் ஒன்றாகவே இருக்கின்றன.

இந்தியாவில் தாய்மொழிகள் பற்றிய கணக்கெடுப்பு 1881-ம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு முதன்முதலாக நடத்தப்பட்டது. குடும்பத்தில் பெற்றோர்கள் குழந்தைகளோடு பேசும் மொழிதான் தாய்மொழி என்று வரையறை செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவில் 872 தாய்மொழிகள் பேசப்படுகின்றன என்பது தெரிய வந்தது. நகரங்களைவிட வனங்களிலும், மலைப் பகுதிகளிலும் குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்ற மக்கள் அதிக எண்ணிக்கையில் தாய்மொழிகள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தாய்மொழி பேச்சு மொழி. அவற்றுக்கு எழுத்துகள் கிடையாது. 1961-ம் ஆண்டு மக்கள்தொகை விரிவான கணக்கெடுப்பின்படி 1652 தாய்மொழிகள் பேசப்படுவது தெரிந்தது.

மனிதர்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தான கண்டுபிடிப்பென்பது மொழியும் எழுத்துந்தான். ஆனால், இரண்டும் ஒரே காலத்தில் கண்டறியப்பட்டதில்லை. மொழி, திருத்தம் பெற்று பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மொழியை எழுதும் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில மொழிகள் எழுத்தைப் பெற்றுத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டன. பண்டைய காலத்தில் எகிப்து, சுமேரியா, சிந்துவெளி மக்கள் தாய்மொழிகள் எழுத்தைப் பெற்று இருந்தன. அவர்கள் பிரமிடுகளிலும், பானை ஓடுகளிலும் எழுதி வந்தார்கள். பெரும் படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தபோது அவர்கள் தாய்மொழியும், எழுத்தும் அழிந்து போயின. பல நாடுகளில் அரசாங்கங்கள் சிறுபான்மை மக்களின் தாய்மொழிகளைத் திட்டமிட்டு அழித்தன. ஒரு நாடு என்பது ஒரு மொழி நாடுதான். அதில் இன்னொரு மொழிக்கு இடமில்லை என்பது கொள்கையாக இருந்தது. கல்வி வேலைவாய்ப்புகள், நிர்வாகம், சட்டம், நீதிக்கு பெரும்பான்மையான மக்கள் மொழிக்குத்தான் இடமளித்தார்கள்.

அதன் காரணமாகச் சிறுபான்மை மக்களின் தாய்மொழிகள் நெருக்கடிக்கு ஆளாகி அழிந்து விட்டன. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டினர் கடல் வழியாகச் சென்று புதிய நாடுகளைத் தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தார்கள். தொழில் புரட்சி மூலமாக வர்த்தகம் பெருகியது. மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் புலம் பெயர்ந்தார்கள். ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். பல நூற்றாண்டுகளாகச் செவ்விந்தியர்கள், எஸ்கிமோக்களிடம் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு தங்களின் ஆட்சியை ஸ்தாபித்துக் கொண்டார்கள். அமெரிக்கா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தி, ஆங்கிலம் மட்டும் ஆட்சி மொழி என்றார்கள்.

செவ்விந்தியர்கள், எஸ்கிமோக்கள் பல நூற்றாண்டுகளாகப் பேசி வந்த ஐம்பத்திரண்டு தாய்மொழிகள் அழிந்து விட்டன. ஆஸ்திரேலியா ஒரு பழம்பெரும் நாடு. அதில் ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பழங்குடி மக்கள் நாற்பதாயிரம் ஆண்டுகளாக இருநூற்றைம்பதுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மொழிகளுக்கு எழுத்துகள் கிடையாது. எனவே பள்ளிக்கூடங்களில் அவர்கள் மொழிகள் கற்றுக்கொடுக்கப்படவில்லை. இங்கிலாந்தில் இருந்து புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கப் புறப்பட்ட கேப்டன் ஜேம்ஸ் குக், 1770-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கரையிறங்கி பிரிட்டிஷ் கொடியை நட்டு இங்கிலாந்தின் காலனி எனப் பிரகடனப்படுத்தினார். ஆங்கிலேயர்கள் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா செல்ல ஆரம்பித்தார்கள். 1786-ம் ஆண்டில் இங்கிலாந்து சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் ஆஸ்திரேலியாவில் கரையிறக்கினார்கள். ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயக் குடியேற்றம் கைதிகளின் குடியேற்றந்தான். அவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கப் பள்ளிக்கூடங்கள் ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டன. பழங்குடி மக்களின் தாய்மொழிகள் அழிய ஆரம்பித்தன. 250 தாய்மொழிகள் புழங்கிய இடத்தில் பதினெட்டுத் தாய்மொழிகள் சிலரால் பேசப்பட்டு வருகின்றன எனக் கணக்கிட்டு இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எங்கெல்லாம் காலனிகளை அமைத்தார்களோ அங்கெல்லாம் ஆட்சிமொழி, பள்ளிக்கூட மொழியாக ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் இருந்தன.

அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜமைக்கா நாடுகளின் தாய்மொழிகளுக்கு எழுத்துகள் இல்லை. எனவே பள்ளிக்கூடங்கள் இல்லை. அவை பிரிட்டிஷ் காலனியாக இருந்தன. எனவே ஆங்கில மொழி பள்ளிக்கூடத்தில் முதல் மொழியாகக் கற்பிக்கப்பட்டது. பழங்குடி மக்களின் தாய்மொழிகள் அழிந்துவிட்டன. அதுவே பிரெஞ்சு காலனிகளிலும் ஏற்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து புறப்பட்ட வாஸ்கோடகாமா 1498-ம் ஆண்டில் கேரளத்தில் உள்ள கொச்சியில் வந்து கரையிறங்கினார். ஐரோப்பிய நாட்டினருக்குப் புதிய கடல் வழி தெரிந்தது. போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அமைத்துக்கொண்டு வணிகத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் இருந்து மிளகு, துணிகள், முத்து, பவளம், அபின், நறுமணப் பொருள்கள் ஐரோப்பிய வணிகத்தில் முக்கியமாக இருந்தன. அதனால் இந்தியர்களில் சிலர் முதலில் போர்த்துக்கீசிய மொழி கற்றுக்கொண்டார்கள்.

பின்னர் பிரெஞ்சு, ஆங்கில மொழி கற்றார்கள். ஐரோப்பாவில் இருந்து வந்த வணிகர்களில் சிலரும் கிறிஸ்தவப் பாதிரியார்களில் பலரும், அதிகாரிகளில் சிலரும் தமிழ், சம்ஸ்கிருதம், இந்துஸ்தானி, தெலுங்கு, வங்காள மொழிகள் கற்றுக் கொண்டார்கள். வணிகத்திலும், மத மாற்றத்திலும் மொழிகள் முக்கியமான இடம் பெற்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பெரும் பகுதியைத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். மொகலாயர்கள் ஆட்சியில் நிர்வாக மொழியாக இருந்த பாரசீகம் அகற்றப்பட்டது. நாட்டில் வாழ்ந்த உயர் வகுப்பினர்கள் சம்ஸ்கிருதம் படித்து வந்தார்கள். சிறுபான்மையான மக்கள் தாய்மொழியான தமிழ், தெலுங்கு, வங்காளம், இந்துஸ்தானி படித்து வந்தார்கள்.

அரசு நிர்வாகம் ஆங்கில மொழி வழியாக நடைபெற்று வந்தது. இந்திய மக்கள் பல தாய்மொழிகளைப் பேசி வந்ததால், எந்த மொழியில் இந்தியர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது எந்த மொழியைக் கற்றுக்கொண்டால் அரசுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று ஆலோசனை செய்தார்கள். மெக்காலே இந்தியர்களுக்கு ஆங்கில மொழியில் கல்வி கொடுக்கவேண்டும். அது அவர்களின் பாரம்பரிய மரபுகளை அறுக்கவும், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கவும் உதவியாக இருக்குமென யோசனை கூறினார். கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங் அதனை ஏற்று 1835-ம் ஆண்டில் ஆங்கில மொழியில் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். இந்தியா ஏராளமான மக்கள் வாழும் நாடாகவும், பல மொழிகள் கொண்ட நாடும் ஆகும். அதில் பெரும்பான்மையான மக்கள் கல்வி கற்க முன்வரவில்லை என்பதோடு, அரசாங்கத்தோடு எவ்விதமான தொடர்பும் இல்லாமல் தங்கள் தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. அரசாங்க வேலைக்குச் செல்ல விரும்பியவர்கள் ஆங்கிலம் படிக்க முன்வந்தார்கள்.

பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தன. வேலை எளிதாகக் கிடைத்தது. தாய்மொழி படிக்காமல் பிற மொழிகளைப் படிக்கிறவர்கள் மீது சமூகவியல் அறிஞர்கள் குறைகூறியே வந்தார்கள். 1879-ம் ஆண்டில் “பிரதாப முதலியார் சரித்திரம்\’ என்று தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தாய்மொழி படிக்காமல் மற்ற மொழிகளைப் படிக்கின்றவர்களை அந்த மொழி புழங்கும் நாட்டுக்கே நாடு கடத்திவிட வேண்டுமென்று எழுதி இருக்கிறார். உ.வே. சாமிநாதையர் தாய்மொழியான தமிழ்ப் படிப்பைக் கைவிட்டுவிட்டு ஆங்கிலம் படிக்க சிலர் ஆலோசனையும், பொருள் உதவியும் செய்ய முன்வந்தது பற்றியும், அதனைப் புறந்தள்ளிவிட்டுத் தமிழ் படித்தது பற்றியும் “என் சரித்திர\’த்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் உதயமாயின. 1950-ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய மொழி தேவநாகரி எழுத்துகளில் எழுதப்படும் இந்தி மொழி. ஆங்கில மொழி பதினைந்து ஆண்டுகளுக்கு இணைப்பு மொழியாக இருக்கும். பின்னர் இந்தி மொழி மட்டுமே தேசிய மொழி என்று சட்டம் இயற்றினார்கள்.

அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் தேசிய மொழி உருது என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டது. அரசுப் பணிக்கான தேர்வுகள் உருது மொழியில் நடத்தப்படும் என்று உத்தரவு போடப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்களின் தாய்மொழி வங்காளம். மதம் ஒன்றாக இருந்தாலும், தாய்மொழியில் வேறுபட்டிருந்த அவர்கள், தாய்மொழிக்காகப் போராட ஆரம்பித்தார்கள். தாய்மொழிக்கான போராட்டத்தில் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணியில் இருந்தார்கள். 1948-ம் ஆண்டில் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா டாக்கா சென்றார். தாய்மொழிக் கிளர்ச்சியாளர்கள் அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். டாக்காவில் கர்ஸ�ன் அரங்கில் பேசிய முகமது அலி ஜின்னா, உருது மட்டுமே பாகிஸ்தான் ஆட்சி மொழி என்றார். தாய்மொழிப் போராட்டம் தீவிரமடைந்தது. வங்க மொழியை அரபு எழுத்துகளில் எழுத வேண்டும் என்று அரசாங்கம் ஆணையிட்டது. 1954-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி கிழக்குப் பாகிஸ்தானில் தாய்மொழிக்கான போராட்டம் பெருமளவில் தொடங்கியது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணியில் இருந்தார்கள். பொதுமக்கள் ஆதரவு கொடுத்தார்கள்.

அரசாங்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கைது செய்தும் தாய்மொழிப் போராட்டத்தை அடக்கியது. ஆனால் தாய்மொழிப் போராட்டம் தனி நாடு போராட்டமாகியது. ஏராளமான மக்கள் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். மக்களின் தாய்மொழிப் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு கொடுத்தது. 1971-ம் ஆண்டில் மொழி அடிப்படையில் பாகிஸ்தான் உடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான், வங்க தேசம் என்ற சுதந்திர நாடாகியது. வங்க மொழி அதன் தேசிய மொழி. ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய “சோனார் வங்காளம்\’ என்ற பாடல் தேசிய கீதமாகியது. தாய்மொழிக்கான போராட்டம், ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தது. இலங்கை, ஆங்கிலேயர்களிடம் இருந்து 1948-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. சிங்களவர்கள் அதிகம். மக்கள் தொகையில் தமிழர்கள் குறைவு. ஆனால் சிங்களம், தமிழ் மொழி இரண்டும் நெடுங்காலமாக இலங்கையில் பேசப்பட்டு வந்தன. இரண்டு தாய்மொழிகளும் எழுத்துகள் கொண்டவை. சுதந்திர இலங்கையில் இரண்டு மொழிகளும் ஆட்சி மொழியாக இருந்து வந்தன. 1956-ம் ஆண்டில் சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழி என பண்டாரநாயக அறிவித்தார். “சிலோன்\’ என்ற பெயர் “ஸ்ரீலங்கா’ என பெயர் மாற்றப்பட்டது.

தமிழர்கள் தாய்மொழிக்காகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். அது பெரும் போராட்டமாகியது. ஆயுதம் தாங்கிய தமிழர்களின் உள்நாட்டுப் போரை, இந்தியாவின் உதவியோடு ஸ்ரீலங்கா அரசு அழித்தது. ஸ்ரீலங்கா அரசு, தமிழில் பாடப்பட்டு வந்த தேசிய கீதத்தைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் 23 தாய்மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றில் சக்தி பெற்ற தாய்மொழிகள் என்றால் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சுதான். மற்ற தாய்மொழிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. தாய்மொழிக்கான போராட்டம் உலகத்தின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. தாய்மொழியை இழக்காமல் இருக்கவும், இழந்த தாய்மொழியை மீட்டெடுக்கவும் போராடி வருகிறார்கள். வங்க தேசத்தில் இருந்து கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்து வான்கூவர் வாசியான ரக்பி சாலமன், 1998-ம் ஆண்டில் ஐ.நா. சபையின் பொதுச்செயலருக்குச் சர்வதேச தாய்மொழிகள் தினம் கொண்டாட ஆவன செய்யுமாறு ஒரு கடிதம் எழுதினார். அக் கடிதத்தை, கனடா, வங்கதேசம், இந்தியா, பின்லாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.

உலகத்தில் பல நாடுகளிலும் தாய்மொழிகள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. ஒரு தாய்மொழி அழிவது கலாசாரம், பண்பாட்டின் அழிவு. எனவே, அதைத் தடுக்க தாய்மொழிகளைக் காப்பது அவசியமென ஐந்து நாட்டுப் பிரதிநிதிக்குழு ஆலோசனை கூறியது. அதை, ஐ.நா. சபையின் 188 நாடுகளும் ஏற்றுக்கொண்டன. 1999-ம் ஆண்டில் இருந்து சர்வதேச தாய்மொழிகள் தினம் உலகம் முழுவதும், வங்க தேசத்தில் தாய்மொழிக்காகக் கிளர்ச்சி தொடங்கிய பிப்ரவரி 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தன் தாய்மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் சிறப்பு அம்சம்.

http://www.alaikal.com/news/?p=97679

பதிவுக்கு நன்றி அகூதா. நான் பார்த்த இனங்ளில் இனப்பற்றும் தாய்மொழிப் பற்றும் குறைந்த இனம் என்றால் தமிழ் இனமாகத்தான் இருக்கும். எமது தாய்மொiழி, கலை, கலாச்சாரம், பண்ணபாடு, பழக்கவழக்கங்களைப் பாதுகாக்க தெடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தாய்மொழி தமிழாக இருப்பதில் பெருமைப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்தினம், எய்ட்ஸ் தினம் பிரபல்யமான அளவுக்கு... தாய்மொழி தினம் பிரபல்யமாகாமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ் மொழி உலகெங்கும்

< உலகத்தில் பல நாடுகளிலும் தாய்மொழிகள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. ஒரு தாய்மொழி அழிவது கலாசாரம், பண்பாட்டின் அழிவு. எனவே, அதைத் தடுக்க தாய்மொழிகளைக் காப்பது அவசியமென ஐந்து நாட்டுப் பிரதிநிதிக்குழு ஆலோசனை கூறியது. அதை, ஐ.நா. சபையின் 188 நாடுகளும் ஏற்றுக்கொண்டன. 1999-ம் ஆண்டில் இருந்து சர்வதேச தாய்மொழிகள் தினம் உலகம் முழுவதும், வங்க தேசத்தில் தாய்மொழிக்காகக் கிளர்ச்சி தொடங்கிய பிப்ரவரி 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தன் தாய்மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் சிறப்பு அம்சம். >

மனதில் நிறுத்துவோம் கள உறவுகளே !!!!!!!!!! :) :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.